கீச்சு மணிகள் |  காளம் 18  

கீச்சு மணிகள் |  காளம் 18  

குழந்தை கனவு கண்டு திடுக்கிட்டு விழித்துக் கொண்டு அழுகிறாள் என்று சொன்ன அன்று  கீச்சுமணிகள் கோர்க்கப்பட்ட நாக மென்னிழைக் கயிற்றை குழந்தையின் வலக்காலிலும் , ஒரு சோடி கீச்சு மணிகளைக் கைகளிலும் கட்டி விட்டான். குழந்தைக்கு மட்டுமல்ல, இவளுக்கும் நாணக்கயிறு ஒன்றைக்  கொண்டு வந்து வந்து கணுக்காலில் கட்டி விட்டான். இவளை ஏதும் கேட்காமல் கால்களை எடுத்து மடியில் கிடத்தி கயிறு கட்டிவிடும் போது காய்துக்கிடந்த உள்ளங்கைகளில் எழுந்த செதில்கள் மயிர்கால்களில் நுண்மையாகக் குத்தின. விதிர்த்துத்  தனக்குள் பரவினாள்.  அவன் முன்பிருந்தே எளிமையானவன். பெண் மனம் விரும்பும் ஒன்றை தானே எண்ணாமல் இயல்பெனச் செய்யக் கூடியவன். கணத்திலும் சிந்திப்பதில்லை, செய்வது மட்டுமே  அவனறிந்தது.   அதுவே அவனுடைய வழி. அவனுடைய வழிகள் காதலுக்குகந்தவை என்பதையும் கொஞ்சமும் அறியாதவன். வேண்டிக்கொள்ளாத போதுதான் அருளப்படுகிறது. குழந்தைக்கும் இப்பொழுது அதையே செய்தான். குழந்தைக்கு  அந்தக் கீச்சு மணிகள் பிடித்திருந்தன, கைகளை ஆட்டி ஆட்டி அதைப் பிஞ்சு முரசுகளால் கடித்துக் கொண்டிருந்தாள். `நானிவளை தைரியமா உன்னட்டை  விட்டிட்டுப் போவன்` என்ற வார்த்தையை சொல்லாமல் வைத்திருந்தாள் அமலா.  கட்டி விட்டு எழுந்து ஏதோ பிராக்கில் சென்று விட்டான், நிமிர்ந்து இவளைப் பார்த்திருக்கலாம்,  அவள் கண்களில் அரிதாக  நீர்ப்பரப்பிற்கு  மேல் எழும் ஆழொளி புலர்ந்ததை  அறியாது  எழுந்து போய்விட்டான். கணுக்கால்  நூலைத்  தொட்டு வருடிப்பார்த்தாள். 

உக்காரா விடயத்தை அவன் கடும்  சொல்லேதும் எடுக்காமல் புரிந்து கொண்டது இவளுக்குள் இருக்கும் விருப்பங்களின் கொடுந் தெய்வத்திற்கு பெருத்த ஏமாற்றத்தை தந்திருந்தது. அவளுக்குள் இருந்த பெண்ணை அது அவனை விரும்பிய காலத்தின் காதல் கொண்ட பெண்ணிற்கு  அழைத்துச் சென்றது.தன்னிடம் மீண்டும் ஏறும் கனிவும் காதலும்,  இங்கிருந்து  அறுந்து செல்வதை நோவென்று ஆக்கலாம் என்று தினமும் பயந்துகொண்டிருந்தாள்.  ஒவ்வொரு நாளும் சேரும் பயத்தைப் போல் வேறெந்த  வாலயப் பிசாசுகளும் உள் எழுவதில்லை.  முன்பெல்லாம் அவனிடம் அதை எதோவொரு சொல்லினால் நினைவுபடுத்திக்கொண்டே இருப்பாள். இப்பொழுது அதுவும் குறைந்து விட்டது. இப்பொழுது உக்காராவிடம் தான் அதை அதிகமாகச் சொல்லிக்கொண்டிருந்தாள். அது அவனுக்கொரு பொருட்டில்லை என்பது போல் நடந்து கொள்வான். நுள்ளானிடம் அதைச் சொல்லும் போது ஏற்படும் கனத்த மவுனம் கூட உக்காராவிடம் இருப்பதில்லை.  இருவரும் இவளுலகில்  வெளிப்படையுடன் இருந்தனர் , ஆயினும் உக்காராவின்  உண்மை தந்திரத்தை அறிந்திருந்தது.  நுள்ளான் தாயத்திலும் , உக்காரா பரமபதத்திலும் வாழ்தனர்.  இருவரின் எதிரிலும் இவள் மகிழ்வோடு அமர்ந்திருந்தாள்.

