எழுத்தாளர்கள், ஒற்றர்கள் மற்றும் வியாபாரிகள்

0
78

சமகால இலக்கியத்தில் தங்களை ‘ஆளாக’ காட்டிக் கொள்ளவோ நிறுவிக் கொள்ளவோ ‘எழுத்தாளர்கள்’ ஒற்றர்களைப் போலவும் வியாபாரிகளைப் போலவும் இயங்கும் வேடிக்கை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஏனெனில் ஒற்றர்கள், தரகர்கள், வியாபாரிகளுக்கே ஒவ்வொரு ‘தொடர்பும்’ (contact) முக்கியமானது. அவர்களுக்கு ஒவ்வொரு பயனுள்ள மனிதர்களும் தொலைபேசி இலக்கங்கள் பட்டியலில் ஏறுவது போல. அவர்கள் ஆட்களைச் சேகரிக்கிறார்கள். வைப்பில் இடுகிறார்கள். அந்த வட்டியில் பிழைக்கவும் திழைக்கவும் செய்கிறார்கள்.

பத்துவருடங்களுக்கு மேலே சமூக செயற்பாட்டு இயக்கங்களில் இருந்திருக்கிறேன். தனிப்பட்ட தொழில் சார்ந்து Ngo எனப்படும் அரசசார்பற்ற அமைப்புகளில் பணியாற்றி இருக்கிறேன். என்னுடைய கை பேசியில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட எண்கள் இருக்கின்றன. எல்லா மட்டத்திலும் அவ்வளவு ஆட்களை அறிவேன். என்னை அவர்கள் அறிவார்கள். ஓர் தேர்ந்த NGO காரன் அந்த நாட்டின் முதன்மையான உளவாளிக்கு சளைக்காதவன்.

இலங்கையின் மூத்த அரச நிர்வாகிகளில் ஒருவரான, முன்னாள் வடக்கு கிழக்கு மாகாணத்தின் கல்விச் செயலாளராக இருந்த திரு. சுந்தரம் டிவகலாலா அவர்களோடு பணியாற்றியிருக்கிறேன். இலங்கையின் அரச சேவையில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒருவர். அவர்காலத்தில் இருந்த சனாதிபதிகள், அமைச்சர்களோடு போராளிகளோடும் மல்லுக்கட்டிக் கொண்டு அரசசேவையில் பணிசெய்தவர். வடக்கு கிழக்கு மாகாண கல்வியில் அவருடைய காலத்தில் செய்யப்பட்ட பணிகள் முக்கியமானவை. ஓய்வு பெற்ற பிறகும் ‘ஆறுதல்’ நிறுவனத்தின் மூலம் முன்பள்ளி கல்வி சார்ந்து இயங்கினார். அந்நிறுனத்தின் இரண்டு செயற்றிட்டங்களில் நான்கு வருடங்களுக்கு மேல் அவருடன் வேலை செய்தேன். என்னுடைய முதல் வேலை அது. என்னை ‘L போட்’ என்று அழைப்பார். எனக்கும் ஒழுங்குகளால் ஆளப்படும் நிர்வாகத்திற்கும் பொருந்த முடியாது என்பதே அவர் மறையும் மட்டும் அவருடைய நம்பிக்கை. எப்பொழுதும் எனக்கு அவர் கற்றுத் தந்தபடியே இருக்க வேண்டியிருந்தது. கடுமையான நிர்வாகி என்றாலும் அவரிடம் அடிப்படையில் இருந்த இரக்கமும், சமூக அக்கறையும் எனக்கு உவப்பானது.

