கொன்றை மலர் | காளம் 13

.

கொன்றை மலர் | காளம் 13

வசந்தம் நிமிர்ந்து சுவர்களைப் பார்த்தாள்.  கண்ணாடி அலுமாரிகளுக்குள் அடுக்கி வைத்திருந்த  ஏடுகளின் வாசனை சூழ்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு அலுமாரிக்கும்   உத்தூரணமாக  நீற்றினால் குறியிட்டு குங்குமமும் மஞ்சளும் வைத்திருந்தார்கள். முழுதாய் ஐய்யாயிரம் ரூபாய் செலவு செய்து தகப்பனும் தாயும் அவளை `காண்டம்` பார்க்கவென்று  கூட்டி வந்திருந்தனர்.  வசந்தம் முதல் தூமை கண்டபிறகுதான் எல்லாம் தொடங்கிற்று. கெட்ட கனவுகள், திடுகிட்டு திடுக்கிட்டு எழுந்து கொண்டாள் பிள்ளை. அவை கனவுகளைப் போல இல்லை.   இரத்தம்  ஊறிய நிலத்தின் நொச்சை நாற்றத்தில் எல்லாம் தொடங்கியது.  இளம் வயிறுகளில் தாய்மார் அடித்துக்கொள்ளும் `தொப் தொப்` என்ற ஒலியை அவள் துல்லியமாக நினைவு கூர்ந்தாள். தன் வயிற்றில் அடித்துக்கொண்ட போது எழாததைத் தாயின் வயிற்றில் அடித்துக்காட்டினாள். தொடர்ந்து  இருளில் இருந்து குரல்கள் எழுந்தன, அவலச்சாவுகள் அண்மித்த போது எழும் தெய்வங்களை  சரண் கொண்ட குரல்கள். அழுகைகள்,  சேடமடங்கும்  ஒலிகள்.  வெவ்வேறு கொடுங்கனவுகள் என்றால் வைரவர் கோவிலில் திருநீறு போட்டால் சரியாகிவிடும், இம்முறை அதற்கும் கேட்கவில்லை. ஒரே கனவு மீண்டும் மீண்டும் எழுவது  துர்குறி என்றனர் ஊர் நிமிர்த்திகர்கள்.  இரண்டொரு முறை குழந்தைத்

 `தத்துக்`களில் இருந்தும் தப்பினாள்.  துப்பரவு வயல் காணிக்குள் சுள்ளி பொறுக்கி வரப் போனவளை பெரிய தாட்டான் குரங்கு ஒன்று கலைத்துக் கடிக்க வந்தது,   சைக்கிள் கான்ரில் தடுமாறி வீதிப்பக்கம் இழுத்துச் சென்று தலை மின்கம்பத்தில் மோதப்போனது. வீட்டில் வசந்தம் ஆசையாய் வளர்த்த சாவல் கோழி  இவள் முன்னால்  தன் கொண்டைத் தலையை நிலத்தில் மோதிச் செத்தது. அத்தோடு வெருண்டு அடங்கியவள்தான். நேராக சிவாச்சாத்திரிகளிடம்  வசந்தத்தின் ஏடுகளைத் தேடிப் பார்ப்போம் என்று வந்து சேர்ந்திருந்தார்கள்.