ஒவ்வொரு நாளும் ஒப்பீடுகள் பெருகுவதை தடுக்கவே தன்னைத்தினமும் தொகுத்து தொகுத்து உள்ளூரச் சொல்லிச் சொல்லி கெட்டிப்படுத்த வேண்டியிருந்தது. பறுவம் நெருங்கிக்கொண்டிருப்பதால் காலில் வலி கூடத்தொடங்கி விட்டது. முழுமையாகவே சுளுக்குப் பார்ப்பதை நிறுத்தியிருந்த போதும், பறுவம் நெருங்கும் போது சிதல் வேதனை  உச்சம் போகாமல் விலகிச் செல்வதில்லை. கணுக்கால் நூலில் இருந்த மென் முடிச்சுகளை ஒவ்வொன்றாக உருட்டினாள்.  அருகில் வளர்த்தியிருந்த குழந்தை இவளைக் கண்டுகொள்ளாமல் தன் கீச்சு மணியோடு விளையாடிக்கொண்டிருந்தாள்.

காலையில் மா விற்க வவுனியாவிற்குப் போய் வந்திருந்தான். எங்கே தேடி கீச்சுமணிகளை வாங்கியிருப்பான் ?   பாஸ் எடுத்துக்கொண்டு அங்கே தரப்படும் நிவாரண கூப்பனுக்குரிய கோதுமை மாக்களை மூட்டைகளாக கட்டிக்கொண்டு  போய் வவுனியா டவுனில் விற்கும் வழக்கம் உருவாகியிருந்தது.  `தொண்டு நிறுவனக்காரர் , பருந்து இரைக்கு காத்திருந்த மாதிரி எப்ப சண்டை தொடங்கும் எண்டு காத்திருந்திருப்பாங்கள் போலை, ஆயுத வியாபாரியளும் தொண்டு நிறுவனங்களும்தான் யுத்தத்தை முதன்மையா விரும்புற ஆக்கள் எண்டு அனுதாப் அண்ணை ஒருக்கா சொன்னவர். சத்தியமான கதை.  தேவைக்கதிகமாக கொண்டுவந்து கொட்டுறாங்கள்,  அவங்கடை பங்கை அடிக்கோணும் எண்டால் எங்கடை பங்கை ஒதுக்கோனும். சனமும் வேண்டாம் எண்டு சொல்லப்போறேல்லை, வாங்கி வாங்கிப் பழகிட்டம், எங்கடை கையள் எண்டைக்கு இறங்குதெண்டு பாப்பம்`    உபரி மாவை விற்பது தொழிலாகவே ஆகி விட்டதை அறிந்த போது  நுள்ளான் விசனப்பட்டுக்கொண்டேதான் தானும் போகப்போகிறேன் என்று கிளம்பிப் போனான்.

