மதமும் நாட்டுப்புறத்தெய்வங்களும்

மரபுரிமைகளை அறிதல், ஆவணப்படுத்தல், அவற்றைக்கொண்டாடுதல் என்ற அடிப்படைகளைக் கொண்ட ‘மரபுரிமை நடையான’ தொன்ம யாத்திரை ஐந்து நடைகளை நிறைவு செய்து ஆறாவது நடைக்குத் தயாராகியுள்ளது. இவ்விடத்தில் மரபுரிமைகளைத் தெரிவு செய்யும் போது அவற்றின் மீது செல்வாக்குடன் இருக்கக் கூடிய இனவாதம், சாதி, மதச்சார்பு, ஆணாதிக்கம் போன்ற பிற்போக்குதன்மைகளை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்ற தெளிவு படுத்தல் அவசியமாகவிருக்கின்றது. ஏற்கனவே தேவாலயங்களின் நகரம் என்ற தொன்மயாத்திரை ஊர்காவற்றுறையின் காலனிய காலத்து தேவாலயங்களை நோக்கியதாயும், ஆறாவது தொன்ம யாத்திரை நாட்டுப்புறவியலுடன் இணைந்திருக்கும் ‘மழைத்தெய்வமான’ கண்ணகையின் தொன்மத்தன்மை, வரலாறு, வழிபாட்டுமுறைகள், சடங்குகள், பற்றி அறிவதற்கும் ஆவணப்படுத்தவும் கொண்டாடவும் செய்கிறது.

அந்தவகையில் மரபுரிமைகளை வாசிக்கும் போது அதனுடன் பங்கெடுக்கும் மேற்சொன்ன சமூக அசமத்துவங்கள் அவ் அசமத்துவங்களின் பிற்போக்குதன்மை, அவற்றின் சமூக வகிபங்கு, அவற்றின்  அபாயங்கள், என அவை கொண்டுள்ள அரசியல் சூழமைவைப் புரிந்துகொள்வது  மிக அவசியமானது. அதற்கு மரபுரிமைகளை அணுகும் போது அமைப்பார்ந்து கொண்டுள்ள மேம்பட்ட பார்வையும் கொள்கையும் புரிதலுக்கான வழிகளாக இருக்கின்றன. அவ்வகையில்  தொன்ம யாத்திரை ‘மதச்சார்பின்மை’ யை தன்னுடைய மதங்கள், வழிபாடுகள், சடங்குகள், கலைகள் போன்றவை தொடர்பான அணுகுமுறையாக முன்நிறுத்துகின்றதுடன் சமத்துவத்துக்கும் சுயமரியாதைக்கும் எதிரானதாக நிலவும் ஒடுக்குமுறைகளைக் இனங்காணுவதும் அவை தொழிற்படும் பொறிமுறைகளைக் கண்டறிவதும், அத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல்கொடுத்தல், அவை பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல் ஆகியவற்றையும் ஒடுக்கக் கூடியதும், பிறபண்பாடுகளை அழித்து தன்னுடைய ஒருமைத்தன்மையை திணிக்கக் கூடியதும், சாதி முதலானவற்றைப் பாதுகாக்கக் கூடியதும், வன்முறைகளை, மேம்பட்ட அறிவினை நிராகரிக்கக் கூடியதுமான மத அமைப்புகளை, நிறுவனத்தன்மைகளைத் தொன்ம யாத்திரை நிராகரிப்பதுடன், அவற்றை வாசிக்கும் போது மேற்சொன்ன ஒடுக்குமுறைகள் எவ்வாறு அதனுள் விரவியிருக்கின்றன என்பதையும் அதனை எதிர்க்கவோ மாற்றவோ வேண்டியதன் அல்லது இல்லாதொழிக்க வேண்டியதன் தர்க்கத்தையும் மனம் கொள்ள வேண்டும் என்பது தொன்ம யாத்திரையின் நிலைப்பாடு.

