ஈழத்து தமிழறிஞர் பண்டதமணி.சி. கணபதிப்பிள்ளை, மட்டுவிலைச் சேர்ந்தவர். அவர் ஆரம்பக்கல்வி கற்ற மட்டுவில் சந்திரமெளலீச வித்தியாலயத்தில் அவருடைய சிலை நின்றிருக்கிறது. மட்டுவில் யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பகுதியில் இருக்கும் பெரிய கிராமங்களில் ஒன்று. என்னுடைய ஊரான சரசாலை மட்டுவிலோடு வாய்க்காலையும், வரப்புகளையும், வீதிகளையும், பகிர்ந்து கொள்கிறது. மட்டுவிலுக்கும் சரசாலைக்கும் இப்பெயர்கள் இடப்பட்ட காரணத்தைக் கூறும் தொல் கதைகள் இராமாயணத்தோடு இணைந்தவை. இராமன் தன்னுடைய வில்லை ஊன்றியதால் ’மட்டுவில்’ என்று பெயர் பெற்றதாக அக் கிராமத்திற்கொரு வாய் வழிக் கதை சொல்லப்படுகிறது. அதே போல இராமன் தன்னுடைய அம்புகளைச் செய்யவதற்கான உற்பத்திக் கூடங்களை அமைத்ததால் எங்களுடைய ஊர் ‘சரசாலை’ (சரங்களைச் செய்யுமிடம்) என்று பெயர் கொண்டதாகவும் தொல்கதை சொல்லப்படுகிறது. இந்த இணைப்பு தற்செயல் என்றாலும் அது அவ்வாறு நிகழ்ந்திருப்பது மகிழ்வளித்தது. பண்டிதமணி கணபதிப்பிள்ளை தமிழறிஞர். முறையாக தத்துவம் பயின்றவர். கம்பராமாயணம் போன்ற பேரிலக்கியங்களைக் கற்றவர். அவருடைய பிரபலமான கட்டுரைத் தொகுப்புகளில் ‘கம்பராமாயணக் காட்சிகள்’ என்ற நூல் முக்கியமான ஒன்று. கம்பராமாயணத்தில் தன்னுடைய வாசிப்பில் ‘நயம்படவுள்ள’ இடங்களைப் பற்றி தன்னுடைய வாசிப்பை எழுதியிருக்கிறார். ஈழத்தில் கம்பராமாயணம் பற்றிய முன்னோடியான எழுத்துகளில் பண்டிதமணியின் பங்கு முதன்மையானது.
பேரிலக்கியங்கள் பெரு நீர் நிலையைப் போன்றவை. எங்கே அள்ளினாலும் எதையோ அளிக்கக் கூடியவை. ஒவ்வொரு கால கட்டத்திலும் அவற்றை வாசிக்கும் ஒவ்வொருத்தரும் தங்களுடைய அகத்தைப் பொருத்தியே அதை வாசிக்க முடியும். அகத்தின் விரிவும் ஆழமும் பேரிலக்கியங்களை அணுகும் போது இன்னும் மேம்படுகின்றன. ஏனென்றால் அவை உருவாக்கி அளிக்கும் வாழ்க்கை செறிவூட்டப்பட்டது. ஒவ்வொரு வாசிப்பிலும் விரிந்து செல்லக் கூடியது. கம்பராமாயணத்துடனேயே வாழ்நாள் எல்லாம் இருந்த அறிஞர்களும் வாசகர்களும் தமிழில் நிகழ்ந்தது அதனால்தான்.
பண்டிதமணியின் கம்பராமாயணக் காட்சிகள் அளித்த அனுபவமும் தூண்டுதலும் இப்பகுதிகளை எழுதுவதற்கான ஊக்கத்தைத் தந்தன. இப்பெருங்காவியம் வாசிக்கும் போதே எவ்வாறு அனுபவப் படுகிறது. என்னுடைய கண்கள் எவற்றைத் தொடுகின்றன என்று பார்க்க விரும்பினேன். என்னுடைய காவிய வாசிப்பை என்னுடன் நெருக்கப்படுத்திக் கொள்வதன் மூலம் அதன் மீதான என்னுடைய வாசிப்பும் அனுபவப்படுத்தலும் திரண்டு வரும் என்று நினைக்கிறேன். நாளுக்குப் பத்துப்பாட்டு என்ற வகையில் திட்டமிட்டு வாசித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய அதிகாலை வாசிப்பை முழுக்க கம்பருக்கு அளித்திருப்பது ஒவ்வொரு நாளையும் நிறைவாக வைத்திருக்கிறது.
