அரவெனும் விலங்கு | காளம் 19
சித்திரை முதல் நாள், தந்திரி மலை எல்லைக் காடுகளுக்கும், கிராமங்களுக்கும் இடையில் இருந்த மேய்ச்சல் நிலங்களைச்சேர்ந்த காட்டுப்பட்டிகளில் தொழில் புரியும் பட்டி முதலாளிகளும் மேய்ப்பர்களும் அவர்களின் குடும்பங்களும், அன்று ஈன்ற கன்றுகளின் இளங்கொடிகளை உரப்பையில் முடிந்து, ஊருக்கு வெளியே நின்ற பேராலின் விழுதுகளில் கட்டி, பூசைச் சடங்குகளை செய்து முடித்து விட்டுக் கலைந்து செல்வதை, நுள்ளானும் சகாக்களும் புதர்களாகவே தங்களைச் சோடித்துக்கொண்டு, காட்டோடு கரைந்து புதர்கள் உடலெங்கும் முளைத்திருந்தன. உருமறைப்பு வேவுக்காரர்களுக்கு முதற் பயிற்சிகளில் ஒன்று. கண்கள் இமைக்கும் கணத்தையும் கணக்கிட்டபடி திறந்திருந்தன. வசந்த காலத்தின் உச்ச நாட்களில் ஈணப்படும் கன்றுகள் செல்வங்களெனப் பெருகி பட்டிகளை நிறைக்கப் போகின்றவை. போதிய புல்லும், நீரும் கிடைக்கும் இக்காலத்தில் அவற்றின் தாய்ப் பசுக்கள் முலையூட்டும் பாலின் கடும் சுவையில் வேனில் காலத்தின் சுவையும் பெருக்கும் இருக்கும். அதனால்தான் இக்காலத்தை அப்பட்டிகளைச் சேந்த மேய்ப்பர்கள். `பொலி` காலம் என்றனர். கமக்காரர்கள் அறுவடைச் சடங்கையும், இடையர்கள் கன்றுகளின் பெருக்கத்தையும் ‘பொலி’ என்று சொல்லிக் கொண்டாடுவர். அச்சொல்லே மந்திரமென்று ஆகிப் பொலியும் என்பது அவர்களின் துணிபு.
காமா எனப்பட்ட நுள்ளானின் வேவு அணியினர் ஒன்றரை வருடங்களின் பின்னர் இராணுவமல்லாத மனிதர்களைக் காண்கிறார்கள். நகுலண்ணர் தலைமையேற்றிருந்த வேவு அணி இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. நகுலண்ணர், பிரகலாதன், மணிவண்ணன், திருச்செல்வி, புசாந்தினி ஐவரும் எல்லைக்காப்புக்கும், தொடர்பாடலுக்கும் பொறுப்பாயிருந்தனர்.
நுள்ளான் இரண்டாவது அணியை வழிநடத்தி வந்தான். முன் வேவு அணி என்று தாங்களே அழைத்துக் கொண்டனர். ரஜோ என்கிற நுள்ளான், வாகீசன், பாமினி, துர்க்கா, பார்த்தீபன். பார்த்தீபனும் வாகீசனும் எல்லோரிலும் இளையவர்கள். கள அனுபவம் குறைந்தவர்கள். வயதுக்கே உண்டான பதட்டமும் அதிகப்பிரசங்கித் தனமும் அடிக்கடி அவர்கள் நகுலண்ணரிடம் பேச்சு வாங்கித் தருவதுண்டு. பாமினியும் துர்க்காவும் சினைப்பர் சூட்டில் தேர்ச்சி பெற்றவர்கள். தொலைகாட்டிகள் மூலமும் ஜி பி எஸ்கள் மூலமும் வரைபடங்களையும் வேவுத்தகவல்களையும் தொகுத்துருவாக்கும் பணி இருவரினதும். இவ்விரு பெண்களின் ‘கவர் அப்’ களில் தான் மூவரும் வேவுப்பணிகளைச் செய்து வந்தனர்.
