செங்களிக் குருதி |காளம் 15

செங்களிக் குருதி |காளம் 15

செபக்கொட்டிலினுள்  இருந்து கொண்டு, வெளியே சீராக துமித்துக்கொண்டிருந்த  மழையைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அமலா.  செபக்கொட்டிலின் மேல் தகரத்தில் செபக்கொட்டிலின் அருகில் அணைந்து நின்றிருந்த பாலை மரத்தின் இலைகளால் திரப்பட்ட  மழைத்தூறல்கள் பெருந்துளிகளாகி தகரத்தில் விழுந்து கொண்டிருந்ததால்  கொட்டிலினுள் மட்டும் பெருமழை பெய்யும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.  அதிகாலையிலேயே திரண்டு விட்ட மேகம், காலைவரை பெய்யவேயில்லை, இன்னும் கொஞ்சம் இறங்கினால்  எட்டி அளையலாம்போலிருந்தது. எல்லோரும் மழை மழை என்று சொல்லிக்கொண்டிருந்தனர்.  திரண்டவுடன் கொட்டிச்செல்லும் மேகத்தைப் பற்றி அச்சப்பட ஏதுவுமில்லை,  கொஞ்ச நேரத்தில் பொழிந்து கரைந்து விடும், அல்லது மேல்காற்று அள்ளிக்கொண்டு போய்விடும், திரண்டு திம்மென்று காத்திருக்கும் மேகம் `முடிவோடு` குமைந்தது. அதைக்கண்டு பயப்பட வேண்டும். அதனுள் புயலும்,  பெரும் பொழிவும் காத்திருக்கலாம். ஓயாமல் நாள்முழுக்கப் பெய்யலாம். நுள்ளான் ஆற்றைச் சொல்லிப் பயந்துகொண்டிருந்தான். யானைகள் ஆற்றின் மறுபுறம் `வித்தியாசமாக` நடந்து கொள்வதாகச் சொன்னான்.  யானைகள் மழைக்கு அச்சப்படுபவை, அவற்றுக்கு இடியும் மின்னலும் சித்தத்தைக் கலைத்து விடும், பெருமழைக்காலங்களில் மரங்களின் அடர்த்திகளுக்கு நடுவில் ஒன்றையொன்று தழுவிக்கொண்டு நிற்பதையும், தம்முள் எதையோ சொல்லிச் சொல்லி அருகணைவதையும் கண்டிருக்கிறேன் என்றான். மழைக்காலம் யானைகளுக்கு பிடித்ததுதான் ஆனால் அவை பெருமழைகளையோ பெருக்குகளையோ விரும்புவதில்லை.   அதனால் மேட்டு நிலங்களை நோக்கி நகரும், ஆற்றங்கரைகளை நெருங்கி வராமலிருக்கும் என்றான். 

