“When you cry and weep, when you are miserable, you are alone. When you celebrate, the whole existence participates with you. In celebration do we meet the ultimate, the eternal. Only in celebration do we go beyond the circle of birth and death.
-OSHO
விவரணை
பருத்தித்துறை துறைமுகத்தில் தொடங்கியோடும் கடற்கரை வீதியில் சித்திரைப்பறுவ நாளில் (பிரதேச வழக்கு) நிலவு தோன்ற முதல் வல்வெட்டித்துறையை நோக்கி நகர்ந்து பொகும் போது கடற்கரை தூரத்தில் பெரு வெளிச்சக்கோடாகத்தோன்றி நெருங்க நெருங்க கடற்கரை வீதிகளும் கடலும் விளக்குகளால் ஒளிகொண்டிருக்கும். கடல் கோடைகாலத்து மிதமான குளிர்ச்சியை நிலத்திற்கு எடுத்துவரும். படகுகள் உறங்கும் கரைகளில் வீடுகள், மண்டபங்கள், பொது இடங்கள் யாவும் ஒரு புது இரவை எதிர்கொள்ள தயாராவதற்குரி சுறுசுறுப்புடன் இருக்கும். ஒளி நிறங்களாலும் இசையாலும் நிரப்பட்ட வீதிகளும் கடலும் ரம்மியத்தை பரவச்செய்திருக்கும். நேர இடைவெளிகளில் பலூன்கள் போன்று பழுப்பு நிறத்தில் அடியில் நெருப்பெரிய அங்காங்கே புகைக்கூண்டுகள் வானில் எழுந்து மிதக்கும். கடற்கரையெங்கும் மக்கள் கூட்டம், ஆரவாரம், கடற்கரைகளில் நிறுவப்பட்ட மேடைகளில் இசை, தெருக்கள், மதில்கள், மரங்கள் , கம்பங்கள் எங்கும் விளக்குகள், ஒளியுருவங்கள். ஒன்று சேர்ந்த மானுடக்கூட்டம் நகர்ந்து நகர்ந்து திருவிழாவில் கலந்து திருவிழாவை இயக்கும். கடைத்தொகுதிகள், உணவு ,விளையாட்டு, இசையும் நடனமும், நகைச்சுவையும். இந்திரவிழா ஒரு தாய்த்தெய்வத்தின் தீர்த்தோற்சவம் என்பதைத்தாண்டி ஒரு மானுட கூட்டு மனத்தின் கொண்டாட்டமாய் நிகழும். இரவு ஏற ஏற கொண்டாட்டமும் பக்தியும் சடங்கும் உச்சமடையும். மானிட உடல்கள் நெருக்கமாக அலையும், உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளும்.வடக்கு இலங்கையின் மிகப்பெரிய திருவிழா அல்லது அதற்கு மேலான கொண்டாட்டம் ஒன்று நிகந்துகொண்டிருக்கும். மத மும் சாதிகொண்ட தொன்மையான அடையாள உடல்கள் முடிந்த வரை வலுவிழக்கும். பழைய நம்பிக்கைகளும் தொல்கதைகளும் புதிய சுதந்திரமும் செயல்களும் உடலின் உள்ளும் வெளியிலும் அலையும்.
காட்சி (vision)
தொன்மத்தை அறிந்துகொள்ளும் போது பகுத்தறிவிற்கு வேலையிருப்பதில்லை என்றார் தாந்தே. ஆனால் தொன்மங்களை இனங்கண்டபிறகு அவை பற்றிய தரிசனம் (vision) சிந்தனையைக் கிளர்த்தி விடக்கூடியவொன்றாகும். தொன்மங்கள் மானுட அனுபவத்தின் உணர்வுசார்ந்த கற்பனையும் படைப்பாற்றலும் நிலவும் மானுட மனத்தினோடு நெருக்கமான தொடர்பை வைத்திருப்பவை. பண்பாட்டிலிருக்கும் பெருமளவிலான கூறுகளோடு தொன்மக்கதையாடல்கள் சம்பந்தப்படிருக்கின்றன. அல்லது இன்னொரு விதமாகச்சொன்னால் தொன்மம் என்பது பண்பாட்டின் பிறிதொரு கூறாகவும் இருக்கிறது.
ஒரு பழங்காலத்து சிதிலமடைந்த கோட்டைகள் இருக்கும் நகரத்தினுள் நுழையும் போது அந்த நகரத்தின் ; கோட்டையின் தொன்மக்கதைகள் நமக்கு தெரிந்திருப்பின் அங்கிருக்கும் சிதிலங்களும் கண்ணில் படும் போது அக் கோட்டையில் வீரர்களும் அரசர்களும் உலவித்திரிவதையும் பீரங்கிகள் முழங்குவதையும் அம்புகள் பாய்வதையும் அவை கண்ணெதிரே தோன்றவைக்கும். ஒவ்வொருத்தரின் படைப்பாற்றலினதும் கற்பானா தன்மையினதும் அளவிற்கேற்ப காட்சியின் அளவு வடிவம் என்பன மாறுபடும்.
. அக்காட்சிகளில்லிருந்து வெளியே வரும்போது பகுத்தறிவு செயற்பட்டு அவை பற்றிய தர்க்க பூர்வமான அறிவியல் தன்மைவாய்ந்த கேள்விகளை எழுப்பி முடிந்தளவில் உண்மைகளை கண்டு பிடித்து ஒன்று சேர்த்து வாசிக்க முற்படும். அது அடையாளம், பண்பாடு, கலை , தத்துவம் போன்ற அறிவார்ந்த சிந்தனை முறைகளுக்கான தேவைகளில் இருந்து எழுந்துவரும் கேள்விகளாக இருக்கும். குறிப்பாக பழைய தொன்மங்களின் இன்றைய வடிவமாக இருக்கும் கதையாடல்களையும் நிகழ்த்துகைகளையும் அப்பகுத்தறிவானது தனது தகவல் தரு மூலமாக பயன்படுத்தும். இயற்கை,பண்பாடு முதலியவற்றின் கூட்டு உற்பத்தியாக இத்தகைய தகவல் தரு மூலங்கள் இருக்கின்றன. சடங்கு, நம்பிக்கை , வழக்கு ,பண்டிகை, திருவிழா என்று இத்தகைய தகவல் மூலங்கள் ஏராளமாக சமூக அசைவியக்கத்தில் பங்கெடுக்கின்றன. இச்சமூக அசைவில் திருவிழாக்கள் முக்கியமானவை. முக்கியமான இயற்கை – மானுடப்பண்பாட்டு அசைவைக்கொண்ட தொன்மங்களின் நிகழ்கால தொடர்ச்சியாக இருக்கின்றன.
இவ்வகையில் யாழ்ப்பாணப்பண்பாட்டில் நிகழும் திருவிழாக்களை சுருக்கமாக அறிமுகம் செய்வதுடன் ,அடைப்படையில் “இந்திரவிழா”வை தொன்மவியல் மற்றும் ஏனைய வாசிப்பு முறைகளுடன் தொடர்புபடுத்தி வாசிப்பதும் இக்கட்டுரையின் நோக்கமாகவிருக்கிறது.
கதையாடல் (Discourse)
திருவிழா என்னும் பண்பாட்டு இயங்கியல்
மொழிநிலையில் பார்த்தால் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்ப மொழிகளில் ஒன்றான இத்தாலிய மொழியில் உள்ள carnevale என்ற அடிச்சொல்லின் வேர்களில் இருந்து தோன்றிய சொல்லாக carnival என்ற ஆங்கிலச்சொல் உள்ளது. தமிழில் carnival என்ற சொல்லுக்குரிய நிகரன்களாக திருவிழா, உற்சவம் முதலான சொற்களை இனங்காணலாம். entertainment என்ற சொல்லுக்கு கேளிக்கை என்ற சொல்லையும், celebration என்ற சொல்லிற்கு கொண்டாட்டம் என்ற சொல்லையும் நிகரன்களாக நிறுத்த இயலும்.
சமூகத்தில் நெருக்கடி நிகழ்கின்ற போது மானுடக்கூட்டுமனமானது வலுவாகப்புதுப்பிக்கப்படுகின்றது என்றார் அமைப்பியலாளரான லேவிஸ்ராரஸ். இந்த ”கூட்டு மனம்” என்பதே சமூக பண்பாட்டு உற்பத்தியான திருவிழாவிற்கான அடிப்படையான உளவியல் காரணமாகும். திருவிழா என்பது மானுடக்கூட்டு மனத்தின் ஒருங்கிணைவின் ஒரு முக்கிய உச்ச விளைவாக பார்க்க வேண்டியது. அதாவது மானுட கூட்டு மன நெருக்கடியின் சமூக பண்பாட்டு விளைவாக திருவிழாக்களைக் கருத முடியும்.
அடிப்படையில் பண்பாடு என்ற இயக்க நிலையின் பல தனியான கூறுகளை ஒன்று திரட்டுவதன் மூலம் வடிவம் பெறும் ஒரு தொகுப்பு (complex) நிகழ்வாக திருவிழாக்கள் இருக்கின்றன. முன்பு குறிப்பிட்டதனைப்போல சமூக கூட்டு மன நெருக்கடியின் பின்னணியில் இயற்கையும் பண்பாடும் (Nature vs Culture) தமக்கிடையே நிகழ்த்தும் தளமாற்றம் திருவிழா என்ற ஒரு தொகுதி வடிவத்தினைத் தோற்றுவிக்கின்றது. அதாவது பண்பாட்டில் எழும் சிக்கல்களை இயற்கைக்கு மாற்றிவிடுதலும் இயற்கை மீது எழும் சிக்கல்களை பண்பாட்டுக்கு எடுத்து வருவது என்ற இயக்கத்தில் சமூக நெருக்கடி செயலிழக்கச் செய்யப்படுதலே திருவிழாவில் நிகழ்கின்றது.
இங்கே “மானுட கூட்டு மன நெருக்கடி” என்பதனை விளங்கிக்கொள்ள வேண்டும். ஆதியில் இருட்டு என்பது மனிதர்களுக்கு பயத்தை உண்டு பண்ணியது எனவே இருட்டு பற்றி மானுட கூட்டு மனம் “பயம்” என்ற கூட்டு மன நெருக்கடிக்குச் சென்றது. அவ் இருட்டை (இயற்கையை) நெருப்பு என்னும் ஒளி விரட்டியது. அதனால் நெருப்பு என்ற கண்டுபிடிப்பு ஒரு நம்பிக்கை சார்ந்த விடயமாக மாறி வழிபாட்டுக்குரியதாக பரிணமித்தது. இங்கே நெருப்பு என்ற பண்பாட்டுத்தளத்தின் மூலம் பயம் என்ற நெருக்கடி நீக்கப்பட்டது. இவ்வாறு மானுட கூட்டு நெருக்கடி எல்லா தளங்களிலும் நிகழும் போதும் மனிதனின் கூட்டு மனம் உருத்திரண்டு நெருக்கடியை வலுவிழக்கச்செய்யும் வழிவகைகளை கண்டைகின்றது. இது இயற்கை மற்றும் பண்பாட்டுக்கு இடையில் மாறி மாறி நிகழும்.
திருவிழா என்பதும் பல்வேறு மனித மனத்தின் பல்வேறு கூட்டு நெருக்கடிகளின் விளைவாக இயற்கை மற்றும் பண்பாட்டை மாறி மாறி சடங்காகவும், நம்பிக்கையாகவும், பழக்கமாகவும் பல்வேறு வடிவங்களில் பிரதியீடு செய்வதன் மூலம் நிகழ்தப்படும் பல்வேறு நிகழ்த்துகளைகளின் கூட்டு வெளிப்பாடாக உள்ளது. ஆகவே இது அடிப்படையில் மனித உளவியலில் இருந்து தோன்றி வருவதை இங்கே மனங்கொள்ள வேண்டும்.
