சாதி மற்றும் ஏனையை ஒடுக்குமுறைகளின் நிலப்படம்

இலங்கையின் பழைய துறைமுகங்களில் ஒன்றாகவும், பண்பாடும் மரபுகளும் செறிந்த இடமாகவும், கடந்த முப்பதாண்டுகளில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த ஊராகவும் அறியப்படும் வல்வெட்டித்துறைக்கு அருகில் ‘வல்வெட்டி’ என்றொரு கிராமம் இருக்கின்றது. குறித்த துறைமுக நகரம் பற்றிக் கிடைக்கின்ற தகவல்களின்படி வல்வெட்டியின் துறைமுகமாதலால் ‘வல்வெட்டித்துறை’ என்று அழைக்கப்பட்டிருக்கின்றது. இங்கே வல்வெட்டி என்ற கிராமம் ஆதிக்க சாதி வெள்ளாளர்களைச் செறிவாகக் கொண்டது. வல்வெட்டித்துறையானது ’கரையார்’ சமூகத்தை செறிவாகக் கொண்டது. இன்றும் வல்வெட்டியில் இருக்க கூடிய மக்கள் தங்களின் நினைவிலும் பயன்பாட்டிலும் வல்வெட்டியையும் வல்வெட்டித்துறையையும் இரண்டாகப் பிரித்துக்கொண்டுள்ளனர். பொருளாதார அடிப்படையில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கரையார் சமூகத்தினர் யாழ்ப்பாணத்தில் கருத்தியல் மேலாதிக்கம் கொண்ட வெள்ளாளர் அளவிற்கு பொருளாதார மற்றும் வாழ்க்கை முறையில் ஸ்திரம் கொண்டவர்கள். வெள்ளாளர்கள் அதிகாரம் செலுத்தக்கூடிய, ஒடுக்க கூடிய இடைநிலைச் சாதியினருக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நேர்ந்த நேருகின்ற பொருளாதார நலிவு, சொத்துரிமை, உற்பத்திக்கருவிகள் என்பன மறுக்கப்படாத சமூகமாகவே யாழ்ப்பாணத்து கரையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருந்துவருகின்றனர். அவர்கள் குடிமைகள், அடிமைகள் போன்ற பிரிப்புக்குள்ளும் நடைமுறைகளுக்குள்ளும் ஒடுக்கப்பட்டதான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் சாதியம் கைப்பற்றிக்கொண்ட கருத்தியல் மேலதிக்கம் கரையார் என்ற சமூகத்தை ஒதுக்கியது. வெள்ளாள ஆதிக்க சாதிய மனநிலைப்பாட்டைப் பொறுத்த வரை கரையாரும் ‘கீழ் சாதி’ என்பதான நடைமுறையே இருக்கின்றது. வல்வெட்டி ஆதிக்கசாதி மனநிலை தங்களுடைய துறைமுக நகரத்தை வெட்டி விட்டு மொழியிலே ‘நாங்கள் வல்வெட்டி அவை வல்வெட்டித்துறை’ என்பதை பிரித்தே புழங்குகின்றனர். இது போன்று யாழ்ப்பாணம் முழுவதும் வெவ்வேறு அளவுகளில் சாதிய நிலப்படம் ஒன்று உருவமாகவும், அருவமாகவும் இருந்து வருகின்றது.

இயற்கை மற்றும் சமூகச்சூழமைப்பில் மனிதர்கள் இயங்கும் முறையும் அவர்களின் நடத்தை முறையும்தான் உளவியலின் அடிப்படை என்கிறார் பக்தின். மனிதர்களிடம் காணப்படக்கூடிய பிற்போக்கான, வன்முறை நிறைந்த நம்பிக்கைகள், செயல்களைப் பாதுகாப்பதற்காக அவர்கள் தமது சூழலையும், இயற்கையையும் மாற்றியமைக்க தலைப்படுகின்றனர். அவ்வாறு அமையப்பெறும் பெளதீகச் சூழல் அவர்களின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கிறது, கருத்தியலை வழிநடத்துகின்றது. தாங்கள் நம்புகின்ற செயல்படுத்துகின்ற நம்பிக்கைகளை, வாழ்க்கை முறையை பாதுகாக்க புற உலகம் அதனைப் புலப்படுத்திக்காட்டத்தக்கதாக மாற வேண்டும் என்பது அவர்களுடைய எண்ணம். அவர்கள் தங்களுடைய பிற்போக்கான மரபுகளையும் அடையாளங்களையும் புறச்சூழலை வடிவமைப்பதன் ஊடாக பயில்வில் வைத்திருக்க தலைப்படுகின்றனர். நம்முடைய சமூகச்சூழமைவில் ஆரோக்கியமானவற்றைக் காட்டிலும் பிற்போக்கு தனங்களுக்கான பெளதீகச் சூழலே உருவாகி தொடர்ந்தும் சமூக அமைப்பில் ஏற்றத்தாழ்வை வழிநடத்துகின்றது. ஆகவே மனித சமூகத்தின் கூட்டு மன அமைப்பினைப் புரிந்துகொள்வதற்கும் வாழ்க்கை முறையைப் புரிந்துகொள்வதற்கும் அவர்கள் இயற்கை, பெளதீகச் சூழலை எவ்வாறு உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை நுண்மையாகக் காண்பது முக்கியமானது.
நம்முடைய சமூகச் சூழலைப் பொறுத்தவரையில் மதம், சாதி, வர்க்கம் இவை மூன்றும் பெளதீகச்சூழலை அமைப்பதில் செல்வாக்குச் செலுத்துகின்றன. சமகாலத்தைப் பொறுத்தவரையுல் மதமும் வர்க்கமும் வெளிப்படையாகவே தங்களுடைய பெளதீகச் சூழலை வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக கிராமம் ஒன்றைக் கடந்து செல்லும் போது அது எந்த மதத்தைப் பின்பற்றும் மக்கள் அதிகமாக இருக்கிறார்கள். எங்கே இருக்கிறார்கள் என்பதை கிராமத்தின் – புறச்சூழலில் காணப்படும், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் , தோரணங்கள், சொரூபங்கள், எழுதப்பட்ட மொழி, போன்றவற்றின் மூலம் காண்கிறோம். அதே போல வீடுகள், கட்டடங்கள், வணிக தாபங்கள், போன்றவற்றின் மூலம் வர்க்க வேற்றுமைகளைத் சரியாக அவதானிக்கலாம். ஆனால் சமகாலத்தில் சாதிய வேற்றுமையின் நிலப்படத்தினை, நிலக்காட்சியினை இற்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தரிசித்த வடிவத்தில் புறச்சூழலில் காணமுடியாது. சனநாயகமும், சமத்துவம் பற்றிய எண்ணங்களும் சிந்தனைகளும், உலகளாவிய மாற்றங்களும் சாதி பிற்போக்குதனமானது என்பதனை கொண்டு சேர்த்த பிறகு, பொது வெளியில் சாதியை வெளிப்படுத்துவது, பெளதீக அடையாளங்களை நேரடியாக அமைப்பது சமகாலத்தில் சாத்தியம் குறைவானது. ஆனால் மரபார்ந்து அமைக்கப்பட்ட பெளதீகச் சூழலில் சாதிய வேர்களைப் பாதுகாக்க கூடிய நிலப்படத்தை ஆதிக்க சாதிகள் இன்னுமும் பாதுகாத்தே வருகின்றனர் என்பதனை நுண்மையாக பெளதீகச் சூழலின் கருத்துப்புலப்பாட்டிற்கு அண்மையில் சென்றே அவதானிக்க வேண்டியுள்ளது.

