நான் புது மாணவனாய் வன்னியில் இருக்கும் பள்ளிக்கூடம் ஒன்றில் சென்று சேர்ந்தேன். எங்களுடைய வகுப்பில் ஓர் பெண் பிள்ளை படித்தாள். அவளைச் சூட்டி என்று பட்டப் பெயர் சொல்லி அழைத்தார்கள். பாதி நாட்கள் பள்ளிக்கூடம் வரமாட்டாள். அமசடக்கி என்றாலும் குழப்படிக்காரி. ஒருவகையான முரட்டுச் சுபாபம். அவர்களுடைய ஊரைச் சேர்ந்த பிள்ளைகளுடன் தான் அதிகம் ஒட்டுவாள். அவர்கள் பள்ளிக்கூடத்தில் ஒரு குறுங்குழுவைப் போலச் செயற்பட்டார்கள். தங்கள் ஊர்ப் பிள்ளைகளுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் எல்லா வகுப்புகளில் இருந்தும் புற்றுயிர்கள் என்று புறப்பட்டு வந்து நிற்பார்கள். இயல்பிலேயே அவர்களிடம் ஒரு முரட்டுத்தனமிருந்தது. தோற்றத்திலும் செயலிலும் ஒத்த இயல்புகளிருந்தன. நான் அந்தப் பள்ளிக்கூடத்திற்குப் புதுமாணவனாகப் போன நாளில் இருந்து சக பிள்ளைகள் அவர்களுடன் சேராதே, எதுவும் பிரச்சினைப் படாதே என்று அறிவுறுத்திக் கொண்டே இருந்தார்கள்.
முன்பு அவர்களுடைய கிராமத்தவர்கள் திருட்டு, கசிப்பு போன்ற தொழில்களில் ஈடுபட்டவர்கள் என்று சொன்னார்கள். என்னுடைய வீட்டோடு நெருக்கமான ஆசிரியை ஒருவர் என்னை அழைத்து தனிப்பட்டு அவர்களுடன் சேராதே என்றாள். அவர் அவர்களைப் ’பின் தங்கின’ சனம் என்றார். எதிலிருந்து என்று சொல்லவில்லை. அது பிடிபடுவதற்கு எனக்கு நீண்ட காலமாகியது.ஆசிரியர்கள் அவ்வூர் பிள்ளைகளைக் கண்டிப்பது கூட இல்லை. அவர்களுக்குத் பயமிருந்தது. ஒருமுறை ஆசிரியை ஒருவர் பிள்ளையொன்றை அடித்து விட்டார் என்று அவ்வூர் தாய்மார் இறங்கி அதிபரையும் பிள்ளைக்கு அடித்த ஆசிரியரையும் ஒரு வழி செய்து விட்டார்கள். அவ்வூர் ப்பிள்ளைகளின் நாக்குகளில் இயல்பாகப் புழங்கும் கெட்ட வார்த்தைகள் எங்கிருந்து இவர்களுக்கு வந்து சேர்ந்திருக்கிறது என்று அன்றைக்குப் பள்ளிக்கூடத்தில் வெளிச்சமானது. அந்தப்பிள்ளைகள் சில நேரம் குழு உக்குறிகள் போன்ற புரிபடாத சங்கேத மொழியில் பேசிக்கொள்வார்கள். கண்கள் சிமிட்டப்படும், தலைகள் ஆட்டப்படும்.
