சமூக சேவையும் சமூக செயற்பாடும்


’இது என்னுடைய குப்பை இல்லை ஆனால் இது என்னுடைய பூமி’ என்ற வாக்கியத்துடன் கீழே before, after என்று ஓர் நிலக்காட்சி அசுத்தமாக இருந்ததையும், அதைச் சுத்தப்படுத்திய பின்னர் நபரொருவரோ பலரோ போட்டோ ஒன்றை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறோம். நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவ்விடத்திற்கு நான்கைந்து நாட்கள் கழித்துச் சென்று ‘NOW’ என்றொரு படத்தைப் பதிவிட வேண்டும் என்றார். எல்லாத்துறைகளிலும் ‘சமூக சேவை’ என்பது தனிநபர்களையும் சரி, அமைப்புக்களையும் சரி ஒரு வட்டத்திற்கு வெளியே சிந்திக்கவோ செயற்படவோ விடுவதில்லை. குறிப்பாக பண்பாட்டு அமைப்புக்களாக மாற வேண்டியவை இயங்க வேண்டியவை ‘சமூக சேவைக்குள்’ சிக்கிக் கொள்கின்றன. ஈழத்து தமிழ்ச்சூழலின் சமகாலத்தைப் ‘பண்பாட்டு அமைப்புக்களின்’ காலம் என்று அழைக்க விரும்புகிறேன். பால் புதுமையினர் சார் இயக்கங்கள், மரபுரிமை இயக்கங்கள் மாற்றுக்கல்வி சார் இயக்கங்கள், நூலகவியல் சார் இயக்கங்கள், சமூக நீதி சார் சனநாயக இயக்கங்கள், இலக்கியச் செயற்பாட்டு இயக்கங்கள், சூழலியல் சார் இயக்கங்கள் என்று சுயாதீனமான பண்பாட்டு அமைப்புக்கள் ஏராளம் தோன்றிப் பயில்வில் இருக்கும் காலம் என்று இதைக் கருதலாம். இங்கே பெரும்பாலான இயக்கங்களிடம் நேரடி அரசியல் பங்கேற்பு அல்லது கட்சி சார் பங்கேற்பு இருப்பதில்லை. ஆனால் தம்மை ஓர் அரசியல் நீக்கப்பட்ட இயக்கங்களாக கருதும் போக்கே பெரும்பாலும் இருக்கிறது. அதாவது இவை ’சமூக சேவை’ (Social service) மனநிலையில் இருந்து ‘சமூக செயற்பாட்டு’ (Social Activism) இயக்கமாக மாற வேண்டும்.


உதாரணத்திற்கு கடற்கரை ஒன்றைச் சுத்தம் செய்ய முடிவெடுக்கும் சூழலியல் அமைப்பொன்று, ஒரு நாள் அல்லது சில நாட்கள் கடற்கரையைச் சுத்தம் செய்கின்றது. ஆனால் இரண்டு நாட்கள் கழித்து அந்த இடம் மீண்டும் அதே போல கழிவுகளால் நிறைகிறது. மீண்டும் மீண்டும் அவ்வியக்கம் சுத்தம் செய்தாலும் அல்லது அந்தச்சூழலில் குப்பைத்தொட்டிகளை நிறுவுதல், அறிவுறுத்தல் பலகைகளை வைத்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கிறது. ஆனாலும் குப்பைகள் வந்து சேர்ந்த வண்ணமே இருக்கிறது. மக்களுக்கு இங்கே மட்டுமல்ல எங்கேயும் குப்பைகளைப் போடக்கூடாது என்று நன்கு தெரியும். அவ் அறிவித்தல் பலகையோ குப்பைத்தொட்டியோ அவர்கள் அறியாததல்ல ஆனால் அந்த அசமத்துவம் அப்படியேதான் இருக்கிறது. இதைப்பார்க்கும் போது சலிப்பு வந்து சேர்கிறது. இதை எப்படித்தீர்ப்பது? ஒரு அமைப்பாக இதன் சமூக மாற்றத்தின் பெறுமதி என்ன? எங்கே பிரச்சினை இருக்கிறது?