  • ஒரு சமூகத்தின் நிலப்படமோ, நிலக்காட்சியோ இரண்டு அடிப்படைகளைக் கொண்டு உருவாகுவதோடு சந்ததிகளுக்கு கையளிக்கவும்படுகின்றது.
  • பொருள், பெளதீக இருப்பு, சொத்து என்பவற்றினால் உருவாக்கிக்கொள்ளுதலும் அதற்கான அர்த்தம் கற்பிக்கப்படுதலும்,

மொழி, நினைவு, கதைகள் மூலம் உருவாக்கப்படும் நிலக்காட்சியும் அதன் அர்த்தப்பாடும். சாதிய ஒடுக்குமுறையின் வரலாற்றில் யாழ்பாணம் என்றைக்கும் பெரிய உதாரணமாக இருக்கிறது. அதனுடைய நகரச்சூழலும் சரி கிராமச்சூழலும் சரி சமய, வர்க்க பின்னணிகளைத் துணையாகக் கொண்டு ஆதிக்க சாதியைச் சேர்ந்தோரால் உருவாக்கப்பட்ட நிலப்படத்தையும் அதன் நினைவையும் கொண்டே உருவாகி வந்துள்ளது. ஒடுக்கப்பட்ட மக்கள் அடையக்கூடிய விடுதலையில் அவர்கள் தங்களுடைய உற்பத்தியினை மேற்கொள்வதற்கான உற்பத்திக் கருவிகளைப் பெறுதலும், நிலத்தினைப் பெறுதலும் முக்கியமான பெரிய காலடியாகும். சாதிய நலன்களையும், அதிகாரப் படிநிலைகளையும் கொண்டு அமைக்கப்பட்ட மரபார்ந்த கிராம அமைப்புக்களை இன்றும் யாழ்ப்பாணம் எங்கும் காணலாம். வெள்ளாளர்கள் தங்களுடைய நிலங்களையும், வீட்டையும், கோயில்களையும் , குடியிருப்பையும் மையத்திலோ, இயற்கை, உற்பத்தி வளங்கள் காணப்படும் நிலங்களிலோ அமைத்துக்கொள்ளவோ பேணிவரவோ செய்தனர். குறிப்பாக வயல்கள், குளங்கள், பிரதான வீதிகள், குறிப்பாக தெய்வங்கள் உலாவரக்கூடிய வீதிகளை தங்களுடைய குடியிருப்புக்களை மையம் கொண்டு அமைத்திருக்கின்றனர். மேலும் நகரங்களை உருவாக்கும் போது வணிக நிறுவனங்கள், பொதுக்கட்டடங்கள் என்பவற்றையும் தங்களுடைய மேலாளுகைக்கும் புழங்குகைக்கும் ஏற்றால் போல் அமைத்தனர். மையமும் பயனும் உள்ள பெளதீகச்சூழலை சுவீகரித்துக்கொண்டு அடுத்த சுற்றில் தங்களுடைய தொட்டாட்டு வேலைகளைச் செய்ய கூடிய, இடைநிலைச்சாதியினருக்குரிய பெளதீகச்சூழலை அனுமதித்தனர், அதன் பின்னர் கிராம எல்லைகளில் தூரமாக ‘தீண்டாமையும்’ ஆதிக்க மக்களுக்காக அதிக உடல் உழைப்பை வழங்கத்தக்கதுமான ஒடுக்கப்பட்ட மக்களை விளிம்புகளில் தங்களுடைய நலன்களை நிறைவேற்றும் சூழலில் அமைத்தனர். ஒரு கிராமத்தின் நிலப்படத்தை விரித்து இந்த அதிகார ஒழுங்கை இலகுவாகக் குறித்துக்காட்ட இயலும். அத்துடன் இச்சாதிய நிலப்படத்தின் ஒவ்வொரு அலகும் எவ்வாறு அமைக்கப்பட்டு இருக்கின்றன என்ற விவரணையை நாம் வைக்கும் போதே அதை மாற்றியமைக்க முடியும். மேலும் இச் சாதிய நிலப்படத்தை போரும் அதற்கு பின்னரான வாழ்க்கையும் மாற்றியிருக்கிறது. அடித்தள மக்களின் போராட்டங்களும் சமூகப் பங்குபற்றுகையும் பொருளாதார வளர்ச்சியும் மாற்றியிருக்கின்றன. ஆனால் இந்நிலப்படம் பெளதீகமாக மாறத்தயாராகவிருந்தாலும் அது ஆதிக்க மனங்களின் கூட்டு அகத்தில் இருந்து மாறியிருக்கிறதா என்பதே பெளதீகத்தையும் தீர்மானிக்கின்றது