அவர் எனக்கு கற்றுத் தந்தவற்றில் முதன்மையானது தொடர்புகளைப் பேணுவதும் மனிதர்களைக் கையாள்வது என்பதும் பற்றியது. எந்த அரச அலுவலகம் சென்றாலும் அவருடைய பெயரைச் சொல்லியே வேலை முடித்து விட்டு திரும்புவேன். தொடர்புகளைப் பேணக் கற்றுக் கொண்டேன். இதனை இவரால் இப்படி முடிக்கலாம் என்பது தலைக்குள் இருக்க வேண்டும். ஒரு கணிதச் சமன்பாட்டைப் போல் மனிதர்களை வகுத்துக் கொள்ள வேண்டும். சொல்லப் போனால் ஒருவகைப் பயன்படுத்தல் தான். இலக்கியத்துக்கு முழுக்க முழுக்க எதிரான நிலைமை. கடைசி வரை அவரோடு முரண்பட்டுக் கொண்டே இருந்ததும். அவருக்கு நிறைவே தராத பிரியமான இணைப்பாளராக இருந்ததும் அதனால் தான் என்று பின்னர் தெரிந்து கொண்டேன். இன்று அவர் எனக்கு அளித்த நூல்கள் நிறைய என்னிடம் உண்டு. தொடர்புகளை பேணுவது மனிதர்களை எண்களைப் போல் சேர்த்துக் கொள்வது இலக்கியத்திற்கு எதிரானது. அமைப்பு, அலுவலகம் போன்றவற்றிற்கு அது உதவலாம். தனிப்பட்டு அதை இயல்பாக்கிக் கொள்ளக் கூடாது. அந்த மனநிலை எதையும் உயிருடன் பார்க்க விடாது. கள்ளமின்மைக்கு நேர்மாறானது. அது இலக்கியத்தில் இயங்குபவரின் வழியல்ல. அப்படி அமையும் கூட்டுகள் கசப்புக்கும் வன்முறைக்குமே வழி நடத்தும்.

சமீபத்தில் தமிழ்நாட்டு எழுத்தாளரான நண்பர் ஒருவர், ஓர் வெளிச்சம் பாய்ச்சப்பட்ட எழுத்தாளரின் படைப்புக்களை விமர்சனம் செய்திருக்கிறார். அதனால் அவர் மீது அந்த எழுத்தாளரின் கூட்டுக்கள் இறங்கி இணையத்திலும் இதழ்களிலும் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். மறைமுகமான நடைமுறைப் புறக்கணிப்பைச் செய்து கொண்டே இருக்கிறார்கள். கசப்பையும் அவதூறையும் பரப்புகிறார்கள். தாங்கள் நடத்தும் இணைய இதழ்கள், சார்ந்திருக்கும் அமைப்புகள் மூலமும், அவரை விளிம்பில் இருந்து விழுத்த முயன்று கொண்டே இருக்கிறார்கள் என்றார். சமூக வலைத்தளங்கள் கொடுத்திருக்க கூடிய வாய்ப்பான வழிகளை இப்படி இலக்கியத்தில் இருக்கும் ‘எளிய’ கும்பல் பயன்படுத்திக் கொள்கிறது.