பயம், தனித்து விடப்படல், அந்நியமாதல் முதலான உள நெருக்கடிகளின் கூட்டு மனம் திருவிழாக்களை உருவாக்குகின்றது. திருவிழாக்கள் பெரும்பாலும் இயற்கையிலிருந்து வந்த அல்லது உருவாக்கியெடுக்கப்பட்ட ”இறை” என்ற நெருக்கடியை தீர்க்க தக்கது என்று நம்பப்படும் நம்பிக்கை நிலையின் அமைப்பு வடிவமான மதம் (religion) சார்ந்து எழுவது இயற்கையானவொன்றாகும் ஏனெனில் பெரும்பான்மை மானுட கூட்டு மனம் நம்பும் நெருக்கடிக்கான தீர்வுகள், சமயம் சார்ந்து ஆற்றப்படும் வழிபாடுகள்,சடங்குகள் முதலான ஆற்றுகைகள் மூலமே வந்து சேர்கின்றது என்ற நம்பிக்கையே பெரும்பான்மை சமூகத்தவரிடம் இருப்பதனால் திருவிழாக்கள் அத்தகைய ஆற்றுகைகளின் உச்சமானதும் பெரியதுமான வடிவமாக தோன்றி வளர்ந்தன.
திருவிழாவின் தோன்றுகைக்கான அடிப்படை உளவியல் நெருக்கடி யின் கூட்டு நிலையே என்பதைப்போல சமயமும் உளவியல் சார்ந்த நெருக்கடி அச்சத்தின் வெளிப்பாடேயாகும். இவ்விரண்டும் உளவியல் உந்துதல்களின் மூலம் இயற்கை மற்றும் பண்பாட்டு தளத்தில் இணைந்துகொண்டு நெருக்கடிகளை களைவதற்குரிய அக,புற ஆற்றுகைகளை மேற்கொள்கின்றன. இதனை இன்னும் விரிவாகப்பேசமுடியும். சமூகம், அரசியல், பொருளாதாரம், இனவரையம் மற்றும் அது சார்ந்த பண்பாட்டு ஒழுங்குகள், சுற்றுச்சூழல், தொழிநுட்பம் என்று ஒவ்வொரு தளத்தினதும் உறவு நிலைகளில் இருந்தும் தொடர்புபடுத்தி பேச வேண்டும்.
அறிஞர் லானோய் திருவிழாவை இவ்வாறு குறிப்பிடுவார்.
“Festival rite utilizes the potency of disorder. It harnesses the disorder of “the other mind”, possession, trance, dreams, ecstacy ; if these power are harnessed properly, the society recovers a special potency from chaos beyond the limits of order ”
(Lannoy: 1971;201)
இவ்வகையில் திருவிழா (carnival) என்பது அடிப்படையில் மானுடர்கள் ஒன்று சேரும் கூட்டு மனத்தின் அக, புறவயமான ஆற்றுகைகளின் ஒட்டுமொத்தமாகவிருக்கிறது. இது ஒவ்வொரு மனிதக்குழுமத்திற்கும் சமூக பண்பாட்டு பின்னணியிலும் இயற்கைத்தன்மையின் பின்னணியிலும் வரலாற்று ஒழுக்கில் வித்தியாசப்பட்டுக்கொண்டே இயங்கும் தன்மையினதாகவிருக்கும். ஒவ்வொரு கூட்டு மனித மனங்களின் திருவிழாக்கள் சில பொதுவான அடிப்படைப்பண்புகளையும் மிக அதிகமான மாறுபட்ட பண்புகளையும் கொண்டிருக்கும். ஒப்பியல் நோக்கில் சமூக பண்பாட்டு இடையீடுகளை அணுகும் போது அவற்றை விரிவுபடுத்தி வாசிக்கமுடியும்.
இலங்கைத்தீவின் வடக்கு பகுதின் திருவிழாக்களின் பொது நியமங்களை விளங்கிக்கொள்ளுதல்
அண்சமவெளி மற்றும் கரையோரச் சமவெளி ஆகிய புவியமைப்பில் விளச்சல் மற்றும் காட்டு நிலங்களும் நீர் நிலைகளும் கொண்ட வடக்கு நிலத்தைப்பொறுத்தவரையில் இலங்கைத்தமிழ், முஸ்லீம், இந்திய பூர்வீகத்தைகொண்ட தமிழ் குடிகளையும், யாழ்ப்பாணக்கிளைத் தமிழ், முஸ்லீம் வட்டாரத்தமிழ் ஆகிய மொழிகளைப் பேசத்தக்கதும், ஷண்மதப்பாகுபாடு இல்லாத இந்து ,கிறிஸ்தவ (ரோமன் கத்தோலிக்கம் மற்றும் புரடஸ்லாந்து உட்பட்ட ஏனைய பிரிவுகளும்), இஸ்லாமிய மதங்கள் மற்றும் நாட்டார் வழிபாட்டு நிலைகளை பின்பற்றும் மக்கள் உள்ளனர். மேலும் சாதிய நிலமைகள், வர்க்க ஏற்றத்தாழ்வுகள் இப்போதும் காணப்படும் வாழ்க்கை முறை இருக்கும் ஒரு நிலமுமாகும். இவை போற்ற சமூக நிலமைகளின் அடிப்படையில் குறித்த நிலத்தின் திருவிழாக்களை அணுகலாம்.
வடக்கு நிலத்திலே நிகழும் திருவிழாக்கள் இரண்டு வகையாக பார்க்கத்தக்கவை.
- சமயம் சார்ந்த திருவிழாக்கள்.
- சமயம் சாராத திருவிழாக்கள்.
இங்கே சமயம் சார்ந்த திருவிழாக்களே பெருமெடுப்பில் நடக்கின்றன. குறிப்பாக இந்து சமய, இந்து சமயம் உள்வாங்கிக்கொண்ட நாட்டார் வழிபாடுகள் சார்ந்த திருவிழாக்கள் ஒப்பீட்டளவில் சனத்தொகை அடிப்படையில் பெரியளவில் நடக்கின்றன. அதேபோல கிறிஸ்தவ திருவிழாக்களும் பெருமெடுப்பில் நடப்பதுண்டு.
சமயச்சார்பற்று பார்க்கின்ற பொழுது பட்டத்திருவிழா, சவாரி உள்ளிட்ட திருவிழா நிலைப்பட்ட ஆற்றுகைகள் நிகழ்வதுண்டு.
இலங்கைத்தீவினைப் பொறுத்தவரையில் தமிழ்ப் பொது மொழி வழக்கில் “திருவிழா” என்றால் அது, சமயம் – கோயில் சார்ந்தது என்ற புரிதலே பரவலாக உள்ளது. சமயம் சார்ந்த திருவிழாக்களில் இந்துக் கோயில்களிலும் நாட்டார் வழிபாட்டுக்குரிய இடங்களிலும் , கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நடை பெறுகின்றன. இலங்கையில் கிறிஸ்தவ திருவிழாக்களில், வழிபாடுகளில் நிகழ்த்தப்படும் சடங்குகள் பெரும்பாலும் சுதேச மரபின் வழி வந்த சடங்குகளை ஒத்ததாகவே இருக்கும். கூடு சுற்றுதல், தோரணம் கட்டுதல் என்று சுதேச சடங்குகளை உள்வாங்கியே காலனிய காலத்தில் கிறிஸ்தவ மதம் சடங்குகளும் வழக்கங்களும் வடிவமைக்கப்பட்டன. இலகுவாக மதப்பிரசாரம் செய்வதற்கும் சுதேச மக்களுக்கு நெருக்கமான ஒன்றாக கிறிஸ்தவத்தை கொண்டு சென்று நிறுத்த தேவ ஊழியச்சபைகள் மேற்கொண்ட உத்தியாக இதைக் கருதலாம். இத்தகைய சடங்கு ஒற்றுமைகள் தனியாக கதையாடப்படவேண்டிய சுவாரஸ்யமான பகுதியாகும்.
மேலும் பெரும்பான்மை மக்கள் பின் பற்றும் இந்துசமய மற்றும் அது உள்வாங்கிய நாட்டார் வழிபாட்டு முறைகள் சார்ந்த திருவிழாக்கள் இங்கு சமூகத்தில் அதிக பங்கு பற்றுதலைக்கொண்டவையாகவுள்ளன. இலங்கையைப்பொறுத்தவரையில் இந்து சமயம் இந்திய – இந்து மரபினைப்போல ஷண்மதங்களின் பிரிவு நிலை புறவயமாகவும் சரி அகவயமாகவும் சரி காணப்படுவதில்லை. எனவே திருவிழாக்கள் பொதுவான இலங்கைக்குரிய இந்து சமயத்தின் வழக்காறுகளைக்கொண்டவையாகவுள்ளன.
அதைப்போல் நாட்டார் வழிபாட்டு முறைகள் இயற்கை சார்ந்த நம்பிக்கைகளையும் அதுசார்த வழிபாடுகளையும் செறிவாகக் கொண்டிருப்பதனால் ஆகம விதிகளின் தாக்கமற்ற பலியிடல், களிப்பு முதலான இயற்கை – கூட்டு நெருக்கடியால் விளைந்த சடங்குகளை அதிகம் கொண்டவை.
மேலும் முன்பு சொன்னது போல சாதிய நிலைகள் முழுமையாகத் தோற்கடிக்கப் படாத நிலையில் நாட்டார் விழிபாட்டு முறைகளில் சில சாதிய நிலைக்குரிய தெய்வங்களாக காணப்படுவதனால் அவை சார்ந்த திருவிழாக்களிலிருந்து சாதிய அடையாளங்கள் களையப்படாமலிருக்கின்றன. அண்ணமார், பெரியதம்பிரான், விருமர், முதலிகள், வல்லியகண்ணன் முதலான நாட்டார் தெய்வங்கள் குறித்த தொழிலை அடிப்படையாகக் கொண்ட சாதிய சமூகத்திற்கானதாகவுள்ளனர்.
மேலும் சமய வயப்பட்ட திருவிழாக்களில் பெரும்பாலும் வருடாந்த திருவிழாக்களே பெரிதும் செல்வாக்குப்பெற்றன. மஹோற்சவம் போன்ற வருடாந்த திருவிழாக்கள் பஞ்சாங்கம் கூறும் (பஞ்சாங்கப்பண்பாட்டின் செல்வாக்கு சமூக சமய – அறிவியல் பின்னணியில் தனியாக ஆராயவும் உரையாடவும்பட வேண்டியது ) கால நியம அடிப்படையில் அனுட்டிக்கப்படுகிறது. வருடாந்த திருவிழாக்கள் பெரும்பாலும் 10 தொடக்கம் 15 நாட்கள் நிகழ்பவையாக இருக்கும். (யாழ்ப்பாணத்தில் நல்லூர் போன்ற பெருந்திருவிழாக்கள் 25 நாட்கள் வரை நடக்கின்றன). இவற்றில் எல்லா நாட்களும் முக்கியமாக இருப்பினும் கொடியேற்றம், தேர், தீர்த்தம், சப்பறம், மற்றும் இறுதிநாள் திருவிழாக்கள் விசேஷமானவையாக நிகழ்கின்றன.
கிராமங்களில் பொதுவாக திருவிழாக்கள் உபயகாரர்களால் ஒழுங்கு செய்யப்படுகின்றன. பெரும்பாலும் இவ் “உபயகாரர்கள் ” குடும்ப அடிப்படையில் காண்ப்படுவர். ஒரு கிராமத்தில் நிகழ்கின்ற சமயம் சார்ந்த திருவிழாக்களைக்கொண்டு அங்குள்ள அதிகாரச்சமநிலையை அளந்து கொள்ள முடியும் என்று கா, சிவத்தம்பி குறிப்பிடுவார். பொருளாதாரம், சாதிய நிலமைகளை இத்திருவிழாக்களின் போது அவதானிக்கலாம். குறித்த திருவிழாக்கள் கெளரவ உணர்வு ,குடும்பப்பாரம்பரியம் சார்ந்தவையாக குறித்த குடும்பங்களால் கணிக்கப்படுகின்றது.
