வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நாட்களில் பள்ளிக்கூடங்களில் பிரச்சாரக் கூட்டங்களுக்கு முன்பு அமெரிக்க சண்டைப்படங்களைத் திரையிலோ தொலைக்காட்சியிலோ போடுவார்கள். அவை முதலாம் இரண்டாம் யுத்தங்களைச் சித்தரிக்கும் படங்களாகவோ வரலாற்றுப் படங்களாகவோ இருக்கும். அவற்றைப் பார்த்த உணர்வுக் கொந்தளிப்புடன் பிரச்சாரக் கூட்டத்திலும் இருந்தால். அப்படியே அவர்களிடன் ஏறிப் போராட்டத்திற்குப் போய்விடத்தான் தோன்றும். அவை போர், வீரம் , தியாகம் போன்றவற்றை மிகைநாடகமாக பெருப்பித்துக் காட்டத்தக்க படங்கள். அவை ஆழத்திற்கு இறங்கச் சரியான பராயம். அப்பொழுது வன்னியில் எங்களிடையே பிரபலமாக இருந்தவை இரண்டு படங்கள். ஒன்று டிரோய் (2004) இன்னொன்று 300 (தமிழில் – முந்நூறு பருத்தி வீரர்கள்) இரண்டுமே கிரேக்க தீபகற்பத்தில் நிகழும் மிகை புனைவுகள். அவர்களின் புராண, காவிய பின்னணியில் இருந்து எடுக்கப்பட்டவை. சிறுவனான எனக்கு இரண்டு படங்களில் டிராய் தனிப்பட்ட பிரியத்துக்குரிய படமாகவிருந்தது.
டிரோய் (2007) இலியட் காவியத்தில் இருந்து தழுவப்பட்ட கதையை அடிப்படையாகக் கொண்டு காட்சிப்புனைவான அமெரிக்க வணிகப்படமாக உருவாக்கி எடுக்கப்பட்டது. கிரேக்க, எகிப்திய தொன்மங்களே இன்றைக்கு வரைக்கும் ஐரோப்பிய பண்பாட்டின் மூலக்கதைகள் (Cannon tales). இலியட் காவியத்தின் கதைப்படி ஸ்பார்ட்டா நாட்டு அரசன் மெனிலாஸின் (Menelaus) மனைவி ஹெலனை (Helen), டிரோய் இளவரசன் பாரிஸ் (Paris) கடத்திச் சென்றதைச் சாட்டாகக் கொண்டு உருவான மாபெரும் போரை ஹோமர் சித்தரிக்கிறார். அகமனனை (Agamemnon) தலைமையாகக் கொண்டு கிரேக்கப் படைகள் ஹெலனை மீட்க டிராய் நகரை முற்றுகையிடுகின்றன. யாரும் தாண்டிச்செல்ல முடியாத பெரும் மதில் சுவர்களைக் கொண்ட டிரோய் நகரை சூழ்ந்து கொண்டு கிரேக்கப்படைகள் முற்றுகையிடுகின்றன. போரில் அகிலீஸ் (Achilles), ஒடிஸியஸ் (Odysseus) போன்ற புகழ்பெற்ற கிரேக்க வீரர்களும், ஹெக்டர் (Hector) போன்ற டிரொய் நகரப் பெருவீரர்களும் சண்டையிட்ட போர். இவ் யுத்தம் இலியட்- ஒடிசி காவியங்களின் அடிப்படையான பெரு நிகழ்வாகச் சித்தரிக்கப்படுகிறது.
டிரோய் திரைப்படம் அக்கிலீசைக் கதாநாயகனாகக் கொண்டு எழுதப்பட்டது. படத்தில் அக்கிலீஸ் கிரேக்கப்படைகளில் சேர்ந்து கொள்வான். அவனுக்கு தரப்புகள் பற்றி எந்த அக்கறையும் இருக்காது. ஓரிடத்தில் அவனிடம் எதற்காக இந்த வாழ்க்கையை; அதாவது போரிடும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தாய் என்று கேட்கப்படும். அதற்கு அவன் ‘chose nothing. I was born and this is what I am என்பான். இன்னொரு இடத்தில் எதற்காகப் போரிடுகிறாய் என்று கேட்க ‘நான் வரலாற்றில் நிற்கப்போகும் இந்தப் பெரும்போரில் என்னை இணைத்துக் கொள்ள விரும்பினேன் என்பான்.