கெட்ட சொப்பனங்கள் அவனையும் அலைக்கழித்துக்கொண்டிருந்தன. மீண்டும் மீண்டும் ஆனைகளுக்கு நடுவே குற்றுயிராக கிடக்கும் காட்சி அவனை நடுச்சாமங்களில் திடுக்கிட வைத்து  எழுப்பி பாலை மரத்தடிக்குக் கொண்டு போய் சேர்த்தன.  நடு இரவில் அந்த வெள்ளைக்கல்லாசனத்தில் பிசாசைப்போல் அவன் அமர்ந்திருப்பதை  தகரக் கொட்டிலுக்குள் இருந்து பார்த்தாள். அவன் எப்பொழுது எழுந்து சென்றாலும் இவளுக்கும் முழிப்பு வந்துவிடுகிறது. இரண்டொரு முறை அவனருகில் சென்று விசாரித்தாள். அதே கனவைச் சொல்லி `போய்ப்படு` என்று அனுப்பி விடுவான்.  பிறகொருநாள் இவளுடைய கனவிலும் ஆனைகள் வந்தன.  அவற்றின் காலுக்கிடையில் சிக்கிக்கொண்ட சிறுபறவையின் கண்களால் அவள் அதைக் கண்டாள்.  நூறு ஆனைகள் வேகமாக கடந்து சென்றன. பயத்தில் காட்சி நடுங்கி அவ்வுரற் கால்களில் மிதிபட முன்னர் திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள். இவனிடம் எதுவும் சொல்லவில்லை. அவனுக்கு இவள்  அருண்டு , முனகி விழித்துக்கொண்டது தெரிந்திருக்கலாம். அன்றைக்கு அசைவற்றுத்தான் கிடந்தான். இன்றைக்கு நாணக்கயிற்றுடன் வந்திருப்பது அவன் அதை அறிந்திருந்தான் என்ற எண்ணத்தை முழுமையாக்கியது.

இவனுடைய தாய்க்காரி   மந்திரித்த கயிறுகளையும், கீச்சு மணிகளையும் விற்பவள்.  நாணக்கயிறு நல்லசெல்லம் என்றால்தான் அவளை ஊருக்குள் தெரியும்.   கயிறுகள், தாயங்கள் மீது மாதிரீகம் செய்யக்கூடியவள்.  கோவில் திருவிழாக்களில்   சிறுவனான நுள்ளானை அழைத்துக்கொண்டு திரிவாள். மூன்று கிளைகளைக் கொண்ட சூலம் போன்ற தடியில் கயிறுகளும், தாயங்களும், விதம் விதாமான கற்களும் தொங்கும். பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல், கட்டு , வெட்டு , முதேவி, முனி எல்லாத்தையும் ஓட்டும் கயிறு.. என்று அவள் நீட்டி முழக்கும் போது வசியப்பட்டவர்கள் போல் சனம் அவளைச் சூழ்ந்து அவள் விற்பவற்றைத் தொட்டேனும் பார்த்துவிட்டுப் போகும்.  

நுள்ளான் கைக்குழந்தையாக இருக்கும் போது அவர்கள் எங்கிருந்தோ அமலாவின் ஊருக்கு வந்து சேர்ந்தனர். நுள்ளானின் தகப்பன், தாய், அத்தைக்காரி, காவோலை.  வரும் போதே நிறையக் கதைகளுடன் வந்தனர். நான்காம் வகுப்பில் ஒரு நாள் நுள்ளான் ,  `அவர் என்ர அப்பா இல்லை` என்றான். இவளுக்கு அது எப்படியென்று பிடிபடவில்லை.  அப்ப உன்ர அப்பா எங்கை ? செத்துப்போனாரோ ?  நுள்ளான்  கையில் அடித்துச் சத்தியம் வாங்கி விட்டு  அவனுடைய அப்பா யார் என்று சொன்னான்.  இவளுக்கு அவரைத் தேரியாது. ஆனால்   அவளுக்கிருந்த ஆர்வத்தில் கேட்டு வைத்தாள். நுள்ளானுடைய   உண்மையான அப்பா இல்லாதவரை இவள் பார்த்திருக்கிறாள். நல்ல மனிதர் இவளுடன் பரிவாகப் பேசுவார் `இவனோடை சேருற எண்டு வீட்டை தெரியுமோ ` என்று அடிக்கடி கேப்பார். இவளுக்கு தகப்பனும் தாயும் பலமுறை கண்டித்தாலும் நுள்ளானின்  அருகாமையை அவள் என்றைகும் இழக்கத் துணிந்ததில்லை. ஆனாலும் `ஓம் தெரியுமே` என்று மட்டும் சொல்லி வைப்பாள். அவர் தீடீரென்று  இறந்து போனார்.  இந்திய இராணுவம் அடித்ததில் அவருடைய முள்ளந்தண்டில் நெடுநாளாக உட்காயம் ஒன்று இருந்து வந்திருக்கிறது. அதனால் அவர் சாதாரண ஒரு நாளில் படுக்கையிலேயே செத்துப்போனார். அவர் போன பிறகுதான், நல்லசெல்லம் பற்றிய கதைகள் ஊரெங்கும் எழத்தொடங்கின.  சிறியவள் என்றும் துணியாமல் அம்மா தீடீரென்று ஒருநாள்