செபக்கொட்டில் வெறுமையாகக் கிடந்தது, எல்லோரும் மழையோடு அல்லல் பட்டுக்கொண்டிருந்தனர். அன்றைக்கு பிரார்த்தனைகள் ஏதும் கிடையாது. தனியாக இருக்க வேண்டும் என்றால் இப்படியான நேரங்களில் இங்கே வந்து அமர்ந்துகொள்வாள். மரியம் அன்ரி இவளைச் செபங்கள் சிலதை மனப்பாடமாயினும் செய்துகொள்ளும்படி நச்சரித்துக்கொண்டிருந்தாள்.  நுள்ளான்  இவளுடைய நகைகளை வைக்க ஒப்பவில்லை. இவளுக்கும் அதில் தயக்கமிருந்தது. என்றாலும் தாலிக்கொடியை மீட்க ஆனதைச் செய்யத்தான் வேண்டியிருந்தது. கடைசியில் மரியமன்ரியிடம் தான் வாய் வைக்க வேண்டி ஏற்பட்டது. சபைக்கு ஆட்கள் பெருகிய பிறகு அவளிடம் தெரிந்த மினுமினுப்பு, பட்டாடோபங்கள், காட்டுக்குள் பரிவாரங்களுடன் வேட்டைக்கு வந்த அரசியைப் போன்ற பாவனைகள் அமலாவை எரிச்சல்படுத்திக்கொண்டே இருந்தன. `பணம் முதலில் விசுவாசத்தை அழிக்கிறது , செல்வம் என்பது  ஆண்டவரின் அன்பொன்றே ` என்று ஓர் நாள் செபக்கூட்டத்தில் பாஸ்ரர் நேமியன்  சொன்னதற்கு, இவளும் அன்ரியின் அருகிருந்தபடி `அமேன்` சொல்லி வைத்தாள்.  நாட்களின் இடைவெளிகளில் கையூட்டுத்தருபவள் போல் இரண்டாயிரமோ மூவாயிரமோ `நயமாக` கைகளில் திணிப்பாள். இவள் செபக்கூட்டங்களில்  நோய் தீர்ப்பதற்கு எதுவும் வாங்க மாட்டேன் என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தாலும், மரியம் அன்ரி இவளுடைய தேவையறிந்து அதைச் செய்வதில் இவளுக்கு உவப்புண்டு. ஆரம்பத்தில் முகாமில் பணத்திற்கு நிகர் மதிப்பிருந்ததில்லை,  வங்கியும் கடைகளும் வரத்தொடங்கிய பிறகு ஒவ்வொருத்தரும் தொழிலொன்றை நாடத்தொடங்கினார்கள். நுள்ளான் முகாமில் துப்பரவு பணியாளர்களுடன் வேலைக்குச் சென்றான். மலம் உறிஞ்சும் பெரிய  உருளைகளைத் தாங்கிய வண்டிகளில் வரும் ஆட்களுடன் நட்பாகி நாட் கூலிக்கு அவர்களின் வாகனத்தில் அலைந்தான். மழை தொடங்கி விட்டதால் அது மிகவும் உபத்திரவமான தொழில்தான். அவன் எதற்கும் முகம் சுழிக்காதவன்,  இயக்கத்திலிருந்து வந்த பிறகு நிலத்தில் கடுமையாக வேலைகள் செய்வான்.  இவளுடைய பெயரில் இருந்த நிலமது. ஒலும்பிக்குப் பிறகு தரிசு வத்திக் கிடந்ததை நுள்ளான் கிழறி நீர்பாய்ச்சி மூச்சளித்தான்.  குளத்திற்கு கீழே இரண்டு பாசனங்களும், பருவத்தில் ஒன்றுமாக முப்போகமும் கொழிக்கின்ற வயல்களவை. ஒலும்பிக்கு எப்பொழுதும் தானொரு சாதி வெள்ளாளன் என்ற தடிப்பிருந்தது.  