உதாரணமாக யாழ்ப்பாணத்தில், தேர், வாகனங்களைச் செய்யக்கூடிய ‘ஆசாரிமார்’ தங்களுடைய  தொழில் அறிவையும் கலைத்தன்மைகளையும் தங்களுடைய சாதிக்கு வெளியே கற்றுத்தர விரும்புவதில்லை. அதற்காக அவர்கள், விஸ்வகர்ம மரபில் பிறக்கும் போதே பூநூலுடன் பிறந்ததாக நம்பப்படும் ‘பஞ்ச கம்மாளர்களின்’ உடலே வாகனமொன்றின் விழிமடல் திறக்கும் போது வெளிப்படக்கூடிய சக்தியை தாங்கும் திறனும் தகுதியும் கொண்டது என்கின்றனர்” இவ்விடத்தில் அவர்கள் செய்கின்ற வேலை கருதி மேற்படி ‘சாதிய’ வாதத்தையோ  மத நம்பிக்கையையோ தொன்ம யாத்திரை நிராகரிப்பதுடன் ‘கலையோ தொழிலோ எல்லோருக்குமானது’ அதை எல்லோரும் கற்கவும் ஆற்றுகை செய்யவும் வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டே அக்கலைகளை அணுக வேண்டும். ஆவணப்படுத்தும் போது இவ்விடயங்களைக் குறிப்பிட்டு  சாதித்தன்மையை எதிர்த்தே தன்னுடைய கருத்தியலைப் பதியவும் நடைமுறைக்கு எடுத்துச்செல்லவுமான வாதங்களையும் நிலைப்பாடுகளையும் எடுக்க வேண்டும் என்பதே தொன்ம யாத்திரையின் ’அரசியல்’ நிலைப்பாடாகும்.

வைதீக மதங்கள் சாதியைப்பாதுகாப்பதும், சுரண்டுவதும், சமஸ்கிருதமயமாக்கல் போன்ற பண்பாட்டு ஆதிக்கங்களால் நிகழ்த்தப்படும் பிற பண்பாடுகளையும் வாழ்க்கை முறையையும் அழிக்கும் செயலை தொன்ம யாத்திரை கடுமையாக எதிர்க்க கூடியது. அது போல எல்லா மத அமைப்புகள் நிறுவனங்கள் கொண்டுள்ள பிற்போக்கையும் எதிர்ப்பதுடன் மக்களைச் சிந்திக்கப்பழக்குதல் மூலம் ‘நம்பிக்கைகள், பொதுப்புத்தி’ என்பவற்றினைக் கொண்டு பகுத்தறிவுத்தன்மையோ சிந்தனையோ அற்ற விடயங்களைப் பரப்புதல் முதலான ‘மதங்களின்’ செயற்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டையே தொன்ம யாத்திரை கொண்டிருக்கிறது. இவ்விடத்தில் வைதீக மதங்கள்  அல்லது பெருங்கடவுளர்களின் மதங்கள் என்று சொல்லப்படுபவை நாட்டுப்புற வழிபாட்டு முறைகளையும் பண்பாடுகளையும் அக்கிரமித்து ‘இந்து’ அடையாளத்தினுள் எடுத்துக்கொள்வதன் ஆபத்தை முன்னிட்டே இங்கே உரையாடலைத் தொடங்க நினைக்கிறோம். தொன்ம யாத்திரை ‘கண்ணகை’ என்ற நாட்டுப்புறவியல் மரபினை வாசிக்கும் தொடக்கப் புள்ளியாகவும் இவ்விடயமே இருக்கின்றது.

2

பொதுவாக மார்க்சியம், பெரியார் போன்ற சமூகத்தின் முற்போக்கான கோட்பாடுகளை, சமூக வேலைகளைப் பேசக்கூடியவர்கள், வாழ்க்கை முறையாகக் கொண்டாடக்கூடியவர்கள். நாட்டுப்புறத்தேய்வ வழிபாடுகளையோ, அவர்தம் திருவிழாக்கள், பலியிடல் சடங்குகளையோ எதிர்ப்பதில்லை என்பது ஒரு குற்றச்சாட்டாக வைக்கப்படுகின்றது. குறிப்பாக அவர்கள் வைதீக, நிறுவன மத அமைப்புக்களை கடுமையாக எதிர்க்கின்றனர் என்ற ஆதங்கம் அத்தரப்புக்களிடம் இருந்து மேலெழுகிறது. தவிர நாட்டுப்புறத்தெய்வங்கள் பெரும்பாலும் ‘சாதித்தெய்வங்கள் அல்லவா’ அவற்றை எந்த அடிப்படையில் எதிர்கொள்கிறீர்கள் என்றும் கேட்கப்படுகிறது. இதன் படி இங்கே பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். 

