முள்ளியவளை டவுனிற்குச் செல்வதற்கு கோபிகாவின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டிருந்தேன், அதன் காப்புறுதி முடிந்து விட்டது தான் போய் வருகிறேன் என்றார். ‘ஏன் பொம்பிளையள் எண்டால் பொலிஸ் பிடிக்காதோ?’ என்று கேட்டேன். ’டீச்சர் என்றால் பிடிக்காது’ என்றார். வீதியில் கடமையில் இருக்கும் சிங்களப் பொலிஸ்காரர்கள். ஆசிரியர்கள் என்று தெரிந்தால் அவர்களை மறிப்பதில்லை. கொஞ்சம் வியப்பாகவிருந்தது. வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வரும் போது எங்களுடன் வந்த ஆசிரியை ஒருவரை முன்னால் சென்று இராணுவத்துடன் கதைப்பதென்று முடிவெடுத்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டேன். பள்ளிக்கூடத்தில் சாரணப்பயிற்சிக்கு அழைத்துவரப்பட்ட சிங்களப் பிள்ளைகள் எங்களுடைய பள்ளிக்கூட ஆசிரியர்களின் காலில் விழுந்து வணங்கியபோது அவர்கள் நெருப்புச் சுட்டது போல பதறி அவர்களைத் தூக்கியதையும், நாங்கள் வேடிக்கையாகக் கேலிபேசியதையும் கூட இவற்றுடன் சேர்த்துத் தொகுத்துக் கொண்டேன். ஆசிரியர்கள் தொடர்பில் சிங்கள மனம் கொண்டிருக்கிற இடத்தை தமிழ்மனம் என்றைக்கோ இழந்து விட்டது இல்லையா? இலக்கியம் என்பது இந்த மன விரிவைப் பற்றி உரையாடுவதுதான். அதைத் திறந்து விசாரணை செய்வது பற்றியதுதான். இதைத்தான் ஈழ இலக்கியம் எழுதாமல் விட்டிருக்கிறது என்று தோன்றியது.
சிங்கள உள்ளத்திற்கு ஆசிரியர்கள் பற்றிய உயர்வான விழுமியம் இயல்பாக எங்கிருந்து அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது? அதற்கு நமக்குச் பவுத்தம் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். அதன் விழுமியங்கள் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். அதன் ‘போதனா’ முறைபற்றியும், தெரிந்திருக்க வேண்டும். பவுத்த குருகுலக் கல்வி, அது ஆசிரியருக்கு / குருவுக்கு அளிக்கும் இடம் என்பன பவுத்தத்தின் அடிப்படையான விழுமியங்களில் ஒன்று. பிரிவெனாக்களில் இருந்தும், பன்சலைகளில் இருந்தும் கல்வி முறைமை, கொலனித்துவத்திற்குப் பின்னரான காலத்தில் பள்ளிக் கூடத்திற்கும், பல்கலைக் கழகத்திற்கும் மாறினாலும், இன்றும் அவர்களின் விழுமியங்களைப் பிள்ளைகளுக்கு உருவாக்கி அளிப்பது அவர்களின் ஊர்களில் இருக்கும் பவுத்த கல்விக்குரிய விகாரைகளின் குருகுலச் சாயலும் அங்குள்ள ஆசிரியர்களும். இலங்கையின் பவுத்தம் எவ்வளவு அரசியல், மதவாதப் பிடிக்குள் இருக்கிறது என்று அறிந்து கொள்வதோ அதை எழுதுவதோ பெரிய விசயமில்லை. உலகம் முழுவதும் சமூகங்களின் மீது இப்பிரச்சினைகள் கவிந்துள்ளன. பத்திரிக்கைகளும் ஊடகங்களும் ஒவ்வொரு நொடியும் இவற்றைத்தான் கொண்டு வந்து கொட்டிக்கொண்டிருக்கின்றன. இலக்கியத்தின் வேலை இந்த அன்றாடத்தை கவனிப்பதல்ல. அது இவற்றின் ஆதாரப் பிரச்சினைகள், இடைவெளிகள், மேன்மைகள், கீழ்மைகள் அவற்றின் மீதுள்ள கேள்விகள், விசாரணைகளை முன்னெடுப்பது. வரலாறு, தத்துவம் என்று வாழ்க்கையின் தொகுக்கப்பட்ட மூலம் தன்னை நிகழ்த்திக் கொள்வது. அறங்கள், விழுமியங்கள், நம்பிக்கைகள் என்று பெருங் கதம்ப வடிவில் நிகழ்வும் வரலாற்றையும் பண்பாட்டையுமே இலக்கியம் தன்னுடைய களமாகக் கொள்கிறது. ஈழத்தில் தமிழ் இலக்கியமும் சரி சிங்கள இலக்கியமும் சரி தவற விட்டுக் கொண்டே இருப்பது இந்த அறிதலை. அதன் மீது மொழியைக் கொண்டு செய்ய வேண்டிய உரையாடலை.