நுள்ளானிடம் அந்த வயல்கள் வந்து சேரும் போது சொந்தக்காரர்களிடையே மட்டுமில்லாமல் அயல் கமக்காரர்களும் புறுபுறுத்தனர். இயக்கம்  அதிகாரத்தில் இருந்திருக்காவிட்டால், அவர்கள் நிச்சயமாக நுள்ளானை வயலில் இறங்க விட்டிருக்க மாட்டார்கள். இவன் வரம்பில் நடந்து போகும் போது `வயல் கோவியன்` என்று உரக்கச் சொல்லி  பாம்பைக் கண்டதாக  நமட்டிச் சிரிப்பார்கள். மண் வெட்டியைத் தூக்கி விளாசக் கூடியவன்தான்.  அவனுடைய முதற்சாவிற்கு பிறகு அவன் வேறொருவனாக திரும்பி வந்திருந்தான். நுள்ளானின் செத்தவீட்டிற்கு அமலா போயிருந்தாள். செத்த வீடு நடந்து ஒன்றரை வருடங்களின் பின்  அவன் வீட்டின் முன் தோன்றினான். ஊரே ஆரவாரப் பட்டுச் சென்று அவனைக் கண்டது. அவனைத் தொட்டுத்தொட்டுப் பார்த்தார்கள். சனங்களின் உள்ளில் உள்ள அன்றாட அச்சம் மரணம்தானே. அவர்கள் அதனைத் தினமும் பார்க்கின்றனர். ஒவ்வொரு முறை தாங்கள் இருப்பதை அறியும் போதும்  இல்லாமல் போவதையும் சேர்த்தே காண்கின்றனர். அவர்களுடைய மிகப்பெரிய தெய்வம் மரணமென்றே இருக்க வேண்டும். ஆனால் மரணத்திலிருந்து காப்பவர்களையும் விடுவிப்பவர்களையும் மட்டும் அவர்கள் தெய்வம் என்று ஆக்கி வழிபட்டனர். சடங்குகளில் மூழ்கிப்போயினர். யாரேனும் சாவிலிருந்து மீண்டு  வந்தால், அவர்களைத் தெய்வம் என்றனர். குறைந்த பட்சம் அவருடைய கடந்தகாலத்தை முழுமையாகத் துடைத்து புது மனிதராக ஏற்றனர். அல்லது போட்டு மிதித்தனர். சாவிலிருந்து திரும்பியவர்கள்  கதைகளாக ஆகின்றனர்.  கதைகளில் வாழ்பவர்கள் இறந்து விடவேண்டும், கதைகளின் காலத்திலேயே அவர்களும் வாழ்வது  அவரளவில் பேரழிவுதான். 

நேற்றிரவு நுள்ளான் ஆனைகளின் பிளிறல்கள் கேட்கிறாதா என்றான்? இவளுக்கு கேட்கவில்லை, இவன் சொல்கிறான் என்று உற்றுக்கேட்டாள். காதுகளிலன்றி நெஞ்சினுள் சிறு பிளிறல்  தூரக் கேட்டது, தலையாட்டி வைத்தாள்.  அவன் மீண்டுமொருமுறை குடும்பிமலைக் காட்டில் அவன் குற்றுயிராய் ஆன காட்சிக்குப் போனான். ஒவ்வொரு நாளும் சென்று வரும் அவனருகில் இருக்கும் கதவது.

`ஆமின்ர சினைப்பர் நெஞ்சிலை அடிச்சோண்ணை நெஞ்செலும்பு தெறிக்க என்னை தூக்கி சருகுக்கை எறிஞ்சுது. சுட்டவன் என்ர அசைவைப்பாத்துத்தான் அடிச்சிருக்கிறான், தலையப்பாத்தில்லை. நெஞ்சுக்க எலும்பு முறியிற சத்தம் என்ர காதுக்க கேட்டது. குண்டு துளைக்காமல் போடுற ஜக்கெற் எண்டபடியால் எலும்பிலை தட்டி நிண்டிட்டு, இல்லையெண்டால் அண்டைக்கு முடிஞ்சிருப்பன். ஏழெட்டு மணித்தியாலத்துக்கு மேலை அதிலையே கிடந்திருப்பன். கண்ணை முழிக்கேக்க, சருகோடை சருகாய் ஊறிப்போயிருந்தன்.  