நாட்டுப்புறத்தெய்வங்களும் அவர்தம் பண்பாடும் ஏன் முக்கியமானவை?

பலியிடல், சாதித் தெய்வம் என்பவற்றை நாட்டுப்புறவியலில் எவ்வகையில் பார்க்கிறோம்?

இவ்விரு கேள்விகளையும் முன் வைத்தே இவ்வுரையாடலைத் தொடர நினைக்கிறேன்.நாட்டுப்புற வழிபாட்டு முறைகளை ஆதரிக்க கூடிய நிலைப்பாட்டை எடுக்கக் கூடிய முதலாவது இடம் அவை தொல் சமய மரபின் வழிவந்தவை என்பதும் இயற்கை நிலையில் இருந்து உருவான கூட்டு நம்பிக்கைகளில் மக்கள் பங்களிப்பு உள்ளவை என்பதும், அடிப்படை இயல்பிலேயே வன்முறையோ, ஆதிக்க மனநிலையோ குறைவானவை என்பதாகும். தமிழ்ச்சமூகத்தைப் பொறுத்த வரையில் அதன் செவ்வியல் மரபை  விதப்பவர்கள், சான்றாதாரங்களின் அடிப்படையில் இச்சமூகம் சமயச்சார்பற்ற தன்மையுடனேயே தன்னுடைய இயற்கையான வாழ்வு முறையைக் கொண்டது என்கிறார்கள். அவ் இயற்கையான பகிர்ந்துண்டு வாழ்ந்த வாழ்வின் தொடர்ச்சியாகவே நாட்டுப்புறவியல் வழிபடுதல் முறைகளும் நம்பிக்கைகளும் காணப்படுகின்றன என்கிறார்கள் மானிடவியலாளர்கள். குறித்த தெய்வங்களும் அவைதம் தொன்மங்களும் ‘இயற்கைமீதான’ அச்சத்தினால் இயற்கையைப் போலச்செய்தவை என்பதும் அவை இயற்கை முன் வாழ்க்கையை நிறுத்துதலின்  ஒன்று திரட்டப்பட்ட வடிவங்களாகும். மரம், நதி, காடு, மலை, நிலம் என்று இயற்கை வழிபாடு, குலக்குறித்தன்மை என்பன பற்றி நாம் விரிவாக அறிந்துகொள்ள வேண்டும். பின்னாளில் வந்த சமண பெளத்த நெறிகள் இவ் இயற்கை வழிபாடுகளை எடுத்துக்கொண்டு தமது தத்துவ வாழ்வின் ஆற்றலைச் செறிவூட்டின. இவையெல்லாம் நாட்டுப்புற நம்பிக்கைகளை  முதலாகக் கொண்டு அறியக்கூடிய, உரையாடக்கூடிய விரிந்த பரப்புகள்.

