வடக்கு இலங்கையில் சிறுவர்களிடையே ‘அலாப்புதல்’ என்றொரு சொல் புழக்கத்தில் இருக்கிறது. பொதுவாக விளையாட்டுகளின் போது இச்சொல் புழங்கும். தங்களுடைய தோல்விகளையோ, விதி மீறல்களையோ ஏற்றுக் கொள்ளாத அணியோ தனியொருவரோ ’அப்படி இல்லை’ என்று சாதிப்பதை அலாப்புதல் என்போம். அலப்புதல், அலம்புதல் போன்ற சொற்களில் இருந்து வந்த உள்ளூர் வழக்குச் சொல்லிது. ’வாயுள்ள பிள்ளை பிழைக்கும்’ என்ற தமிழ்ப் பழமொழி இச் சொல்லுக்கு நெருக்கமான ஒன்று. போருக்குப் பிறகு மன்னாரில் அரசாங்க நலன்புரி முகாமில் இருக்கும் போது எங்களுடைய பிளாக்கில் கிரிக்கட் ஆடுவோம். எங்களுடன் விளையாட வரும் சிறுவன் ஒருவனுக்கு ‘அலாப்பி’ என்று பட்டப்பெயர். பச்சையாக அலாப்புவான். அதனால் அந்தப் பெயர். எங்களை விட இரண்டு மூன்று வயது மூத்தவன்.முரடன் வேறு. அங்குள்ள சிறுவர்களி தன்னைப் போல் ’வாய் வளம்’ உள்ளவர்களைக் கட்சி சேர்த்துக் கொண்டு சரியென்று சாதித்து எப்படியோ வென்று விடுவான். எங்கள் அணியில் இருந்து கொண்டே சட்டென்று யாரேனும் எழுந்து அவன் சொல்வது சரி என்று விடுவார்கள். திகைத்துப் போவோம். கோபம் எரியும். அவனுக்கு முகாமில் காவலுக்கு நிற்கும் ஆமிக்காரர்கள்,பொலிஸ்காரர்களுடன் நல்லுறவு இருப்பது போல் காட்டிக் கொள்வான். அவர்கள் பணியில் நிற்கும் போது, அவர்களுக்குச் சிகரட் வாங்கி வந்து கொடுப்பது, சிற்றுண்டிகள் வாங்கிக் கொடுப்பது போன்ற தொட்டாற்று ஏவல்களின் மூலம் அவர்களுடன் நெருக்கமானவனாகத் தன்னைக் காட்டிக் கொண்டான். அதனால் தன் வயதுக்காரர்களிடம் மட்டுமல்ல அவனை விட பெரிய பையன்களும் அஞ்சும் படி ஒரு தோரணையைப் பெற்றுக் கொண்டான். அதனால் அவனுடன் கடுமையாக முரண்பட அஞ்சினோம். ஒரு சிலரைத் தவிர பலரும் அவனைத் தம் அணிக்குள் இழுக்கப் பிரயத்தனப்படுவார்கள். அவன் எப்படியாவது வென்று கொடுத்து விடுவான் என்ற நம்பிக்கை. எங்களுக்கோ கோபம் அனலாகும். ஆற்றாமையில் வாய் தெறிக்கக் கத்துவோம். ஒரு கட்டத்தில் என்னால் பொறுக்க முடியவில்லை, கை ஓங்கி விட்டேன். அவன் மூக்குச் சில்லு உடைந்து கொட்டியது . அவனுடைய சகாக்கள் பாய என் பக்கம் நின்றவர்களும் பாய சண்டை. அங்கிருந்த பொலிஸ்காரர்கள் கண்டு விட்டார்கள். எங்களை விலக்கி முகாமிலிருந்த காவலரணில் கொண்டு போய் இருத்தி விட்டார்கள். அன்றைக்கு முழுவதும் அங்கேயே இருத்தி வைக்கப்பட்டோம். அவ்வளவு நாள் கொதிப்பு. மனம் நிறைந்து கிடந்தது. சிறுவயதில் இருந்து இந்த மாதிரியான விசயங்களில் சட்டென்று பதட்டம் கொண்டு விடுவேன். சீற்றம் சன்னதமாடும். சகபாடிகள் எல்லோரும் அன்றைக்கு என்னை ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர். ’அவனுக்கு வேணும்’ என்றனர். அவனுக்கு நான் தண்டனையை அளித்து விட்டேன். தருமம் நிறுவப்பட்டது. காவியங்களைப் போல திரைப்படங்களைப் போல. நிறைவான ஒரு கிளைமெக்ஸ்.
….
