இருட்சொல் | காளம் 08

இருட்சொல் | காளம் 08

சின்னத்தை பார்க்க வருகிறாள் என்றதும் அமலாவிற்குள் இருந்த இறுக்கங்களின் வடங்கள் தளர்ந்து அரவுகளென்றாகி இருள் ஆழங்களுக்குள் இறங்கிச்சென்று மறைந்தன. உக்காரா என்ற முகம் தெரியாத அந்த இளைஞன் நுள்ளானிடம் இரகசியமாக கைத்தொலைபேசி ஒன்றைக் கொடுத்திருந்தான். அதன் மூலம் தன்னுடன் பேசி, ஆகவேண்டியதை முடிக்கச் சொல்லியிருந்தான். சின்னத்தைதான் வெளியே இருந்து அவன் கேட்கும்  எல்லா அலுவல்களையும் பார்த்துக் கொண்டிருந்தாள். அன்றாடம் தீயில் நிற்கும் உணர்விலிருந்து இவள் மீண்டு விட்டாலும், அவளுக்குள் பதட்டம் ஒன்று இல்லாமல் இல்லை. தவிர மனமும் எல்லாவற்றிலிருந்தும் விடுபடவே துடித்திருந்தது. `குழந்தைக்கும் பாஸ்போட் எடுக்க வேண்டியிருக்கலாம்` என்பதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. சின்னத்தை வேறு `பிள்ளையைக் கொண்டுவா, என்று சொல்லிக்கொண்டே இருந்தாள்.  கிளிநொச்சி  நகரம் இடம்பெயர்வதற்கு கொஞ்ச நாட்களுக்கு முதல் சின்னத்தையுடன் பேசியிருந்தாள்.  சமாதான காலத்தில் வன்னிக்கு ஒரு முறை குடும்பத்தோடு வந்து போயிருந்தாள். அவளுக்கு இரண்டு பெண் பிள்ளைகள், கணவன் வெளிநாட்டில் இருந்தான். அவன் பெயர் கூட அமலாவிற்குத் தெரியாது.  கைபேசியில் இவள் குரலைக் கேட்டதும் மறுமுனையில்  குலுங்கி அழுதாள் சின்னத்தை. அவ்வளவு இறுக்கமானவள் அவள்.  எப்பொழுது இத்தனை கனிவை அடைந்தாள்? இவளுக்கு ஒரு சொட்டும் கண்கசியவில்லை.எல்லோரும் அத்தையைப் போன்றவர்கள்தான், நான் தான் இப்படி இறுகிச் சமைந்து விட்டேன் என்று நினைத்துக்கொண்டாள். அத்தையைக் காண்பதற்கு, நுள்ளான் தான் வரவில்லை என்று விட்டான். அவன் இயல்பிலேயே புதியவர்களை விரும்பாவதவன், யார் அவனுடைய வட்டத்திற்குள் அறிமுகமானாலும், தவிர்த்து விடுவான் அல்லது அவர்களைப் பற்றி மோசமான அபிப்பிராயங்களை வளர்த்தெடுத்தபடியே ஆரம்பிப்பான். அத்தையை அவன் ஏற்கனவே வெறுக்கத் தொடங்கியிருக்கலாம்.