மழை மெல்ல பெய்யத்தொடங்கி இருந்தது. மழை அருட்டித்தான் சுயநினைவு வந்தது போல. நெஞ்சு கனத்துக்கிடக்க உடம்ப அசைக்க முடியேல்லை, கண்ணை லேசாச் சுழட்ட ஏதோ பாறையளுக்கு நடுவிலைதான் விழுந்து கிடக்கிறனோ எண்டு நினைச்சன். பிறகுபாத்தால் உருவங்கள அசைஞ்சுது. கால் தூக்கி வைக்கிற, ஒண்டை ஒண்டு தொட்டி, மூசுற அசமந்தம் வெளிக்க வெளிக்க என்னைச்சுத்தி பெரிய ஆனைக்கூட்டம் ஒண்டு நிக்குது எண்டது விளங்கிச்சு. அதுகளுக்கு நான் கிடக்கிற தெரிஞ்சிருந்த. எட்டி ஒரு மாறுகால் வச்சாலும் நான் சப்பளிஞ்சு போயிருப்பன். மழை வலுக்க வலுக்க ஒண்டுக்கு ஒண்டு ஒட்டிக்கொண்டு இன்னும் இன்னும் நெருங்க நெருங்க எனக்கு மூச்சு இழுத்துக்கொண்டு நிண்டது.  நென்சிலை காயம் என்ன கட்டம் எண்டு எனக்கு எந்தயோசினையும் இல்லை, வலது கையை அசைக்க முடியேல்லை, இடது கையை லேசா அசைக்க முடிஞ்சது, ஆனால் அசைச்சால்  உறைஞ்சிருக்கிற புண்ணின்ர வாய் திரும்ப திறக்கலாம். இப்ப என்ன செய்யிறது எண்டு யோசிச்சுக்கொண்டிருந்தன்.  உடம்பு விறைச்சு உணர்வெல்லாம் அழிஞ்சு போய் ஈரச்சாம்பலுக்க எப்பிடியோ பிழைச்சிருக்கிற  தணல் துண்டு மாதிரி  என்ர உயிர். சாவப் பற்றி மட்டும்தான் திரும்பத் திரும்ப யோசிச்சுக்கொண்டிருந்தன்.  குண்டு படும்வரை நான் எண்டைக்கும் யோசிக்காத ஒரு சாமான் என்ர சாவு. ஆனால்  இரத்தம் போய் கேட்பாரற்று சருகோடை சருகாய் உழுத்து அழியாமல் ஏன்  திரும்பவும்  கண் திறந்து கிடக்கிறன் எண்ட யோசனை செத்திடுவனோ எண்ட பயத்திலை இருந்து தான் வந்திருக்க வேணும்.  சன்னம் பாஞ்ச காயம் என்னைக் கொல்லேல்லை, பனிக்கட்டியாய் கொட்டுற மழை என்னைக் கொல்லேல்லை, சுத்தி நிக்கிற ஆனையளின்ர உரல்காலொண்டும் அந்த நொடிவரை என்னைக் கொல்லேல்லை,  அப்பிடி எண்டால்  நான் இண்டைக்கு சாகமாட்டனோ? ஒரு வேவுக்காரனாய் எத்தனையோ முறை  காடுகளுக்கையும், ஆமின்ர காம்புகளுக்குள்ளையும் கிடந்திருக்கிறன்.  பாம்பு கடிச்சிருக்கு, நண்டுவாய்காலி கடிச்சிருக்கு, ஒருக்கா பொறி வெடியொண்டு பட்டு பீஸ் தொடையிலை தச்சிருக்கு, ஒரு பெண் சிறுத்தை எனக்கு மேலாலை ஏறி என்னைக் கடந்து போயிருக்கு, அண்டைக்கு எனக்கு இதெல்லாம் ஞாபகம் வந்து கொண்டே இருந்தது. முக்கியமா அம்மான்ர தலையிலை இருந்து குபு குபுவெண்டு கொட்டின ரத்தம் எனக்கு மேலை தெறிச்சதும் ஞாபகம் வந்தது. ஒரு வேளை பாவ புண்ணியம் எல்லாம் உண்மையா இருந்தால், இன்னும் கொஞ்ச நேரம் நான் இப்பிடியே கிடந்து சாக வேண்டி இருக்கலாம், ஆனையொண்டு என்ர தலையிலை கால் எடுத்து வச்சு என்ர கதையை முடிக்கலாம். அல்லது இதுதான் நரகமோ என்னவோ, சாகிற அந்தக்கணத்திலை என்ன எல்லாம் தலைக்குள்ள மிஞ்சிக்கிடக்கோ அதுதான் உன்ர நரகம் எண்டு தயாமாஸ்ரர் ஒருக்கா சொன்னது ஞாபகம் வர என்னை அறியாமல் சிரிப்பும் வந்திட்டு.  