சைவ இலக்கியங்கள் குறிப்பிடும் கதைகளில் கண்ணப்ப நாயனார் கதை எனக்கு அணுக்கமான உருவகக் கதை. மத நம்பிக்கை பக்தி என்பவற்றை விலக்கிக் கொண்டு அதை வாசிக்க வேண்டும். திண்ணன் என்ற இயற்பெயர் கொண்ட கண்ணப்பன் எந்த கல்வி கேள்விப் பயில்வும் இல்லாத வேடன். தான் வேட்டையாடிய இறைச்சியை தினமும் தெய்வத்திற்குப் படைக்கிறான். தினமும் தொடர்ச்சியாக இவ் உபாசனை நடக்கிறது. தனக்கு உணவு இருந்தாலும் இல்லாவிட்டாலும். என்ன நிகழ்ந்தாலும் எதில் உழன்றாலும், அவன் அதைத் தவற விடுவதில்லை. தொடர்ந்து செய்யும் போது செயல் யோகமாக மாறுகிறது. எச்செயலும் அப்படித்தான். காதலிலும் பக்தியிலும் கூட தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதில் பொருந்தி இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதன் உச்ச தருணத்தில் தெய்வம் எழும். கண்ணப்பனுக்கும் அப்படித்தான். வாயு லிங்கத்தின் கண்களில் இருந்து இரத்தக் கண்ணீர் வழிந்த போது அவன் தன் கண்களை இடுங்கி அதற்குச் சாத்துகிறான். அந்த உச்சமான தருணத்தை அவன் வந்தடைய அவனுக்கு வெறும் பக்தியோ அன்போ கருணையோ கூடப் போதுமாக இருக்காது. வெறும் பக்தனால் அதைச் செய்ய முடியாது. அவனுக்காக அப்படி ஒரு தருணத்தை தெய்வம் அளிக்காது. எப்பொழுதும் அவன் முன் தோன்றாது.
கண்ணப்பன் அன்றாடம் அதைச் செய்தவன் கொஞ்சமும் யோசிக்காமல் அவனால் தன் கண்ணை இடுங்க முடிந்தது அவன் தன்னைத் தினமும் அதில் தொட்டுத் திளைத்தவன் என்பதால். அது அவனை அன்றாடம் தயாரித்தது. பழக்கியது. அதற்குரியவனாக ஆக்கியது. இலக்கியமும் அப்படித்தான். ஓர் நல்ல இலக்கியம் சட்டென்று குந்தி இருந்து எழுதி அளிப்பதல்ல. அது அன்றாட உபாசனையினால் எழும் தெய்வம். எல்லாக் கலைகளும் அப்படித்தான். அத் தெய்வங்களுள் மிகக் கடுமையானதும் இலகுவில் மனம் கனியாததுமான தெய்வம் இலக்கியம்தான். அதற்குக் கண்ணையல்ல கழுத்தை அறுத்துத் தலையை அளிக்க வேண்டும். அந்த நிலையை அடைவதற்கு அன்றாடம் அதைப் பயில வேண்டும் அதில் இருக்க வேண்டும். அறிவதன் இன்பம் என்பது அத்தெய்வம் அன்றாடம் அளிக்கும் அருள்.
…..
ஈழத்திலும் அதன் அடியான புலம்பெயர் இலக்கியம் சார்ந்தும் ஒவ்வொரு வருடமும் வெளியாகும் நூல்களில் குறிப்பாகப் புனைவிலக்கியம் சார்ந்து, தொண்ணூறு சதவீதமானவை வணிக, பொழுது போக்கு இலக்கியமாகக் கூடக் கருத முடியாதவை. பொழுது போக்கு இலக்கியத்திற்கு கூட அதற்கென நோக்கங்கள் இருக்கின்றன.