திட்டப்படி காட்டில் இரண்டு வருடங்கள் வெளித்தொடர்புகளற்ற பயிற்சியும் வேவுப் பணிகள் மட்டுமே செய்யப்பட வேண்டும். எனினும் திட்டங்கள் மாறியிருந்தன. மீண்டும் நேரடிக்களங்களுக்கான முகாந்திரங்கள் தெரிவுது போலத்தான் வோக்கித் தொடர்புகளிருந்ததாக நகுலண்ணன் சொல்லிக்கொண்டிருந்தார். இன்னொரு சண்டை வரலாம். கடைசிச் சண்டையா இருக்கும் என்றார். தந்திரி மலையை அண்டிய எல்லைக்காடுகளில் ஊடுருவத்தக்க வழிகளைக் கண்டறியவும் அக் காடுகளுக்குள் இருக்கும் இராணுவ அரண்களையும் முகாம்களையும் முழுதறிந்து அறிக்கையிடவும் கோரியிருந்தார்கள். அத்தோடு எல்லைக் கிராமங்களைச் சென்று அறிந்து கொள்ளும் படியும் அழுத்திச்சொல்லப்பட்டிருந்தது.
`தமிழாக்கள் மாதிரி எல்லோ இருக்கு, பால் மரத்திலை இளங்கொடி கட்டுற வழக்கம் சிங்களவருக்கு இருக்கெண்டு இப்பதான் தெரியும்` வாகீசன் மெல்லச் சொன்னான். நுள்ளானுக்கு அவன் சொன்னது கேட்கவில்லை, நுள்ளான் சைகையால் தனக்கும் காதில் விழவில்லை என்றான். பார்த்தீபனுக்கு ஓரளவு புரிந்தது. வாகீசனுக்கு ஏற்கனவே கரகரத்த குரல் , இரகசியமாக குரல் தாழ்த்திச் சொல்லும் போதும் கூட அக்கரகரப்பு இருக்கும், அதனால் அவனை வேவுக்காலங்களில் பெரும்பாலும் வாய் திறக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மனிதர்கள் எதில் தாழ்வுச் சிக்கலைக் கொண்டிருக்கிறார்களோ அதை நோக்கியே சென்றழிய எழுபவர்கள். வாகீசனுக்கு கதைக்காமல் இருப்பதனால் குரலுக்கு காத்திருந்த சொற்கள் தலைக்குள் பெருகி வெடித்துவிடும் என்பது போல் பதட்டமாகி விடுவான். எந்தவொரு மெளனமான, இரகசியமான பொழுதிலும் அவனே முதலில் பேச்செடுப்பவனாக இருந்தான்.
‘ஊரிலை சிவனேறி எண்டொரு விசரன் இருந்தவன், அவன் என்ன கேட்டாலும் சனம் குடுத்திடும், என்ன செய்தாலும் பொறுத்துக்கொள்ளும், ஏனெண்டால் அவனுக்கு வாய்கட்டு மந்திரம் தெரியும் எண்டு பயம். எப்பவும் அவன்ர ஊத்தைப் போக்கற்றுக்குள்ள நாலு துண்டு வசம்பு கிடக்கும், ஊரிலை இருக்கிற நாய்க்கெல்லாம் அவனெண்டால் சத்துரு. ஆமிக்காரன்ர பூட்ஸ் சத்தம் கண்டால் குலைக்கிற மாதிரி சிவனேறி தூரத்திலை வரேக்கையே குலைக்கத் தொடங்கீடும், ஒரு கட்டத்துக்குமேலை வீட்டுக்காறர் ஆரும் வந்து நாயை அடக்காட்டி, அவன் வசம்புத் துண்டை எடுத்து விசுக்கிப் போட்டுப் போடுவான், பிறகு அந்த நாய் குலைக்காது, போய்க்கேட்டால் தானொண்டும் செய்யேல்லை எண்டு சாதிப்பான். அவனோடை முறுகவும் ஏலாது, ஆக்களின்ர வாயும் கட்டுவானெண்டு ஒரு கதையிருந்தது. அவனுக்கு எப்ப மண்டைக்குள்ள சூரியன் உதிக்குதோ அப்ப வந்து கட்டை எடுத்து விடுவான். அடுத்தமுறை ஊருக்கு போகேக்கை அவன் காலிலை கையில விழுந்தாவது மந்திரமும் வசம்பும் வாங்கி வருவன் பார்’ என்பார் நகுலண்ணர்.
பார்த்தீபன் அருகணைந்து வாகீசன் கேட்டதை நுள்ளான் காதில் குனிந்து ஓதினான். நுள்ளான் அருகில் யாருமில்லை என்பதை மனதில் இருத்திக் கொண்டு மெல்லிய இரகசியக் குரலில் விளக்கினான்.