பெரிசா சிரிச்சனான் எண்டுதான் நினைக்கிறன். தீடிரெண்டு ஆனையளுக்குள்ள ஏதோ கலவரம் , எனக்கு கண்ணுக்கு கறுப்பு உருவங்களா அசையிறதுதான் தெரிஞ்சாலும், ஏதோ அதுகளுக்குத் தெரிஞ்சிருக்கு எண்டு மட்டும் விளங்கீட்டு, கொஞ்சம் அந்தக் கூட்டம் அலவலாதிப்பட்டுக் கலைஞ்சாலும் எதோ ஒரு ஆனையின்ர காலெண்டாலும் என்னிலை மிதிக்காமல் போகாது, முதல் தடவையில் தலையில் மிதித்து கணத்திலை என்னை அமத்தி முடிச்சிட்டால் பரவாயில்லை. ஒரு வேளை தயாமாஸ்ரர் சொன்ன கதைதான் எண்டால் ஒவ்வொரு இடமாய் நசிச்சு நசிச்சு நான் துடிச்சுத்தான் சாக வேண்டியிருக்குமோ என்னவோ ? அதை நினைச்ச அந்தக்கணத்திலையே நான் அது எப்பிடி இருக்கப்போகுதெண்டு ஒவ்வொரு இடத்திலையும் ஆனைக்கால் பதிஞ்சு நசியிறத தெளிவா கண்டிட்டன்.  அப்பிடியே துடிச்சுப்போனன், அண்டைக்கு அங்க நிண்ட ஆனையள் எல்லாம் என்னிலை ஏறிப் போயிருந்தாலும் அப்பிடி துடிச்சிருக்க மாட்டன். 

நுள்ளான் ஒவ்வொன்றாகச் சொல்லிச்சொல்லி இவளை உலுக்கிக் கொண்டிருந்தான். அவனுடைய பயம்  ஆனைகளைக் குறித்தா , மழையைக் குறித்தா அல்லது ஆற்றைக் குறித்தா என்பதில் அவனிற்கும்  குழப்பமிருந்தது.  மூன்றையும் மீண்டும் மீண்டும் இணைத்துக்கொண்டே இருந்தான்.

`மழை வெள்ளம் எண்டால் எங்கையாவது மாத்துவாங்கள்தானே ? நீ ஏன் உதுகளை யோசிச்சுக்கொண்டு இருக்கிறாய்? என்று மட்டும் அதட்டிவிட்டு வந்திருந்தாள். குழந்தையை தானே வைத்திருப்பேன் என்று  சிறுவனைப் போல அடம்பிடித்து எடுத்து மடியில் வைத்துக்கொண்டான். தாயைக் கொலை செய்வதைக் காட்டிலும் பெரிய பாவம் இருக்க முடியுமா? நுள்ளான் அதைச் சென்று தொட்டவன். கொலைக்கு மேல் என்ன இருக்கிறது? ஆனால்  சாவிலிருந்து மீண்டபிறகு எப்படிக் கனிந்து விட்டான்.  சாவிலிருந்து திரும்பும் மட்டும் ஊரில் அவனைக் கண்டு யார் பயப்பிட்டார்களில்லை?  ஒரு கட்டத்தில் இயக்கம் அவனைச் சுடப்போகின்றது என்று பேச்சிருந்தது.  `பேபியக்காவைக் கொன்றவன்` என்பதை ஊரில் யார்தான் அறியாமலிருந்தனர்.  தாய்க்காரி  இரத்த வெள்ளத்திலிருந்த போது, யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவர்கள் அதை எப்பொழுதும் எதிர்பார்த்திருந்தவர்கள் போல்,  நான்கு சொற்களை மென்று விட்டுப் போய்விட்டனர். காவோலையை காவல்துறை பிடித்துப்போனது. ஒன்றரை வருடங்களின் பின்னர் நுள்ளான் இயக்கத்திற்கு போனான்.  அவ் ஒன்றரை வருடங்கள்தான் நுள்ளானோடு அமலா நெருக்கமாயிருந்தாள்.  கொஞ்சமும் கருணை எஞ்சியிராத ஒருவனின் நெருக்கமே அவளுக்குத் தேவைப்பட்டது.  ஆனால் சாவிலிருந்து திரும்பிய  பிறகு அவன் முழுதும் மாறியிருந்தான்.  