ஈழத்தில் இயக்கர், நாகர் போன்ற தொல்குடிகள் மேற்கொண்ட இயற்கை வழிபாட்டின் தொடர்ச்சியாக இன்றுள்ள தாய்த்தெய்வ, தந்தைத்தேய்வ வழிபாடுகள் இருக்கின்றன. மேலும் ஒடுக்க கூடிய அதிகாரத்தைப்பெற்ற  தந்தை வழிச்சமூகத்தையும், ஒடுக்கப்படுகின்ற தாய்வழிச்சமூகத்தின் இயல்புகளையும்  வாசித்தறிவதற்கான மானிடவியல், தொன்மவியல் , வரலாற்றியல் தகவல் தரும் வெளிகளாகவும் நாட்டுப்புறத்தெய்வ நம்பிக்கைகள் இருக்கின்றன. ஆரிய – வைதீக மதங்களும் அவற்றின் நிறுவன மயப்பட்ட சாதிய, வர்க்க ஒழுங்குகளால் பிரதிட்டை செய்யப்பட்ட கடவுளர்களும் மதங்களும் சுதேச பண்பாடுகளின் தொன்மங்கள், வரலாறுகள் மீது ஏற்படுத்திய கருத்தியல், நடைமுறை ஆதிக்கத்தை மீறி  சொந்த நிலத்தின் கடந்த காலத்தை வாசிக்கவும் அவற்றைப் புரிந்துகொண்டு ஆவணமாக்கவும் நாட்டுப்புறவியல் மரபுகள் இன்றியமையாதவை. அவற்றிடம் இயல்பிலேயே இருக்க கூடிய ஒடுக்காத தன்மையும் எளிமையும் இயற்கை வாழ்வின் மரபும் ஆதிக்க சக்தியான நிறுவன மதங்களின் ‘இந்து’ அடையாளத்தினுள்  மூழ்கிப்போவது என்பது மோசமானது. இதனாலேயே நாட்டுப்புறவியலை வைதீகப்பண்பாடோ ஆரியப்பண்பாடோ அவர்தம் மதங்களோ எடுத்துக் கொள்வதற்கு அனுமதிக்க இயலாது.

நாட்டுப்புறத்தெய்வ நடைமுறைகள் பெரும்பாலும் சாதித்தெய்வங்களாக இருக்கின்றன என்ற குற்றச்சாட்டை எடுத்துக்கொள்வோம். இக்குற்றச்சாட்டானது ,நாட்டுப்புறவியலில் சில தெய்வங்கள் குறித்த சாதிக்குரிய தெய்வங்களாக உள்ளன. அதாவது அத்தெய்வங்கள் உருவாகி வந்த தொன்மங்கள் வழியே சாதிக்குரிய  உரித்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக ’குலதெய்வ’ அகத்தன்மை கொண்டவை. உதாரணமாக கண்ணகை (செட்டிப்பெண்), அண்ணமார் (சலவைத்தொழிளார்களுடைய தெய்வம்)போன்றவை சாதிக்குரிய தெய்வங்கள் என்பது உண்மைதான். ஆனால் இங்கே இரண்டு விடயங்களைப் பார்க்க வேண்டும். ’குடி’, ’திணை’ பண்பாடுகளை ஆரம்பத்தில் கொண்டிருந்த சமூகத்தினுள் சாதியப்பாகுபாட்டை யார் ஏற்படுத்தினார்கள். யார் அதைத்திணித்தார்கள் என்பதும், ஒடுக்கப்பட்ட மக்களிடையே சாதியப்பாகுபாட்டைத் திணித்த ஆரியப்பண்பாடு ஒடுக்கப்படுபவர்களின் வழிபாடுகளை ’சாதி தெய்வம்’ என்று சொல்வது எந்த வகையில் அறமுள்ளது? அப்படிப்பார்த்தால், வைதீக மதங்களும் அவர்தம் தெய்வங்களுமே அசலான சாதித்தெய்வங்கள். இங்கே சாதிக்குழுமப் படுத்தப்பட்ட சமூகங்கள் தங்களுக்கான வழிபாட்டு முறைகளைக் கைக்கொள்ளும்போது அவற்றை குற்றம் சுமத்த வேண்டும் என்பதற்காக அவற்றைச் சாதித்தெய்வம் என்பது அயோக்கியத்தனமில்லாமல் வேறேன்ன? 

மேலும் சாதிய அடையாளம் சுமத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் வழிபாட்டிடங்கள் பிற சாதியினருக்காக மூடப்படவோ, கயிறு கட்டி விடப்படுவதோ இல்லை. இந்த வழிபாட்டிடத்திற்கு இவர்கள் போக முடியாது இவர்கள் போக முடியும் என்ற எந்தக் கட்டுப்பாடாவது வைதீக தாக்கமில்லாத நாட்டுப்புற தெய்வங்களின் வழிபாட்டு இடங்களிலோ முறைகளிலோ இருக்கின்றதா? நாட்டுப்புற தெய்வங்களின் வெளி என்பது சாதிய ஒடுக்குமுறைக்கு வெளியே இயங்கக் கூடியது என்பது முக்கியமானது.

