யாழ்ப்பாணப் பட்டினம் : உண்ட தசையும் அருந்திய குருதியும்

1
115

செகராசசேகரம் என்ற பழைய மருத்துவ நூல் (கி.பி 14-15 நூற்றாண்டு) யாழ்ப்பாணத்தை  ‘மதிதோய் நெடுங்கொடி மாடவீதிப் பட்டினம்’ என்கிறது. பட்டினம் என்ற சொல் பழைய நகரங்களுக்கே இடப்படும். கொலனித்துவ ஆவணங்களிலும் யாழ்ப்பாணப் பட்டினம் என்றே  குறிப்பிடப்படுகிறது.  இதுவொரு தொன்மையான நகரம்தான். அந்த தொன்மையான வரலாற்று ஆழ் நனவில்தான் இத்தனைக்கும் பிறகு இந்த நகரம் நின்றிருக்கிறது.  எப்படியோ இதை  எல்லாக் காலங்களிலும் வரலாறு காப்பாற்றி விடுகிறது.  நிறைய நாட்கள் முல்லைத்தீவில் இருப்பதால் யாழ் நகருக்கு வருவது குறைந்து போய் விட்டது. தீடிரென்று சென்றவாரம் வாரம் யாழ்நகரையும் அதன் புறநகரையும் என்னுடைய மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்தேன். தனியாக மிகக் குறைவான வேகத்துடன். ஒவ்வொரு இடமாக கண்ணால் அளந்து கொண்டு.  நாங்கள் 2007 இல் யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்குப் போனோம். பிறகு 2011 இல் திரும்பி வந்தோம். யாழ்ப்பாணம் திரும்பும் மட்டும் யாழ் நகரம் எனக்கு மிகப்பெரிய உருவில் இருந்தது.   யாழ்ப்பாணம்  போய் வருவது என்பது அன்றைக்கு  அதற்கு  வெளியே இருந்தவர்களுக்கு முழுநாள் வேலை. இன்றைக்கு நானும் தம்பியும் தினமும் நான்கு தரம் யாழ்ப்பாணம் போட்டு வாறம் என்று சொல்லி விட்டு புறப்படுவதை அம்மாவால் இன்றைக்கும்  சொல்லிப் பொருமாமல் இருக்க முடிவதில்லை.   யாழ் நகரம் எங்கள் வீட்டில் இருந்து வெறும் இருபது கிலோ மீற்றர்கள்.  இப்பொழுது அது மோட்டார் சைக்கிளிற்கு இருபது நிமிடப் பயணம். மினிபஸ்சிற்கு நாற்பது, அரச போக்குவரத்து பேரூந்துகளிற்கு முப்பது.  அம்மாவிற்கு இன்றைக்கும் தனியாக  யாழ்ப்பாணம் போய் வருவது என்பது முழுநாள் பணி என்ற மனப்பதிவே இருக்கிறது.   ஏன் நண்பர் எழுத்தாளர் தர்மு பிரசாத்  உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான பரிசில் இருந்து திரும்பியிருந்தார். அவரை முதலில் சந்தித்த போது  ‘என்ன பாஸ் இது எல்லாரும் பைக்கில திரியினம் அப்பெல்லாம் யாழ்ப்பாணம் போய் வாறது ஒரு நாள் வேலை எல்லோ’  என்று ஆவரங்காலில் நின்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் எங்களுடைய தலைமுறைகளுக்கு முன்பிருந்தோருடைய  யாழ்ப்பாணப் பயணம்  நீண்ட ஒன்றான மனப் பதிவு உருவாகி வர  இருபது கிலோமீற்றர்களில்  ஐந்து தரம் மறித்து சோதனை செய்யும் இராணுவச் சோதனைச் சாவடிகளும், போர்க்கால அச்சமும்  ஒரு காரணம்.  இன்றைக்கு யாழ்ப்பாணத்தின் வாசலான செம்மணியில்  இருந்த இராணுவக்காவலரணுக்கு அண்மையில் தோண்டப்படும்  நூற்றுக்கணக்கான சனங்கள் புதைக்கப்பட்டிருக்கும் மானுடப் புதை குழிகள்  இத்தொலைவுணர்வின் சாட்சிகள்.  யாழ் நகரத்தைச் சுற்றி வரும் போது வன்னியால் திரும்பிய போது  அது சட்டென்று சிறுத்துப் போனது போலிருந்தது.  வெகுநாட்கள் அந்த உணர்விருந்தது. கடந்த பதினைந்து வருடமாக இந்த நகரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  இன்றைக்கு வெகுநாள்  சிறகுகளைச் சுருக்கிக் கொண்டு  தன் செக்கைக்குள்  புதைந்து கிடந்த பறவை  உடலை உலுப்பி எழுவது போல இன்னுமொரு சுற்று உப்பியது போலிருந்தது. யாழ்நகரம் வேகமாக விரிந்து கொண்டிருந்தது.

