சுழல்களைக் கொண்ட தாரகைகளின் நீல இரவு

There is no blue without yellow and without orange.”  – Vincent Van Gogh

குளித்துவிட்டு வந்து  மின் விசிறியை நிறுத்தி, துவட்டாமல் நெடுநெரம் குறுக்குக் கட்டுடன் கட்டிலில் உட்கார்ந்திருப்பேன்.  நீரினது குளிர்ச்சியும் சோப்பினதும் வாசமும் கமழும் உடலில் நீர் மெல்ல உலர வியர்வை துளிர்க்கும். நீர்- சோப்புவாசம் – வியர்வை  மூன்றும் ஒரே நேரத்தில் சந்தித்திக்கும் நேரம் குறுகியது. நீர் உலர்ந்து, வியர்வை முழுவதுமாக உடலை மூடி சோப்பு வாசனை தீரும் முன்பாக மணிக்கட்டிலும், அக்குளிலும்  மூக்கை உறிஞ்சி வாசம் பிடிப்பேன். அப்படியே மார்புத் துண்டை  அவிழ்த்துக்கொண்டு அன்றைக்கு அனுப்பவிருக்கும் படங்களை கைபேசிக் கமராவில் எடுத்துக்கொள்வேன். கழுத்திற்கு கீழே முகமற்ற படங்கள். நான் வேலை செய்யும் செயலியில் யாருக்கும் முகங்களோ தலைகளோ கிடையாது.

மின் விசிறியைப் போட்டு விட்டு, அப்படியே கட்டிலில் சாய்ந்து SKY BLUE என்ற அச்செயலியைத் திறந்து என்னுடைய கணக்கினுள் நுழையக் கடவுச்சொல்லைக் கொடுத்தேன்.  ஆறு எழுத்துக்களைக் கொண்ட கடவுச்சொல், தவறு  என்று வந்தது. எதையோ ஒரு எழுத்தை தவறாக அழுத்தியிருக்கிறேன்.  மீண்டும் அழுத்தினேன். V A L U T H I .  இப்போது திறந்து கொண்டது. சில வேளைகளில் U வையோ I யையோ  இரண்டு தடவைகள் அழுத்திவிடுவேன். என்னுடைய கணக்குக்குள் நுழைந்து பிரீமியம் வாடிக்கையாளர்களைத் தேடினேன். இரண்டு பேர் ஐந்து மணிநேரத்திற்கு பணம் கட்டியிருந்தனர். ஏதேனும் ஒன்றைத்தான் தெரிவு செய்யலாம். இருவருமே முன்னிரவிற்கு வேண்டுகைகளை அனுப்பியிருந்தனர். அச் செயலிக்கு வருகிற வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் பிரீமியம் கணக்கென்றாலும் சாதாரண கணக்கென்றாலும் சுயவிபரப்படமொன்றையும் போட்டிருக்கமாட்டார்கள். சொந்தப்படத்தைப் போடமாட்டார்கள் என்பது தெரிந்திருந்தாலும் எழுந்தமானமாக ஏதேனும் படத்தைக்கூடப் போடமாட்டார்கள்.  போட்டிருந்தால் பெரிய தடித்த ஆண்குறியொன்றின் படமோ, கட்டுமஸ்தான ஆண் உடலொன்றின் படமோ இருக்கும். அதுவும் எப்போதாவதுதான். ஆச்சரியமாக அன்றைக்கு வந்திருந்த அவ்விரண்டு பிரிமியம் கணக்குகளில்  ஒன்றில் படமிருந்தது.  ஓவியர் வின்செண்ட் வான்கோ தன்னை வரைந்த படம். அந்தக் கணக்கைத் திறந்து  விபரங்களை மேய்ந்தேன். Lust for life  என்ற பெயரில் அந்தக்கணக்குத் திறக்கப்பட்டிருந்தது. விருப்பத் தேர்வுகள் என்னும் விபரத்தில் men and women என்றிருந்தது.  முன்னெப்போதும் இல்லாத தகவல்களைக் கண்டேன்.  என்னுடைய செயலியைத் தமிழுக்கே பதிந்திருந்தேன். அதனால் தமிழ் உரையாடல்கள் விரும்புபவர்களை வடிகட்டி அனுப்பும். எனக்கு ஆங்கிலம் ஓரளவேனும் வரும். அப்பா இருக்கும் மட்டும் அவரிடம் கற்றுக்கொண்டது, பிறகு கொஞ்சம் உதவியது.

அந்த வான்கோவின் அழைப்பைத் தெரிவு செய்தேன். சுவரில் பொருத்தி வைத்திருந்த வான்கோவின் ‘தாரகைகளின் இரவு’ ஓவியம் சுழல்களுக்கு கீழே கிராமத்தின் சலனமின்மையோடு உறைந்திருந்தது. மஞ்சள், ஆரஞ்சு சுழல்கள் சுழலத் தொடங்கின.கைபேசியை அமைதி நிலையில் இருந்து ஒலியெழுப்பும் தெரிவுக்கு வைத்து விட்டு மெத்தையில் போட்டேன். பைஜாமாவையும் டீசேட்டையும் எடுத்து அணிந்து கொண்டேன். அங்கிருந்து எந்தச்சலனமும் எழவில்லை. இன்னும் அவன் செயலியைக்  திறக்கவில்லைப் போலும்.  அக்கரையிலிருந்து சலனமேதுமில்லை.

‘lust for life’ 

வழுதி  என்னைக்கவர வேண்டும் என்பதற்காக தனக்குச் சம்பந்தமே இல்லை என்றாலும் எனக்குப்பிடித்த எதையாவது கொண்டு வந்து சேர்ப்பான். கடற்சிப்பிகள், தடித்த நூல்களுக்குள் பாடம் செய்யப்பட்ட இலைகள், சவர்க்காரக்கட்டிகள், புத்தகங்கள் இப்படி எதையாவது.. அவன் எனக்கு என்ன பிடிக்கும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்தான். ஏன் பிடிக்கும் என்பதில் அவனுடைய காதலுக்கு அக்கறையோ நேரமோ இருந்ததில்லை. அப்படித்தான் ஒரு நாள் வான்காவின் கதையைக் கொண்டு வந்து சேர்த்தான். வான்கோவை அவன் ஒற்றை வரியில் தெரிந்து வைத்திருந்தான். 