காண்டங்கள் பழைய சித்தர் மரபைச் சேர்ந்த நாடி சோதிட அலகுகளைச் சார்ந்தவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு  காண்டமிருந்தது.  வசந்தமும் தகப்பனும் முதலில் வந்து இவளுடைய கைரேகைகளைக் கொடுத்து விட்டுச் சென்றார்கள். ரேகைகளைக் கொடுத்துச் சென்ற பிறகு இவர்களுக்குரிய ஏடுகளைத் தேடி வைப்பார்கள், தங்களின் சேர்க்கைகளில் இல்லாவிட்டால் வேறு சோதிடர்களின் சேர்கைகளில் தேடி எடுத்து வைப்பார்கள். சிவாசாத்திரியாருக்கு நான்கைந்து சீடப்பிள்ளைகள் இருந்தனர். இளந்தாரிகள். ஒவ்வொருத்தரும் இன்னொருவரில் படியெடுத்தவர்கள் போல. மெல்லிய பச்சை நிற மேற்சட்டையும் நீளக்காற்சட்டையும் அணிந்திருந்தனர்.  நீறு பூசியிராவிட்டாலும் அவர்களில் கற்பூரம் நீறிய  விபூதியின் வாசனையிருந்தது.  ஏடுகள் அடுக்கியிருந்த அலுமாரிகளின் இடையில் அவர்கள் நகர்ந்தபடியே இருந்தனர். அவ்வீடு முழுவதும் ஏட்டுக் குகையாகவே இருக்க வேண்டும் அவர்கள் அங்கேயே கரைந்து விட்டிருந்தனர்.   அவர்களின் விழிமடல்கள் ஓலைக்கீலங்கள் திறந்துகொள்வது போலவே  விரிந்து மூடின.   இவர்களின்  முறை வந்த போதும் அவர்களோடே கதைக்க முடிந்தது, பெயர், இராசி, நட்சத்திரங்கள் பெயர் விபரங்கள் எல்லாம் அவர்களே கேட்டு எடுத்துக்கொண்டு விரல் ரேகைகளையும் எடுத்துக்கொண்டனர். என்ன பிரச்சினை என்பதையும் கேட்டு எந்தெந்த காண்டங்கள்  தேட வேண்டும் என்று குறித்துக்கொண்டனர். கனவுகள், துர்குறிகளுக்கு பெரும்பாலும் முற்பிறவிக்குரிய காண்டங்களை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள், பெண் பிள்ளை என்பதால் திருமணம் பற்றிய காண்டங்களையும் சாத்திரியார் எடுக்கச் சொல்வார் என்று ஒருவன் இன்னொருவனிடம் சொன்னான். சனங்களுக்கு முன்னால் அவர்கள் இவை பற்றி வெளிப்படையாக கதைக்கும் போது அவர்களின் பேச்சலையில் அடிபட்டு வந்திருப்பவர்களின் கண்கள் நம்பிக்கையில் மின்னின.  மதியம் நெருங்கும் போதுதான் சிவாச்சாத்திரியார் அழைத்தார்.   எந்தப் பொருளுமற்ற வெளித்த மேசையில் வசந்தமும் தகப்பனும் அவர் முன் சென்று அமர, சீடப்பிள்ளைகளில் ஒருவன்  ஏடுகள் நிரம்பிய தாம்பாளமொன்றைக் கொண்டு வந்து வைத்தான். சிவாச்சாத்திரி சடைமுடியும், நீறும் சந்தனமும் பூசி  கதரோ காவியோ அணிந்து அமர்ந்திருப்ப்பார் என்று நினைத்துக்கொண்டிருதார்கள் வசந்தமும் தகப்பனும்.  நீல நிற ஜீன்சும் சேட்டும் அணிந்து  சவரம் செய்து நேர்த்தியாக வாரி நடுத்தர  வயது ஆணொருவர் மேசையில் வந்து அமர்ந்த போது வசந்தமும் தகப்பனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். சாத்திரியாருக்கு அவர்கள் அடைந்த துணுக்கு முகம் மிகவும் பழகிப்போனதாக இருக்க வேண்டும்,, வசந்தத்தை நலம் விசாரித்தார், என்ன பெயர், எத்தனையாம் வகுப்பு என்று கொஞ்ச நேரம் அவளுடன் இயல்பானார்.

இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக அவர்களுடன் நேரமெடுத்து ஒவ்வொன்றாக விளக்கினார்.  முதலில் அவளில் ஏதேனும் பெண் அணங்கு  இறங்கி விட்டதாகவே நினைத்தேன் என்றார்.  முதல் தூமைக்குப் பிறகு தோன்றும் கனவுகள் பெண்ணின் திருமணம் , கருவளங்களோடு தொடர்பானது என்பதால் அவளின் திருமணக் காண்டங்களை எடுத்து முதலில் வாசித்திருக்கிறார்.   தாம்பாளத்தில் இருந்த ஏட்டை எடுத்து வசந்தத்தின் கையில் கொடுத்துப் பார் என்றார். அவளால் ஒற்றுக்களும் அரவுகளுமற்ற தமிழ் எழுத்துகள் விளங்கவில்லை. ஒரு சில சொற்களைக் கூட்ட முடிந்தது.  சிவாச்சாத்திரியார் இவளிடமே கதைத்தார்.  இவளின் தகப்பன் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் அவரில் பார்வையைத் திருப்பினார். அவர் எடுத்த எடுப்பில் தொடங்கும் போதே  `இவளுக்கு மானுட விவாகம் கிடையாது` என்றார்.  தகப்பன் விக்கிப்போய் உட்கார்ந்திருக்க வசந்தம் ஆர்வமாய் கேட்டாள். அவளுக்கு அவர் அவளுடைய மூன்று பிறவிகளை விளக்கினார். முதல் ஏட்டை எடுத்துப் வாசித்தார். அவருடைய காண்ட ஏடுகள்  புராணகாலத்துக் கதைகளாக எழுதப்பட்டிருந்தன. ஒவ்வொருவருடைய பூர்வ பிறப்பும் அவருடைய வாழ்க்கையின் நிமிர்த்தங்களும் வரிவரியாக அவருடைய கண்ணுக்குள் புகுந்து மொழியாய் திரண்டு எழுந்தன.

அரக்கர் குலத்தரசன் தட்சனுக்கு மகளென்று ஆன தாட்சாயினி தேவியை பெண் கேட்டு  அரசனின் அவையில்  போய் நின்றான்  பிச்சாண்டியொருவன்.  அவனைச் இடுகாட்டன், என்று அவமதித்து அனுப்பினான் தட்சன்.  கனல் தலைக்கேறிய அப்பிச்சாண்டி தன்  உருத்திர உருவை  தன்னிலிருந்து பிறப்பித்தான். உருத்திர ரூபம் தன்னிலிருந்து வீரபத்திரனை எழச்செய்தான்.  தட்சனின் அரக்க அக்குரோணிகளை எதிர்கொண்டு அழித்துச் செல் என்று அவனுக்கு கட்டளை வந்திருந்தது. அன்னையற்றுப் பிறந்த பத்திரன்`கொல்` என்ற  ஒற்றைச் சொல்லைத் தவிர எதையும் கேட்காத காதுகளைப் பெற்றிருந்தான். அவன் ஆடிய சதிரில் தட்சனின் வேள்வியும் குடியும் அழியத்தொடங்கியது. அரக்கரும் மானுடருமென்று திரண்டு வந்த தட்சனின் குடிவீரர்கள்  கடற்திரையில் விழுந்த மழைத்துமிகளென வீரபத்திரனின் பெருஞ்சேனையில் கரைந்தழிந்தனர்.

பெருமகள்  தாட்சாயினி தன் ஊழை அறிந்தாலும், தந்தைக்கு மகளென்றும் கனிந்தவள். தன் குடியழிவைப் பொறுக்காது நெஞ்சம் விம்மினாள். தன் காதலினால் விளைந்த பேரழிவை அவள் தன்னுள் கண்டாள். தந்தையிடம் கெஞ்சினாலும் தலைவனிடம் கெஞ்சினாலும் அவர்கள் இருவரும் இதை நிறுத்தப் போவதில்லை என்பதை நன்கறிந்தாள். எனினும் பெண்ணென்று  தன் காதலன் முன் சென்று நின்றால் அவனைக் கொஞ்சமேனும் கரைக்க முடியும். அவனுடைய உருத்திர முகத்தை சாந்தி செய்து வேறொரு வழியை யோசிக்க முடிடியும் என்றுணர்ந்தாள். ஆனால் அவளிடம் இல்லாதது காலம் ஒன்றே. வீரபத்திரனை சற்று நேரம்   வேகம் குன்றச்செய்தால் அவனைச்   சினமிறக்கி, குடிகளைக் காப்பாற்றலாம் என்று  துணிந்தாள்.

தன் மார்பைக் கீறி குருதித்துளிகளை நிலத்தில் சிந்தினாள். அச்செம்மை மண்ணோடு கூடி   அவள்  ஆடியுருவென லட்சம் அன்னையர் எழுந்தனர், ஒவ்வொரு அன்னையும் நூறு மகவை ஈன்றவள் போல்  உப்பிய உடலும், தூங்கிய பெருமார்பும்,  முலைப்பாலெனக் கனிந்த முகமும், கண்ணீரும், கம்பலையுமாக  அவர்களைச் சமைத்திருந்தாள் தாட்சாயினி.  அவர்கள் செய்ய வேண்டியதை அவர்களுக்குள் இட்டு   வீரபத்திரன் வரும் வழிக்கு அனுப்பி வைத்தாள்.  கபாலங்களில் இரத்தம் உண்டு களமயக்கில் ஆடிவந்த வீரபத்திரனுக்கு முன்னால் அன்னையர் தோன்றி ஓலமிட்டனர். அவர்களைக் கண்ட மாத்திரத்தில், இருட்டில் தாயின் முலைப்பாலின் கொச்சை நாற்றத்தை கண்டுகொண்ட மகவென்றானான். `அன்னையே` என்று பணிந்து நிலத்தில் தலையை மோதி வணங்கி நின்றான் வீரபத்திரன். அன்னை என்பது அவன் அறிந்த இரண்டாவது சொல்லானது.  அவர்களை விஞ்சிச்சென்று எங்கனம் தட்சனை ஹதம் செய்வது என்று  குழம்பி நின்றான். அவர்களாகவே விலகாவிட்டால் அவர்களைக் கொன்றமைந்தே அக்களம் கடந்து நகர் நுழையமுடியும். அவர்களின் கண்ணீர் பெரும் பாசாங்கு என்று கூர்மதி அறிந்தாலும்,  அது கொல்லும் என்பதைச் கரவின்றி அறிந்தான்.  தந்தையிடம் சென்று முறையிட அவன் கூசி நின்றான். அவர் அழித்த முதற்களம் எப்படியும் வென்று சென்றே நிற்கவேண்டும், அல்லது  களத்தில் வீரமுடன் படவேண்டும். தோற்றால்  கழுத்தை அரிந்து கொண்டு நிலம்சாய வேண்டும்.  மைந்தர் என்று எழுந்தோனுக்கு முதல் சொல் தந்தையே.  மந்திரம் என்று ஆன உருத்திர முகத்தின் சொல், அன்னையரைக்  கொல் என்றால் கொன்றுவிடுவான். முழுதமைந்த மைந்தர், தந்தையென்றே ஆனவர்கள். ஆனால் அத்தனை அன்னையரையும் கொல்லும் போது அவர்கள் குருதியில் இருந்து இன்னும் நூற்றுவர் எழுவர் என்பதை அறிந்தான். ஆதி இருட்டின் முதல் கணத்தில் இருந்து இப்புடவியில் பெருக்கம் குன்றாதவள் அன்னையொருத்தியே என்பதை ஆழ் இருளில்  கண்டான்.  வாளை ஓங்கி விட்டால் இறக்க முடியாது என்றுணர்ந்தான். இவ் அன்னைத் திரையை  எங்ஙனம் விலக்குவது  என்று அவ் ஆழ் இருட்டிடமே கேட்டான்.  தொடக்கமும் முடிவும் அன்னையே.  அவள் அங்கிருந்தே எழுந்து வந்தவள், அங்கேயே அனுப்பு என்றது.   முகம் மலர்ந்த பத்திரன் தன் வாளை வானுக்குச் சுழற்றி பிறவியின் பெருங்கதவுகளைத் திறந்தான். எல்லாக்காலங்களுக்கும் அக்கதவுகளின் வழியே அன்னையரை காற்றினால் பெயர்த்து வீசினான்.  பெருங்காலமென்னும் நதியில் அவர்கள் நீந்திச் சென்று  புடவியெங்கும் பிறந்து பெண்ணாகித் தூமை கண்டிருந்த, பெண்வயிற்றில் திரண்டனர். மீண்டும் மகவுகள் என்றாகிக் வெப்பச் சிமிழெனத் சிறுத்துத் திரண்டனர்.