அடிப்படையில் நானொரு கிராமத்து மனம் கொண்டவன். ஐதையும் தனிமையையும் விரும்புவன்.  வெளித்து விளிம்பு வரை தெரியும் வானமும், காற்று அலையும்   வயல்களையும், பச்சை எழுந்த காடுகளையும், அருகில் நடக்கும் பறவைகளையும்,  தினமும் பெயரறியாத எதோவொரு மலரையும், சிறு பூச்சியையும் காண்பதை விரும்புவன். நகரங்களுக்குள் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக வெளியேறிவிடுவது என்னுடைய இயல்பு. அதே வேளை இரவில் நகரங்கள் அளவிற்கு கிராமங்களில் சுதந்திரத்தை உணர்ந்ததில்லை. யாழ்ப்பாணத்தில் என்னுடைய சகோதரனுடன் நள்ளிரவில் சுற்றுவேன். முன்பெல்லாம் வீடு திரும்ப  இரண்டு மூன்று மணியாகிவிடும். கொழும்பிற்குப் போனால் இரவில் வெகு நேரம்  உலாத்துவேன். சமீபத்தில் நண்பர்கள், எழுத்தாளார்கள்  கிரிசாந், தர்முபிரசாத்துடன்  இலங்கையின் வரலாற்றுத் தலைநகரங்களில் ஒன்றான பொலநறுவைக்குப் போயிருந்தேன். இரவு அந்த நகரத்தில் அலைந்து திரிந்தோம். மணிக்கணக்காக உரையாடினோம்.  இலங்கையின் தலை நகரங்களின் வரலாற்றைக் கவனியுங்கள்  அநுராத புரமும் பொலநறுவையும் மட்டுமே ஒப்பீட்டளவில் நூற்றுக்கணக்கான வருடங்கள் நீடித்தவை. அதற்கு அடிப்படையில் இரண்டு காரணங்கள். ஒன்று அவை இலங்கையின் மிகப்பெரிய நீர்ப்பாசன கட்டமைப்பால்  ஆன விளைச்சல் நிலங்கள். இன்னொன்று அவை  இலங்கையின் பெரு வணிகத் துறைமுகங்களான மாந்தை, புத்தளம், கோணமலை ஆகியவற்றோடு எப்பொழுதும் இணைந்திருந்தன. பொலநறுவைக்குப் பிறகு இலங்கையின் எல்லா தலைநகரங்களும் வீழ்ந்தன. குறுகிய காலத்திற்குள் மாற்றப்பட்டன. கடைசியில் கொழும்புவரை சென்று கொலனியர்களிடம் தஞ்சமடைந்தன. இன்றைக்குள்ள இலங்கையின் பெரும்பாலான பெருநகரங்கள் கொலனியர்களுடைய உருவாக்கம். அநுராத புரம் பொலநறுவை போன்ற தலைநகரங்கள் கூட இன்றைக்குள்ள அவற்றின் நகர மையத்திற்கு வெளியேதான் இருந்தன. அவை இன்றைக்கு புனித நகரம் என்ற பெயரால் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுகின்றன.  இன்றைக்குள்ள யாழ் நகரத்தை விடவும், ஊர்காவற்றுறை, பருத்தித்துறை போன்ற கடல் முகப்புத்தளங்களுடான துறைமுக நகரங்கள் வரலாற்றுக் காலங்களில் பெரியவை, வலிமையானவை. என்றைக்கு அவை தம் துறைமுகங்களின் செல்வாக்கை இழந்தனவோ அப்பொழுது வீழ்ந்தொழிந்தன. பருத்துறை நகரம் கூட கொஞ்சம் புழக்கம் உள்ளது. ஊர்காவற்றுறை எல்லாம் இறந்து போன நகரம்.