அந்தப்பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு அவசியமாக இருந்தது, மெய்வல்லுனர் நிகழ்வுகளான விளையாட்டுப் போட்டிகளில். அவர்களிடம் சக பிள்ளைகளை விட அதீதப்பட்ட உடல் வலு இருந்தது. அவர்கள் உடல் உழைப்பு சார்ந்த சமூகத்தின் பிள்ளைகள். குருதியிலும் அன்றாடத்திலும் அவர்கள் உடலுழைப்புச் சார்ந்தவர்கள். கோட்டம், வலயம், மாவட்டம் தாண்டி தேசிய மட்ட விளையாட்டுகள் வரை வென்று வந்தார்கள். எங்களுடைய சிறிய பள்ளிக்கூடத்தின் பெயர் மாவட்ட அளவில் விளையாட்டின் மூலமே அறியப்பட்டது. சூட்டியும் நன்றாக ஓடுவாள். வகுப்பில் பெரிதாக யாருடனும் பேச மாட்டாள். குருகுப் பறவையின் இயல்புள்ளவள். அவள் வேறொருத்தியாக ஆவது மைதானத்திலும் கோபத்திலும். எங்களுடைய வகுப்பில் அவளே உருவாக்கிய நடைமுறை ஒன்று இருந்தது. யார் என்ன சாப்பாடு கொண்டு வந்தாலும் அதில் ஒருபருக்கையேனும் அனைவரும் உண்ண வேண்டும். ஒரு ரோபியோ, பாண் துண்டோ கூட வகுப்பில் உள்ள பதினேழு பேரும் அதைப் பகிர்ந்து உண்ண வேண்டும். இல்லை என்றால் யாரும் சாப்பிட முடியாது.’எள்ளெண்டாலும் எட்டாப்பகிரோணும்’ என்று அவளுடைய அம்மா சொல்வார் என்பாள். அவள் பேச்சுக்கு மறு சொல் சொல்ல முடியாது, அவளுடன் ஏதேனும் ’முண்டினால்’ பள்ளிக்கூடத்தில் இருக்கும் அவளுடைய ஊர்ப்பிள்ளைகள் அனைவரும் வந்து கூடிவிடுவார்கள். இடைவேளைகளில் எங்களுடைய சாப்பாட்டுப் பொதிகளும் பெட்டிகளும் விரித்து வைக்கப்பட்டு மளமளவென்று உணவுப் பிடிகள் பகிரப்படும், அவ்வளவு உணவையும் இருபது நிமிட இடைவேளையில் பிடிக்குழப்பம் இல்லாமல் பகிர்ந்து கொண்டோம் என்ற சூட்சுமத்தை இன்றைக்கு என்னால் திரும்பச் செய்ய முடியுமென்று தோன்றவில்லை. அவள் அதை நிகழ்த்திக் காட்டினாள். எள்ளை எட்டாகப் பகிரும் கலை.
அவளுடன் என்னை நெருக்கமாக்கியது அவள் சொல்லும் கதைகள். அவள் மூலமாக அவ்வூர்ச் சிறுவர்களின் நெருக்கமும் தோழமையும் கிடைத்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் அவர்களுடன் காடை அடிக்க கூட்டிப் போவார்கள். கண்ணி வைக்கவும், தடம் வைக்கவும் சொல்லித் தந்தார்கள். கெற்றபோல் (கவண்) நன்றாக அடிக்க வேண்டும் என்றால், கருங்குருவியை அடித்து அதன் இரத்தைத்தை அதன் கெவர்களில் பூச வேண்டும் என்று சொன்னார்கள். காடைக் கோழிகளைத் தடத்திலோ, கெற்றபோலினாலோ அடித்து நெருப்பில் வாட்டி உண்டோம். குளங்களில் விழுந்து குளித்தோம். சூட்டி எங்கே அழைத்துச் சென்றாலும் எனக்குக் கதைகள் சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் என்னை விட மூன்று வயது மூத்தவள் என்றும் தான் இரண்டு வகுப்புகள் பெயில் விட்டதால் வகுப்பேற்றவில்லை என்றும் நெருக்கமான பிறகே சொன்னாள். தன்னில் சிலநேரம் ஊத்தை குடியன் இறங்கும் என்று சொன்னாள். அவள் தொடர்ந்து சில நாட்கள் பள்ளிக்கூடம் வராமல் நிற்பதற்கு அதுதான் காரணம் என்றாள்.