பெருங்காவியங்களிலும், இதிகாசங்களிலும், பிறகு நாவல்களிலும் இப்படியொரு கனவுப் பாத்திரம் இருந்தபடியே இருக்கிறது. அவ் இலட்சியமான ஒன்று பண்பாட்டிற்குள் தொடர்ந்து இருந்து வருவதால் எழுதப்பட்டும் வளர்த்தெடுக்கப்பட்டும் வருகிறது. குறிப்பாக இலக்கியத்தில். இலக்கியத்திற்கு இந்தத் தரிசனம் முக்கியமானது.
கம்பராமாயணம் வாசிக்கத் தொடங்கிய நாளில் இருந்து அதில் அவதானிக்க கூடிய விசயங்களைக் குறிப்பெடுக்கும் போது பிற காவியங்களுடன், கதைகளுடன் ஒப்பிட்டும் குறிப்பெடுத்துக் கொள்வதுண்டு. நாவல்களின் தாதைகளான காவியங்களின் உருவ உள்ளடக்க விசயங்களை புரிந்து கொள்வது காவிய வாசிப்பில் அடிப்படையான நோக்கங்களில் ஒன்று. பாலகாண்டத்தில் இப்படியொரு பாடல் இருக்கிறது.
கருப்புறு மனமும், கண்ணில் சிவப்புறு சூட்டும் காட்டி,
உறுப்புறு படையின் தாக்கி; உறு பகை இன்றிச் சீறி,
வெறுப்பு இல, களிப்பின் வெம் போர் மதுகைய, வீர வாழ்க்கை
மறுப்பட ஆவி பேணா வாரணம் பொருத்துவாரும்
பாடலில் நாட்டு வருணனைக்காக அங்குள்ள சேவல் சண்டை சித்தரிக்கப்படுகிறது. சிவந்த கண்களும் கொண்டைகளுமாக வெறுமனே போரின் வெஞ்சினம் மட்டுமெழ சேவல்கள் சண்டையிடுகின்றன. அவற்றிடம் பரஸ்பரம் பகையேதுமில்லை. வெறுப்பில்லை. வெறுமனே தம் கடமையைச் செய்கின்றன. இந்தப் படிமம் கோரக் கூடிய இலட்சியமான ஒன்று அக்கணம் திகைக்க வைத்தது. எல்லாப் பெருங்காவியங்களிலும் இப்படியொருவனாவது நிகழ்கின்றான் என்று தோன்றியது. வெறுப்பின்றிப் போரிடும் ஒருவன்.
மகாபாரதத்தில் நிகழும் குருஷெத்திர மகாயுத்தத்தில் எவையெல்லாம் அப்படியொரு பாத்திரமாக இருந்தன என்று துழாவித்தேடினேனின். இருட்டும் வெளிச்சமும் தங்களின் எல்லா நியாய அநியாயங்களை நிகழ்த்திப் பார்க்க இறங்கியது அப் போர். அங்கே வெறுப்பின்றிப் போரில் இருந்தவர்கள் மிகச் சொற்பமானவர்கள். பிதாமகர் பீஷ்மர் கூட எப்பற்றும் அற்றிருந்தாலும் , தன்னுடைய அகத்தின் மீது வெறுப்பும் வெறுமையும் கொண்டிருந்தவர். அதனாலேயே முதல் பதினொரு நாளும் அவர் ஆடிய அமலை ஒரு வகையில் தன் வெறுப்பென்றே நினைக்கிறேன். எல்லாவற்றிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு நட்பின் கடனுக்காக மட்டும் களமெழுந்த கர்ணனால் கடைசி வரை அருச்சுனன் மீதிருந்த வெறுப்பை வெல்ல முடியவில்லை. அப்படிப்பார்த்தால் குருஷேத்திரத்தில் வெறுப்பே இல்லாமல் போரில் இருந்தவர்கள் இரண்டு பேர். முதலாவது அப்போரை நிகழ்த்தும் பெரு மையமாகவும் அதேநேரம் தன்னை அதில் இருந்து விடுவித்தும் கொண்டு தேரோட்டியாக அமர்ந்த கிருஷ்ணன். இன்னொருவன் போரின் சாட்சிகளில் ஒன்றாக அமர்ந்திருந்த பெருவீரன் பார்ப்பாரிகன். அதே போலவே இராமாயணத்தில் கும்பகர்ணன் அப்படிப்பட்ட பாத்திரமாக நிகழ்கிறான். அவன் வெறுமனே தம்பிக்குரிய தன் கடமையை மட்டும் ஆற்றும் பேருருவனாக எழுந்து மடிகிறான்.