இங்கே சாதியை அழித்தொழிக்கும் செயற்பாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களோடும் பேச வேண்டியிருக்கிறது. அவர்கள் பெருந்தெய்வக் கோயில்களுக்குள், அல்லது தங்களுடைய தனியுரித்துக் கோயில்களுக்குள் ஆதிக்க சாதியினர் அனுமதிக்காத போது தங்களுடைய ‘சாதிக்குரிய’ கோயில்களை உருவாக்கும் நடைமுறைக்குச் சென்று சேர்கிறார்கள். தங்களின் பொருளாதார எழுச்சி மூலம் தமக்குரிய வழிபாட்டு இடத்தை அமைப்பது ‘சாதிய மேன்நிலையாக்கம்’ என்று குறிப்பிடப்படுகின்றது. இது சமூகத்தில் உள்ள சாதிய மனநிலையை அழிக்காது அதைத்தொடர்ந்து பாதுகாக்கவே செய்யும். இங்கே சமூக மாற்றம் என்பது சாதியை இல்லாதொழித்தலே தவிர சாதிக் குழுக்களைப் பலப்படுத்தல் அல்ல.

சமஸ்கிருதவயமாக்கலின் (ஆகமப்படுத்தல்) மூலம் ஈழத்தில் பல நாட்டுப்புறத்தெய்வங்கள் பெயர் உட்பட பண்பாட்டு நடைமுறைகள் , வழக்கங்கள், எல்லாம் மாற்றப்பட்டு நிறுவன மதத்தினால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கண்ணகை கோயில்கள் அம்மன் – சிவன் கோயில்களாகவும், வைரவர் கோயில்கள் ஆகம – கந்தன் கோயில்களாகவும் மாற்றப்பட்டு சடங்கியல் அதிகாரம் பிராமணருக்கும், சைவைக்குருக்களுக்கும் ,ஆலயத்தின் பரிபாலன அதிகாரம் ஒடுக்கும் ஆதிக்க சாதியினரிடமும் கையளிக்கப்பட்டுள்ளன. கண்ணகையை  ‘செட்டிப்பெண்’ என்று சாதியால் விழித்த ஆறுமுக நாவலர் போன்றோர் இவ் சமஸ்கிருத வயமாக்கலிலும் நாட்டுப்புறப்பண்பாட்டையும் நிலத்தின் அறிவையும் அழிப்பதில் முன் நின்று உழைத்தார்கள். உழைக்கிறார்கள்.

குருதிப்பலி – தாவரப்பலி ஆகிய இரண்டு பலி முறைகளையும் கொண்டவை நாட்டுப்புறத்தெய்வங்கள். இங்கே ‘உயிர்கொலையாக’ அவற்றைச்சித்தரிப்பதன் மூலம் நாட்டுப்புற வழிபாட்டு முறைகளை அழிக்கும் பணிகளைத் தந்திரமாக முன்னெடுக்கின்றன வைதீக மதங்களும் அவற்றின் அமைப்புகளும். பலியிடலும் அதனுடைய கூட்டுச்சடங்குகளும் மக்களின் உணவுப்பண்பாடு, உற்பத்தி என்பவற்றுடன் இணைந்திருப்பவை என்பது அடிப்படையாகும். பலியும், மடையும், பொங்கலிடலும் எளிய மக்களின் பகிர்ந்துண்ணுதல் பண்பாடுடையவை. எப்போதும் சமபந்தி போசனங்களாகவே இருப்பவை. அவை புனிதங்களாலோ பாகுபடுத்தலாலோ வேறுபடுவதில்லை. தெய்வமும் மனிதனும் ஒரே உணவை எச்சில் தொட்டு பகிர்ந்துண்ணும் சடங்குகளைக் கொண்டவை. தெய்வத்திற்குப்படைத்ததை எடுத்து உண்ணும் பண்பாடு தொல்சமய வளர்ச்சிப்படிநிலையின் முக்கிய நிகழ்வு என்கின்றனர் மானிடவியல் அறிஞர்கள்.

