வாழ்வைக் கலையாக்குதல் பற்றிய உரையாடல் | ’செம்முகம்’ சீலன் | உரையாடல் #03

செம்முகம் ‘சீலன்’  என்று அழைக்கப்படும் சத்தியசீலன்  சமகால  இலங்கைத் தமிழ் அரங்கக் கலைஞர். செம்முகம் ஆற்றுகைக்குழு என்ற பெயரில் அரங்கச் செயற்பாட்டு  வேலைகளை தன்னுடைய குழுவினரோடு முன்னெடுத்து வருகின்றார்.  பல்வேறு அரங்குவடிவங்களையும், பரிசோதனைகளையும், சமூகத்தை முன்னிட்டு மேற்கொண்டு வருகின்றார். அவருடைய இந்த அரங்க வெளிப்பயணம் பற்றியும் அவருடைய கலைசார் நிலைப்பாடுகள் பற்றியும்  பகிர்ந்துகொண்ட உரையாடல் இது.

செம்முகம் ஆற்றுகைக் குழுவின் தொடக்கம் மற்றும் அதன் பயணம்  பற்றிப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

செம்முகம் ஆற்றுகைக் குழுவினுடய பயணம் கிட்டத்தட்ட 15 வருடங்களைக் கடந்திருக்கிது.  2004 ஆம் ஆண்டு தேவானந்தா  என்பவர்  ”செயற்திறன் அரங்கு இயக்கம்என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் நாடக நிறுவனமொன்றை ஆரம்பித்திருந்தார். 2000 ஆம் ஆண்டு ஆற்றுகை செய்யப்பட்டஅக்கினிப் பெருமூச்சுஎன்ற நாடகத்தோடு செயற்திறன் அரங்கு இயக்கம் என்ற அந்த நாடக நிறுவனம் உருவாக்கப்பட்டிருந்தது. 2004 இல் நான் அந்த நாடகக் குழுவோடு இணைந்து கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் குழந்தை . சண்முகலிங்கம், தேவானந்தா போன்ற பல பல ஈழத்து நாடக ஆளுமைகளிடம் பயிற்சிகளைப் பெற்று நாடகங்களை ஆற்றுகை செய்வதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. இதுவே எனது ஆரம்பப் பயணமாக இருந்தது. 

2007, 2008 ஆண்டு காலப்பகுதி, இறுதி யுத்தக் காலப்பகுதியில் யுத்தம் தீவிரமாக இருந்த போது கிட்டத்தட்ட 40 இளையவர்கள் பயிற்சிகளை மேற்கொள்ளுறதோட சில அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியோடு நாடக வேலைகளைச்  செய்துகொண்டிருந்தம்.  2008 காலப்பகுதியில் யுத்தம்  உக்கிரமடைந்து கொண்டிருந்ததால் இளமாக்கள் இணைஞ்சு வேலை செய்யுறதில சிக்கல்கள் இருந்தன. நிறுவனம் அங்கேயே இருந்த போதிலும் கூடி வேலை செய்ய முடியாத நிலமை, இவ்வாறான வேலைகள் செய்ய முடியாத சூழ்நிலையும் காரணமாக இருந்ததால நாங்களெல்லோருமே அந்த இடத்தை விட்டு விலகவேண்டியதாக இருந்தது.  அப்படி விலகிய போதிலும் நாடகத்தில் ஆர்வமாக இருந்த எனக்கு இந்தக் களங்களுமே கிடைக்கவில்லை. பாடசாலைகள் மட்டங்களில பயிற்சிப் பட்டறைகள்,   சிறுவர்களுக்கான சில நாடகங்களை கிராமங்களில அங்கங்க தீவிரமாவே செய்து கொண்டு இருந்தன்வேற வேலைகளை விட  எனக்கு நாடகங்களில இருந்த ஆர்வத்தால தொடர்ச்சியா செய்து கொண்டு இருந்தேன். என்னுடைய நாடக வேலைகளிலும்  என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் அக்கறையுடையவர்கள், நண்பர்கள், தோழர்கள் தொடர்ச்சியா நாடக வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறதைப் பாத்திட்டு  ஒரு நிறுவனமா, நிறுவன மையப்படுத்தி நிறைய வேலைகளை செய்யலாம் என  சொல்லியிருந்தார்கள். அவைன்ர வேண்டுகோளுக்கு இணங்க அவேன்ர உதவிகளோட ’’செம்முகம் ஆற்றுகைக் குழு’’ எண்ட இந்த ஆற்றுகைக் குழுவை உருவாக்கினம். நான் மட்டுமில்ல. பல நண்பர்களின்ர உதவியோட உருவாக்கிக் கொண்ட நேரம், எப்பிடி போகப்போறம்? என்ன செய்யப்போறம் எண்ட எண்ணம் எதுவும் இருக்கேல்ல. கூடிய விரைவில நாடகம் ஒண்டைச் செய்வம் எண்ட நோக்கத்தோட அந்த அமைப்பை, குழுவை உருவாக்கி அதனுடைய பயணம் தான் இண்டைக்கு  கிட்டத்தட்ட 15 வருசங்களைக் கடந்து வந்திருக்கிது.  

இந்த 15 வருடங்களில் என்ன மாதிரியான நாடகங்கள் போட்டிருக்கிறீங்கள்? எத்தின நாடகங்கள் போட்டிருக்கிறீங்கள்? என்ன மாதிரியான இடங்களில வேலை செய்திருக்கிறீங்கள்? யாழ்ப்பாணத்தை மையம் கொண்டுதான் வேலை செய்திருக்கிறீங்களா? அல்லது யாழ்ப்பாணத்திற்கு வெளியிலும் நாடகங்கள் போட்டிருக்கிறீங்களா? 

ஆரம்பத்தில நாங்கள் தொடங்கேக்குள்ள இதை தான் செய்யோணும் இப்பிடித் தான் செய்யோணும் எண்டு யோசிக்கேல்ல. எந்த இலக்கும் எங்களுக்கு இருக்கேல்ல. நாடகம் செய்ய வேணும் அது மக்கள் மத்தில கொண்டு போய் சேர்க்கோணும். நாங்கள் நாடகம் சார்ந்த ஆர்வம் மிக்கவர்கள், நாடகத்தை தொழில் முறையா செய்யிறதில் ஆர்வமுள்ள கொஞ்ச பேர் இருக்கிறம். அப்ப எங்களுக்கான ஒரு பாதையும் பயணமும் தேவைப்பட்டிருந்தது. அதே நேரம் மக்கள் மத்திலயும் இடைவெளி இருக்கிது. சமூகம் சார்ந்த கருத்துக்கள், அரசியல் பொருளாதாரம் சார்ந்த கருத்துக்களை மக்கள் மத்தில கொண்டு போய் சேர்க்கிறதுக்கு ஒரு கலை வடிவம் தேவையா இருக்கு. அதுக்கு நாடகம் ஒரு நல்ல வடிவம் என்றதை நாங்கள் கற்றுக் கொண்டதால செய்தம். முன்னுக்கு இப்பிடி தான் இந்த நாடக வடிவம் இருக்கொண்டும் எண்ட தெளிவு இருக்கேல்ல. ஒரு நாடகத்துக்கு அது இருக்கவும் தேவை இல்ல, காலம் அதை தீர்மானிக்கும். ஆனால் மக்கள் மத்தில இப்பிடியான ஒரு விஷயத்தை கொண்டு போய் சேர்க்கோணும் எண்ட தேவை இருந்தது. ஆரம்பத்தில வீதி நாடகங்களைச் செய்தம். அதுக்கு பெரிய பொருட் செலவு தேவை இல்ல. ஆக்கள் கனக்கப் பேர் தேவை இல்ல. நல்ல அரங்கத் துறையில தேர்ச்சி பெற்ற கொஞ்சப் பேர் இருந்தா செய்யலாம். நாங்கள் சின்னச் சின்னதா வீதி நாடகங்களை முதல் செய்தம். அதுக்குப் பிறகு பார்த்தால் குழந்தை மா. சண்முகலிங்கம் அவர்கள் செய்த கூடி விளையாடு பாப்பா, சிறுவர் அரங்கு சார்ந்து பஞ்சவர்ண  நரியார் நாடகம். போன்ற நாடகங்களில் முக்கிய பாத்திரம் ஏற்று நடிச்சிருந்தன். அப்பேக்க பார்த்தா சமூகத்துக்குள்ள சிறுவர் நாடகத்துக்கான இடைவெளி இருந்திச்சு. பாடசாலைகள் மத்தில அது இல்லாமலிருந்திச்சு. அதின்ர தேவைய நாங்கள் ஆழமா உணர்ந்தம். மக்கள் மத்தில ஒரு அரங்க வேலை தேவைப் படுது என்ற படியால பிறகு நாங்கள் சிறுவர் நாடகங்களை அதிகமாகச் செய்தம். சிறுவர் நாடகங்கள் ஆற்றுகை செய்றதுக்கு கடினமானவை. சிறுவர் நாடங்களைச் செய்யுறதுக்கு நாடகப் பயிற்சியும் கொஞ்ச அரங்கத் தேர்ச்சியும் தேவை. அந்த பயிற்சி குழந்தை மா. சண்முகலிங்கத்திட்ட இருந்து கிடைச்சபடியால நாங்கள் சிறுவர் நாடகங்களை தயாரிச்சுப் போட்டுக்கொண்டிருந்தம். சிறுவர் நாடகம், வீதி நாடகம் அதோட மேடை நாடகங்களையும் செய்திருந்தம்.  மேடை நாடகத்தை உடனயே செய்ய முடியாது ஏனெண்டா பொருட் செலவு, ஒரு இடத்துக்கு ஆக்களை எல்லாம் கூப்பிட வேணும், அதுக்கான வேலைகள் கொஞ்சம் வேற மாதிரி இருக்கும். மக்கள் மத்தில தெருவழி மாதிரி நாடகங்களைக் கொண்டு போறது இலகு. மேடை நாடகங்கள் செய்து கொண்டு இருக்கேக்குள்ள வெவ்வேறு நட்பு சக்திகள் இணைந்து கொண்டு பலப்படுத்தி இருந்திச்சினம். அதுக்குப் பிறகு மொழிபெயர்ப்பு நாடகங்கள் செய்தம். அது செய்து கொண்டிருக்கேக்குள்ள தான் தென்னிலங்கையில இருக்கிற சகோதர மொழிக் கலைஞர்களுடைய தொடர்புகளும் கிடைச்சது. அதுக்குப் பிறகு அரச நாடக விழாவில போய் பங்குபற்றினம். வருசம் தோறும் நடக்கிற அரச நாடக விழாவில பங்குபற்றேக்குள்ள சில தொடர்புகள் கிடைச்சிந்திச்சிது. 2010 ஆம் ஆண்டு மக்கள் களரி தன்னுடைய நகரும் அரங்கைக் கொண்டு இஞ்ச வருது. அந்த அரங்கில இலங்கையின் மிகப் பிரபலமான ஒருவரான பராக்கிரம நெதியல்ல வாறார். அவற்ற நாடகங்களும் வருது. செக்கு, சரண் தாஸ், மாயப்பட்டாடை இவை சிங்களத்திலயும் தமிழிலயுமாக ஒரு மாசத்துக்கு மேலை தங்கியிருந்து போட்டிச்சினம். அந்தச் சமயத்தில அவர்களுக்கும் எங்களுக்குமான நட்பு ஏற்பட்ட பிறகு 2015 ஆம் ஆண்டு பராக்கிரம நெதியல்ல மக்கள் களரியோட இணைஞ்சு வெண்கட்டி வட்டம் எண்ட நாடகத்தை செய்திருந்தார். அதில செம்முகம் ஆற்றுகைக் குழுவும் இணைஞ்சு வேலை செய்திருந்தம். இரண்டு மணித்தியாலம் கொண்ட அந்த நாடகம் மிகவும் பிரமாண்டமான ஒரு படைப்பாக இருந்தது. கிட்டத்தட்ட 35 கலைஞர்களோட இலங்கை பூராகவும் 10, 15 இடத்தில அதைச் செய்தனாங்கள்.  காலத்தின்ர தேவைக்கு ஏற்ற மாதிரி எங்கட நாடக வடிவங்களை மாற்றிக்கொண்டம். பொம்மைகளரங்கு, பொம்மலாட்டம் முகமூடி அரங்கு போன்றவற்றைச் செய்திருக்கிறம். அதுவும் பிள்ளைகளோட மகிழ்ச்சியோடயும் கற்றல் கற்பித்தலோடயும் சேர்ந்து போறதுக்கான இலகுவான வழியா இருந்தது. அதை விட கோமாளிகள் அரங்கு செய்திருக்கிறம். வெளிநாட்டில இருந்து வந்த பயிற்சியாளர்கள் எங்களுக்கு ஒரு நாள் பயிற்சி தந்திருந்தார்கள். இந்த கோமாளி அரங்கு பிள்ளைகள் மத்தில இப்ப வரைக்கும் பிரபல்யமான ஒரு வடிவமா மாறி இருக்கிது. இரண்டு பேர் நிகழ்த்தக் கூடிய அரை மணித்தியாலம் கொண்ட நாடகம் அது. நாடக அரங்கம் காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ற மாதிரி மாறிக் கொண்டே போகுது.