கோவில்

சாதிய ஒழுங்குகளைக் கொண்ட நிலப்படமொன்றில் கோவில் எவ்வாறு அமைகின்றது என்பதனைப் பார்க்க வேண்டும். யாழ்ப்பாணத்தைப் பொறுத்த வரையில் ஷண்மதப்பாகுபாடுகள் இல்லாத சைவத் – தமிழ்ப்பண்பாடு கருத்தியல் மேலாண்மையோடு இருக்கின்றது, இச்சைவத்தமிழ்ப்பண்பாட்டின் மேலாண்மை என்பது வெள்ளாளர்களின் கருத்தியல் அதிகார மேலாண்மையால் தீர்மானிக்கப்படுவதாக உள்ளது. ஆதிக்க சாதிகளுடைய பெரும்பாலான கோவில்கள் இன்று ஆகம கோவில்களே ஆகும். ஏனெனில் கண்ணகை முதலான நாட்டார் தெய்வங்களும் சமஸ்கிருதமயப்படுத்தப்பட்டு , மேன்நிலையாக்கப்பட்டு ஆகமக் கோவில்களாக மாற்றப்பட்டுள்ளன. மாரி, காளி போன்ற நாட்டார் தெய்வங்களும் வெள்ளாளர், பஞ்ச கம்மாளர் போன்ற சாதிகளிடம் இருக்கும் போது ஆகம கோவிலாக மாற்றப்பட்டு, பிராமணீய அல்லது சிவப்பிராமணீய சடங்கியல் சூழலினால் பராமரிக்கப்படுகின்றது. ஆனாலும் இந்தியச்சூழலைப் போலல்லாமல் பிராமணர்களோ சிவப்பிராமணர்களோ அதிகார மற்ற, வெள்ளாளர்களைத் தங்கி வாழும் சாதியக் குழுமமாகவே இருந்துவருகின்றனர். அவர்களுடைய வீடுகளும் நிலமும் வருவாயும் கோயிலை அண்டியே இருக்கின்றன. பிராமணர்கள் வேளாளர்களிடம் இருந்தே சடங்கியல் அதிகாரத்தைப் பெறுகின்றனர். கோவிலும் அதன் நிலமும் சொத்தும் வெள்ளாளருடைய ஆதிக்கத்திலேயே உள்ளன. எனவே நிலப்படத்தில் அமையக்கூடிய ஆதிக்க சாதியினரின் கோவில்கள் ஆதிக்க கோவில்களாகவே உள்ளன. அறுபதுகளில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆலய நுழைவுப்போராட்டங்களின்’ பின்னரும் இன்னும் நூற்றுக்கணக்கான கோவில்களுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்ல முடியாது என்ற நடைமுறையே யாழ்ப்பாணத்தில் இன்னும் நிலவுகின்றது. கோயிலின் நிலவுரு , கட்டட வெளி என்பன ஒடுக்கப்பட்ட மக்களை நிறுத்துமிடங்களை, அவர்கள் ‘’தொண்டு’’ செய்யும் இடங்களை மரபார்ந்து பேணிக்கொண்டே இருக்கும்படி அமைந்துள்ளது. ஆதிக்க சாதியினரின் பரிபாலனத்தில் இருக்க கூடிய கோவில் ஒன்றில் தெய்வங்கள் வீதியுலா வரும் போதும்சரி, தேர் வடம் பிடித்தோடும் போதும் சரி ஒடுக்கப்பட்ட மக்களின் வாசல்களைக் கடப்பதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் வாசல்களுக்கு சூரபத்மனும் அவன் தம்பிகளுமே சென்றுவருகின்றனர். தவிர மழை தவறிய நாட்களில் இழுத்துச்செல்லப்படும் கொடும்பாவி என்ற பெரிய உருவ பொம்மை ஒப்பாரிகளை வாங்குவதற்காக ஒடுக்கப்பட்ட மக்களின் தெருக்களுக்குச் சென்றன.

மேலும் ஒடுக்கப்பட்ட மக்களின் தெய்வங்கள் அல்லது ‘சாதித் தெய்வங்கள்’ என்று ஆதிக்க சாதியினரால் ஒதுக்கப்படக்கூடிய அண்ணமார், விருமர், காளி, வைரவர் போன்ற தெய்வங்கள் கிராமங்களின் ஒடுக்கபப்ட்ட மக்கள் வாழும் பகுதிகளிலேயே செறிவாக இருக்கின்றன. அவை வைதீக மரபின் , சடங்கின் தாக்கங்களை பெற்றாலும் அவை ‘மக்களின் தெய்வமாக’ பலியிடல் போன்ற சமூகச்சடங்குகளோடும் திருவிழாக்களோடும் சமூகப் பங்குபற்றலில் இருக்கின்றன. அவை குறித்த சாதிய குழுமங்களுக்கு சொந்தமானவையாக இருந்தாலும், பிறர் வழிபட முடியாதவையாகவோ, சாதியத்தைப் பேணக்கூடிய எந்த நிலைமைகளைக் கொண்டவையாகவோ முக்கியமாக சமூக அதிகாரத்திலோ இருப்பவை அல்ல.
பெரிய ஆகம, ஆதிக்க சாதியக் கோவில்களுக்குள் அனுமதிக்கப்படாமல் காலம் காலமாக இருந்து வந்த தாழ்த்தப்பட்ட மக்கள் சமகாலத்தில் அடைந்த நிலம், உற்பத்தி கருவிகள், போன்றவற்றினால், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் புழங்க கூடிய புலம்பெயர்ந்து சென்றவர்களின் உழைப்பினால் கிடைக்கும் பொருளாதாரத்தினால் புதிய நடுத்தர வர்கமாக மாறும் போது தங்களுக்கென தனியான புதிய ‘வைதீகக்’ கோவிலை அமைத்துக்கொள்கின்றனர். இதனை இங்கே சாதிய ஏற்றத்தாழ்வோ, மறுக்கப்பட்ட உரிமையோ பிரச்சினை தீர்க்கப்படாமல் வெறும் வழிபாட்டு இடமொன்றை அமைத்துக் கொள்வது ஒரு பெரிய சமூக ஆபத்தாகும். ஏனெனில் ஒடுக்கப்படும் மக்கள் கோவில் ஒன்றை அமைப்பதாலோ புதிய மத்திய தர வர்க்கமாக மாறுவதாலோ அவர்களுடைய சமூக அங்கீகாரமோ, ஒடுக்குமுறையோ வடிவ மாற்றம் அடையுமே தவிர மாற்றத்தையோ மனநிலையையோ மாற்றிக்கொள்வதில்லை. அது ஏற்றத்தாழ்வாகவே நிலைக்கின்றது. ஏனெனில் ஆதிக்க சமூகம் பிற ஒடுக்கு முறைகளைப் போலல்லாமல் அது பொருளையும், மதத்தையும் காட்டிலும் சாதியத்தையே அதிகம் வழிபடுகின்றது. அது எதோ ஒரு வகையில் ஒடுக்கவும் பிறரை வெறுக்கவுமே பயிற்றுகின்றது. இங்கே ஒடுக்கப்படுபவர்கள் ஒடுக்குகின்றவர்களிடம் இருந்து விலகி புதிய வர்கமாக மாறுவதாலோ கோவில் ஒன்றை அமைப்பதினாலோ மட்டும் ஒடுக்கப்படுவதில் இருந்து விடுபடப்போவதில்லை. எல்லாத்தரப்பும் ஜனநாயக மயப்படுவதும் சமத்துவத்தை அடைவதுமே விடுதலையாகும்.
மேலும், வைதீக மதங்கள் சாதியை நியாயப்படுத்தக் கூடிய சித்தாந்தங்களைக் கொண்டவை. அவற்றினால் என்றைக்குமே சமத்துவத்தை சென்றடைய முடியாது. இங்கே சாதியை உருவாக்குவது, பாதுகாப்பதில் மத நிறுவங்களே வரலாறு எங்கும் பெரிய பாத்திரமொன்றை எடுத்துக்கொண்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே சாதிய நிலவுருவில் அதனுடைய கருத்தியலின் பின்னணியில் எழக்கூடிய எல்லா கோவில்களும் சாதியைப் பாதுகாக்கும் கரங்களே.