பலியிடல் போன்றவற்றை ‘உயிர்க்கருணை’யை மேற்கோள் காட்டி தந்திரமாக தடைசெய்ய முற்படும் நிறுவன மத அமைப்புகளின் பின்னால் உள்ள அரசியலினாலேயே அவற்றை நேரடியாக எதிர்க்க வேண்டியுள்ளது. அவை ஒரு பண்பாட்டுக்கூறை அழித்து தங்களுடையதைத் திணிக்க வேண்டும் என்பதன் நோக்கத்திலேயே இதைச்செய்கின்றன. உதாரணமாக யாழ்ப்பாணம் கவுணாவத்தையின் பலியிடலை தடை செய்யக்கோரி வழக்குத்தொடுத்த சைவமகாசபை என்ற அமைப்பு தொடர்ச்சியாக ‘இந்து அடையாளங்களை’ ஏற்படுத்த, திருட்டு லிங்கங்களை இரவோடு இரவாக நிறுவவும், மத வாதத்தைப் பரப்பவும் செய்கிறது. சிவசேனை போன்ற அமைப்புகள் மாட்டிறச்சிக்கடையை தடை செய்ய வேண்டும் என்று ஒடுக்கக் கூடிய பெளத்த பேரினவாத ‘பிக்குகளுடன்’ இணைந்து உண்ணாவிரதம் இருக்கின்றன. இங்கே இருக்கக் கூடியது மாட்டிறச்சிக்கடைகளை வைத்திருக்க கூடிய, உண்ணக்கூடிய இஸ்லாமியர்களையும், கத்தோலிக்கர்களையும் விரட்டுவது என்பது படவர்த்தனமானது.

சாதி முறைகளை, நிறுவன ஒழுங்கமைவை, சடங்கியல் அதிகாரத்தை, பிற பண்பாடுகளைச்சுரண்டுவதை அழித்தொழிப்பதை வழிநடத்தக்கூடிய  புனித நூல், புனித பூசை, புனித இடம்  போன்ற மையங்களை உருவாக்கிக் கொண்டவை. நாட்டுப்புற தெய்வங்கள் இவை ஒன்றும் இல்லாத, இயற்கையான மரத்தடியோ வயல்கரையோ குளத்தடியிலோ அமர்ந்துகொள்கின்றன, அவற்றின் திருவிழாக்களே இதற்குப் பெரிய சான்றாகும்.  பிராமணர்களை தேரேற்றி இழுக்கும், ஒடுக்கப்பட்டமக்களை அசுரர்களாகச் சித்தரித்து ’ஹதம்’ செய்யும் தன்மை நாட்டுப்புறத்தெய்வங்களின் வழிபாட்டு முறைகளிலோ திருவிழாக்களிலோ இருப்பதில்லை, அவை இயற்கை தரக்கூடிய அச்சங்களுக்கு எதிரானதை ‘கலை வடிவங்களாக  நிகழ்த்தக் கூடியன. இன்றைக்குள்ள பெரும்பாலான நாட்டார் கலைகள் அதாவது நிலத்தினது பண்பாட்டு மரபுரித்தினது கலைகளில் ஏராளம் நாட்டார் தெய்வ வழிபாடுகளுடன் இணைந்தே இருக்கின்றன. ஈழத்துல் வசந்தன் கூத்து , வசந்தன் அடி, குளிர்த்திப்பாட்டு, கொட்டுப்பறை, உடுக்கை, காத்தான் கூத்து, வேட்டை உள்ளிட்ட ஏராளம் ஆற்றுகை வடிவங்கள் நாட்டுப்புற தெய்வ வழிபாட்டுக்குரியவையாக இருக்கின்றன. அதைப்போல பள்ளு, அம்மானை, அகவல் போன்ற வடிவங்களும் நாட்டுப்புற வழிபாட்டுடன் இணைந்துள்ளமை சிறப்பானவொன்றாகும். குறிசொல்லும் பெண் ‘அகவல்’ பாட்டின் மூலம் குறி சொல்லும் மரபு தமிழ்ச்சமூகத்தின் நாட்டுப்புறவியலில் முக்கியமான இலக்கிய, இசைத்தல் வடிவம்.