தமிழ் நாடகச் சூழல் சார்ந்து வடக்கிலும் தெற்கிலும் அமைப்பாக இயங்குபவர்கள் மத்தியில் சுயாதீனமாக இயங்கக் கூடிய அமைப்புக்களை உருவாக்குவதிலும் அதை கொண்டு நடாத்துவதிலும் அவர்களது இலக்கை நோக்கிப் போவதிலும் தம்மை ஒரு அமைப்பாக மாற்றுவதிலும் காணப்படுகின்ற பிரச்சனைகளாக இருப்பவை எவை? 

இலங்கையில தமிழ் நாடகச் சூழலில நாடகம் தொழில் முறையாக பெரிதாக இருக்கேல்ல. இசை நாடகம் கூத்துக் கலைஞர்கள் அங்க ஒண்டு இங்க ஒண்டா இருந்தவை. அந்தக் கூத்துக் கலைகளோட தொடர்புபட்ட உதிரிகளான ஒப்பனைக் கலைஞர்கள், நாடக மேடையமைப்புச் செய்பவர்கள் போன்றவர்களே தொழில் முறையா செய்து கொண்டிருந்தார்களே ஒழிய தொழில் முறைக் கலையா நாடகம் பெரிசா வளரேல்ல. அதே மாதிரி நான் நினைக்கிறன், கிட்டத்தட்ட 50 காலப்பகுதிகளில நாடகம் ஒரு இயக்கமா தோன்றி இருக்கு. அதாவது போராட்ட இயக்கங்கள் தோன்றி, தீண்டாமை வெகுஜன இயக்கங்கள் ஆரம்பமான காலங்களில நாடக இயக்கங்களும் மெதுவாக தொடங்கி இருக்கிது. எல்லோருக்குமே தெரியும் கந்தன் கருணை நாடகம் மிக முக்கியமான ஒரு நாடகம். ஆலயப் பிரவேசத்துக்காகப் போடப்பட்ட நாடகம். அந்த நாடகத்தை வெவ்வேறு வகையா வெவ்வேறு குழுக்கள் செய்திருக்கினம். ஒரு நாடகம் போடப்பட்டதன் மூலம் ஒரு எழுச்சி வந்து ஒரு சாதிக்கெதிரான ஆலயப் பிரவேசத்திற்கான ஒரு போராட்ட வடிவமா மாறேக்குள்ள ஒரு இயக்கமா நாடக வடிவம் இருந்திருக்கிது என்ற விசயம் முக்கியமானது. ஆனாலும் அந்தக் குழுக்கள் நிரந்தரமா இருக்கேல்ல. வேலைகள் முடிஞ்ச உடனை அந்த குழுக்கள் கலைஞ்சு போகினம். தொடரியக்கமா செயற்படேல்ல. வேற ஆக்களைப் பற்றிக் கொண்டு நகர்ந்து போகிதே ஒழிய ஒரே இயக்கமா அப்பிடியே இருக்கேல்ல.  அதுக்குப் பிறகு நீங்கள் பாத்தீங்களெண்டால் அண்மையில மறைஞ்ச பாலா மாஸ்டர் எண்டு சொல்லப்படுற பாலசிங்கம் போன்றவர்கள் நாடக இயக்கமா சேர்ந்து நிறைய கிராமங்களில வேலை செய்திருக்கினம். எந்தக் கொடுப்பனவோ, பயிற்சி பெற்ற கலைஞர்களோ இல்ல. சமூக ஆர்வம் மிக்க ஆக்கள் மட்டும் தான் அங்க போவினம். அவர்களை நடிக்கப் பண்ணுறது அவருடைய வேலையா இருந்தது. அப்பிடி நாடகம் போட்டு அவர்கள் நிலமில்லாத மக்களுக்கு அரச நிலங்களைப் பிடிச்சுக் குடுத்திருக்கினம். ஏனெண்டா இது எங்கட நிலம் எங்கட உரிமை எண்டதை நாடகங்கள் மூலம் விளங்கப்படுத்தி  காணிகளைப் பெற்றுக் கொடுத்திருக்கினம். இப்பிடித் தான் நாடக வரலாறு வந்தது. இது ஒருபக்கம் நடந்து கொண்டிருந்த அதே நேரம் கிராமங்களிலயும் ஒரு நாடக வழக்கம் இருந்து வந்தது. சினிமாப் பாணி நாடகங்கள், கோயில்களில் இசை நாடகக் கூத்து மரபுக்கள் என ஒரு பக்கம் போய்க்கொண்டிருந்தது. இப்பிடி நடந்து கொண்டி இருக்கேக்குள்ள நான் நினைக்கிறன், நாடக அரங்கக் கல்லூரி 70 ஆம் ஆண்டு காலப்பகுதில உருவாகி வந்தது. அதுக்குப் பிறகு சிதம்பரநாதன் அவர்களின் பண்பாட்டு மறுமலர்ச்சிக் கூடம் போன்ற அமைப்புக்கள் விடுதலைப் புலிகள் காலத்தில கலை பண்பாட்டுக் கழகம் எண்டு சொல்லி வெறுமனே நாடகம் மட்டும் இல்லாமல் வேறு கலைகளையும் உள்ளடக்கி செயற்பட்டுக் கொண்டு போயிருந்தது. மதம் சம்மந்தப்பட்டதாக ஏற்கனவே திருமலைக் கலாமன்றம் இருந்தாலும் அதன் ஊடாக வெவ்வேறு வேலைகள் செய்துகொண்டு வந்திருந்தார்கள்.  இந்தப் பயணங்களே எங்களுக்கு ஒரு அனுபவமாக இருந்தது. அந்தக் கற்றலே ஒரு நாடகத்தை நிறுவனமயப்படுத்தியோ அல்லது ஒரு இயக்கமாகவோ எப்பிடிக் கொண்டு போகலாம் எண்டு எங்கள யோசிக்க வைச்சிருந்திச்சு. சரியாக முடிவெடுக்க முடியாத சூழல்ல நாடகத்தை செய்து கொண்டு போறம். ஆனால் நாடகத்தை ஒரு இயக்கமா மாத்தி நாடகப் பயணமா கொண்டு போறதுக்கு அந்த குழுவிட்டயும் சரி அதனை முதன்மைப்படுத்துபவர்களிட்டயும் சரி அரசியல் சித்தாந்தம் இருக்க வேணும். சும்மா செய்ய ஏலாது, அது தேவையும் இல்ல. மக்கள் சார்ந்தோ அல்லது அரசியல் சார்ந்தோ ஒரு தெளிவோ அல்லது எனது சமூகம், எனது நாட்டின் அரசியல் சூழல், பண்பாட்டுச் சூழல் சார்ந்து ஒரு தெளிவு இருந்தால் தான் அதை ஒரு இயக்கமா செய்யவேண்டிய தேவையே வருது. இல்லாட்டி பொழுது போக்கா ஒரு நாடகத்தை நாங்கள் செய்து போட்டுப் போகலாம். அப்ப இந்தச் சூழல்ல, யுத்தம் முடிந்த காலப்பகுதிக்குப் பிறகு ஒரு கூட்டு வாழ்க்கை முறை இல்லாமல் போகுது . நாடகம் என்றது ஒரு கூட்டுக் கலை. கூட்டு வாழ்க்கை முறை இல்லாமல் தனித்தனியா போகேக்க நாடக வேலைகளும் மிகப் பலவீனமாத் தான் இருக்கிது. ஆகவே ஒரு இயக்கமா அதை கொண்டு போகும் போது நிறையச் சவால்கள் இருக்கிது. ஒரு நாடக நடிகர், ஆற்றுகையாளர் ஒரு எதிர்பார்ப்புமே இல்லாமல் முன்னுக்கு வர வேணும் அவருக்குக் கொடுப்பனவு இருக்காது. அப்பிடித்தான் ஒரு இயக்கத்தை நடத்திக் கொண்டு போகலாம். தமிழ் நாட்டில பிரளயன் மாதிரியான ஆக்கள் அதைச் செய்து கொண்டு போகினம். அவர்களுக்கு இடதுசாரிக் கட்சிகள் தங்களுடைய ஆதரவை வழங்கிகுறார்கள். மக்கள் மத்தியில் வேறு அமைப்புகளிட்ட இருந்து காசு சேகரிச்சு அவற்றைச் செய்து கொண்டு போகினம். ஆனால் இஞ்ச அப்பிடியொரு நாடக நிறுவனத்துக்கோ, நாடக இயக்கத்துக்கோ பின்னணில உதவுறதுக்கு எந்தச் சக்திகளுமே இல்லை. மக்களுக்கு அந்தப் பழக்கமும் இல்ல. நாங்கள் மக்கள் மத்தில நாடகம்  போட்டு மக்களிட்ட இருந்து காசு வாங்கி நாடகத்தைப் பாக்கிறதோ அல்லது கருத்துக்களைக் கொண்டு போற பழக்கமும் சரியா வரேல்ல. இந்த நிலைல அரச சார்பற்ற நிறுவனங்கள் வந்து இந்தக் கலை வடிவங்களை தங்களுடைய தமது வேலைக்கான பிரச்சார நோக்கங்களுக்காக கையில எடுக்குது. நாடகத்தின்ர தராதரமோ அப்பிடியான விசயங்களைப் பாக்காமல் அதற்காக நிறைய காசை செலவளிக்கிது. நாங்களும் செய்திருக்கிறம். எங்கட நிறுவனமும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்காக செய்திருந்தாலும் கூட நாடக நிறுவனத்தை ஒரு இயக்கமா, தன்னார்வமா குழுக்கள் முன்னெடுக்காமல் இருக்கிறதுக்கு இதுவும் ஒரு காரணம். இண்டைக்கு வந்து நாடகத் துறைல எந்தப் பயிற்சியும் இல்லாத தொடர்ந்து பயணிக்காத ஒருவரெண்டால் காசு குடுக்க வேண்டி இருக்கிது. அது வந்து இப்பிடியான வேலைகளைப் பலவீனப்படுத்துது, ஆகவே இப்பிடியான சூழல்ல ஒரு நாடகத்தை ஒரு இயக்கமா அல்லது ஒரு அமைப்பா கொண்டு போறதில நிறையச் சவால்கள் இருக்கு. அடுத்தது நாடகப் பயிற்சிப் பட்டறை எண்டுறது ஒரு பயிற்சிப் பாசறை தான். கிட்டத் தட்ட ஒரு ஐந்து வருசம், நான்கு வருசம் ஒருவர் அங்கு பயணிக்க வேண்டி இருக்கிது. முழுமையான பயிற்சிகளைப் பெறோணும், தன்னோட உடல், குரல், மனம் எல்லாத்தையும் தயார் பண்ண வேணும், அந்த அணியோடு நல்ல உறவு நிலையைக் கட்டி எழுப்ப வேணும். அப்பிடி முன்னுதாரணமா இருக்க வேண்டிய தேவைகள் இருக்கிறதால இண்டைக்கு இருக்கிற வாழ்க்கைச் சூழல்ல இது கேள்விக்குட்படுத்தப்படுறதால இன்றைய இளம் ஆட்கள் ஆர்வமிருந்து வந்தாலும், நாடகங்களுக்குள்ள வந்தாலும் உடனையே வெளியேறுகிற நிலமை இருக்கிது. இது தான் இண்டைக்கு இருக்கிற சூழல். 