ஆசிரியர், எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய உரையொன்றில் நவீன இலக்கியத்தின் போக்குகளில் முதன்மையானது ‘பண்பாட்டுப் பன்மைத்துவத்தைக்’ கவனப்படுத்துவது என்று குறிப்பிடுகிறார். அதை ஈழ இலக்கியத்தோடு பொருத்திப் பார்க்க முடிந்தது. ஜெ அந்த உரையில் இன்னொரு பண்பாட்டைச் சேர்ந்த மக்களிடம் நம்மிடம் இல்லாத என்ன உயர்ந்த பண்போ, விழுமியமோ அவர்களிடம் இருக்கிறது என்று சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். அதுதான் இலக்கியம் கவனப்படுத்துவது என்கிறார். தமிழர்கள் ஆசிரியர்களின் காலில் தன்னியல்பாக விழுந்து எழுந்தது எப்பொழுது என்று அவர்களின் வரலாறே மறந்து விட்ட ஒன்றில்லையா? வெட்டி வாய்ச்சவடால் பெருமைகளை வேண்டுமானால் பேசிக்கொண்டிருக்கலாம் அவர்களிடம் அப்பெருமைகளுக்கு அடியில் இருப்பது வெறும் தாழ்வுச்சிக்கல்கள் மட்டும்தான். தம் சாதிப்பெருமை, இனப்பெருமை, மதப்பெருமை சொருகி மறைக்கப்பட்ட வைக்கப்பட்ட ’சான்விச்கள் போன்றவை ஈழத்தமிழர்களின் பெரும்பான்மை இலக்கியம். நடைமுறை அரசியல், நல்லொழுக்கப் போதனைகள் தவிர பண்பாடு என்று எழுதி அளிக்கப்பட்டவையோ முன்னெடுக்கப் பட்டவையோ ஈழ இலக்கியத்தில் என்னதான் இருக்கிறது ?
சிங்கள-தமிழ் இலக்கியங் களுக்கிடையே மொழியாக்கம் செய்கிறோம். நம் சகோதர மொழியுடன் உரையாடுகிறோம். சிங்களத்தில் இதழ் நடத்துகிறோம். தமிழர் பிரச்சினைகளை அவர்களுக்குச் சொல்கிறோம் என்று கிளம்பிய குரல்களோ செயல்களோ என்றைக்கும் தொடர்ந்து நிகழ்ததோ, உரையாடப்பட்டதோ இல்லை. பெரும்பாலும் அவை தனி நபர்கள் தங்களின் வெற்றாணவத்தை எரிப்பவை. மிகுதி உள்ள சொற்பமான முயற்சிகளும் சலிப்புடன் கைவிடப்படுகின்றன. ஏன் இவற்றைத் தொடர்ந்து செய்யவோ. காத்திரமான உரையாடல் வெளியை உருவாக்கவோ முடியவில்லை என்று ஈழத்துத் தமிழ் இலக்கியம் இப்பொழுதாவது சிந்திக்க வேண்டாமா?