சில வருடங்களுக்கு முன்பு ஓராயிரம் ஈழக்கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்தார்கள். அதுவும் சமகாலக் கவிஞர்கள். அந்த நூலின் மூலம் கிடைக்கப் பெற்ற ஒரே நல்ல விடயம் ,யாரெல்லாம் அதில் எதையும் எழுதியிருக்கவில்லையோ அவர்களைப் பொருட்படுத்தி வாசிக்க முடியும் என்பதுதான். அதற்குப் பிறகு யாராவது தாங்களும் கவிதை எழுதுவதாகச் சொன்னால் அந்த தொகுப்பில் உங்கள் கவிதைகள் உள்ளனவா என்று நாசூக்காகக் கேட்டுக் கொள்வேன். கவிதைக்கு இப்படியொரு குறுக்கு வழி கிடைத்தது நல்லூழ். நாவல், சிறுகதை, கட்டுரைகள், ஆய்வுகளுக்கு அப்படியொரு வாய்பில்லை. வருடா வருடம் இவை எல்லாம் இலக்கியம் அல்ல என்று மறுக்க படித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. இத்தனைக்கும் இரண்டாவது மூன்றாவது நாவல்களை எழுதும் எழுத்தாளர்களே சலிப்பைத் தந்து கொண்டிருக்கிறார்கள். முதல் நாவலில் ஓரளவு தேறி விடுவார்கள் என்று நினைத்து வாசித்தால் நரகலை மிதிக்க வைத்து விடுகிறார்கள். ஒரு இலக்கியச் சூழலில் அதுவும் தீவிர இலக்கியம் சார்ந்து கவனிக்கப்படுபவர்களிடம் ஏன் இவ்வளவு சிந்தனை வீழ்ச்சி ? ஏன் இவ்வளவு அழகியல் வறட்சி? அதற்கு அடிப்படையான காரணம் அவர்கள் எவருமே அன்றாட இலக்கியம் சார்ந்த வர்கள் அல்ல என்பதுதான். அவர்கள் உலகியலைச் சார்ந்தவர்கள். மெய்யாக இலக்கியத்தில் இருப்பவர்களுக்கு இலகியத்தில் வாழ்வதற்கு உதவும் ஒன்றுதான் உலகியல். அவர்கள் அங்கே தங்குபவர்கள் அல்ல வந்து செல்பவர்கள். அவர்களுடைய அன்றாடம் என்பது பெரும்பகுதி இலக்கியமோ அதனோடு பொருந்த வேண்டிய இடஙகளோ மட்டும் தான். அதைத்தான் பாரதி ‘எமக்குத் தொழில் கவிதை’ என்றான்.
அன்றாட இலக்கியம் என்பது தினமும் செய்யும் தெய்வ உபாசனை போன்றது. தவத்தைப் போன்றது. அன்றாடம் அதில் இருக்க வேண்டும். தினமும் வாசிக்க வேண்டும் தினமும் எழுத வேண்டும். ஈழத்தில் இருக்கின்ற பெரும்பான்மையான இலக்கிய வாதிகள் சமூக வலைத்தளங்களைத் தவிர அன்றாடம் எதையும் வாசிக்காதவர்கள். வெறும் அரசியல் வம்புகள் பேசிக் கொண்டு தம் தொழில், குடும்பம் என்று அன்றாட உலகியலோடு உழல்பவர்கள். அவர்களுக்கு இலக்கியம் ஓர் extra curricular activity என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. இலக்கியத்தில் இருப்பது இவர்களுக்கு மேலதிகமாக இன்னொரு பெருமையைத் தருவதாக நினைத்துக் கொள்கிறார்கள். நானும் இலக்கிய வாதி என்று பீற்ற வேண்டும். நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் தகுதிகளுக்கு மேலே தான் பள்ளிக் கூடத்தில் பலூன் உடைக்கும் போட்டியிலும் முதல் பரிசு பெற்றிருக்கிறேன் என்று மேலதிகமாக ஒரு சான்றிதழைக் காட்டி அசட்டுச் சிரிப்பு சிரிப்பது போல் தான் இவர்களுக்கு இலக்கியம். அற்பர்களிலும் அற்பர்கள். வெறும் அரட்டையும் அரசியல் வம்புகளும் தவிர