இவனோடு சேராதே என்று கண்டித்தாள். அவள் ஒலும்பியின் குரலாக பேசுபவள். அவர் அவளைக் கண்டிப்பதில்லை, தாய்க்காரிமூலம்தான் இடித்து -உரைக்க நிற்பார். இதற்கு முதல் , நுள்ளானின் சாதியை சொல்லி கண்டித்திருக்கிறாள், அவனுடைய பழக்க வழக்கங்களைச் சொல்லிக் கண்டித்திருக்கிறாள், அவன் படிக்க மாட்டான் என்று சொல்லிக் கண்டித்திருக்கிறாள், கடைசியாக  நல்லசெல்லம் பற்றிய கதைகளைச் சொன்னாள்.

`அவன்ர தாய்க்காரி ஒரு ஊத்தைச்சி, நடத்தை சரியில்லை எண்டுதான் ,  ஊரிலை இருந்து கலைச்சிருக்கிறாங்கள்,  உந்தப்பெடியன் கூட ஆருக்கு பிறந்ததெண்டு தெரியாதாம்.  இவன் வயித்திலை இருந்த காலத்திலை ஊரிலை ஆருக்கும் தெரியக்கூடா எண்டு  வயித்துக்கு துணி இறுக்கிக் கட்டிக்கொண்டு திரிஞ்சு, பேறுகாலத்திலை சுடுகாடு ஒண்டுல தானே  இரவிரவாய் கிடந்து பெத்திருக்கிறாள், சுடுகாட்டிலையே பெத்து அங்கையே பிள்ளையைக் கொண்டு புதைக்க வெளிக்கிட்டவளை, ஆரோ காய் வெட்டுக்கு கழிப்புச் செய்ய போனாக்கள் கண்டு பிடிச்சு பிள்ளையை மீட்டிருக்கிறாங்கள், ஆற்ற பிள்ளையெண்டு கேட்டு அவள் வாயே திறக்கேல்லையாம், அதோடை ஊர் பாதரிட்ட போய் கதைச்சு, இவளிட்ட பிள்ளைக்கு ஒண்டு ஆனால் தான் தான் பொறுப்பெண்டு எழுதி வாங்கி ,  இவளை  தெல்லிப்பளை துக்கையம்மன் கோவில்ல கொண்டு போய் விட்டிருக்கு, கொஞ்ச நாள்ளை அங்கை  கீச்சு மணி விக்க வந்த உந்த செத்த மனிசனைப் பிடிச்சிருக்கிறாள்  தோறை, அந்தாளுக்கும் அங்கை மனிசி பிள்ளையள் இருந்திருக்கு, இவளுக்கு மந்திரம் மாந்திரீகமெல்லாம்  தெரியுமாம், ஏதோ வசியப்படுத்தி மயக்கித்தான் உந்தாளை  கூட்டிக்கொண்டு  வெளிக்கிட்டதாம், அத்தைக்காரியும் உந்தக்காவோலையானும் ஊரிலை அவற்ற பெஞ்சாதிட ஆக்கள் வந்து சண்டை பிடிக்கிறாங்கள் எண்டோன்னை, இதுகளோட சேர்ந்து வெளிக்கிட்டு இஞ்சாலை வந்ததாம்`