‘பெரும்பாலும் தமிழ்ச் சனங்கள்தான், உந்த இடங்கள், குறிச்சியள், குளங்களின்ர பேரைப் பாத்தாலே விளங்கீடும். ஜே ஆருக்கு பிறகு சிங்கள குடியேற்றங்கள் பரவி , அங்காலை டவுனும், சந்தையும், முக்கியமா அரசாங்க அதிகாரிகளும் சிங்களம் எண்டு ஆனபிறகு, பிரச்சினை மெல்ல மெல்ல பெரிசாக சனம் சிங்களம் கதைச்சு, சிங்கள் ஆக்களை கட்டி, கடையள் வியாபாரம், சடங்கு சாங்கியம் எண்டு சிங்களவர் எண்டே ஆகிட்டு. வளந்தாக்களுக்கு நல்லா தமிழ் தெரியும், ஆனால் தேவையில்லாமல் காட்டிக்கொள்ள மாட்டாங்கள். எனக்குத் தெரிஞ்சு அதுதான் கடைசி தலைமுறையா இருக்கும். எல்லைக் கிராமங்கள்ள இருக்கிற சிங்கள சனங்கள் , பிள்ளையார், முருகன், பத்தினி எண்டு கும்பிடுறதாலை, சனம் சமயம் சடங்கு எல்லாம் ஒண்டை ஒண்டு பிடிச்சு பின்னி ஒரே திரள் கொடி எண்டு பெருகீட்டு’
உங்களுக்கு என்னெண்டு அண்ணை உதெல்லாம் தெரியும்?
‘கிளாசிலை நித்திரை கொள்ளா தேங்கோடா எண்டு எத்தினை தரம் பங்கர் வெட்ட விட்டாலும் திருந்தாத விசரங்களா பாத்துத்தானே நகுலண்ணர் எனக்கு பிடிச்சுத்தாறவர்’ சொல்லி விட்டு நுள்ளான் இலை தளைகளுக்கு மத்தியில் சுற்றிக் கரி அப்பப்பட்டு , கறுப்பில் இருட்டெனும் கண்ணால் முறைத்தான்.’
பாத்தீபனும் வாகீசனும் , நுள்ளானுக்குப் புதியவர்கள், ’ரஜோண்ணை’ பற்றிய பேய்க்கதைகள் விசேட உளவணியெங்கும் பிரபலம். பார்த்தீபனுக்கும் வாகீசனும் நுள்ளான் பற்றி உருவாக்கி வைத்திருந்த சித்திரம் இன்னும் அடியாளத்தில் கிடக்கவே செய்தது. ஈவிரக்கமற்ற வேவுக்காரன், முன்கோபி, முதலில் இம்ரான் பாண்டியனில் இருந்த போது பயிற்சி மாஸ்ரரும் தலைமையிடங்களுக்கு அணுக்கமாகவுமிருந்த மூத்த போராளியை அறைந்திருக்கிறான். அவரை ‘வேசை மோன்’ என்றும் விழித்திருக்கிறான். இருவருக்குள்ளும் என்ன நிகழ்ந்தது என்று யாரும் அறிந்திருக்க வில்லை. விசாரணைகளின் பின்னர் ரஜோவை எண்பது நாட்கள் டம்மில் போட்டிருந்திருக்கிறார்கள். அம்மூத்த போராளியை இடம்மாற்றி மட்டக்களப்பிற்கு அனுப்பியிருந்தார்கள். ‘டம்’ எனப்படும் ஆழ் இருட்டறைகளில் இருப்பதைக் காட்டிலும் ’சாவுறுப்பை’ ஏற்று நெற்றியிலோ பிடரியிலோ குண்டு வாங்கி அக்கணம் மனம் அடையும் அதிர்வுடன் செத்துப்போகலாம். இதுவரைக்கும் அங்கு சென்று மீண்ட ஓரிருவர் கூட மனம் பிறழ்ந்து மீண்டவர்கள்தான். ஒரு வேளைக்கு மட்டும் மென் வெளிச்சம் தெரியும் துளையினால் போடப்படும் உணவும் நீரும் தவிர சொந்தச் சிறுநீர், மலம், மற்றும் இருட்டுடன் அவ் ஆழ் ‘டம்மிற்குள்’ இருக்க வேண்டும். நினைத்துப்பார்க்கவே குடலும் மூளை மடிப்புக்களும் புரண்டு உடல் விதிர்க்கும்.