எப்போதாவது ஏதாவது வாசிப்பார்கள். அல்லது புத்தகத்தின் வசனங்களுக்கு மேலே நடந்து விட்டு மூடுவது. பொழுது போக்கு வாசகர் கூட இவர்கள் அளவிற்கு புத்தகங்களுக்கு இடையில் இத்தனை காலமும் அசட்டைத் தனமும் கொண்டிருப்பார்களா என்பது சந்தேகம் தான். இவர்களுடன் பேசும் போது ஏதாவது புத்தகத்தைக் குறிப்பிட்டுப் பேசினாலோ கேட்டாலோ ‘வாங்கினபடி கிடக்கு இன்னும் வாசிக்கேல்ல, வாசிக்க வேணும்’ என்பார்கள். பச்சைப் புளுகர்கள். இவர்களுக்கு இலக்கியம் என்றாலே என்ன என்று தெரியாது. அவர்கள் சமூக வலைத்தளங்களில் இருக்கும் அன்றாட அரட்டைகளில் விழும் தகவல்கள், சர்ச்சைகள் தவிர எதையும் அறியாதவர்கள். போர்கள் நடக்கா விட்டாலும் வீரர்கள் தினமும் வாளைத் வீசிப் பயில வேண்டும். இடைக் கர்ச்சையில் கட்டப்பட்ட வாளை: கைகள் அடிக்கடி தொட்டுக்கொள்ள வேண்டும். ஈழத்து இலக்கிய வாதிகள் வாளின் உறையில் தான் தினமும் வீட்டிற்கு புடலங்காய் வாங்கிச் செல்கிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் இன்றைக்கு இயங்கிக் கொண்டிருக்கும் இலக்கிய் அமைப்புகளைக் கவனித்துப் பார்த்தாலே முழு நிலைமையும் விளங்கும். ‘எங்கட புத்தகங்களாக’ இருக்கட்டும், கலை இலக்கியப் பேரவையாக இருக்கட்டும், தாம் ஆற்றும் பணிகள் இலக்கியம் என்று சொல்லிக் கொண்டு, ஏன் தங்களையும் ஊரையும் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இவர்கள் மாதா மாதம் வெளியீட்டிற்கு, உரையாடலுக்கு எடுக்கும் புத்தகங்களைப் பாருங்கள். என்றைக்காவது அந்த நிகழ்வுக்கு பிறகு அந்த புத்தகங்களை யாரும் வாங்கியோ அதைப்பற்றிப் பேசியோ கண்டிருக்கிறீர்களா. அந்த மதிலைத் தாண்டக் கூட திராணியற்றவை. எதைக் கொடுத்தாலும். யார் எதை பதித்துப் போட்டாலும் அவர்கள் கூட்டம் போடுவார்கள். அவர்கள் சமரசமாகும் புள்ளி எதுவென்றால் இருதரப்புக்கும் இலக்கியம் தெரியாது என்பதுதான்.
எந்த இலக்கிய மதிப்பீடும் கிடையாது. எழுதப்படுவது எல்லாம் இலக்கியம் இவர்களுக்கு. விமர்சன மரபையே கைவிட்டு விட்டு வெறும் செம்பும், வெத்திலைத் தட்டோடும் நிற்கிறது ஈழ இலக்கியம். இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் பத்தில் ஒன்பது பேருக்கு இலக்கிய் வாசிப்பே கிடையாது. அவர்கள் வாசிப்பிற்கோ உரையாடலுக்கோ எடுக்கும் 99% புத்தகங்கள் இலக்கியமே கிடையாது. அந்த ஆயிரம் கவிகளின் தொகுப்பு போல் இ்வர்கள் கடமைக்கும், முகத்துக்கும் எடுத்து உரையாடும் புத்தகங்களை நல்ல வாசகர்கள் நாசூக்காகத் தவிர்த்து விடலாம். இதில் இவர்கள் விமர்சகர்கள் ஆய்வாளர்கள் என்று வேறு போட்டுக் கொள்கிறார்கள். கைலாசபதியும் விமர்சகர் நீங்களும் விமர்சகரா? சிவத்தம்பியும் ஆய்வாளர் நீங்களும் ஆய்வாளரா? ஒரு பருக்கை சோறேனும் கூச்சப்பட்டுக் கொண்டு தொண்டைக்குள் இறங்குவதே இல்லையா ?