இம்முயற்சிகளில் பெரும்பாலும் ’எங்கடை நியாயத்தைக் கேளுங்கோ’ என்ற குரல்களை மட்டும் கொண்டவை. நியாய அநியாயம் யாருக்குத்தான் தெரியாது? ’சிங்களவர்களுக்குத் தமிழர்களின் பிரச்சினைகள் தெரியவில்லை அதனால்தான் இனப்பிரச்சினை’ என்ற சொற்களை முதலில் தமிழ்ச் சமூகம் கைவிட வேண்டும். உண்மையில் இருதரப்பிற்கும் எல்லாப் பிரச்சினையும் தெரியும். தெரியாமலும் உரையாடப்படாமலும் இருப்பவை, பண்பாட்டின் நுணுக்கங்கள். அதன் பன்மைகள். அதன் மூலம் நிகழும் வாழ்க்கை.
சிங்களவர்களுடன் மட்டுமல்ல, தமிழ் இலக்கியம் என்பதே இங்கே யாழ்ப்பாண இலக்கியம், கிழக்கு இலக்கியம், மலையக இலக்கியம், முஸ்லீம் இலக்கியம் என்றுதானே பிரிந்து கிடக்கிறது. நமக்கு நம்மிடையே உரையாடவே துப்பில்லை. இதில் என்ன பவுத்திரத்தில் சிங்கள இலக்கியத்தோடு உரையாடிவிடப்போகிறோம்?
நம்முடைய இலக்கியத்தின் பிரச்சினைதான் என்ன? சரியான மொழியாக்கங்கள் இல்லை, அரசியல் தடுக்கிறது, இனவாதம் தடுக்கிறது, மதவாதம் தடுக்கிறது என்பவை எல்லாம் இலக்கியத்திற்கு சப்பைக் கட்டுகள் மட்டும்தான். நவீன இலக்கியத்தின் மூலமான போதாமை என்பது நம்முடைய ’பண்பாட்டு அறிதலும், பன்மைத்துவத்தின் மீதான புரிதலும் இணக்கமும் அதலத்தில் கிடப்பதுதான்.
பண்பாட்டு அசைவுகள் தொடர்பான உரையாடல்களில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டு தன்னை அரசியலிற்குள்ளும் வீண் பெருமைகளுக்குள்ளும், தன்னை மூழ்கடித்துக் கொண்டது ஈழ இலக்கியம் செய்து கொண்ட தற்கொலை. ஆறுமுகநாவலர் – இராமநாதன் காலத்தில் தொடங்கிய தமிழ்த்தேசியமானாலும் சரி, பிறகு வந்த இடதுசாரியமானாலும் சரி முதன்மையாக அழித்தொழித்தது பண்பாட்டுப் பன்மைத்துவத்தை. அதன் உரையாடல் வெளியை. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கி தமிழர்களின் பொதுப்புத்திக்குள் ஒரு தொற்றைப் போலப் பரவி தங்களைத் ‘தான்’ என்றும் மற்றவர்களை ‘பிறர்’ என்றும் ஆக்கிக் கொண்டதுதான் தமிழ்த் தேசியம் என்றாலும், சரி தமிழ் இடதுசாரியம் என்றாலும் சரி நிகழ்த்தி முடித்திருக்கும் பேரழிவு. அவர்கள் தேவையே இல்லாமல் தாங்கள் ‘எழுதுவதை’ எல்லாம் இலக்கியம் என்று அறை கூவிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த நாற்பது வருடங்களில் தீவிர இலக்கியம் என்று சொல்லிக் கொண்டு ஈழத்தில் எழுதப்பட்டவற்றில் தொண்நூறு சதவீதம் கூட எஞ்சாது. ஏனென்றால் அதில் நவீன இலக்கியத்தின் அடிப்படையான பண்பாட்டினைக் கவனப்படுத்துவதோ அதன் உரையாடல் வெளியோ பெரும்பாலும் கிடையாது. முக்கியமாக ஈழ இலக்கியத்தை அரசியல் தரப்பு அதன் ‘அழகியலை’ப் படுகொலை செய்துவிட்டே கைப்பற்றிக் கொண்டது. வாத்தியங்களை எடுத்துக் கொண்டு சுருதியை மறந்து விட்டார்கள்.
