கட்டு மந்திரம்

கட்டு மந்திரம்

கட்டு என்றொரு வசிய முறை இருக்கிறது. சொல்லினால் எழும் மந்திரங்கள் மூலம் ஒன்றைக் கட்டுவது. ஆளையோ, விலங்கையோ, பேயையோ, தெய்வத்தையோ. எழுத்தாளர் என்ற இடமோ, வாசகர் என்ற இடமோ சொற்களினால் அடையப்படும் அன்றாடம் என்பது என்னுடைய புரிதல். செயல் புரிவதில் இருக்கக் கூடிய அடிப்படையான் பயில்வுகள் அன்றாட வாழ்வென்று எய்தும் மட்டும் அவற்றைச் சொல்லிச் சொல்லியே அச்செயலுக்கான மனநிலையையை கட்டி வசம்கொள்ள  வேண்டியிருக்கிறது. இதை எழுதுவதன் நோக்கம் அதுதான். எனக்குரிய செயலாற்றும் மந்திரங்களைச் சொல்முறைப்படுத்திக் கொள்வது. நம்முடைய அகமும், புற உடலும் செயலூக்கத்தோடு இருப்பதற்கு சில விடயங்கள் அடிப்படையானவை. அவற்றை இக்குறிப்பில் ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

முதலாவது `நோக்கு` என்பது. இச்சொல்லை பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் இருந்து எடுத்துக்கொண்டேன். நோக்குதற் காரணம் நோக்கெனப்படுமே (தொல் 413) என்கிறது அந்நூல். செய்யுள் ஒன்றின் கரு, அல்லது நோக்கம் என்ன, எதற்காக அச்செய்யுளோ கவிதையோ சொல்லப்படுகிறது, எவ்வாறு சொல்ல வந்ததை நோக்கிக் குவிந்து செல்கிறது என்பதை செய்யுளுக்குண்டான இலக்கணங்களின் வழியே சென்றடைவதைக் குறிக்கிறது. செயல் புரிவதன் ஊக்கம் குன்றாமல் இருப்பதற்கான வழி, அச்செயலினை ஏன் ஆற்றுகிறோம் என்ற நோக்கை அடைந்திருப்பதுதான். ஏன் வாசிக்கிறீர்கள் என்று கேட்கும் போதும் சரி, ஏன் எழுதுகின்றீர்கள் என்று கேட்கும் போதும் சரி என்ன பதில் எழுகிறது என்பது முக்கியமானது. ஏன் வாசிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு வாசகர் குமாரதேவன் சொன்ன பதில் நண்பர்களிடையே அடிக்கடி சொல்லிக் கொள்வோம்.  நானாக இருப்பதற்கும், பத்தோடு பதினொன்றாக இல்லாமல் இருக்கவும், என்னில் மூழ்காமல் என்னிலிருந்து மீளவும் வாசிப்பு உதவுகின்றது என்ற அவருடைய சொற்களில் உள்ளவற்றையே நோக்கு என்கிறேன். ஒவ்வொருத்தருக்கும் இச் சொற்கள் மாறுபடலாம், ஆனால் நற்செயல் எழுவதற்கான அடிப்படை ஏன் அதைச் செய்கிறோம் என்பதற்கான சொந்த பதிலை  ஒவ்வொருத்தரும் அடைந்திருக்க வேண்டும்.