பல்கலைக் கழகங்களில இந்த நாடகமும் அரங்கியலும் என்ற துறைசார்ந்த கல்விமுறை பற்றி அறிந்திருப்பீர்கள், ஒவ்வொரு வருடமும் அக்கற்கை நெறி சார்ந்த மாணவர்கள் வெளியே வருகின்றார்கள், அதே மாணவர்கள் சமூக இயக்கங்களோடு அதே சமூகப் பொறுப்போடு வாழ்க்கைய நோக்கிய நாடகப் பயணத்தோடு இணைஞ்சு கொள்ளுறதில இண்டைவரைக்கும் ஒரு போதாமை இருக்கிது. நூறு பேரில ஒராளோ இரண்டு பேரோதான் வெளில வருகினம். இந்த மாதிரியான முறைசார் கல்வி முறைல அதாவது பல்கலைக் கழகம், பாடசாலைகளில இருக்கக் கூடிய நாடகம் சார் கல்வி நெறியை எடுத்துக் கொண்டால் பிள்ளைகள் எதை தெரிவு செய்கின்றார்கள் என்ற கேள்வி இருக்கின்றது. இதை நீங்கள் எப்பிடிப் பார்க்கின்றீர்கள்? உண்மையில் நாடகக் கலையின் நோக்கம் பற்றிய தெளிவோ அரசியல் பிரக்ஞையோ இல்லாத குழுவை உருவாக்குகின்ற நிலையை எப்பிடிப் பார்க்கின்றீர்கள்? அதற்கான தீர்வுகளாக எவற்றைச் சொல்வீர்கள்?

எங்கட நாட்டைப் பொறுத்த வரைல கல்வித் துறையில சிங்கள மொழி நாடகத்துக்குப் பிறகு கல்விப் புலத்தில தமிழ் மொழிக்கு பிந்தி தான் வந்திருந்தது. பல்கலைக் கழக பாடத்திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டது மிகவும் பிந்தித் தான். உண்மையில் பாடத்திட்டத்திற்குள் நாடகத்துறை கொண்டுவரப்படுவதற்கு சண்முகலிங்கம், சிவத்தம்பி போன்றவர்கள் மிக முக்கியமானவர்கள். இவர்களே பாடத்திட்டமாக கொண்டு வந்திருந்தார்கள். ஆனாலும் அவர்களுக்கு என்ன நோக்கம் இருந்தது என்பதை புரிஞ்சு கொள்ளேலாம இருக்கிது. ஏனெண்டால் நாடகத்தை ஒரு பாடமா கொண்டு வந்தது எண்டுறது சங்கீதம், நடனம், சித்திரம் போன்றவை போல நாடகத்தையும் சேர்க்க யோசிச்சிருக்கலாம். நாடகம் மாதிரி தான் இப்ப சங்கீதம், நடனம், சித்திரமும் இருக்கிது. அதை ஒரு தொழில் முறையா கொண்டு வர முடியாமல் தான் இருக்கு. அதே மாதிரித் தான் நாடகத்தைக் கற்கிற மாணவர்கள் கூட பாடசாலையில மற்றப் பாடங்களை எப்பிடியொரு பரீட்சைக்குத் தயார்படுத்திற, போட்டிக்குப் புள்ளிகளை எடுப்பதற்கே பயிற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பாடசாலைகளில அந்த 45 நிமிட பாடவேளையைத் தாண்டி வேறை ஒண்டுமே செய்யேலாது. ஆனால் எங்கையோ ஒண்டிரண்டு பாடசாலைகளில சில நாடக முயற்சிகளைச் செய்யினம். சில நாடகங்களைப் போடுகினம். இந்த மனோநிலையில தான் பிள்ளைகள் வருகினம். நாடகத்தைப் படிச்சு என்ன செய்யலாம்? நல்ல புள்ளிகள் எடுக்கலாம். பல்கலைக் கழகத்துக்குப் போகலாம் திரும்ப ஒரு ஆசிரியரா வரலாம். ஆனால் செயற்பாட்டாளர்களா அவர்களை எண்டைக்கும் உருவாக்கினதா யாருமே இல்லை. இண்டைக்கு எங்களை அறியாமலே நாடக செயற்பாட்டாளர்கள் எண்டு நாங்கள் சொல்லிக் கொண்டாலும் கூட செயற்பாடு எண்டுறது வேறை, நாடகம் நடிக்கிறது எண்டுறது வேறை, நாடகத்தை ஒரு இடத்தில கொண்டுபோய் போடுறது எண்டுறது வேறை, நாடக செயற்பாடு எண்டுறது வேறை. முற்றுமுழுதான செயற்பாட்டாளர்கள் எண்டுறது வேறை. இந்த நிலமைல யாரையுமே குறை சொல்ல முடியாது. பண்பாட்டு சூழலுக்குள்ளால வாறம், ஒரு கலை சார்ந்தோ, நாடகம் சார்ந்தோ தீவிரமாக இயங்கக் கூடிய ஒருவரை அங்கீகரிக்கக் கூடிய சூழல் இங்க இல்ல. ஒருத்தர் நாடகத்தை பல்கலைக் கழகத்தில படிச்சிச்சிட்டு நாடகம் செய்யப் போறன் எண்டு வெளிக்கிட்டால் எந்த அங்கீகாரமும் அவர்ட குடும்பத்திலயும் கிடைக்காது, சமூகத்திலயும் கிடைக்காது. ஏன் நீ நாடகத்தைச் செய்யுறாய்? எண்டு தான் கேப்பினம். ஏனெண்டால் நாடகம் எந்த வருமானமும் ஈட்டித் தராது. அடுத்தது நாடகம் எதையும் சாதிச்சுக் காட்டேல்ல எண்ட மனப்பாங்கும் இருக்கு. ஆகவே பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியில் அவற்றை நாங்கள் எதிர்பார்க்கிறது பிழை. சமூகம் அப்பிடித் தான் கட்டமைக்கப்பட்டிருக்கிது. நாடகம் சார்ந்த மனோநிலை அப்பிடித் தான் இருக்கிது.   

சமூகத்தில காணப்படுகின்ற சாதியம், சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற வன்முறைகள், பால்நிலை சமத்துவமின்மைகள் முதலான விடயங்களை சமகால நாடகங்கள் எவ்வாறு பேசுகின்றன? அவற்றில் போதாமைகள் இருக்கின்றதா? அதனுடைய விளைவுகள் எப்படி இருக்கின்றது? 2000 ஆம் ஆண்டுகளில இருந்து தொடங்கி நீங்களும் அவ்வாறான நாடகங்களைச் செய்வதால் அதனுடைய இடைவெளிகள், வளர்ச்சிநிலை, முதிர்ச்சி எவ்வாறு இருக்கின்றது? 

பெண்ணொடுக்குமுறை, சாதிய ஒடுக்குமுறை, பண்பாட்டு ஒடுக்குமுறை போன்ற விடயங்களைப் பார்க்கும் போது இண்டைக்கு நிறைய மாற்றங்கள் வந்திருக்கிது. இந்தத் துறைக்குள்ள அவற்றைப் பேசக் கூடியவர்கள் நிறையப் பேர் வந்திருக்கினம். இருந்தாலும் ஆழமான பார்வையா இன்னுமே அது பேசப்படேல்ல. கலை வடிவங்களுக்குள்ள சாதிய ஒடுக்குமுறையா இருந்தாலும் சரி, பெண் ஒடுக்குமுறையா இருந்தாலும் சரி ஆழமாகப் பேசப்படவில்லை. அதுக்கொரு காரணமிருக்கு. நான் வந்து நாடகக் கலைப்படைப்பில் பெண்ணொடுக்குமுறை பற்றி ஆழமா பேசுபவனாக இருந்தால் நான் எப்பிடி அந்த விசயத்தில இருக்கிறன் எண்டுறது ஒண்டு இருக்கு. என்னுடைய பிள்ளைக்கு நாளைக்கு சீதனம் வாங்காமல் கலியாணம் செய்ய நான் தயாரா? என்ர வீட்டில சமைக்கும் போது பங்கெடுக்க தயாரா இருக்கிறனா? என்ர பிள்ளைய பராமரிக்க நான் தயாரா? ஆருமே நாங்கள் தயாரில்லை. அப்ப நான் எப்பிடிப் பேசுறது? அவ்வளவு ஆழமான பார்வை இல்லை. அப்பிடித் தான் சாதிய ஒடுக்குமுறையும். சாதி பற்றியெல்லாம் பேசுவம். நாடகம் போடலாம், முக்கியமான இடம் ஒண்டு வரேக்க அந்த இடத்தில நான் என்ன முடிவெடுக்கப் போறன்? எப்பிடி நான் நிக்கிறன்? வாழ்ந்து காட்டுதலின் ஊடாக தன்னுடைய வாழ்க்கையில் அதைப் பின்பற்றக் கூடிய ஒருவர்தான் அதைக் கலை வடிவமா பேச முடியும். அதால இண்டைக்கு பட்டும் படாமலும் அல்லது பேசினா எடுபடும் எண்டதுக்காகப் பேசுற நிலமை தான் இருக்கிது. ஆழமான பார்வையா பெண் ஒடுக்குமுறையும் சரி, சாதிய ஒடுக்குமுறையும் சரி ஏன் அரசியல் கூட எங்களுக்குப் பேசத் தெரியேல்ல. கலை வடிவங்களுக்குள்ளால தெளிவான எங்களுடைய தமிழர்களுடைய அரசியல் நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவாகப் பேசமுடியாமல் இருக்கிறது. ஆனால் சகோதர மொழி நாடகங்களைப் பார்த்தீர்களாகவிருந்தால் இண்டைக்கு ஒரு பாலியல் தொழிலைக் கூட மிகத் தெளிவாகப் பேசுகிறார்கள். ஆண், பெண் இரண்டு பேருக்கு இடையில் இருக்கின்ற உறவு நிலையைக் கூட வெளிப்படையாக ஒரு மேடையில சாதாரண ஆட்களுக்கு விளங்கக் கூடிய வகையில பேசுவதை நாங்கள் பார்த்திருக்கின்றோம். நிறைய நாடகங்கள் செய்கின்றார்கள். ஆனால் அந்தத் தெளிவு எங்களிட்ட இல்லை. அந்த நாடகங்களை இங்கயும் பார்த்தால் தான் அதை ஒப்பிட்டுப் பார்க்கலாம். திரை மறைவில நிண்டு தான் எதையும் பேசுறம். இன்னும் ஒரு தயக்கத்தோட தான் இருக்கிறம். சாதியம், பெண்ணொடுக்குமுறை, பண்பாட்டுச் சூழலைப் பற்றிப் பேசினாலும் அந்த நிலமைல தான் இருக்கிறதைப் பாக்கிறம். மற்றது யாருமே ஒரு கலந்துரையாடலுக்குத் தயாரில்லை. ஒரு நாடகத்தைச் செய்திட்டு, நாடகம் சார்ந்த அரங்கப் படைப்பைச் செய்திட்டு ஒரு திறந்த கலந்துரையாடலுக்கு வந்து விமர்சனப் பார்வையை எதிர்கொள்ளுறதுக்கு யாருமே தயாரில்லை. நாசூக்காக ஒரு போட்டிக்காக, விருதுக்காகப் போடுறம், அதோட முடிஞ்சிது. கலந்துரையாடலுக்கான ஒரு அரங்கா யாருமே அதைத் தொடுறதே இல்லை. 