அம்மா  ஒவ்வொரு சொல்லையும் மிகப்பயங்கரமாக உருப்பெருபித்துக் கொண்டாள். நல்லசெல்லத்தின் மேல் ஆயிரம் வருடத்துப் பகை கொண்டவள் போலிருந்தாள். புராணங்களில் இருந்து  வழிமாறி வந்த அரக்கியொருத்தியைப் போன்றதொரு உருவை அமலாவின்  நெஞ்சுக்குள் நிறுத்தினாள். அமலா மெல்ல மெல்ல அவனுடைய சகவாசத்திலிருந்து விலகிச் சென்றாள். அவனுக்கு அது பெரும் தாக்கமாக இருந்தாலும், அவளே விலகிச் செல்வதை  உணர்ந்து தன்னை விலக்கிக் கொண்டான். அவன்  இவளிடம் எதுவும் கேட்கவில்லை, முகம் மட்டும் வாடியிருக்கும், இவளைக் கண்டதும் வில்லங்கத்திற்கு மலர்ந்து அந்தக்கணமே எதோவொரு குழப்படியிலோ விளையாட்டிலோ திழைப்பவன் போல பாவனைகள் செய்வான். கொஞ்ச நாட்களில்  நுள்ளான் என்ற பட்டப்பெயரோடு `அம்பது ரூவாய்` என்ற பட்டப்பெயரும்  சேர்ந்து கொண்டது.   நுள்ளான் கண்ணெரிய,  தூசணம் சொல்லிக் கொண்டே அடிக்க வருவான். நான்கைந்து பேருக்கு காயம் வருமளவிற்கு அடித்திருக்கிறான். அவர்களுடைய பெற்றோர்கள் வந்து சத்தம் போட்டு விட்டுப் போவார்கள். அதிபர் இவனுடைய தாய்க்காரியை  கூட்டி வா என்று அனுப்பினால் காவோலைதான், வந்து சமாளித்து விட்டுப்போவான்.  படிக்கிற காலத்தில் அந்தப்பட்டப்பெயருக்குக் காரணம் சொல்லப்படவேயில்லை. ஆண் பிள்ளைகள் அதைக் கேட்டால்  தமக்குள் சிரித்துக்கொள்வார்கள்.  சொல்ல மாட்டார்கள். இவனைக் காதலித்த நாட்களில் ஒருநாள்  அவனிடம் கேட்டாள்.  முதலில் கோவப்பட்டவனை மெல்ல சல்லாபத்தினால்  தளர்த்தி அவிட்டாள்.

`அது அந்தத் தோறை வேசை,  அம்பது ரூபாக்கு  சூப்பி விடுறவளாம்` 

சொல்லி விட்டு குனிந்து கொண்டான்.  மணலில் கண்ணீர் விழுந்து கொண்டிருந்தது.  இவள் ஒன்றும் சொல்லவில்லை, சங்கடமாக நெழிந்து கொண்டாள். கேட்டிருக்க வேண்டாம் என்றுதான் தோன்றியது. அன்றைக்குத்தான் ரஞ்சனா மிஸ் சொன்ன கதை ஞாபகத்தில்  வந்து சங்கிலியில் சேர்ந்து கொண்டது.  நுள்ளானும் இவளும் அப்பொழுது நான்காம் வகுப்பு. அம்மா அதை இவளிடமும் சொல்லச் சொல்லி இவளை அழைத்து அருகில் இருத்திக்கொண்டாள். 