சில கோயில்கள் அதில் நடைபெறும் திருவிழாக்கள் சாதி நிலைப்பட்டதாகக் காணப்படுகின்றன. திருவிழாவின் ஒழுங்கமைவுகளுக்குள் உயர் சாதியென கருதப்படுபவர்களும் ஏனைய இடை நிலைச்சாதியினரும் படிமுறை, சடங்கு ஆற்றுகை என்பவற்றின் மூலமாக அங்கு பங்கு பற்றுதலை மேற்கொள்வார்கள். பஞ்சமர் எனப்படும் அடிநிலைக்கு தள்ளப்பட்ட சாதிய மக்கள் ஆலய நுழைவிற்கே அனுமதிக்கப்படாத நிலை அறுபதுகளில் வடக்கில் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்ட “ஆலய நுழைவுப்போராட்டங்களின்” பின்னர் குறைந்திருந்தாலும் இன்னும் அத்தகைய சமூகப்பிறழ்வை பரவலாக அவதானிக்கலாம்.
ஆலய நுழைவிற்கு அனுமதிக்கப்படா விட்டலும் அடிநிலை மக்களுக்கு கோயில் திருவிழாக்கள் வழங்கப்படுவதுண்டு.
ஆயினும் திருவிழா கிரியைகளை மேற்கொண்டாலும் அவர்கள் கோயிலின் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. “மணியக்காரர்” போன்ற பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு குறித்த குழுவினரின் சார்பில் சமயக்கிரியைகளுக்கு தலைமை தாங்கும் வழக்கம் காணப்பட்டுவதாக கா. சிவத்தம்பி மேலும் சுட்டிக்காட்டுவார்.
( வண்ணார் சாதியைச்சேர்ந்தவர்கள் கொடிச்சீலை முதலான வஸ்திரங்களுடன் சம்பந்தப்படுவதால் அவர்களுக்கு திருவிழாக்கள் வழங்கப்பட்டு கோயிலினுள் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற வழமையும் காணப்படுவதுண்டு)
மேலும் முன்பு குறிப்பிட்டதனைப்போல திருவிழா குடும்ப , பரம்பரை கெளரவத்துடன் இணைந்த ஒன்றாகப்பார்க்கப்படுவதால் சமூக மாற்றம் நிகழ்கின்ற போது மேலெழுந்து வரும் புதிய மத்திய தரவர்க்க, அல்லது மேல்தட்டு வர்க்க குடும்பங்கள் திருவிழாக்களை எடுத்துக்கொள்வதில் முனைப்புக்காட்டுகின்றனர். இங்கே சாதியைப்போலவே பொருளாதாரமும் மையப் பங்குபற்றுதலை நிகழ்த்துகின்றது.
சமகாலத்தில் சாதிய நிலமைகளினை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் “சாதிய மேன்நிலையாக்கம்” என்பதன் அடிப்படையில் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுடைய சாதிக்கென்று நாட்டார் வழிபாட்டுக்கு வெளியே ஆகம விதிகளிலமைந்த கோயில்களை கட்டிக்கொள்வதனையும் அதில் தமக்கென திருவிழாக்களை நடத்துவதையும் சுட்டிக்காட்டுகின்றனர். இதன் மூலம் சாதிய அமைப்பு உடைபட்டு இல்லாமல் போவதற்கு பதிலாக அது மேன் நிலையாக்கத்திற்கு உட்படுவதை சுட்டிக்காட்டுகின்றனர். இங்கும் பொருளாதார அடிப்படையிலான வர்க்க ஆதிக்கமே கோயில் திருவிழாக்களின் அதிகார நிலைகளை பெற்றுக்கொள்கிறது.
இவ்வாறு நிகழ்த்தப்படும் திருவிழாக்கள் முன்பு சொன்னதைப்போல பெரும் பொருட்செலவுடன் நிகழ்த்தப்படுகின்றன. தெய்வச் சொருபத்தை அலங்கரிக்கும் சாத்துப்படி என்ற அலங்கார முறைக்கு ஏராளம் பணம் செலவு செய்யப்படுவதுடன் திருவிழா நிகழும் ஆலயச்சூழலை அலங்கரிக்கவும் பணம் செலவு செய்யப்படுகின்றது ,நைவேத்தியம், படையல், அன்னதானம், தண்டியை, வானவேடிக்கை,இசைக்குழுக்கள் மற்றும் ஏனைய கலையரங்குகளுக்கும் ஏராளமாக செலவு செய்கின்ற தன்மையினை திருவிழாக்களில் அவதானிக்கலாம்.
வருடார்ந்த திருவிழாக்களைத்தவிர விசேடமாக ஆலய புதுப்பிப்பு முதலான நடைமுறைகளின் சடங்குகளான கும்பாபிஷேகம் உள்ளிட்ட திருவிழாக்களும், சிறப்பாக அம்மன் வழிபாட்டுக்குரிய கோயில்களில் நவராத்திரி,விஜயதசமி, சிவகோயில்களில் சிவராத்திரி, முருகன் கோவில்களில் கந்தஷஸ்டி, சூரன் போர் முதலான திருவிழாக்களும் முக்கியமாக நடக்கின்றன.
கிறிஸ்தவ தேவாலயங்களை எடுத்துக்கொண்டால், கிறிஸ்துமஸ்,குருத்தோலை ஞாயிறு, விபூதி திருவிழா உள்ளிட்ட வருடார்ந்த உற்சவங்களும் சில தேவாலயங்களில் விசேடமான திருவிழாக்களும் நடக்கும். வருடாந்தம் நடைபெறும் கிறிஸ்தவ திருவிழக்களில் மடுமாதா தேவாலய திருவிழா, கச்சதீவு அந்தோனியார் திருவிழா என்பன முக்கியமானவை. (கச்சதீவு அந்தோனியார் தமிழ்நாட்டு மக்களும் பங்கு பெறும் சமூக – பண்பாட்டு அசைவைக் கொண்ட திருவிழாவாகும்). மேலும் இந்துக் கோயில் திருவிழாக்களுடன் ஒப்பிட்டால் சாதிய நிலமைகள் குறைந்த திருவிழாக்களாக கிறிஸ்துவ திருவிழாக்கள் உள்ளன.
சமயச்சார்பற்ற சமூக நிலைப்பட்ட திருவிழாக்களைப்பொறுத்தவரை பொதுவாகவே சிறிய அளவில் நிகழ்பவையாகவே இருக்கின்றன. வடக்கில் பட்டத்திருவிழா போன்ற ஒரு சில சமயநிலைப்படாத திருவிழாகளே காணப்படுகின்றன.
மேலும் சமய நிலைப்பட்டிருந்தாலும் சமய நிலமைகளினைத்தாண்டி வேறு திசைகளில்சமூக ஊடாடல்களை நோக்கி விரிவடையக்கூடிய திருவிழாக்கள் ஒரு சிலவே நிகழ்கின்றன. குறிப்பாக கச்சதீவு அந்தோனியார் மற்றும் வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் கோவில் தீர்த்த உற்சவமாகத் தொடங்கி நிகழும் “இந்திரவிழா” என்பவை சமய வட்டங்களை , சடங்குகளை தாண்டி சமூக நிலைப்பட்ட பயில்வுகளுக்குள் செல்வதை அவதானிக்கலாம். இவ்விடத்தில்தான் இந்திரவிழா வரலாற்று அடிப்படையிலும் அக புற வடிவ அடிப்படையிலும் ஏனைய திருவிழாக்களில் இருந்து வேறுபடுவதுடன், மேலதிகமான வாசிப்புக்கான சாத்தியங்களையும் வழங்குகின்றது.
அமைப்பு (Structure)
இந்திரவிழா – நில அரசியல் பின்னணி
இந்திரவிழா நிகழ்கின்ற கரையோர நிலம் யாழ் குடாவின் ஏனைய கரையோர நிலத்திலிருந்து வேறுபட்ட வாழ்க்கை முறையைக்கொண்ட ஒன்றாக இருக்கின்றது. அம்மாற்றம் நிலத்தின் புவி அமைப்பில் தொடங்குகின்றது. வங்கக்கடலுடனும் இந்திய துணைக்கண்டத்தின் தெற்குப்பகுகளான தமிழ்நாடு, கேரளம் முதலான நிலங்களுடனும் இலங்குவாக கடற்தொடர்புகளை வைக்கத்தக்க துறைமுக முகப்புக்களில் இருக்கும் கிராமத்தவர்களால் நிகழ்த்தப்படும் ஒரு திருவிழாவாக இருக்கின்றது.இந்நிலத்த்தின் வரலாற்றுச் சான்றுகளை ஆராயும் செ.கிருஷ்ணராஜா போன்ற வரலாற்றாய்வாளர்கள். இந்நிலங்களை பண்டைய கடல்முகப்புத்தளங்களாகவும், நன்னீர் நீர்வழங்கல் மையங்களாகவும் தொல்லியல் மேலாய்வுகளின் அடிப்படையில்குறிப்பிடுகின்றனர். இங்கே கடலும் நிலமும் சார்ந்த வெளி உலகத்தொடர்பு மிக்க பரந்த கடல் நாகரிகம் நிலவிய தொடர்ச்சியான வாழ்வு முறை இருந்ததற்கான சான்றுகளை எடுத்துக்காட்டுகின்றார். யாழ்ப்பாணத் தொன்மை வரலாற்றினதும், இலங்கைத்தீவின் வரலாற்றினதும் தவிர்க்க முடியாத பக்கங்களை இட்டு நிரப்பக்கூடிய மையங்களாக இந்த நிலங்கள் இன்றுகாறும் இருந்து வருவதற்கான ருசுக்களை தொல்லியல்- வரலாற்றாய்வாளர்கள் முன் வைக்கின்றனர்.
இந்திரவிழாவின் நிகழ்த்துகையில் தொடர்புபடும் வல்வெட்டித்துறை, நெடியகாடு, ஊறணி, சக்கோட்டை என எல்லா பழைய பண்பாட்டு மையங்களும் இத்தகைய பண்டைய கடல் முகப்புத்தளங்களுக்குரிய வாழ்க்கைத்தொடர்ச்சியைக்கொண்டவை. நில –நிர்வாக அரசியலில் செல்வாக்கு மிக்க மக்களின் வாழ்வை இங்கு அவதானிக்கலாம்.
மீன்பிடி, கடல்வணிகம், கடற்பயணக் கட்டுமானவியல், விவசாயம் உள்ளிட்ட வரலாற்றுக்கால முதற்கொண்டு செல்வம் கொழிக்கும் பிரதான தோழில் மூலங்களைக்கொண்டவை இந்த நிலங்கள் இந்திய துணைக்கண்டத்துடன் மட்டுமன்றி வெளிநாடுகளுடனும் வர்த்தக தொடர்புகளை வரலாற்றுக்காலம் தொடக்கம், காலனிய காலத்திலும் அதன் பிறகும் கூட இங்கு அவதானிக்கலாம். இவ்வாறு கொழிக்கும் பொருளாதார வளம் இந்த நிலத்தில் இந்திரவிழா பட்டத்திருவிழா போன்ற பெருந்திருவிழாக்களை நிகழ்த்த வழிசெய்கிறது. இலங்கையின் ஏனைய கரையோரப்பிரதேசங்களில் இல்லாத பொருளாதார வளம் மிக்க சமூகத்தவர் வாழும் இடமாக இக்கடற்துறைகள் இன்றுகாறுமிருக்கின்றன.
சாதிய நிலமைகளை எடுத்துப்பார்க்கும் போது யாழ்ப்பாணத்தின் மைய நிலமையில் ஆதிக்கம் மிக்கதாயிருக்கும் வேளாளர்களைப்போல செல்வாக்கு மிக்க கரையார் சமூகத்தை பெருமளவில் கொண்ட இடமாக இந்திரவிழா நிகழும் நிலம் கொண்டிருக்கிறது. கடல் சார்ந்த மீன்பிடி, வணிகம் முதலான வற்றை மேற்கொள்ளும் இம்மக்கள் வடக்கில் ஏனைய கரையார் சாதியைச்சேர்ந்த மக்களில் இருந்து வேறுபட்ட வாழ்க்கை முறையைக்கொண்டவர்களாக சாதிய அடிப்படையில் நோக்கப்படுகின்றது. பெரும்பாலும் யாழ்ப்பாண மையச்சாதிய வரைபுக்குள் வராத நிலமை இங்கு காணப்படுகின்றது. இலங்கையின் கிழக்கு பிராந்தியத்தில் கரையார் சாதியினர் ஆதிக்க சாதியினராகவுள்ளனர். அவர்களைப்போலவே இந்நிலத்தில் ஆதிக்க சாதியினராக கரையார் சாதிய மக்களேயுள்ளனர்.