பாலகாண்டத்தைக் கடந்து செல்லும் போது இந்தப்பாடலைக் குறிப்பெடுத்து வைத்து நெடு நாட்களுக்குப் பிறகு இதை எழுத வேண்டும் போலிருந்தது. ஆனால் பாடல் எண் சட்டென்று ஞாபகத்திர்கு வரவில்லை. என்னுடைய குறிப்புப் புத்தகத்தை யாழ்ப்பாணத்தில் விட்டுவிட்டு வந்து விட்டேன். உடனே எங்களுடைய கம்பராமாயணம் கூட்டு வாசிப்பை முன்னெடுக்கும் தூண்களில் ஒருவரும் , சினேகிதியுமான மதுபாலாவிடம் ’வெறுப்பின்றிப் போரிடுவது’ என்ற பொருளில் உள்ள பாடல் எண் நினைவிருக்கிறதா என்று கேட்டேன். மது சிறிது நேரம் கழித்து நாட்டுப்படலத்திலோ, பரசுராமர் படலத்திலோ வரும் என நினைவு இருக்கு… சரியாக எந்தப் பாடல் னு தெரியல .தேடிப் பார்க்கிறேன். இன்று இரவுக்குள் முடியுதானு பார்க்கிறேன்’ என்று அனுப்பியிருந்தார். சமீபத்தில் இலக்கிய ஆர்வம் கொண்ட பெண்களில் மது அளவிற்கு ஈடுபாடுள்ள பெண்களைச் சந்தித்தது இல்லை. மது இரவுவரை எடுத்துக் கொள்ள மாட்டார் என்று தெரியும். கொஞ்ச நேரத்தில் மதுவிடமிருந்து செய்தி வந்தது. பாடல் எண் 47 கருப்புறு மனமும், கண்ணில் சிவப்புறு சூட்டும்…. எனத் தொடங்கும் பாடலா? நீங்கள் குறிப்பிட்டது? சேவல் சண்டை பற்றிய குறிப்பில் வருது’ அதேதான். ’உறுபகை இன்றிச் சீறி வெறுப்பு இல களிப்பின் வெம் போர் மதுகைய , வீர வாழ்க்கை’ இந்த வரி நீங்கள் குறிப்பிடும் பொருளுக்கு நெருக்கமா தோணுது’ மதுவையும் அந்த இடம் தைத்து நிறுத்தியிருக்கிறது. எனக்கு அந்தப்பாடல் தட்டுப்படவில்லை. திரும்பத்திரும்ப கம்பர் இதை வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார்.
’வெறுப்பின்றிப் போரிடுவது’
இவ்விடத்தில். போர் என்பதை இரத்துச் செய்து எக்காரியத்திற்கும் இதைப் பொருத்திப் பார்க்கலாம் என்று தோன்றியது. கீதையில் கிருஷ்ணர் அருச்சுனனுக்கு ‘ஆகவே கொலைபுரிவாய்’ என்று ஒவ்வொரு முறையும் சொல்லும் போதும் அது ’செயல் புரிக’ என்ற கருமநிலைக்கான வழிப்படுத்தலென்றுதானே வாசிக்கிறோம். அதைப்போன்ற ஓர் வாசிப்பையே இக்காலத்தில் நின்று நிகழ்த்த வேண்டியிருக்கிறது என்று நினைக்கிறேன்.