`அண்டைக்கு சரியான மழை பிள்ளை,  எங்கட கங்கை ஸ்ரோர் முதலாளி கடையிலை நிண்ட பெடியனை என்னட்ட அனுப்பி , ஒருக்கா அவசரமா வரேலுமோ  எண்டு கேட்டார். நான் என்னவா இருக்குமெண்டு விழுந்தடிச்சுப் போனன்.  கடை தாழ்வாரத்திலை உந்தப்பெடியன் நனைஞ்சு போய் நடுங்கிக் கொண்டு நிண்டான், நான் மழைக்குத்தான் நிக்கிறானெண்டு முதலாளிட்ட போய் கேக்க,  உந்தப்பெடியன் உங்களிட்டத்தானே நேசரி படிச்சவன், நேற்று பின்னேரம் மழை தொடங்கேக்கை வந்தவன் , போள்ஸ் துவக்கு வேணும் எண்டு கேட்டான். நான் ஐநூறு ரூவாய் எண்டு சொன்னன்.  காசில்லை, ஒருக்கா தாங்கோ திருப்பித்தாறன் எண்டான். நான் என்ன விசர் கதை கதைக்கிறாய், சும்மா குடுக்கவோ வச்சிருக்கு, விக்க வச்சிருக்கு, எண்டு பேசினன்.  கொஞ்சினான், அழுதான்,  நான் ஒரு கட்டத்துக்கு மேலை பொறுமையை விட்டிட்டன். பேசிக்கலைச்சன், கோத்தேற்ற சொல்லுவன் எண்டு மிரட்டினன். அசைஞ்சானில்லை, என்னோடை சண்டைக்கு வந்தான், துவக்கு தரேலுமோ இல்லையோ எண்டு.  கடையிலை நிண்ட பெடியள் ஆளை பிடிச்சு தள்ளி  அடிச்சும் போட்டாங்கள், அவங்களை விலக்குப் பிடிக்கிறதுக்குள்ள போதும் எண்டு ஆகிப்போச்சு.   திரும்ப எழும்பி வந்து துவக்கு வேணும் எண்டு நிக்கிறான். நான் கடைக்கு முன்னாலை நிக்காத நெடுக பெடியளை மறிக்க மாட்டன் எண்டு சொல்லிப்பாத்தன்.  தாழ்வாரத்திலை போய் நிண்டான். நான் நில் எண்டு விட்டிட்டன். கொஞ்ச நேரத்திலை போடுவான் எண்டு நினைச்சன். அசையவே இல்லை. உதுலைதான் நிக்கிறான். எனக்கு இது ஏதோ  வேற பிரச்சினை எண்டு பட்டது. தாய்க்காரிக்கும் சொல்லி விட்டனான்.  ஆக்கள் இல்லை. திருவிழாக்கு போட்டினம் எண்டு கேள்வி, இவனை  காவோலையோடை விட்டிட்டு போயிருக்கிறாங்கள், எளியவன் முந்தநாள்  கசிப்பைக் குடிச்சு ஆள் மயங்கி ஆசுப்பத்திரிக்கு ஏத்தினதாம்.  என்ன செய்ய எண்டு தெரியேல்ல,  ஒரு விளையாட்டுத்துவக்குக்கு ஒரு பிள்ளை அடம்பிடிக்கிற பொலை, இல்லை உது, இது வேறையெதோ பிரச்சினை, அதுதான் உங்களைக் கூப்பிட்டனான்.  ஒருக்கா அவனோடை கதைச்சு வீட்டிலை கொண்டுபோய் சேருங்கோ , எண்டார்.  நான் அவனுக்கு கிட்ட போக,  ஆள் விறைச்சுப்போய் தோல் எல்லாம் வெள்ளை பரவிச் சுருங்கிபோய் கிடக்கு, கண் வீங்கிச் சிவந்து மூச்சு மட்டும் அனல் போல மூசிக்கொண்டு நிண்டான். எனக்கு அவனைக் கண்ட உடனை  என்னை அறியாமல் ஒரு பதகளிப்பு.  கதைச்சால் வாய் குழறுமோ எண்டு கூட அந்தக்கணத்திலை யோசிச்சிட்டன். `சீலன்` எண்டு மெதுவாய் கூப்பிட்டன். நான் கடைக்குள்ள போனது முதலாளியோடை கதைச்சிட்டு வந்தது எல்லாம் பாத்துக்கொண்டுதான் நிண்டிருப்பான். அனால் அவன் அடிக்கடி என்னட்ட `டீச்சர் நீங்கள் ஒராள்தான் என்னைப் பேர் சொல்லிக் கூப்பிடுறனியள், எனக்கே என்ர பேர் மறந்திட்டு, வீட்டிலை கூட நுள்ளான் தான்,நானே தூரத்தை ஆரும் சீலன் எண்டால் கூட திரும்பிப் பாக்க மாட்டன். நீங்கள் என்னை பேர் சொல்லிக் கூப்பிடேக்க சந்தோசமா இருக்கு, கட்டாயம் எண்டைக்கோ ஒருநாள் உங்களுக்கு ஏதும் செய்வன்.  எண்டு அடிக்கடி சொல்லுறவன். அந்த தைரியத்திலைதான் அவன் நிண்டிருந்த நிலையையும் அவன் கண்ணிலை எரிஞ்ச நெருப்பையும்  கண்டும் அவனோடை கதைக்க வெளிக்கிட்டன். நான் கூப்பிட்டதும், குரலிலை எந்த கடுமையும் இல்லாமல் , ஓம் டீச்சர் எண்டான். அவன்ர குரல் கேட்டதுமே  அவனை கண்டு  பயந்த ரஞ்சனா டீச்சர் எழும்பி நிண்டாள்,  `வா என்னோடை` எண்டிட்டு நடந்து போய் சைக்கிளை எடுத்தன். அது வரைக்கும் அவனைத் திரும்பிப் பாக்கேல்லை. அவன் பின்னாலை வாறான் சைக்கிள்ளை ஏறுறான் எண்டதை அந்தக்கணம் கற்பனை செய்து கொண்டே நிண்டன். கண்டது அப்படியே நடந்தது. அவனை வீட்டை கூட்டிக்கொண்டு போய்  துவாய் குடுத்து துடைக்கப்பண்ணி, தேத்தண்ணி ஒண்டு போட்டுக் குடுத்தன். குடிச்சான். ஒண்டும் கதைக்கேல்ல.  கொஞ்சம் காஞ்ச புட்டுக் கிடந்தது, முட்டை ஒண்டு பொரிச்சுக் குடுத்தன். சாப்பிட்டான். பிறகு பக்கத்தை போயிருந்து. என்ன பிரச்சினை எண்டு கேட்டன். 