இலக்கிய மதிப்பீடுகள் என்று அணுகினால் ஈழத்தில் எழுதப்பட்ட நல்ல நாவல்களை ஒற்றைக் கையில் விரலெடுத்து எண்ணிவிடலாம். இங்கிருந்து தமிழின் மிகச்சிறந்த ஐம்பது கதைக்குள் அடுக்கக் கூடிய சிறுகதைகள் ஐந்தேனும் எழுதப்பட்டிருக்கிறதா? தனித்து எடுத்து வைக்கக் கூடியவை என்று விதக்கக் கூடிய கவிதைகள் கூட , காலத்தின் அளவில் நிறுத்திப் பார்த்தால் எத்தனை நிற்கும் என்று விம்மி நொந்து கொள்ளத்தான் தோன்றுகின்றது. எழுதப்பட்டவை எல்லாம் இலக்கியம் என்ற மனநிலை இன்றுவரைக்கும் ஈழத்த்தில் விடியாமல் கிடக்கிறது. அரசியல் சார்ந்த சமூக முன்னெடுப்புகளான சாதியப் போராட்டம், விடுதலைப் போராட்டம் சார்ந்து எழுதப்பட்டவற்றில் மிக மிகச் சொற்பமானவையே இலக்கியப் பிரதிகள். மிகுதி அப்போராட்டங்களின் துண்டுப் பிரசுரங்கள், வீண்பெருமைகள், முட்டுக்கொடுப்புகள் மட்டும்தான் என்று சொன்னால் எல்லாத்தரப்பும் சண்டைக்கு வரும். அதற்கு அஞ்சிச் சொல்லாமல் இருக்க முடியாது இல்லையா?
சொல்லப் போனால் நாம் கொஞ்சம் பரவாயில்லை என்ற நிலையில்தான் இருக்கிறது சிங்கள இலக்கியம். அவர்களுடைய அரசியல் தரப்பும், மதத்தரப்பும் அவர்களுக்கும் இதையே இழைத்துக் கொண்டிருக்கின்றன. முக்கியமாகச் சிங்களக் கலைகளும், இலக்கியமும் தமக்கிடையே தூரப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு பண்பாட்டுச்சூழல் தன்னுடைய எல்லாக் கலைகளுக்கும் தலையானதாக இலக்கியத்தை வைக்க வேண்டும். சிங்கள இலக்கியம் அங்குள்ள ஏனைய கலைகளை விட ஒரு படி கீழே வைக்கப்பட்டிருக்கிறது. அது எழுந்து வந்து பன்மைத்தரப்புகளுடன் தனக்குள்ளும் வெளியிலும் உரையாட வேண்டும்.
இங்கே, அறிந்து கொள்ள வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும், ஆவணப்படுத்த வேண்டும் என்பதெல்லாம் முதன்மை யானவையாகக் கருதவில்லை. இலக்கியத்தை – படைப்பையே முதன்மையாகச் சொல்கிறேன். ஏனென்றால் உலக வணிகப்பண்பாடுகளுடன், அரசியலுடன் நம்முடைய எழுத்தாளர்களால் தங்களை இலகுவாகப் பொருத்திக் கொள்ள முடிகிறது. எழுத முடிகிறது. நம்முடைய எழுத்தாளர்களால் உக்ரேன் எல்லைகளில் பெய்யும் பனியை எழுத முடிகிறது, பரீசையும், அவுஸ்ரேலிய நிலங்களையும் எழுத முடிகிறது. இந்தக் குட்டித்தீவின் மறு கோடியில் வசிக்கும் மனிதர்களைப் பற்றித் தெரியவில்லை என்பது பாசாங்கில்லையா? ஈழ இலக்கியத்தின் பெருஞ்சாபமே இந்த குறுகிய மனநிலை என்றுதான் சொல்வேன்.