இரண்டாவது, எந்தச்செயலும் செயலூக்கம் பெறுவதற்கு அது கொடுக்கக் கூடிய மெய்யான மகிழ்ச்சியை அடைய வேண்டும். மெய்யான மகிழ்ச்சி என்பதை நான் கேளிக்கைகளோ, உலகியல் இன்பங்களோ தரக்கூடிய புற உலகம் சார்ந்த, உடலின்பம் சார்ந்தவற்றைச் சொல்லவில்லை. மனிதர்கள் அடைந்தவற்றிலே உடலும் புற உலகமுமே எல்லையுள்ளவை, விரைந்து சலிப்பவை. எவ்வளவு பெரிய கேளிக்கையையும் நாட்கணக்கில் அலுத்துப்போய்விடும். எவ்வளவு பெரிய களியாட்டும் சலித்துச் சாம்பரென ஆகிவிடும். செயலின் மகிழ்வென்பது, அன்றாடம் அடையும் சிறு சிறு நிறைவுகள், வெற்றிகளால் சேர்த்து உருவாக்கப்படுவது. நிரந்தரமான மகிழ்வென்பது, புறவுலகு சார்ந்தது அல்ல. அது அக உலகம் நிறைந்து, விரிந்து, ஒளிகொள்ளும் போதே நிகழ்கிறது. மானுடர்களின் அக உலகை சலிப்பின்றி நிரப்பக் கூடியது அறிதலும், யோகமும் என்பதே நம்முடைய அறிவியக்க மரபுகளின் முக்கியமான தரிசனங்கள்.

ஓர் எழுத்தாளராகவும் வாசகராகவும் என்னுடைய அன்றாடத்தின் நிறைவை நோக்கிச் செல்வதில் எனக்கு இரண்டு பிரச்சினைகள் இருந்தன. ஒன்று செய்யத் தொடங்கிய அருஞ்செயலை முழுமையாகச் செய்யாமல் விடுவது. இரண்டாவது தொடர்ச்சியாக ஒன்றைச் செய்யாமலிருப்பது. இவை எல்லாச் சராசரி மனிதர்களுக்கும் இருக்கக் கூடிய பிரச்சினைகள்தான். நோக்கும் நிறைவும் சரியாக புரிந்துகொள்ளப் படாமலோ, அனுபவப்படுத்தப் படாமலோ இருப்பதனால் அன்றாடமும், சரி வாழ்வும் சரி முழுநிறைவை அடையாமல், உலகியல் துயரத்தோடும், ஏக்கங்களோடும் வாழ்வையை `ஓட்டிச்` சென்று மடிவது. இதற்கு ஏன் இலக்கியம் என்று வீணாய் போக வேண்டும்? பேசாமல் உலகியல் வாழ்வையே முழுமையாக வாழ்ந்துவிட்டுப் போகலாம். ஆனால் என்ன பிரச்சினையென்றால். உலகியலோ, ஆன்மீகமோ, இலக்கியமோ, செயலின் ஊக்கமும், தொடர்ச்சியுமே வெற்றி தரும்.

எனக்கு, வாசிப்பு எழுத்து இவ்விரண்டும், முன்பொரு ஆர்வமாகவும் , தகவல்களைச் சேகரித்து மூளை என்னும் அலுமாரியை நிரப்பிக் கொள்வதனால் கிடைக்கும், உலகியல் இன்பங்களும், புகழும், மமதையுமாக கழிந்த நாட்களை எப்பொழுதும் நினைவில் வைத்திருக்கிறேன். இந்த மகத்தான வாழ்வை எவ்வளவு சிறுமை செய்திருக்கிறோம் என்பதை நாம் ஒவ்வொருத்தரும் நினைவில் வைத்துக்கொள்வது அதை எவ்வளவு மேம்படுத்திக் கொண்டுள்ளோம் என்பதை பார்க்க உதவக்கூடியது.