கம்பராமாயணம் வாசித்துக் கொண்டிருக்கும் போது தாடகை வதைப்படலத்தின் தொடக்கத்தில் மாமுனிவனும் முனிவர்களில் பெருங்கோபியுமான விஷ்வாமித்திரன் சிறுவர்களான இராம இலட்சுமணர்களை தன் வேள்வியைக் காப்பதற்கு பாலை நிலத்தைக் கடந்து அழைத்துச் செல்கிறான். அதன் வெம்மையைப் பற்றிய பாடல்களை கம்பர் தொடர்ந்து சொல்லிச் செல்கிறார். வேனில் காலம் மட்டுமே நிகழும் நிலம், நிலத்தின் பசையை பரிதிவானவன் பருகிவிட்டிருக்கிறான். அதன் வெம்மையைச் சொல்லும் நாக்கு வெந்து போகும். அக்னி தேவனே அந்தப் பாலை நிலத்தின் வெம்மையை நினைத்தால் நெஞ்சம் வெந்து போவான் என்கிறார் கம்பர். அதிலொரு பாடல்.
விஞ்சு வான் மழையின்மேல் அம்பும் வேலும் பட,
செஞ்செவே செருமுகத்து அன்றியே, திறன் இலா
வஞ்சர் தீவினைகளால் மான மா மணி இழந்து
அஞ்சினார் நெஞ்சுபோல், என்றும் ஆறாது அரோ
பாடல், போரிலே அதன் விதிகளை மீறி, கோழைகளால் சூழ்ச்சி செய்யப்பட்டு வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டு, சிறைப்பிடிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட ‘மெய்யான’ வீரர்களின் நெஞ்சத்து அனலைப்போன்ற பாலை வனம் என்கிறது. காவியங்கள் இந்தச் சீற்றம் எங்கும் உள்ளது. அதற்கான பதிலீடும் நிகர் செய்யும் கதைகளும் எப்படியோ அளிக்கப்படும். காவியங்கள் அடிப்படையில் தரிசன மையம் கொண்டவை. குறித்த அறத்தையோ, மதிப்பீடுகளையோ உச்சப்படுத்தி நிறுவ முயல்பவை. தமிழில் செவ்வியல் காலம் என்று சொல்லப்படுகின்ற சங்க காலம் தொடங்கிய உயர் விழுமியங்கள், அறங்கள் என்பவை வளர்த்தெடுக்கப்பட்டு காப்பிய காலத்தில் தமிழ் சமூகத்தின் உயர் வாழ்க்கை இலட்சியங்கள்ளாக அவை காவியங்களில் நிறுவப்பட்டன. கம்பராமாயணம் அப்படி எழுப்பிய கோபுரத்தின் கலசமாக நிலைத்தது. இதை நாம் செவ்வியல் காலகட்டம் என்கிறோம். கற்பனா வாதம் என்ற கலை தன்மைகுள் இவற்றை அடக்கலாம். தமிழில் நவீன இலக்கியம் தோன்றும் மட்டும் குறிப்பிட்டுச் சொன்னால் பாரதி வரையும் பெரும்பான்மையாக இவ்வகை இலக்கியங்களே எழுதப்பட்டன. அவற்றுக்கான இலட்சிய உருவங்களாகவும் தொகுத்து அளிக்கும் மேலுருவாகவும் காவியங்கள் இருந்து வந்தன.
சிலப்பதிகாரம், அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை ஊரார் ஏற்றுவர், ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும் என்ற மூன்று பெரிய தரிசனங்களை மதிப்பீடாக நிறுத்தி அவற்றைக் காவியமாக்கி நிறுவுகிறது. அநீதியிழைக்கப்பட்ட கண்ணகி பாண்டியனைத் தண்டிக்கிறாள், மாநகரை எரிக்கிறாள், ஊரார் போற்றும் பத்தினித் தெய்வமாக அமர்கிறாள். இன்றைக்கு வரைக்கும் தமிழ்ச் சமூகத்தை ஆண்டு கொண்டிருக்கும் இம்மதிப்பீடுகள் அன்றைக்கு இளங்கோவடிகள் நிறுவியவை.
காவியங்களில் அதன் நாயகர்களே அறங்களை மீறுகின்றார்கள். வியாச காவியத்தில் மிகப்பெரிய அறவான்கள் எல்லோரும் அதை மீறுகிறார்கள், தருமனும் கிருஷ்ணனும் பீஷ்மரும் கூட விதி விலக்கல்ல. குருஷேத்திரத்தில் அறத்தை மீறாத தரப்பே இல்லை என்று சொல்லலாம். சொல்லப்போனால் தரும தேவதையின் புதல்வனான தருமன் தலைமையேற்றிருக்கும், கிருஷ்ணன் தான் நின்று புரக்கும் பாண்டவர் தரப்பே அதிகமாக அறங்களை மீறுகிறது, வஞ்சங்கக் கொண்டு போரை வெல்கிறது. இராமாயணத்தில் ராகவ ராமன் மீறுகிறான். வாலியை மறைந்திருந்து கொல்கிறான். ஆனால் காவியங்கள் எவ்வளவு தூரம் இந்த மீறல்களையும் குலைவுகளையும் மோதல்களையும் மோத விட்டு நாடகத்தன்மையைப் படைக்கிறதோ. ஒவ்வொன்றிற்கும் கணக்கு வைத்து அறுதியில் எல்லாவற்றுக்குமான பதில்களையும் வினைப்பயன்களையும் அளிக்கிறது. மதிப்பீடுகளின், சமநிலையை நிறுவுகிறது.