யாழ்ப்பாணத்தில் காணப்பட கூடிய கிறிஸ்தவ கிராமக்களிலும் அங்குள்ள சாதிய நடைமுறைகளின்படியே தேவாலயங்கள் இயங்குகின்றன. கடுமையாக இல்லாவிட்டாலும் ’கோவில் பங்கு’ என்பது சாதியப்பங்குகளாக இருப்பதையும் சாதியத் தேவாலயங்களையும் இன்னும் காணலாம். சாதியம் போன்றவற்றை சிந்தாந்த அடிப்படையில் கொண்டிருக்காத கிறிஸ்தவம் ஆரம்பத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடமே பரவியது, பின்னர் ஆதிக்க சாதியினரை மதம்மாற்றிய பிறகும் ‘வேதக்கார வெள்ளாளர்களும்’ உருவாகிக்கொண்டனர். முன்பு சொன்னதைப்போல நம்முடைய சமூகத்தில் மதத்தை விடவும், வர்க்கத்தை விடவும் சாதியே அதிவழிபாட்டுக்குரியதாயுள்ளது. அது நிலப்படத்தில் கோவில்கள் எங்கே எழ வேண்டும் எப்படி நிகழ வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன.

நிலம் / காணி

நிலத்தினை வாழிடமாக மாற்றும் போது அல்லது வாழ்க்கைக்கான புழக்க இடமாக மாற்றும்போது காணியாக மாறுகின்றது. அது வீடுகளோ, பொதுக்கட்டடங்களோ அமைப்பதற்கு பயன்படுகின்றது. மேலும் நிலமானது பண்படுத்தப்பட்டு விவசாயத்திற்கு மாறும் போது விளைநிலமாகவும் உற்பத்திக்கருவிகள் புழங்ககூடிய நிலமாகவும் மாறுகின்றது. இவை அனைத்தும் இணைந்து நிலமானது சொத்தின் பெரிய மூலத்தை உருவாக்கிக் கொள்கின்றன. நிலத்திலே உரிமை, முகாமை, உழைப்பு மூன்றையும் அதிகாரம் பிரிக்கின்றது. நிலவுடமையாளர்கள் மேல்தட்டு வர்க்கத்தினராக இருந்தனர். கருவிகள் அவர்களுக்கு சொந்தமாய் இருந்தன. உற்பத்தி அவர்களின் உரித்தாய் இருந்தது. இன்றைக்கு ஒடுக்கப்படும் மக்களுக்கு நிலம் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரும்போதும் இன்னும் ஆதிக்க வர்க்கமே நிலவுடமையைச் செறிவாகக் கொண்டுள்ளது. குறிப்பாக ஈழத்திலும் சரி, தமிழ் நாட்டிலும் சரி நிலவுடமையாளர்களாக இருக்கும் ஒடுக்கும் சாதியக் குழுமமாக வெள்ளாளர்கள்(முதலியார், பிள்ளைமார்) காணப்படுகின்றனர். அவர்கள் காணி நிலத்திலும் சரி, விளைநிலத்திலும்சரி அவற்றைப் பகிர்வதில் ‘அக நிலையான’’ கட்டுப்பாடுகளையே கொண்டுள்ளனர். அரசியல் சட்டப்படி சொந்த நிலத்தை யாரும் விற்கவோ வாங்கவோ உரித்துடையவர்கள். ஆனால் வெள்ளாளர்களுடைய சமூக அமைப்பு, நிலவுரு அமைப்பு தனித்தனியாக உரித்துள்ள நிலங்களை சாதிய நிலமைகளைக் கொண்டு அரூபமான தளைகளினால் பிணைத்துக்கொண்டுள்ளது. வெள்ளாள குறிச்சிகளில், குடிகளில், கிராய்களில் இருக்க கூடிய காணிகளையோ வயல் நிலங்களையோ தாழ்த்தப்பட்ட அல்லது இடைநிலச்சாதிகளுக்கு யாரும் விற்க நினைத்தால் அத்தளைகள் வேகமாக இயங்கி அவற்றை நடைமுறையில் வைத்து தடுக்கின்றன. அச்சுறுத்தவோ, அல்லது அதிக தொகை கொடுத்து வாங்கவோ, திக்கெங்கும் தேடி வெள்ளாளர் ஒருவருக்கு அதனை விற்கவோ ஏற்பாடுகளைச் செய்கின்றன. புலம்பெயர்வு, போரின் பின்னரான பொருளாதார நெருக்கடியினால் வெள்ளாள தனிநபர்களிடம் இருந்து காணிகளை ஒடுக்கப்பட்ட மக்கள் வாங்கும் போது ஊர்களில் ஏற்படக்கூடிய பூசல்கள், பிரச்சினைகளை அவ்வப்போது அவதானிக்கின்றோம். காணிகளைச் சேதப்படுத்துவது, வயல்களைக் கொழுத்துவது, நீர்நிலைகளை நஞ்சாக்குவது, எல்லைகளைப் பிடிப்பது என்று அவை உதிரியாக நிகழ்வதால் உள்ளூர் குடும்பப் பிரச்சினைகளாகவே அவை முடிந்து போகின்றன. ஆனால் அவ் மனநிலை என்பது இன்னும் உள்ளூர ஓடிக்கொண்டே இருக்கின்றது. அயலவர்களை உருவாக்குவதில் உள்ள இந்தச் சாதிய நில அரசியல் சாதியைப் பாதுகாக்கும் ஒரு பெரிய பெளதீக இயல்பாக உள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள பல காணிகள், வயல்கள், குறிச்சிகளுக்கு சாதியப் பெயர் இட்டு அவற்றை நிலைப்படுத்தும் வழக்கம் இருக்கின்றது. எழுமாற்றாக நான்கைந்து கிராமங்களுக்குச் சென்று விசாரித்தால் கூட வெள்ளாள குடிகளின் நிலத்திற்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலத்திற்குமான பெறுமதி பெரியளவில் வித்தியாசப்படும். அது பொன் விளையும் பூமியென்றாலும் அதுங்கே யாரிடம் இருக்கிறது என்பதே அதன் பெறுமானத்தைத் தீர்மானிக்கும் என்பதே நடைமுறை உண்மையாகும்.