குறுகிக் கனிந்து,  சொல்லெடுக்கவே அச்சப்பட்டு,  கனவில் திடுக்கிட்டு எழும்பினான், எழுந்து நித்திரையில் நடந்து சென்று வைரவர் கோவில்  குளக்கட்டில்  இருந்து  இருளை வெறித்துக்கொண்டிருந்தான். மூர்கமாகப் புணர்ந்தான். ஆரம்ப நாட்களில் இவளில் தான் காமத்தின் தெய்வமிருந்தது. அவன் திரும்பிய பிறகு காமத்தில் மட்டும் தன்  அரக்க இயல்பைக் காட்டினான்.  அவன் பிருஷ்டங்களிலும் மார்புகளில் அறைந்தபோது சிவந்து கண்டிய இடங்கள் அக்கணத்தில் இனித்ததை எண்ணி எண்ணி அவனை நெருங்கிக் கொண்டிருந்தாள்.  வாழ்வின் நோக்கமே அவனுடன் காமத்திலாடல் என்றென்றான நாட்கள். வதைத்து, கடித்து, உமிழ்ந்து  பெருவலியும் பேரோசையும் எழுப்பி ஆதி மிருகத்திடம் போய் வரும்  உடல் விட்டெறிந்த வேட்கைக்கு இருவரும் தலையைக் கொடுத்திருந்தனர். தம்மில் மனிதர்களைக் கண்ட புணர்ச்சி என்று ஒன்றேனும் இற்றைக்கு வரைக்கும் அறிந்ததில்லை.  இங்கே கூடாரத்தில் சுற்றி அவ்வளவு பேர் உறங்கியிருக்கப் புணரும் போது அமலா அவளாகவே அவன் கையை எடுத்து தன் வாயைப் பொத்திக்கொள்வாள். சாகும் கணம் வரை செல்லாமலிருவரும் புணர்ந்தறியார்கள். அமலா கருவுண்டானதை அறிந்த நாளை தினமும் நிகழ்த்திப் பார்ப்பாள்.

அன்றைக்கு  பேயன்று ஆகி அவனை அறைந்தாள்,  உதைத்துத் தள்ளினாள், பெரிதாகக் கத்தி அழுது அடித்தும் தூற்றியும் ஏலாமல் அவன் முகத்தில்  பாய்ந்து கடித்தாள், அவன் இரத்தம் உப்பென்று கரிக்கும் மட்டும் கடித்தாள். அவன் பொம்மையென்று தன்னைக் கருதிக் கொண்டு வாளாதிருந்தான். அழுதான், அலறினான், இவளுடைய கைகள் சவுக்கென்றாகி அவன் உடலில் தழும்புகளை இறக்கின.  நகங்கள் கீறி வெந்தோல் தெரிய இரத்தம் கண்டன. தன் வயிற்றில் அறையப்போகும் போது மட்டும் கையைப் பிடித்தான், கால்களில் விழுந்து அரற்றினான். அவன்  என்றைக்கும் இவளை அம்மா என்று அழைத்ததில்லை. அன்றைக்கு அவனறியாமல் `அம்மா  அம்மா` என்று அரற்றினான். கலையாடிமுன் நிற்கும்  எளிய பூசாரியை போல் வேண்டியதென்ன என்று கெஞ்சிக்கொண்டிருந்தன அவன் கண்கள். ஏதோ ஒரு கணத்தில்  நீ பாவி, நான் பாவம் !  உன்னோடை இருக்க விடு, பிள்ளையை பெத்து தந்திட்டு நீ எங்கையெண்டாலும் போ` என்று சொல்லைத் தந்தான்.  அமலாவிடம் வந்தேறிய கடுமையும்  கொலைக்குணமும் தன்னைப் பழைய நுள்ளானின் பெண் வடிவென ஆக்கி விட்டதை காணாத நாளொன்றில்லை. பெண் பன்றியின் கண்களைக் கொண்ட ஒலும்பியரின் முகம் எழுந்து வரும், கைகளைக் கூப்பி காலைத் தொட்டுக் கெஞ்சும். நுள்ளான் முழுவதுமாக  இவளென்று ஆகிவிட்டான் என்றே நினைத்தாள். ஒலும்பியோடு அழிந்து நஞ்சென்றான, இவளின் ஆண் வடிவம்.  