பாண்டவர்கள் தாம் வென்ற அரசை திருதராட்டினனுக்கும் சூதப் பெண்ணுக்கும் பிறந்தவனும், பாஞ்சாலிக்கு அநீதியிழைக்கப்படும் போது குரல் கொடுத்த கெளரவனும், அதே நேரம் போரில் இருந்து விலயிருந்தவனுமான யுயுதிஸ்விற்கு அளித்து விட்டு வானேகிச் செல்கிறார்கள். தெய்வம் என்றே சொல்லப்படும் யாதவக் கிருஷ்ணன் தன்னுடைய குடியும் சுற்றமும் அவனே கட்டிய பெரு நகரமான துவாரகையும் கண்முன்னால் அழிந்தொழிவதைப் பார்த்துக் கொண்டு தனிமையில் இறக்கிறான்.வியாச காவியம் காட்டும் மிகப்பெரிய சமநிலை அது. உயர் அறங்களில் அது கொண்டிருக்கும் தெய்வத்தன்மையை காணும் போது உலுக்கி விடும். இராமாயணத்தில் இராமன் போர் செய்து மீட்ட மனைவியை அக்னிப்பிரவேசத்திற்கு அழைக்கிறான். அவள் அவனைப் பிரிந்து காடேகிச் செல்கிறாள். அவன் தனிமையின் இருளில் நிற்கிறான். மகா புருஷர்களும் அச்சமநிலை முன்னால் பொருட்டிலாமல் ஆகிறார்கள்.
காவியங்களில் எந்தவொரு மீறலின் எச்சமும், குற்றத்தின் நீதியும், வஞ்சத்தின் கணக்கும் எஞ்சுவதில்லை. எல்லாம் சமநிலை செய்யப்படுகின்றன. எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லப்படுகிறது. அன்று காவியங்கள் வைக்கப்பட்ட இடத்தில் இன்று நாவல்கள் இருக்கின்றன என்கிறார் ஆசிரியர், எழுத்தாளர் ஜெயமோகன். நாவல்கள் மீதுள்ள ஈடுபாட்டினால் காவிய வாசிப்பின் போது நாவல்களின் இயல்புகளுடன் காவியத்தை ஒப்பிட்டு வாசிக்கும் பழக்கத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்திக் கொள்கிறேன். எனக்கு முக்கியமாகத் தெரியும் காவியப்பகுதிகளைக் குறிப்பெடுக்கும் போது அவ்விடங்களை நாவலுடன் தொடர்பு படுத்தி தோன்றுவதைக் குறித்துக் கொள்வதுண்டு.
செவ்வியல் காலம் முடிவடைந்த பிறகு சனநாயகத்தின் வருகையோடு இலக்கியத்திற்கு வரும் நாவல் என்ற வடிவம், காவியங்கள் இருந்த இடத்தை எடுத்துக் கொள்கின்றன. ஆனால் அடிப்படையில் அவை காவியங்களில் இருந்து தம்மை எதிர்த் திசைக்கு நடத்திச் செல்கின்றன. நாவல்கள் மதிப்பீடுகளை, இலட்சியங்களை, தரிசனங்களை நிறுவுவதில்லை. அவை காவியங்கள் தரிசனங்களை முறுக்கி ஓரிடத்தில் குவிப்பதைப் போல தம்மைக் குவிப்பதில்லை. அவை மதிப்பீடுகளை வியாக்கியானம் செய்கின்றன. உடைத்தோ, அவிழ்த்தோ பரிசோதிக்கின்றன. அவை மையத்தை நோக்கிக் செல்லாமல் நெகிழ்ந்து விரிகின்றன. தான் நிகழும் கால கட்டத்தின் மெய்மைகள் மீது தன் தரிசனத்தை நிறுத்தி அதை அவிழ்த்து விசாரிக்கின்றன. நிறுவுவதற்கும் ஒற்றைப் பதில்களை அளிப்பதற்கும் பதிலாக கேள்விகளைப் பெருக்குகிறன. காவியம் நிலப்பிரபுத்தவ அறங்களைச் சேர்ந்தது கற்பனாவாத கால கட்டத்தில் இருந்து அது தன்னை உச்சப்படுத்திக் கொண்டது. நாவலோ சனநாயக யுகத்தினுடையது யதார்த்த வாத கால கட்டத்தைச் சேர்ந்தது. நாவலையும் காவியத்தையும் புரிந்து கொள்வதற்கும் தனிப்பட்ட வாசிப்பையும் சிந்தனையும் மேம்படுத்திக் கொள்ளவும் இந்தப் புரிதல் பயனளிக்கிறது.