பொதுக்கட்டடங்கள்/வீதிகள்/ பாடசாலைகள்

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் பொதுக்கட்டடங்கள் என்பது ஒரு அபத்தமான சொல்லாகவே பார்க்க வேண்டியது. ஏனெனில் யாழ்ப்பாணத்து நிலவுருவில் இருக்கக் கூடிய பொதுக்கட்டடங்கள் சாதிய கட்டங்களாகவே உள்ளன. பாடசாலைகள், சனசமூக நிலையங்கள் மடங்கள் போன்றன சாதிய ஏற்றத்தாழ்வுகளுடனேயே இன்னும் நிலவுகின்றன. குறிப்பாக உள்ளூர் கருத்துருவாக்கத்தை, சமூக இடையீட்டைச் செய்யத்தக்க சிவில் அமைப்பான சனசமூக நிலையங்கள் சாதியச் சனசமூக நிலையங்களாகவே பெரும்பாலும் இருக்கின்றன. அவற்றின் நிர்வாக அதிகாரம் அதனுடைய பயனை ஆதிக்க சாதிய நலன்களுக்களை நோக்கியே திறந்திருக்கிறது என்பதே நடைமுறையாகும். சாதியச்சமூகங்கள் தங்களை, தங்களின் கருத்தியல் அதிகாரத்தை, பொருளாதாரப் பகட்டை, ஒடுக்கும் அடையாளங்களை கூச்சமின்றி வெளிப்படுத்தக்கூடிய சமூக அமைப்பாக சனசமூக நிலையங்களைப் பயன்படுத்துகின்றன. அவை எந்தக்கட்சிகளுக்கு, கட்சியில் யாருக்கும்வாக்களிப்பது என்பதைத் தீர்மானிப்பதிலும் செல்லாவ்வ்க்கு செலுத்துகின்றன.கேளிக்கைகள், பண்பாட்டு நிகழ்வுகள் என்று அவை மேற்கொள்ளும் அனைத்திற்கும் பின்னாலும் சாதிய மனநிலையே இருப்பதை கொஞ்சம் வெளியே நின்று பார்த்தாலே கண்டுபிடித்துவிடலாம். அதேபோல மக்கள் நலதிட்டங்களுக்காக அரசாங்கம் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர்கள் மூலம் சனசமூக நிலையங்களைப் பயன்படுத்தியே ஆலோசனைகளை மேற்கொள்கின்றது. ஏனெனில் சுதந்திரமான சனநாயத்தன்மை வாய்ந்த பண்பாட்டு அமைப்புக்கள் குறைவாக இருக்கும் சூழல் தொடர்ச்சியாக நிலவுவதுடன் அவை சமூக, கருத்தியல் அதிகாரமற்றும் இருப்பதனால் அரசாங்கமும் சரி அரசியல் வாதிகளும் சரி ஆதிக்க சாதிய நிலவுருக்களின் அதிகாரத்தரப்புக்கள் மூலமே மக்களை நோக்கி நலத்திட்டங்களை கொண்டுவருகின்றனர். உதாரணமாக முன்பு சொன்னதைப்போல ஊரின் பிரதான வீதிகளும் சரி அதன் உப வீதிகளும் சரி ஆதிக்க சாதிய காணிகளையே மையத்திலோ நகர வாசலிலோ கொண்டிருக்கும் போது வீதிகள் , மின்சாரம், நீர் போன்றன ஆதிக்க சாதிய மக்களுக்கு உடனே கிடைக்கின்றன. அரசாங்க திணைக்களங்கள், அரசியல் அதிகாரம் எல்லாவற்றிலும் ஆதிக்க சாதிய தரப்புக்களே தீர்மான அதிகாரத்தை வைத்திருக்கும் போது அவர்கள் சாதிய நலன்களை, சாதிய நிலவுருவை உருவாக்குவதிலும் புனரமைப்பதிலுமே அதிக கவனம் செலுத்துவர். யாழ்நகரத்தை எடுத்துக்கொண்டால் அதனுடைய உட்பகுதிகளில் இவ் ஏற்றத்தாழ்வை அப்பட்டமாகக் காண முடியும்.

கல்வி வழங்கக் கூடிய பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சாதியப்பாகுபாடு புரையோடியபடியே கற்றல் செயற்பாடு நடந்து வருகின்றது. யாழ் நகரத்தின் உள்ளேயும் வெளியேயும் இருக்க கூடிய பாடசாலைகள் பலதும் சாதிப்பாடசாலைகளாகவே இருக்கின்றன. எந்தப்பாடசாலைகளில் ஆதிக்க சாதிப்பிள்ளைகள் செறிவாகப் படிக்கிறார்கள் எந்தப்பாடசாலைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளுக்கானது என்பதை யாவரும் நன்கறிவார்கள். ஆறுமுக நாவலரும் சேர் பொன்னம்பலம் இராமநாதனும் காலனிய காலத்தில் பாடசாலைகளில் தாழ்த்தப்பட்ட சாதிப்பிள்ளைகள் படிக்க கூடாதென்று ஒற்றைக்காலில் நின்றதன் சமகாலவடிவமாகத்தான் இன்றைக்கு பாடசாலைகளில் சாதிய மனநிலைகளும் நடைமுறைகளும் நடைமுறைகள் விரவிக் கிடக்கின்றன.