நாட்டுப்புறத்தெய்வங்களின் சடங்கியல் தன்மையில் இருக்கக் கூடிய சடங்கியல் அதிகாரம் என்பது எளியமக்களினோடு பின்னியிருப்பதே தவிர அதனிடம் ஏற்றத்தாழ்வு இருப்பதில்லை. பிராமணர்கள், சைவக்குருக்கள் கொண்டுள்ள சாதியில் இருந்து வரக்கூடிய ஒடுக்கக் கூடிய செருக்காக வெளிப்படக்கூடிய சடங்கியல் அதிகாரம் நாட்டுப்புறத்தெய்வங்களின் சடங்குகளைச் செய்யக்கூடிய பூசாரிகளுக்கோ, கப்புறாளை மாருக்கோ கிடைப்பதில்லை. குறித்த பூசையோ, சடங்கோ நடை பெறும்போது மட்டும் பொறுப்பும் அதிகாரமும் அவ்வுடல்களால் எடுத்துக்கொள்ளப்படுவதுடன். ‘சாமி இறங்கியதும்’ அவ்வுடல்கள் வழமைக்கு மீள்கின்றன. நிறுவனமயமற்ற அதனுடைய தன்மை இதற்கான அடிப்படையை வழங்குகிறது.

தவிர தமிழ்ச்சமூகத்தில் ‘பெண்களும்’ பூசாரிகளாக இருக்கக் கூடிய தன்மை நாட்டுப்புறத்தெய்வங்களின் வெளியிலேயே நடைபெற முடியும் தொல்சமய காலம் தொட்டே பெண் பூசாரிகள் சடங்கியல் உரிமையைப்பெறக்கூடிய  இடம் நாட்டார் பண்பாட்டில் இருந்து வருகின்றது. 

நாட்டார் தெய்வங்கள் கைலாசம் , இந்திரலோகம் அல்லது சுவர்க்க நரகத்தில் இருந்து இறக்கப்பட்ட புனிதத்தன்மையினை திருவுடலாகக் கொள்வதில்லை, அவை பெரும்பாலும் மக்களில் இருந்து தெய்வமானவை. தவிர எல்லோரும் ‘தொட்டு’ வழிபடக்கூடியவை. காவல் தெய்வங்களாக, மழைக்குரிய, வெம்மையைத்தவிர்க்கும், பிணியைத்தீர்க்கும் நம்பிக்கைகளின் குறியீட்டு வடிவங்களையும்  நாட்டார் தெய்வ வழிபாட்டு மரபுகள் வெளிப்படுத்தக்கூடியன. அவற்றோடு நாட்டார் வழிபாட்டு முறைகளினால் கடத்தப்படும் வரலாற்றுத்தகவல்கள். அக்கிரமிக்க கூடிய பண்பாடுகளில் இருந்து சுதேச மக்களின் வரலாற்றைப் பாதுகாத்துக் கடத்தி வந்துள்ளன.

நாட்டார் வழிபாட்டு முறைகளுக்குள் அதிகமாகக் புழங்கக்கூடிய மக்கள் ‘மதச்சார்பின்மையற்ற’ தன்மைகளை அதிகம் வெளிப்படுத்துவர். குறிப்பாக கத்தோலிக்க மத நிறுவனத்திற்கு வெளியே ‘அந்தோனியார், மாதா வழிபாடு’ தமிழ்நாடு, ஈழத்தில் நாட்டுப்புறத்தன்மைகளையும் அம்மனநிலையையும் கொண்டவை. நாட்டுப்புற வழிபாட்டில் புழங்கும் மக்கள் கண்ணகை போல மாதாவையும், வைரவரைப்போல அந்தோனியாரையும் வணங்கக்கூடியவர்கள். பரஸ்பரம் கொண்டாட்டங்களிலும் திருவிழாக்களிலும் கலந்துகொள்ளக்கூடியவர்கள். ஈழத்தில் வல்வெட்டித்துறை முத்துமாரி கோயிலை மையம் கொண்டு நடக்கும் ‘இந்திரவிழா’வும் , கச்சதீவு அந்தோனியார் திருவிழாவும், மடுமாதா தேவாலய திருவிழாவும் இத்தகைய பல்தன்மை கொண்ட மீசயம நிகழ்வுகள். இவ் வழிபாட்டு இடங்களுக்கும் நாட்டுப்புறப்பண்பாட்டுக்கும் நெருக்கமான தொடர்புகள் இருப்பதை வரலாற்று, மானிடவியல் தகவல்கள் உறுதிப்படுத்தவும் செய்கின்றன.