எங்கே பிரச்சினை இருக்கிறது என்றால், ஓர் சூழலியல் அமைப்பு சமூக சேவை அமைப்பாக இருக்கும் போது அதனால் வெறும் துப்பரவுப்பணியை மட்டுமே செய்ய முடியும். அதனால் நிரந்தரமான நீண்ட கால மாற்றத்தை உண்டுபண்ண முடியாது. ஓர் அடையாள துப்பரவுப்பணிக்கும் மீண்டும் மீண்டும் துப்பரவுப்பணியே செய்வதற்கும் வித்தியாசம் உண்டு. அடையாள துப்பரவுப் பணிக்கு முதலும் பிறகும் அவ் அமைப்பு குறித்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எடுத்துக்கொண்ட சிந்திப்பு வெளியும், உரையாடலும், அதனிடமிருக்கக் கூடிய திட்டமும் முக்கியமானது. அது இல்லாவிட்டால் அது வெறும் சமூக சேவை மட்டுமே. ஏனெனில் சமூக சேவை ஓர் சமூக அரசியலோ , பண்பாட்டின் அரசியலோ அல்ல அது வெறும் ‘துப்பரவாக்கும் பணி’. அது மாற்றத்துக்கான சின்னப் புள்ளியைக்கூட நகர்த்தாது. அதனால் நாம் முதலில் அரசியல் மயப்பட வேண்டும். இங்கே நான் சொல்வது நேரடியான கட்சி அரசியல் அல்ல என்பதில் இருந்தே இவ்வுரையாடலைத் தொடங்க நினைக்கிறேன். அமைப்பாக்கம் ஒன்றின் மிக அடிப்படையான பண்பாக இருக்கும் ‘அரசியல் மயப்படல்’ பற்றி நாம் பேசவேண்டும்.
இன்றைய சனநாயக வடிவம் முழுமையானதல்ல. ஆனால் அதனிடமிருக்கும் இருபதாம், இருபத்தோராம் நூற்றாண்டுகளின் இயல்பென்பது ஏனைய காலங்களை விட விரிந்தது. சமகாலத்தில் ’அரசியல்’ என்ற சொல் கிளிப்பிள்ளை போல ‘அரசு பற்றியது’ என்பதாகவே கற்பிக்கப்படுகின்றது. அது பொதுப்புத்தியினால் ‘கட்சி’ , தேர்தல் , பாராளுமன்றம் , பிரதிநிதி என்பவற்றினால் மாத்திரமே புரிந்துகொள்ளப்படுவதுடன் நேரடியான மரபார்ந்த அரசியல் செயற்பாடுகளைக் கொண்டு சுருக்கப்பட்டுமிருக்கிறது. இங்கே அரசியல் என்பதை ‘அதிகாரம் பற்றியது’ என்று கருதும் போக்கு குறைவாகவே இருக்கிறது. அதிகாரம் என்பது ஒன்றின் மீது இன்னொன்று நிகழ்த்தப்படும் மேலாதிக்கம் , அல்லது செல்வாக்கு என்று சொல்லலாம் என்று நினைக்கின்றேன். அரசியல் அதிகாரம், பொருளாதார அதிகாரம், பண்பாட்டு அதிகாரம் என்பவற்றின் கீழ் ஏனைய எல்லா அதிகாரங்களையும் வகைப்படுத்தலாம் இவை அனைத்தும் இணைந்த கூட்டு மொத்தத்தினை ‘அரசியல்’ என்ற சொற்பதத்தினால் குறிக்கிறோம். அரசியல் அதிகாரம், பண்பாட்டு அதிகாரம், பொருளாதார அதிகாரம் என்று நம்முடைய எல்லாச்சூழலையும் தீர்மானிப்பவை ஒன்றை ஒன்று அதிகாரம் செய்கிறது இடையீடு செய்கிறது.

அரசியல் என்ற கருதுதலில், உடல், இனம், வர்க்கம், பால், பாலியல், சாதி, அடையாளம், வரலாறு, வரலாற்று எழுத்து, கோட்பாடு, கட்சி, அரசு,, பிரதேசம், பொருளாதாரம், கருத்து, மொழி, சூழலியல் என்று அரசியல் பல்வேறு கூறுகளைக் கொண்டது. உண்மையில் இந்தப்பட்டியல் மிகவும் நீண்டு சென்று உட்கூறுகளாக விரியக்கூடியது. ஒவ்வொரு உட்கூறிலும் விரிவிலும் ஒவ்வொன்றும் இன்னொன்றுடன் கொள்ளும் தொடர்பு, அதிகாரம் என்பவற்றை நாம் ஒவ்வொரு சூழமைவிலும் கவனித்துச் செல்லலாம், இதைத்தான் அரசியல் என்கிறோம். இங்கே அரசியலற்றது, அரசியல் நீக்கப்பட்டது என்று எதுவுமே இல்லை. அமைப்புக்களும், குழுவேலைகளும் கூட அப்படித்தான்.