வெளியாட்களைப் பார்க்க முட்கம்பிகளைத் தாண்டி அருணாச்சலம் முகாமின் முன்பக்க பார்வையாளர் பகுதிக்குப் போக வேண்டும். யாரும் ஒரு ஆண் துணை கட்டாயம் தேவைப்படலாம்.  தாலிக்கொடியை  வரச்சொல்லியிருந்தாள். தெய்வத்தைக் காத்துச்செல்லும் தேவகணம் போல முன்னால் நடந்தான். குழந்தையுடன் முட்கம்பியைக் கடக்க வேண்டும். தாலிக்கொடி அறிந்தளவு இவ்விரு முகாம்களையும் யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். தன்னுடைய சிறுவர் படையை வேவுக்காரர்கள் போல முகாமெல்லாம்  நிறைத்து வைத்திருந்தான்.  வலசைப் பறவைகள் தீவனம் கிடைக்கும் இடங்களில் இருந்து ஒரு மணித் தானியத்தை கவ்விக்கொண்டு திரும்புவதுபோல் அவர்கள் அவனுக்கு மொத்த முகாமைப் பற்றிய கதைகளைக் கொண்டு வந்து சேர்த்தனர்.  தாலிக்கொடி பெரிதாக உலாத்த மாட்டான். அவனுக்கு இன்னும் பயம் இருந்தது. யாருக்கும் சிறுவர்கள் காணாமல் போகின்றார்கள், இயக்கத்தில் இருந்தவர்கள் என்று சிறு சந்தேகம் வந்தாலே கொண்டு போய்விடுகிறார்கள். உலாத்தாவிட்டாலும் பெரும் சிலந்தி தன் பிரமாண்டமான வலையில் எங்கோ ஓரிடத்தில் இருந்து மொத்த வலை விரிவையும் அணு அணுவாக அறிந்திருப்பது போல தாலிக்கொடி மொத்த முகாமையும் காண்பவன். ஒவ்வொரு பிளாக்காக கடந்து செல்லும் போது ஒவ்வொரு கதையாகச் சொல்லிக்கொண்டே நடந்தான்.

`அதிலை ஒரு  மலசலகூடம் அடிச்சிருந்தவங்கள், நல்ல பெரிய குழி ஒண்டு பக்கோவாலை தோண்டினது, தண்ணி வாற அளவுக்கு தோண்டினது சதையிலை கத்தி  பட்டமாதிரி சிவப்பு நிறத்திலை தண்ணி பெருகி இருக்கு. அதக்கு மேலை பலகை போட்டு  கண்ணாடி நார் பிளாஸ்ரிகிலை மேடை அடிச்சிருந்தவங்கள். நேர மலக்குழிக்கு மேலை ஏறி இருக்கோணும். `உந்த பிளாக்கிலை ஆரோ வயசு போன ஆச்சி இருந்திருக்கிறா. ஆக்கள் ஆருமில்லாமல்  தண்ணீக்காலை நடந்து கரை சேர்ந்திருக்கு மனிசி. பேய் பிடிச்சமாதிரி இழுபட்டுக்கொண்டு திரிஞ்சிருக்கு. கையை வானத்துக்கு ஓங்கி நிலத்திலை அடிச்சு அடிச்சு `தாமரை தாமரை` எண்டு புலம்பிக்கொண்டு திரிஞ்சிருக்கு. ஆரோ மகளையோ பேத்தியையோ துலச்சுப்போட்டுது போல. முந்தநாள் காலமை அந்தக்கக்கூசுக்க ஏறி இருந்திருக்கு. கண்ணாடி நார் மேடை அப்பிடியே பொறிஞ்சிட்டு, கிழவி நேரா மலக்குழிக்க விழுந்திட்டு. `என்னரையாத்தை` எண்டு அதின்ர குரல் கேட்டிருக்கு. ஓடிப்போய் பாத்தால் எந்த சத்தமும் இல்லை.   முப்பது நாப்பதடி குழி. ஆமி வந்து, பாத்திருக்கிறான். கிழவி உயிரோடை இருக்காது எண்டு முடிவெடுத்து, பக்கோவாலை மண்ணைச்சரிச்சு கிழவியை மூடிட்டாங்கள்`  

அமலா தாலிக்கொடி காட்டிய இடத்தைப் பார்த்தாள். மஞ்சள் நிற ரிப்பன் போன்ற கயிறு சுற்றிக் கட்டியிருக்க, செம்மண் மேடிட்டிருந்தது அவ்விடம்.  திரும்ப அங்கே பார்க்காமல் நடந்தாள். தாலிக்கொடி வேறேதோ சொல்ல வந்தான். நேமியன் பாஸ்ரர்ட பிளாக்குக்கு பக்கத்து பிளாக்கிலை, சைவ ஆக்கள் பிள்ளையார் ஒண்டு வைச்சு கோவில் மாதிரி கும்பிடுறாங்கள், ஐய்யர் வந்து பூசையெல்லாம் நடக்குது’   இவர்கள் என்ன நிரந்தரமாகத் இங்கேயே தங்கி விடப்போகிறார்களா?  ஒரு பக்கம் பாஸ்ரர் நேமியன் ஆட்களைச் சேர்த்துக்கொண்டு செபக்கூட்டங்களை ஆரம்பித்திருந்தார். 