கூத்துக்கு ஒரு பாரம்பரியமிருப்பது போல, நாடகத்திற்கும் நீங்கள் சொன்னது போல ஒரு பாரம்பரியம் இருக்கின்றது. கொலனித்துவ காலங்களில் மதம் பரப்புவதற்காகவும், போராட்ட காலங்களில் தெருக்கூத்துக்கள் போன்றன மாதிரியும் என இடம்பெற்றிருந்தது. என்ன அரசியல் பண்பாட்டுச் சூழல் இருந்ததோ அதற்கேற்றவாறு அவை இடம்பெற்றிருக்கின்றது. அந்த வகையில பழைய நாடக வடிவங்களை நாடகத் தொன்மங்களை மீளுருவாக்கம் செய்யுறது பற்றிய முயற்சிகள் இருக்கின்றனவா? அவை பற்றியும் என்ன மாதிரியான முயற்சிகளை செய்திருக்கின்றீர்கள்?

உண்மையில் என்னுடைய ஆரம்ப நாடகப் பயணமென்பது பளையில் இருந்தே ஆரம்பமாகியிருந்தது. அங்கு ஒரு கூத்துப் பாரம்பரியம் இருந்தது. காத்தவராயன் கூத்து பங்குனி மாதங்களில மூன்று கோயில்களில தொடர்ந்து நடக்கும். அது தான் எனக்கு ஆரம்பம். விடிய விடிய கூத்து நடக்கும். மற்றது கோயில்களில மேளமடிச்சு கலையாடுகின்ற மாதிரி சடங்குகள் நடக்கும். அதை அரங்கு என்று தான் சொல்வோம். இதில இருந்து தான் அரங்கு தோன்றுது என்ற கோட்பாடே இருக்கிது. இப்பிடி இருக்கேக்குள்ள இண்டைக்கு அதை மீளுருவாக்கம் செய்தது நித்தியானந்தன் என்பவர். நித்தியானந்தனுக்குப் பிறகு மௌனகுரு(ராவணேசன்) போன்றோருடைய கூட்டு உழைப்போடு நகர்ந்து கொண்டு வந்தது. இண்டைக்கு கூத்தை மீளுருவாக்கம் செய்யிறதெண்டு சொல்லி பார்த்தால் அனேகமான இடங்களில இல்லை. ஆனாலும் சில இடங்களில செய்து கொண்டு இருக்கினம். அது நல்ல முயற்சி. இளையவர்கள் மத்தில அந்த ரசனையைக் கொண்டு வாறது எண்ட ஒரு விஷயம் நடக்குது. நாங்கள் நவீன நாடகப் பயிற்சிக்குள்ளால வந்த படியால வடமோடியோ, தென்மோடியோ அல்லது வேறு ஆட்டக் கூத்துக்களோ செய்யேல்ல. காத்தவராயன் செய்திருக்கிறம். காத்தவராயன் மாதிரியான கலை வடிவத்தில நவீன நாடகங்களையும் செய்திருக்கிறம். முழுமையா சிந்து நடைக் கூத்து இருக்கும். ஆனாலும் அதுக்குள்ள சமகால பிரச்சனைகளைப் பேசுற முயற்சிகளைச் செய்திருக்கிறம். ஆனாலும் எங்களிட்ட நிறையக் கேள்வி இருக்கிது. காத்தவராயன் கூத்து ஏன் நாங்கள் செய்யோணும்? அதுக்குள்ள என்ன இருக்கிது? அதில பேசப்படுற விஷயம் என்ன? மக்கள் மத்தில அதை ஒரு கலை வடிவமா பார்க்கலாம். ஆனால் ஆழமா அதை பார்த்தால் அதுக்குள்ள சாதி, சாதிகளினுடைய பெயர், பெண்ணொடுக்குமுறை, அடிமைத்தனம் ஆகியவை இருக்கு. ஆனாலும் அதையும் தாண்டி மக்கள் அதை இரசிக்கினம், அந்த ரசனையை வைச்சிருக்க வேண்டிய தேவை தான் அங்க இருக்கு, ஆனால் அதனை மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய தேவையும் இருக்கு. கூத்து வடிவங்களும் சரி, பாரம்பரியக் கலை வடிவங்களும் சரி மீளுருவாக்கம் செய்யவேண்டியவை. கலை வடிவத்தை மட்டும் திருப்ப கொண்டு வாறதெண்டு இல்லாமல் அரசியலையும் கொஞ்சம் ஆராய வேண்டி இருக்கிது. அது மக்களுக்கு பொருத்தமில்லை எண்டு உணரும் போது எண்டைக்கோ செய்ததை திருப்ப செய்ய வேணுமெண்டு இல்ல. அதனுடைய வெளித்தோற்றம் அழகியல் நல்லா இருக்கெண்டாலும் அவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு விஷயங்களை மாத்தி மக்களுக்கு ஏற்ற மாதிரிச் செய்யலாம். அதில யாரும் எங்களை வந்து குற்றம் கண்டு பிடிக்கப் போறதும் இல்லை. காத்தவராயன் கூத்தை ஒரு பயிற்சிக்காக செய்து பார்த்தோமே ஒழிய நாங்கள் இது வரைல கூத்துக்களைச் செய்யவோ, மீளுருவாக்கம் செய்யிற முயற்சிலயோ இறங்கேல்ல. ஆனால் உண்மையில் அவை நல்ல கலை வடிவங்கள். ஆடல், பாடல், அதன் அம்சங்கள் எப்போதுமே மக்களோட ஊறி இருக்கிற விஷயம். அதை மீளுருவாக்கம் செய்யிறதில நிறையக் கதைக்க வேண்டி இருக்கிது. கதைச்சுச் செய்யவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிது. 

சிறுவர் நாடகங்களை செம்முகம் ஆற்றுகைக் குழுவின் ஒரு பகுதியாக செய்து கொண்டிருக்கின்றீர்கள். சிறுவர் துஷ்பிரயோகத்தைப் பற்றி, பெண்களுக்கு நடக்கின்ற வன்முறைகளைப் பற்றியும் கதை சொல்லுகின்ற முறை மூலம் தொடர்ச்சியாகச் செய்து கொண்டு இருக்கின்றீர்கள். இவற்றில் சிறுவர் நாடகங்களினுடைய நோக்கம், கருத்தியல் தன்மை, அது எப்படிப் போய் கொண்டிருக்கின்றது? சிறுவர் நாடகங்கள் என்ன கட்டத்தில் இருக்கின்றது? அதன் சமகாலத் தன்மை பற்றிப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

சிறுவர் நாடகங்களில் முதல் முதல் தமிழில் 1978 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குழந்தை மா. சண்முகலிங்கத்தினுடைய கூடி விளையாடு பாப்பா அறியப்படுகின்றது. ஆனாலும் இப்போதைய ஆய்வுகளின்  படி சோமசுந்தரப் புலவருடைய ’’கத்தரித் தோட்டத்து மத்தியிலே…’’ போன்ற பாடல்கள் நாடகப் பாங்கோடு இருப்பதால் அதுவும் நாடகம் என்ற வகையிலேயே பேசப்படுகின்றது. இருந்தாலும் சிறுவர் நாடகத்தினுடைய பிரதான பார்வையாளர்கள் சிறுவர்கள் தான். பெரியாக்கள் பார்க்கலாம், ஆனாலும் சிறுவர்களே பிரதான பார்வையாளர்களாக இருக்கின்றனர். இவற்றின் பிரதான நோக்கம் மகிழ்ச்சி. அந்த அரங்கு முதலாவதாக மகிழ்ச்சியையே கொடுக்க வேண்டும். குழந்தை மா. சண்முகலிங்கத்தினுடைய கோட்பாட்டை வைத்தே இதனைக் கதைக்கின்றேன். அதனையே நானும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். அந்த நாடகங்களினூடாக ஆகப் பெரிய அளவில் புத்தி சொல்றதோ, அறிவூட்டுறதோ இவை எல்லாமே இரண்டாம் பட்சம் தான். மகிழ்வா ஒரு கதையை அரங்கில முதல் சொல்லுவம், அதில சின்ன சின்னதாக பிள்ளைகளுக்கான அறம் சார்ந்த கருத்துக்கள் இருக்கும். அதை பிள்ளைகள் எடுத்துக் கொள்ள வேணும். அதை மட்டும் வலியுறுத்துவதல்ல எங்களது நோக்கம். அதில் பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், அதுவே சிறுவர் அரங்கு. சிறுவர் அரங்கை மூண்டு வகையா பிரிக்கிறம். ஒண்டு சிறுவர்கள் சிறுவர்களுக்காக நடிக்கினம், இரண்டாவது சிறுவர்களுக்காக பெரியவர்கள் நடிக்கிறது,  அது தான் நாங்கள் செய்து கொண்டு இருக்கிறம். மூண்டாவது சிறுவர்களும் பெரியவர்களும் சேர்ந்து சிறுவர்களுக்காக நடிக்கிறது. யார் செய்தாலுமே அதனுடைய இலக்குப் பார்வையாளர்களான சிறுவர்கள் தான். இப்ப எங்கள் மத்தில ஒரு குறைபாடு இருக்கு, என்னெண்டால் சிறுவர் அரங்கைச் செய்யக் கூடிய வளர்ந்தவர்கள் இல்லை. யாருமே இல்லை, குழந்தை சேரோட பயிற்சி பெற்ற எச்சம் சொச்சமா நாங்கள் மட்டும் தான் இருக்கிறம். அதை செய்யுறதுக்கு வேற வளர்ந்தாக்கள் இல்லை. நீங்கள் சொல்ற மாதிரி சிறுவர் நாடகங்களில பெண்ணியக் கருத்துக்களோ, அரசியலோ பேசுறதில்ல. பிள்ளைகள் மத்தில அவற்றைப் பேசக் கூடாது. அரசியல் இருக்கலாம். பாட்டி வடை சுட்ட கதையை ஒரு நாடகமா போட்டால் அதுக்குள்ள ஒரு அரசியல் இருக்கிது, குரங்கு தொப்பி வியாபாரி கதைல நீங்கள் அதை அரசியலா பார்க்கலாம்.  ஆனால் ஒரு பிள்ளைக்கு நாங்கள் அரசியல் பேசுறம், அரசியலை நையாண்டி செய்யுறம் எண்ட பேரில எந்த நாடகத்தையும் எந்தக் காலத்திலயும் செய்யக் கூடாதெண்டுற குழந்தை சேரின்ர கோட்பாட்டை நாங்கள் ஏற்றுக் கொள்ளுறம். ஆனால் சில பேர் சிறுவர் நாடகங்களுக்குள்ள இலகுவா அரசியல் பேசலாம் எண்ட நோக்கத்தோட பறவைகள் விலங்குகளை ஒரு குறியீடா வைச்சு செய்யினம். இது ஒரு தவறான விடயம். மகிழ்ச்சி தான் பிள்ளைகளுக்கு மிகப் பிரதானம். மற்றது சிறுவர் அரங்கின்ர நோக்கமா இருப்பது, கற்றல் கற்பித்தலை இலகுபடுத்துறது. வகுப்பறையிலயோ, வெளியிலயோ பிள்ளைகளுக்கு கற்றல் கற்பித்தலை இலகுவாக்கிறதுக்கு சிறுவர் நாடகங்கள் என்பது நல்ல ஊடகம். மிக அழகா மகிழ்ச்சியா அந்த இடத்தில இருந்து கற்கலாம். அதை ஒராளோ, ரண்டு பேரோ செய்யலாம். பொம்மைகள் அரங்கும் சிறுவர்கள் அரங்குக்குள்ள தான் வருது. ஒரு பிள்ளை வெளிய போய் அம்மா மாதிரி, ரீச்சர் மாதிரி மண் சோறு சமைக்கிறதில இருந்து சிறுவர் அரங்கு தொடங்கிது. அங்க பிள்ளை தன்னையறியாமலே தன்னை அதற்குள் உருவகிச்சுக் கொண்டு அவற்றை செய்யத் தொடங்குகின்றது. ஆகவே மகிழ்ச்சி தான் பிரதானம். அதற்குள்ள அங்கங்க அறக் கருத்துக்களை மெதுவாகச் சொல்லலாம். 

