பெரும்பாடு / காளம் 10

பெரும்பாடு / காளம் 10

உக்காராவும் சின்னத்தையும் வவுனியா வைத்தியசாலையின்  நோயாளர் விடுதியின் வாசலில் இருந்த தொடர் நாற்காலிகளில் அருகருகே அமர்ந்திருந்தனர்.  சின்னத்தையின் மடியில் குழந்தை உறங்கிக் கொண்டிருந்தாள். மதியத்திற்கு முதல் அம்புலன்ஸ் வண்டிகள் வந்து விடும் என்று நுள்ளான் கைபேசியில் சொல்லியிருந்தான்.  சனங்கள் கைபேசிகளை இரகசியமாக முகாம்களில் பாவிக்கிறார்கள் என்பது இராணுவத்திற்கும் பொலிசாருக்கும் தெரிந்திருந்தது. இரண்டு முறை சுற்றி வளைத்துச் சோதனை போட்டிருக்கிறார்கள். நுள்ளான் எப்படியோ அதை மறைத்து விட்டான்.  அடிக்கடி கதைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றான். அவனுடைய குரலில் வித்தியாசங்கள்  ஒட்டியிருந்தன. குழந்தையைக் கொண்டு சேர்ப்பதற்கான எல்லா உபாயங்களும் கையறுந்து போனது.  உக்காரா வாக்களித்து விட்டான். அதுவும் அவளுக்கு.  கண்ட முதல் கணத்தில் அடைவதே மெய்யானது.  அதன் பிறகு ,  வெறும் தருக்கங்களும் மானுட முடிவுகளும் மட்டுமே.  வழமையாக நுள்ளான் மட்டும் இவனுடன் கதைப்பான்.  குழ்ந்தை விடயம் என்பதால் அடிக்கடி  அமலாவும் கதைக்கத் தொடங்கினாள்.  இவன் தானறிந்த மார்க்கங்களைப் பற்றிச் சொன்னான். இவனுக்கு தெரிந்த ஆமிக்காரர்கள், முகாமோடு சம்பந்தப்பட்ட அரச ஊழியர்கள் ஏதேனும் பொருளோ உதவியோ என்றால் கைமாற்ற  சம்மதித்தனர். குழந்தை என்றதும் தயங்கிக் கொண்டனர்.  கடைசியில் அமலாதான் ஒரு உபாயத்தைக் கண்டு சொன்னாள்.  வவுனியா வைத்திய சாலைக்கு  நோயாளியைப் போல் வரலாம் என்று.   முகாமில் உள்ள வைத்தியசாலையில் வைத்துப் பார்க்க முடியாத  நோயாளர்களை வவுனியா வைத்திய சாலைக்குப்  இராணுவ பாதுகாப்புடன் அம்புலன்ஸில் அனுப்புவார்கள். அதற்கு முகாமில் குணப்படுத்த முடியாது என்ற வைத்தியரின் சிபாரிசு தேவைப்படும். வைத்தியரின்  கண்ணுக்கும் அவர் கைகளில் இருக்கும் சிறு உபகரணங்களுக்கும் எட்டாத ஓர் நோயை உருவாக்கிக் காட்ட வேண்டும்.  அமலா ஓர்  திட்டத்தைச் சொன்னாள்.

‘ எனக்கு முதல் ஒரு பிள்ளை தவறினது, இடைக்குழாயிலை பதிஞ்சது. அப்ப எடுத்த ரிப்போட்டுகள், எக்ஸ்ரே எல்லாம் வைச்சிருக்கிறன். இப்ப  அதே மாதிரி குத்துது எண்டு சொல்லுறன். ஒருக்கா நடந்தா திரும்பவும்  நடக்க வாய்ப்பிருக்கு,  டொக்டர் நம்புவார்’

நுள்ளான் அதையொரு காரணமாகச் சொல்வதை விரும்பவில்லைப் போல, அவளுடைய  சொற்களில் அது தெரிந்தது. நுள்ளான் பேச்சைக் கேட்க வேண்டாம் அவரைத் தான் பார்த்துக்கொள்கிறேன் என்றாள்.  திட்டமிட்டபடி அதைச் செயற்படுத்த நான்கைந்து நாட்கள் தொடர்ந்து  கை பேசி உரையாடல்கள். முக்கியமாக பகலிலும் கூடப் பேசினாள்.