`எனக்குத் அந்தத் துவக்கு வேணும்` அவனிட்ட ல் அதுவொரு விளையாட்டுத் துவக்கு எண்ட எண்ணம் இருக்கிற மாதிரித் தெரியேல்ல. இரும்பும்,  குண்டும், கந்தகமும் சேர்ந்து சின்னப் பொறிகண்டால் வெடிக்கும் எண்டமாதிரி இருந்தது அவன்ர குரல். 

`ஏன் உனக்குத் துவக்கு? `

`அம்மாவைச் சுடப்போறன்`

விபரீதமான ஒண்டை என்ர ஆள் மனசு ஏற்கனவே எதிர்பாத்திட்டு போல, எனக்கு பெரிசா அதிர்ச்சியா இருக்கேல்ல, இப்ப நினைச்சால் நான் எப்பிடி அடுத்த சொல்லை அவனிட்டக் கேட்டன் எண்டு நம்பேல்லாமக் கிடக்கு. அவன் சொல்லேக்கையே அந்தத் துவக்கு வெடிச்சு  குண்டைக் கக்கிட்டு. இருந்தாலும் அறியாத ஏதோ ஒண்டு   எனக்கொரு பிடியைத் தந்தது.

`அது விளையாட்டுத்துவக்கெண்டு உனக்குத் தெரியாதோ ?`

முறைப்படி நான் ஏன்? எண்டுதான் கேட்டிருக்கோணும், ஆனால் நானேன் அப்படிச்சொன்னான் எண்டு இன்னும் மட்டுப்பிடிக்கேலாமல் கிடக்கு. அவனும் அந்தக்கேள்வியைத்தான் என்னட்ட எதிர்பார்த்து இருந்த மாதிரி மூக்கை ஒருக்கா உறிஞ்சிட்டு என்ர முகத்தை நல்ல தெளிவா நிமிந்து பாத்திட்டு, தனக்கு அது விளையாட்டுத் துவக்குத்தான் என்று தெரியும் எண்ட மாதிரி  தலையாட்டினான். பிறகு கொஞ்சம் இடைவெளி விட்டிட்டு அடிக்குரல்லை  வாலயத்துக்கு மந்திரம் சொல்லுற பூசாரின்ர குரல்ல சொன்னான்.

`என்னாலை சுடேலுமோ எண்டு பாக்கோணும்`

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here