நாட்டார் வழிபாட்டுடன் அதிக நெருக்கத்தைக்கொண்ட மக்களாக இவர்களை இனங்காணமுடியும், அதிலும் முத்துமாரி முதலான பழைய தாய்த்தெய்வ வழிபாட்டு முறையின் தொடர்ச்சியை இங்கு செறிவாக அவதானிக்கலாம். ஆகமவிதிகளுக்கு கோயில்கள் பலவும் ஆட்பட்டாலும் இந்திரவிழா நடைபெறும் வல்வை முத்துமாரி முதலான கோயில்களில் நாட்டார் வழிபாட்டின் வடிவங்களை தொடர்ச்சியாக அவதானிக்க முடிகின்றது.
இங்கும் பொருளாதார நிலமைகளின் செல்வாக்கும் இந்து, கிறிஸ்தவ சமயங்களின் செல்வாக்கும் உள்ளது. பழைய நேர்த்தியான இயற்கை வாழ்வுக்குரிய நகர அமைப்பு பெரும்பாலும் குலையாது காணப்படும் கிராமத்தொகுதிகளை இங்கு அவதானிக்கலாம். காலனிய காலத்திலும் அதன் பின்னர் நிகழ்ந்த உள்நாட்டு இனமோதல்களிலும் ஏனைய வடக்கு நகரங்கள் அளவிற்கு பாதிக்கப்படாமல் பழைய மரபார்ந்த பெளதீக – அரூப பண்பாட்டு நிலமைகள் தொடர்ந்து நிலவும் இடமாக இருப்பதும் இந்நிலங்களை முக்கியப்படுத்துவதுன், பாடசாலைகள், சனசமூகநிலையங்கள், விளையாட்டுக்கழகங்கள், ஆலய நிர்வாக அமைப்புக்கள், சமூக செயற்பாட்டு அமைப்புக்கள் என்பன இங்கு ஆரோக்கியமாக இயங்கும் தன்மையினையும் அவை சமூக அசைவியங்குதலில் செல்வாக்குடன் இருப்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இத்தகைய அரசியல் சமூக பண்பாட்டு நிலமைகளின் செல்வாக்கினை இங்கு நிகழும் திருவிழாக்களிலும் அவதானிக்க இயலும். குறிப்பாக எல்லாத்திருவிழாக்களுக்கு உச்சமாக நிகழும் இந்திர விழாவில் இவற்றின் கூட்டு உறவு இயக்கத்தை அவதானிக்கலாம்.
இந்திரவிழா- ஒரு சுருக்க அறிமுகம்.
இந்திர விழா என்ற சொல்லாடல் பழந்தமிழ் இலக்கிய மரபில் இருந்து பெறுகின்ற தகவல்களை கொண்டு விளங்கிக்கொள்ளப்படுகின்றது. மதுரை , பூம்புகார் முதலான தென்னிந்தியாவின் பழைய பேரரசுகள் அரசியல் நிர்வாகம் புரிந்த நகரங்களில் கொண்டாடப்பட்டதற்கான தகவல்கள் கிடைக்கின்றன. குறிப்பாக சிலப்பதிகாரம், மணி மேகலை போன்ற காவியப் –புனைவுகளின் ஊடாக இந்திரவிழா பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. இந்து தேவதைக்கதை மரபு அல்லது புராண நம்பிக்கைகளின் படி தேவர்களின் தலைவனான இந்திரனை வேண்டி வசந்த காலத்தில் (சித்திரை பெளர்ணமி) இந்திரவிழா நிகழ்த்தப்படும். தூங்கெயிலெறிந்த தொடித்தோள் செம்பியன் என்ற சோழ மன்னன் இதை தொடங்கினான் என்று தமிழிலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
எனினும் இலங்கையின் வடக்கே வடமராட்சிப்பகுதியில் இருக்கும் வல்வெட்டித்துறை, நெடியகாடு போன்ற பல கிராமங்கள் சேர்ந்து சித்திரை முழுநிலவு தினத்தில் இந்திரவிழா எனும் கொண்டாட்டத்தை நிகழ்த்துகின்றனர். தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் இந்திரவிழாவிற்கும் வட இலங்கையில் நிகழும் இந்திர விழாவிற்கும் குறைவான ஒற்றுமைகளே உள்ளன. இந்திரவிழா என்ற சொற்பதம் மற்றும் அது சித்திரா பெளர்ணமியில் கொண்டாடப்படுவது. மேலும் கடலாடுதல் என்ற தென்னகத்தின் இந்திரவிழா குணாம்சத்தோடும் தொடர்புபடுகின்றது.
மற்றபடி தென் தமிழகத்தில் நிகழ்ந்ததாகச்சொல்லப்படும் இந்திரவிழாவின் காலமும் பொருளும் இலங்கயின் வடபுலத்தில் கொண்டப்படும் இந்திரவிழாவும் வேறுபட்டவை. இலங்கையின் வடக்கே நடைபெறும் இந்திரவிழா என்பது வட நிலத்துக்குரிய சமூக அரசியலையும் பண்பாட்டையும் உள்வாங்கிக்கொண்டு நிகழும் ஒன்றாகும்.
அடிப்படையில் இந்திரவிழா என்பது வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் கோவிலின் வருடார்ந்த மகோற்சவத்தில் ஒரு அங்கமாக நிகழும் தீர்த்த திருவிழா நாளாகவே குறித்த பிரதேச மக்களினால் பார்க்கப்படுகின்றது. எனினும் சுமார் ஐம்பது வருடங்களாகக் கொண்டாடப்படும் இந்திரவிழா தீர்த்த உற்சவத்தை தாண்டி, ஆகம வெளியில் இருந்து விலகி வீதியில் இறங்கி கிராமங்களையும் மக்களையும் நோக்கி பரவிச்சென்று ஒரு முழு நாளில் நிகழும் உற்சவத்தன்மையைக்கடந்த ஒன்றாக மாறி விட்டது.ஒப்பீட்டளவில் இந்திரவிழா இலங்கையில் நடைபெறும் பெரகரா முதலான திருவிழாக்களுக்கு நிகரான பெரிய திருவிழாவாகும்.
மிகப்பழைய வரலாற்றுச் செல்வாக்கு மிக்க கடல் முகப்புத்தளங்களான வல்வெட்டித்துறை , நெடியகாடு , ஊறணி, போன்ற பழய வரலாற்று மையங்களில் இத்திருவிழா நிகழ்கின்றது என்ற பின்னணியில் இத்திருவிழாவை விளங்கிக்கொள்ள தொடங்க வேண்டும். பொதுவாக ஆலயப்பண்பாட்டுச் சூழலில் இருந்து வருகின்ற சமூக மக்கள் வாழும் நிலத்தில் இந்திரவிழா கொண்டாடப்படுகின்றது. கடல்சார்ந்த நிலத்துக்குரிய வாழ்வு முறைக்குப்பழக்கப்பட்ட மக்கள் வாழும் இந்நிலத்தில் , இந்திரவிழா சிறப்பான ஒன்றாக் கருதக்கூடியது. எவ்வாறு தமிழ்நாட்டில் காவிரிக்கரையிலும் , புகார் கடற்கரையிலும் கடலாடுதலோடு இந்திரவிழா தொடங்குமோ அத்தகைய தன்மையினையே வல்வெட்டித்துறையிலும் அவதானிக்க இயலும். கடலாடுதலை இந்திரவிழா நடகும் நாளான தீர்த்த உற்சவத்துடனும் தொடர்பு படுத்த இயலும்.
1967 இல் து. நவரத்தினம் என்ற என்ற தமிழறிஞர் முத்துமாரி அம்மன் கோவிலில் நிகழும் தீர்த்த உற்சவம் வெறும் தீர்த்த உற்சவமாக மட்டும் நிகழாமல் அதனைத்தாண்டி செல்லும் பண்புகளைக்கொண்டிருப்பதனை அவதானித்திருக்கிறார். புகைக்கூண்டு விடுவது , கூத்துகள் , ஆடல் பாடல் செயற்பாடுகள் என்று ஒரு கூட்டான கலை நிகழ்வாக தீர்த்த உற்சவ தினம் நிகழ்வதை அவதானித்திருக்கிறார். அதனால் அத்திருவிழா நாளிற்கு பிரத்தியேகமான பெயரொன்றை வைக்க நினைத்திருக்கின்றார். அவருடைய இலக்கியப்பரிச்சம் சித்திரா பெளர்ணமி நாளில் நிகழும் இந்திரவிழாவை அதே நாளில் நிகழும் தீர்த்த உற்சவ நாளின் கொண்டாத்தோடு தொடர்பு படுத்திகொள்கிறார். அதன் பிரகாரம் அந்நாளிற்கு இந்திரவிழா என்ற பெயர் சூட்டப்படுவதுடன். அன்றிலிருந்து தீர்த்த உற்சவ நெறிமுறைகளுக்கு வெளியில் ஒரு சமூக கொண்டாட்டமாக இந்திரவிழா மாறத்தொடங்கியது.
இந்திரனுக்குப்பதிலாக அம்மன் இந்திர வாகனம் என்ற ஒன்றில் பொலிவிருத்தப்பட்டு திருவிழா தீர்த்த உற்சவமாகத்தொடங்கி இந்திரவிழாவாக பரந்து நிகழ்கின்றது. நீண்ட வீதியில் கிராம எல்லைகளை ஊடறுத்துசென்று, முத்துமாரியம்மன் கோயில் உட்பட பல கோயில்களையும் , மடங்கள் , கிராம அமைப்புக்கள் , குடியிருப்புக்கள் என ஒரு கூட்டு வாழ்கையை இணைத்து நிகழும் பெருந்திருவிழாவாக இந்திரவிழா விரிந்திருக்கின்றது
கட்டவிழ்ப்பு (Deconstruction)
திருவிழா ஒன்று சமூக நிலைப்பட்ட பெறுமதிகளை அடையும் போது அதனை அறிவார்ந்த தளத்தில் வைத்து வாசிக்கவேண்டிய தேவையியிருக்கிறது. ஒன்று கூடுதலின் உளவியல் பின்னணியில் தொடங்கி அதன் விளைவு வடிவங்கள், அமைப்பு வடிவங்கள் வரை வரலாறு, கலை வரலாறு, மானிடவியல், நாட்டுப்புறவியல், மொழியியல் முதலான கோட்பாடு மற்றும் அறிவித்துறைகளில் நிறுத்தி உரையாடப்படவேண்டியது அவசியமாகும். இவ்வகையில் திருவிழா மற்றும் இதர கொண்டாட்டாங்களை அறிவார்ந்த நவீன வாசிப்புமுறைகளான கொண்டாட்ட மயமாக்கல்(Carnivalizaion) , பெருங்குடிப் பண்பாடு(Popular culture) போன்றவற்றுடனும் இவற்றோடு சார்புடைய ஏனைய துறைகளான் சமூகவியல், மானுடவியல், தொல்லியல், தொன்மவியல் மற்றும் மொழி நிலைகளில் பரந்த விரிவான வாசிப்பு முறைகளை உள்ளடக்கி திருவிழாக்களை அறிதலுக்குட்படுத்த வேண்டும்.
திருவிழாக்களை ஆராயும் அறிவார்ந்த தளங்களில் கோட்பாட்டுப்பரப்பாகவும் தனியான அறிவுத்துறையாகவும் மாறியிருப்பவை கொண்டாட்ட மயமாக்கல்(Carnivalizaion) , பெருங்குடிப் பண்பாடு(Popular culture) என்பவை. இந்திரவிழாவை இத்தகைய வாசிப்பு முறைகளின் பண்புகளுடன் எவ்வளவு தொடர்பு படுத்த இயலும் என்பதை பார்க்க வேண்டும்.