நுள்ளான் இருந்தானோ இல்லையோ என்று இவனறியான்.   மந்திப்பாய்ச்சல் போல் தாவிச்சென்ற  சம்பாசணைக்கு இடையில் ‘சரி பிழையின்ர பக்கம் நிக்கிறத விட ,  உணர்வுகளின்ர பக்கம் நிக்கிறது தான் எனக்கு முக்கியம்’ என்றாள்.  எல்லாம் எப்படி நடக்கும் என்று தான் முன்பே கற்பனையில் செய்து பார்ப்பேன் என்றாள். ஆயிரம் விதமாக அமைந்த பிறகு, அப்படி எதையும் தொடாமல் புதிதாக ஒன்று நிகழும் போது அதன் முன் பணிவது பற்றிச் சொன்னாள். கற்பனைக்கு எட்டாதவை கற்பனையை விட பெரியவையாகத் தோன்றும். ஆனால் அவை நிகழ்ந்த பிறகு கற்பனை அவற்றைவிட மேலாகி விடும்,  என்றாள். எப்படி வைத்தியரை ஏமாற்றுவது  என்பது தொடங்கி அவளே ஒவ்வொன்றாக விபரித்தாள்.  கருமுட்டை இடையில் தங்குவதும் தவறுவதும் ஏற்படுத்தும் வலி பிரசவத்திற்கு நிகரானது,  அதைச் செய்து காட்ட வேண்டும். ஏதோ ஒரு பெரு நோ தன்னில் குடிவராமல் அதை நிகழ்த்தும் அளவிற்கு தான் பிரமாதமான நடிகை இல்லை என்று சொல்லிச் சிரித்தாள்.  பூரணை நெருங்கிவருவதால் யாருக்கேனும் காலால் சுளுக்குப் பார்த்தால் கால் வலி மீண்டும் வரும் என்றாள். அவளில் எது கற்பனை எது நிகர் மெய்  என்று சரியாக மட்டுப்பிடிக்க முடியாது. நெருங்கித் தொட்டால் வெறொன்று ஆகும் புதிர்களால் ஆனவளாக இருந்தாள் அமலா. அவனிடம் தானொரு மகிழ்ச்சியான, எந்தப் பிரச்சினையுமற்றவள் என்பதை நிரூபிக்க  விழைந்தாள். அவளுடைய  ஒவ்வொரு சொல்லும் கண்ணாடி இளைகளால் அடுக்கி அடுக்கிச்  செய்யப்பட்டவை. ஒன்றை உரிக்க இன்னொன்று மீழும். ஆனால் அவள் சொன்ன  சொல் அங்கேயே இருக்கும்.  அவள் கேட்பவற்றுக்கு பதில் சொல்லவும், அவள் அறிய விரும்புவதைச் சொல்லவும் மட்டுமே இயலுமாக இருந்தது. அவளிடம் இருந்து  எதையும் அறிய முடியவில்லை. சொற்களில் தந்திரங்களையும் , நுண்மையான அவதானங்களையும் திரட்டி ஆட்களை அறியவும் அவர்களை தனக்கென வளைக்கவும் கூடியவன் உக்காரா. அதுவே அவன் தனக்கென்று  சூடிக்கொண்ட அகங்காரமும். அமலா விடயத்தில் அவனைச் சீண்டிச் சீண்டி கிளர்வடையச் செய்தது.

கீழ்மைக்கிருந்த  அப்பட்டம் எதற்கும் வாய்ப்பதில்லை.  முட் கம்பிகளுக்கு அந்தப்புறம் அன்றைக்குப் பார்வை நிலைத்தபோதே ‘இது சரியில்லை’ என்ற எண்ணம் முதல் வந்து அமர்ந்து கொண்டது.  அதன் பின் ஒவ்வொரு நாளும் வாசல்  பேயைப் போல,   அங்கேயே இருந்தது. மிக நீண்ட நாள் ஒன்று தொடங்கியிருக்கும்  விதிர்ப்பை மொத்தமும் உணர்ந்தான் . இரண்டே தெரிவுகள் இருந்தன.  ஐம்பதுக்கு ஐம்பது சந்தர்ப்பம் என்று கூடச் சொல்லலாம். இவளுக்கு வேண்டியதைச் செய்து கொடுக்கப் போகிறோம், அல்லது  ஏமாற்றப் போகிறோம். நுள்ளான் எப்படி இவனை  நம்புகிறான் என்று தெரியவில்லை. அலுவலகத்தில் இவனுடன் வேலை பார்க்கும் ஓர் எளிய ஊழியரிடம்  கேட்டால் கூட, நுள்ளான் மனதை மாற்றிவிடுவார்கள். ஒருவர் மீது உள்ளுணர்வினால் நம்பிக்கை கொள்வது எப்படி என்று  தனக்குப் புரிபடமாலே இருப்பதை மீண்டும் ஒரு முறை எண்ணிக்கொண்டான். மெல்லிய சிரிப்பு எழுந்தது.  குழந்தையோடு விளையாடிக் கொண்டிருந்த சின்னத்தை, இவனுடைய பேச்சின்மையைத் தாங்காமல்  கதை கொடுத்தாள்.