இன்றைக்கு இவர்கள் உலகம் முழுவதும் இருந்து தனிப்பட்ட தொடர்புகள் மூலமும் மலினமான நட்புக் கூட்டுகள் மூலமும் தங்களுக்குள் ஓர் வலையமைப்பை உருவாக்கிக் கொள்கிறார்கள். சக எழுத்தாளர்கள், வாசகர்கள், இதழாளர்கள், ஊடகங்களில் இயங்குபவர் என்று நலன் சார்ந்த நட்புக் கூட்டு இது. இலக்கிய இயக்கமாக அன்றி உள்ளுர் கள்ளுத் தவறணைகளைப் போன்று அவற்றை உருவாக்கிக் கொள்கிறார்கள். ஏனென்றால் இவர்களால் சேர்ந்து உருப்படியாக எதையாவது செய்வதற்கு. தெள்ளிய ஒன்று உள்ளே இருக்க வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் இருக்கும் இலங்கை, தமிழ்நாடு, புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் ‘so called’ எழுத்தாளர்களின் நட்புக் கூட்டுகளை அவதானிக்கிறேன். சமூக வலைத் தளங்களில் தங்களை ஒரு தரப்பாக ஆக்கிக் கொண்டு கூட்டாக தாக்குதலுக்கு இறங்குகிறார்கள். அல்லது உள் உரையாடல்கள் மூலம் தங்களுக்குள் இரகசிய சமூகம் போல இயங்குகிறார்கள். பரஸ்பரம் ஒராளை இன்னொருவர் புகழ்வது முன் வைப்பது ஊடாக வாசக வெளிச்சம், புகழ் என்பவற்றை நோக்கிச் செல்கிறார்கள். புகழ் பெற்ற எழுத்தாளர்களைச் சார்ந்து அவர்களிம் நல்லியல்புகளினதும், இளையவர்கள் என்பதால் காட்டும் அக்கறை, நெகிழ்ச்சிகளினதும் நிழலில் ஒடுங்கிக் கொண்டு வெறும் வெளிச்சமும் புகழுமே முதன்மையானதென்று இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இலக்கியம் என்பது எதையாவது எழுதி புத்தகமாகப் போட்டால் போதுமானது என்று நினைக்கிறார்கள். வணிக எழுத்தாளர்களைக் காட்டிலும் இவர்கள் அடி மட்டத்திற்கு இறங்கிவிடுகிறார்கள். எங்கிருந்து வருகிறார்கள் என்றே தெரியவில்லை. வெறும் பேஸ்புக் ‘பதிவர்’ என்று தொடங்குபவர் அதையே சில ‘டிங்கர்’ வேலைகளின் மூலமும் தொடர்புகள் மூலமும், புலம்பெயர் நாட்டில் உள்ளவர் என்றால் பணத்தின் மூலமும் புத்தகமாகப் போட்டுக் கொண்டு. இலக்கியத்தில் கடை விரித்து விடுகிறார்கள்.

ஒரு முறை என்னுடைய நண்பர் ஒருவர் எங்கிருந்து இலக்கியத்திற்கு வந்தார் என்று தெரியாமல் திருவிழாக்கு நடுவில் தோன்றிய ஒருவரைப் பற்றிச் சொல்லும் போது ‘அவருக்கு வெளிநாட்டுல பெற்றோல் செட்டில வேலை, இரவு முழுக்க முழிச்சிருக்கோணும். புத்தகம் வாசிச்சா நித்திரை வருமாம். அதாலை பேஸ்புக்கில ஒவ்வொரு எழுத்தாளருக்கும் கோல் பண்னி உங்கட பதிவுகள் நல்லா இருக்கு எண்டு தொடங்குவார். பிறகென்ன ஒவ்வொரு நாளும் , சங்கீத ஸ்வரங்கள்..மம்முட்டி- பாணுப்பிரியா மாதிரி இரவிரவா கதை. கதை எண்டால் தத்துவ விவாதமில்லை. அவரை இவர் புகழ இவரை அவர் புகழ இப்பிடித்தான் அவர் கடை போட்டவர் ‘என்று சொன்னார். எனக்கு வேடிக்கையாக மட்டுமல்ல வியப்பாகவும் இருந்தது. முப்பது நாளில் இலக்கியவாதி ஆவதற்கான முதன்மையான ‘பக்கேஜ்’ இதுதான் என்றார் அவர். எப்படியாவது கவனிக்கப்பட்டால் சரி. புத்தகங்கள் வாங்கப்பட்டால் போதும். யாரும் வாசிக்க வேண்டாம். உரையாட வேண்டாம். எப்படியாவது வரலாற்றின் சுவற்றில் ஒட்டிக் கொண்டு சென்று விட வேண்டும். அன்றாட புகழும், வெளிச்சமும் விழுந்தால் சரி. இதற்குப் போய் வாசிக்க வேண்டும் எழுத வேண்டும். உழைக்க வேண்டும். கற்பனை வேண்டும் கவிதை வேண்டும் என்கிறார்கள் மடையர்கள் என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு.