‘காதலிக்கு காதை அறுத்துக்குடுத்தவனாம் , உது விசர் வேலையெல்லோ’

அவனுக்கு பிரபலமான சுழலக்கூடிய தாரகைகளைக் கொண்ட வான்கோவின் நட்சத்திர இரவின் ஓவியத்தைக் காட்டினேன்.  அதிலிருந்த நீலம் அவனுக்கு பிடித்திருந்தது. அந்த இரவை அவன் வெகுவாக இரசித்தான். அவனுக்கு அந்தத் தாரகைகள் சுழல்வதைப்போல ஒன்றும் தெரியவில்லை. ஆனால் இரவினுடைய நீலத்தை மீண்டும் மீண்டும் உற்றுப்பார்த்தான்.விரல்களால் தொட்டுப்பார்த்தான்.

‘எனக்கு சின்னன்ல இருந்து இருட்டெண்டா பயம், மூத்திரத்துக்கு வெளியிலை போகோணும் எண்டதாலை யன்னல நிண்டு வெளியிலை அடிச்சு விட்டிடுவன். காலமை எழும்பி அம்மா பேசிப்பேசி சாணகம் தெளிப்பா. பிறகு இயக்கத்துக்கு வந்திட்டன். கொஞ்ச நாள் பயமிருந்தது. எனக்கு இருட்டுக்கு பயம் எண்டு தெரிஞ்சதுமே எங்கடை பொறுப்பாளர் எனக்கு இரவுக்காவல் போடச்சொல்லி சொல்லிப்போட்டார். வேறை வழியில்லை. துவக்கை இறுக்கிப்பிடிச்சுக்கொண்டு  தன்னந்தனிய வெட்டை வெளியை வெறிச்சுக்கொண்டு நிக்கோணும்.

சாதாரணமா இரவு கறுப்பு நிறமெண்டுதானே நினைப்பம். இல்லை, இரவு நீல நிறம். ஒரு பாசாடையான கருநீலம். வெளிச்சம் ஒண்டும் இல்லாமை இருட்டுக்க இருக்க இருக்க கண் கொஞ்சம் கொஞ்சமாக இருட்டுக்கு பழகும். கறுப்பு கரைஞ்சு  நீலம் பரவும். நீலத்திலை இரவு நீலக்கலர்தான். நீலத்திலை எல்லாம் வடிவு ’

அறை விளக்கை அணைத்தேன். கண்களை இறுக்கி மூடினேன். கண் கசிந்தது.  மின் விசிறியின் சத்தம் அறைக் காற்றை சுழற்றி விட்டிருந்தது. கண்ணைத் திறந்தேன். யன்னல் வழியாக நீலம் அறைக்குள் கரைந்து கொண்டிருந்தது. புற்றீசல்களின் தீடீர் வருகையைப் போல் கைப்பேசி அதிர்ந்தது.  அக்கரையிலிருந்து சலனம் வந்தது.  

‘hai Señorita’

அந்தப்பிரிமியம் கணக்கில் இருந்து  முதல் வார்த்தைகள்  வந்திருந்தன. அவன் என்னை கேலி செய்கிறான் என்று  நினைப்பதா  அல்லது  கவரும் முயற்சியில் இறங்கியிருப்பதாக நினைப்பதா? ஒரு ஸ்பானிய இளம் பெண்ணை விழிக்கும் அந்த வார்த்தைகளில் உள்ள இசைத் தன்மையை அவன் தெரிந்து வைத்திருக்கிறானா?  பெரும்பாலும் சிலர் முதல் ஐந்தோ பத்தோ நிமிடங்களுக்கு இப்படியான வெட்டுக்கிளி நடனங்களுடன் ஆரம்பிப்பார்கள்.  எப்படியிருக்கிறீர்கள்? சாப்பிட்டாகிவிட்டதா? உங்களுடைய சுயவிபரப்படம் பார்த்தேன். அழகாக உடல் வாகு உங்களுக்கு. அண்மையில் எடுத்தா?  ஐந்தோ பத்து நிமிடங்களில் சொற்களை நிறுதிக்கொண்டு குரல் அழைப்பெடுத்துவிடுவார்கள். அழைப்பிற்கும், ‘உரையாடலுக்கும்’ இற்கும் முதல்  எழுத்தில்தான் ஏடு தொடக்குவது. அவனிடமிருந்து மீண்டும் சொற்கள் வந்திருந்தன.

‘are U married or divorce?’ 

இந்த உலகம் முழுவதுமாகப் புனைவுகளாலும் சாகசங்களாலும் நிறைந்தது. பெரும்பாலும் நான் பொய் சொல்ல விரும்புவதில்லை. அல்லது உண்மையை மெளனமாக்கி விடுவேன். என்னிடம் இரண்டிற்கும் துல்லியமான வித்தியாசங்களிருந்தன. அவனுக்கு அதற்குப் பதில் சொல்லாமல் தவிர்த்தேன். 

‘where are u from ?’  எப்படியும் பொய்தான் சொல்லுவான் என்று நினைத்தேன். ஆனால் அவன் பூமியின் அட்சர, தீர்க்க ரேகைகளைக் கொண்ட எண்களை அனுப்பியிருந்தான். அதும் நேரடியாக தான் எங்கே இருக்கிறேன் என்று சில மணிநேரத்திற்கு காட்டிக்கொண்டிருக்க கூடிய live location அனுப்பியிருந்தான். அவனுடைய  கணக்கின் சுயவிபரப்படம் நன்றாகவிருக்கிறது என்றேன். 

‘are u kidding, do u know who he is?’