கொஞ்ச நாட்களுக்கு முதல் விதை குழுமத்தின் கதை சொல்லும் நிகழ்வு ஒன்று காட்டுப்புலம் கிராமத்தில் நடைபெற்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் அக்கிராமத்தின் பிள்ளைகள், பெற்றோர், மற்றும் இளைஞர் யுவதிகளைச் சந்தித்த பிறகு எழுதிய குறிப்பை இங்கே பகிரலாம் என்று நினைக்கின்றேன்.

“என்ர மகளிட்ட மூண்டு வெள்ளைச் சீருடையள் இருக்கு, இரண்டு நாளுக்கு ஒண்டு எண்டு பாவிச்சாலும் கிழமைக்கு வடிவா காணும், ஆனால் ஒவ்வொரு நாளும் அவள் அதைத் தோய்க்க வேண்டியிருக்கு. ஒவ்வொரு நாள் காலமையும் பிள்ளை வெள்ளைச் சட்டையோட போறாள், ஆனால் வரும்போது ஊத்தையாகி இருக்கு; அது ஏன் எண்டு நினைக்கிறீங்கள்?”

“பள்ளிக்கூடத்திலை விளையாட்டுப்போட்டி; நான் சைக்கிள்ளை மகளை இறக்கப் போறன். என்னைப் போல மற்றப் பிள்ளையளின்ர பெற்றாரும் அங்க நிக்கினம். அப்ப அதிபர் என்னை கூப்பிடுறார், ‘ஒருக்கா கொடிக்கம்பத்துக்கு கிடங்கு தோண்டி நட்டு விடுறீங்களோ?’ எனக்கு ஒன்றுமில்லை, நான் நடுவேன், ஆனால் மகள் யோசிப்பாள்தானே, ஏன் எல்லாற்ற தகப்பனும் நிக்க என்ரை அப்பாவை மட்டும் கூப்பிட்டு இந்த வேலை செய்யச் சொல்லவேணும் எண்டு.’’

சமூகத்தில் அடிப்படை உரிமையாகக் கிடைக்க வேண்டிய சுயமரியாதை மற்றும் சமத்துவத்தில் இருந்து தள்ளி வைக்கப்படும் ஒடுக்கப்படும் கிராமங்களின் குழந்தைகளுக்கு இழைக்கப்படுகின்ற அடிப்படை உரிமை மீறல்களும் அநீதியும் கல்விமட்டத்தில் அவர்களைப் பாதிக்கக்கூடிய நடைமுறைகளைக் கொண்டிருக்கின்றன. காட்டுப்புலத்தில் உள்ள பாண்டவெட்டை கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகளையும் பெண்களையும் ஆண்களையும் சந்தித்தோம். அவர்களிடம் ‘நீங்கள் அறிந்திருக்கக் கூடிய சமூகப் பிரச்சினைகள் பற்றிச் சொல்லுங்கள்?’ என்று கேட்டோம். தண்ணீர்ப் பிரச்சனை, போக்குவரத்துப் பிரச்சனை, குழந்தைகளுக்கு வீட்டிலும் பாடசாலையிலும் கிடைக்கும் தண்டனைகள், நூலகம் இன்மை, பெண்களுக்குப் பாதுகாப்பில்லை, சண்டை- வாள் வெட்டு, கிராமத்தில் விளையாட மைதானம் இல்லை என்பதான பட்டியலைச் சொன்னார்கள். பிறகு அவர்களிடம் நீங்கள் ஒன்றாகச் சேர்ந்து கிராமத்திற்காக செய்த பொதுச் செயற்பாடு ஒன்றைப் பற்றிச் சொல்லுங்கள் என்று கேட்டோம்? ஊரில் என்ன பிரச்சினையிருக்கிறது, பாடசாலையில் பிள்ளைகளுக்கு என்ன பிரச்சினையிருக்கிறது என்பதையெல்லாம் தனிப்பட்ட பொதுப்புத்தி அபிப்பிராயங்களாக அவர்கள் தெரிந்தே வைத்திருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் ஒன்றிணைந்து, அமைப்பாக தங்களுடைய சமூகப்பிரச்சினைகளைப் பேசுகின்ற, தீர்க்கின்ற மனநிலை எழுவதற்கும் அரசியல்மயப்படுவதற்கும் இடையூறாக அவர்களை ஒடுக்கக் கூடிய பொருளாதாரம், சாதி போன்ற பின்னணிகள் இருந்து வருகின்றன.
சிறுவர்களைப் பொருத்தவரையில் நான்கைந்து தலைமுறைகளாக பாடசாலை இடைவிலகல்கள் அதிகமாக இருப்பதற்கு முதன்மைக்காரணமாக அவர்களின் கிராமத்திற்கு அருகாமையில் உள்ள சுழிபுரம் போன்ற சிறு நகரப் பாடசாலைகளில் காட்டப்படும் சாதிய, வர்க்க ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. இக்குறிப்பின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள தந்தையொருவரின் கூற்றுக்களில் அவருடைய மகளைப் போன்ற ஒடுக்கப்படும் சாதிய சமூகங்களில் இருந்து செல்கின்ற பிள்ளைகளிடம் கூட்டுதல், குப்பை அள்ளுதல் போன்ற வேலைகளைக் கொடுக்கும் சூழ்நிலைகளே நகரப்பாடசாலைகளில் இருக்கின்றன. அதனாலேயே அவருடைய மகள் தினமும் ஊத்தை படிந்த சீருடையுடன் திரும்புகிறார். அதனைப்போல சாதிப் பெயர் சொல்லி ஏசுவது, பிள்ளைகளிடையே ஏற்றத்தாழ்வுகளைக் காட்டுவது என்று பாடசாலைச்சூழல் பிள்ளைகளின் சுயமரியதையையும் அடிப்படை உரிமையையும் மீறும் அநீதியைச் சாதாரணமான மனநிலையாக மாற்றியிருக்கின்றது. சமீபத்தில் சுழிபுரத்தின் பிரபல பாடசாலை ஒன்றில் இருந்து இடை விலகிய மாணவன் ஒருவன் ‘எங்களுக்கு பஸ் இப்ப வாறேல்ல, முதல் வாறது, அண்டைக்குப் பெப்ரவரி 14 ஆம் திகதி நான் பஸ்ஸ விட்டிட்டன். பிந்தீட்டு எண்டு வீட்ட திரும்பி வந்திட்டன். அடுத்த நாள் பள்ளிக்கூடம் போக, பெப்ரவரி 14 கொண்டாட்டிட்டு வந்தனையோ எண்டு கேட்டு சேர் பேசினார், உன்னை வகுப்பு இறக்கி இருக்கிறம் இனி பத்தாம் வகுப்பிலைதான் படிக்கோணும் எண்டார், நான் கெஞ்சிப் பாத்தன், அம்மாவைக் கூட்டிக்கொண்டு போய் கதச்சுப் பார்த்தன் அம்மாவும் கெஞ்சி பாத்தா. அவர் மாட்டன் எண்டு சொல்லிட்டார்’ என்றார். இப்படி அங்கே மூன்று தலைமுறையினர் பாடசாலையில் இருந்து இடைவிலகிய கதைகளைச் சொல்கிறார்கள். அவற்றுக்கு நியாயம் கேட்கப்போனால் தாங்களோ தங்களைச் சார்ந்தவர்களோ பழிவாங்கப்படுவோம் என்ற அச்சத்தையும் வெளிப்படுத்துகிறார்கள்.