சொல்லப் போனால் அவர்களின் இக் கூட்டுகள் கூட முழுக்க உள் வஞ்சங்களாலும் நலன் ஓம்புகைகளாலும் ஆனது. எதை எழுதினாலும் அவர்கள் பாராட்ட மட்டுமே செய்வார்கள். வெறும் ‘நல்லாருக்கு தோழர்’ ‘அற்புதம் தோழர்’ என்ற பாராட்டுக்களைப் போல் இலக்கியத்தில் வெறுக்கக் கூடிய ஒன்று இருக்கிறதா என்ன? பேஸ்புக் பதிவர்கள் விமர்சகர்களாகவும் வாசகர்களாகவும் ஆனது இப்படித்தான். அங்கே தான் இந்த கூட்டுகள் உருவாகின. பரவின.

சமீபத்தில் ஒரு நாவல் படித்தேன். இப்படி ஒரு உள் தொடர்பு எழுத்தாளரின் நாவல். திராபையான நாவல். பிரபலமான எல்லாரோடும் ஒட்டிக் கொள்ளக் கூடிய ஒருவர் அவர். புத்தக முன்னுரையில் நாவலை வாசித்து அபிப்பிராயம் சொன்னவர்களின் பட்டியல் ஒன்றைக் கொடுத்திருந்தார். எல்லோரும் அறியப்பட்டவர்கள். பிரபலமான நட்புக் கூட்டைச் சேர்ந்தவர்கள். எனக்கு அந்த எழுத்தாளர் மேல் பரிதாபமே எழுந்தது. ஒருவராவது அவருடைய நட்புக்காக சிறு கருணையேனும் காட்டி இருக்கலாம். ‘நல்லா வரேல்லை ஒருக்கா திருப்பி பார்’ என்று சொல்லி இருக்கலாம். இந்த நட்புக் கூட்டுகள் இத்தகையவை தான். சொந்த மேதமையால் அடைவது இலக்கியம். நட்புக் கூட்டுகளால் அல்ல.

எழுத்தாளருக்கு தனிமையும் நேரமும் எவ்வளவு முக்கியமானது என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. உருப்படியாக எதுவும் உரையாட இல்லை என்றால் பக்கத்தில் அமர்ந்திருந்தாலும் ஒருவரை ஒருவர் அறுத்துக் கொண்டு வாசிப்பிலோ எழுத்திலோ மூழ்கிப் போகும் நண்பர்களைப் பெற்றது. அல்லது அவர்களை மட்டுமே நண்பர்களாக வகுத்துக் கொண்டது இலக்கியத்தில் எவ்வளவு முக்கியமானது என்பதை இத்தருணத்தில் உணர்கிறேன். எளிய அரட்டைகள், சளப்பல்கள், உறவுச் சிக்கல்கள், எளிய களியாட்டங்களில் மூழ்க கூடிய நட்புக் கூட்டு என்பது எழுத்தாளருக்குத் தற்கொலை.

‘இலக்கியம் இல்லை என்றால் நமக்குள் ஒன்றும் எஞ்சாது, எப்பொழுதாவது கண்டால் புன்னகைத்துக் கொள்ளலாம் அவ்வளவு தான்’ என்று நண்பர் கிரிசாந் அடிக்கடி சொல்வார். முன்பு நெஞ்சுக்குள் அந்தரமாக இருக்கும். இப்பொழுது அச் சொற்கள் பெரு நிறைவாக இருக்கின்றன. மெய்யாகவே நாங்கள் இருவரும் வெவ்வெறு விலங்குகள். கடந்த பன்னிரண்டு வருட நட்பில் கண்டடைந்தது அதைத்தான். ஒரு வகையில் வெவ்வேறு விலங்குகளாக உணர்வதுதான் நட்பின் மெய்யான நிகழ்வு. இலக்கியத்தில் முக்கியமானது. மெல்ல மெல்ல எளிய விடயங்கள் அடங்கி சொற்கள் குறைந்து. பாவனைகள் அகன்று மெய்யான ஆழமான உரையாடல்கள் நிகழும் போது ஒவ்வொரு சொல்லும் நிறைகிறது. “நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு” (குறள் 782)