‘ஒரு நடத்தை கெட்ட பெண், வான்கோவை அறிந்திருக்க மாட்டாள் என்று நினைத்துக்கொண்டடிருக்கிறானா?’ நான் அவனிடம் அதை எதிர்பார்க்கவில்லை. 

‘do u think a whore doesn’t know about him ?’

அவன் என்னுடைய வார்த்தைகளில் இருந்த கோவத்தைச் சட்டென்று உள்வாங்கிக்கொண்டிருக்க வேண்டும்.  சில நிமிடங்கள் எதுவும் பேசினான் இல்லை. 

சிலசமயங்களில் வரைவேன்.  என்னை நானே வரைவதுண்டு. ஒரு முறை  பகவான் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மார்பகங்களும் அல்குலும் வரைந்து வைத்தேன். நீல நிற மெதுவுடல். அவள் தன்னுடைய புல்லாங்குழலில்  கட்டியிருந்த மயில் பீலியை மார்பின் மீது படர விட்டிருந்தாள். வழுதி அதைப் பார்த்துவிட்டுச் சிரித்தான். என்னை இறுக முத்தமிட்டான்.  அணைத்து நிலத்தில் வளர்த்தினான். இடையில், காதுக்குள் கிருஷ்ணனைப் பெண்ணாகப் பார்த்த பிறகு சட்டென்று என்மேல் உன்மத்தம் எழுந்து விட்டதென்றான். பிறகொருநாள் வான்கோவின் தலைக்கு மார்பகங்களும் மெல்லிடையும் வரைந்து வைத்தேன். முடிவுறாத அந்த ஓவியத்தைப்பார்த்துவிட்டு வழுதி ‘அவனுடைய முசுடு முகம் டக்கெண்டு கருணையா மாறிட்டு’ என்றான். நாங்கள் இருவரும் வான்காவினுள்ளிருந்த பெண்ணையும் கண்டுபிடித்தோம்.

‘send me some picture of you. NOW’  

அந்த அக்கரைக்காரன், அரை மணிநேரம் கழித்துக் கேட்டான். நான் அவனிடம் அதிகம் எதிர்பார்த்து விட்டேன். மூச்செறிந்து விட்டு எடுத்து வைத்திருந்த படங்களை அனுப்பினேன்.  பார்க்கப்பட்டதற்கு அறிகுறியாக இரண்டு ‘சரிகள்’ விழுந்து நீலமாயின. நிமிடங்கள் கரைந்தன.  அந்தப்பக்கம் என்ன நடக்கும் என்று எனக்கு நன்றாகத்தெரியும். இதற்கு  முதலும் ஒரு நூறு தடவைகள் நிகழ்ந்துள்ளது. ஆயினும் இம்முறை வேறுமாதிரியிருந்தது. அழுகை வந்தது. உடலைக்குறுக்கிக்கொண்டு அழுதேன். பேரிடர்களை சமாளித்துப் பழகிவிட்டேன். சிறு நூலளவு ஏமாற்றங்களில் தடுக்கிவிடுவேன். பத்துநிமிடங்கள் இடைவிடாது அழுதேன். நீலமாகிக்கிடந்த அறைக்குள் அழுகை அதிர்ந்து பரவிற்று. கைபேசி வெளிச்சமடங்கிக்கிடந்தது. ஐந்து மணித்தியாலங்களுக்கு செலுத்திய பணத்தை அவன் அரை மணிநேரத்திற்குள் முடித்து விட்டான். பெரும்பாலும் அதேதான் நடக்கும். அதிக பட்சம் ஒரு மணி நேரம் போகும். அதுவும் குரல் அழைப்பொன்றினை எடுத்தால்தான் ஒரு மணிநேரம் எடுத்துக்கொள்வார்கள். கிளிப்பிள்ளை போல நான் பாலியல்  வார்த்தைகளையும், செயற்கையான முனகலையும் ஒப்பிக்க  வேண்டும். சில சமயங்களில் தங்களுடைய பெயரைச்சொல்லி முணுமுணுக்க வேண்டும் என்பார்கள். பெரிதான மாற்றமிராது. கிளி தன்னுடைய சொற் கோர்வையில் ஒரு வார்த்தையை நீக்கி  விட்டு  அவனுடைய பெயரைப்போட்டுக்கொள்ளும். பழகிப்போன சடங்கில் ஒரு சிறு அற்புதம் நிகழ்ந்துவிட்ட உணர்வினால் அன்றைக்கு கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன். யாரோ ஒரு வாடிக்கையாளன் வான்கோவின் படத்தைப் போட்டிருக்கிறான் என்பதால் மனம் ஏதோ ஒரு வருகையை கற்பனை செய்து விட்டதா? கணநேர முட்டாள்தனம். அழுதால் போய்விடும்.

வழுதி எப்பொழுதும் என்னுடைய பலவீனமான உணர்வுகளில் அப்பாவித்தனமாக வந்து உட்கார்ந்துகொள்வான். என்னுடைய அன்றைய அழுகையின் முழுவதுக்குமான உரித்து அவன் மட்டும்தான். ஒரு ஆபாசச் செயலியில் வான்கோவின் படத்தை வைத்திருக்கும் யாரோ ஒரு சிறுவனில்லை. கண்களை அழுத்தித்துடைத்துக்கொண்டு எழுந்தேன். மீண்டும் ஒரு முறை குளிக்க வேண்டும் போலிருந்தது.  அப்போது மீண்டும் கைபேசி அதிர்ந்தது. அவன் தான். இம்முறை குரல் அழைப்பெடுத்தான். ஆச்சரியமாக அக்கரையிலிருந்து நீர்பரப்பின் மேலே இன்னொரு  கல்லை ஓங்குகிறான்.

‘ஹலோ’

அந்தச்செயலியில் எனக்குச்சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன, வாடிக்கையாளர்கள் குறைந்த நட்சத்திரங்களை அழுத்தும் போது என்னுடைய பணம் குறைந்து செல்லும். அதானால் வாடிக்கையாளர்களுடன் எப்போதும் குழைந்தே கதைக்க வேண்டும். முதல் சொல்லில் இருந்தே. அது ஹலோவாக இருந்தாலும் அச்சொல்  உருகவேண்டும். 