‘பீ மூத்திரம் ஏன் ஆள் தெரியாத இருட்டோடை கூட இருந்திடலாம், கொஞ்ச நாளிலை எல்லாம் பழகீடும். ஆனால் அங்கை பழக துன்பமான ஒண்டு இருக்குமெண்டால் அது என்னோடை நானே இருக்கிறது மட்டும் தான்’
நுள்ளானின் அந்த வார்தைகளை நகுலண்ணர் அடிக்கடி அவர்களிடம் சொல்வதுமுண்டு.
‘ரஜோ அண்ணை ரெண்டு தரம் டம்மில இருந்து மீண்டவர் என்று படையக பயிற்சியில் கேள்விப்பட்டதை வாகீசன் பார்த்தீபனிடம் சொல்லியிருந்தான். இரண்டு தடவைகள் மீண்டிருக்கிறான். என்பதை அவ் இளைய போராளிகள் பலரும் நம்புவதேயில்லை. நம்பாதவையும் ஆனாலும் சொல்லப்படுபவையும், பெருகும் வேகமும் அளவும் தான் பெரிது. நுள்ளானே அறியாத ரஜோ பற்றிய பேய்க் கதைகள் ஏராளம் போராளிகளிடையே உலாவியது. நகுலண்ணரின் அணி அமைக்கப்பட்ட போது நுள்ளானுக்குத் தகுதியிறக்கப்பட்ட தண்டனையின் ஓர் பகுதியாகவே காட்டிற்கு அனுப்பப் பட்டிருந்தான். யுத்தத்தில் இருப்போர் அவர்கள் அக்காலத்தில் அடைந்தவற்றினாலேயே நினைவு கொள்ளப்படுகிறார்கள், வாழும் போதே களங்களில் பேய்க்கதைகள் என்று ஆகின்றார்கள். களம் பட்ட பிறகு அப்பேய்க்கதைகள் சாகசக் கதைகளாகவும், போர்க் கதைகளாகவும் மாறுகின்றன. நுள்ளானின் இரண்டு டம் கதைகளில் முதலாவது அவன் எவ்வளவு கொடூரன் என்பதாயும், இரண்டாவது அவன் எவ்வளவு கல்லென்றானவன் என்பதையும் சொல்லுவது. வாகீசனும் பார்த்தீபனும் ஆரம்பத்தில் நுள்ளானுடைய அணியில் இருப்பதற்குத் தயக்கம் காட்டினார்கள். நகுலண்ணர் இருவரின் உடல் நெளிவைக் கண்டதும் புரிந்து கொண்டார்.
‘நானும் முதல் அவனை தாயை சரிச்சிட்டு வந்தவன் எண்டுதான் அணுகின்னான், முதல் டம்முக்கு பிறகு என்னட்டைத்தான் அவனை அனுப்பினவங்கள், நானும் அனுதாப்பும் தான் அவனுக்கு பொறுப்பா இருந்தனாங்கள். அவனுக்கு வேறை ஒரு சைட்டும் இருக்கு. அவனை எங்களுக்கு கீழை எடுத்து ஆறுமாசத்துக்கு பிறகு அனுதாப், அண்ணைக்கு ஒரு கடிதம் எழுதினவன், கடைசி பந்தி மட்டும் என்னை ஒருக்காப் படிச்சுப் பார் எண்டு காட்டினவன். ஒவ்வொரு சொல்லும் எனக்கு ஞாபகம்.