முதல் வாரத்தில், பாயிரப் பகுதியிலேயே கம்பர் ஆரம்பித்து விட்டிருந்தார். முன்பு சொன்னது போல் பேரிலக்கியங்கள் மெல்ல மெல்ல எழாது. அது நிகழ்வதே உச்சிகளில் தான். எல்லாப்பகுதிகளும் நிகர் கவித்துவமோ, உச்சங்களோ நிகழும் அழகியலைக் கொண்டிருக்கும். பண்டித மணியை ஓர் பக்கத்தில் வைத்துக் கொண்டே வாசிக்கும் போது சில இடங்களை அவர் தொட்டுக் காட்டும் போது என்னுடைய வாசிப்பில் அவ் இடங்களை இன்னும் வளர்த்தெடுக்கவோ. வேறொன்றாக அனுபவப்படுத்திக் கொள்ளவோ முடிகிறது. அதாவது சமகால இலக்கியத்தின் வாசகனாக, எழுத்தாளனாக இருக்கும் என்னுடைய வாசிப்பு. இதுவொரு அற்புதமான விளையாட்டாக இருக்கிறது. நம் காலத்து பேரிலக்கிய வடிவமான நாவல் தரக்கூடிய அதே மனவெழுச்சியோடு ஆயிரம் வருடங்கள் பழமையான செய்யுள் இலக்கியத்தை வாசிக்க முடியும் என்பதை உணர்ந்த போது அவ்வளவு சிலிர்பைத் தருகிறது.
கம்பராமாயணக் காட்சிகளில் பண்டிதமணி தன் பனுவலில் முதல் கட்டுரைகளை பாயிரப் பகுதிகளை முன்னிட்டு எழுதியிருக்கிறார். பாயிரம் என்பது காவியத்தின் அறிமுகங்களையும் வரையறைகளையும் கூறக் கூடியது. இன்றைக்கு பயன்பாட்டில் உள்ள முன்னுரை, அணிந்துரைகளின் அன்றைய வடிவம் என்று விளங்கிக் கொள்ளலாம். முக்கியமாக அதன் படைப்பாளி தன் படைப்பையும் தன்னையும் எடுத்து வைப்பது. அக்காலத்தில் இலக்கியங்கள் பாடம் சொல்லப்படுவை. செய்யுள் வடிவினதாகப் பாடி அளிக்கப் படுபவை. பழந்தமிழ் இலக்கியங்களை வாசிக்கும் யாரும் அவை வாயால் சொல்லப் படுகின்றன என்ற கற்பனையை விரித்துக் கொள்ளும் போது அவற்றின் அமைப்பு சொல் முறை என்பவற்றை நன்கு மனம் கொண்டு உள்ளே செல்ல முடியும். செய்யுள் வடிவங்களிலும் சரி, உரைநடையிலும் சரி மொழியின் இசைத்தன்மையைத் தொட்டு வாசிப்பது வாசிப்பில் அடிப்படையானது.
கம்பராமாயணத்தை வாசிக்கும் போது ஒட்டக்கூத்தர் முதலான அறிஞர்கள் உள்ள சோழ அரசனின் சபையில் கம்பர் எழுந்து தன் படைப்பை பாடும் காட்சியை கற்பனையில் விரித்துக் கொள்ளலாம். கம்பராமாயணத்தின் பாயிரப்பகுதி முழுக்க முழுக்க அவையை நோக்கியது. இவ்வுலகில் நிகழ்ந்த பெருங்கவிஞர்களில் ஒருவன் தன்னுடைய படைப்பை சபைக்கு வைக்கிறான். அதில் அவன் தன்னை முன்வைக்கிறான், தன் படைப்பை இது இப்படிப்பட்டது இந்த மொழியினால், இன்னாருடைய காதையைப் பாடுகிறேன் என்று சொல்லி வரையறுக்கிறான். தன் படைப்பும், தானும் யாருக்குப் பணிகின்றோம், யாரை இதற்கு உகந்தவர் இல்லை என்று அப்பால் இடுகிறோம், யாரை நினைவுவில் இருத்திக் கொள்கிறோம் என்பதையும் சொல்லி நிலைப் படுத்துகிறான். இக்கற்பனையோடு வாசிக்கும் போது இப் பாயிரப் பகுதியில் உள்ள பதினொரு பாடல்களும் அவ்வளவு மன வெழுச்சியைத் தரக் கூடியவையாக மாறுகின்றன. அதே நேரம் நம்முடன் உரையாடவும் செய்கின்றன. பண்டிதமணி கணபதிப்பிள்ளை, கம்பரை மேற்கோள்படுத்தி ‘அவையடக்கமும் அவையை அடக்குவதும்’ என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.

கம்பனைக் கற்பனை செய்யுங்கள். சோழர்காலத்தை ’அரசவை இலக்கியங்களின்’ காலம் என்று குறிப்பிடப்படுவது. அரசனைத் தெய்வத்திற்கு இணையாக நிறுத்தி அவனைப் புகழ்ந்து பாடும் கவிஞர்கள் அரசவையில் நிறைந்திருக்கின்றனர். கம்பனோ எளிய ஊர்ப் பூசாரியின் மகன். உள்ளூர் வள்ளலான சடையப்பரின் அன்பை மட்டும் பெற்ற கவிஞன். சோழ அரசனுடன் நெருக்கமான செல்வாக்கும் புகழும் கொண்ட ஒட்டக்கூத்தர் முதலான அரசவைக் கவிகளின் முன் நிற்கிறான். கம்பன் எளிய உவச்சனின் மகன். அவன் அங்கே வந்தது அரசனைப் புகழ்ந்து பாட அல்ல. அவன் எழுதி எடுத்தது உலாவோ, பிரபந்தமோ அல்ல. காவியம். அவன் வென்றாக வேண்டும், அவன் அங்கே குறுக முடியாது. தன்னைச் சரியாக முன்வைக்க வேண்டும், தன்னுடைய படைப்பை வரையறுக்க வேண்டும். ஏளனம் படர்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கும் சபையை நிமிர்ந்து உட்கார வைக்க வேண்டும். அச்சபையை அடக்கி தன்னைக் கேட்கச் செய்ய வேண்டும். யாருக்குப் பணிவை அளிக்கிறேன் யார் முன் நிமிர்ந்து நிற்கிறேன் என்று அவன் சொல்லும் சொல்தான் அடுத்த ஆயிரம் வருங்களுக்குப் பிறகும் இந்த மொழியின் பண்பாட்டில் அவன் படைப்பை நிறுத்தப் போகிறது. அச்சொல்லில் தான் இந்தப் பண்பாடும் நிற்கப்போகிறது.
பாயிரத்தில் கம்பர் தன்னுடைய முதல் பணிவை, தெய்வத்துக்கு அளிக்கிறார், அலகிலா விளையாட்டை ஆடும் தத்துவார்ந்தமான தெய்வம் அவருடைய தரிசனத்தின் உச்சியில் வைக்கப்படுகிறது. கடவுள் வாழ்த்துப் பகுதி பிற இலக்கிய வடிவங்களில் வருவது போல் வெறும் பரிவார தெய்வங்களையோ, தொழில் இயற்றும் தெய்வங் களையோ மட்டும் வணக்கித் தொடங்கும் சம்பிரதாயச் சடங்கைப் போல் காவியங்களில் நிகழ்வதில்லை. அது தன்னுடைய பெரும் தரிசனங்களின் முத்தாய்ப்பையும் தொடக்கத்தையும் அங்கிருந்தே நிகழ்த்தத் தொடங்குகிறது.
அடுத்து, கம்பர் அக்காவியத்திற்கு முன் தன்னை நிறுத்தி, அதன் முன் பணிகிறார். காவியங்கள் பண்பாட்டில் நிகழ்ந்து திரண்டு தம்மை நிகழ்த்திக் கொள்ள உகத்தோரைக் கண்டடைகின்றன. சோழர்காலத்தில் திரண்டெழுந்த பண்பாடு கம்பரைத் தேர்ந்தெடுத்தது தற்செயல் அல்ல, அதுவொரு பெரு நிகழ்வு. அதன் முன் அவர் வெறும் கருவியே. தனி மனிதரின் ஒற்றை வாழ்க்கையை, மானுட ஆணவத்தை அதன் முன் வைக்க முடியாது. அதனுடைய விராட வடிவம் கடல் போன்றது என்கிறார். தன்னைப் பாற்கடலை நக்க வந்த பூனை என்கிறார்.
ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென,
ஆசை பற்றி அறையலுற்றேன்
தமிழில் விருத்தப் பாவில் இக்காவியத்தைப் புனைவதாக மொழிமுன் பணிந்து இக்காவியத்தைப் பாடுகிறேன் என்பதை குறிப்பிடுகிறார். தொடர்ந்து தன்னுடைய காவியத்தின் ஆசிரிய நிரையை வகுத்துக் கொள்கிறார். நம்முடைய அறிவியக்க மரபில் இவ்வழக்கம் முதன்மையானது. வடமொழியில் பாடிய முதல் மூவரான வால்மீகி , வசிட்டர், போதாயனர் ஆகிய ஆசிரியர்களைப் பணிந்து கொள்கிறார். கூடவே இராம கதையை இக்காவியமாக இயற்றத் துணை நின்ற சடையப்ப வள்ளலுக்கு ஒரு பாட்டை அமைத்து அவரையும் நினைத்துக் கொள்கிறார். கம்பராமாயணம் முழுக்க அவ்வப்போது சடையப்ப வள்ளலில் கொடையும் சிறப்பும் கம்பரினால் சிரத்தையுடன் நினைவு கூரப்படும். எங்களுடைய பாடத்திட்டத்தில் மோட்டெருமை வாவி புக முட்டுவரால் கன்று என்று … என்ற திருவெண்ணை நல்லூர் சடையப்ப வள்ளலைப் பாடிய கம்பரின் பாடல் இருந்ததை நினைத்துக் கொண்டேன்.
இவற்றுக்கிடையில் இக்காவியம் யாருக்கு உகந்ததில்லை என்பதையும், யாரை விலக்க வேண்டும் என்பதையும் நுட்பமாகச் சாடுகிறார். சபையில் இருக்கும் உத்தமக் கவியோரே! என்று விளித்து, பித்தர், பேதையர், பக்தியுடையோருக்கு இவை உகந்ததாக இருக்காது என்று சொல்கிறார். அடுத்த பாட்டில் சட்டென்று சொல்லைத் திருப்பி, விளையாட்டுக் குச்சியால் குழந்தைகள் வரையும் ஆடரங்கை, அதை அமைக்கக் கூடிய தச்சர்கள் கண்டால் அக் குழந்தைகள் மீது கோபப்படுவார்களா என்ன? அப்படித்தான் இந்த ஞானமற்ற புன் கவியை பெரும் அறிஞர்கள் கோவித்துக் கொள்ள மாட்டார்கள் தானே ! என்று சொல்லும் போது என்னுடைய உதட்டில் சிறு சிரிப்பு வந்து அமர்ந்து கொள்கிறது. இதைத்தான் பண்டிதமணி ’அவை அடக்கமும் அவையை அடக்குதலும்’ என்றார்.
தமிழில் கம்பர் பற்றி அவருடைய பாடலை ஒட்டிய கதையொன்று வழக்கில் உண்டு. குலோத்துங்க சோழன் தன்னுடைய ஆணவத்தால் கம்பரைச் சீண்டிய போது, அவரும் நாட்டவரும் தன்னுடைய அடிமைகள்தான் என்ற தொனியில் கதைத்த போது அவனுடன் கோவித்துக் கொண்டு நாடு நீங்கிச் சென்றதாகச் சொல்லப்படும் கதையும், அப்பொழுது அரசனை நோக்கி பாடிய பாட்டும் தமிழ் மேடைகளில் பிரபலமானது. நானே பள்ளி நாட்களில் விவாதங்களில், பட்டிமன்றங்களில் இப்பாடலை உரக்கச் சொல்லி மேசை மீது அடித்துப் பேசியதை நினைக்கும் போது சிறு புன்னகை திரும்பவும் வந்து அமர்ந்து கொண்டது.
மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ
உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்– என்னை
விதந்தேற்றுக் கொள்ளா வேந்துண்டோ உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு’
இவ் ஆணவம் கலைஞருக்கோ எழுத்தாளருக்கோ அடிப்படையானதும் அவசியமானதும் என்றே நினைக்கிறேன். நம்முடைய சமூகத்தில் இன்றைக்கு வரைக்கும் கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளார்கள் எல்லோரும் ஆணவம் பிடித்தவர்கள் என்பது பொதுப்புத்தியில் இருக்கக் கூடிய நம்பிக்கைகளில் ஒன்று. ஒருவகையில் உண்மைதான். ஆனால் அதை எளியவர்களுக்கும் சராசரிகளுக்கும் இருக்கக் கூடிய வெற்று ஆணவமாக, அதிகாரத்தினாலோ, செல்வத்தினாலோ, வெற்றுப் பெருமிதங்களாலோ புரிந்து கொள்ளப்படுகின்றது. ஆனால் ஒரு கலைஞர் கொண்டிருக்கக் கூடிய ஆணவம் என்பது மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ என்ற அவர்களின் தொல் தாதையரின் சொல்லில் இருந்து எழுந்து வருவது. அரசியல்வாதிக்கும், முதலாளிக்கும், செல்வந்தனுக்கும், வணிகப்படத்தின் நடிகனுக்கும் இருக்கக் கூடிய ஆணவத்தை அவர்களுடைய சிறுமையை ஏற்றுக்கொண்டு திரியும் சராசரிகள் இந்தப் பண்பாட்டையும் அறிவுச்சூழலையும் ஆக்கியளிக்கும் கலைஞரையும், எழுத்தாளாரையும் அவனுக்குரிய இடத்தையோ மதிப்பையோ அவர் வாழும் காலத்தில் அளிப்பதில்லை.
அதிகாரம் கலையோடு கலைஞனையும் போட்டு எரிக்கிறது, சமூகம் அவனைப் பட்டினியில் சாக விடுகிறது. அவன் பணிவது வாழ்க்கையின் முன், அதன் தெய்வத்தன்மைக்கு முன். ஒரு கலைஞனோ எழுத்தாளனோ தனக்கு முன்னால் நிகழும், சிறுமைகளின் முன் நிமிர்ந்து நிற்க வேண்டியுள்ளது. வெறும் ஏட்டுக் கல்வி, செல்வம், புகழ், அதிகாரம் என்பவற்றோடு தம்மைப் ‘அறிஞர்கள்’ என்று வகுத்துக் கொண்டு அரசவைக் கவிகளாக உலாத்துபவர்களை சூழ்ந்து கொண்டு சராசரிகள் அவர்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஈழத்தில் புதுவை இரத்தினதுரையும், காசியானந்தனும் எழுதியவை கவிதையானதும் அவர்கள் கவிஞர்களானதும், தமிழ்நாட்டில், திரைப்படத்திற்குப் பாடல் எழுதும் வைரமுத்து ‘கவிப்பேரரசு’ ஆனதும் அப்படித்தான். மெய்க் கவிஞனும் எழுத்தாளனும் இக்கும்பலுக்கும் இந்தக் கும்பலின் கும்பலுக்கும் முன்பு எழுந்து நின்றாக வேண்டும். இல்லையென்றால் அவன் வாழமுடியாது. அவனுடைய கலை நிகழ முடியாது. எனவே கலைஞனோ எழுத்தாளனோ இந்தச் சலம்பல்களைப் பொருட்படுத்தாமல் தன் கலையே தெய்வம் என்று நிற்க வேண்டும். தன் பசியிலும் நெருப்பிலும் அற்பர்கள் முன் தன் தாதைகளின் குருதியையும் தன் படைப்பாணவததையும்பெருக்கிக் கொண்டு குன்றாமல், குறுகாமல் நிமிர்ந்து எழவேண்டும். அவனுடைய நிமிர்வு கலையினுடைய நிமிர்வு. வாழ்க்கையினுடைய நிமிர்வு. ஏனெனில் எழுத்தாளன் வெறும் காற்றாலும் சோற்றாலும் மட்டும் வாழ்ந்து செல்பவன் அல்ல.