அவளுடைய ஊரில் ஏகப்பட்ட தெய்வங்களும் பிசாசுகளும் இருந்தன. வேள்வி, மடை, கழிப்பு, வெட்டு, நேர்ச்சை என்று அவ்வூரே வருடத்தில் பாதி நாட்கள் சடங்குகளோடு போகும். அந்நாட்களில் பள்ளிக்கூடத்தில் வித்தியாசம் தெரியும். அவ்வூர் பிள்ளைகள் யாரும் வந்திருக்க மாட்டார்கள். அவள் ஒருமுறை என்னை வைரவர் மடைக்கு வரச்சொல்லிக் கேட்டாள். அதற்கு முன்பு பெரிய மடைகளிலோ வேள்விகளிலோ கலந்து கொண்ட அனுபவம் ஏதுமில்லை. அவ்வூரில் வைரவர் மடை பெரியது. மச்ச மடை எனப்பட்டது. கிடாரங்களில் அவித்துக் கொட்டப்பட்ட ஆவி எழும் சுடு சோறு முகடுகள் எழக் குவிக்கப்பட்டிருந்தது. அதன் மேலே ஆட்டுக் கறி. முட்டைகள், ஈரல், குடல் என்று தனித்தனியாக, இவற்றோடு காய்கறிகள், பழங்கள், பஞ்சாமிர்தம், சாராயப் போத்தல்கள் என்று நான் முன்பு பார்த்திராத ஓர் உலகம் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது. மச்சமடைக்கு ஓர் பொலிவிருக்கும். அம் மாபெரும் அன்ன மேடுகளைப் பார்க்கப் பார்க்கப் பூரிக்கும். அன்றைக்கு மடைச்சோறும் கறியும் குழைந்து கிடந்த வாசனை அவ்விடமெங்கும் கற்பூரத்தோடு கலந்து நிறைந்திருந்தது. பறை மேளமும் உடுக்குகளும் அதிர கலைவந்தவர்கள் சுழன்று கொண்டிருந்தார்கள். பூசைதொடங்கி, கழிப்புச் சடங்குகள், வழிவெட்டும் சடங்குகள் எல்லாம் முடிய மடைச்சோறு பகிரபட்டது.
தேக்கின் பெரிய இலைகளில் சோறும் கறிகளும் பகிரப்பட்டன. என்றைக்கோ சூட்டியிடம் எனக்கு ஈரலும், இரத்த வறையும் பிடிக்கும் என்று சொன்னதை ஞாபகம் வைத்து அவளுடைய அம்மாவிடம் சொல்லியிருக்கிறாள். எனக்கென்று எடுத்து வைத்து கொண்டு வந்து தந்தார். அவர்களுடன் அமர்ந்து உண்டேன். பந்திகளில் உண்பதற்கும் மடைச்சோற்றைக் கூடி உண்பதற்கும் வேறு வேறு உணர்வுகள். மடைச்சோறு காகங்களைப் போல் உண்ணப்படுவது. பகிரப்படுவது. இங்கு தெய்வங்களுக்கு சனங்களுக்கும் ஒரே நிவேதனம். காகங்களின் விருந்தைப் போன்றது. அதற்குப் பிறகு வெவ்வேறு இடங்களில் பல மடைகளுக்குச் சென்றிருக்கிறேன். அதே உணர்வை அடைந்திருக்கிறேன். அங்கிருக்கும் போது எழுவது ஓர் ஆதியான உணர்வு. கூடி உண்பது பற்றிய மனப்பதிவு நமக்குக் குருதியால் தரப்பட்டது. பழங்குடிகள் குழுவாக வேட்டையாடுபவர்கள், கூடி உண்பவர்கள்.
உணவுக்கு பகிர்வதும் உண்பதும் மட்டுமே பழைய நெறி. தொல்குடிச் சமூகங்களுக்குக் காடும் மலையும் நதியும் பொதுவானதாகவிருந்தன. கருவிகளும் ஆயுதங்களும் பொதுவாக இருந்தன. கூடி வேட்டையாடிய விலங்கை எல்லோரும் பகிர்ந்து உண்டனர். அதை அளித்த தெய்வத்திற்கு முதல் விலங்கையோ முதல் மாமிசத்தையோ படைத்தனர். அந்த நினைவு நம்முடைய குருதியில் உள்ளது. மானுட ஆழங்களுக்குள் வாழ்கிறது. இன்றைக்கும் வாழும் பழங்குடிகளிடம் இவ்வியல்புகள் உண்டு. ’எல்லோரும்’ என்ற பேருணர்வினாலேயே அவ்வாழ்வு நிலை நின்றது.