சிவாச்சாத்திரி ஏட்டிலிருந்து கண்களை எடுத்து , வசந்தத்தைப் பார்த்தார். 

இது உன்ர முதல் பிறப்பு,  என்றவர், அவரை மலங்க மலங்கப் பார்க்கும்  கண்களை இயல்புக்குத் திருப்ப, கதை நல்லா இருந்ததோ ? என்றார். வசந்தம் அவரின் குரல்  இறங்கிக் கனிந்ததும் தன்னைச் சுருக்கிக் கொண்டு தன் சிறு உடலுக்குத் திரும்பி அமைதியாக தகப்பனை ஒருமுறை பார்த்தாள். அவருடைய கைகள் சாத்திரியாரை நோக்கிக் கூப்பியிருந்தன, கண்கள் முட்டியிருந்தன. சிவாச்சாத்திரியார் இரண்டாவது பிறவிக் கதையை வாசிக்கத் தொடங்கினார்.

இலங்கா தீவின் உத்தர தேசத்து அரசன் மூத்த சங்கிலிக்கு நீண்ட நாட்கள் குருதி வழி மகவொன்றும் இருக்கவில்லை. அவனுக்கும் அரசி மங்கம்மாவிற்கும் இடையில் அவர்கள் மட்டுமே அறிந்த மந்தணமொன்று இருந்தது. அரசி பிறக்கும் போதே லிங்கமலரின் உருவம் கொண்ட மச்சம் ஒன்றுடன் பிறந்தவள், அவளுடைய ஜென்ம நட்சத்திரங்கள் ` தெய்வங்களால்  ஊழிற்கு அழிக்கப்பட்ட குருதிவழி அன்னையரின் ஆடியென்று பிறந்தவள். இவள் மகவொன்றை ஈன்றால் பெரும்பழி சூடுவான். உடலினால் நலிந்து நோயுற்று அதனால் அடையும் தன்னழிவின் நச்சாழியில் வீழ்வான்` என்றன.மூத்த சங்கிலி இவளில் மையல் கொண்டு ராட்சச விவாகமும் மூலம் கவர்ந்து வந்த அன்றிரவு அவனிடம் , தன் பனிக்குடம் தெய்வங்களுக்கானது, மானுடக் குருதியைச் சுமப்பதற்கு ஒப்பேன் என்றும், அதற்கு வாக்களித்தால் கூடுவேன் என்றும் நாச்சொல்லழிக்குமாறு கேட்டாள். அவளில் உறைந்த பெண்ணின் விழைவின் மயக்கில் இருந்த மன்னவன் அவ்வாக்கையழித்தான். தன் திருவயிறு  கருக்கண்ட போதெல்லாம் அதை விடமுண்டு அழித்தாள் அரசி. எனினும் ஊழ் அவளை வெல்லத் திருவுளம் கொண்டது, அரசன் தனக்கு முடிவழி வேண்டும் என்று அரண்மனை வைத்தியரிடம் அவளுக்கு இம்முறை நஞ்சளிக்க வேண்டாம் என்றான். அவர்கள் நஞ்சென்று அருமந்தை அவளுக்களித்தனர்.  மீண்டும் மீண்டும் நஞ்சருந்தி நொய்ந்திருந்த அவளுடைய வயிற்றின் கடம் அம்மகவை நோயோடு நின்று தாங்கிற்று. அரசி வெஞ்சினத்தில் துடித்தாள். அரசனை வைதாள். தன்னை நெருங்காதே என்று அறைகளைச் சாத்திக்கொண்டாள். இம்மகவை தான் ஈணேன் என்று சூழுரைத்தாள். அரசன் மெஞ்சினம் கொண்டு எழுந்தான். அரசனென்று அவளுக்கு அம்மகவை ஈணக் கட்டளை செய்தான். தெய்வங்களைச் சொல்லி அவன் சொன்ன சொல் குடிகளின் பொருட்டு அறுதியிடப்பட்டது. அரசிக்கு வேறு வழியில்லை. `ஈண்டாலும் இம்மகவை என் மைந்தன் என்று கொள்ளேன், வெறுப்பின் அனலில் வளர்ந்தெழுவான் என்று கணவனுக்குச் சூழ் சொன்னாள், அவள் வயிறு பிறந்த மகவு தாயின்றி, நோயோடு  வளர்க்கப்பட்டான். அன்னைக்கு ஏங்கினான், நோயினால் நலிந்தான்,  அதனாலேயே பேராணவத்தோடு பெருகினான், கீழ்மையைத் தொட அஞ்சாத அரக்கு என்றே தன்னை ஆக்கினான்,  சொல்லும் வாழும் கொண்டு அறம் அறுத்தான், வேழங்களின் குருதியால் பாவங்களைக் கழுவினான். மானுடபாவத்திற்கு அஞ்சியவன், வேழங்களின் பாவத்தினால் கட்டுண்டான். அன்னை வேழங்களின் சாவோலம் திரண்டு அவள் அன்னையின் பிறவியோடையில் கலந்தது `