‘இந்தப்பெடியனுக்கு தேவை ஒரு மாபெரும் தாய், அல்லது அவன்ர ரத்தத்திலை பிறந்த ஒரு பிள்ளை. பத்தொன்பது வயசுதான் ஆகுது, இண்டைக்கு இவனைத் தாக்காட்டுறது இயக்கம்தான், எரிஞ்சு கொண்டு இருக்கிற அவன்ர கண்ணை ஏதும் கொண்டு நூக்கோணும். தலைமையிலைதான் பெரிய மரியாதை வச்சிருக்கிறான். உங்களை நம்பித்தான் வந்திருக்கிறான், ஒரு தேப்பன் மாதிரி. இவனுக்குள்ள ஒரு பேரழிவு உருவானதுக்கு இவன் மட்டுமே காரணமெண்டு சொல்லேல்லாது இல்லையா? தாயைக் கொலை செஞ்சவன் எண்டோண்ணை எல்லாரும் ஒரு கணம் திடுக்கிடுறது உண்மைதான். அவன் இயக்கம் எண்ட குகையிலை பதுங்கை வரேல்லை. அவன் தன்னை ஏதுமொரு அர்த்தமுள்ள பலிப்பாறையிலை அறுத்துப் பலிகுடுக்க வந்திருக்கிறான். குற்றங்களையும் பாவத்தையும் அடையோணும் எண்டு எந்தப்பிள்ளையும் இஞ்ச வாறேல்லை. அந்தக் குழந்தையால லட்சம் உயிரை அழிக்க வந்த ஒருத்தனாய் ஆகேலும் எண்ட உண்மையும் அந்தப்பிள்ளையோடை சேர்ந்தேதான் பிறக்குது. நானும் நகுலனும் உறுதிதாறம் ரஜோ ஒரு நல்ல போராளியா ஆவான், நாங்கள் பொறுப்பெடுக்கிறம்,
நகுலண்ணரும் அனுதாப் அண்ணரும் எத்தனையோ முறை பெரிய சண்டையளுக்கு பிறகு, தலைவரை சந்திக்க கூட்டிக்கொண்டு போறன் வா என்று கேட்டிருக்கினம். ’அவர் கூப்பிட்டவரோ?’ என்பான். இல்லையென்று பதில் வந்தால். சிரித்து விட்டு வேண்டாம் என்று விட்டு நகர்ந்து போவான். காடுகளையும் எல்லையரண்களையும் ரஜோ அறிந்தளவு அறிந்த வேவுப்போராளிகள் சிலரே. ஓயாத அலைகள் மூன்றின் ஆரம்பகட்ட வேவுப்பணிகளால் தளபதிகளிடையே அறியப்பட்டவனானான். சீக்கிரமே ரஜோவைத் தலைவர் கூப்பிடுவார் என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அவன் நகுலண்ணரிடம் ‘நான் கூப்பிடாமல் வரமாட்டன் எண்டு இருக்கிறது அவருக்கு தெரிஞ்சிருக்குமோ?’ என்று கேட்பான். ‘சொல்லியிருப்பாங்கள்’ என்றார். ரஜோ சிரித்து விட்டு ‘அப்ப கூப்பிட மாட்டார்’’ என்று சொல்லிச் கெக்கடமெழச் சிரித்துவிட்டுப் போவான்.
வாகீசனும் பார்த்தீபனும் இவ்வணியில் இணைந்த நாட்களில் ரஜோவைப் பற்றிய கதைகளை சக போராளிகளிடம் சொல்லிக் கொண்டிருப்பர். தாயைக் கொன்றவன் என்பதை ஆண்களைவிட பெண்கள் பெரிதுபடுத்தாமல் நுள்ளானுடன் நெருக்கமாகவும், மரியாதையாகவும் பழகினார்கள். அவனைச் சீண்டவும் பகிடி விடவும் கூட அவர்களாலேயே சுலபமென்று ஆனதை இளையவர்களான வாகீசனாலும், பாத்தீபனாலும் இலகுவில் மனமேற்க முடியவில்லை. அதை அவர்கள் வெளிப்படையாகவே சக வேவுப் போராளிகளிடையே உரையாடும் போது அழுத்தியும் வியந்தும் சொல்லியும் வந்தனர்.
ஊர்களைத் தாண்டி முகாம்களை நெருங்கிச்செல்லும் வேவுப்பணிக்கு நகுலண்ணர் நுள்ளானுடைய அணியில் இருவரையும் சேர்த்துச் சொன்னபோது, கொஞ்சம் திடுக்கிட்டனர். நுள்ளானுடன் அங்கு பழகிய நாட்களில் அவன் மீது வெறுப்பையும் விலக்கத்தையும் சொல்லிச் சொல்லி வளர்த்துக் கொண்டதன் ஆழ் நஞ்சின் சூட்டையும் ஒவ்வாமையையும் உணர்ந்தனர். நகுலண்ணர் இருவரையும் உள்ளறிந்தவர் என்பதால், கொடுப்புச் சிரிப்பொன்றுடன் ‘உங்கட கலியை நீங்கள்தான் ஆடி இறக்கோணும்’ என்றார். நரியூளை கேட்ட கிடையைப் போல் எல்லாத்திசைகளுக்கும் அலைந்து பதறின இருவரின் கண்களும்.