‘மன்னிச்சுக்கொள்ளுங்கோ.. நான் அப்பிடி மீன் பண்ணேல்ல’

‘எப்பிடி? எதைப்பற்றி கதைக்கிறீர்? ’

‘ஒண்டுமில்லை விடுங்கோ’

அவன் பேச்சை அத்தோடு விட்டது ஆசுவாசமாகவிருந்தது. எனக்கு ஒன்றைத்தெரியும் என்று பீற்றிக்கொள்ளும் நிலையையோ ஒரு வாடிக்கையாளனுடன் ‘ஈகோ’ சண்டை போடுவதையோ அவன் தவிர்த்துவிட்டான்.  அவனுடைய இரண்டாவது வருகை எனக்கு உள்ளூர மகிழ்ச்சியைத்தந்தது. நான் வான்கோவிற்கான என்னுடைய நேசத்தை இன்னுமொரு முறை உள்ளூரச்சொன்னேன். 

‘எங்க போனீர்.. ஆளைக்காணோம்?’

‘மாஸ்ரபேட் செய்தேன்’

செயலியில் சந்தித்த ஆண்கள் உடலுறவு கொண்டதைப்பற்றி பேசுவார்கள். சிலர் மனைவியுடன் உடலுறவு கொண்ட பிறகு செயலியைத் திறந்து என்னைப்போன்ற  பெண்ணைத் தேடிவந்து போட்டோவோ குரல் அழைப்பிலோ சுயமைதுனம் செய்து கொள்வார்கள். பெரும்பான்மையோர் ‘இன்னது’ செய்கிறேன், செய்தேன் என்று  சொல்லியதில்லை. இந்த ஆண்களுக்கு அதில் என்ன தாழ்வுணர்வு பரவிக்கிடக்கின்றது என்றே தெரியவில்லை. பலே பைய்யா, நீ ஆச்சரியப்படுத்துகிறாய்.

‘போட்டோவைப் பாத்தோ?’

‘ஓம் கொஞ்சம் கற்பனையும் சேர்த்துக்கொண்டேன்’

நான் அவற்றை அறிந்துகொள்ள விரும்பினேன். அவனும் அவற்றை விபரிப்பதற்கும் என்னை அங்கு கொண்டுசெல்லவும் ஆர்வமாயிருந்தான்.  அவனுடைய சொற்களுக்கு இசையும் வாக்கியங்களுக்கு நடனமும் தெரிந்திருந்தது. 

வெள்ளைப் பூண்டு வாசனை தனக்குப்பிடிக்கும் என்றான். ஒரு மாபெரும் பூண்டுக் குவியலின் மத்தியில் உடலில் நீல நிறச் சேலை சுற்றியிருக்க, அதனை உரித்து என்னுடன் புணர்வதாக அவன் நுட்பமாக விளக்கினான். உடலின் வாசனை, மயிர்க்கால்களின் புடைப்பு மெல்லிய முட்களைப்போல தன்னுடைய உடலில் கீறிக்கொண்டே வெப்பம் பரவுதை விபரித்தான். பிடரியைக் கோதித் திறந்தான். என்னுடைய தேகத்தை ஒரு இலத்திரன் நுணுக்குக்காட்டியால் பார்க்கும்படி செய்தான். அவ்வளவு துல்லியமான விபரிப்புகள். அவ்வளவு நுணுக்கமாக அழகாக நான் என்னைப் பார்த்ததேயில்லை. வரைந்த காலங்களில் கூட தலையை யாருடைய உடலில் பொருத்துவதோடு சரி.  எனக்குப் பிரியமான என்னுடைய அக்குள் வாசனையை அவன் மிக இரகசியமாகத் தெரிந்து வைத்திருப்பவன் போலச் சொன்னான். மற்ற எல்லாவற்றையும் என்னுடைய படத்திலிருந்து கற்பனை செய்துகொள்ளத்தக்க அடிப்படை ருசுக்களிருந்தன. ஆனால் என்னுடைய வாசனையை, என்னுடைய இரகசிய விருப்பத்தை, பழக்கத்தை  எங்கிருந்து அறிந்துகொண்டான். வழுதியைத்தவிர யார் அதனை நன்கறிவார்? இப்போது அவ்வளவு நெருக்கமாகவிருக்கும் ஆதனிடம் கூட பகிர்ந்துகொண்டதில்லை. கோடான கோடி சாத்தியங்கள் உள்ள இந்த வாழ்கையில் அது மீண்டும் நிகழும் சந்தர்ப்பம் என்னை  உறையச்செய்தது. வழுதிக்குப் பிறகு என்னுடைய பலவீனமான பக்கங்களில் ஒருத்தன்-  ஒரு சிறுவன் போய் அமர்ந்து கொள்ளப்பார்க்கிறான்.  ஆற்றொழுக்காக உருவகித்து வைத்திருந்த என்னுடைய உடலைக் கடலென்று நம்பச்செய்தான். ஆன்மாவிலிருந்து பெருங்காற்று எழுந்துவந்து கடலை அலைக்கழித்தது.

நான் கரைகளை இழந்தேன். அவனுடைய வார்த்தைகள் என்னுடைய உடலை நோக்கி வரவில்லை. அவை என்னுடைய வார்த்தைகளை நோக்கி வந்தன. காதுக்குள் மிக இரகசியமாக மன்னிப்புக்கேட்டன. அவன் அந்தப்பக்கம் வார்த்தைகளினால் நகர்த்தி என்மீது வைத்த கைகளின் மெல்லிய நடுக்கத்தையும் சூட்டையும் உணரச்செய்தான். அழப்போனால்  விழிமடலில் உதட்டை வைத்து அதை முழுவதுமாகக் குடித்து விடுகிறான்.  நீடிக்கக்கூடிய உச்ச சங்கீதத்தை நெடுநாட்களுக்குப்  பிறகு கேட்டேன்.  