கிராமங்களுக்குச் சென்று  நாடகங்கள் செய்கிறீர்கள், சமகாலத்தில சினிமாவின் ரசனை என்பது பெரிய அளவில வளர்ந்து போய் நிற்கிது. எல்லாருக்கும் பிடிச்சுமிருக்கிது. இந்த காலகட்டத்தில கிராமங்களை நோக்கிப் போகும் போது என்ன மாதிரியான மனநிலையோட நாடகங்களை எதிர்கொள்கின்றார்கள்? நீங்கள் என்ன மாதிரியான அனுபவங்களை பெற்றுக் கொள்கின்றீர்கள்? கிராமங்களுக்குள்ள சுயாதீன நாடகக் குழுக்கள் போகும் போது நிலவரம் என்னவாக இருக்கின்றது? 

உண்மையில் கிராமங்களைப் பொறுத்தளவில வெளியில் இருந்து பார்க்கேக்குள்ள மக்கள் நாடகங்களை ரசிக்க மாட்டினம், சமூக வலைத்தளங்கள் அல்லது தொலைக்காட்சிகள் வந்து அவர்களை ஆக்கிரமிச்சிருக்கு என்ற தோற்றப்பாடு இருந்தாலும் கூட கிராமங்களிற்குப் போய் நாடகங்களைச் செய்யும் போது மக்கள் அதைப் பார்க்கின்றார்கள். ஒரு மணித்தியாலம், முக்கால் மணித்தியாலம், அரை மணித்தியாலம் அதை இருந்து பார்க்கிறதோட மட்டுமில்லாமல் அது பற்றிக் கதைக்கிறதுக்கும் தயாராகத் தான் இருக்கினம். எந்த இடத்திலயும் இண்டைக்கு இரு நாடகம் இருக்கு எண்டு தகவல் போகாத காரணத்தால மக்கள் வராமல் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கெண்டு ஒரு நேரமிருக்குத் தானே. தொழிலாள மக்களென்றால் வேலைக்குப் போய் ஓய்வாக இருக்கின்ற நேரங்களில் நாடகங்கள் செய்திருக்கிறம். மக்கள் நிறையப் பேர் ஆறுதலா இருந்து நாடகம் பாத்திருக்கினம். அதுக்குப் பிறகு அந்த நாடகத்தைப் பற்றிக் கதைச்சிருக்கினம். உண்மையிலேயே அவர்களிட்ட அந்த ரசனை இருக்கிது. ஆனால் நாங்கள் தான் தயாரில்லை. நாடகக் காரர்களோ, நாடகம் செய்யிற ஆக்களோ நாடகக் கலைப்படைப்புக்களை உருவாக்கிற ஆக்களோ மக்களுக்காக அந்த விசயத்தை செய்யாமல் இருக்கிறமே ஒழிய தொலைக்காட்சியோ, சமூக வலைத்தளங்களோ ஆக்கிரமிச்சதாலதான் அவர்கள் நாடகங்கள் பார்க்க வாறதில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாங்கள் மக்களுக்கு இந்த ஊடகங்களுக்கு மாற்றாக எதை குடுத்திருக்கிறம்? என்னத்தைச் செய்திருக்கிறம்? இதைத் தானே நாங்கள் பார்க்க வேணும். அப்பிடிப் பார்க்கேக்குள்ள கிராமங்களில நாங்களும் தொடர்ந்து வேலை செய்து கொண்டு இருக்கிறம். மக்கள் அதை ரசிக்கினம், அதைப் பற்றிக் கதைக்கினம், கிராமங்களில நாடகங்கள் செய்யும்போது பிள்ளைகள நாடகம் பழக அனுப்பி வைக்கினம், அந்த கிராமத்திலயே தங்கட பிள்ளைகள் செய்யுற நாடகத்தை ரசிக்கினம். அதை விட கூத்து, இசை நாடகங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கிது. கிராமங்களில கோயில்கள் திருவிழாக்களில கூத்துக்கள் போடுகின்ற போது சனங்கள்  அதை ரசிச்சுக் கொண்டு தான் இருக்கினம். எப்பிடி இசைக் குழுக்களை காசு குடுத்துக் கூப்பிடுகிறார்களோ அதே மாதிரி இசை நாடகங்கள், கூத்துக்களை போட்டுக் கொண்டு தான் இருக்கினம். ஆகவே மக்கள் மத்தில இரசனை இல்லாமலோ அவர்கள் விலக்கி விடுற கலையாவோ இந்த நாடகங்களோ பிற கலைகளோ இல்ல. நாங்கள் குடுக்க முடியாமல் இருக்கிறம் எண்டுறது தான் இதில இருக்கிற உண்மையான விசயம்.  

கிராமங்களில் நாடகங்களுக்கு வரவேற்பு இருக்கெண்டு சொல்லுறீங்கள், கிராமங்களுக்கு இந்த நாடகங்களைக் கொண்டு போய் சேர்க்கிறதுக்கான பொருளாதாரப் பின்னணி பெரும்பாலும் NGO க்களின் நிதி உதவிகளோட விழிப்புணர்வுச் செயற்பாடுகளாக அவர்களது அரசியல் எல்லைகளுக்கு உட்பட்டு செய்கின்றார்கள். சுயாதீன நாடகக் குழுக்கள் இந்த NGO, INGO க்களின் உதவியில்லாமல் அவர்களது கோட்பாடுகளுக்குள் உள்ளடக்காமல் நீங்கள் செய்கின்ற நாடகத்தை ஒரு செயல்வாதமா மாற்றுவதற்கு இருக்கின்ற பிரச்சனைகள் என்ன? அவற்றை எப்படிக் கையாளலாம் என நீங்கள் நினைக்கின்றீர்கள்? மக்களூடாக எடுத்துக் கொள்ளும் நிதியின் ஊடாக அதனை ஒரு செயல்வாதமாக எப்படி மாற்றலாம் என நினைக்கின்றீர்கள்? 

தமிழ் நாடகச் சூழல்ல நாடகம் போட்டால் மக்கள் பார்க்க தயாராக இருக்கினம். ஆனால் நாடகத்தை ஒரு செயல்வாதமா, செயற்பாடா முன்னெடுத்துக் கொண்டு போறதில பல சவால்கள் இருக்கிது, நாடகத்தில முழுமையா வேலை செய்யுற ஒருவருக்கு என்ன வருமானம் எண்டுறதே பெரிய பிரச்சனையா இருக்கிது, நாடகத்தை காசுக்கு போடுறதோ, நாடகம் போட்டிட்டு காசு வாங்கிறது போன்ற சூழல்கள் இல்லை, யாருமே நாடகம் போடுறதையோ நாடகம் நடிக்கிறதையோ தொண்டு அடிப்படைல செய்யிறதுக்கோ தயாரில்லை. எங்கட பொருளாதாரச் சூழல் எங்களை அப்பிடி இறுக்கி வைச்சிருக்கிறதால யாருமே அதுக்கு வாறதுக்குத் தயாரில்லை. முன்னெடுப்பா இதைச் செய்யோணும் எண்டால் அதுக்குத் தயாரா தான் ஆக்கள் வரோணும். பகுதி நேரமாவாவது யாரும் வரோணும். அப்பிடி வாறதுக்கு எங்கட பொருளாதாரப் பண்பாட்டுச் சூழல் இடம் குடுக்காத படியால ஒரு செயல்வாதமா, செயற்பாடா அரங்கை முன் கொண்டு செல்லுறதில நிறையச் சவால்கள் இருக்கின்றன. 

தெருக்கூத்து மாதிரியான உள்ளூர் நாடக வடிவங்கள் அந்தந்த காலகட்டங்களில் கவனம் செலுத்தப்பட்ட பிரச்சனைகளை அதாவது சாதிய ரீதியிலான பிரச்சனைகளை, போராட்ட காலங்களில் போராட்ட கால பிரச்சாரங்களுக்கு தெருக்கூத்து வடிவம் பயன்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் மிதிவெடி விழிப்புணர்வு, சுகாதார விழிப்புணர்வு போன்றவற்றுக்கும் பயன்பட்டது. சமகாலத்தில் அதன் வடிவமும் ஆற்றுகைகளும் எப்படி இருக்கின்றன?