சிவாச்சாத்திரியார் வசந்தத்தின் கண்களை மீண்டும் உற்றுக் கண்டார். அவருடைய சொற்கள் அவளுக்குள் நன்கு கரைந்தன. அவள் அவர் சொல்லை முந்திக்கொண்டாள்.

`நான் மூன்றாவது`

…..

வசந்தம் மெல்ல மெல்ல கோவிலுக்குள் அணுக்கமானாள், சிவாச்சாத்திரியார் அடித்துச் சொல்லியிருந்தார், இந்தப்பிறவியில்  ஈசனே உன்னைக் கொள்வான்` தன்னுடைய அன்றாடத்தை சரக்கொன்றைகள் ஒவ்வொரு முகிழ்வாக அதன் மெய்க்காம்பில் தோன்றுவது போல் தன் தெய்வ உருவினை அடையத் தொடங்கினாள். முதலில் தோத்திரங்களைப் பழகினாள், கோவிலில் அவளுடைய தோத்திரவோதல்கள் இல்லாமல் பூசைகள் நடைபெறுவதில்லை, விரதங்களும் நோன்புகளும் இருந்தாள். வீட்டிலிருந்தும் பாடசாலையில் இருந்தும் மெல்ல மெல்ல விலகி கோவில் மடத்திலேயே இருந்தாள். உடலெங்கும் எப்பொழுதும் நீறும் சந்தனமும் மணத்தன. யெளவனம் மேவும் முதலே சட்டையில் இருந்து சேலைக்கு மாறிக்கொண்டாள். அவளுடைய  தேகம் சந்தணம் ஊறிய வெண்சுதைபோல் மஞ்சளை அடைந்தது.  தன்னருகில் அவனை உணர்வதாகவே சொன்னாள். மெல்ல மெல்ல அடங்கிய அவளுடைய கெட்ட சொப்பனங்களில் சரக்கொன்றைகள் மட்டும் அவ்வப்போது ஆடின. வீட்டில் தகப்பனும் தாயும் ஒரு நாள் முழு உருவில் அவளை தெய்வத்திற்கு அளிக்கப்பட்டவளாகக் கண்ட பிறகுதான் தம் கடனை அறிந்தனர். பதறிப்போய் அவளுக்கு  வரன்களைப் பார்க்கத்தொடங்கினார்கள். அவள் எக்காளம் தெறிகச் சிரித்து விட்டு  கோவிலுக்குப் போய்விடுவாள். யுத்த நாட்கள்  செறியச்செறிய விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தை நீங்கி வன்னியை வென்று அங்கே  தம் பேரரணை அமைத்துக்கொண்ட ஆரம்ப நாட்களவை. கோவில் மடங்களில் அவர்கள் தங்குவதுண்டு. சிவன் கோவில் காரியதரிசிகள் அவர்களை ஆதரித்தனர். அவர்களுக்கு சோற்றுப்பாசல்களை தயாரித்து வழங்கும் பணியினை இவள் மேற்பார்வையில் விட்டனர். அவள் வயதில் சிறியவள் என்றாலும் வசந்தமக்கா என்றே அழைத்தனர். காய்ச்சல் கண்டவர்கள் அவள் கையால் விபூதியிட்டுக்கொண்டனர். இடையில் ஓர் நாள் போராளியொருவன் வசந்தத்தின் வீட்டிற்கு வந்து பேண் கேட்டான். தகப்பனும் தாயும் போராளி ஒருவனுக்கு  `மாட்டோம்` என்று மறுப்பதற்கு தயங்கி, அவளுடைய தெய்வப் பிறவிக் கதையை ஒப்புவித்து அனுப்பினார்கள். அவன் இவர்களை மூட நம்பிக்கையாளர்கள் என்று திட்டிவிட்டுப் போனான்.