சொன்னால், என்னுடைய நண்பர்களே நம்பமாட்டாத அளவில் கடந்த காலத்தில் பாதியில், இடையில் வைத்திருந்த புத்தகங்களின் பெரிய பட்டியல் ஒன்றை மீண்டும் வாசித்து முடிக்க வேண்டியிருந்தது. இன்னும் சில முக்கியமான புத்தகங்கள் இருக்கின்றன. ஏன் அப்படிச் செய்தேன் என்பதற்குரிய முதன்மையான பதில்கள் நோக்கின்மையும், நிறைவின்மையும்தான். இத்தனைக்கும் எங்களுடைய நண்பர்களிடையே அதிகமாக எழுதுபவன், வாசிப்பவன் என்ற புகழ்ச் சொல்வேறு இருந்ததை எண்ணி சிரித்துக்கொள்கிறேன். ஒப்பீட்டளவில் அது ஒருவகையில் உண்மையாக இருந்ததுதான். ஆனால் அது சூடிக்கொள்ளக் கூடிய ஒன்றல்ல. எனென்றால் என்னை விட செயலூக்கம் கொண்ட நண்பர் கிரிசாந் அப்பொழுது கவிதையும், சமூக செயற்பாட்டிலும் மட்டும் இருந்தார். இன்றைக்கு அவரும் கதை, நாவல் என்று புனைவிற்கு வந்த பிறகு அவருடைய செயலூக்கத்தோடு மோதி மோதி என்னை அன்றாடம் ஊக்கப்படுத்திக் கொள்கிறேன். செயலூக்கமும், அதனோடு பின்னியெழுந்த உரையாடல்களும் இல்லாத நண்பர்களை விலக்கிக் கொள்ளுங்கள். அல்லது அவர்களுடைய இடத்தை வகுத்தளியுங்கள். நான் மிகக் கறாராகவே இதை என் இளையவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். வாய்ச்சவடால் பேர்வழிகளுக்கு இலக்கியத்தில் மட்டுமல்ல எந்த அறிவுச்செயற்பாட்டிலும் இடம் கொடுக்கத் தேவையில்லை. நீங்கள் செயல் புரியத்தொடங்கினாலே அவர்கள் ஒவ்வாமையோடு விலகிச் செல்வார்கள். எளிய வஞ்சங்களை அடைவார்கள். அவர்களால் செயல்களின் முன்னால் நிற்க முடியாது சருகென மறைவர்.

மற்றபடி அன்றாடம் செயலூக்கத்தோடும், உழைப்போடும் இருக்கக் கூடிய நண்பர்களோடும், ஆசிரியர்களோடும் உடனிருங்கள். நம்முடைய சுற்றம் என்பது அதுவே. இப்பொழுது கூட தொடர்ந்து செய்வதை முழுமையாக அடையவில்லை என்ற மனக்குறையினால்தான் இதை எழுதி வைப்போம் என்று நினைத்தேன். அன்றாடம் இவ்வளவு வாசிக்க வேண்டும், இவ்வளவு எழுத வேண்டும், என்பதில் வாசிப்பதில் கிடைக்கும் நிறைவை எழுதுவதில் அடைய வேண்டியிருக்கிறது. `எழுது அதுவே அதன் இரகசியம்` என்ற சுந்தர ராமசாமியின் சொற்கள் பிடரியில் அறைந்துகொண்டே இருக்கின்றது. வாசிக்காமல் விட்ட இடைவெளிகள் நிரம்ப வேண்டும் என்ற தயக்கம் ஒருவகையில் இருளென எழுகிறது. அதனால் தீவிரமாக வாசிக்கிறேன். ஆனால் எல்லா ஆசிரியர்களும் என்னுடைய சக செயலூக்கம் கொண்ட நண்பர்களும் வாசிப்போ அறிவோ என்றைக்கும் முழுதடைய முடியாது, தயக்கமில்லாமல் அன்றாடம் எழுதச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நானுமதை அறிவேன். என்னுடைய உலகியல் அன்றாடங்களில் இருந்து முடிந்தவரை என்னை விலக்கிக் கொண்டே இருக்கிறேன். குடும்பத்திற்குரிய என்னுடைய பாத்திரத்தை முழு நிறைவாக ஆற்றுவதனால், அவர்களுடைய துணையும் அன்றாடத்தில் முக்கியமானது. உங்களுடைய செயலுக்கும் நோக்கிற்கும் தொந்தரவோ, எதிர்மறையுணர்வோ இல்லாத அன்னையையும், தகப்பனையும், சகோதரர்களையும் மனைவியையும், பிள்ளைகளையும் பெற்றவர்கள் பேறுள்ளோர். குறிப்பாக உங்களுடைய துணை தனக்கென்று சொந்தக் கனவோடும், உங்களைப்போல் செயலூக்கத்தோடும் இருப்பது இன்னும் நற்பேறு. சொல்லப்போனால் இதைப் பேறு என்பதைவிட நாமே உருவாக்கிக் கொள்ளக் கூடியதும்தான். வீட்டில் அம்மாவைத் தவிர யாரும் வாசிப்பதில்லை. ஆனால் நான் எழுதுவதையும் வாசிப்பதையும் பொழுது போக்காக செய்வதில்லை, என் முழு விழைவும் அதில்தான் இருக்கிறது என்பதை அனைவரும் நன்கறிந்தவர்கள்.