தெருக்கூத்து எண்டுறதின்ர சொற்பதமே வேறை வேறையா பாவிக்கிறம், தெருவெளி அரங்கு, தெருவெளி நாடகம், வீதி நாடகம் எண்டு பல மாதிரி சொல்லுறம். இந்தியாவில தான் தெருக் கூத்து எண்டுற சொற்பதம் வருது. அதாவது புராண இதிகாச நாடகங்களை ஒரு கோயில் முற்றத்தில வட்டவடிவான ஒரு இடத்தில இருந்து செய்யுறினம். அதைத் தான் அவையள் தெருக்கூத்து எண்டு சொல்லுறினம். பாத சக்கர, முன்பாத அரங்கு எண்டுறதுக்கு அதைத்தான் எடுக்கினம். இஞ்ச தெருக்கூத்து அல்லது வீதி நாடகம் எண்டுறது போராட்டகாலத்தில தான் மிகத் தீவிரமா பயன்படுத்தி இருக்கினம். வன்னில போராட்ட காலத்தில தெருவெளி அரங்கு, தெருக்கூத்து, வீதி அரங்குகள் போன்றவற்றைச் செய்த புதுவை அன்பன் எண்ட முக்கியமான ஒருவருடைய நாடகங்கள், தெருவெளி நாடகங்கள் போன்றவை தெருக்கூத்து இல்லை, தெருவெளி அரங்கு இல்லை என  பல பேர் விமர்சனம் செய்திருந்தார்கள். அவர் ஒரு விசயத்தைச் சொல்லியிருந்தார். தெருக்கூத்து எண்டுறது என்னுடைய நாடகத்தை போடுறதுக்கு அரங்கோ, எந்த வசதியுமே இல்லாத போராட்ட சூழல். மக்கள் மரங்களுக்கு கீழ வந்து இருந்திச்சினம். அவர்களுக்கு முன்னால அந்த மரத்துக்குக் கீழ என்ர நாடகத்தைக் கொண்டுபோய் போட்டன். அதை நீங்கள் தெருக்கூத்து எண்டும் சொல்லலாம், தெருவெளி அரங்கமெண்டும் சொல்லலாம், அவரைப் பொறுத்தமட்டில நாடகங்களை மக்கள் மத்தில போட்ட எண்டு தான் சொல்லுறார். தெருவெளி அரங்கு, தெருக்கூத்தை செய்யுறதுக்கு உண்மையிலேயே ஆற்றல் மிக்க கலைஞர்கள் வேணும். அங்க கலைஞனுடைய உடலும் குரலும் தான் பிரதானம். அங்க எந்த மாயாஜாலவித்தைகளும் இருக்காது. வேணுமெண்டால் பக்கவாத்தியமா தாளம் அப்பிடி ஏதும் ஒண்டு இருக்குமே ஒழிய நடிகன்ர குரல், உடல் ரெண்டும் தான் முக்கியம். அப்போ இதுக்கு தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் வேணும். அந்த தெருவெளி அரங்கைச் செய்யுறதுக்கு தான் செய்யப்போற விஷயம் சார்ந்த தெளிவான சிந்தனை, பார்வை, சமூக நோக்கு, அரசியல் நோக்கு எல்லாமே இருக்கோணும். இது முக்கியம். ஆனால் அப்பிடிப் பாக்கேக்குள்ள இண்டைக்கு சின்ன பிரச்சார நாடகங்களா டெங்கு, சுகாதார விழிப்புணர்வுக்காக தெருவெளி நாடகங்களைச் செய்யுறமே ஒழிய அரசியல் பிரச்சாரமோ அல்லது பண்பாட்டுப் புரட்சியைச் செய்யுறதுக்கான உள்ளடக்கங்களைக் கொண்ட சரியான முறையான தெருவெளி அரங்குகளை நாங்கள் செய்யேல்ல. சும்மா நாடகங்களைக் கொண்டு போய் தெருவில செய்திட்டு அதை தெருவெளி நாடகம் எண்டு சொல்லுறம். தெருவெளி அரங்கெண்டு சொல்லுறது, சரியான பலமான சக்திவாய்ந்த ஒரு அரங்கு. சும்மா ஒரு வெளி இருக்கிது. அந்த வெளிக்கு கலைஞர்கள் போனதுமே சக்தி கிடைக்கிது. அப்ப அதை சாதாரணமா உருவாக்கேலாது. வெளில ஒரு நாடகத்தைச் செய்யேக்க கூடுதலான சக்தி கலைஞர்களுக்குத் தேவைப்படுது. கத்திக் கதைக்க வேணும், கத்திப் பாட வேணும், நடிப்புகளைப் பிரமாண்டமா காட்ட வேணும், இதுக்குக் கைதேர்ந்த நடிகர்கள் தேவை. இப்ப இஞ்ச இருக்கிற சூழல்ல பல குழுக்கள் செய்தாலும் கூட சரியான தெருவெளி அரங்கா அதை நாங்கள் செய்யேல்ல. தெருக்கூத்தைச் செய்யக்கூடிய அப்பிடிக் கைதேர்ந்த நடிகர்களும் எங்கள் மத்தில இல்ல. தமிழ் நாட்டில பாத்தீங்களெண்டால் தெருக்கூத்தைச் செய்யுற கலைஞர்கள் அப்பிடியே இருப்பினம். அவர்களுடைய ஆட்டங்களெல்லாம் பயங்கர சக்தி வாய்ந்ததா இருக்கும். புராண இதிகாசக் கதைகளா இருந்தாலும் கத்திப் பாடுவினம். அவர்களுடைய குரலும் ஆட்டமும் அவ்வளவு சக்தி வாய்ந்ததா இருக்கும். அப்பிடிப் பார்க்கேக்க இஞ்ச இருக்கிற நாடகங்கள் சும்மா ஒரு பிரச்சாரத்துக்கானதா மட்டும் தான் இருக்கு. சாதாரணமா ஒரு நாடகத்தைச் செய்யுறம் அவ்வளவு தான். தெருவெளி அரங்கா அது சரியா வரேல்ல. ஆனால் வன்னில அது மிகச் சரியா செய்யப்பட்டிருந்தது. யுத்த காலத்தில அங்க நடந்த நாடகங்கள் சரியா இருந்தது. ஆனால் அந்தளவு வீச்சான தெருவெளி அரங்குகள் இப்ப இஞ்ச சமகாலத்தில இல்ல.  

தீவிரமான கலைக்கு எப்போதுமே பொருளாதாரச் சூழல் ஒரு பிரச்சனையா தான் இருக்கும். இப்ப அதை எப்பிடி எதிர் கொள்ளுகின்றீர்கள்? NGO க்களின் நிதி உதவியோடு அவர்களுடைய கோட்பாடுகளுக்கு உட்பட்டு அல்லது சில சமரசங்களோடு நாடகங்களை செய்ய வேண்டி இருக்கு. வேறு வழிகளும் இல்லை.  நாடகங்கள் செய்வதற்கான மூலதனங்கள் இல்லாத இந்த சூழல்ல என்ன தேவையா இருக்கு? எவற்றை எதிர்நோக்குகின்றீர்கள்?

நான் முதலே சொன்ன மாதிரி இஞ்ச தொழில் முறைக் கலைஞர்களா நாங்கள் யாருமே இல்லை. கலைத்துறைல தவில், நாதஸ்வர வித்துவான்கள், ஆலயங்களின் சடங்குமுறைகளோட சம்மந்தப்பட்ட காவடி சம்மந்தப்பட்டவர்கள் தவிர இவர்களை மாதிரி கலைத்துறைகளில் நாடகத்துறை சார்ந்தும் சரி, வேற ஏனைய ஆற்றுகைக் கலை சார்ந்து தொழில்முறைக் கலைஞர்கள் யாரும் இல்லை. சும்மா ஒரு தேவைக்காக அஞ்சு ஆறுபேர் கூடிக் கதைச்சு செய்யுறமே ஒழிய தொழில் முறையா அதையே செய்யுற ஆக்கள் இல்லை எண்டே சொல்லலாம். நான் செம்முகம் ஆற்றுகைக் குழுவில ஒரு தொழில்முறைக் கலைஞனா தான் இருக்கிறன். இளவயதுக் காலம் முதல் நாடகத்தோட செலவழிச்சதால எனக்கு வேறை வேலைகள் செய்யுறதுக்கான மன உந்துதலும் இல்லை, ஆர்வமும் இல்லை, செய்யவும் முடியாது. இருந்தாலும் நாடகத்துறையை தான் செய்யுறன். சவால்மிகுந்ததா தான் இருக்கு. ஆகவே இஞ்ச வந்து ஒரு நாடகத் துறைல இருக்கிறதா இருந்தால் வெறுமனே நடிகனா இருந்து கொண்டு எதுவுமே செய்ய முடியாது, நடிப்பு மட்டும் தெரிஞ்சாலும் நாடகத்துறையின் வெவ்வேறு கலைகளில் கொஞ்சம் தேர்ச்சி பெற்றிருந்தால்  அதை வைச்சுக் கொண்டு பகுதி நேரமா சிறியளவு வருமானத்தை  ஈட்டிக் கொள்ளலாம். உதாரணமா நான் ஹார்மோனியம் வாசிப்பன், ஒப்பனை செய்வன், வேட உடை உருவாக்குவன், அப்பிடியான சில வேலைகளைச் செய்யுறதால வெவ்வேற இடங்களில வேலை செய்யலாம். குறிப்பா சிறுவர்கள் மத்தில வேலை செய்யுறதால அரங்குக்கு எப்போதுமே ஒரு கேள்வி இருக்கிது. மற்ற நாடகங்களை காட்டிலும் கற்றல் கற்பித்தலோட சம்மந்தப்படுறதால சிறுவர் அரங்குகளில் வேலை செய்யுறதால ஒரளவு வருமானத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடியதா இருக்கு. இருந்தாலும் மிக மிகச் சவாலான விஷயம், ஒரு முழு நேரமாக தொழில் முறை சார்ந்த நாடகக் களைஞர்களா இருக்கிறது. அப்பிடிச் சில முயற்சிகள் சிலர் தொடங்கிப்பார்த்திருந்தாலும் தோல்வியில தான் முடிஞ்சிருக்கு. மற்றது நாடகக் கலைஞர்கள், நாடகத்தைச் செயல்வாதமா செய்துகொண்டு போறவர்களுடைய வாழ்க்கை முறையும் இதில அடங்கி இருக்கு. நாடகத்தைப் போட்டுக் கொண்டு கார் எடுத்து ஓடலாம் எண்டு கனவு காணுறது சாத்தியப்படாது. ஒண்டு நாடகத்தை விடோணும், அல்லது அந்த வாழ்க்கை முறையை விடோணும். சிக்கனமான பொருளாதாரத்துக்குள்ள இருந்து கொண்டு வாழக்கூடிய வாழ்க்கைமுறையா மாத்தோணும், அல்லது நாடகத்தை விடோணும். இதில ரெண்டில ஒண்டு தான் செய்யலாம். நாடகம் போட்டுக் கொண்டு நாங்கள் ஒரு செயல்வாதம் கதைச்சுக் கொண்டு அதனூடாக எங்கேயோ வருமானம் எடுத்துக் கொண்டு செய்யலாம் எண்டுற அந்தக் கனவு காணேலாது. 

சகோதர மொழி பேசக் கூடிய நாடக இயக்கங்களோட இருக்கிற உங்களுடைய தொடர்புகள் பற்றி கூறுங்கள்? மொழி ஒரு சுவரா இரண்டு சமூகங்களுக்குமிடையில இருக்கிற நிலமைல அவர்களோடு அந்த சூழலில் வேலை செய்வது என்ன மாதிரியான அனுபவமாக இருக்கு? அனைத்துச் சமூகங்களோடயும் இலங்கையின் தமிழ் நாடகச் சூழல் என்ன மாதிரியான தொடர்புகளை கொண்டிருக்கிறது? 