பொதுப்புத்தியில் தமிழர்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள், வந்தாரை வரவேற்று உபசரிப்பவர்கள் என்று வழக்குண்டு. எனக்குத் தெரிந்து மொத்தமாக தமிழ்ச் சமூகத்திடம் அப்படி ஒரு இயல்பு இருக்கிறது என்று சொல்ல முடியாது. அப்படியென்றால் குறித்த சாதிய, சமூகக் குழுக்களிடம் இவ்வியல்புகள் இருக்கலாம், மாறுபடலாம். ஏனென்றால் எப்பொழுது சென்றாலும் இன்முகத்துடன் வரவேற்று உணவளிக்கும், கண்டவுடன் சாப்பிட்டீர்களா என்று கேட்கும் கிராமங்கள் உண்டு. ’சாப்பிட்டுத்தானே வந்திருப்பியள்’ ’பின்னேரம் தேத்தண்ணி வீட்டிலையே குடிச்சிட்டுத்தானே வெளிக்கிட்டு இருப்பியள்’ என்றே பேச்சைத்துவங்கும் ஆட்கள் நிறைந்த இடங்களையும் கண்டிருக்கிறேன். இன்னும் இரட்டைக் குவளை வைக்கும் இடங்கள் உள்ளன. இடம், சாதி அறிந்து கைநனைப்பவர்கள் பத்துப்பேரில் குறைந்தது நான்கு பேராவது இருக்கிறார்கள். அப்படிப்பார்க்கும் போது தமிழ்ச் சமூகம் விருந்தோம்பல் சமூகம் என்று சொல்லி விட முடியாது. ஆனால் அப்படியொரு கனவு நெடுங்காலமாக இலக்கியத்தில் இருந்து வருகிறது. அது விழுமியமாக உயரிய அறமாகப் போற்றப்படுகிறது. பழங்குடிச் சமூகங்களும், நாட்டுப்புற மரபிலும் அக்கனவும் இலட்சியமும் உண்டு. அதே போல செவ்வியலிலும் காவியங்களிலும் அக்கனவுண்டு. அதை அறமென்று வலியுறுத்தும் நிறுவும் பண்பாடு நம்மிடம் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாகவே இருந்து வருகிறது.
சங்கப்பாடல்கள் முழுக்க முழுக்க செவ்வியல் இலக்கியங்கள். என்றாலும் நாட்டார் மரபில் உள்ள செய்திகளும் அவற்றில் உண்டு. இது எவ்வாறு நடக்கிறது என்பது முக்கியமானது. செவ்வியல் தன்மையை அடையும் யாவும் அடிப்படையில் நாட்டார் மரபில் (Folklore) உருவாகி வந்தவையாத்தான் இருக்கின்றன. சிறுகச் சிறுக நெறிகள், பழக்கங்கள், விழுமியங்கள் பழங்குடிப் பண்பாட்டில் இருந்து உருவாகி வந்தவை. அவை முதிர்ந்து தத்துவார்த்தமான நிலைமைகளை அடையும் போது, குடிச்சமூகங்களில் இருந்து செவ்வியல் தன்மையை அடைகின்றன. எளிய வனத்தெய்வத்திற்குப் படைத்து உண்ணப்படும் மடைச்சோறு ’உணவளித்தல்’ என்ற அறமாக மாறுகிறது. சங்க காலத்தில் எயிற்றியர் தேக்கமிலையில் அளித்த உணவே, காவிய காலத்தில் மணிமேகலையின் கைகளில் ஏந்திய அட்சயபாத்திரத்தில் ஊறுகிறது. காவியத்தில் சென்று சேர்ந்த பிறகு திரும்பவும் நாட்டார் மரபிற்கு கதைகளாகத் திரும்பி வருகிறது. அதனால் பேரறங்களின் பகுதியாக மாறி அச்சமூகத்தின் நவனிலும் நடைமுறையிலும் நின்று நிலைக்கிறது.
பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் எயினர் என்கின்ற பாலை நிலத்து மக்கள் பற்றிய செய்திகளில் அவர்களின் கூடி உண்ணும் இயல்பும், உணவளிக்கும் முறைகளும் விதந்து சொல்லப்படுகின்றன. எயினர்கள் கடுமையான பாலை நிலத்தின் குடிகள். வேட்டை, களவு, வழிப்பறி என்பன அவர்களுடைய தொழில். அவர்களின் தெய்வமாக கொற்றவை அமர்ந்திருக்கிறாள். இளம் பெண்ணைக் கொற்றவை போல அலங்கரித்து வழிபடுவர் என்று பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற காவியங்களிலும் எயினர்கள் பற்றிய குறிப்புகள் உண்டு. எயினர் என்று ஆண்களையும் எயிற்றியர் என்று பெண்களையும் குறிப்பிடும் புலவர்கள். எயிற்றியர் உணவு அளிப்பதையும், அவர்கள் கூடி உண்பதையும் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்கின்றன. புற நாநூறு
“வரகும் தினையும் உள்ளவையெல்லாம்
இரவல்மாக்களுக் கீயத் தொலைந்தென”
என்கின்றது. பசியுடன் வருபவர்களுக்கு எயினர் தலைவி தங்களிடத்தே உணவு தீர்ந்தாலும் கைமாற்றாக வாங்கியேனும் அவர்களுக்கு உணவளிப்பாள். என்கின்றன. வறண்ட கடுமையான போராட்டம் மிக்க நிலத்தில் வசிக்கும் குடிகள் அவர்கள். உணவும் நன்னீரும் அவர்களுக்கு முக்கியமானது. என்றாலும் எயிற்றி பசியென்று வருவோரை கடன் பெற்றேனும் வயிறாற்றி அனுப்புகிறாள்.
கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவர் பெரும்பாணாற்றுப் படை என்ற ஆற்றுப்படை நூலை எழுதியவர். அவர் எயினர்களின் இயல்புகள் பற்றியும் அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும் நுண்மையான விபரணைகளைச் சொல்கிறார்.
தெய்வ மடையின் தேக்கிலைக் குவைஇ நும்
பைதீர் கடும்பொடு பதமிகப் பெறுகுவீர்”
“தெய்வத்திற்குப் படைக்கும் பலிச்சோற்றைப் போல, பெரிய தேக்கிலையில் குவித்து வைக்கப்பட்டுள்ள உணவை, உங்களுடைய பசித் துன்பம் நீங்கிய சுற்றத்தாருடன் சேர்ந்து நீங்கள் மிகுதியாகப் பெறுவீர்கள் என்கிறது பாடல். இப்பாடலை வாசிக்கும் போது தேக்கிலையில் அளிக்கப்படும் தெய்வ மடை என்ற சொல்லைத் தாண்ட முடியாமல் திரும்பவும் அவ் வரிகளிலேயே நடந்து கொண்டிருந்தேன். அந்தத் தேக்கிலையில் மடைச்சோற்றை உண்டிருக்கிறேன். சூட்டியின் தாயின் கையால் பகிரப்பட்ட உணவது. அவள்தான் தன் மகளிடம் எள்ளையும் பகுத்துண்ணச் சொன்னவள். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு கடும் பாலை வனத்தில் பசி என்று வந்த இரவலர்க்கு உணவளித்த கைகள் கொற்றவைக்குப் படைத்த பலிச்சோற்றை எடுத்துப் பகிர்ந்தளித்த மூத்த எயிற்றியரின் சொல் இன்றைக்கும் வாழ்கிறது.
பழம்பாடல் 01 பழம்பாடல் 02 பழம்பாடல் 03 பழம்பாடல் 04 பழம்பாடல் 05 பழம்பாடல் 06
எயிற்றியர் : எள்ளை எட்டாக்குதல் | பழம் பாடல் 07