இத்திருவிழாவில் பங்கேற்கும் மக்கள் குறித்த திருவிழாவை தாங்களொரு சமூக நிலைப்பட்ட திருவிழாவை நிகழ்துகின்றோம் என்ற பிரக்ஞைய அடைந்திருக்கின்றனரா என்ற கேள்வியிருக்கிறது. மக்களைப்பொறுத்தவரை முன்பு குறிப்பிட்டதனைப்போல இதுவொரு “சமய உற்சவமாகவே “ அவர்களால் நம்பப்படுகின்றது. இந்திரவிழா ஒரு வகை பெருங்குடி பண்பாட்டு (popular culture ) என்ற நிலையிலேயே அவதானிக்க வேண்டியிருக்கிறது. பெருங்குடிப்பண்பாடு என்பது ஒரு குறித்த சமூகத்தில் பெரியளவில் ஆதிக்கம் மிக்க குழுமங்களால் மேற்கொள்ளப்படும் பண்பாட்டு அசைவுகளைக்குறிக்கும். ஒரு சமூகத்தில் பரவலாக பலராலும் வெளிப்படுத்தப்படும் பண்பாட்டுக் கூறுகளான பண்பாடு. மொழி, உணவு, உடை, விளையாட்டுகள், கொண்டாட்டங்கள், இசை என பல வழிகளில் இது வெளிப்பட்டு நிற்கும். பண்பாட்டுக் கூறுகளை இவ்வாறு அழைப்பர்.
தமிழ்ச்சமூக மென்ற குழுமத்தின் பண்பாட்டு கூறுகளை பெருமளவில் பிரதிபலிக்கும் ஒன்றாகவே இந்திரவிழா காணப்படுகின்றது. ஆனாலும் ஏனைய திருவிழாகளில் இருந்து விலகி சமூக வெளியை நோக்கி நகரும் தன்மை இந்திரவிழாவிடம் காணப்படுகின்றதா என்பதனையும் அவதானிக்க வேண்டும். அவையே ஏனைய திருவிழாக்களில் இருந்து இந்திர விழாவை அமைப்பு, அர்த்த ரீதியான தனித்தன்மைகளுடன் வேறுபடுத்தி காண உதவும்.
திருவிழா பிரதியீடான சமூக வெளியை உருவாக்குகின்றது. அது மனித சுதந்திர உணர்வின் கூட்டுமனதினாலும் சமத்துவத்தாலும் வகை நிலைப்படுத்தப்படுகின்றது. (characteriesed by freedom) இந்துக்கோயிலின் தீர்த்த உற்சவமானது கடந்த ஐம்பது வருடங்களில் மெல்ல நகர்ந்து; விரிந்து இந்திரவிழா என்ற பெயரின் கீழ் அனைத்து இன, மத சமூகத்தினாலும் பங்குபற்றுதலுக்கு உட்படுகின்றது. கோயிலுக்கு வெளியே மக்கள் கிராமங்களையும் வீதிகளையும் திருவிழா நிகழ்களமாக மாற்றுகின்றனர். சுதந்திரமாக தமக்கிடையே களித்திருத்தலைப்பகிர்ந்துகொள்கின்றனர். இங்கே மத நிகழ்வு என்ற தன்மை தற்காலிகமாக வலுவிழந்து போகின்றது.
இங்கே தமிழ்நாட்டில் இந்திரனுக்கு வழங்கப்பட்ட தன்மை முத்துமாரி அம்மனுக்கு வழங்கப்படுகின்றது. பொதுவாக இந்திரன் என்ற தேவதைத்தொன்மத்திடம் இருக்கும் ஒரு வித உயர் குழாம் தன்மை (eliteness) முத்துமாரி போன்ற தாய்தெய்வ கிராமிய வழிபாட்டுக்குரிய தேவதைகளிடம் இருப்பதில்லை. இதுபோன்ற கிராமிய தெய்வங்கள் மக்களுக்கு மிக நெருக்கமானவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக விளிம்புநிலை மக்களின் கூட்டு நம்பிக்கையின் உருத்திரட்சியாகவும் உள்ளனர். எனவே இந்திரவிழாவில் முத்துமாரி என்ற தாய்த்தெய்வம் விழாவிற்கான தொடக்கப்புள்ளியாகவும் விழாவை மீண்டும் மீண்டும் ஆற்றுகை செய்ய செய்யும் ஒருன் சமூக நிலைப்பட்ட வடிவமாக இருப்பது ஒருவகையில் தீர்த்த உற்சவம் இந்திர விழாவாக பெருவடிவம் எடுக்க முதற்காரணமாகவும் மாற்றமுற்றிருக்கிறது.
தவிர இந்தியாவின் கொட்டாற்றங்கரையுடன்(கோடிக்கரை) தொடர்புபடும் கர்ணபரம்பரைக்கதையை வல்வை முத்துமாரி அம்மன் கொண்டிருப்பதும் அம்மன் கன்னியம்மனாகவும் திருவிழா, கொண்டாட்டம் முதலான சமூக நிகழ்த்துகை சடங்குகளை விரும்புவளாகவும் இருக்கின்றாள் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கின்றது. இங்கே கிராமிய வழிபாட்டு சடங்கு முறைகளாக இருக்கும் குளிர்த்தி, உரு ஆடுதல் ,தீமிதிப்பு, வேள்வி போன்றவை தொடர்ச்சியாக நிகழ்தப்படுகின்றன.
கொண்டாட்டமயமாக்கல் கோட்பாட்டளர்களும் சரி பெருங்குடி பண்பாடு பற்றிய வாசிப்பும் சரி திருவிழா ஒன்று கொண்டிருக்கும் சமூக நிலைப்பட்ட ஆரோக்கியமான தாக்கமாக அதனுள் பொதிந்திருக்கும் நாட்டுப்புறத்தன்மைகளைச் சுட்டிக்காட்டுகின்றன.
இந்திரவிழாவில் நிகழ்த்தப்படுவது சமூக நெருக்கம் கொண்ட கிராமிய அடையாளம் கொண்ட, மக்களுக்கு நெருக்கமான ஒரு தாய்த்தெய்வ வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாகவேயாகும். கிராமிய மரபுப்பண்பாட்டின் நிகழ்த்துகை என்பது நவதாராளவாதத்தினால் அக்கிரமிக்கப்படும் சமூகத்தின் கலைத்தன்மை கொண்ட எதிர்க்குரலேயாகும். குறித்த ஆலயவழிபாட்டு முறைகளின் திருவிழாக்காலமும் சரி அதன் அங்கமாக இருந்து விரிந்து செல்லும் இந்திரவிழாவும் சரி இத்தகைய கிராமிய மரபுவடிவங்களை ஏராளாமாக கையாள்கின்றது.
ஆதிக்கம் மிக்க கலாசாரக்கூறுகளால் மட்டும் திருவிழாக்கள் ஒழுங்கு செய்யப்படுதல் சமூக நிலைமைகளில் அந்நியத்தன்மையைக்கொண்டு வரும். எனவே பல்தன்மை மிக்க கலாசாரக்கூறுகளை திருவிழா கொண்டிருக்க வேண்டும். இந்திரவிழா பல்கலாசாரத்தன்மையை உள் வாங்கிய நிலைமைகளையே காணக்கூடியதாக இருக்கின்றது.
மேலும் மனிதர்களை அந்நியப்படுத்துதல் (alienation) தன்மைகளை திருவிழாக்கள் நீத்துப்போகச்செய்கின்றன என்பது உளவியல் அடிப்படையில் மனித மனவியலின் ஆரோக்கிய தன்மையில் செல்வாக்குள்ள ஒன்றாகும். மேலும் சமூக தகைமையிடல் (ranking) தன்மைகளை திருவிழா வலுவிழக்கச்செய்கிறது. குறிப்பாக தனிமனித உடல்கள் (individuals) கட்டமைத்துக்கொண்டிருக்கும் ஆண், பணம் படைத்தவன், சாதி நிலை , வர்க்க நிலைகள் என்பவற்றை திருவிழா வலுவிழக்கச்செய்கின்றது. இதனை bourgeois Ego என்ற கலைச்சொல்லின் மூலம் அடையாளப்படுத்துகின்றனர்.
இந்திரவிழா நிகழும் கோயிலும் அது சார்ந்த நிலமும் கடற்தொழிலை மேற்கொள்ளும் சமூக மக்கள் செறிந்து வாழும் ஒரு நிலமாகும். இங்கே இந்திரவிழாவின் போது ஒன்று கூடும் மக்கள் குறித்த நிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல , இங்கே பரஸ்பரம் புன்னகைக்கும்; உரையாடும், உணவுகளையும் , பகிர்ந்துகொள்ளும் மக்கள் பல பிராந்தியங்களைச்சேர்ந்தவர்கள். இங்கே சாதி , சமூக அந்தஸ்து என்பன கொண்டிருக்கின்ற அதிகார பிறழ் நிலமைகள் தூக்கி எறியப்படுகின்றன. அதாவது யாழ்பாண ஆழ்மனநிலை கொண்டிருக்கிற சாதி தொடர்பான நடத்தைக்கோலங்களுடன் தொடர்பு படுத்தி மிக நுண்மையாக ஆராய வேண்டியிருக்கிறது.
ஏதோ ஒரு வகையில் இத்தகைய காலம் காலமாக வந்து சேர்ந்த சாதிய உணர்வுகள் திருவிழாக்குள் தள்ளிவைக்கப்பட்டோ, அல்லது தற்காலிக மறதிக்குள்ளோ இருக்கின்றன என்றே எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கின்றது. திருவிழாவில் எங்கேனும் ஒரு பொறி உரசப்படும்பட்சத்தில் ஆழ்மனதிலுள்ள சமூக வயப்பட்ட சாதி தொடர்பான எண்ணம்,அல்லது உணர்நிலை வெளிப்படாது என்று எடுத்துக்கொள்ள முடியாது. ஆயினும் முற்போக்கான மானுட உரையாடல்கள் சாதிய நிலைமைகளை கரைப்பதற்கு சிறிய அளவிலேனும் மாற்றத்துக்கான குறைந்தபட்ச வெளியையேனும் இந்திரவிழா திறந்துவிடுவதையும் மறுக்க இயலாது. மேலும் இவ்வளவு காலமும் சாதி பற்றிய தொடர்ச்சியான வாசிப்பை நிகழ்த்தியதை விட தற்போதைய சூழ்நிலையில் இன்னும் நுணுக்கமாக இத்தகைய பண்பாட்டு வெளிகளுக்குள் சென்று சாதியம் பற்றிய வாசிப்புக்களை நிகழ்த்த வேண்டும். உண்மையில் திருவிழா சமூக நிலைமையை அடைந்துகொள்வதின் ஆரோக்கியமான பண்பாக இதனைப்பார்க்க வேண்டும். ஒரு நீண்டதெருவில் அலங்கார ஒளியின், இசையின் கலை வடிவங்களின் கீழ் லட்சம் கணங்களில் நிகழ்கின்ற சமூக கூட்டு உணர்வு தனி உடல்கள் கொண்டிருக்கின்ற அதிகார நிலமைகளை உடைத்து கொண்டாட்டத்தையும் அன்பையும் மட்டும் மிச்சம் விட்டுச்செல்கின்றது. இது பிரக்ஞை பூர்வமாக அல்லாமல் ஒரு தற்காலிக நிலையில் நனவிலியிலேயே நடப்பதையும் கவனிக்க வேண்டும்.
வணிகப்பண்பாட்டின் மையத்தன்மை ஆதிக்கம் என்பன எல்லாப் பொது நிகழ்வுகளிலும் பெரியளவில் தமது இருத்தலைக்கட்டிக்கொள்கின்றன. திருவிழாக்களிலும் அந்த நிலைமை இருக்கின்றது. ஆயினும் பெரும்பாலும் பெரிய வணிக மையங்கள் திருவிழாக்களை விளம்பரப்படுத்தலுக்காக பயன்படுத்துகின்றன. மற்றபடி திருவிழாவில் இயங்கும் வணிய மையங்கள் என்பவை பெரும்பாலும் உணவுப்பண்பாட்டுடன் சேர்ந்தவை. உணவுப்பண்பாட்டு வணிகம் என்பது திருவிழாவின் முக்கிய அம்சமாக இருக்கின்றன. ஆதாலால் திருவிழாக்களில் நாட்டுப்புறவியல் வணிகத்தின் அல்லது விளிம்பு நிலை மக்களின் வணிகத்திற்கு அதிக முக்கியம் வந்து சேர்கின்றது. கச்சான் வியாபாரியும், சுண்டல் வியாபாரியும் , தேனீர் வியாபாரியும் பெரும் வணிக மையங்கள் என்று கருதிவிட முடியாது , மாறாக அவர்கள் எளிமையான மக்களைச்சுரண்டாத வணிக நிலைமைகளைச் சேர்ந்தவர்கள். அத்தோடு திருவிழா ஒன்றின் உணவு மையங்கள் என்பவை அசைகின்ற தன்மை கொண்ட சிறிய வணிக நிலமைகள்தான். அவை திருவிழாக்களின் கொண்டாட்டத்தில் விளிம்பு நிலை மக்களின் வணிக இடங்களாகவே மாறி நிற்கின்றன. அவை எளிமையான சுரண்டலற்ற கொண்டாட்டத்தினை திறந்து விடுகின்றன. இத்தகைய கண்ணோட்டத்தையே இந்திரவிழாவின் வணிக நிலைகளின் மீது செலுத்த முடியும்.
மேலும் போர் சூழலுக்குள் இருந்து வந்த சமூகம் என்றவகையில் நீண்டகால போர்வடுக்களை ஆற்றுவதன், மடை மாற்றம் செய்வதன் முக்கிய பங்காற்றலை இத்தகைய மானுட நம்பிக்கையுடன் ஊடாட்டம் செய்கின்ற திருவிழாக்கள் கொண்டிருக்கின்றன. ஒப்பீட்டளவில் போருக்குப்பின்னர் கோயில்களில் அதிகரித்திருக்கின்ற பரிகாரம், நேர்த்தி முதலான செயற்பாடுகளும் மக்கள் திருவிழாபோன்ற சமூக அசைவுகளில் பங்கேற்கின்ற தன்மையும் அதிகரித்துள்ளது. வன்முறையும் அடக்கு முறையும் நிலவிய சமூகம் அவற்றின் தழைகளிலில் இருந்து விடுபடும் மனநிலையை, நம்பிக்கையை எட்டுவதில் திருவிழாக்கள் பெரும்பங்காற்றுகின்றன. நவீன திருவிழாவியல் கோட்பாட்டளர்கள் திருவிழாக்களில் நிகழும் இத்தகைய உளவியல் மாற்றங்களை அவதானிக்கின்றனர். அதேநேரம் மதநிறுவனங்கள் கொண்டுள்ள அதிகார வயப்பட்ட மானுட எதிர் பெருங்கதையாடல்கள், மூடநம்பிக்கைகள், வன்முறைசார் மனநிலைகள் எத்தகைய வீச்சுடன் இங்கு வலுவிழக்கின்றன என்பதும் பார்க்கப்படவேண்டிய ஒன்றாகும்.
கலையும் கற்பனாவாதமும்
கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதனைப்போல திருவிழா பண்பாட்டினாலும் மொழியினாலும் காவப்பட்டு வரும் தொன்மகதைகளினதும் நம்பிக்கைகளினதும் வெளிப்பாடாகும். எனவே இவை மானுட கற்பனைமற்றும் கலையுணர்வுடன் மிக நெருக்கமானவை. இந்திரவிழாவும் தொன்ம கதையாடல்களின் பின்னணியில் கலை(ART) , கைவினை(CRAFT) என்பவை நிகழும் ஒரு பொதுவெளியாகவே இருக்கின்றன.
இந்திரவிழா என்பது பகலின் கோயில் உற்சவத்தின் தீர்த்த உற்சவச் சடங்குகளை அதிகம் கவனிக்கிறது , மாலையில் இந்திரவிழாவாக மாறி நீண்ட பெரும் வீதியை வர்ண ஒளிகளால் நிறைக்கின்றது. இந்திரவிழாவின் கலையுணர்வின் உச்சமென்பது ஒளியினால் ஆற்றுகை செய்யப்படுகின்றது என்றே சொல்லவேண்டும். வீதிகளில், மரங்களில் , அலங்கார தோரணங்களில், கடற்கரை, கேணி, துரவு முதலான நீர் நிலைகளில் ,மேடைகளில் , கோயில் கோபுரங்கள், கட்டடங்கள், தெய்வ படிமங்கள் , கைவினை உருவங்களில் ஒளி கலையுணர்வோடு அலங்கரிக்கப்படும். இங்கே கலை என்பது குறித்த கிராமங்களில் இருக்கும் கிராம மக்கள் அமைப்புக்களால் போட்டியாக நிகழ்த்தப்படும். அழகியலின் உச்ச பெறுமானத்தின் பொருட்டான உழைப்பினை கொடுக்கும். இங்கே மக்கள் ஒளியைக்கொண்டு தங்கள் நிலத்துக்குரிய, நடத்தைக்குரிய , கலையுணர்வுக்குரிய வடிவங்களை கட்டமைக்கின்றனர். இக்கலை நிகழ்த்துதலின் பொருட்டு தமது உழைப்பின் பெரும் பொருளாதாரச்செலவை ஒதுக்கிக்கொள்கின்றார்கள். அடிப்படையில் கலை தனிமனித மனவெழுச்சியுடன் தொடர்புடையது, அது மனித தன்னுணர்வு தன்மையின் இன்னொரு வடிவமாகவும் இருக்கின்றது என்ற வகையில் இந்திரவிழாவில் ஒளியலங்காரம் என்பது முக்கிய கலைவடிவமாகக் கொள்ளக்கூடியது. குறிப்பாக அது சாதாரண மக்களிடம் இருந்து வெளிப்படும் அசலான கொண்டாட்டமாகவும் இருக்கின்றது.
இந்திரவிழாவின் ஆரம்பகாலம் உடல் ஆற்றுகை வடிவங்கள் திருவிழாவின் பிரதான அங்கங்களாக இருந்து வருகின்றன. முத்துமாரி அம்மன் காத்தவராயன் என்னும் மரபார்ந்த கூத்துடன் நெருக்கமான தொடர்பினைக்கொண்ட ஒரு தாய்த்தெய்வம். எனவே இங்கு காத்தவராயன் கூத்து முக்கியமான மரபுக் கலை வடிவமாகச் செல்வாக்குப்பெறுகின்றது. இவை தவிர ஆரம்ப காலங்களில் யாழ்ப்பாணத்தில் எழுச்சி பெற்ற கூத்து வடிவங்களும் திருவிழாவில் ஆற்றுகை செய்யப்பட்டமை பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. அவை சமூக சமய நிலைப்பட்டவையாகவும் , போராட்ட காலங்களில் அரசியல் நிலைப்பட்டவையாகவும் நிகழ்த்தப்பட்டமை பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. தவிர நகைச்சுவை மிக்க கேளிக்கை நிகழ்வுகளும், மிமிக்கிரி, வில்லிசை போன்ற நகைச்சுவை , விவாதங்கள் கொண்ட அம்சங்களும் ஆற்றுகை செய்யப்படுகின்றன.
வில்லிசை யாழ்ப்பாணத்தின் திருவிழாக்களில் தனியாக வளர்ந்து வந்த பெரும் மரபுக்கலைவடிவம். இந்திரவிழா வில்லிசை முதலான மரபார்ந்த கலைவடிவங்கள் ஆற்றுகை செய்வதற்கான வெளியை உண்டுபண்ணிக்கொடுக்கின்றது.
இசையைப்பொறுத்தவரை இரண்டு விதமான ஆற்றுகைகளை திருவிழாவில் அவதானிக்கலாம். ஒன்று மரபார்ந்த இசை வடிவங்களை ஆற்றுகை செய்ட்கின்றமையும் மற்றது ஏனைய நவீன இசை வடிவங்களை ஆற்றுகை செய்வதுமாகும். பாரம்பரிய இசை வடிவங்களில் கிராமிய இசை வடிவமான உடுக்கு முதலான இசைத்தல் ஆற்றுகைகளை திருவிழாவில் காணலாம். முத்துமாரி முதலான கிராமிய வழிபாட்டு முறைகளில் உடுக்கு மரபார்ந்த இடத்தை பிடித்துக்க்கொண்டுள்ளது.
மேலும் மேளம் , நாதாஸ்வரம் முதலான ஆற்றுகைகள், கோயில் உட்பிரகாரத்திலும் , வெளியில் மேள சமாக்களாக மேடைகளிலும் தொடர்ந்து நடைபெறும். இந்திரவிழாவில் நடைபெறும் மேள, நாதஸ்வரக் கச்சேரிகள் புகழ் பெற்றவை.
மேலும் கடற்கரைகளில் திருவிழா வீதிகளில் மேடைகள் அமைக்கப்பட்டு இசைக்கச்சேரிகள் இரவிரவாக நடந்துகொண்டிருக்கும். தொங்கும் மேடைகள் கடல் மேடைகளில் பாரம்பரிய இசைக்கச்சேரிகளும் சரி நவீன இசைக்கச்சேரிகளும் சரி நடந்தவண்ணம் இருக்கும். பாரிய ஒலிபெருக்கிகளும் மின் அலங்காரங்களுமாக இசை தெருக்களை அசைத்துச் செல்லும் உணர்வைத்தரும். இன்றுவரை இசை இந்திரவிழாவில் தனியான கொண்டாட்டமாக நிகழ்கின்றது.
நடன ஆற்றுகைகளைப் பொறுத்தவரை இசையைப்போலவே மரபார்ந்த ஆற்றுகைகளான கரகம், பரதம், முதலான ஆற்றுகைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். தமிழ்ச்சமூகத்தில் ஆராயப்படவேண்டிய “சின்னமேளம்” முதலான ஆற்றுகைகள் ஆரம்ப வருடங்களில் நடந்திருக்கின்றன. இன்றும் இசையுடன் கூடிய நவீன நடன ஆற்றுகைகள் இந்திரவிழா மேடைகளில் நிகழும். தவிர மேடைக்கு வெளியே, திருவிழா தெருக்களில் மக்கள் குழுக்களாக இணைந்து நடனமாடுவர். குறித்த அமைப்போ வடிவப்பெயரோ இல்லாத ஆத்மார்த்தமான கொண்டாட்டங்களை கொண்ட நடனங்கள் அவை.
அனுமதிக்கப்பட்ட வரம்பு மீறல்களைக்கொண்டு உணர்வு பூர்வமான நடத்தை , சடங்குக்கோலங்களை நிகழ்த்துதல்.( Sacrilegious) என்று திருவிழாவியல் கோட்பாட்டாளர்கள் குறிப்பிடும் தன்மைகளை இங்கே அவதானிக்க வேண்டும். உதாரணமாக சாதாரண நிலையில் தெருக்களில் நடனமாடுதல் என்பது சமூக கட்டுப்பாட்டில் பிறழ்வான ஒன்றாக பார்க்கப்படும். சாதாரண மக்களின் எளிய கொண்டாட்டம் கூட அதிகார வர்க்கத்தினால் நசுக்கப்படுவதற்கு இப்படியான சமூகக்கண்ணோட்டங்கள் அதிகார சமூகத்தினால் உருவாக்கப்பட்டவை. அவ்வாறான சமூக கருதுநிலைகளை அடைத்து ஆன்மாவின் உச்ச கொண்டாட்டத்தையும் உணர்வு வெளிப்பாட்டையும் திறந்து விடும் செயல்களை இந்திரவிழா போன்ற திருவிழாக்களில் காணலாம்.