ஒரு நகரம் யாருடையது என்றால், அது வணிகர்களுடையதுதான்.  வணிகம் தான் உலகில் உள்ள மாபெரும் நகரங்களை உருவாக்கியது.  யாழ்ப்பாணத்தை இன்றைக்குப் பெருகி விரிப்பது வணிகச் சூழல்தான். என்னை எது  திடுக்கிட வைத்தது என்றால் கொழும்பைத்தவிர இலங்கையின் ஏனைய நகரங்களுக்கு இவ்வளவு வேகமான விரிவும், கண்பார்க்க உறுத்தும் மாற்றமும் நிகழ்ந்ததில்லை. அவை விரிவதை புவிச்சுற்றுகையை போல் அறிந்திருந்தாலும் உலுக்கும்படி உணர முடிவதில்லை. யாழ் நகரமோ அப்படியில்லை. அது தினமும் எடுத்து அடுக்கப்படும் ஒவ்வொரு செங்கல்லும் இதோ நான் இங்கிருக்கிறேன் என்று சொல்லிச் சொல்லிக் கொண்டிருப்பது போலிருக்கிறது. பெரிய வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்டுக்கள் தொடங்கி கரும்புச் சாற்றுக் கடைகள் வரை வந்து கொண்டே இருக்கின்றன. அதுவும் மிகக் குறுகிய காலத்தில். இதுதான் என்னை ஏதோ குடைந்தது. கொழும்பு  விரிவதில் இருக்கும் ஓர்  உறுதியான தர்க்கம் யாழ்ப்பாணம் விரிவதில்  இல்லை என்பது போல். ஏனென்றால் ஐம்பது பிரியாணிக் கடைகள் சட்டென்று தோன்றுவதும் அவை மறைவதும் இந்த சமூக வலைத்தள நுகர்வுலகில் எனக்குப் வியப்பைத் தரவில்லை. ஆனால் நிரந்தரமான பெரிய வணிக வளாகங்கள், கடைகள், பெரு வணிக நிறுவனங்கள் யாழ்ப்பாணத்தில் கடைவிரித்துக் கொண்டே இருக்கிறார்கள். வெறும் ஐந்து லட்சம் பேர் மட்டும் வாழும் நகரமிது. அதன் விவசாய நிலம் மிகக் குறுகியது. நீர் மூலங்கள் நிலத்தடியையும் பருவ மழையையும் மட்டும் நம்பியிருப்பவை. பெரிய உற்பத்தி மூலங்களோ வளங்களோ இங்கு கிடையாது. அப்படியிருக்க எதை நம்பி இவர்கள் வந்து இந்த நகரங்களைப் பெருக்குகிறார்கள்?  முன்பைப்போல் யாழ்ப்பாணம் படிச்ச சமூகம் எப்பொழுதும் காசும் சொத்தும் புழங்கும் என்பதெல்லாம் ஓரளவான நம்பிக்கைகள்தான். அப்படிப்பார்த்தால் யாழ்ப்பாணத்தின் பிரதானமான  பணவருகை என்பது புலம்பெயர்வாளர்கள் அனுப்பும் பணம்தான். முறையாகவும் முறையற்றும் நாட்டுக்குள் வரும் பெருந்தொகைச் செல்வம். அது ஒன்றை நம்பித்தான் இந்த நகரம் வளர்கிறதா?