கடந்து செல்லும் வேலி அங்காங்காங்கே கொமோண்டோக்கள் நெக்கப்பட்டு தொய்ந்து கிடந்தன. ஆட்கள் சர்வசாதாரணமாகப் போய் வந்து கொண்டிருந்தார்கள். பார்வைத் தூரத்தில் இருந்த இராணுவக் காவலரண்களில் இருந்து எந்த அசமந்தமும் இல்லை. தொப்பிகளும் துவக்குகளும் தெரியாமல் இல்லை. இவள் கொஞ்சம் தயங்கி அந்தப்பக்கம் பார்த்தாள். தாலிக்கொடி  தான் முதல் கம்பிக்குள் நுழைந்து சென்றான். பிறகு அந்த  இடைவெளியால்  குழந்தையை சுற்றியிருந்த சிவப்பு துணியோடு வாங்கிக்கொண்டான். இவளும் அவனைப்போலக் கடந்து வந்தாள். கம்பியைத் தாண்டியதும் அங்கே வேறொரு முகாம் விரிந்தது. தகரக் கொட்டகைகள் அடிக்கப்பட்ட முகாம் தொகுதி அது. கதிர்காமர் முகாமின் பின்னர் தகரக் கொட்டகைகளாக அடிக்கப்பட்டது. சண்டை இவ்வளவு வேகமாக முடியும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதனாலேயே இராமநாதன் முகாமிற்கு தற்காலிக கூடாரங்கள் மட்டும் வேக வேகவேகமாக அடிக்கப்பட்டன.  அருணாச்சலம் முகாம்   பெரிய நகரம் ஒன்று உருவாகி வரக்கூடிய பிரமையையும் திருவிழாக்களை நோக்கி ஓடும் வீதிகளைப் போலவும் சனங்கள் அசைந்துகொண்டேயிருந்தார்கள்.  இவள் வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தாள். குழந்தையோடு தாலிக்கொடி முன்னால் சென்றான். அவன் மிகவும் அறிந்த பாதைகள் என்பதால் கால்கள் பழக்கத்திற்கு அடியெடுத்துச் சென்றன. பார்வையாளர் பகுதி முகாமின் வாயிலில் இருந்தது. அந்த இடமே அத்திருவிழாப் பெருக்கின் தெய்வம்  நிற்கும் இடம் போல் சனச்செறிவு ஏறியிருந்தது. தாலிக்கொடி வேகமாகச் சென்றான். சனங்களை விலத்திக்கொண்டு நடந்தான். அவனும் நுள்ளானும் உக்காராவைச் சந்திக்கும் வழமையான பகுதி நோக்கிச்சென்றான். பெரிய முட்கம்பிக்கு அந்தப்பக்கம் சொந்தங்களைக் காணவரும் ஆட்களை இராணுவம் வரிசையில் ஒழுங்குபடுத்தி, சோதனைகளை முடித்து விட்டு அனுப்பிக்கொண்டிருந்தது.  இவளுக்கு அந்தப்பக்கம்  இருந்த சனங்களைப் பார்க்கும் போது அவர்களின் உடைகள் வித்திசாசமாக இருந்தது.   வன்னிக்குள் வரும் பாதை மீண்டும் சண்டை தொடங்கிய பிறகு பூட்டப்பட்ட பிறகு இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்த சனங்களே நேரடியாக உலகத்தோடு தொடர்பில் இருந்தனர். இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சனங்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் உறைந்து போன காலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். தவிர அகதிமுகமும் நடை உடை பாவனை மொழி  என்று  வேலிக்கு அந்தப்பக்கம் வேறொருசனம் கம்பிக்கு இந்தப்பக்கம் வேறொரு சனம்.  இரண்டு அறுபட்ட காலங்கள்  மீண்டும் சந்திக்குமோர் வெளி. தாலிக்கொடி பக்கத்தில் வந்து இரகசியக் குரலில் `உந்தக்கம்பியாலை ஆக்கள் மாறுறாங்கள், பாக்க வாற சொந்தக்காரரோட கம்பியைக் கடந்து போறாங்கள்,` என்றான். வாய்ப்பே இல்லை  ஆமிக்காரர் கண்டுபிடித்து விடுவார்கள்.  நின்றுவிட்ட காலமொன்றில் இருந்து  முன்னிருந்த காலத்திற்கு தாவும் போது யாவும் தெரிந்து விடும். அப்பட்டமாக `அகதிகள்` என்ற முகமும் பாவனையும் இருக்கும். இவள் எண்ணத்தை அவனே சொல்லுணர்ந்து 