தத்துவார்த்தமாக தமிழ்ப் பண்பாட்டில் , அல்லது பெருங்காவியங்கள் நிகழத்தக்க மொழியாகத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்ட எல்லா மொழி வழிப்பண்பாடுகளிலும் எழுந்த காவியங்களில் இத்தகைய இலட்சியம் உருவாகி வந்த வழியைக் கவனிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆசிரியர் ஜெயமோகன் ஓரிடத்தில் ஒரு சமூகத்தில் நிகழும் வளமான தத்துவ விவாதத்தின் விளைச்சலே பெருங்காவியம் என்கிறார். தத்துவம் உருவாக்கும் தரிசனம் காவியத்தால் வாழ்வு நோக்கி விரிக்கப்படுகிறது. அதன்பின் அக்காவியம் தன்காலகட்டத்துத் தத்துவநோக்கில் ஆழமான பாதிப்பை செலுத்துகிறது. அதை வழிநடத்துகிறது. மாற்றியமைக்கிறது. சமூகத்தின் ஆழ் மனம் இதன் மூலம்தான் உருவாகி வருகிறது. சொல்லப்போனால் இன்று பண்பாடு என்று நாம் அழைக்கும் அனைத்திற்குமான முகாந்தரமான வடிவங்கள் நம் மொழியில் நிகழ்ந்த பெருங்காவியங்களில் இருந்து தொகுத்து அளிக்கப்பட்டவையாகத் தானிருக்கும்.
கம்பராமாயணம் எழுதப்பட்டது தமிழின் தத்துவ மரபின் உச்சம் நிகழ்ந்த காலம் என்று சொல்லப்படும் சோழர்காலத்தில். அதற்கு முன்பே திருக்குறள் உள்ளிட்ட நெறிநூல்கள் ப்ண்பாட்டில் ’இலட்சியங்களை’ பற்றிய எண்ணங்களைத் திரட்டி அளித்துக் கொண்டு வந்தன. அது சங்கமருவிய காலத்தில் காவியங்களாகவும், சோழர்காலத்தில் பெருங்காப்பியமாகவும் நிகழ்ந்தன. இதே சோழர்காலமே பக்தி இலக்கிய மரபின் உச்சங்கள் நிகழ்ந்து பண்பாடெனத் திரண்டு விரிந்த காலமாகவும், சைவ, சமண, பவுத்த தரிசனங்கள் வியாபித்து விரிந்த காலமாகவும் இருந்ததையும் கவனப்படுத்த வேண்டும். அதே வேளை தமிழ்ச் சமூகத்தில் ‘பேரரசுப் பண்பாட்டின்’ உச்ச காலமும் சோழர் காலமே. சோழர்கள் பெரும்போர்களை இயற்றிக் தங்களை அகலப்படுத்திக் கொண்டிருந்த காலம். சங்ககாலத்தில் இருந்தது போல் சிறுகுடிப்போர்களல்ல கம்பன் அறிந்திருக்கக் கூடியது. அக்காலத்தில் போரும் வீரமும் அக்காலத்தின் மேம்பட்ட தத்துவ நோக்குகளாலும் நேறிகளாலும் கண்காணிக்கப்பட்டிருக்கும், புதுப் பொருள்தரப்பட்டிருக்கும். வெறுமனே எளிய குடிப்போரில் நெஞ்சில் வேல் பட்டு விழுந்தாலே பெருவீரம் என்ற நிலை சோழர் காலத்தில் இருந்திருக்காது. அதன் நேறிகளும் அடைவுகளும் மேம்பட்டிருக்கும். மாறியிருக்கும். அதை சோழர்கால இலக்கியங்களில் தெளிவாகக் காணலாம்.
இப்பின்னணியை மனம் கொண்டு கம்பனைக் கவனிக்கும் போது வீரம் என்பதன் நடைமுறைப்பொருளை அர்த்த நீக்கம் செய்து விட்டு வேறு பொருட்களை அதில் ஏற்றிப் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது இல்லையா? இவ்விடத்தில் கம்பரைக் கவனிக்கும் போதுதான் மெய்யான வீரம் என்பதன் நேரடிப்பொருளை இன்னும் இன்னும் விரித்து வெறொரு தளத்திற்கும் கொண்டு செல்லலாம் என்று தோன்றியது. கொஞ்சம் விரித்தெடுத்தால் வெறுப்பில்லாமல் செய்யப்படும் , அல்லது வெறுப்பை எதிர்கொள்ளும் பெருஞ்செயல்களை இவ்விடத்தில் பொருத்திக் கொள்ள முடியும்.