ஆக நிலப்படம் இருக்க கூடிய பாடசாலைகள் யாருக்கானவை என்ற ஒரு சாதிய முரண் நிகழ்ந்தபடியேதான் இருக்கிறது. எந்தப்பாட்சாலையிலும் பாடசாலைகளில் எந்தப்பிள்ளையும் சேரலாம், கற்கலாம் என்பது சட்டபூர்வமானதே தவிர நடைமுறைக்குள்ளது என்று சொல்ல முடியவில்லை. முன்பள்ளி ஒன்றை நோக்கிச் செல்லும் ஒரு குழந்தை இரண்டு முன்பள்ளிகளைக் கடந்து சென்று ‘தனக்குரிய’ முன் பள்ளியில் கற்கும் நிலைமை இங்கே இன்னும் நடக்கிறது. குழந்தை தன்னுடைய குழந்தமையில் இருந்தே கடந்து போய் படிக்க வேண்டிய நிலக்காட்சியை தனக்குள் பதித்துக்கொள்கிறது. இந்த அன்றாடம் ஒடுக்கும் காட்சிகளை சாதாரணப்படுத்தி விட்டிருக்கின்றது.

 

நீர் நிலைகள்

பொதுக்கிணறு, குளம் போன்றவற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் நீர் எடுப்பதற்கு இருந்த தடை, சாதிய நடைமுறைகள் அறுபதுகளின் பின்னர் ஏற்பட்ட சாதிய ஒழிப்பு போராட்டங்களால் குறைவடைந்தன. ஆனால் முற்றிலுமாக நீங்கி விட்டது என்று கூறமுடியாது. யாழ்ப்பாணத்தில் இருக்கக் கூடிய கோவில் கேணிகள், விவசாய நிலங்களில் இருக்கக் கூடிய துரவுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றைக்கும் நீரினைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை பல இடங்களில் உள்ளது.

மயானங்கள்

யாழ்ப்பாணத்தில் இன்றுவரை பெரும்பான்மையான மயானங்கள் குறிப்பாக இந்து மயானங்கள் சாதிய மயானங்களாகவே இருக்கின்றன. தாழ்த்தப்பட்ட மக்களின் சடலங்களை எரிப்பதற்கோ கிரிகைகளைச் செய்வதற்கோ ஆதிக்க சாதியனரின் மயானங்களில் அனுமதி கிடையாது. மரணச்சடங்கொன்றில் பறையடிப்பவர்கள் கூட மயானத்தின் வாசல்வரை வந்து பறை வாசித்துவிட்டு திரும்பிச் செல்வதை இப்போதும் வழமையாக காணலாம். சமீபத்தில் நடைபெற்ற புத்தூர் கலைமதி மயானப்பிரச்சினையும் அதற்கான சமூக பண்பாட்டு அமைப்புக்களின் போராட்டமும் மயானங்களின் அரசியல் பற்றிய சமகாலத்தை விளங்கிக்கொள்ளக் கூடிய ஓர் உதராணம். குறிப்பாக மயானங்கள் நகர சபை அல்லது மாநகர சபையின் பரிபாலனத்திற்கு உட்பட்டவை. ஆனால் தொடர்ச்சியாக ‘சாதி’ மயானங்களே நிலவி வருகின்றது. ஆக அரச பொறிமுறைகளால் அதில் தலையிட முடியவில்லை, அல்லது ஒடுக்கும் சாதிய குழுக்களுக்கு அரச கட்டமைப்பும் ஒத்தோடுகின்றது என்றே கொள்ள வேண்டும்.