  3

சாதிய நிலைமைகளைப் பாதுகாத்தல், அகமணத்தை நடைமுறைப்படுத்தல், சமஸ்கிருதவயமாக்கல் (ஆகம விதிப்படி), சடங்கியல் மற்றும் நிர்வாகா அதிகாரம், நிலவுடமை, சொத்துடமை, பொதுப்புத்தியினால் செய்யப்படும் கருத்தியல் மேலாதிக்கம், முதாலாளித்துவத்துடன் மேற்கொண்ட பொருளாதார ஒப்பந்தங்கள் , சுரண்டல், உன்னதமயமாக்கல், புனிதத்தன்மையை கற்பிதப்படுத்தல், சாதிய மேன்நிலையாக்கம் போன்றவாற்றை ஊக்குவித்தல், இறக்குமதி செய்யப்பட்ட கலைகள் கைவினைகளில் பரப்புதல், என ஒடுக்க கூடிய நிறுவன மதங்கள் பல்வேறு வழிமுறைகள் மூலம் நாட்டுப்புறவியல் வழிபாட்டு மரபுகளை கபளீகரம் செய்யவும் மாற்றவும், அழித்தொழிக்கவும் செய்கின்றன. இங்கே பாதிக்கப்படும், ஒடுக்கப்படும் மக்களின் வாழ்வின் பக்கமே நாம் நிற்க வேண்டியிருக்கும். நாம் பேசக்கூடிய முற்போக்கு என்பது நேரடியாக தத்துவ விவாதத்திற்கும் வாழ்விற்கும் மக்களை கூட்டிவர நினைப்பதும் பெரிய வன்முறையாகும் மக்கள் ஒடுக்கப்படும் போது, எளியவர்களின் வாழ்க்கை சுரண்டப்படும் போது நாம் அவர்களுடன் நிற்கவேண்டும். அவர்களுடைய கொண்டாட்டத்திலும் அவர்களுடைய சிந்திக்கின்ற வெளியிலும் சகமனிதர்களாக இருக்க வேண்டும். அவர்களைச் சிந்திக்கவும் அரசியல் மயப்படவும் பழக்க வேண்டும், கற்கவும் கற்பிக்கவுமான வெளிகளை விரித்துச்செல்ல வேண்டும், ஒன்று சேர்க்க வேண்டும். 

மரபுரிமைகளை, வரலாற்றை, அடையாளங்களின் ஊடாக நாம் கடந்தகாலத்தின் பெருமைகளைப் பேசுவதற்காக கூடவில்லை, நாம்  கடந்த காலத்தை விசாரிக்கவும் சமகாலத்தினால் அதுகொண்டுவந்து சேர்த்த கருத்துக்களையும் நடைமுறையையும் முன்னேற்றமான சிந்தனைகளினால் எதிர்கொள்ளவும் ஒன்று சேர்கிறோம். நம்முடைய காலத்தில் அமைப்புகளின் பணிகளில் இதுவும் ஒன்றாகும் மரபுரிமைகளை ஒடுக்குமுறைக்கு எதிரான கருவிகளாக மாற்ற வேண்டும், சிந்திப்பதற்கான வெளிகளாக மாற்றி ஆவணப்படுத்த வேண்டும். 

(தொன்ம யாத்திரை 06 இற்காக அங்கணாமக்கடவையில் ஆற்றிய  உரையின் எழுத்து வடிவம்)

Recent Comments

  • https://israelnightclub.com
    August 20, 2023 - 6:55 am · Reply

    The very next time I read a blog, I hope that it wont disappoint me as much as this one. I mean, Yes, it was my choice to read through, however I genuinely believed you would have something interesting to talk about. All I hear is a bunch of crying about something you could fix if you werent too busy searching for attention.

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’