உண்மைக்கும் எல்லா விஷயத்திலயும் கடந்த கால யுத்தம் எண்டுறது சாதாரண தமிழ் சிங்கள மக்களை எப்பவுமே பிரிச்சு வைச்சிருக்கிது. பேரினவாதத்துக்கு எதிரான பிரச்சாரங்கள் சாதாரண மக்களையும் இரண்டு பக்கத்திலேயுமே பிரிச்சு வைச்சிருக்கிது. ஒட்டுமொத்தத்தையும் அப்பிடித் தான் நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறம். ஆனால் சாதாரண மக்கள் எப்பயுமே சாதாரண மக்கள் தான். அவர்கள் மத்திலயும் பிளவுகள் இருந்திருக்கு. யுத்தத்துக்குப் பிறகு தான் மெல்ல மெல்லமா ஒட்டுறதும், திருப்பிப் போறதும், ஒட்டுறதும் திருப்பிப் போறதுமா இருந்துகொண்டிருக்கு. அந்தச் சூழல்ல சிங்கள நாடகக் கலைஞர்களில் குறிப்பாக 2010 இல் பராக்கிரம நெதியல்லவினுடைய முதலாவது தொடர்பு கிடைச்சது. அவருடைய தொடர்பு காரணமாக இண்டைக்கு வேற சகோதர மொழி அமைப்புகளோட வேலை செய்யுறம். நாங்கள் 30 வருட கால யுத்த காலப்பகுதிக்குள்ள இருந்த அதே சமயம் அவர்கள்  தொடர்ந்து நாடகங்களைச் செய்துகொண்டு இருந்திருக்கினம். அவர்களிட்ட ஒரு நேர்த்தியும் தேர்ச்சியும் இருக்கிறதைப் பார்க்கிறம். நல்ல விஷயம் எண்டா மனம் திறந்து நாங்கள் கற்றுக் கொள்ளத்தானே வேணும். கலை எண்ட வகைல மொழி தாண்டி அந்த நாடகங்களைப் பார்க்கேக்குள்ள அந்த அரங்கு சார்ந்த செயற்பாடுகளைப் பார்க்கேக்குள்ள சில இடங்களில பிரமிச்சுப் போயிருக்கிறம். ஆச்சரியப்பட்டுமிருக்கிறம். அதை நாங்கள் கற்றுக் கொள்ளோணும் எண்டு ஆசைப்பட்டுமிருக்கிறம். அது தான் சேர்ந்து வேலை செய்யிறதுக்கு எங்களை அவயளிட்ட ஈர்த்து வைச்சிருக்கிது. மற்றது சேர்ந்து வேலை செய்யேக்குள்ள உண்மைக்கும் மொழி ஒரு பிரச்சனையா இருந்தாக் கூட கலைஞர்கள் மத்தில நல்ல ஒரு வெளிப்படையான புரிதல் இருக்கிறதை உணர்ந்துகொள்ளக் கூடியதா இருக்கு.  உண்மையிலேயே நாட்டில இருக்கிற பிரச்சனையை ஏற்றுக் கொள்ளுகினம், எங்களுக்கு இருக்கிற பிரச்சனையை ஏற்றுக் கொள்ளுறினம், நாங்கள் சொல்லுற விஷயங்களைக் கேக்கினம். அந்தப் பக்கம் அவையளுக்கு இருக்கிற சில சங்கடங்களை எங்களுக்கு சொல்லினம். அந்த வகைல பரஸ்பரமா எங்களுக்கு நிறைய விஷயங்களைக் கதைக்கிறதுக்கும், விவாதிக்கிறதுக்கும் வசதியா இருக்கு. அதுக்குப் பிறகு இண்டைக்கு எங்களோட அவை நல்ல உறவு நிலையைப் பேணுறதுக்கும் உதவியா இருக்கு. அவர்களிட்ட போறதுக்காக எங்கட விஷயங்களை விட்டுக் குடுத்தோ அல்லது அவையள் எங்களை ஆதிக்கம் செலுத்திற மாதிரியோ நிலமை இல்லை. அங்க நாங்கள் நிறைய விவாதிப்பம்.  வெண்கட்டி வட்டம் நாடகத்தில ஒரு விஷயம் வருது, ஆளுனர்ட குழந்தை காணாமப் போன உடனை அந்தக் குழந்தையை தேடிக் கண்டு பிடிக்கிறதுக்காக ரண்டு ஆமிப் படை வீரர்களை அனுப்பினம், அது சிங்களத்தில செய்யேக்க அந்த ரண்டு படை வீரர்களையும் நகைச்சுவைப் பாத்திரமா காட்டினவை. ஆனா நாங்கள் இஞ்ச கதைச்சதில அது ரெண்டு பேர் இராணுவமோ, படையில இருக்கிற யாரா இருந்தாலும் அவைட பின்னால இருக்கிற வீடு, அவைட சூழல், அவைட வலி அதெல்லாமே இருக்கும். அந்த ரண்டு பேருடைய சம்பவத்தையும் இஞ்ச வலி நிறைஞ்சதா தான் காட்ட வேணும், நகைச்சுவையா காட்ட முடியாது, களத்தில இருக்கிற ராணுவமா இருக்கலாம், போராளிகளா இருக்கலாம். களத்தில ஆயுதத்தோட நிக்கிற அவனுக்குப் பின்னால இருக்கிற வலியையும் வேதனையையும் நகைச்சுவையா காட்டிட்டு போகேலாது. இதை இப்பிடி தான் நாங்கள் செய்வம் எண்டுற விஷயத்தை அவைக்கு சொல்லி இப்பிடித்தான் செய்வம் எண்டு போராடி இருக்கம். உண்மைக்கும் நிறைய நல்ல அனுபவம். நடிச்சுக் காட்டுறதோட மட்டுமில்லாமல் கலைஞர்களா எங்கட விஷயங்களைச் சொல்லுறதுக்கு நிறைய களங்கள் கிடைச்சிருந்தது. அண்மைல கூட ’’இரவின் அந்நியர்கள்’’ எண்ட ஒரு நாடகம் கொழும்பிலயும் இஞ்சயும் செய்திருந்தம். க்ரேசி எண்டுற பறங்கிய இனத்தைச் சேர்ந்த பெண். அவர் தான் அந்த நாடகத்தை நெறியாளுகை செய்திருந்தவர். மைக் மாசிலாமணி என்பவருடைய கவிதை. 2005 ஆம் ஆண்டு கொழும்பில தமிழரை இஞ்சால போகச் சொல்லி நடந்த சம்பவத்தை வைச்சும், அதுக்கு முதல் நடந்த சில வன்முறைகளை வைச்சும் தமிழர்களுக்கு எதிராக பேரினவாத அரசால தலைநகரில கட்டவிழ்த்து விடப்பட்ட  வன்முறைகள் பற்றியதுமான கவிதை அது. அதை வைச்சுக் கொண்டு அந்த நாடகத்தை நாங்கள் செய்திருந்தம். அந்த நாடகம் 20 நிமிஷ நாடகம் தான். அது மிகவும் எளிமையான அரங்கு. நாங்கள் என்ன உடுப்பு போட்டுக் கொண்டு போறமோ அதுதான் அந்த நாடகத்திலயும். ஆனால் அதுக்குப் பிறகு ரண்டு ரண்டரை மணித்தியாலம் அதின்ர கலந்துரையாடல் போகும். கொழும்பில இருக்கிற செல்வந்தர்கள் அல்லது கல்விப்புலத்தில இருக்கிற ஆக்கள், சிங்களத்தில சமூகத்தின் மத்தில கருத்துக்களை கொண்டு போய் சேர்க்கக் கூடிய கருத்துருவாக்கிகள் வந்து நாடகத்தை பாத்திருந்திச்சினம். நிறையக் கேள்விகள் வந்திருந்திச்சு. மிகத் தெளிவாக நிறையப் பதில்களைச் சொல்லியிருந்தம். அவர்களில பல பேருக்கு ஆச்சரியமா இருந்திருந்திச்சு, கொழும்பில இப்பிடியெல்லாம் நடந்தது தெரியாது எண்டு கேள்விகளையும் கேட்டிருந்தவை.  செல்வந்தரா, நல்ல கல்விப் புலத்தில இருக்கிறவையும் அந்த கேள்விகளைக் கேட்டிருந்திச்சினம்,  அவை உண்மையிலேயே நடிக்கினமோ தெரியாது, இந்த விசயங்கள் எங்களுக்கு ஆச்சரியமா இருந்தது. இண்டைக்கு அதை சமாளிக்கிறதுக்காக அவை நடிக்கிற மாதிரித் தான் இருந்திச்சிது, அந்த ரீதில நிறைய விஷயங்களைச் சொன்னாங்கள். இண்டைக்கு இந்தியா எங்கட கலை கலாச்சாரத்தை ஆக்கிரமிப்புச் செய்யிறது உட்பட, இந்தக் கலாச்சார நிலையத்தை இந்தியா திறந்து வைச்சு, பாதையையும் திறந்து வைச்சு மாசத்தில ரண்டு மூண்டு நிகழ்ச்சிகள் அவைன்ர தான் நடக்கிது. இந்த நாட்டில உங்களுக்கும் இல்ல, எங்களுக்கும் இல்லை, வேற ஒரு ஆக்கள் வந்து எங்கட பண்பாடு கலை இலக்கியத்தைச் சுரண்டப் போகினம் எண்ட விஷயத்தை எல்லாம் அங்க நாங்கள் மிகத் தெளிவா சொன்னாங்கள். இந்தக் களம் எப்பிடி எங்களுக்குக் கிடைக்குதெண்டால் அவர்களோட இணைஞ்சு வேலை செய்யுறபடியால எங்கட குரலைப் பதிவு செய்யக் கூடிய மாதிரியான களமா அவர்களோட சேர்ந்து வேலை செய்யும் போது எங்களுக்குக் கிடைச்சிருக்கு. அதே மாதிரி வெண்கட்டி வட்டம் ருகுணு பல்கலைக் கழகத்திலயும், Colombo perfoming art university யில் போட்டிருந்தம். அந்த நாடகத்துக்குப் பிறகு நாங்கள் கதைக்கேக்குள்ள முதலாவது கேட்ட கேள்வி, யாழ்ப்பாணத்தில இப்பிடி கலைஞர்கள் இருக்கினமா? தமிழில இப்பிடி இருக்கினமா? நீங்கள் தமிழா? எண்டுதான். அதுக்குப் பிறகு தமிழ்ல பதில் சொன்ன பிறகு இப்பிடியெல்லாம் இருக்கா எண்டு அவைக்கே ஆச்சரியமா இருந்திச்சு. இதெல்லாம் அங்க சொல்லுறதுக்கு எங்களுக்கு ஒரு பாலமா நாடகம் இருந்ததோட அவைக்கு இந்த விஷயங்களைச் சொல்லுறதுக்கான வாய்ப்பாகவும் நாடகத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தம். 

நாடகப் பிரதியாக்கம், பதிப்பு, ஆவணமாக்கல் செயற்பாடுகள் பற்றி எல்லோருமே கவனம் செலுத்த யோசிக்கிற நிலையில், சமகாலச் சூழலில் அந்த விடயங்கள் எப்படி இருக்கவேண்டுமென எதிர்பார்க்கின்றீர்கள்? 

ஏற்கனவே தமிழ் சூழல்ல நல்ல நாடக எழுத்தாளர்கள் இருந்திருக்கினம், நாடகங்களை எழுதி இருக்கினம், அதெல்லாம் ஆவணங்களாவும் இருக்கு. இப்ப குழந்தை மா.சண்முகலிங்கம் எழுப்புற கேள்வி , ஏன் நீங்கள் நாடகம் எழுதுறீங்கள் ? நாடகம் போடுறீங்க சரி அதெல்லாத்தையும் எழுத்துப் பிரதியாக்கிறீங்களா? ஆவணமாக்குறீங்களா? ஏனெண்டால் தான் நிறைய பிரதிகளிள்ளாமல் ஆவணப்படுத்தாமல் போன வேலையச் செய்த மாதிரி நீங்களும் அப்பிடிச் செய்யாதேங்கோ. எல்லாத்தையும் ஆவணப்படுத்துங்கோ எண்டு சொன்னார். ஆனால் இப்ப இளம் தலைமுறையில கவிதை, சிறுகதை இதுகளுக்கு இருக்கிற மாதிரி நாடகப்பிரதிகள் இல்லை. சண் நாடகக் குழுவின்ர கணேசராஜா இப்ப எழுதிக் கொண்டிருக்கிறார். மற்றபடி நாடக எழுத்துருக்கள் மிக அருமையாத் தான் வருகிது. ஏற்கனவே மொழில இருக்கிற நாடகங்களைச் செய்துகொண்டிருக்கிறமே ஒழிய புதுசா நாடகங்களை எழுதுறதுக்கு இளமாக்கள் வரேல்ல எண்டு தான் சொல்லலாம். ஆரம்பத்தில செய்த வீதி நாடகங்கள், பிரச்சார நாடகங்கள் ஒண்டும் பிரதிகளா இல்லை. அதை பிரதியா வைச்சு பாதுகாக்க வேண்டிய தேவையும் இல்லை. ஆகவே நல்ல காத்திரமான சமூக நாடகங்களோ, இலக்கிய நாடகங்களோ, நாடகப் பிரதிகளா மிகக் குறைவு. விரல் விட்டு எண்ணக் கூடிய சிலபேர் தான் எழுதிக் கொண்டு இருக்கினம். அல்லது ஏற்கனவே இருக்கிற நாடகங்களைத் தான் செய்து கொண்டு இருக்கிறம். மொழிபெயர்ப்பும் மிகக் குறைஞ்சு போச்சிது. ஏற்கனவே உலகத் தரம் வாய்ந்த நல்ல நாடகங்கள் தமிழில மொழிபெயர்க்கப்பட்டிருக்கு. குழந்தை. மா சண்முகலிங்கம் இந்த வேலையைச் செய்திருக்கிறார். ஆன்ரிக்கனி, ஒதெல்லோ போன்ற நிறைய நாடகங்களை அழகா தமிழுக்கு குழந்தை மா. சண்முகலிங்கம் மொழிபெயர்த்திருக்கிறார். ஆனால் இனி வாற காலங்களில நாடகங்களை எழுதுவினமா? ஆவணப்படுத்துவினமா? அல்லது நாடகம் பிரதியாக்கிறது எண்ட வேலை எப்பிடிப் போய் நிக்கப் போகிது என்பது கேள்விக் குறியாத்தான் இருக்கப் போகிது? எண்ட கேள்வி இருக்கு. ஏனெண்டால் நாடகப் பிரதி எண்டுறது தனிய வாசிப்புக்குரியதா இருக்காது. நாடகங்களைத் தயாரிக்க வேணும், அப்ப தான் உயிர் வாழும். சும்மா வாசிக்கலாம், ஆனால் வாசிக்கிறதால மட்டும் நாடகப் பிரதியை முழுமையா விளங்கிக் கொள்ள முடியாது. இன்னொரு பக்கம் வாசிப்புக்குரிய நாடகப் பிரதி செய்யலாமெண்டும் சொல்லுகினம். நாடகத்தை எழுதலாம், ஆனால் அந்த நாடகத்தை பழக்கேக்குள்ள தான் அது முழுமை பெறும். நாடகப் பிரதியை நாங்களொரு ’’எலும்புக்கூடு’’ எண்டு தான் சொல்லுவம், பழகேக்க மட்டும் தான் சதையெல்லாம் வைச்சு, அதுக்கு உயிர் குடுக்கிறம். மேடையில வந்து உயிரா நிக்கேக்குள்ள தான் அது முழுமை பெறும். வாசிக்கேக்குள்ள தெரியாது. மேலைத்தேச நாடகங்களில முக்கியமா ஷேக்ஸ்பியர் நாடகம் கவிதையா போகும். ஷேக்ஸ்பியர் மட்டுமில்ல மேலைத்தேச நாடகங்களெல்லாம் வெறுமனே வாசிச்சாக் கூட உணர்வா போகும். 