‘அமலா  வாழ்க்கைல சரியா அடிபட்டிட்டாள். அவளின்ர வயசுக்கு சாதாரணமா ஆரும் இத்தனை கொடுமையைத் தாங்கேல்லாது. அவர் இவளைப் பற்றி ஏதும் சொன்னவரோ ?’

அவள் நுள்ளானைச் சொல்லித்தான் கேட்கிறாள் என்று உக்காராவிற்குப் விளங்கியது.  உண்மையில் அவளைப் பற்றி பெரிதாக எதையும் நுள்ளான் சொல்லியிருக்கவில்லை.

‘பிடிப்பிரச்சினைல கலியாணம் பண்னிட்டம் அவளுக்கு வெளிநாட்டுக்கு, பெரியத்தேட்ட போகத்தான் விருப்பம்.  எல்லாரும் மாதிரி இல்லை. அவளுக்கு இஞ்ச இருந்து போகோனும். இஞ்ச வாழ மாட்டன் எண்டு நிக்கிறாள். நாங்களும் வாறம் எண்டுதான் சொன்னன். ‘நான் மட்டும்’ எண்டதுலை உறுதியா இருக்கிறாள்’

சில விடயங்களை உக்காராவே ஊகித்தும் கொண்டான். அவளுடன் கைபேசி உரையாடல்களின் போது அவள்  இரண்டு வருடங்கள் முன்னால் ஓடி நிற்கும் வெளி உலகத்தைப் பற்றிப் பேசினாள்.  கைபேசி, சினிமா, வெளிநாட்டு ஏஜெண்டுகள், விமானநிலைய கெடுபிடிகள் இப்படியாக. அவளாக இல்லாத பட்சத்தில் சின்னத்தையிடம் மேலதிக பேச்சுக் கொடுத்திருக்க மாட்டான். ஆனால் இப்பொழுது நிலைமை வேறாகவிருந்ததால். முடிந்தளவு அறிய முனைப்புடன்  பொருத்தமான சொற்களை இணைத்தான்.

‘கலியாணம் ஏதோ விருப்பமில்லாமல் கட்டின போல கிடக்கு’

‘ என்ன பிள்ளையை கொண்டு போகமாட்டன் பாஸ்போட் எடுக்காதேங்கோ எண்டு சொன்னவளா ? அவள்  கொண்டு போக மாட்டாள். தாயில்லாமல் வளரோனும் எண்டதுதான் இவளின்ர ஊழ் எண்டால் ஆர் மாத்தேலும். அவள் முடிவெடுத்தால் ஆரும் தட்டேல்லாது.  ஆரும் கேக்கேலாது நாங்கள் எல்லாம் அவளின்ர ரத்தம் தோஞ்ச கையோட நிக்கிறம். தேப்பனாலையும் சரி உந்த கலியாணத்தாலையும் சரி அவள் அனுபவிச்சது கொஞ்ச நஞ்சமில்லை, நாங்கள் எப்பவோ அவளுக்கு சொல்லுற இடத்தை இழந்திட்டம்’

சொல்லிக்கொண்டே கண் கலங்கிளாள் சின்னத்தை.  இவனுக்கு தேற்றுவது ஆறுதல் சொல்வது என்பதெல்லாம் வெகுதூரமானவை. அவள் மூக்கை உறிஞ்சி முடிக்கும் மட்டும் எதுவும் சொல்லாமல் அப்படியே இருந்தான்.