தொடர்ந்து சிங்களத்தில் இருந்து தமிழிற்கு வரும் படைப்புகள், ஆக்கங்களை வாசித்துப் பார்க்கிறேன். இங்கிருந்து எடுத்துச் செல்லும் ஆக்கங்களையும் கவனிக்கிறேன். பெரும்பாலும் அரசியல் சார்ந்த பிரதிகளாகவே விரவுகின்றன. இலக்கிய மதிப்பொன்றை அளிக்க வேண்டும் என்றால் கூட வணிக எழுத்துக்களுக்கு கொஞ்சம் மேலே வைக்கலாம் என்ற நிலைமை தானுள்ளது. தமிழ்ச் சூழலில் மொழிபெயர்ப்புச் சார்ந்த முன்னெடுப்புக்களைச் செய்யும் நபர்களில் தொண்நூற்றொன்பது சதவிகிதத்தினர் நல்ல இலக்கிய வாசிப்போ மொழிப்பயிற்சியோ அற்றவர்கள். அவர்களால் சொற்களை மொழி பெயர்க்க முடிகிறது, கதையைத் தொடமுடியவில்லை. அதற்கான அடிப்படையான காரணம் விரிந்த பண்பாட்டு வாசிப்போ, இலக்கிய வாசிப்போ அவர்களிடம் கிடையாது. மொழிபெயர்ப்புகளையும் அவர்களின் கதைத் தெரிவுகளையும் பார்க்கும் போது இதைச் செய்யாமல் இருந்தாலே பெரிய புண்ணியமாகியிருந்திருக்கும் என்றுதான் சொல்லத் தோன்றும். இவை தவிர சிங்களத்தில் தீவிர இலக்கியம் சார்ந்து எழுதக் கூடிய ஆட்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே எழுதுகிறார்கள். அறியப்படுகிறார்கள். மொழியில் பண்பாட்டின் கரிசனை செலுத்தப்பட்டு இலக்கியம் செழுமைப்பட்டு நல்ல வாசகப் பரப்பு ஒன்று சிங்களத்தில் எழுந்து வரவில்லை. அவர்களிடம் அதற்கான செழுமையான மரபும் தொடர்ச்சியும் கூட இருக்கவில்லை. இலக்கியத்தின் பெரும்பகுதியை அதன் அழகியல் விரிவை, பண்பாட்டை ஒருவகையில் பவுத்தமும் அரசும் கட்டுப்படுத்திக் கொண்டே இருந்து வந்திருக்கிறது. அதைப்பற்றிய விரிவான எழுத்தும் உரையாடல்களும் நிகழவேண்டும். தமிழ் நாடு போன்ற பெரும்பண்பாட்டுத் தொடர்ச்சியும் தொடர்புகளும் இருந்தும் ஈழத் தமிழர்களின் இலக்கியம் இத்தனை பரிசுகெட்டுக் கிடப்பது பெரும் துயரம்தான். முற்போக்கும் நற்போக்கும் ஈழத்தமிழ் இலக்கியத்தை அழித்தொழித்தது போக, தமிழ்த்தேசியமும் இடதுசாரியமும் நசுக்கி மிதித்தன.
ஈழத் தமிழர்களின் கடந்த அறுபதாண்டு வாழ்வை இலக்கியத்தில் காணமுடியாது. பெரும்பாலும் அங்கிருப்பவை வெறும் போதனைகளும், அரசியல் பிரசாரங்களும், போரின் துக்கமும் மட்டும்தான்.
ஈழ இலக்கியம் என்றாலே போர் இலக்கியம் என்ற மனநிலை தமிழ்ச்சூழல் எங்கும் உருவாக்கப்பட்டிருப்பதே பெரிய பிரச்சினையாகத் தான் பார்க்கிறேன். நிச்சயமாக இந்தப்போர் இலக்கியத்தில் நிகழ்தே தீரும். ஆனால் வெறும் போரை ஆவணப்படுத்துவது, சாட்சி சொல்வது பாணியில்தான் பெரும்பான்மை எழுத்துகள் வந்து குவிந்து கிடக்கின்றன. இலக்கியத்தின் பணி அதை வெறுமனே பதிந்து எழுதுவதில்லை. வரலாற்றிற்கோ பண்பாட்டிற்கோ, இலக்கியத்திற்கோ போர் புதிதில்லை. அது போரை மட்டும் கவனிப்பதில்லை, மாறாக அங்கே எழுகின்ற அடிப்படையான வினாக்களைத் தேடி எடுக்கிறது. பண்பாட்டிலும் தத்துவத்திலும் வைத்து அதை விவாதிக்கிறது, விரிவுபடுத்துகிறது. அதை மானுடர்களின் வாழ்க்கைக்கு அளிக்கிறது. இந்த ஈழத்துப் போர்க்கால எழுத்தாளார்கள் முதலில் இதை உணர வேண்டும். ