யதார்த்தன்

யதார்த்தன் (பிரதீப் குணரட்ணம்) பிறந்தது, 08.03. 1993. யாழ்ப்பாணத்தில் - தென்மராட்சியில் உள்ள சரசாலை என்ற ஊரில் . ஆரம்பக் கல்வியை மட்டுவில் கமலாசனி வித்தியாலயம், பரந்தன் இந்துக் கல்லூரி, கிளிநொச்சி மகா வித்தியாலயம் , மன்னார் பரிகாரிகண்டல் அ.த.க , புத்தளம் சென் மேரிசிலும் , உயர்தரத்தினை மானிப்பாய் இந்துக்கல்லூரியிலும் பூர்த்தி செய்தவர். பாடசாலைக் கல்விக்குப் பின்னர் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் மொழியியல் துறை சிறப்பு கலைமாணி பட்டத்தினைப் பெற்றுக்கொண்டார். மொழியியல் துறையில் ` வட இலங்கைக் கண்ணகி மரபுக்கதைகள்` என்ற மொழியியல் சார் ஆய்வை மேற்கொண்டிருந்தார். முதுமாணி பட்டப்படிப்பு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் பூர்த்தி செய்திருக்கிறார். 2013 முதல் நண்பர்களுடன் இணைந்து யாழ் இலக்கியக் குவியம் என்ற இலக்கியம் சார் அமைப்பில் பயணித்திருக்கின்றார். அதன் பின்னர் விதை குழுமம் என்ற சமூக செயற்பாட்டு அமைப்பில் செயற்பாட்டாளராக இயங்கினார். விதை குழுமம் முன்னெடுத்த செயற்பாடுகளில், மரபுரிமைகள் சார் கவனப்படுத்தலை மேற்கொள்ளும் தொன்ம யாத்திரை என்ற இதழின் ஆசிரியர்களில் ஒருவராக இருந்தார். சமகாலத்தில் சமூக, பண்பாட்டு அசைவியக்கம் சார் கட்டுரைகளையும் செயற்பாட்டுத்தளங்களில் எழுதி வந்தார். அத்தோடு இலக்கியம் சார்ந்து ஆரம்பத்தில் சிறுகதைகளை எழுதி வந்தார் 2017 இல் ஆக்காட்டி பதிப்பகம் `மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்` என்ற பெயரில் தொகுப்பாக வெளியிட்டது. அதன் பின்னர் 2022 ஆம் ஆண்டில் இவருடைய முதல் நாவலான `நகுலாத்தை` வடலி பதிப்பகத்தினால் பிரசுரிக்கப்பட்டது . 2022 முதல் சமூக செயற்பாட்டு தளங்களில் இருந்து விலகி முழுமையாக இலக்கியச் செயற்பாடு சார் தளத்தில் இயங்கிவருகிறார். சமகாலத்தில் சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் எழுதி வருவதுடன் தற்பொழுது இவருடைய இணையத்தளமான yatharthan.com இல் தொடர்ந்து எழுதி வருகிறார்.