இவ்வாறு பெளதீகச் சூழல் அமைவதில் சாதிய நலன்களுடன், வர்க்க நலன்களும் செல்வாக்கு செலுத்துகின்றன. நிலம், கட்டடம், நீர்நிலை மற்றும் வெளி என்பவற்றில் இருக்க கூடிய அரசியல் அல்லது மேலாண்மை என்பது சாதிய வர்க்க நலன்களை, அடையாளங்களைப் பேணுவதாகவே அமைந்துள்ளன. அதாவது அவை அதிகாரத்தை ஒழுங்குபடுத்தக்கூடிய – அதிகாரத்தால் ஒழுங்குபடுத்திப் பேணக்கூடிய பெளதீக அர்தங்களையும், இயக்கத்தையும் கொண்டிருக்கின்றன. மேலும் இப்பெளதீக நிலைகளின் அரசியல் என்பதும் அதன் நிலக்காட்சியும் மொழியினாலும், நினைவுகளாலும் பேணப்படுவதையும் கவனிக்க வேண்டும். ஊர்பெயர்கள், இடப்பெயர்கள் , நீர்நிலைகளின் பெயர்கள் இன்னும் சகஜமாக சாதிய வழக்கிலேயே பேணப்படுகின்றன. செட்டிய குறிச்சி, அம்பட்டன் கிராய், வண்ணான் குளம், தூவார மூலை என்று இடப்பெயர்கள் சாதிய அடையாளங்களோடு இருக்கின்றன.
வாய் மொழி நிலையில் ஒருவரினுடைய சாதியை மறைமுகமாக அறிந்து கொள்ளும் போது பிரதேசத்தை, அல்லது ஏதேனுமொரு கோயிலோ, நீர்நிலையோ, பொதுக்கட்டடமோ இருக்க கூடிய இடத்தை விசாரிப்பதன் மூலம் சாதியைத் தெரிந்துகொள்ளும் பழக்கம் தமிழ்ச்சமூகத்திற்கே பழகிவிட்டதொன்று அல்லவா? ஆனால் எத்தனை பெரிய அபத்தச் சூழல் ஒன்று பழக்கமாக மாற்றப்பட்டிருக்கிறது? சாதிய வரைபடம் ஒன்று அரூபமாக நம்முடைய மனதிலே இருக்கின்றது இல்லையா? இச்சாதிய வரைபடத்தை சாதிய, வர்க்கச் சூழல் தன்னுடைய கருத்தியல் மேலாண்மையின் மூலம் உருவாக்கிக் கொண்டுள்ளது. காலம் காலமாக உருவாக்கப்பட்ட இவ் அரூபமான நிலப்படம் அசலான பெளதீக நிலப்படத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கின்றது. அதிகார வர்க்கமானது பழைய கோட்டை கொத்தளங்களைப் போல அரண்மனை, குடியிருப்பு, சேரி, என்பதான அதிகார ஒழுங்குகளை உருவாக்கிக்கொண்டு சனநாயகத்தின் பலவீனமான சரடுகளுக்குள் சாதியைப் பேணுகின்றது. இப் பெளதீகச்சூழலைக் கொண்டு சாதியம் அமைப்புச்சூழலை உருவாக்கிக் கொண்டுள்ளது. மதம், கோவில் போன்ற பெரிய சமூக அமைப்புக்கள் முதல் சிறிய உள்ளூர் சனசமூக நிலையம்வரை சாதியத்தைப் பாதுகாக்கின்றன.

இங்கே சாதியத்தையும் அதனை உருவாக்கி நடைமுறையில் வைத்திருக்கும் ஆதிக்க மனநிலையையும் கருதிற்கொண்டே அவ் அமைப்புக்களின் அரசியலைப் புரிந்துகொள்ள வேண்டும். அவை எத்தகைய நலன்களுக்காக எவ்வகையாக இயங்குகின்றன என்பதனைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்கே சாதியம் தனிநபர்களுடையதல்ல, அது பிற ஒடுக்கும் அமைப்புக்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய அதிகார அமைப்பு. அது நிலவுகின்ற இடத்தில் வர்கங்களுக்கும் மதங்களுக்கும் மேற்பட்டதாயே மாறுகின்றது. அது மனிதர்களின் அதிகாரம் மேலான மிருக வேட்கைக்கும் ஒடுக்குதல் தொடர்பான இச்சைக்கும் பெரிய துணையாக மாறுகின்றது. அதை வாழ்க்கைக்கு எதிரான ஒன்றாக உளவியல் சிக்கலாகப் பார்க்க வேண்டும். சாதியத்தின் இவ் அக – புற நிலப்படத்தை மாற்ற வேண்டும். தனிநபர்களின் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சிந்திப்பையும் முனைப்பையும் கூட்டு உழைப்பாக மாற்ற வேண்டும். சாதியத்திற்கு எதிரான போராட்டங்கள் பிரதான அரசியல் போராட்டங்களில் ஒன்றாக மாறவேண்டும். நாம் ஒரு நிலத்தின் நிலப்படத்தையே மாற்ற வேண்டியிருக்கிறது. ஒரு நிலத்தின் நிலப்படத்தை மாற்றுவது என்பது அந்நிலத்தின் பண்பாட்டின் வரைபடத்தை, சிந்தனையின் வரைபடத்தை, நம்பிக்கை: சடங்குகளின் வரைபடத்தை மாற்றுவதாகும். அது நீண்ட கூட்டுச் சிந்தனையும் உழைப்புமாகும்.

தீண்டாமைக்கு எதிராக தோன்றிச் செயற்பட்ட அமைப்புக்களால் தீண்டாமையை ஒழிக்க முடிந்தது. ஆனால் சாதியை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. அவற்றுக்கான சமகாலத்திற்கான திட்டங்களும் சமகாலத்தில் இல்லை என்றே கூற வேண்டும். ஏனென்றால் சாதியத்திற்கு எதிரான அமைப்பு என்பது வெறுமனே சாதியத்திற்கு எதிரான அமைப்பு மட்டுமன்று, அது ஒட்டுமொத்த ஒடுக்குமுறைக்கும் எதிரான அமைப்பாக உருப்பெற வேண்டும். அதனாலேயே ‘பண்பாட்டு அமைப்புக்கள்’ என்ற பதத்தை சமகாலத்தில் முன்வைக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக பண்பாட்டு அமைப்புக்கள் அது இயங்கும் காலத்தில் இருக்க கூடிய எல்லா ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் வேலை செய்ய வேண்டியிருக்கின்றன. அவை குறித்த ஒரு தொழிற்சங்கத்தைப் போல குறித்த ஒரு குழுவின் நலனுக்காக இயங்குபவை அல்ல, குறிப்பாக அவை அரசியல் அதிகாரத்தை மட்டும் கைபற்றும் கட்சிகளாகவும் குறுக்கிவிட முடியாதவை. பண்பாட்டு அமைப்புக்கள் வர்க்கம், சாதி, ஆணாதிக்கம், போன்ற எல்லாவகை ஒடுக்கு முறைகளையும் புரிந்துகொள்ள வேண்டும் ஏனெனில் இவ் எல்லாவகை ஒடுக்கு முறைகளும் ஒன்றையொன்று தங்கி வாழ்பவை. எனவே பண்பாட்டு அமைப்புக்கள் தங்களுடைய சித்தாந்தத்தையும், கொள்கைகளையும் எல்லா ஒடுக்குமுறைகளுக்கு எதிரானதுமாக வரித்துக்கொள்வதுடன், அதற்கான அரசியல் தந்திரங்களையும் உழைப்பையும் கொடுக்க வேண்டும். பண்பாட்டு அமைப்புக்கள் எல்லாவகையான ஒடுக்குமுறையின் நிலப்படங்களையும் மாற்றியமைக்க வேண்டும். அவை சுயமரியாதையும் சமதர்மமும் உள்ள சமூகத்தின் பெரிய நிலப்படத்தை உருவாக்கும் பொறுப்பையும் கொண்டு செல்ல வேண்டும்.

-யதார்த்தன்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here