போர்காலத்தில் நிகழ்ந்த பெரும் புலம்பெயர்வு தமிழர்களைக் காத்து நின்றது உண்மைதான். சொல்லப்போனால்  விடுதலைப் போராட்டத்தை நடத்தியவர்கள் புலம்பெயர் தமிழர்கள்தான். எளிய சனங்களிடம் வாங்கிய இரண்டு பவுணில்தான் ஆயுதங்கள் வாங்கப்பட்டன என்பது வேடிக்கையில்லையா.  போர்  ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண்களிடமும் பெண்களிடமும் புலம்பெயர்வு என்பது ஓர் மனநிலையாகப் புகுத்தப்பட்டது. ’டொக்டர் இஞ்சியினருக்குப் பிறகு வெளிநாடு’ என்ற மனநிலை திரண்டது. பெண் பிள்ளைகள் தங்களுடைய  வாழ்நாள் இலட்சியமாக வெளியேறும் வழியாக வெளிநாட்டுத் திருமணத்தைத் தேர்ந்தனர்.  சொல்லும் போது பகடியாக இருந்தாலும், உழைக்கப் போன ஆண் பிள்ளைகளை விட ஒரு படி மேலாக நின்று தம் குடும்பங்களைத் தாங்கியவர்கள் பெண் பிள்ளைகள்.  போருக்குப்பிறகு ஆண்கள் புலம்பெயர்வதில் வீழ்ச்சி இருந்திருக்கலாம், ஆனால் பெண் பிள்ளைகளுக்கான சந்தையும் கேள்வியும்  அப்படியேதான் இருந்தன. அதன் பிறகு பொருளாதார நெருக்கடி கடந்த சில வருடங்களில் திரும்பவும் அள்ளு கொள்ளையாக ஆட்களை வெளிநாட்டிற்கு அனுப்பியது. குறிப்பாகத் தமிழர்கள் ஏற்கனவே அங்கிருந்த குருதி உறவுகளால் எடுக்கப்படத்தொடங்கினர்.  இன்றைக்குப் பார்க்கும் போது  இந்தக் கடைகள் இந்த இரண்டாவது புலப்பெயர்வை நம்பித்தான் நடக்கிறதோ என்று தோன்றியது. ஏனென்றால் வரலாற்றுக்கு இப்போதைக்கு இந்த நகரைக் காப்பாற்ற உள்ள ஒரே வழி இதுதான்.

வரலாற்றுக் காலம் முழுவதும் வணிகம் ஒரு நகரத்தைத்தை உருவாக்கும் போதும்,  பெருக்கும் போதும் அது தன்னை அரசியலிலும் ஈடுபடுத்திக் கொள்கிறது. பண்பாட்டில் நிலை கொள்ளத் தேவையானவற்றை ஆற்றிக் கொள்கிறது. தங்களுக்குள் ஒரு சமூகமாக வணிகர்கள் உருவாகி நிலைக்கிறார்கள். அத்தோடு உலகத்தோடு தம்மை முதலில் இணைப்பது வணிகர்கள்தான். அவர்கள் இயல்பிலேயே சிலந்திகள். வணிகர்கள் அரசோடு இணைந்து நகரங்களை உருவாக்கும் போது அவை நிலைகொள்கின்றன.  இயற்கைப் பேரழிவோ படையெடுப்போ நிகழும் போது நகரங்கள் வீழ்கின்றன. அநுராதபுரம் ஆயிரமாண்டுகளுக்கு மேலே தலைநகராக இருந்தது. அதன் நிலங்கள் வளம் குன்றிக் கிடந்தன. அது வீழ்வதற்குத் தயாராக இருந்த போதுதான் சோழர்கள் படையெடுத்து வந்து அதைக் கைப்பற்றினார்கள். அங்கிருந்து புலஸ்தி நகரம் என்ற பெயரில்  பொலநறுவைக்கு தலைநகரை மாற்றினார்கள். திருகோணமலைத் துறைமுகத்தைக் கண்டுபிடித்து அதை இணைத்தார்கள். உலகின் பெரும்பாலான நகரங்கள் விழும் போது  இயற்கை அழிவும், மனிதத் தாக்குதலும் நிகழ்ந்திருக்கும். அதுவொரு விந்தையான சுழல் நிகழ்வுதான். ஆனாலும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. மகாபாரதம் போன்ற காவியங்கள் குறிப்பிடும் நகரங்களின் கதைகளைக் கவனித்துப் பாருங்கள்.  மகாபாரதத்தில் பிரதான நகரமாக அஸ்தினாபுரி இருக்கிறது. அதற்கு மாற்றாக இரண்டு பேர் எழுந்து வந்து இரண்டு பெரிய நகரங்களை நிர்மாணிக்கிறார்கள்.   ஒன்று கிருஷ்ணன் யாதவர்களுக்காக கட்டிய துவாரகை,  இன்னொன்று பாஞ்சாலி தன் அகங்காரத்தின் பேருருவாகக் கட்டியெழுப்பிய இந்திரப்பிரஸ்தம்.  இரண்டும் அரசியலாலும் இயற்கையாலும் ஒருங்கே அழிந்தொழிகின்றன. இரண்டு நகரங்களுமே மிக வேகமாக எழுந்து அதே வேகத்தில் வீழ்ந்தவை.  காவியத்தில்  அவை  வாழ்க்கையைக் குறிக்கும் பெரிய படிமங்களாக எழுந்து அழிகின்றன.  எல்லாப்பொருளும் அதனளவிலே அழிந்தும் கொண்டிருக்கின்றன என்பது பவுத்த தரிசனங்களில் ஒன்று.