மயக்கத்தில் வழுதி வழுதி என்று முணு முணுத்தேன். அவன் சட்டென்று அழைப்பைத் துண்டித்தான். வழுதிக்கு அடுத்ததாக, வழுதிக்குப்பிறகு, வழுதியைப்போல், ஏன் நான் இப்பொழுது இப்படி வார்த்தைகளைக் கற்பனை செய்கிறேன்? கோடான கோடி சாத்தியங்களில் தப்பி வந்தாலும், இது எதேட்சையானதுதான். நான் அழுத்திச் சொன்னேன். இது எதேட்சையானதுதான். 

உடல் விறைத்துறைந்து போனது. கிடந்தேன். ஏதோ உந்த, sorry  என்று போட்டேன்.  மீண்டும் அழைப்பெடுத்தான். எதுவும் பேசவில்லை. மறுபடியும் தொடங்கினான். இப்பொழுது பெருஞ்சங்கடம் பீடித்துக்கொள்கிறது. நான் வேகமாகப் பேச்சை மாற்றவும் முடியாது. குற்றவுணர்வு என்னை பெரிய கரங்களால் நசுக்கத்தொடங்கியிருந்தது. நான் அவனை நிறுத்தவோ துண்டிக்கவோ முடியாத வகையில் ஒரு செயலியால் கட்டுப்படுத்தப்படுகிறேன். அவன் பணம் கொடுத்திருக்கிறான்.  முன்புபோல் என்னை ஒரு பண்டமாக வைத்து விட்டு பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை.  கணநேரம் இருந்த சங்கடத்தை சொற்களால் துடைத்தான். யாரோ தமிழ்க் கவிஞர் சொன்னது போல சொற்களால் சொற்களைக் களைவது.

வெள்ளைப்பூண்டு வாசனை நாசியை நிறைத்தது. உடல் பெருகிற்று. அவனுடைய இரண்டாவது வருகை என்னை இழக்கச்செய்தது. மூன்று முறை வெவ்வேறு வழிகளில் வெவ்வேறு வாசனைகளுடன் என்னிடம் நுழைந்தான். வெள்ளைப் பூண்டாக, குளிர்ந்த மணல் ஏறிய கடற்கரையாக, கருநீல வெல்வெட் கம்பளியின் மேலாக..  இப்படியாக ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நிறம். என்னைக்கேட்காமலே இன்னுமொரு ஐந்து மணி நேரத்திற்குப் பணம் கட்டியிருந்தான். நானும் அவனைக் கேட்காமலே அந்த அழைப்பை அனுமதிக்க செயலிக்கு அனுமதித்தேன்.

கொந்தளிப்பு ஓய்ந்த பிறகு உரையாடல் தொடர்ந்தது. மனம் விசித்திரமான திட்டங்களை வைத்திருந்தது.  குற்றவுணர்வு கொள்ள வேண்டும் என்றால் நான் இப்பொழுது ஆதனை முன்னிட்டுத்தானே குற்றவுணர்வு கொள்ள வேண்டும். நான்இப்பொழுது அவனைத்தான் காதலிக்கிறேன் இல்லையா? கட்டுப்பாடுகள் இல்லாத சுதந்திரமான உறவெனினும், என்னைப்போலே பெண்களுக்குரிய செயலி ஒன்றில் அவன் வேலை செய்து வந்தாலும் இவற்றுக்கு வெளியே நாங்கள் காதலைப் பகிர்ந்துகொள்கிறோம் இல்லையா? மகிழ்வாக இருக்கிறோம் இல்லையா? நான் ஏன் வழுதியின் பொருட்டு குற்றவுணர்வடைகிறேன். இவன் வான்காவுடன் வந்ததாலா? வழுதியை நினைவு படுத்தும் கற்பனைகளை உண்டுபண்ணியதாலா? அல்லது?

நான் அவனிடம் என்னைப்பற்றி எதையும் வெளிப்படுத்தாமல் தவிர்த்துக்கொண்டிருந்தேன். அவன் என்னைத்தெரிந்து கொள்வதில் மிகுந்த அலட்சியத்தைக் காட்டினான். என்னை ஆக்கிரமித்த பிறகு என்னுடைய வரலாற்றில் என்ன இருக்கப்போகிறது என்ற அலட்சியத்தை இரவிடம் பரப்பினான். அதன் விளைவாக ஏற்பட்ட தன்முனைப்பு என்னை பிரஸ்தாபிப்பதில், அவனை என்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் முனைப்புக்காட்டியது. ஆனால் அவன் உருவாக்குகிற எல்லாவற்றையும் உடைக்க கூடியவன்.  அவனே நீல நெடுங்கடலை மணல் அலையும் வெப்ப வெளியாக்குவான்.  அந்த வகையான உரையாடலை அதிகாலை இரவு இரண்டு மணியளவில் தொடங்கினான்.

சிலவேளைகளில் தயக்கமும் பயமும் உள்ள ஆண்கள் வருவார்கள். முன் முடிவுகளுடன் கூடிய கருணையும் இரக்கமும் கொண்டவர்கள். புறக்கணிக்கப்படும் போதும்  யாரும் நீங்கிச்செல்லும்போம் கைகளை வரிவரியாக அறுத்துக்கொண்டவர்கள். காயங்களின் எண்ணிக்கைகளைச் சட்டென்று துல்லியமாகக் கூறக்கூடியவர்கள். அவர்கள் ‘ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தீர்கள் பணக்கஸ்ரமா?’ என்று கேட்பார்கள்.  எரிச்சலாகவிருக்கும். 

No, I am a lust full person, a nymphomaniac என்பேன். சத்தியமாக யாரும் நம்ப மாட்டார்கள். யாரும் இப்படியொரு தொழிலை உடலிச்சைக்காகத் தெரிவு செய்யமாட்டார்கள் என்று ஒரு குருட்டு மனச்சாட்சி அவர்களினுடையது.