இவளின்ர தேப்பனை ஒருக்கா பண்டி இடிச்சுப்போட்டுது. காலுக்க உள் காயம் ஒண்டு. நெறி கட்டின மாதிரி எலும்புக்கையும் தசைக்கையும் ஒரு நோ ஆழத்துக்கு போட்டுது. எவ்வளவு வைத்தியங்கள் செய்து பாத்தம். பார்வை, புக்கை, ஆங்கில மருத்துவம், ஆயுள் வேதம் எண்டு ஒண்டுக்கும் கேக்கேல்ல. பின்னரமானால் பண்டி விழுந்த நேரத்தை ஒட்டி  காலிலை நோ கூடும். தாங்கேல்லாத வலி. கத்திக் குழறி, அரற்றி பேய் பிடிச்ச போல வெறியாடுவார். அமலா காலால பிறந்தவள், அவள் சுளுக்கு நோவுக்கு கால் பார்வை ஒண்டு பாத்தால் சுளுக்கும் நோவும் குறைஞ்சு இல்லாமல் போகும். ஒவ்வொரு நாளும் தேப்பன் வலியால துடிக்கேக்க பிள்ளை எப்பிடிப் பாத்துக் கொண்டிருப்பாள்?  ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடம் முடிய எல்லாப்பிள்ளையளும்  ரீயூசனுக்கோ , விளையாடவோ போகும்  , அமலா எண்ணையும் சுடுதண்னியும்,  எடுத்துக்கொண்டு தேப்பன்ர காலில இருக்கிற நோவுக்கு   முன்னாலை போய் நிப்பாள்.  ஒவ்வொரு நாளும் தேப்பனுக்கு நோ இறக்கி நித்திரையாக்கினால், இரவிலை இவளின்ர கால் கொதில்லும். பிள்ளை துடிச்சுபோவாள். அழுது அழுது கண் இடுங்கி உள்ளுக்கை போய் ஆள் இளைச்சு, படிப்பையும் விட்டு இரண்டு வருசம் நரகம். அப்பத்தான் ஆரோ ஒரு பெடியனை காதலிச்சிருக்கிறாள். சின்னப் பிள்ளை தானே, எங்களால குடுக்கேல்லாத ஏதோ ஆறுதலை அவன் குடுத்தவன் எண்டு எனக்குச்  சொல்லி அழேக்க கேட்டனான்.  கொஞ்ச நாள் அவளிலையும் தெளிவு வரத் தொடங்கிச்சு. இரவிலை வலியும் குறைய தொடங்கீட்டு. சந்தோசமா இருக்கிறாள் எண்டு நினைச்சுக் கொண்டம்.  எனக்கு மூத்த அக்கா கலியாணம் கட்டி வெளிநாடு போயிட்டாள். நான் தான் இவளோடையும் தேப்பனையோடையும் இருந்தன். ஒரு நாள் பிள்ளை   இண்டைக்கு வெளியிலை எண்டு சொல்லிட்டு வீட்டிலை இருந்தாள்.  தூமைத் துணிமாத்தப் போறன்   எண்டு போனவள் அய்யோ எண்டு கத்தினாள். நான் ஓடிப்போய் பாக்க  என்ர பிள்ளை ‘பெரும்பாடு’ கண்டு ரத்தத்திலை மிதக்கிறாள்.

சின்னத்தை மீண்டும் அழத்தொடங்கினாள். இவனுக்குள் மீண்டும் அதே கேள்வி எழுந்தது. இவர்கள் எந்த உள்ளுணர்வினால்  என்னிடம் இதையெல்லாம் ஒப்பிக்கிறார்கள். இவ்வளவு அந்தரங்கமானவற்றை எந்த நம்பிக்கையில் பகிர்கிறார்கள் . அல்லது காரியமாக வேண்டும் என்று பசையும் பிசினுமான சொற்களை எடுக்கிறாளா? அமலாவின் மேல் இரக்கப்பட்டு நானேதும் செய்ய வேண்டும் என்றோ, அக்கறையுடன் கருமமாற்ற வேண்டும் என்றோ  நினைக்கிறாளா?  சின்னத்தை இவனைக் கவனியாமல் கண்ட துர்க்கனவைத் தெய்வத்திடம் ஒப்பேற்றுபவள் போன்று ‘இரத்தத்தில்’ இருந்து மீண்டும்  விட்ட குரலில் அதே  பாவனையில் சொல்லத் தொடங்கினாள்.