`அது ஒரு பெரிய பிளான், அங்கை இருந்து சொந்தக்காரர்  முகத்துக்கு கீறிம் , புது உடுப்பு எல்லாம் வாங்கிக்கொண்டுவந்து குடிப்பினம், ஒண்டோ ரண்டு கிழமை , கடந்து போக வேண்டிய ஆள், அதெல்லாம் போட்டு , முகத்தை வெள்ளையாக்கி, புது உடுப்பு போட்டு திரும்ப அங்க போய் ஆக்களுக்க கம்பியைக் கடந்து மாறி அவங்களோட போவினம்` 

அவன் சொன்ன பிறகுதான் இவள்  கூட்டத்தைக் கண்களால் விலக்கிப் பார்த்தாள். தங்களைச் சோடித்துக்கொண்ட நபர்களைக் காணக்கிடைத்தது. சிறுவர்கள், பெண்கள், ஆண்கள்  கால்களில் இருந்த புதுச்செருபுகள், முகத்தை மட்டும் வெளிற்றிய தோற்றம். பதட்டம் எல்லாம் ஒருங்கிய  மனிதத் தனியன்கள். தாலிக்கொடி ஓரிடத்தைக் காட்டினான்.  இங்கிருந்து சென்ற நான்கைந்து பேரும், அங்கிருந்து வந்த நான்கைந்து பேரும் தங்களைக் குழுமிக்கொண்டு மறைக்க இளம் பெண்ணொருத்தி கம்பியைக் கடந்து அந்தக் காலத்தின் கரைக்கு மேலேறினாள். அயலில் நின்ற அறியாதோரும் தங்களைக் கொண்டு அக்கடந்து செல்லும்காட்சியை மறைத்தனர். கண்ணெட்டிய தூரத்தில் இராணுவம் அலைந்து திரிந்ததைக் காண இவளுக்கு உள்ளுக்குள் நடுங்கியது. இவை தவிர கம்பியால் உறவுகளைக் கட்டி அணைத்து அழுதுகொண்டிருந்தவர்களும் இந்த ஆற்றுகையில் கண்ணீரோடு இணைந்து கொண்டனர்.  `இல்லையெண்டு எல்லோ நினைச்சம்`  என்ற நீண்ட அழுகையின் வெவ்வேறு சொற்கள் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது அந்தப் பெருக்கில்.  முட்கம்பிகளை வளைத்து , அல்லது அவற்றோடு சேர்த்து அணைத்துக்கொண்ட உடல்களில் இருந்து  உணர்வுகள் எழுந்து பொதுவென்றாகியது. குசலங்களும், கொஞ்சல்களும், கண்ணீருமாக. சாவில் இருந்து மீண்ட பிறகு அனைத்து அந்நியமும், அனைத்துக் கோவமும், அனைத்து வெறுப்பும் அவியாக்கப்பட்டது. என்று நினைப்போடி நெஞ்சம் மெல்லக் கனமடைவதை தவிர்க்கமுடியாமல் கண்களை ஓட்டிக்கொண்டே நடந்தாள்.