யாழ் நகரத்தின் இந்த விரிவில் ஒன்று சீராக எழும் வரலாற்று ஒழுக்கைப் பார்க்க முடியவில்லை.   தீவனம் இடப்பட்ட  மின்சாரக் கோழிக்குஞ்சைப் போல் வளர்கிறது. ஏற்கனவே மிக மோசமான திட்டமிடலோடு உருவாகி நிற்கும் இலங்கையின் அழகியல் ஒருங்கிசைவற்ற நகரங்களில் ஒன்று யாழ்ப்பாணம். அவ்வளவு சிக்கலானது அழகற்றது. இன்றைக்கு அந்த ஒருங்கிசை வின்மைக்கு மேல் ஒரு பதற்றத்தைப் பார்க்கிறேன். அடித்தளமற்ற உள்ளீடற்ற, நெறிகளற்ற அரசியலோடும், பண்பாட்டோடும் தன்னை விலக்கிக் கொண்ட வணிகர்களால் சகட்டு மேனிக்கு உருவாகும் நகரமாக இதைப் பார்க்கிறேன். நகரம் சந்தையல்ல. அது பண்பாட்டின் வெளி. அழகும் சுவாத்தியமும், ஒருங்கிசைவும் கொண்ட வாழ்க்கை நிகழும் இடம். யாழ்ப்பாணம் அப்படிப்பட்டதல்ல. முன்பு இருந்திருக்கலாம். குறிப்பாகக் கொலனித்துவம் வரை. இன்றைக்கு அப்படியல்ல அதனுடைய தோற்றமும் மிகப்போலியானது. அதனிடம் உள்ளீடில்லை.  அடுத்த புலம்பெயர்ந்த அடுத்த தலைமுறைகள் இங்கே பணம் அனுப்புவதை நிறுத்தி விடுவார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், இந்த வணிக நிறுவனங்கள் இந்த நகரைக் கைவிடும். அல்லது இன்னொரு நாட்டிடம் அனேகமாக இந்தியாவிடம் கையளிக்க வேண்டியிருக்கும். ஏற்கனவே அதற்கு தொடக்கங்கள் நிகழ்ந் தேறிவிட்டன. நான் இதை என்னுடைய வாழ்நாளில் பார்க்கக் கூடாது என்றுதான் தனிப்பட்ட முறையில் விரும்புகிறேன்.  ஒரு எழுத்தாளனாக இந்த நகரத்தின் தசையை உண்டவர்களில் ஒருவனாக அது கொள்ளும் வேகமும் பதட்டமும் அது நடந்து விடுமோ என்று நடுக்கத்தான் செய்கிறது.  இடங்களின் மேல் எந்தப்பற்றையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது மெய்தான். இருந்தாலும் இந்த தசையும் குருதியும் இந்த நிலம் அளித்தவை. அன்ன வடிவான இந்த உடலின்  பற்றுதல் பற்றிய பிரச்சினையை வாழ்நாள் முழுவதும் எதிர்கொண்டவர்களே அதிகம். இந்தத் தசையோடு இருக்கும் பிரச்சினைதான் மானுடர்களின் முதன்மையான பிரச்சினை.

1 COMMENT

  1. மிக அழகான ஆழமான கருத்து. ‘இந்த தசையும் குருதியும் இந்த நிலம் அளித்தவை. அன்ன வடிவான இந்த உடலின் பற்றுதல் பற்றிய பிரச்சினையை வாழ்நாள் முழுவதும் எதிர்கொண்டவர்களே அதிகம்’. முற்றும் உண்மை.’ எனக்கு உங்கள் ஊரின் map அவ்வளவு தெரியாது. எனினும் முயன்று தெரிந்து கொண்டேன். நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here