பெரும்பாடு / காளம் 10 உக்காராவும் சின்னத்தையும் வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியின் வாசலில் இருந்த தொடர் நாற்காலிகளில் அருகருகே அமர்ந்திருந்தனர். சின்னத்தையின் மடியில் குழந்தை உறங்கிக் கொண்டிருந்தாள். மதியத்திற்கு முதல் அம்புலன்ஸ் வண்டிகள் வந்து விடும் என்று நுள்ளான் கைபேசியில் சொல்லியிருந்தான். சனங்கள் கைபேசிகளை இரகசியமாக முகாம்களில் பாவிக்கிறார்கள் என்பது இராணுவத்திற்கும் பொலிசாருக்கும் தெரிந்திருந்தது. இரண்டு முறை சுற்றி வளைத்துச் சோதனை போட்டிருக்கிறார்கள். நுள்ளான் எப்படியோ அதை மறைத்து விட்டான். அடிக்கடி கதைப்பதைத் தவிர்க்க வேண்டும்…