நிறைவை அளிக்கக் கூடிய நோக்கிற்கு உங்களுடைய ஊக்கத்தையும் குவிப்பையும் அளிக்கும் போது அன்றாடம் ஆற்ற வேண்டிய தொழில் சார்ந்த, குடும்பம் சார்ந்த வேலைகள் கூட ஒழுங்குபடுத்தப்படுவதையும், அதில் கூட முழு ஈடுபாட்டுடன் இருக்க முடிவதையும் எந்த விதத்திலும் அது என்னுடைய நோக்கையும் நிறைவையும் பாதிக்கவில்லை என்பதை கடந்த நாட்களில் முழுவதுமாக உணர்கிறேன். சொல்லப்போனால் இன்னும் கச்சிதமும், வேகமுமாக என்னுடைய பிற பணிகளை ஆற்றி முடிக்கிறேன். முழு நிறைவாக குடும்பத்தோடு பிணைந்திருக்கிறேன். சமூக வலைத்தளங்களில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரிவதில்லை. அன்றாட அரசியலில் கிஞ்சித்தும் அக்கறையில்லை. ஏனென்றால் இப்படித்தான் நடக்கும் என்பது நன்கு தெரிந்த அன்றாடம் அது. அதில் எழுத்தாளருக்கு எந்த அக்கறையும் இருக்கத் தேவையில்லை. எழுத்தாளர் வாழ்வது பண்பாட்டில். அதில் யாவும் உண்டு.

குடும்பத்தைப் பொறுத்தவரையில் அதற்கான நேரம் என்பது நம் நோக்கின், பயணத்தின் முக்கிய பகுதியாகும். எனக்கு, எப்பொழுது விதைப்பது, எப்பொழுது உரமிடுவது எப்பொழுது அறுப்பது தொடங்கி அம்மாவின் கிளினிக், சக்கரை அளவு வரை அன்றாடம் நினைவில் இருக்கிறது. அவர்களுக்குத் தேவையானதைச் செய்ய முடிகிறது. குடும்பத்தோடு பிணைந்திருப்பதே ஊரோடும் பண்பாட்டோடும், அசலாகப் பிணைந்திருக்கும் வழி. கிராம வாழ்க்கையில் குடும்பத்தோடு பிணைந்திருப்பது, என்பது ஓர் எழுத்தாளரைப் பொறுத்தவரையில் அன்றாட அறிதலின் பெருவழிகளில் ஒன்று. பண்பாட்டில் வாழ்வதற்கு குடும்பமே அடிப்படையான அலகும் கூட. (இதை விரிவாக இன்னொரு குறிப்பில் எழுதலாம்)

செயலூக்கத்தோடு இருக்கும் போது, குடும்பத்தினருக்கு என்னுடைய நோக்கும் நிறைவும் எப்படியோ புரிகிறது. அவர்களுக்கான என் நேரத்தைக் கூட எனக்குத் தருகிறார்கள். உதவுகிறார்கள். உங்களுடைய ஓர் எழுத்தாளனுக்கு குடும்பமோ காதலோ அளிக்கக் கூடிய மிகப்பெரிய பரிசு `நேரம்` தான். செயல் புரிவதற்கு அகத்திலே நோக்கும், ஊக்கமும் எவ்வளவு தேவையோ புறத்திலே மிக முக்கியமானது நேரம். ஒவ்வொரு அருங்கணத்தின் பொலிவையும் செயலிலும் நோக்கிலும் நிறைந்து செல்லும் போதே உணர முடிகிறது. முக்கியமாக மிகச் சிறு செயல் கூட முழுவதும் செய்து முடிக்கும், போது அன்றாடத்தில் கிடைக்கும் சிறு சிறு நிறைவும் தயங்காமல் சூடிக்கொள்ள வேண்டியவை. செயல் புரிபவர்கள் மந்திரம் போல அச்செயலையும் நோக்கையும் எண்ணி எண்ணிச் சொல்லிக்கொள்ள வேண்டும். இந்திய மரபில் கீதா முகூர்த்தம் என்றொரு சொல்முறையுண்டு. என்னுடைய கட்டுமந்திரச் சொற்களில் முக்கியமானது கீதா முகூர்த்தம்.ஆசிரியர் ஜெ அடிக்கடி இச்சொல்லைப் பாவிப்பார். கீதையை வாசிப்பதற்கு உரிய தருணத்தை கீதையே உருவாக்கும் என்ற நம்பிக்கை மரபில் உண்டு. அதையே ‘கீதா முகூர்த்தம்’ என்கிறார்கள். மகாபாரதத்தில் அருச்சுனனே `கர்ம யோகி` எனப்படுபவன். அதனால்தான் அவனுக்கு கீதை சொல்லப்பட்டது. ஒவ்வொரு மொழிதலின் பின்பும் `ஆகவே செயல்புரிக` என்று இளையயாதவன் ஒவ்வொரு முறையும் சொல்லும் போதும் அகம் சிலிர்க்கும். செயலெழும் ஒவ்வொரு கணமும் கீதா மூகூர்த்தமே. நோக்கும் ஊக்கமும் உள்ள ஒவ்வொருவரையும் அச்செயலே சென்று தொட்டெழுப்பும். இதுவே எங்களுடைய கீதாமுகூர்த்தம்.

நவீன யுகத்தில்; நம்முடைய சமகலாலப் பண்பாட்டில் முப்பதுகளின் இளமை என்பது அறிதலின் காலம், ஓர் எழுத்தாளனாக மணிக்கணக்காக இருந்து வாசிக்கவும் எழுதவும், தேவைப்படும் போது பயணங்கள் போகவும், உடல் இப்பொழுது முழுதும் ஒத்துழைக்கும். பெரிதாக உடற்பயிற்சியோ யோகப்பயிற்சிகளோ இல்லாமலே மனமும் உடலும் குவிந்து செயல்புரியும். ஓர் கிரகஸ்தனுக்கோ கிரகஸ்திக்கோ குழந்தை பெற்றுக்கொள்வதற்கு இது எவ்வளவு உகந்த காலம் என்று சராசரி மனிதர்கள் சொல்லிக்கொண்டே இருக்கும் காலம். பத்தில் ஒன்பது பேர் நிகழ்த்தும் பெரும் சாதனை என்பதாலும், அவர்களளவில் அது எவ்வளவு முக்கியம் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது இல்லையா? அதைப்போல்தான் எழுத்தாளருக்கு, வாசகருக்கு, வாழ்வை அர்த்தப் படுத்திக்கொள்ள திருவுளம் கொள்ளும் அனைவருக்கும் தங்களுடைய நோக்கையும் நிறைவையும், அறிதலையும் பெருக்கிக் கொள்வதற்கு உகந்த காலம். கேள்விகளும் விவாதங்களும் பெருகிவரும் காலம். என்னுடைய இளையவர்களிடம் பேசும் போது இதையே சொல்வதுண்டு. ஒருவகையில் எங்கே இவற்றைச் சொன்னாலும், எழுதினாலும் அது எனக்கு நானே மீண்டும் இடித்துரைத்துக் கொண்டே இருப்பதுதான். மந்திரம் என்பது சொல்லிச் சொல்லி நிகழ்த்தும் செயலின் மொழி வடிவம்தானே. இவற்றையெல்லாம் தோன்றும் போதெல்லாம் முறைப்படுத்தி எழுதி வைத்துக்கொள்வேன், எனக்கு டயரி எழுதும் பழக்கம் கிடையாது. இக்குறிப்புகளை எழுதி வைக்கும் போது  என்னைத் அவதானிக்கவும் தொகுத்தும் கொள்வதுமான நிறைவு எழுகிறது. மேலும் யாருக்காவது பயன்படுமென்றால் கூடுதல் மகிழ்ச்சி.

ஊருணி நீர் நிறைந்தற்றே !

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here