சின்னமேளம் முதலான ஆற்றுகைகள் பாலியல் வன்முறையுடன் தொடர்புபடுபவை பண்பாட்டு நிலைமைகளை திரிப்பவை என்ற விமர்சனம் அக்காலத்தில் இருந்துள்ளது. ஆனாலும் மக்கள் அதனை கொண்டாட்டமாகப் பார்த்தனர். சமூகம் கட்டமைக்கின்ற புனித கதையாடல்களை மக்களே வலுவிழக்கச்செய்தனர். அதனை அசையும் சமூக வாழ்வின் பிறிதொரு அங்கமாகக்கொள்ளத்தொடங்கினர். பாலியல் வெளிப்பாடுகளும் சரி உடலின் ஆற்றுகை வடிவங்களும் சரி சமூக நிலைமைகளுக்கு எதிரானவையல்ல அவை மானுட வாழ்வின் அங்கங்கள் என்ற நிலையை மெல்ல மெல்ல மக்கள் அடைவதனை இத்தகைய திருவிழாக்களில் அவதானிக்க இயலும்.
திருவிழா ஒன்றில் நிகழும் மக்களின் படைப்பாற்றலும் கற்பனாவாதமும் அசலான ஒரு கலைவடிவம். இந்திரவிழாவில் ஒளியை , இசையை , நடனத்தை ஆற்றுகை செய்வதனைப்போல புதிய படைப்புவடிவங்களை மக்கள் கண்டடைந்திருக்கின்றார்கள். அவற்றை போட்டிகளாக விசேட வேடிக்கை நிகழ்வுகளாக செய்கின்றார்கள்.
உதாரணமாக “புகைக்கூண்டு விடுதல்” என்ற மரபார்ந்த படைப்பாற்றலை. வேடிக்கை நிகழ்வு என்பதனைத்தாண்டி தமது நிலத்தின் , சமூக படைப்பாற்றலின் அடையாளமாக இந்திரவிழாக்காலத்தில் மேற்கொள்வர். எப்படி பட்டத்திருவிழா, படகுப்போட்டி என்பன அங்கு நிகழ்த்தப்படுகின்றதோ அதைப்போல் பரசூட் போன்ற புகைக்கூண்டுகளை தயாரித்து வானத்தில் ஏவுதல் அங்கு நிகழ்கின்றது. வெறும் வேடிக்கை என்பதைக்கடந்து மரபார்ந்த கலை வடிவடிவத்தன்மைகளை அது பெறுகின்றது.
அதனைப்போல பெரும் பதாகைகளை, தெய்வ உருவங்களை கைவினை வடிவங்களாக, சித்திர திறன்களாக வெளிப்படுத்துகின்றனர். ஒளியும் , அலங்காரமும் கொண்ட உருவங்களை செய்கின்றனர். டிராகன் தொடக்கம் கண்ணன் பொம்மை வரை பல்கலாசாரத்தன்மை கொண்ட கலைவடிவங்களை அங்கு அவதானிகலாம்.
எதிர் அழகியல் உணர்வு வெளிப்பாடுகளை ஆரோக்கியமானதும் பெருங்கதையாடல்கள் புனித கட்டமைப்புக்களின் அதிகார நிலைகளை கேள்வி கேட்கும் தன்மை வாய்ந்தவையாகப் பார்க்கமுடியும். அதாவது கோரம், பயங்கரம் என்பவற்றைச் சித்தரிப்பதன் மூலம் அசலான அதிகாரத்தின் பயங்கரத்தன்மைகளை வலுவிழக்கச்செய்தலை கோருகின்றனர்.
உதாரணாமாக முகமூடிகள் , பேய் உருவங்கள் என்பவற்றை உருவாக்குதல் அணிந்து ஆற்றுகை செய்தலை அவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர். பழைய புராணங்கள் , இதிகாசக்கதையாடல்கள் உருவாக்குகின்ற பேய் பூதம் முதலான மூடநம்பிக்கைகளை அவற்றின் வழியே தகர்க்கும் செயற்பாடு திருவிழாவில் நடைபெறும். இது பயங்கரத்தை கலைத்தருணமாக மாற்றி யதார்த்த நிலையில் இருக்கும் வன்முறையை பிரதிபலித்தலோடு அதனை வலுவிழக்கச்செய்யும் உளவியல் சார் ஆற்றுதலாக பார்க்க இயலும். இந்திர விழாவிலும் சிறுவர்கள் , இளைஞர்கள் இத்தகைய உருவங்களை அணிந்துகொண்டு ஊர்வலமாக குரலெழுப்பிச்சென்று பயங்கரத்தின் வன்முறையை கேலிசெய்து அதன் தன்மையை வலுவிழக்கச்செய்கின்றனர்.
பொதுவாக கோயில் திருவிழாக்களில் ஒரு நாளில் நடைபெறும் “வேட்டைத்திருவிழாவை” இந்த இடத்தில் அவதானிக்க வேண்டும். தீமையை அழிக்க தெய்வம் வேட்டைக்குச் செல்கின்றது என்ற அடிப்படையில் குறித்தநாளில் கோயில்களில் வேட்டைக்காரகளைப்போல் வேடமிட்டு ஆற்றுகை செய்வார்கள். இதன் ஒத்த தன்மையாகவோ அல்லது அந்த நிகழ்வின் வளர்ச்சியடைந்த தன்மையாகவோ இதனை அவதானிக்க முடியும்.
மேலும் பேச்சுமொழியில் இருக்கின்ற கட்டற்ற தன்மைகளைக்கொண்ட உரையாடல்கள், கூக்குரல்கள், வித்தியாசமான ஒலி எழுப்பும் நடத்தைக்கோலங்கள் போன்ற இயல்பு நிலையில் அனுமதிக்கப்படாத செயற்பாடுகளை இங்கே மக்கள் ஆற்றுகின்றனர். உளவியல் வடிகாலாகவும் கொண்டாட்ட எல்லைகளின் மானுட நடத்தைக்கோலங்கள் மீதான வாசிப்புக்கோலங்களாகவும் இவற்றைக்கருதலாம்.
இவை இயல்புவாதத்தின் நடத்தைக்கோலங்களைத்தாண்டி கற்பனாவாதத்தின் நடத்தைக்கோலங்களாக அதிகாரத்தைக் கேள்வி கேட்க கூடிய எளிய மனிதப்பிரதிகளாக வெளிப்படுகின்றன. கேலியும், கேளிக்கையும், களித்திருத்தலும் எதிர்ப்பு வடிவமாக மாறி அதிகாரத்தையும் வன்முறையையும் எதிர்பாராத திசைகளில் இருந்து பீடித்து நலிவடையச்செய்கின்றன.
திருவிழாக்களை பொருளாக கொண்டு பால்நிலை அடிப்படையான உரையாடல்களையும் நிகழ்த்த வேண்டியிருக்கிறது.
ஒட்டுமொத்த உலகமும் அளவு அமைப்புக்கள் மாறுபட்டாலும் இன்னும் ஆண்மனநிலை(male gaze) தன்மைகளில் இருந்து முழுமையாக விடுபடவில்லை. அதுவும் தமிழ்ச்சமூகமென்பது மிக பிற்போக்குத்தனமான ஆண் மனநிலைகளை செறிவாக நிகழ்த்தும் ஒன்று. இவ்விடத்தில் கொண்டாட்டம் அல்லது திருவிழா ஒன்றில் அச்சமூகத்தில் நிலவும் பால்நிலை ஆதிக்கம் எவ்வளவு செல்வாக்குச்செய்கிறது என்பதை அவதானிக்க வேண்டியிருக்கிறது.
எழுத்தாளர் ஜமாலனின் ”பிளாஸ்ரிக் பெண்ணுடல்களும் பண்பாட்டுத்தையல் காரர்களும்” என்ற கட்டுரையின் பின்வரும் நறுக்கைக் கவனிக்கலாம்.
சங்க இலக்கியங்களில் வரும் “நெய்மணிமயக்கம்” போன்ற கிளர்ச்சி நிலைகள் ‘கார்னிவல் ’ கொண்டாட்டங்கள் பிந்தைய மதப்பண்பாட்டு ஆதிக்கத்தால் ஒழிக்கப்பட்டுவிட்டது, ஆக பண்டைய தமிழர்களிடம் ஒரு உடல் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக்கொள்ளும் தன்மையென்பது முற்றிலுமாக ஒடுக்கப்பட்டுவிட்டது. அதன் தொடர்ச்சியாக பெண் ஒரு வளமான நிலமாக உருவகப்படுத்தப்பட்டு ஆழ்மாக உழுதுபயிரிட வேண்டிடிய ஒரு களமாக (site) மாற்றப்பட்டுவிட்டாள். பெரும்பாலான மதங்களின் புனித மறைகள் பெண்ணை ஒருவளமான நிலமாக உருவகப்படுத்துவதன் அடிப்படை இதுதான். பெண்வெளி (feminine space) என்பது பெண் களமாக (feminine site) மாற்றப்பட்டுவிட்டது. இதைத்தான் இன்றைய பண்பாட்டு வரலாறு சாதித்துள்ளது. இவ்வாறான பெண் களத்தைக்காக்க கட்டமைக்கப்பட்டதே ஆண் என்கின்ற உடல்..”
இவ் அடிப்படையில் பெண் வெளிக்கு எதிரான , அல்லது பெண்ணை கட்டுப்படுத்தும் பண்பாட்டு நிலைமைகளை கையாளும் ஆண் சமூக அமைப்பு திருவிழா ஒன்றின் கொண்டாட்டத்தில் பெண்ணுகு எத்தகையை வெளியை அனுமதிக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். இங்கு அனுமதித்தல் என்பது ஆண் அரசியலின் சொல்லாடலாக மாறி நின்கின்றது. ஒரு பெண் நடனமிடவோ கூக்குரலிடவோ தமிழ்ச் சூழலின் திருவிழா அனுமதிக்கின்றதா. ஏன் சுதந்திரமாக உலவுதல் கூட எவ்வளவு சாத்தியப்படுகின்றது என்பதில் தொடங்கி இதை உரையாடலாம். இங்கே திருவிழாக்கள் சமூகத்தில் நிலவும் அதே ஆண் களியாட்ட மனநிலையிலேயே இயங்குகின்றன. அவை பெண்களின் சுதந்திரத்தையோ கொண்டாடத்தையோ வரையறைக்கு உட்பட்டவையாகவே தொடர்ந்தும் வைத்திருக்கின்றன. சமூக உளவிய மாற்றம் நிகழாமல் பால்நிலை சமத்துவத்தினை திருவிழாக்களிலும் அவதானிக்க இயலாது. இந்திர விழாவைப்பொறுத்தவரையில் பெண்கள் குடும்பங்களாக (பெரும்பாலும் ஆண் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும் குடும்ப அமைப்புக்கள்) ஆண் சமூக மனம் கட்டமைத்த கொண்டாட்ட எல்லைகளுக்குள்ளேயே பெரும்பாலும் இயங்குகின்றது. சமூக புனித படுத்தலின் கீழ் பெண் தொடர்ந்தும் திருவிழாவிலும் சமநிலையில்லாத இடத்திலேயே நிற்க அனுமதிக்கப்படுகிறாள்.
காட்சிப்படுத்துதலின் பண்பாடு என்ற நிலைக்குள் நாடக அரங்கியல் துறைகளில் கையாளப்படும் மீபெருப்பித்து நிகழ்த்துதல் போன்ற உத்தி முறைகளின் அதிவடிவமாக அதாவது இயல்பு வாழ்விற்கு வெளியே ஒரு நாடகப்படைப்பினைப்போல நிகழ்த்திக்காட்டும் ஒன்றாக இத்தகைய திருவிழாக்களைப் பார்க்க முடியும். பெருங்காட்சி , அதிசயத்துவம் முதலான பண்புகளை தரிசிக்கும் கூறுகளில் ஒன்றாக திருவிழாக்களை அவதானிக்கலாம்.
மரபுரிமை மற்றும் சமூக செயற்பாடாக திருவிழாக்கள்.