நுள்ளான் சைகையால் ஆட்கள் அற்றுப்போய் வெறும் நிழல் வதியும் அப்பேரால மரத்தைக் காட்டினான்.
இளங்கொடிகள் ஆடிக்கொண்டிருந்த அப்பேராலம் பரவி பல நூறு விழுதுகளால் பெருகியிருந்தது. தூரப்பார்வைக்கே அதன் சிவந்த கனிகள் முழித்துத் தெரிந்தன. பறவைகள் விழுந்துகொண்டிருந்தன. பற்றைகளும், வெயில் வாட்டிய சம்புப் புல்வெளிகளும் மென்பசுமையும், மஞ்சள் விரிவும், சாம்பலுமென திரும்பத்திரும்பத் தோன்றிச் சென்றன. அப் பெரு மரம் மட்டும் தனித்த பொழிவென்று தலை விரித்து நின்றிருந்தது. கிராமத்தை அறிவதற்கு அவ்வாலில் ஏறிப் பார்க்க வேண்டியிருக்கும். ஊரடங்கும் போது இவர்களுக்குச் சற்றுத்தொலைவில் மரங்களில் நிலையெடுத்திருந்த துர்காவையோ பாமினியையோ ஆலில் ஏற்றி கவர் அப் செய்யச் சொல்லலாம் என்று நுள்ளான் நினைத்திருந்தான். மேய்ப்பர்களும் பட்டிக்காரர்களும் அகன்ற பிறகு, முன்னேறிச்சென்று பற்றைகளுக்குள் படுக்கச் சொல்லும் நுள்ளானின் கட்டளைக்காக வாகீசனும் பார்த்தீபனும் காத்திருந்தார்கள். உச்சிக்குப் பிறகு அங்கே யாரும் வரமாட்டார்கள். சித்திரைச் சடங்களும் பண்டிகையும் கிராமங்களில் கோலாகலமாகியிருக்கும். மென் முழவுச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. இரவும் அச்சடங்குகளும் கொண்டாட்டங்களும் நடக்கலாம். அதற்குள் கிராமத்தைத் தாண்டி குளப்பக்கமாக இறங்கிச் செல்ல வேண்டும். புறப்பட முதல் நிலப்படத்தை விரித்து எல்லோருக்கும் வேவுத்திட்டத்தை விளக்கி நிலப்படத்தை முழுமையாக உள்ளெடுங்கள் என்று சொல்லியிருந்தான்.
‘ஒரு இடத்தின்ர மப் எண்டது சாதாரண சண்டைப் போராளிக்கு எங்கை நிலையெடுக்கலாம், எங்கை முன்னேறலாம், எப்படி பின்வாங்கலாம், எண்டது பற்றினது. அவனுக்கு எல்லையள் இருக்கு, நாலுகாலிலை எழும்பி நடக்கிற விலங்குக்கு உண்டான எல்லையது. நாங்கள் நிலத்திலை பாம்பெண்டு ஆக வேண்டிய ஆக்கள், பாம்புக்கு அரவம் எண்டொரு பேர் இருக்கு, சத்தம் எண்டும் அதுக்கு அர்த்தம் இருக்கெண்டு பள்ளிக்கூடத்திலை படிச்சிருப்பியள். அரவெண்டு கரந்து போறதுதான் வேவுக்காரன்ர அடிப்படை. முழங்காலுக்கு கீழ உள்ள நிலமும் காடும்தான் எங்கடை களம். ஊருற விலங்குக்கு குடுக்கப்பட்டிருக்கிற முதல் திறமையே பதுங்கிறதும், மறையிறதும்தான். அதுக்கு வேட்டையும் வாழ்கையும் அது எப்பிடி தரையோடை தன்னை பொருத்திக் கொள்ளுது எண்டதிலைதான் இருக்கு. சரக்கட்டைக்கும் பிடையனுக்கும் இதே வழிதான். ஊருற விலங்குகள் நிலத்தோடை பிணைஞ்சிருக்கும், நடக்கிறதுக்கு பல்லும் நகமும் எண்டால் ஊருறதுக்கு நஞ்சு. இரத்தமும், நஞ்சும், ஞாபகமும் அதுகளுக்கு பிழைக்கவெண்டு தரப்பட்டிருக்கு. தான் கடந்து போற முழு நிலமும் அதுக்கு