இவள் வந்த போது அவளைக் கண்டித்தனர், இவள் அவனைப் பார்த்துப் பல்லிளித்ததால் வந்த வினை என்றனர்.  அவர்கள் போகும் மட்டும் மடத்துவாசலுக்கு இனிப்போக வேண்டாம்  என்று கடுஞ்சொல்லில் சொல்லிவிட்டார்கள்.  `ம்ம்` என்ற ஒலியைத் தவிர அவள் எதுவும் பேசவில்லை. அதன் பிறகு கொஞ்ச நாள் கோவிலுக்குப் போகாமல் கிடந்தாள். புலிகள் காடுகளுக்குள் தங்கள் அரண்களை அமைத்துக்கொண்டு வேறு திசைகளுக்குச் செல்ல இவள் மீண்டும் கோவிலுக்குள் சென்றாள். மீண்டும் அதே அபிடேகம், ஆராத்தி, தோத்திரமென்று கிடந்தாள். சில நாட்களில் அடி நா கசந்தது. உள்ளுடல் ஒரு கணம் திடுக்கிட்டு அடங்கியதைக் கண்டாள்.  

வசந்தம் கருவுற்றதை ஊர் அறிந்தது. சில நாக்குகள் மட்டும் பிரண்டு ஏதோ கதைக்கப் போக வசந்தத்தை அறிந்தோர் அவர்களை அடக்கினர்.  ஊரே அவளுடைய கருவில்  திரண்டது தெய்வத்தின் பிள்ளையென்றே நம்பியது.  குழந்தைகள் இல்லாத பெண்கள் அவளின் காலில் விழுந்து வணங்கினர். முது கிழவிகள் அவளுடைய வயிற்றைத் தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டனர்.  ஊர் முழுவதும் தெய்வத்தைத் தாங்குபவள் என்றும், சிவாச்சாத்திரியின் சொல் பலித்து விட்டது என்றும் கொண்டாடியது. தெய்வச்செயல் நிகழ்ந்த கதை பரவியது.  இருவர் மட்டும் அவளை நம்பவில்லை.  தாய் தன் வாயால் அவளை  `வேசை` என்று அழைத்தாள். தகப்பன் அவள் கன்னங்களில் அறைந்து வீட்டை விட்டு கலைத்தார்.  நடுமுற்றத்தில் மணலைக் குவித்து  பூவரசந்தடியில் சிலுவை செய்து அதன் மேல் நட்டு அதில் `வசந்தம்`   என்று எழுதி அவள் பிறந்த நாளை தோற்றம் என்றும், அச்சிலுவையை நட்ட நாளை `மறைவு` என்றும்  எழுதி வைத்தார். அப்பொழுதும் அவள் ஏதுவும் பேசவில்லை, அழவில்லை, விளக்கங்களோ ஒப்பிப்புகளோ எதுவுமின்றி கல்லென்றே இருந்தாள். கருவினால் மலந்த முகம் மேலும் ஒளிகூடியது.  சொல்லைச் சேர்க்கச் சேர்கப் பெண் சுடர் கூடுகின்றாள். 