இப்பொழுது திரும்பவும் ‘உறு பகை இன்றிச் சீறி. வெறுப்பு இல. களிப்பின் வெம் போர்’ என்று சொல்லிப்பார்க்கிறேன். எளிய ஆணவங்களும் வெறுப்பும் மோதும் கொல்லும், கொல்லப்படும் போரைப் பற்றியதா இது? சிவப்புக் கண்களைக் கொண்ட வெறுப்பற்ற சேவல்கள் எவற்றினது படிமங்கள்? எவை புதைந்திருக்கும் ஆழங்கள். ஏறக்குறைய கம்பராமாயணம் எழுதப்பட்டு ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு அது நிகழ்ந்த நம் பண்பாட்டில், நம் தத்துவ மரபில், அறிவியத்தின் விரிந்த பரப்பில் நின்று கொண்டு நாம் இதை எப்படி வாசிக்க வேண்டும். பற்றோ வெறுப்போ இல்லாமல் இயற்றப்படும் கருமமே மேலானது, என்ற நம்முடைய மரபின் மையமான தரிசனங்களில் ஒன்றைச் சென்று தொடுவதற்கான நூலிழைப் பிடிகளையா கம்பர் விட்டுச் சென்றிருக்கிறார் ? அவருடைய சொற்களில் யாரை எல்லாம் வைக்க முடியும்?காந்தியாரை வைக்க முடியுமா ? முடியும். அவரளவிற்கு வீரமுள்ளவர் யார்? வெய்யோன் மறையாப் பேரரசின் முன் தன் எளிமையை, வெறுப்பில்லாத அகிம்சையை வைத்தவர். மலமும் முள்ளும் வைக்கப்பட்ட போது அவற்றைத் தன் கைகளால் அகற்றிக் கொண்டு நடந்து சென்றவர். வெறுப்பில்லாமல் போர் செய்வது என்பதில் ஜனநாயக உலகின் இலட்சிய வடிவம் அவர். நாம் பிறந்த, அல்லது இப்பொழுது உள்ள பெரும்பான்மை உலகின் அடிப்படைகள் வடிவமைக்கப்பட்ட காலத்தைச் சேர்ந்தவர். காந்தியார் செயல் புரியத்தொடங்கிய நாட்களில் இருந்து வெறும் தனி நபரல்ல; அவர் ஒரு நிகழ்வு. மாபெரும் கருமங்களின் நிகழ்வு. காந்திக்கும் பிறகும் காந்திக்கு முன்பும் வரலாற்றில் இருந்து இவ் இலட்சியத்திற்கான நிறைய உதாரணங்களை எடுத்துச் சொல்ல முடியும். இங்கே இக்கட்டுரையை எழுதி முடிக்கும் போது இயல்பாகவே காந்தியாரின் முகம் எழுந்து வந்து விட்டதை நிதானமாகப் பார்த்துக் கொண்டே எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒர் சிறு முறுவலைத் தவிர்க்க முடியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். காவிய வாசிப்புப் பற்றித் தொடங்கிய கட்டுரையிது. அக்கிலீசையும், கிருஷ்ணனையும் உதாரணப் படுத்திக் கொண்டே தொடங்கினேன். திரண்ட தோள்களும், வாளும் கேடயமும், படையாழியும் கொண்டவர்கள். அங்கிருந்து நான் வந்து சேர்ந்தவரோ வெறும் ஊன்று கோலும், கதருடையும் மெல்லிய உடலும் கொண்டவர். இக்காலத்தில் மட்டுமல்ல இப்பெரும் போர்கள் நிகழ்ந்த காலத்திலும் காந்தியாரின் முன்னோடிகள் இருந்தார்கள். பேரரசர்கள் முன் கூட கொஞ்சமும் கூனாத, புலவர்கள், அறிஞர்கள், துறவிகள், தத்துவாசிரியர்கள் எல்லாக் காலங்களிலும் நிகழ்ந்தார்கள். யாருக்கும் அஞ்சாமலும், யாரிடமும் வெறுப்பில்லாமலும் அவர்கள் நின்ற நிரையில்தான் காந்தியும் வந்து நின்றார். அல்லது அந்த நிரையில் தோன்றினார். அவர் இருபதாம் நூற்றாண்டின் பெரு வீரர்களில் முதன்மையானவர்.
.