தலைக்குள்ள அழியாமப் பதியும். புல்லும், புதரும், வாசமும், சூடும், தண்ணியும், வளையும் , புத்தும் எல்லாம் தலைக்குள்ள ஒரு மப் மாதிரி இறங்கும், வேவுக்காரன் தான் கடக்கிற இடத்தை தலைக்குள்ள வரைஞ்சு கொண்டே கடந்து போகோணும், ஞாபகம் தான் அவன் திரும்பி வர உள்ள ஒரே மப், சுருட்டி இடுப்புக்க கொண்டு போற பேப்பருக்கு அதுக்குப் பிறகு எந்த அர்த்தமும் இருக்கப் போறேல்ல. பிறகு வேவுக்காரன் சொல்லுறதுதான் எல்லாருக்கும் மப்’‘
ஒவ்வொரு முறையும் நுள்ளான் ஒவ்வொன்றும் சொல்லும் போது அவ் இளையவர்கள் அடையும் கண்களை அவன் உள்ளூர விரும்பி இரசித்துக் கொள்வான். மீண்டும் மீண்டும் தன் பேய்க்கதைகளை தானே பெருக்குவதை எண்ணி எண்ணி அவனறியாத ஆழுள்ளம் எங்கோ மகிழ்ந்தபடியே இருந்தது.
நுள்ளானை எட்டித் தட்டிய பார்த்தீபன் எதையோ கேக்கும் படி காதில் கை வைத்துச் சைகை செய்தான். மெல்லிய ரேடியோ சத்தம். ஏதோ எண்பதுகளின் தமிழ் சினிமாப்பாடல். கொஞ்ச நேரத்தில் தெளிவாகவே கேட்கத் தொடங்கியது. கூடவே சைக்கிள் செய்ன் உரசும் ஒலியும் சீரான சுழற்சியுடன் கேட்டது. இவர்களுக்கு நேர் முன்னால் ஆலை நோக்கி ஓடிய வண்டில் பாதையில் அவ் இளைஞன் போய்க்கொண்டிருந்தான். சிவப்பு நிறத்தில் முக்கோணங்கள் இணைந்த உருக்கள் பொறிக்கப்பட்டிருக்கும். ‘சவுதிச் சறம்’ என்று அப்போது பிரபலமாக இருந்த சறமும் கிளிப் பச்சை நிற சேட்டும் அணிந்திருந்தான். கரியலில் இருந்த ரேடியோ பாடிக் கொண்டிருந்தது. ‘ஆள் முழுச்சிங்களவன் ஆனால் தமிழ்ப்பாட்டுக் கேக்கிறான்’ என்று வாகீசன் கீற்றென மெதுவாகச் சொன்னான். நுள்ளான் மீண்டும் அவனைப் பார்வையால் அடக்கி விட்டுக் கவனிக்கச் சொன்னான். சடங்குகள் ஓய்ந்து மீண்டும் நிழலுக்கும் பறவைகளுக்கும் கொடுக்கப்பட்ட அவ் ஆலின் அடியில் புதுக்காட்சிகள் தொடங்கின. போனவன் சைக்கிளால் இறங்கி அதன் இரட்டை ஸ்ராண்டில் சைக்கிளை ஒரு எத்து எத்தி ஏற்றினான். ரேடியோவின் ஒலிக்கட்டையை முடுக்கி பாட்டின் உரப்பைக் கூட்டினான். அப்பாட்டோடு சேர்ந்து சீழ்கையடித்துக் கொண்டே பொக்கற்றினுள் கை விட்டு சிகரட் ஒன்றை எடுத்து மூட்டினான். நன்கு இழுத்துப் புகை விட்டான். தூங்கும் இளங்கொடிகள் இருக்கும் உரப்பைகளைத் தொட்டு அவ்விழுதுகளை ஆட்டி விளையாடினான். சிகரட் முடிய மீண்டும் பொக்கற்றுக்குள் கை விட்டு பீடி ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தான். பீடியை ஆழ இழுத்து மென் நீலப் புகையை வானுக்கு ஊதி ஊதி இரசித்தான். பீடி தீர்ந்ததும், இவர்கள் எதிர் பாராத கணத்தில் அடிமரத்தோடு தூங்கிக் கொண்டிருந்த விழுதில் தாவி ஏறினான். முதற் பெருங்கிளையில் தாவி ஏறியவன். தன் சவுதிச் சறத்தைக் தலையால் கழற்றி