பாவம் அவர்கள். ஆனால் அவர்களுடைய இரக்கமோ கழுத்தை கறள் கத்தியால் அறுக்கக் கூடிய கேள்விகளாலானது. இவன் கொஞ்சம் விசித்திரம்தான். இன்னும் அதைக்கேட்கவில்லை. நடு இரவு வரைக்கும் நீளமான உரையாடல். ஒரு  பரத்தையின் செயலியில் இருக்கிறோம் என்ற கூருணர்வைத் தொலைத்திருந்தான். தன்னுடைய முகத்தை அனுப்பினான். அழகாக இருந்தான். மார்பில் ரோமங்கள் வியர்த்திருந்தன. கண்கள் சிவந்திருந்தன. இதயமொன்றைத் தட்டிவிட்டேன். அது வெடித்துப்பரவி கணநேரம் அதிர்ந்துவிட்டு மறைந்தது. தொடர்ந்து அவன் என்னுடையதைக் கேட்டான். நான் தீர்க்கமாக மறுத்தேன். 

‘நம்பிக்கையில்லையா?’

‘விருப்பமில்லை’

‘உடலைக்காட்டுகிறாய், முகத்திற்கு என்ன, அடையாளமா? முகத்திற்கு அர்த்தமேதுமிருக்கின்றதா?’

அவனுடைய குரலில் ஏளனம். அதை மாற்றாமலே, இன்னொரு முறை ‘செய்ய’ வேண்டும் என்றான். நான் போட்டோக்கள் வேண்டுமா என்று கேட்டேன். வேண்டாம் முண்டத்துடன் யார் புணர்வார்கள் என்றான். தான் என்னுடைய உடலுக்கு ஒரு அர்த்த புஷ்டியுள்ள அழகான முகத்தைக் கற்பனை செய்து கொள்வேன் என்றான். 

‘யாருடைய முகம்? நடிகையா?’

‘இல்லை என்னுடைய அம்மா’

நான் என்னை மெளமாக்கிக்கொண்டேன். அவன், அருட்டினான். குரலில் மாற்றமில்லை இயல்பு மாறாமல். 

‘என்ன ஏதும் பிரச்சினையா?’

‘bye’  துண்டித்தேன். மீண்டும் அலறியது. திரையில் அவனுடைய சுயவிபரப்படத்தில் வான்கோவின் முகம் பின்னணியில் உள்ள நீலத்தை வாங்கிக்கொண்டிருந்தது.  கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. பந்தி பந்தியாக வசைகளும், கெஞ்சல்களும் அடுத்தடுத்து வந்து சேர்ந்தன. அவன் தன்னை மிகவும் பலமான  மனோதிடமும் வஞ்சகமும் மிக்கவனாகக் காட்டிக்கொள்ள முனைப்புக்காட்டினான். ஆனால் அவனுடைய நாடகீயத்தில் உள்ள பலவீனங்களை நான் புரிந்துகொள்வதில் அவ்வளவு சிக்கல் இருக்கவில்லை. அவனுடைய எல்லா வார்த்தைகளிலும் பிளவுகளும் கசிவுமிருந்தன.  அவன் பாதுகாப்பான, இலகுவான ஒரு வளையத்தினுள் அடைபட எத்தனித்தான். நான் ஆதனிடம் சொல்லி இருக்கிறேன், பலவீனமான ஆண்கள் தங்களைக் குழந்தைகளாக மாற்றிக்கொள்கிறார்கள். அவர்கள் தாய்மாரிடம் மீண்டும் அவர்களின் நீர்ப்பைக்குள் திரும்ப நினைக்கிறார்கள்.  உணர்ச்சி ஆர்ப்பரிக்க குழந்தைமைக்கு தங்களைச் சாய்த்துக்கொள்கிறார்கள்.  அவர்கள் அதற்காக தங்களை நோயாளிகளாகவோ, தனித்து விடப்பட்டவர்களாகவோ கற்பிதம் செய்துகொள்கிறார்கள். அவர்களைப்பொறுத்தவரையில் கொடிய இவ்வுலகத்தில் தனித்து வாழமுடியாத, உணர்வுகளினால் சபிக்கப்பட்ட மாந்திரீகங்கள் நிறைந்த நீர்ப்பரப்பில்  தங்களை எறிந்து விட வேண்டும். அவர்கள் அதன் பொருட்டு எத் தீமையையும் தெரிவு செய்யவும் தயங்க மாட்டார்கள். 

நீங்கள் முதலில் எதிர்கொண்ட தீயதை மீண்டும் சந்திக்க நேரலாம். உங்களை அழிக்கக் கூடிய சொற்களை ஏதேனுமொரு  தெய்வம் ஒரு குழந்தையின் கைகளில் கொடுத்தும்  அனுப்பலாம்.