இந்திரவிழா போன்ற திருவிழாக்கள் மரபுரிமை அடையாளப்படுத்தலின் கூட்டு தன்மைகளைக்கொண்டவையாக பார்க்க கூடியவை. குறிப்பாக அவை கலாசார மரபுரிமைகள் (Cultural Heritage) ஆக கருதக்கூடிய தன்மையை கொண்டிருப்பவை. காலாசார மரபுரிமை பற்றி International Council on Monuments and Sites (ICOMOS) பின்வருமாறு வரையறை கூறுகின்றது
Cultural Heritage is an expression of the ways of living developed by a community and passed on from generation to generation, including customs, practices, places, objects, artistic expressions and values. Cultural Heritage is often expressed as either Intangible or Tangible Cultural Heritage
(ICOMOS, 2002).
இதன் அடிப்படையில் கலை வெளிப்பாடுகள் , மரபார்ந்த ஆற்றுகைகள் , உணவு முறைகள், உடையலங்காரங்கள், நம்பிக்கைகள் , சடங்குகள், வழக்காறுகள் ,இடங்கள் , பண்டங்களை ஒரு கூட்டு தளமாக கொண்டு இயங்கும் இந்திரவிழா போன்ற திருவிழாக்களின் ஒவ்வொரு கூறுகளும் குறித்த நிலத்தினை பிரதி பலிக்க கூடியதும் வரலாற்று தொடர்ச்சியின் கதையாடல்களைக் காவக்கூடியதுமான தன்மை பெற்றவை. எனவே ஒட்டு மொத்த திருவிழாவும் தேசிய கலாசார மரபுரிமையாகவும் சர்வதேச மரபுரிமை அசைவுக்குள் சேர்க்கப்பட்டு வாசிக்க கூடியதாகவும் மாற்றப்படுதல் அவசியமாகும். சர்வதேச கலாசார மரபுரிமைகளை அடையாளப்படுத்தும் நிறுவனங்கள் குறிப்பிடும் பெரும்பாலான பண்புகளை இந்திரவிழா கொண்டிருப்பதனையும் இங்கு அவதானிக்கலாம். இலங்கையில் பெரகரா போன்ற கலாசார மரபுரிமைகளுக்கு நிகரான தன்மை இந்திரவிழாவிற்கும் காணப்படுகின்றது.
மேலும் மரபுரிமைகளை பாதுகாத்தல் பரவலடையவும் தொடர்ச்சி தன்மையை பேணவும் உதவும் சுற்றுலாத்துறையின் கரிசனையும் இத்தகைய திருவிழாக்களின் மீது ஏற்படுத்தப்படுதல் பிரதேசம் தாண்டி, ஒட்டு மொத்த மானுட குலத்தை நோக்கி ஒரு மரபுக்கொண்டாட்டத்தினை எடுத்துச்செல்ல உதவும்.
மேலும் திருவிழாக்களை சமூக செயற்பாடாக நிகழ்துகை செய்வதும் வாசிப்பதும் முக்கியமான உரையாடலாக வளர்ந்துவருகின்றது. கொண்டாட்டமயமாக்கல் கோட்பாட்டின் இலக்கும் அதையே கோருகின்றது எனலாம். சமூக மாற்றத்தின் பொருட்டு, வன்முறையும் சுரண்டலும் மிக்க அதிகார சிந்தனைக்கும் அதிகார வர்க்கத்திற்கும் எதிராக கலை, மரபு வாழ்வு முறைகளை இணைப்பதன் மூலம் கொண்டாட்டத்தை கட்டியெழுப்பி ஒரு சமூக போராட்ட வடிவமாகவும் , சமூக விழிப்புணர்வு வடிவமாகவும் கையாள இயலும். சமீபத்தில் தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட ஜல்லிகட்டு போராட்டம் இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.
முடிப்பு.
தனிமனித , சமூக மற்றமைகள் , கீழ்மைகளை திருவிழாத்தன்மைகளால் எவ்வாறு கையாள முடியும் என்ற கேள்வியும் உள்ளது. உதாரணமாக திருவிழாக்களில் அதிகமாக நடைபேறும் சகல பால்நிலைகள் மீதும் நிகழ்கின்ற பாலியல் வன்முறைகள், திருட்டு போன்ற மனித கீழ்மைகளை எப்படிப்பார்க்க போகின்றோம் என்ற கேள்வியிருக்கின்றது. தவிர திருவிழா எல்லைகளுக்குள் மட்டும் வலுவிழந்து போகும் அதிகார முகங்கள் எல்லை கடந்தவுடன் நேரடியாக சமூக தளைகளுக்குள் சென்று விடுகின்றன என்ற விமர்சனமும் முன் வைக்கப்படுகிறது. எனினும் நவீன உளவியலும் ஏனைய கலை இலக்கிய மொழி வாசிப்பும் மனித சமுதாயத்தின் சிந்தனை வளர்ச்சியை, ஜனநாயத்தன்மையை நோக்கி நகர்ந்து வன்முறைக்கு எதிராக நிற்கும் மனநிலையை படிப்படியாக அதிகரிக்கும் பண்பினை திருவிழாக்கள் செய்வதனை உளவியலாளர்களும் சமூகவியலாளர்களும் ஏற்றுக்கொள்கின்றனர்.
இந்திரவிழா போன்ற திருவிழாக்களை மானுட குலம் நிகழ்த்துதல் என்பது பரவலாக்கப்படவேண்டிய ஒன்று. குறிப்பாக இலங்கை முதலான போர் வடு உள்ள தேசங்களில் மரபார்ந்த தளங்களில் கலை, இலக்கிய நிலமைகளின் கீழ் மக்கள் ஒன்று கூடுதல் உளவியல் மனவடுக்களை நீக்குவதோடு , சமூக மாற்றத்தினை நோக்கிய கூட்டு நடத்தைக்கு அவர்களை இட்டுச்செல்லும்.
ஒரு பின் போர்ச்சூழலில் இருக்கும் சமூகத்தின் உளநெருக்கடியென்பது இயற்கை நிலையையும் பண்பாட்டையும் கொண்டு நிலைமாற்றத்திற்கு உட்படுத்தப்படவேண்டியது. அதைச் செய்யும் உச்ச நிகழ்வாக திருவிழாக்களைப்பார்க வேண்டும். போர்க்காலத்திற்குப்பிறகு நாட்டார் வழிபாடு உள்ளிட்ட சடங்குகளைக்கொண்டிருக்கும் சமய நிறுவனங்களில் மக்கள் நேர்த்தி,களிப்பு,பிரார்த்தனை முதலானவற்றில் ஈடுபடுவது சடுதியாக அதிகரித்துள்ளதனை வெளிப்படையாகவே அவதானிக்கலாம். உச்சமான பயம், இழப்பு, துன்பம் என்பவற்றின் மூலம் ஏற்பட்ட உள உடல் நெருக்கடிகளை நிலைமாற்றக்கூடிய அல்லது வலுவிழந்து போகக்கூடிய உச்சமான நம்பிக்கையாக வழிபாடுகளையே மக்கள் கைக்கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக திருவிழாக்களிலும் பண்டிகைகளிலும் விரதகாலங்களிலும் விசேட தினங்களிலும் தமது நேர்சைகளை நிறைவேற்றுவதற்காக ஒன்று கூடுகின்றனர். அதிலும் இந்திரவிழா, கச்சதீவு திருவிழா போன்ற சம்யநிலையைத்தாண்டி சமூக நிலைப்பட்ட, நாட்டார் முறைமைகளுக்கும் இயற்கைக்கும் நெருக்கமான இத்தகைய திருவிழாச்சடங்களை ஆற்றும் போது நெருக்கடி வலுவிழப்புச் செய்யப்படுவது செறிவாக நடக்கின்றது.
விலங்கு பலியிடலை வடக்கில் நீதிமன்றம் தடை செய்துள்ளது. காலம்காலமாக ஆற்றப்படும் மரபார்ந்த பண்பாட்டு அடையாளமாகவும் சமூக தொழில்நிலைகள் மற்றும் உச்சமான திருவிழா உளவியலுடன் தொடர்பு பட்ட இத்தகைய அடையாளம் சார்ந்த பண்பாட்டுக்கூறுகள் தடைசெய்யபப்டும் போதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போதும் மனிதர்கள் கண்டடைந்த இயற்கையான சுலபமான நெருக்கடி தீர்கும் வாழ்வியல் அழிந்து போகின்றது. ஆகமவிதிகளும் அதிகாரமும் ஊடாடும் உலகமயமாதல் சூழலில் தொன்மங்களும் வழக்காறுகளும் வழக்கொழிக்கப்படுகின்றன. இன்று காறும் மரபார்ந்த பண்பாட்டுக்கூறுகளை ஓரளவேனும் பேணுகின்ற அதிமுக்கிய நிகழ்வாக திருவிழாக்களையே தற்பொழுது இனங்காண முடிகிறது. எனவே அதிகார, மையநிலைப்பட்ட பிறழ்வுகளைத்தவிர்த்துக்கொண்டு. ஆரோக்கியமான சமூக வயப்பட்ட பண்பாடு மற்றும் இயற்கை நிலை கொண்டாட்டமயமாக்கல்களை தொடர்ந்து நிகத்துகை செய்தலும் வாசித்தலும் வேண்டப்படும் ஒன்றாகவிருக்கிறது. ட
உசாத்துணைகள்.
01.Bakhtin, Mikhail (1941). Rabelais and his world. Bloomington: Indiana University Press.
02.Bakhtin, Mikhail (1929). Problems of Dostoevsky’s Poetics. Minneapolis, MN: University of Minnesota.
03.Dentith, Simon (1995). Bakhtinian Thought: An introductory reader. Routledge.
04.Andrew Robinson(2009) In Theory Bakhtin: Carnival against Capital, Carnival against Power.
05.Konrad Eisenbichler(1999) Carnival and the carnivalesque : the fool, the reformer, the wildman, and others in early modern theatre
06.Jerome Braun, Lauren Langman(2012)Alienation and the Carnivalization of Society.
07.http://www.artandpopularculture.com/Carnivalesque.
08. சிலப்பதிகாரம், இந்திரவிழவூரெடுத்த காதை.
09.மணிமேகலை, விழாவறை காதை.
10.செ.கிருஷ்ணராசா. (2015) தொல்லியலும்வடமராட்சியின் பண்பாட்டுத்தொன்மையும்..பிறைநிலாவெளியீட்டகம்.
11. சுகந்தினிதனாபாலசிங்கம் .வல்வையின்வரலாற்றுச்சுவடுகளும்பண்பாட்டுக்கோலங்களும்.
12..பழங்கால யாழ்ப்ப்பாணம் .எஸ்.இராசநாயகம்
13.RE –OPENING OF A NORTH CEYLON PORT- Mr.K. Muthukumarasuvamy
14.ந.நகுல சிகாமணி (1997) வல்வையின் வரலாற்றுச்சுவடுகள்.
15.கோபிசந்நாரங் ,அமைப்புமையவாதம் பின் அமைப்பியல் மற்றும் கீழைக்காவியவியல். சாகித்திய அக்காதெமி வெளியீடு.
16.தமிழவன். அமைப்பியலும் அதன் பிறகும், அடையாளம் வெளியீடு.
17.முனைவர்.ந.முத்துமோன், அமைப்பியல் பின் அமைப்பியல். காவ்யா வெளியீடு.
18.இலங்கையின் சமூகத்தையும் பண்பாட்டையும் வாசித்தல், தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள், இரண்டாவது தொகுதி.
19.பக்தவச்சலபாரதி,தமிழர் மானிடவியல், மெய்யப்பன் தமிழாய்வகம்.
20.பக்தவச்சலபாரதி , இலக்கிய மானிடவியல், அடையாளம் வெளியீடு.
21.டி.தருமராஜ், தமிழ் நாட்டுப்புறவியல், பெண்கள் , கலைஞர்கள் மற்றும் தெய்வங்கள். புலம் வெளியீடு.
22. Dominic Strinati, introduction to theories of popular culture.1995