இப்படித் தம்மை இலக்கிய அமைப்புகள் போன்று காட்டும் பாவ்லா கும்பல்களைக் கவனியுங்கள், ஓய்வுக்குப் பிறகு செய்ய ஒன்றும் இல்லாமல் போக்கிடமில்லாத முதியவர்களும், ‘பலூன் உடைத்தல்’ சான்றிதழுக்கு வரும் ஆட்களும் தவிர் உருப்படியான ஒரு இளைய தலைமுறை வாசகர்களையோ எழுத்தாளர்களை இவர்களின் கூட்டத்தில் காண முடியாது. இனியும் வர வாய்ப்பில்லை. ஏனென்றால் செடி தான் வளரும். வெறுங் கல் திம்மென்று கிடக்கும். மெய் வாசகர்களும் எழுத்தாளர்களும் இவர்களுக்கு வெளியே இருக்கிறார்கள்.
ஏன் இவ்வளவு கடுமையாக தடித்த சொற்களால் இவற்றைக் குறிப்பிடுகிறேன். இவர்கள் காயப்படுவார்கள். வஞ்சம் வளர்ப்பார்கள் என்று நன்கறிவேன். இவர்கள் இலக்கியத்திற்கான சூழலை நாசமாக்கிக் கொண்டிருக் கிறார்கள். முக்கியமாக மெய்யான உழைப்புடனும் நம்பிக்கையுடனும் இலக்கியத்திற்கு வரக் கூடிய இளையவர்களுக்கான சூழல் இவர்களால் சிக்கல் படுகிறது. ஆற்றுப் பெருக்கை பொலித்தீன் பைகள் அடைத்திருப்பதை எப்படிப் பார்த்துக் கொண்டிருப்பது. நாளைக்கு இலக்கியத்திற்கு வரும் என்னுடைய இளையவர்கள் இதையெல்லாம் கேட்கவே இல்லையா என்று எங்களைக் கேட்டால் குறுகி நிற்க முடியாது. சொல்லப் போனால் இது அவர்களுக்காக எழுதும் குறிப்புத்தான். இவர்கள் திருந்துவார்கள் என்று நம்பினால் என்னைப் போல் மடையன் வேறு யார்?
என்னுடைய இளையோருக்கு சொல்ல எண்ணுவது, எவற்றை எங்களுடைய மேலான ஆசிரியர்கள் சொல்லிச் சொல்லி அளித்தார்களோ அவற்றை. தானமும் தவமும் அடுத்தடுத்து அளிக்க வேண்டியவை. இலக்கியம் எக்காலத்திலும் ஊழ்கமென்று பயில்வது.
அன்றாட வாசிப்பு, அன்றாட எழுத்து, தொடர்ச்சியான உரையாடல், அதற்கு என்று தேர்ந்து அமைத்துக் கொண்ட சுற்றம் இவை அனைத்தும் நல்ல இலக்கியங்கள் எழுவதற்கும் வாசிக்கப்படுவதற்கும் அடிப்படை. அதில் ஓர் அன்றாடத் தன்மையும் இடையறாத தொடர்ச்சியும் மொத்த மொழியுடனும் உலகுடனும் அரூபமான உரையாடல்களும் நடந்தபடி இருக்கும். அதன் மூலம் சிந்திக்கவும் சொந்த ஆன்ம மேம்பாடும் கூட்டான சமூக பண்பாட்டு மேம்பாடும் நிகழ வேண்டும். இலக்கியம் வேறு எந்த தகுதியையும் கோருவதில்லை. அது வேண்டுவது தவத்தை. அது தன்னை உங்களுடைய எளிய உலகியல் விடயங்களுக்கு கீழே வைத்துக் கொள்ளச் சம்மதியாது. அதை மந்தையில் நடத்திச் செல்ல முடியாது. பட்டியில் அடைக்க முடியாது. அது மகா வேழம். அதனோடு இருப்பவனை, அதைப் பணிபவனை அது ஏற்கும். அம்பாரியில் ஏற்றும். கூட நடக்கும். காத்து நிற்கும். பிறகு நீங்கள் அதன் நிழலில், கால்களுக்கு அடியில் அயர்ந்து துயில முடியும்.