வீட்டிலிருந்து வெளியேறி வசந்தம் கோவில் மடத்திலேயே இருந்தாள். ஊர் கிழவிகள் அவளுக்குப் பத்தியங்கள் எடுத்து வந்தனர்,  உணவிட்டனர். வீட்டிற்கு அழைத்துச்சென்று அமர்த்திக் கொண்டனர். `இங்கேயே இரடியம்மாளாச்சி` என்றனர். வசந்தம் அவர்களின் அன்பில் நெகிழும்  முகங்களை நிகழ்த்திவிட்டு எப்படியோ விடைபெற்றுக் கோவிலுக்குத் திரும்பினாள். தொடர்ந்து தோத்திரங்களோடு இருந்தாள், கொன்றை மலர்களை ஆய்ந்து மாலைகட்டி, நாகலிங்கப் பூவை அதன் குஞ்சரமாக  வைத்து தினமும் லிங்கத்திற்கு எடுத்துச் சென்று சாத்தினாள். அவளில் துடக்கோ, விலக்கோ யாரும் பார்க்கவில்லை. அவளில் ஏதும் குறை சொன்னவர்கள், அன்றிரவும் கொடுங்கனவுகளால் வெருட்டி விடப்பட்டனர். சிலர் அவளிடம் சொல்லி கால் தொட்டு நீறு வாங்கி நெற்றியில் பூசிக்கொண்டும் சென்றனர்.  அவளில் இருந்து சொற்கள் வற்றி முழுகின. வயிற்றைத் தொட்டுத் தொட்டுப் பார்ப்பாள், தன் மடத்து அறையில் இருந்த பெரிய நிலைக்கண்ணாடியில் தன் வயிற்றைத் திறந்து உற்றுப்பார்ப்பாள். கையை  அடிவயிற்சில் ஊரவிட்டு, நரம்புகளின் மென் துடிப்பை அறிந்து அதை விலக்கி  அவள் பிள்ளையின் உயிரோலியை கேட்கப் பழகிக்கொண்டாள். தானே தன்னை அறிவதே பேற்றின் முதல் குறி.  ஓர் மதிய நேரம் அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள், மூடியிருந்த விழிமடல்கள் துடித்துக் கொண்டிருந்தன. கனவிலிருந்து ஏதோ விலங்கு கண்களினால் வெளியேறத் துடித்துக்கொண்டிருந்தது.  தேள் கொட்டியவள் போல திடுக்குற்று எழுந்தாள். தன்னை அள்ளிச் சேர்த்துக்கொண்டு எழுந்தாள், கிணற்றடிக்குப் போய் முகத்தையும் காலையும் அலம்பிக் கொண்டாள், பின்னர் தலைக்கு மூன்ரு வாளிகள் அள்ளி வார்த்தால், ஈரம் உடலோட , காற்றில் சிலிர்க்கும் மழைப்பூவைப் போல விசிறிக்கொண்டு ,  ஈரச்சேலை,  குகைவாசலில் மோதும்  பெருங்காற்றைப் போல தட தடக்க, அம்மன் சன்னிதிக்கு நடந்தாள். நேராக அம்மன் சிலைக்கு முன் சென்று நின்றாள். முதுதாயின் உறைந்த கண்களைக் கண்டாள். கூப்பி வணங்கினாள். குருதியின் சூட்டில் உடல் காயத்தொடன்கியது. அப்படியே நின்றிருந்தாள். கண்ணிலிருந்து  பிளந்து கொண்டு பாய்ந்தன அடைத்திருந்த சொற்கள் எல்லாம். மெல்ல அடிவைத்து படிகளில் ஏறி அம்மனின் அருகில் சென்று நின்றாள். அவள் கழுத்தைத் தொட்டு   அம்மனுக்குச் சாத்தியிருந்த பத்துப்பவுண் தங்கத்தாலியை எடுத்து தன் கழுத்தில் பூட்டிக்கொண்டாள்.  கோவில் பிரவாகத்திற்குள்  இவளைத்தேடி நுழைந்த காற்று அம்மனுக்கும் இவளுக்கும் இடையில் நுழைந்து வெளியேறிச் சென்றது.

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’