இரண்டு வருடங்களுக்கு முதல், அவர்கள் என்னுடைய படங்களை எடுத்து தலையை வெட்டி நிர்வாண உடல்களுக்குப் பொருத்தி ஒரு போலி முகநூல் கணக்கில் என்னை கலாச்சாரச் சீரழிவு பற்றிய பெரிய கட்டுரை ஒன்றுடன் ‘படுவேசை’ என்ற அடைமொழியால் அடிக்கடி  சித்தரித்த பதிவை போடும் போது,  இவையேதும் தெரியாமல் ஆதனுடன் சிற்றுண்டிச்சாலையில் தேனீர் ஒன்றை அருந்திக்கொண்டிந்தேன். அதுஆதனுடன் ஏற்பட்டிருந்த ஈடுபாடும் உறவும் மீண்டும் என்னுடைய நாட்கள் மீது வனத்தை துளிர்க்கச் செய்த பொழுதுகளில் ஒன்று. ஆலையினுடைய இயக்குனர் திரு. நீலகண்டன் என்னைக் அழைத்தார். திரு.நீலகண்டன் ஆலையில் வேலை செய்யும் பெண்பிள்ளைகள் அனைவரையும் எப்படியாவது படுக்கைக்கு கொண்டு போய்விடவேண்டும் என்ற விருப்பங்களையும் கைங்கரியங்களையும் உடையவர். ஏற்கனவே ஒரு வழக்கு அவருக்கு நிலுவையிலிருந்தது. அதை வெளியில் தெரியாமல் அடைத்துக்கொண்டிருந்தார். எங்களுடைய  பள்ளிச்சிறுவர்களுக்கான நீலக் காற்சட்டை தாயாரிக்கும் பிரிவில் அவரின் பிரசன்னம் அதிகமாகவிருக்கும். அர்த்தமற்ற என்னுடைய முகத்தை விட்டுவிடுட்டு என்னுடைய உடல்வாகுவைப் பற்றி நாசுக்காக ஏதேனும் சொல்லிக்கொண்டு சுத்துவார். என்னுடைய கடும் போக்குத்தெரிந்து என்னை நேரடியாகச் சீண்டும் தயக்கத்திலிருந்தார். ஆயினும் எப்போது அசந்தாலும் அந்த கொடிய நாகம் கொத்தும் என்று நன்கறிந்திருந்தேன். அன்றைக்கு நான் அறைக்குள் நுழையும் போது திரு. நீலகண்டன் நமட்டுச்சிரிப்புடன் தன்னுடைய மடிக்கணணியைப் பார்த்துக்கொண்டிருந்தார். என்னைக்கண்டதும் எதுவும் பேசாமல் மடிக்கணணியின் திரையை என்னுடைய பக்கம் திருப்பி வைத்தார்.

அவர்கள் என்னைச் சித்தரித்த படங்களும் வார்த்தைகளும் ஆயிரக்கணக்கான விருப்பங்களுடன் பகிர்வுகளுடனுமிருந்தது. வெடித்தழத்தொடங்கினேன். அடிவயிற்றைப்பிடித்துக்கொண்டு அப்படியே உட்கார்ந்தேன். ஆறுதல் சொல்வது போல அருகில் வந்து தொட ஆரம்பித்தார். விலகினேன். கலங்கிய பார்வையால் எரிக்கவும் செய்தேன். உடனே திரு. நீலகண்டன் தன்னுடைய கனிவான, வேட்கை மிகுந்த முகத்தை கடுமையாக்கிக் கொண்டு, ஆலையில் இருப்பவர்களும் நிர்வாகமும் என்னை வேலைக்கு வைத்துக்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர் என்றார். நான் அது பொய் என்று அலறினேன், ஆனால் ஆலையின் நன்மதிப்புக் கருதி அதனைச்செய்ய வேண்டும் என்றார், அந்த ‘நீசர்கள்’  என்னுடைய வேலை விபரம் முதற்கொண்டு போட்டிருந்தனர், நானும் ஆதனும் அருகிருக்கும் படங்களைக் கூட. 

நான் திரு. நீலகண்டனுக்கு நடந்ததை விளக்கத்தொடங்கினேன். அன்றைக்கு மாலையில் ஒரு வெளிநாட்டு இலக்கத்தில் இருந்து அழைப்பு வந்தது. ஒருவன் பேசினான். கரகரத்த குரல், இந்திய- தமிழ்நாட்டு வாசம் கலக்காத எண்பது, தொண்ணூறுகளின் யாழ்ப்பாணத்தமிழ். புலம்பெயர் நாடு ஒன்றில் இயங்கும் ஏதோவொரு ஈழத்தமிழர் இயக்கத்தின் பெயரைச் சொன்னான். தனக்கு வழுதியைத் தெரியும் என்றான். நான் ‘இயக்கக் கதையெண்டா வையுங்கோ.. அவரோடை எல்லாம் போட்டுது. ஆமிக்காரர் ரெக்கோட் பண்ணுவாங்கள், சும்மா தேவையில்லாத பிரச்சனை’ என்றேன் கடுமையாக. அவன் சட்டென்று அரன்றவன்,  இது வழுதியைப் பற்றியதல்ல உன்னைப் பற்றியது என்று ஒருமைக்கு மாறினான், குரலை வெறுப்பில் கொண்டுவந்து நிறுத்திக்கொண்டு, விசயத்திற்கு வந்தான்.

‘எங்கட ஆயுதப்போராட்டம் தற்காலிகமா மெளனிக்கப்பட்டாலும், எங்கட பண்பாடு கலாசாரத்தை அப்படி அழிய விட்டிட மாட்டம். நீங்கள் ஒரு போராளின்ர- மாவீரன்ர மனைவி, உங்களுக்கும் அந்த தார்மீகப்பொறுப்பு இருக்கோணும் எண்டு எங்கட அமைப்பு எதிர்பாக்குது. நீங்கள் இன்னொராள மறுமணம் செய்யுறதிலை, எங்களுக்கோ வழுதின்ர ஆன்மாவுக்கோ ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் இஞ்ச வெள்ளைக்கார வேசையள் ஆடுற லிவ்விங்டுகெதர், டேட்டிங் கூத்துகளுக்கு எடுபடுறத நாங்கள் பொறுத்துக்கொள்ளேலா. மற்ற ஆரும் செய்தால் கூடப்பரவாயில்லை. ஆனா ஒரு போராளின்ர மனிசி இப்பிடிச்செய்யிறது சரியில்லை. அதாலை தயவு செய்து, அன்புச் சகோதரி, இந்தமாதிரி கலாச்சார சீரழிவுகளுக்கு எடுபடுறத நிப்பாட்டுங்கோ. இல்லையெண்டால் நாங்கள் எப்பிடிக் கதைப்பம் என்ன செய்வம் எண்டு உங்களுக்குத்தெரியாமல் இருக்காது’

‘போனை வைய்யடா நாயே’ 

 திரு. நீலகண்டனிடம் அதைத் தெளிவாக  ஒப்பித்து அவர்கள் செய்த வேலைதான் இது என்று சொன்னேன். அவர் எனக்காக பரிவை வரவழைத்துக்கொண்டார். தான் மேலிடத்தில் பேசுவதாகவும் சொன்னார். வீட்டிலிருக்கும் பிரச்சினைகளில் வேலையை விட்டுவிட்டால் அவ்வளவுதான். எனக்கு யாரிடமும் கையேந்தப்பிடிக்காது. ஆதனிடம் கூட கடன்தான் வாங்குவேன். அப்பாவோ வழுதியோ யாரிடமும் இரந்து அறியேன். போர் எங்களை மென்று துப்பிய இடத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கும் போது இவர்கள் எங்கிருந்தோ மீண்டும் சுடுகிறார்கள். நான் அழுது கொண்டேயிருந்தேன். திரு. நீலகண்டன், என்னுடைய வேலையைப் பாதுகாத்துத் தருவதற்கான தன்னுடைய பேரத்தை ஆரம்பித்தார். 