`பகிடி என்னெண்டால் அங்காலை போனவை, பதிவு இல்லாமல் பயமெண்டு திரும்பி இதே மாதிரி வந்தும் இருக்கினம், சொந்தக்காரரோட பத்து நாள் தங்கீட்டு, தங்களாலை ஏலாது எண்டு வந்திருக்கினம், வீட்டுக்கையே கிடக்கிறத விட முகாம் சுதந்திரமா இருக்கெண்டு திரும்பி இருக்கினம்`   சொல்லிவிட்டுச் சிரித்தான். 

அவன் குழந்தையை ஏந்தி நடப்பது  வேடிக்கையாய் இருந்தது. உடைந்து விடும்  ஏதோவொரு பொருளை தூக்கிச் செல்லும் பாவனை. கூட்டத்தை விலக்கிக் கொண்டு நடந்து கொண்டிருந்தான். இவளுக்கு குழந்தையை வாங்கிக் கொள்ள தோன்றவில்லை. ஆனாலும்  சின்னத்தை கண்டதும் சினக்கக் கூடும். வாங்கிக் கொண்டாள். 

உக்காராவும் சின்னத்தையும் காத்திருக்கும் இடம் கொஞ்சம் எட்ட இருந்தது. உக்காராவிற்கு இரானுவத்தினர் சிலரைத் தெரியும் என்றும், அரச அதிகாரிகளையும் பொலீஸ்காரர்களையும் அறிந்தவன் என்று நுள்ளான் சொல்லியிருந்தான். முகாம் உருவான நாட்களில் வேலிகள் ஏதும் இருக்கவில்லை. வழித்து அகற்றப்பட்ட   வெம்மை இறங்காத காட்டில் கொண்டு வந்து.  கூடாரம் கிடைக்கும் வரை காத்திருங்கள் என்று சொல்லிச்  சென்ற அதிகாரிகளில் ஒருவனாகத் திரிந்த உக்காராவை பழக்கம் பிடித்திருந்தான் நுள்ளான். அந்த இளைஞனிடம்  நுள்ளானை கவரக் கூடிய  உருவொன்று இருக்க வேண்டும். அவனைப் பற்றிக் குறிப்பிட்ட நாளில் இருந்து ஆர்வமாகவே கதைத்தான். நுள்ளான் தாலிக்கொடியை அழைத்துச் சென்று  உக்காராவிற்கு அறிமுகம் செய்து வைத்த பிறகு, தாலிக்கொடியின் வாயிலும் அடிக்கடி உக்காராவின் பெயர் வந்துகொண்டே இருந்தது. ஆண்கள்  எளிமையான புற உலகத்தினர். அவர்கள் கதைகளினால்  அறியப்படும் போதே பெருக்கின்றனர். சொல்லிச்சொல்லி இருத்திய ஆண்கள்  தான் புராணங்களிலும் இதிகாசங்களிலும்  நாயகர்களாக அறியப்படுகிறார்கள்.  பெண் வாய் சொல்லிப் பெருக்கிய ஆணுருவைக் காட்டிலும் ஆண்  நா சொல்லிப் பெருக்கிய ஆண் உருவே  பெண்களை  ஆர்வத்தோடு அவர்களைக்  காணவோ காமுறவோ விழைவெழுப்பி விடுகிறது. அமலாவிற்குள் எழுந்து  நின்ற உக்காராவை அவளால்  இன்றைக்கு காண முடியுமோ என்ற எண்ணம் எழுந்தது.  ஆண்களை எளிய  பிராணிகளாய் எண்ணுபவள், நடத்துபவள். அமலாவிற்குள் எழுந்த உக்காரா ‘இவ்வளவு தானா’  என்று அறிவால் தருக்கி அகற்றப்படப் போகும்  நேரத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் அமலா.