முகாமிலிருந்து வெளியேறுவதற்குச் மாதங்களுக்கு முன்பு அலாப்பியை அவனுடைய கூடாரத்தில் சந்தித்தேன். கையில் பெரிய மாவுக்கட்டுப் போட்டிருந்தான். புதுக் கட்டு. வெறு எங்கோ திரும்பவும் கைகலப்பு. அவன் மூக்கை உடைத்த சம்பவம் ஒன்று நடக்காதது போல் கதைத்தான். அவனை விட அங்கு அவனுடைய மாற்றுத் தகப்பனைச் சந்தித்தேன். அலாப்பியினுடைய தகப்பன் புலிகளின் எல்லைப்படையில் இருந்தவர். சமாதான காலத்தில் வெடி தவறி இறந்து போய் விட்டார். தாயார் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்தத்திருமணத்தில் இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். ஆண் பிள்ளைகள். அம்மாவின் இரண்டாவது கணவர் நல்ல மனிதர் இவனில் எந்தப் பிரிவினையும் காட்டுவதில்லை. நல்ல பரிவுடன் இருந்தார். அவருடன் நிறைய நாள் இருந்து கதைத்திருக்கிறேன். அவர் என்னை அலாப்பியின் உற்ற சினேகிதன் என்று நினைத்துக் கொண்டார். நானும் அவனுக்கு சினேகிதம் செய்து கொள்ளவே முயன்றேன். அடிக்கடி எங்கே போனாலும் ஓரளவுக்கு மேல் அவனை நெருங்கமுடியாது. அவன் முற்றிலும் தனித்தவன். அவனைப்பற்றி அவனுடைய மாற்றுத் தகப்பனிடம்தான் தெரிந்து கொண்டேன். மனிதர் அவனைப் பற்றி சொல்லிச் சொல்லி நோவார். அவன் ஒவ்வொரு முறையும் ஏதேனும் வம்பில் மாட்டும் போது தன்னை வைத்துத்தான் அவனை மீட்டு வந்தார். அவனைப் பேசக்கூட மாட்டார். தாய்க்காரிதான் காலில் தழும்பு விழும்வரை வெளுப்பாள்.
அவனுடைய இளைய சகோதரர்களுக்கு அவனுடன் ஒவ்வாமைகள் இருந்தன. குறிப்பாக படிப்பில். அவர்கள் இருவரும் கெட்டிக்காரர்கள். ஏதேனும் குழப்படி என்றால் அம்மா அவர்களுடன் ஒப்பிட்டுப் பேசவோ அடிக்கவோ செய்வாள். தகப்பனார் அப்படிச் செய்யாதே செய்யாதே என்று சொன்னாலும் அவளுக்கு அது புரியவில்லை என்று என்னிடம் பொருமினார். அவருக்கு அது புரிந்தது தாயால் அதை மனம் கொள்ள முடியவில்லை.
ஒரு பேச்சுக்கு, அலாப்பியின் கதையை நாவலாக எழுதினால் நான் அலாப்பியை அது என்னவாக அணுகும்? அவனுடைய வன்செயல்கள், வஞ்சகங்கள் காவியத்தைச் சீற்றம் கொள்ள வைக்குமா? சரி நாவலாக எழுதினால் அது எதை எல்லாம் கவனிக்கும் ? அது அலாப்பியினுடைய கதையில் அவனுடைய தாய்க்கு எது புரிபடவில்லை, ஏன் புரிபடவில்லை என்பதில் இருந்து தொடங்கக் கூடும். அலாப்பியின் மொத்த வாழ்க்கையையும் அள்ளி எல்லாப் பகுதிகளையும் அது விசாரணை செய்யும். அது முழு முடிவையோ தீர்புகளையோ அளிக்காது. அவனுடைய ஆதாரமான பிரச்சினையை நோக்கி பல திசைகளைத் திறந்து பார்க்கும், அவற்றுடன் உரையாடும். காவியம் என்பது குவிப்பு, அது நிறுவிச் சமனிலைப் படுத்துகிறது. நாவல் என்பது விரித்து ஒருங்கிணைக்கிறது. காவியம் நிறைவில் கதையை முடிக்கிறது. நாவல் முடியும் இடத்தில், தொடங்குகிறது.