‘ரத்தத்தோட என்ர பிள்ளையை அள்ளி எடுத்து, குளிப்பாட்டி  துடைச்சு, தனியாளா பத்தியம் பாத்தன். தேப்பனுக்கு கூட சொல்லேல்ல,  சொன்னா கேக்கவும் போறதில்லை. அந்த நோ அவரை துடிச்சுச்  செத்த பண்டின்ர உத்தரிப்பாயே மாத்திட்டு. இவள் அவருக்கு அதைக் குறைக்கிற தெய்வம் மட்டும் தான். ஒவ்வொரு நாளும்  இவள் பார்வை பாத்து முடிஞ்சு கட்டிலாலை இறங்கேக்கை  கையெடுத்துக் கும்பிட்டு ஆள் நடுங்கி ‘என்ர ஆத்தை , தெய்வமே ! ‘ எண்டு  கண்கலங்குவார்.  என்ர அண்ணரோ,  இவளின்ர  தேப்பனோ எங்களோடை இருக்கேல்ல.  எங்களோடை இருந்தது வேதனையிலை துடிக்கிற ஒரு  பண்டி தான். அவரிட்ட  பிள்ளைக்கு ‘கட்டி விழுத்தினது’  எண்டு சொல்லேல்லா. ஆருக்கும் சொல்லேல்லா. ஏதோ ஒண்டம்மா சொல்லித்தந்த பத்தியங்களையும் கைமருந்தையும் பாத்தன். எனக்கும் துணியை எடுத்து எரிக்கிற கட்டாடியார் மோளையும் தவிர ஆருக்கும் இது தெரியாது. ஆனால் பெண்ணின்ர  சினைக்கு எப்பவும் ஒரு புகை இருக்கும். அது எப்பிடியோ பரவும். இவளும் அந்தப் பெடியனும் இரண்டு நாளைக்கு முதல் ஆரோ  ஒரு வைத்தியனிட்ட போய் கருவைக் கலைக்கப் பாத்திருக்கினம். கடு மருந்து குடுத்து, தென்னம் ஈக்காலை பனிக்குடத்தை உடைச்சு விட்டிருக்கிறான்  அந்த வேசை மோன். நிலத்திலை கட்டி கட்டியா கொட்டினத பாத்து அலறி அழுது தன்ர முதல் குஞ்ச கக்கூசுக் குழிக்குள்ள விட்டிருக்கிறாள். ஆனால் அது முடியாமல் மிச்சம் கிடந்திருக்கு. இப்பிடி கடுமருந்து இரத்தமும் கட்டியுமா முழுக்க வழிச்சுக் கொட்ட மூண்டு நாள்  கூட ஆகும். கொத்தியை   செத்தேக்க கட்டிப்போட்டு எத்தினை ஆயிரம்  பிள்ளையளை பேறு பாத்த எங்கடை பரம்பரைக்கு இப்பிடி ஒரு நாள் வருமெண்டு நாங்கள் கனவிலையும் நினைக்கேல்ல,  அண்டு இரவு பிள்ளை திடுக்கிட்டு திடுக்கிட்டு எழும்பினாள். என்னைக் கட்டிப்பிடிச்சுக் கொண்டு படுத்திருந்தவள். ‘கொத்தி நிக்கிறாள் எண்டு வீறிட்டு எழும்பி இருந்து அழுதாள். அந்த ரத்தக் கட்டியளுக்குள்ள இவளே அந்த சிசுவின்ர தலையைத் தேடி எடுத்து அதுன்ர முகத்தைக் காணுற போலவும் கொத்தி அந்த பிள்ளையை எடுத்துக் கொண்டு ஓடிப்போக, அவளுக்கு பின்னாலை ஓடிப்போய் பாக்க, கொத்தி அந்த பிள்ளை செத்துப்போச்சு என்டதும் அதை மடியிலை கிடத்தி ஒப்பாரி சொல்லி அழுறத கண்டு வெருண்டு எழும்பி இருக்கிறாள் பிள்ளை. கொஞ்ச நாள் அவளைக் கண்கொண்டு பாக்கேலாம இருந்தம். அப்பத்தான் ஒரு சனிக்கிழமை  காலமை  அண்ணரை  எழுப்ப போனா அவர் நித்திரியிலையே மோசம் போய் கிடந்தார். உத்தரிக்காத நல்ல சாவு. அதுக்குப் பிறகு தான் பிள்ளை கொஞ்சம் தேறினவள்’

‘அந்தப்பெடியன்? ‘

உக்காரா நெடுநேரமாக அங்கேதான் சுத்திக் கொண்டிருந்தான். அவளுடைய முதல் ஆண். சின்னத்தை உதட்டைப் பிதுக்கினாள்.