எடுத்தான். அவனுடைய இடுப்பிற்கு மேலே மரச்செறிவு காட்சியை மறைத்தது. மரத்தில் இருக்கும் துர்காவிற்கோ பாமினிக்கோ அக்காட்சி தெரியலாம். சறத்தைக் கழற்றிக் கொண்டு கிளையில் தோதாக அமர்ந்தான். பின்னர் சறத்தை திரட்டி கயிறு போல் ஆக்கி ஒரு பக்கத்தில் முடிச்சிட்டான். ஒரு பக்கத்தை கிளையில் கட்டினான். இன்னொரு பக்கத்தை தலையால் நுழைத்து கழுத்தைச் சுற்றிக் கொண்டான். சட்டென்று அவனுள் வசித்த குலுங்கும் விலங்கொன்று உடலெங்கும் ஓடத்தொடங்கியது. பெரிதாக ஓ என்று அழுதான். ரேடியோவில் அடுத்த பாடல் மாறி இருந்தது. நுள்ளான் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதை இமைக்கணத்தில் கற்பனையால் ஆக்கி முடிக்கும் போது அப்படியே அவ் இளைஞனின் உடல் கிளையில் இருந்து இன்னோர் விழுதென விழுந்தது. சறம் கழுத்தை இறுக்க துடிக்கும் விலங்கு மூர்க்கம் கொண்டு ஆடியது. நுள்ளான் சற்றும் எதிர் பார்க்காத கணத்தில் பக்கத்தில் படுத்திருந்த புதர் எழுந்து ஆலை நோக்கி ஓடியது.
நுள்ளான் தடுப்பதற்குள் அப்புதர் மரத்தை நோக்கி வேகமாகச் சென்றபடியிருந்தது. வாகீசனைத் தடுக்க முடியும் என்று தோன்றவில்லை. பார்த்தீபனை பேசாமல் இரு என்று சைகை செய்தான். வேகமாக ஓடிய வாகீசன் மரத்தில் தொத்தி ஏறி பெல்ட்டில் இருந்த கத்தியை உருவி சறத்தை அறுத்து அவ் இளைஞனை தரையில் விழுத்தினான். அவன் தரையில் விழுந்து சென்று கொண்டிருந்த மூச்சையும் தன்னுணர்வையும் மீட்கும் போது வாகீசன் மரத்தால் இறங்கி வந்தான். அவனைக் கண்டவுடன் அவ் இளைஞன் திடுக்கிட்டு. உடலதிர்ந்து மீண்டான். மீண்டவன் ‘கொட்டியா கொட்டியா’ என்று கத்திக்கொண்டு மிரண்டு தெறித்தான். இரண்டு முறை எந்தப்பக்கம் ஓடுவது என்று தெரியாமல் தடுமாறி கடைசியில் ஊர் பக்கமாக புதர் மண்டலுக்குள் பாய்ந்து ஓடத்தொடங்கினான். மிக மிகப் பொறுமையாகவும் வெறுமை சட்டென்று ஏறிய கண்களுடன் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த நுள்ளான். வோக்கியை எடுத்து. ‘துர்க்கா’ என்று மெதுவாகச் சொன்னான். பார்த்திருக்க, காற்றில் தோன்றிய குண்டொன்று அவ் இளைஞன் ஆலடியை விட்டு முப்பது மீற்றர் தாண்டுவதற்குள் அவன் பிடரியை நொறுக்கியது. டப் என்று எழுந்தடங்கிய சினைப்பரின் நாக்கென்றான சைலென்சரின் மெல்லிய ஒலியின் அதே கணத்திலேயே அவனுடல் புதருக்குள் சுருண்டு விழுந்தது. தூரத்தில் கேட்டுக் கொண்டிருந்த மென் முழவின் ஓசை அந்த டப் சத்தத்தை தன்னுடைய அடியென ஒற்றியெடுத்துக் கொண்டது. மரத்தடியில் இருந்து புதருக்குள் தாவிய வாகீசன் இவர்களை நோக்கி கல்பட்டுத் துடித்து மீண்ட அரவென வேகமாக அரைந்து இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்.