முன்பு இவ்வளவு தொடர்பாடல் விரியாத சமூக வலைத்தளங்களோ, ஸ்மாட் கைபேசிகளோ இல்லாத காலத்தில். எழுத்தாளர்கள் சக எழுத்தாளர்களுக்கு கடிதம் எழுதுவார்கள். வாசகர்கள் எழுத்தாளர்களுக்கும் எழுத்தாளர்கள் வாசகருக்கும் எழுதுவார்கள். அவை இன்றைக்கு சமூக வலைத்தளங்கள் அளிக்கும் ‘chat’ வெளிகள் போன்றதன்று. கடிதங்களின் முன் பாவ்லாக்களுடன் நிற்க முடியாது. நல்ல எழுத்தாளரின் கடிதமும், நல்ல வாசகரின் கடிதமும் இலக்கியத் தகுதி உடையதாய் இருப்பவை. அடிப்படைக் கேள்விகளால். விரிந்த ஆழமான பதில்களால் ; வாசிப்பு, எழுத்து, தத்துவம், வரலாறு, ஆன்மீகம் என்று செறிவாக்கி எடுக்கப்பட்ட வாழ்கைய நிரப்பப் பட்டவை. இன்றைக்கு மேதமை மிக்க பல எழுத்தாளர்களின் கடிதங்கள் புத்தகங்களாகக் கிடைக்கின்றன. ஒரே தெருவில் வாழ்ந்த சாகித்திய அக்காதெமி பெற்ற தமிழின் பெரும் சாதனையாளர்களான கு. அழகிரிசாமியும் கி.ராஜநாராயணனும் எழுதிக் கொண்ட கடிதங்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. கடிதங்களின் இலக்கியத் தகுதிப் படுத்தலுக்கு அவை நற்சான்றுகள். தமிழ் எழுத்தாளர்கள் அவற்றை வாசிக்க வேண்டும். கடித இலக்கியங்கள் என்ற தனிவகை எழுத்து ஏன் உலகம் முழுவதும் படைப்பிற்கு இணையாக வைக்கப்படுகிறது என்பது விளங்கும்.

கடிதம் இலக்கியத்தில் மிக அந்தரங்கமான தனிப்பட்ட ஆழமான உரையாடல்களிற்கான களம். எழுத்தாளர் தஸ்தெயவெஸ்கி தன்னுடைய நாவல்களில் பெரும் உணர்வுச் சித்திரங்களைக் கடிதங்களாகவே அளிக்கிறார். கடிதங்களால் உரையாடப் பட்ட காலம் என்பதும் chat களால் உரையாடப்படும் காலம் என்பதும் வேறு வேறானவை என்பதே நடை முறை. ‘அரட்டை’ என்பதன் அர்த்தம் பொருளற்ற உரையாடல் என்பது தானில்லையா?

இங்கே என்ன ஊடகம் என்பதல்லப் பிரச்சினை. என்ன கதைக்கிறோம்? ஏன் கதைக்கிறோம் என்பது தான் பிரச்சினை. சொல்லின் கணக்கு என்ன? ஒரு எழுத்தாளனுக்கு ஒவ்வொரு சொல்லுக்கும் கணக்குண்டு. ‘வேட்பத் தாம் சொல்லுதல்’ என்கிறது குறள். திறன் அறிந்து சொல்லும் சொல்லே அறமும் பொருளும் என்று இரண்டாயிரம் வருடங்களுக்கு முதலே இந்த மொழியில் சொல்லப்பட்டு விட்டது.