சின்னத்தையின் குரல் வீறிட்டது. இவளைக் கூட்டத்தில் கண்டுவிட்டாள். முட்கம்பிகளுக்கால் கைகளை நீட்டி இவளை நோக்கி காற்றில் அசைத்தாள். வேகமாக வந்து கண்ணியில்  சிக்கிய உடலை மீட்க சிறகுகளை உந்தி  அசைக்கும் பறவையைப் போல் முட் கம்பிக்குள் துடித்துக் கொண்டிருந்தாள்  சின்னத்தை. அமலா ஓடிச்சென்றாள்.  சின்னத்தையின் காற்றில் அலைந்த கைகளுக்குள் தன்னையும் குழந்தையையும் நுழைத்துக் கொண்டாள்.  சின்னத்தை இவளைத் தடவிக் கொஞ்சி கொஞ்ச நேரம் கண்ணீரால் விக்கிக் கொண்டே குழந்தையை வேலிக்கு மேலாக தூக்கித் தரச் சொன்னாள்.  அத்தை அப்பாவைப் போலக்  கொஞ்சம் குள்ளம். எட்டவில்லை. அப்பொழுதுதான் அந்த ஆணி கரிய கை குழந்தையைப் பெற்று தன் பக்கம் மாற்றி நெஞ்சோடு அணைத்து ஒரு முறை குழந்தையை உற்றுப் பார்த்து விட்டு சின்னத்தையின் கையில் வளர்த்தியது.  இவள் அவனை அடையாளமுணர்ந்து கொண்டு  அவனைப் பார்த்து  சிறு முறுவலைத் தொடங்கி அத்தைக்கு மாற்றினாள்.  சேர்ந்தெழுந்த சொற்களை நிறுத்தி மீண்டும் மவுனத்துக்கு அனுப்பினாள். கதைகளால் அறியப்படுபவர்கள் முன் நிற்கும் பதட்டம் அவளுக்கு அவ்வளவே எழுந்தது அவளுக்கே வியப்பைத் தந்தது.

சின்னத்தை குழந்தையைக் கொஞ்சிக்கொண்டிருக்கும் போதே , தாலிக்கொடியுடன் உக்காரா பேச்சுக்கொடுத்துக்கொண்டே  அகத்தினால் இவளைக் காண்பதும் தவிர்ப்பதுமாகவிருந்தான். இவள் தன்மேல் நிலைக்கிறாள் என்றதும்  இவளை நன்கு ஏறெடுத்துக் கண்டான். 

`பாஸ்போட் அலுவலுகள் முடிஞ்சிடும், நீங்கள் பிள்ளைக்கு எடுக்க வேண்டாம் எண்டனியளாம்.. ` என்று ஆரம்பிக்க , பதட்டமாகி அவனைக் கண்களால் அடக்கி சின்னத்தையை நோக்கி ஒரு வெட்டு வெட்டினாள். உக்காரா புரிந்து கொண்டு தலையாட்டினாள். நல்லவேளை அக்குரல் வெளியில் இவன் சொன்னதை சின்னத்தைக் கேட்காமல் குழந்தையைத் தான் கொஞ்சிக்கொண்டிருந்தாள்.  

`கொப்பர்ற கண்ணடி`

சின்னத்தையை நிமிர்ந்து முறைத்தாள். அமலாவிற்கு அஞ்சாத ஆட்களில் அத்தையும் ஒருத்தியென்பதால், அவள் சட்டை செய்யாமல் குழந்தையின் மூக்கைத் தொட்டுப்பிடித்துக்கொண்டிருந்தாள். 

`ஒலிவ் ஓயில் வாங்கி வந்தனான், நல்ல பிரட்டி மூக்கைப்பிடிச்சுவிடு, உனக்கும் மூக்குச்சரியில்லை, உன்ர புரியனும் சரியில்லை` சொல்லி விட்டு மூக்குப்பற்றி குழந்தைக்கு அதையே திரும்பச்சொல்லிக் கொஞ்சினாள். உக்காராவின் பார்வை இவள் மூக்கைத் தைத்து நின்றதை நிமிர்ந்த போதுதான் கண்டாள். புருவத்தை உயர்த்த அவன் முன்பும் அப்புருவங்களின் அதட்டலைச் அறிந்தவன் போல முகத்தை மாற்றிக்கொண்டான். 

சனங்கள் அதிகப்பட்டுக்கொண்டே இருந்தார்கள். தாலிக்கொடி உக்காராவிடம் வேலியைக் கடப்பவர்களைக் கண்ணால் காட்டிக்கொண்டிருந்தான்.  அவர்களுக்கு பயம் போய்விட்டது என்று சொன்னான். அவர்கள் வீடுகளின் படலைகளைத் தாண்டுபவர்கள்போல இராணுவ கொமோண்டோ கம்பி வேலிகளைத் தாண்டிக்கொண்டிருந்தனர். இரகசியங்களும், அற்புதங்களும் மக்களிடம் மலினப்படுவதுபோல் எதனிலும் மலினப்படுவதில்லை. தொட்டுத் தொட்டு அடைந்து விட்டால் சனங்களுக்கு  அபூர்வமான பொருளும் நிகழ்வும் அற்பமாகவே ஆகிவிடுகின்றன. முட்டாள்தனமும் அறியாமையும் கூட்டாகவே வேகம் கொள்கின்றன. தனிமனிதர்களுக்கு  இருக்கின்ற தயக்கம்  கூட்டத்தில் வேலைக்காவதில்லை. தாலிக்கொடி அன்றைக்கு எதையோ வித்தியாசமாக உணர்வதாக உக்காராவிடம் சொன்னான். உக்காரா `சனம் கொஞ்சம் கூட விட்டவங்கள்` என்று சொல்ல,  தாலிக்கொடி அவனை மறுத்தான். `இல்லை இஞ்சால இருந்து இண்டைக்கு அந்தப்பக்கம் கூடச்சனம் கடந்திருக்கு மாதிரிக் கிடக்கு` தாலிக்கொடி தன்னில் அஞ்சுவது அவனுடைய முன்னுணரும் அகத்தைத்தான்.  அம்மா பங்கருக்கு வெளியில் போகும் போது, அவளை நிறுத்து என்று அது சொன்ன போதும், அவனால் அதைச் சொல்ல முடியாமல் இருந்தது. தாயிடம் `உன்னுடல்  ஏதோவொரு மாயக்கணத்தில் பொன்னென்று ஒளிர்ந்ததாகச் சொல்ல முடியுமா? அவன் தயங்கிய அக்கணத்தின் பதட்டம் அடங்க முதல் வெளியில் பேரோசையும் தாயின் அலறலும் எழுந்தடங்கிற்று.  தாலிக்கொடியின் உடல் வியர்க்கத்தொடங்கியது. அமலாவிடம் திரும்பி `போவம்` என்றான். சின்னத்தை நேரத்தைச் சொல்லி `இப்பென்ன அவசரம்` என்றாள். குழந்தை அவளுடன் நன்றாக ஒட்டிக்கொண்டதையும், தூக்கியது முதல் சிறு சிணுங்கல் கூட இல்லாமல் இருந்ததையும் சொல்லிப் புளகாங்கிதப்பட்டுக் கொண்டிருந்தாள்.  சில நிமிடங்களில் காட்சிகள் மாறின. வேலியை மொய்த்திருந்த சன எறும்புக் குவைகளில்  கலையும் காட்சி புகுந்தது.   ஆரவாரிக்க் தள்ளுமுள்ளுப்பட்டுக்கொண்டு சனங்கள் பதட்டப்பட்டார்கள் தீடீரென்று வேகமாகக் கலைந்து ஓடத்தொடங்கினார்கள். வேலிக்கு அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும்.  எவ்விடத்தில் அக்கலைவு தொடங்கியது என்பதை மட்டுப்பிடிக்க முடியவில்லை. காவலரண்களில் நின்ற இராணுவம்  வேகமாக துவக்குகளைத் தூக்கிக்கொண்டு  ஓடி வருவது தெரிந்தது. கணப்பொழுதுதான். என்ன நடக்கிறது என்று உய்த்துக்கொள்ள முதல்,  டப் டப் என்று சன்னங்கள் தீர்ந்தன. சனங்கள் ஐய்யோ என்று கொண்டு  வெடித்துச் சிதறினர். சூட்டுச்சத்தங்கள் மிக அருகில் வெடித்தன. 