‘ நானும் அக்காவும் எவ்வளவோ கேட்டுப்பாத்தம். சொல்லேல்லை. ஆனால் அப்பேக்க ஒரு கதை  எங்கட காதுக்கு வந்தது.

ஓர் இடைவெளி விட்டு, குரலை அழுத்தினாள்.

‘ அது நுள்ளான் தான்’ எண்டு , ஏனெண்டால் அவன் இந்தப் பிரச்சினையள்  நடந்த காலத்திலைதான் அவன் இயக்கத்திலை இருந்து வந்து நிண்டவன். வீட்ட அண்ணேட்டை வாறவன் , இடையிலை நுள்ளான்  வேவுக்கு போய் வீரச்சாவு எண்டு  நினைச்சு இயக்கம் செத்த வீட்டுக்கு அறிவிச்சது. அது நடக்கேக்க இவள் பேய் பிடிச்ச போல இருந்தவள். செத்த வீட்டுக்கு வரேல்ல. நுள்ளான் திரும்பி வந்த போது ஊரே மீண்டவனைப் பாக்க அதிசயம்  நடந்த கணக்கா நுள்ளான் வீட்ட மொய்ச்சுது, அண்டைக்கும் எதுவும் நடக்காத போல இருந்தாள். பிறகு  பிடிப்பிரச்சினைக்க இவள் ஒழிச்சிருக்கும் போது, இவளுக்கு கலியாணம் செய்து வைச்சால் பிடிக்க மாட்டாங்கள் எண்டு நுள்ளான்ர அத்தைக்காரி சம்பந்தம் ஒண்டைக் கொண்டு வந்தாள். நுள்ளான் நெஞ்சிலை  காயப்பட்டு  இயக்கத்தாலை  விலத்தினவன்.  முன்னாள் போராளி ஒராளுக்கு மனிசி  எண்டேக்க பிடிக்க மாட்டாங்கள் எண்டு யோசனைப் பட்டு இவளிட்ட சொல்ல, இவளும் ஒருக்கா அவரோட கதைச்சிட்டுதான் சொல்லுவன் எண்டாள். என்ன கதைச்சவை எண்டு தெரியாது. ஆனால் அவங்களுக்கு இடையில முன்னுக்கு நல்ல அறிமுகம் ஒண்டு இருந்திருக்கு எண்டு எனக்கு, உள்ளுக்கை ஒரு சொல் இருந்தது. அது இப்பவும் இருக்கு’

 வைத்தியசாலை வாசலில் பரபரப்புக்குரிய குணங்குறிகள் தெரிந்தது. முகாம்களில் இருந்து வரும் அம்புலன்ஸ்கள் வந்து நுழைந்தன. ஒவ்வொரு அம்புலன்சிற்கும் பொறுப்பாக ஒரு ஆமிக்காரன் அதில் ஏறி வந்தான். ஆயுதம் தாங்கிய படையினர் உள்ளே வரக் கூடாது என்பதால் அவன் வெளியில் இருந்த காலரணில் ஆவணங்களுடன் இறக்கிக் கொள்ள அம்புலன்ஸ் வண்டிகள் உள்ளே வந்து தரித்தன. அவசர நோயாளிகளை இறக்கினர்.  வெளி நோயாளர் பகுதிக்குச் செல்ல வேண்டியவர்களை அவர்களாகவே செல்லுமாறு , பணியாளர் ஒருவர்   உரத்துச் சொல்லிவிட்டு அவசர நோயாளிகளோடு போய் விட்டார். இவள் அம்புலன்சில் இருந்து இறங்கும் போதே இவர்களைக் கண்டாலும் எந்த பரபரப்பும் பதட்டமும் காட்டாமல்  எல்லா வைத்திய சாலைச் சடங்குகளையும் கடந்து மெதுவாக நடந்து வந்து குழந்தையை வாங்கிக் கொண்டு. இறுக்கி அணைத்து. இரண்டு விம்மு விம்மினாள். அவ்வளவு நேரம்  விளையாடிச் சிரித்துக் கொண்டிருந்த குழந்தை வீறிட்டு அழத் தொடங்கினாள்.

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’