ஒரு பெருஞ்சுழிப்பு – Prix Émile Guimet விருது

0
82

எழுத்தாளர், ஷோபாசக்தியின் ‘ஸலாம் அலைக்’ நாவல் Prix Émile Guimet விருதின் இறுதிப் பட்டியலில் இடம்பெற்று விருதையும் பெற்றிருக்கிறது.

விருதுக் குழுவின் நடுவர் “ஸலாம் அலைக் நமக்குத் தமிழ் இலக்கியத்தைக் கற்பிக்கவில்லை, மாறாக நம்முடைய சொந்த இலக்கியத்தைப் பற்றிச் சிந்திக்க வைத்திருக்கிறது” என்றும் தெரிவித்திருக்கிறார்கள். தமிழில் இருந்து மொழிபெயர்ப்பு மூலம் நாவல் அய்ரோப்பிய மொழி ஒன்றிற்குச் செல்லவும் அங்கு கவனப்படுத்தப் பட்டும் இருப்பது வெறுமனே ஷோபாசக்திக்கான அங்கீகாரமோ புகழோ மட்டுமல்ல. அது உலகை நோக்கி திறக்கப்படும் நம் இலக்கியத்திற்கான வாசல்களில் ஒன்று.

சென்ற வாரம் ‘சுக்கிரி’ சமகால சிறுகதை உரையாடல் ஒன்றில் ஷோபாசக்தியின் கண்டி வீரன் கதை எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. அதில் ஷோபாவின் கதைகளைப் பற்றிக் குறிப்பிடும் போது இரண்டு விடயங்களைக் குறிப்பிட்டேன். ஒன்று ஷோபா தனக்கென்றே ஆக்கி எடுத்த மொழி. இன்னொன்று ஷோபாவின் கதைகளில் நிகழ்த்தப்படும் அங்கதம். உரையாடலில் நண்பர் பழனி ஜோதி பகடி என்பதற்கு மேலே அர்த்தப்படும் சொல்லாக அங்கதத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார். அங்கதம் என்பது எவ்வகையில் இலக்கியமாக மாறுகிறது என்பதைக் குறிப்பிட்டார்.

G.O.A.T

தமிழில் அரிதாக வாய்க்கும் அங்கதத்தின் நுட்பமான எழுத்து ஷோபாவின் எழுத்தில் வெறும் ஹாஸ்யத்தைக் கடந்து தன்னுடைய உள் அடுக்குகளைப் பெருக்கிக் கொள்ளவும் ஆழப்படுத்தியும் கொள்கிறது என்பதைப் பற்றி உரையாடினோம்.

வாடசிப்பைத் தொடர்ந்து உரையாடலில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, ஷோபாவின் கதைகளையும் அவற்றின் களத்தின் பின்னணியையும் இந்திய, புலம்பெயர் சூழல் சார்ந்த நண்பர்களுக்கு விளக்கினேன். இன்னும் இரண்டு வாரங்களுக்கு ஷோபாவின் கதைகளை உரையாடவுள்ளோம். இவ்வாரம் அவ் உரையாடல்களுக்காக ஷோபாவின் கதைகளை மீட்டுத் தொகுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவ்வேளையில்தான் இவ் விருது அறிவிப்பு வந்திருக்கிறது. நெகிழ்வான பொழுது இது.

ஷோபா சமகால தமிழ் இலக்கியத்தில் தனகென்று மொழியையும் கதையுலகையும் கட்டிக் கொண்ட இந்த மொழியின் மாஸ்ரர்களில் ஒருவர். நம் காலத்தில் எழுத வந்த பலருக்கும் அவருடைய எழுத்து ஓர் கால்கோளைத் தந்திருந்திருக்கிறது. இலக்கியத்திற்கு வாசிப்பினாலும் எழுத்திற்கு இன்னொரு எழுத்தாளரினாலும் வந்து சேர்வதே அதன் எழுதா நடை முறை. சரியான சுழியைக் கண்டு பிடித்து அதில் குதித்து இணைந்து நீந்த வேண்டும்.

ஷோபாசக்தி ஈழத்து இலக்கிய மரபில் நிகழ்ந்த ஓர் பெருஞ்சுழிப்பு. எல்லாக் காலங்களிலும் அக்காலத்தின் இலக்கியத்தையும் உரையாடலையும் இழுத்துக் கொண்டு செல்ல மொழி ஒரு சிலரைக் கண்டடைகிறது. ஈழத்தில் அது ஷோபாவில் நிகழ்ந்தது நல்லூழ். அவரில் என்றைக்கும் திகழும் ஓர் மார்கண்டேயத் தனத்தை அருகிருந்து வியந்ததுண்டு. உள்ளத்தின் ஒளியும் வாக்கின் ஒளியும் ஒன்றாகும் நிகழ்வு. இலக்கியம் அளிக்கும் ஒற்றைப் பெரும்பேறு அது. ஷோபா அகத்தினாலும் புறத்தினாலும் நிகழும் கலைஞன்.

 அண்ணருக்கு வாழ்த்துகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here