`சுடுறாங்கள்`

என்றொரு முது பெண்ணின் குரல் வானத்தை நிறைத்தது. சப்பாத்துக் காலடிகள் கேட்கத்தொடங்க சிதறியவர்கள், இடறியவர்கள், ஓடியவர்கள், நிலத்தில் படுத்தவர்கள், வீறிட்டவர்கள் எல்லோருமாக  அச்சத்தின் சுழியினால் சுழற்றப்பட்டனர்.  காதைப் பொத்திக்கொண்டு நிலத்தில் இருந்த அமலா கண்ணைத் திறந்த போது எதிரில் முட்கம்பி வேலியைக் காணவில்லை. வேறொங்கோ கலையும் சனங்களுக்கு மத்தியில் குந்தியிருந்தாள்.  தாலிக்கொடி, அத்தை, உக்காரா , குழந்தை யாருமே அருகில் இல்லை.  எழுந்து உடலைக் கலைத்து எங்கே நிற்கிறோம் என்பதை அறியப்பார்த்தாள். முட்கம்பி வேலி சற்றுத்தள்ளி இருந்தது.  சனங்கள் கலைந்து ஓடுவதும் இராணுவம் அவர்களைச் சுற்றி வளைப்பதும் கண்ணெதிரே நிகழ்ந்தது. தாலிக்கொடி `அக்கா` என்று கத்திக்கொண்டே எங்கிருந்தோ தோன்றிக் கைகளைப் பற்றினான். 

`மேல் வெடிதான் வச்சிருக்கிறாங்கள், இவங்கள் கடந்ததைக் கண்டிட்டாங்கள் போல, வா வேகமா முகாமைக் கடக்கோணும்`

`பிள்ளை எங்கை ?`

`நீ பேய் பிடிச்சமாதிரி ஓடின்னி, கூப்பிடக்கூப்பிட , உக்காராதான் உனக்கு பின்னாலை ஓடு எண்டவர். அத்தையையும் பிள்ளையையும் அவர் கொண்டு போய் சேர்ப்பார், இப்ப அங்காலை போகேலாது வா முகாமைக் கடப்பம்`

`உனக்கென்ன விசரோ? பிள்ளை இல்லாமல் போனால் இந்தாள் என்னை வெட்டிப்போட்டுத்தான் மறுவேலை பாப்பான்`

`நான் சொல்லுறன், பிள்ளைக்கு ஒண்டுமில்லை, அத்தைதானே கொண்டு போனவா, இப்ப நீ வா 

இவளின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடினான்.  எங்கெங்கோ எல்லாம் சுத்திக்கொண்டு வந்து கடைசியில்  இராமநாதன் முகாமின் வேலியை அடைந்து , வேகமாகக் கடந்து அந்தப்பக்கம் நின்று மூச்சிரைத்தார்கள். ஒரு கணம் கண்களை இறுக்கி மூடினாள். கைகள் எதையும் ஏந்தாமல் வெறுமனே காற்றாடும் விழுதாக  அலையும் உணர்வு. ஒரு கணம் குழந்தையின் இன்மையை எண்ணி உள்ளூர ஒரு சொல் மகிழ்ந்து அணைந்தது. நெஞ்சைத் தொட்டுப்பார்த்தாள். அச்சொல் அங்கே இல்லை. ஆனால் அது தோன்றிய உண்மை அங்கேயே நின்றிருந்தது. வெறும் இருள் வடிவம்தான். உருவிலாச் சாறுதான். ஆனாலும்  இருந்தது. 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here