மரபார்ந்த இலக்கியத்தில் தனிமனிதர்கள் தங்களின் மேதமையால் தங்களை நிறுவிக் கொள்ளா விட்டாலும் இலக்கியத்தின் காலம், செல் நெறி என்பவற்றின் மீது பொருந்திக் கொள்ள முடியும். ஒரு பெரிய மரக்கலத்தில் மாலுமிகளும், மீகாமர்களும் இருக்கும் அதே வேளை அதன் பக்கச் சுவர்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் சிப்பிகளையும் அம்மரக்கலம் கொண்டு செல்வதைப் போன்றது அது. ஆனால் நவீன இலக்கியமோ ஒவ்வொருத்தரையும் அவர்களின் மொத்த வாழ்க்கையையும் பலிக்கு வை என்கிறது. மேதமையால் நிறுவிக் கொள் என்கிறது. அவ்வாறு இல்லை என்றால் புறங்கையால் தள்ளி விடுகிறது. அவர்கள் எத்தனை பிரயத்தனப் பட்டாலும். மாய் மாலங்களும், தங்களை நிறுவும் செப்படி வித்தைகளை ஆடினாலும் ‘இலக்கியமா இல்லையா ? அதன் தகுதி என்ன இடம் என்பது மட்டும் தான் அதனுடைய அளவு கோல். அது சிப்பிகளோ துருக்களோ இருந்தால் இருக்கட்டும் என்று விட்டு விடுவதில்லை. அது தன்னை மிகச்சிறந்த மாலுமிகளால் ஆளப்பட மட்டுமே அனுமதிக்கிறது. முழுதும் தங்களின் வாழ்வையும் செயலையும் அளித்து தன் மேதமையால் தன்னை வகுத்துக் கொள்ளும் ஒவ்வொருத்தரும் அதற்கு முக்கியமானவர்கள். அது ஒவ்வொருத்தரையும் தனித்து இருக்கச் சொல்கிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியான பயணத்தை அறை கூவுகின்றது. மெய்யான அகப்பயணம். சொந்தக் கடல் சொந்தத் துடுப்பு. சொந்தப் பாய்கள். நவீன இலக்கியத்தில் பாரதியில் தொடங்கி ஜெயமோகன் வரைக்கும் தனித்து நின்று வென்றவர்கள். அவர்கள் எந்த அமைப்பினாலும், எந்த நட்புக் கூட்டினாலும், எந்த உபாசகர்களாலும் தங்களை நிறுவியவர்கள் அல்ல. எல்லாக் காலத்திலும் மேதமை மிக்க இலக்கியவாதி தனித்தவரே. ஐம்பது பிரதிகள் விற்கக் கூடிய முதல் தொகுப்பை எழுதும் போது இருந்த அதே ஆழத்தனிமை, ஆயிரம் பிரதி விற்கும் போதும் அது பத்தாயிரம் ஆகும் போதும் அவரிடம் இருக்க வேண்டும். அவர் அடைகின்ற புகழும், செல்வமும், வாசகர்களும், நெருங்கி வந்த பெரும் சுற்றமும் அவருடைய மேதமைக்கு அளிக்கப்படும் சிறு உலகியல் ‘அவிசு’ என்பதைத் தாண்டி வேறொன்றுமில்லை. அதை அறுந்து எதைச் சூட வேண்டும் என்று முடிவு செய்பவரே இலக்கியத்தில் இருக்கத் தன்னைத் தகுதிப் படுத்திக் கொண்டவர். ஏனெனில் அவருடைய அகப்பயணம் அவரை விடவும், புறச்சூழலை விடவும் பெரியது. தானே தினமும் பார்த்து திகைக்கும் பேருங்கடல். ஒவ்வொரு பொழுதும் ஆடிவெல்லும் அந்தரங்கமான களி.

சொந்த உலகியல் வாழ்வு, பிரச்சினைகள், பரஸ்பர துணைமை எல்லாம் ஓரளவிற்குத் தான். இலக்கியத்தில் புகழ் வெளிச்சம் எல்லாம் பொருட்டல்ல. அவை நிற்பதில்லை. தொடர்வதில்லை. புகழைப் போல் விரைந்து சலிக்கும் விளையாட்டு வேறுண்டா? யார் உங்களைப் பொருட்படுத்தப் போகிறார்கள்? யார் நினைக்கப் போகிறார்கள்? சொந்த அகத்தை விரித்துப் பெரிதாக்கிக் கொள்ளாமல் புற உலகில் பொருந்தி இருக்கும் போது அது எவ்வளவு வேகமாகக் கைவிடும் என்று இலக்கியம் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறது. வாழ்வை அர்தப்படுத்தி கொள்வது புகழடைவதில்லை. வெறும் புகழும் செல்வமும் மாமெரும் துயர் மிக்க தனிமையில் நம்மைச் சுருக்கி விடும். மறக்கப்படும் அளவிற்கு கொடிய தனிமையை நோக்கிச் செல்ல வேண்டியிருக்கும். நல்ல இலக்கியத்தை அறிந்தவர் அதனுள் இருப்பவர். தனிமையில் இருப்பவர். அது ஆட்களற்ற பொருளற்ற தனிமையல்ல தானே திழைக்கும். விரிக்கும் தனிமை. வெவ்வேறு பெரு வாழ்வை வாழ்ந்து கடக்கும் தனிமை. கற்பனையின் தனிமை.