‘சேர் நான் உங்கடை மகள் மாதிரி, இப்பிடி கதைக்காதீங்கோ?’

‘மகள் எண்டால் என்ன? ஆதன் உன்னைவிட ரெண்டு வயது குறைஞ்சவன் தம்பி மாதிரி.. அவனோட  படுத்தெழும்புறாய்தானே? 

அதிலிருந்து மூன்றாவது வினாடியில்  அவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு வெளியேறினேன். மாலையில் ஆறுதல் சொல்லும் சாக்கில் அழைத்த வேலைத்தளத்தின் சக பெண்கள் அவருடைய வெள்ளைக் கன்னம் கன்றிப்போய் நீலம் பாரித்துவிட்டதாகச் சொன்னார்கள்.  அதற்குப்பிறகு நான் ஊரில் உள்ள பல ஆயிரக்கணக்கான நீலகண்டன்களையும் சமாளிக்க வேண்டியிருந்தது. என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டேன். உலகத்திலிருந்து வீட்டிற்கு, வீட்டிலிருந்து என்னுடைய அறைக்கு. நான் இந்த உலகத்திற்கு பயப்படவில்லை. நான் அதை வெறுத்து ஒதுக்கினேன். 

அன்றைக்கு திரு. நீலகண்டனின் அறைக்குள் நான் அனுபவித்த அந்தரத்தை இவனுடைய வார்த்தைகளின் புதிர்ப்பாதையில் சந்தித்துக்கொண்டு நின்றிருந்தேன். அவன் ஏறக்குறைய என்னைப் பேரம் பேசினான். மிரட்டினான். அழுதான். 

‘நீ இப்ப செய்ய வராட்டி ஒரு ஸ்ரார் கூடக் குடுக்க மாட்டன்’

என்னுடைய கணக்கின் அடியில் இருந்த  மஞ்சள் நட்சத்திரங்களைப்பார்த்தேன் நான்கு அரை நட்சத்திரங்கள். டொலர்கள் குறையாமல் வரும். அவனுக்குப் பதில் சொல்லாமல் இருந்தேன். அவன் குரல் மறுமுனையில் ஆவேசமாக வெளிப்பட்டது. என்னை வசைபாடத்தொடங்கினான். ஏனைய வசை வாக்கியங்களுக்கு இடையில் பதின்மூன்று ‘அறுதல் வேசைகளைப்’ பாவித்தான். நான் அழுவதை அவன் கண்டுபிடித்து விடக்கூடாதென்பதற்காக என்னுடைய மூச்சை சீராக்கி நிதானமாக  சுவாச ஓசை வரச்செய்தேன். கண்கள் கரைந்தன. நான் அழைப்பைத் துண்டித்துவிட்டு தப்பிச்செல்ல விரும்பவில்லை.

அவனே அழைப்பை நிறுத்தினான். பந்தி பந்தியாக  தட்டச்சு செய்யத்தொடங்கினான். நிதானமான எழுத்துப்பிழைகளற்ற வாக்கியங்கள். என்னைத் திட்டி முடித்தவன், தன்னைத் திட்ட ஆரம்பித்தான். கோவம் வந்தால் தான் எதுவும் செய்வேன் என்றான். என்னுடைய  கழுத்துக்கு கீழே உள்ள படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என்றான்.

‘அவர்களுக்குத் தலை, உனக்கு உடம்பு’ அடித்து விட்டு திரையில் இருந்து கையை எடுத்தேன்.

அவன் அடுத்த கட்டத்திற்குப் போனான். தன்னை மாய்த்துக்கொள்வதாக அறிவித்தான். தான் என்னிடம் வைத்தது ’வெறும் காமம்’ இல்லை என்று இரைந்தான். அதனை எல்லையில்லாத நீலவானத்தைப்போன்ற காதல் என்று அறிவித்தான். நாடகம் தொடங்க முதல் திரைக்குப்பின்னால் இருந்து ஒலிக்கும் அசரீரியின் சந்தமிருந்தது. நான் அவனை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றான். கையை வெட்டிக்கொள்ளப்போவதாகச் சொன்னான். நான் தொடர்ந்தும் மெளனமாகவிருந்தேன்.  போட்டோ வந்தது. இருட்டுக்குள் கைபேசியின் பிளாஷ் வெளிச்சத்தில் அவனுடைய கையில் மூன்று கருநீலக் கோடுகள் கசிந்து துளிர்த்திருந்தன. ஆழமான காயங்கள். இப்போது ரத்தம் பெருகத் தொடங்கியிருக்கும்.  நேரத்தைப்பார்த்தேன். நீலம் வெளிக்கப்போகிறது. அந்தப் பிரீமியம் கணக்கிற்கு இன்னும் ஏழு வினாடிகள் இருந்தன. அவன் கையில் ரணத்தொடு இன்னுமொரு ஐந்து மணித்தியாலத்திற்கு காசு கட்ட அனுமதி கேட்டான். குரல் தகவல் துண்டொன்றை அனுப்பியிருந்தான். உடைந்த கோவமான குரல்.

‘இரக்கமில்லாத எளிய வேசை, அக்செப்ட் பண்ணடி’ 

செயலி அவனுடைய கோரிக்கையை ஏற்கட்டுமா என்று  என்னிடம் கேட்டது. 

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’