பழைய நாடகங்கள் பலவும் அச்சுப் பிரதிகளா வந்திருக்கு தானே? உங்களுடைய பிரதிகளை என்ன செய்யுறீங்கள்? ஆவணப்படுத்தும் முயற்சிகள் ஏதேனும் செய்வதுண்டா?

 நாடகத்தினுடைய தேவைக்காக இரண்டு மூன்று படிமுறைகளுக்கு நாங்கள் போவம். முதல்ல கலந்துரையாடல், அதனூடாக கருப்பொருளை எடுத்துக் கொண்டு ஒராள் அல்லது குழுவா இருந்து எழுதுவம். முதல் தயாரிப்புக்குப் போய்க்கொண்டிருக்கேக்குள்ள செம்மைப்படுத்திக் கொண்டு போவம். சிலதுகள் சேர்ப்பம், நீக்குவம். வசனங்கள் பாடல்கள் சேர்ப்பம். ஒரு நாடகம் அஞ்சு ஆறு மேடை ஏறின பிறகு தான் முழுமை பெறும். அதுக்குப் பிறகு தான் சரியான பிரதி வடிவம் கிடைக்கும். அதை நாங்கள் இப்போதைக்குத் தட்டச்சுச் செய்து சின்ன ஒரு பிரதியா ஆவணப்படுத்தி வைச்சிருக்கிறம். காலத்தின் தேவை கருதி அதை ஒரு புத்தகமா வெளியிடலாம் எண்டு நினைக்கிறம். அதை காலம் தான் தீர்மானிக்கும். ஏனெண்டால் குழந்தை மா. சண்முகலிங்கத்தின்ர நாடகங்களே கையெழுத்துப் பிரதிகளா சும்மா தான் இருக்கு. வர வேண்டிய பிரதிகள் நிறைய இருக்கு. பாலா அவர்களுடைய நாடகப் பிரதிகள் ஒண்டுமே இல்லை. ஆனால் நிறைய நாடகங்கள் செய்திருக்கிறார். அவர்ட சூரியனைச் சுட்டெரிப்போம், அவள் ஒரு மாதிரி, சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் இப்பிடி நிறைய நாடகங்கள் போட்டிருக்கிறார். இதெல்லாமே மக்கள் மத்தியில மிகப் பிரபல்யமானதும் அரசியலைப் பேசியிருந்ததுமான நல்ல நாடகங்கள். இந்த நாடகங்களுடைய பிரதிகள் இல்லை. புது வேந்தன் மாதிரியானவர்கள் வன்னில செய்த எந்த நாடகங்களினுடைய பிரதிகளுமே இல்லை. அவை சொன்னால் நம்போணுமே ஒழிய மற்றாக்களை மாதிரி அதைக் காட்டுறதுக்கான எந்த போட்டோக்களுமே இல்லை. அந்த வகைல இனியாவது நாங்கள் செய்யுற நாடகங்களை ஏதாவது ஒரு வகையில ஆவணப்படுத்த வேணும். மற்றது நான் நினைக்கிறன், நான் எழுதுற நாடகத்தை நானே ஆவணப்படுத்துறதை விட புத்தமாக்கிறதுக்கு முதல் அதைப்பற்றி கூடிக் கதைச்சு கலந்துரையாடலுக்குள்ள அதைக் கொண்டுவந்து விமர்சனங்களோடு கூடிய உரையாடல்களுக்குப் பிறகு அதை பிரதியாக்கலாமா இல்லையா எண்டுறதை முடிவெடுத்து பிறகு ஆவணப்படுத்துறதுதான் நல்ல ஒரு வேலையா இருக்கும் எண்டு நினைக்கிறன். நானே எழுதி, நானே ஒரு நாடகத்தை போட்டு நானே அதை புத்தகமா போடுறது எண்டுறதுக்கு அப்பால பலருக்கும் பிரியோசனமா இருந்தா ஆவணப்படுத்துறதுக்கான தேவை இருந்தால் அதை ஆவணப்படுத்தலாம். இண்டைக்குப் பாத்திக்களெண்டால்  நாடகமும் அரங்கியலும் பாடத்திட்டத்துக்குள்ள இருக்கிற சில பிரதிகள் பொருத்தமில்லாததா தான் இருக்கு. பொருத்தமில்ல எண்டு நான் சொல்லுறது என்னெண்டால், தரம் ஆறு படிக்கிற பிள்ளைக்கு அடிப்படையை விளங்கிக் கொள்ளுறதுக்கு ஒரு நாடகப் பிரதி எப்பிடி இருக்கோணும் எண்ட புரிதலின் அடிப்படையில தான் இருக்கோணும். அப்படியான புரிதலோட தான் பாடத்திட்டத்துக்குள்ள கொண்டு வர வேணும்.  அப்பிடியெண்டால் தான் ஒரு ஆர்வம் வரும். அப்பிடி பாக்கேக்குள்ல எல்லா நாடகத்தையும் பிரதியாக்கோணுமா? ஆவணப்படுத்தோணுமா எண்ட கேள்வி இருக்கிது. மக்கள் பாத்திச்சினம், நல்ல ஐம்பது நாடகம் மேடையேறிச்செண்டால் அதை அப்பிடியே விடுறதும் நல்லதெண்டு தான் யோசிக்கிறன். 

கிராமப் புறங்களில் இருக்கிற மக்கள் நாடகங்களை போடுறதுக்கான, பாக்கிறதுக்கான தேவை இருக்கின்ற பட்சத்தில காணப்படுகிற பொருளாதாரச் சூழலில் ஈடுகொடுக்க முடியாத தன்மையும் இருக்கின்றது. அப்படியான பணச் சிக்கலிருக்கின்றவர்கள் இந்த நாடகங்களை அவர்களுடைய பகுதிகளில செய்யுறதுக்கு செய்யகூடிய வழிகள் என்ன? அவை பற்றிக் கூறமுடியுமா?

உண்மையிலேயே இது நல்ல கேள்வி, எங்களிட்டயும் சில பேர் கேக்கிறவை, கோயில்களில, வாசிகசாலைகளில செய்யச் சொல்லி. நாங்கள் செய்யுறம், என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம் என்னெண்டால் என்ர வீட்டுக்கு நான் கேக்கேல்ல. அந்த கிராமத்தில நாடகம் செய்யக் கேக்கினம், நீங்கள் கொஞ்சக் காசு தாங்கோ எண்டு நான் ஆரிட்டயுமே கேப்பன். உதவி செய்யுங்கோ எண்டு நாங்கள் கேட்டிருக்கிறம். அதுக்கு அவர் அனுசரணை வழங்கினார் எண்டால் அதன் மூலம் நாடகத்தை அங்க கொண்டு போய் நாங்கள் போடலாம். ஒரு இடத்தில நாடகம் போடப் போறமெண்டால் இப்போதைக்கு போக்குவரத்துச் செலவுதான் ஆக முக்கியமா இருக்கும். எங்களிட்ட வாத்தியக் கருவிகள் எல்லாமே இருக்கு, அதுக்கெல்லாம் ஒரு பெறுமதி இருந்தாலும் அதையெல்லாமே விடுவம், அண்டைக்கு நாங்கள் போய் அந்த நாடகத்தைப் போடுறதுக்கான செலவு இருக்குத் தானே அதை மட்டும் பார்த்துக் கொண்டாலே போதுமாக இருக்கும். எவ்வளவோ செலவுகள் செய்யினம், இதுக்குச் சின்னச் செலவு தானே இருக்கு, அப்பிடிக் கேட்டுத்தான் அந்த நாடகத்தைப் போடுறம். அப்பிடியும் இல்லையெண்டால் நாங்கள் போய் நாடகம் போடுறம் சரி, உண்மையாவே மக்கள் நாடகம் பாக்க ஆசைப்படுறினம் எண்ட கோரிக்கை இருந்தால் பொருத்தமான ஒரு நாடகத்தை அந்த இடத்தில போடுவம். இன்னுமொரு விஷயம் நான் யோசிக்கிறன், எங்கட குழு அந்த நாடகத்தைச் செய்யுறதை விட அந்தக் கிராமத்தில அஞ்சு ஆறு பிள்ளைகளை எடுத்து பத்து பதினைஞ்சு நாள் அதுக்குச் செலவளிச்சு அங்க ஒரு நாடகத்தை உருவாக்கிறது இன்னும் நல்ல திறமான அலுவல். அதை தான் இப்ப நான் கூட பரிந்துரைக்க விரும்புறன். ஏனெண்டால் அந்தக் கிராமத்தில ஒரு உறவாட்டம் இருக்கும், பிள்ளையள் பழகி நடிக்கும் போது தங்கட பிள்ளையள், கிராமம் சார்ந்த ஆக்களுக்கு ஆர்வம் இருக்கு. அது இன்னும் நல்லம். அது செய்யுறதுக்கும் நாங்கள் ஆர்வமா இருக்கிறம். 

உரையாடியவர்கள்

யதார்த்தன் | ரஜிதா இராசரத்தினம்

 

ரஜிதாஇராசரத்தினம் (1995) | கவிஞர், செயற்பாட்டாளர்  : யாழ்ப்பாணம் குடத்தனை மேற்கு மணற்காட்டில் பிறந்தவர்.கவிதைகளை எழுதி வருகிறார், மணற்கும்பி, மீனும் துள்ள என்கின்ற இரண்டு கவிதைத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன.  சமூகம், சூழலியல் மற்றும் குயர் செயற்பாடுகள் சார்ந்தும்  தொடர்ந்து இயங்கி வருகிறார்.

 

 

மேற்படி உரையாடலின் போது ரஜிதா காணொளி ஒன்றையும் பதிவு செய்திருந்தார் அதை இவ் இணைப்பில் பார்க்க முடியும் (4 பாகங்கள்)

 

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’