வணிக இலக்கியமே தன்னுடைய வாசகர்களை, விற்பனையை தேடிச்சென்று அடையும். அவர்களை மகிழ்விக்க எழுதும். தீவிர இலக்கியத்தை நோக்கி வாசகர் வரவேண்டும். தீவிர இலக்கியத்தில் எழுத்தாளரை விட இலக்கியமே முதன்மையானது. நல்ல இலக்கியத்தின் விராட வடிவின் முன் அதை எழுதிய எழுத்தாளரே திகைத்து நிற்க வேண்டும்.

இலக்கியத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது ஓரளவுக்குத்தான். தமிழில் பதிப்பகங்கள் செய்ய வேண்டிய வேலைகள் சிலவற்றை எழுத்தாளரே செய்ய வேண்டி இருப்பது ஓர் துரதிஷ்ரம்தான். நல்லதைக் கொண்டு சேர்ப்பதற்கு ஏன் தயங்க வேண்டும் என்றொரு குரல் இருக்கிறது. கொண்டு சேர்ப்பதற்கும் விளம்பரப் படுத்துவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எழுத்தாளருக்கு அதன் விலக்கமும் எல்லையும் தெரிந்திருக்க வேண்டும். நல்ல இலக்கியம் வாசிக்கப்படும். அதில் எப்பொழுதும் சந்தேகமில்லை. சினிமா பாணியில் தன் நாவலை விழுந்து விழுந்து ‘புரமோட்’ செய்யவும், நட்புக் கூட்டுகள் மூலம் கொண்டு சேர்க்கப் பிரயத்தனப்படும் எழுத்தாளரின் பதட்டமே அவருக்கே தான் எழுதியதில் நிறைவும் நம்பிக்கையும் இல்லை என்று காட்டி விடுகிறது. அதனால் தான் அடுத்தவரை வசை பாடுகிறார்கள். தாக்குகிறார்கள். புறக்கணிக்கப் பார்க்கிறார்கள். தாழ்வுணர்ச்சி ஓர் அம்பலப்படுத்தாளனும் கூட.

இலக்கியம், தன்னை அரிந்து படைப்பவரை, அவர் எழுதியதைக் கைவிட்டதில்லை. இல்லை என்றால் எங்கோ ரஷ்யாவின் மதுபான விடுதியிலும், சைபீரிய சிறையிலும் கிடந்த எளிய மனிதன் எழுதிய இலக்கியத்தை யாழ்ப்பாணத்தின் சிறு கிராமத்தில் இருந்து கொண்டு ஒரு வாசகர் படித்து கண்ணீர் விட்டுக் கொண்டு இருக்க முடியாதில்லையா ? ஒரு மெய்யான எழுத்தாளருக்கு அந்த மகத்தான கண்ணீரே கணக்கு. நல்ல இலக்கியம் நிற்கும். அதுவே அதன் மேதமை.

இலக்கியத்திற்கும் பண்பாட்டிற்குமே நிரந்தரமான ஞாபகத் திறன் இருக்கிறது. அவை எளிய நட்புக் கூட்டுகள் அல்ல. அவை கறாரான ஆசிரியரைப் போன்றவை. தன்னைத் தருக்கி நிறுத்தாத யாரையும் பொருட்படுத்துவதில்லை. அவை எழுத்தாளரிடம் நீ யார் எவர், என்று கேட்பதில்லை. என்ன கொண்டு வந்திருக்கிறாய் என்று கேட்கின்றன. நம்முடைய தெய்வங்களின் இயல்பது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here