அவன் முழுநேரமும் குழந்தையின் அருகிலேயே இருந்தான், இவ்வுலகில் அவனுக்குப் பொருட்டென்று ஆனது குழந்தைதான் என்று தோன்றும்.

`நீ என்ன கொம்மாதான் பிறந்திருக்கிறா எண்டு நினைச்சோ இதெல்லாம் செய்யிறாய் ?` என்று கேட்டு விட்டாள். ஒன்றும் சொல்லவில்லை,  `நீ கொப்பரையோ என்னிலை தேடின்னி? ` என்று திருப்பிக் கேட்டான். அதுவும்  என்றைக்குமில்லாமல் பழைய நுள்ளானாக ஆகி ஓநாய் கண்களை வரவழைத்துக் கொண்டான். இருவரும் ஒருவருக்கு ஒருவர் பதில் சொல்லவில்லை.  அவர்களை  இணைக்கின்ற வடங்கள் அந்தக் கேள்விகள்தான் என்பதை இருவரும் அறிந்திருந்தனர். அவற்றை என்றைக்கோ ஒரு நாள் அறுக்க வேண்டியிருக்கும் என்பதை இருவரும் நன்கறிந்திருந்தனர். முழு வாழ்வையும் எரித்தளித்தாலும், அந்தக்கேள்விகள்  எலும்பில் தங்கிய திருகாணிகள் போல் எஞ்சத்தான் போகின்றன.  மானுடரின் எளிய துயரங்கள் சிக்கலான வரைபடங்களைக் கொண்டவை என்பதுதான் முரண்.

வானம் இன்னும் சாம்பலாய் செறிந்து கருமையை நோக்கி இறங்கிக்கொண்டிருந்தது. கொஞ்சமும் வேகம் மாற்றாமல் அதே மிதமான சிணுங்கல் மழை தூறிக்கொண்டிருந்தது. இது இரண்டாவது நாள், வானம் இடைவெளி விடுவதுபோலில்லை.   கூடாரத்திற்குத் திரும்பிவிடுவதுதான் நல்லது.  ரேடியோவில் தீவின்  மேற்குப்பக்கமாக தாழமுக்கம் என்று சொல்லியிருந்தார்கள். புயலோ, ஆற்றுப்பெருக்கோ முகாமை மேவி எழலாம். நுள்ளான் அப்படியொரு அவலத்தைத் தான் முன்னுணர்ந்திருந்தான்.  அவனுக்கு நடப்பவை எல்லாம் அசாத்தியமான துயரங்கள்.  அதில் வேடிக்கை என்னவென்றால் நுள்ளான் அதை முன்கூட்டியே அறிகிறான். அன்றைக்கு ஆற்றங்கரைக்குப் போய்விட்டு வந்த பிறகு இன்னும் குறுகிப்போயிருந்தான். கைபேசியில் இருந்த ஐம்பத்தியாறு ரூபாய்கள் காணாமல் போயிருந்தன.ஆனால் யாருக்கும் அழைப்பெடுத்ததற்கான தடமேதுமில்லை. அவனிடம் கேட்கவும் தோன்றவில்லை. தாலிக்கொடி விசயத்தில் அவனுக்கும் உக்காராவிற்கும் புதிதாக ஏதோ ஓடிக்கொண்டிருந்ததை உக்காராவின் பேச்சில்  உய்த்துணர்ந்தாள். நடப்பது நடக்கட்டும் என்றிருந்தாள். அவளுடைய வழிமுறையே எல்லாவற்றையும் அனுமதித்து விடுவது. ஓரளவிற்கு மேல் எதுவும் பொருட்டென்று ஆகாமல் தவிர்த்துக் கொள்வது. மரியம் அன்ரி ஐந்து லட்சம் தருவதற்கு சம்மதித்திருந்தாள்.  