நாம் ஒரு பிரச்சினையின் அடிப்படைகளை விளங்கிக்கொள்வதற்கும், அமைப்பின் ஊடாக அல்லது ஒன்று திரண்டு வேலைப்பகிர்வை உடல் உழைப்பையும், மூளை உழைப்பைச் செலவிடும் போது அதனுடைய பயன் பெறுமதி பற்றி மாற்றம் பற்றிச் சிந்திக்க வேண்டும் இல்லையா? அதாவது ஏன் மக்கள் குப்பைகளைப் போடுகிறார்கள் என்பதில் தொடங்கி சிந்திப்போம். மக்கள் குப்பைகளைப் போடுவதில் மக்கள் மட்டுமேதான் குற்றவாளிகளா? பொலித்தீன் தீங்கானது என்கிறோம், சரி ஏன் இன்னும் வணிகப்பொருட்கள் பொலித்தீனில் வர அரசு அனுமதிக்கிறது? ஏன் வியாபாரிகள் பொலித்தீனை அதிகமாக விற்கிறார்கள்? ஏன் மக்களுக்கு பொலித்தீன் இலகுவாக இருக்கிறது பேப்பர் பை ஒன்று கடினமாக இருக்கிறது? ஏன் குப்பைத்தொட்டிகளோ ஒழுங்கான கழிவகற்றலோ செய்யப்படவில்லை? அரசு நம்முடைய வரிப்பணத்தில் எவ்வளவை சூழலைத் தூய்மையாக்க செலவு செய்கிறது? ஏன் நான் வரிப்பணமும் செலுத்திவிட்டு குப்பையும் பொறுக்க வேண்டியுள்ளது? ஏன் குப்பை போடுவது தொடர்பில் கடுமையான சட்டங்கள் இல்லை? இவை மேம்போக்காக எழக்கூடிய கேள்விகள்தான் ஆனால் இவற்றுக்கு நாம் பதில் தேடத்தொடங்கினால் மெல்லியதாய் ஆரம்பிக்க நூல் அதிகார பீடங்களை நோக்கி, ஓடும். மக்களை மட்டுமல்ல இவை அனைத்தையும் மாற்றுவதற்கு நமக்கு வெறும் ‘துப்பரவாக்கும் பணி’ மட்டுமே இல்லை என்பது விளங்கும். ஒரு அடையாள துப்பரவாக்கலைச் செய்வது மிகவும் இலகுவானது. ஆனால் அதையே செய்துகொண்டிருப்பது நம்முடைய பணியா? எவ்வளவு நாட்களாக இந்த சுழலில் மீண்டும் மீண்டும் சிக்கிக்கொள்வது?

இப்படியான கேள்விகள் எல்லா அமைப்புக்களுக்கும் அவை எடுத்துக்கொண்ட பிரச்சினைகளுக்குமானது. சமூக சேவை அமைப்பு என்பது ஒரு வித கண் துடைப்பு. கொஞ்சம் மேலோட்டமான ஆழமற்ற ஆனால் தொடக்கத்தை விபரிக்கத்தக்க உதாரணம் ஒன்று சொன்னால், பசியுடன் இருக்கும் ஒருவருக்கு மீன் வாங்கிக் கொடுப்பது சமூக சேவை, அவருக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பது சமூக செயற்பாடு. இரண்டும் வெவ்வேறானவை. சமூக செயற்பாடு அரசியல் மயப்பட்டது, சிந்திப்பது , புத்தாக்கமும் செய்வது. உலகின் முன்னேறிய சிந்தனைகள், கோட்பாடுகளை தமக்குள் எடுத்துக்கொள்வது.

சமூகச் சேவைக்கும் சமூகச் செயற்பாட்டிற்குமான வேறுபாடு.

சமூக சேவகர் என்பவர் சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மை மற்றும் ஒடுக்குமுறைகள் குறித்த அடிப்படைகளைப் பற்றி அக்கறைப்படமாட்டார். ஆனால் அவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவித்திட்டங்கள் ஊடாக உதவி செய்து அவர்களை அந்தச் சவால்களை எதிர்கொள்வதற்குத் தகைமையாக்குவார். ஆனால் சமூகச் செயற்பாட்டாளர் இவ்வாறு ஒவ்வொரு பாதிக்கப்படும்போது அதற்கான அடிப்படைக் காரணிகள் என்னவென்று கண்டறிந்து அவற்றை அடிப்படையிலேயே மாற்ற முயல்வார்.

அமைப்பாக திரள்வதும் முன்னேறிய கொள்கைகளை கொண்டு சிந்திப்பதும், எடுத்துக்கொண்ட நோக்கத்தை அடைவதற்குரிய தந்திரோபாயங்களை வகுப்பதும் செயற்படுவதும் தொடர்பானது. அது ‘துப்பரவாக்கும்’ பணியைவிடக் கடினமானது. ஆனால் மாற்றமோ முன்னேற்றமான சமூகச்சூழலோ வேண்டும் என்றால் பண்பாட்டு இயக்கங்கள் சிந்திக்க வேண்டும், உரையாட வேண்டும், முன்னேறிய பார்வையை அடைய வேண்டும், தம்மை அரசியல் மயப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவற்றுக்கு எந்தப் பயன்பெறுமதியும் இல்லை.


ஏனெனில், நாம் ஒரு போட்டோவிற்காக இவற்றைச் செய்யவில்லை இல்லையா?

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’