அதைத் திரும்பக் கொடுக்கும் மட்டும் அமலாவால் செபக்கூட்டங்களில் இருந்து விலகிச்செல்ல முடியாது. அசலானவொரு பொறியது.  வழியில் சேர்ந்து கொண்டவொரு சிறுவனுக்காக இதெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம் என்று யாருக்கும் தோன்றாததும், சலிக்காததும் தான் இவளை இன்னும்  வியப்பாக்கியது. அத்தைக்காரிகூட தினமும் அவனை மீட்பது குறித்து கேட்டுக்கொண்டும், அழுதுகொண்டுமிருந்தாள்.

மழை லேசாக துமியோடு இருக்க, இவள் புறப்படும் போது, வேளைக்கு வா என்றான்.  `இந்த நிலம் சூட்டுக்குரியது, செங்களி. இஞ்ச மரங்கள் ஆழ வெரோடாது, பெருமரங்கள் இருக்காது. எங்கடை ஊர் பக்கம் இப்பிடி நிலங்களிலைதான் இடுகாடுகள் இருக்கும், தண்ணிக்குத் தாங்காது, அப்ப்டியே குழைஞ்சு போகும். ஏற்கனவே பெய்த மழையிலை தேவையான தண்ணி மண்ணுக்க நிரம்பியாச்சு.  இன்னும் கொஞ்ச மழைக்கும் தாங்காது, இவங்கள் சனத்தை அழிச்சுத்தான் ஓயப்போறாங்கள், இது காடெண்டோ களி எண்டோ அறியாங்கள். ஆத்தங்கரையை முழுக்க வழிச்சுத் துடைச்சு வச்சிருக்கிறாங்கள், ஆறு பெருக்கொண்டு எடுக்குமெண்டால்,   ஆள் தின்னாமல் ஓயாது`  நுள்ளானின் குரலடங்கிய கணத்தில், ஏதோ ஏறியது போல் சட்டென்று ஓருணர்வு பரவியது, ஆனைச் சத்தம் கேட்கிறதா என்று நுள்ளான் கேட்டபோது மனதின் கடைக்கோடியில் எழுந்த மெல்லிய பிளிறலைப் போல் ஏதோவொன்று அருட்டியது, சட்டென்று எழுந்து செபக்கொட்டிலை விட்டு வெளியே வந்தாள். பொலித்தீன் பையை தலையில் கொழுவிக்கொண்டு கூடாரத்தை நோக்கித் திரும்பிய போது, அருகில் நின்ற பெரிய பாலை மரம் அப்படியே பாறி  பேரோசையுடன் செபக்கொட்டிலின் மேல் சாய்ந்தது, அதன் வேர்களில் பாதி வெளியே சிலந்திக் கால்களை விரிப்பது போல் மண்ணில் இருந்து பிளந்து எழுந்தன.  சுற்றி பெருங்கூச்சல் எழுந்தது. கொட்டிலில் யாரேனும் இருந்திருப்பார்கள் என்று அதைச் சுற்றி நின்று கண்ட எல்லோரும் அலறிக்கொண்டு ஓடி வந்தனர்.  அமலா அதை கண்கொட்டாமல் பாத்துக்கொண்டிருந்தாள்.  வேர்களில் திரண்டிருந்த செங்களி மரத்தின் குருதியென மழையில் கரைந்து இறங்கிக்கொண்டிருந்தது.

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’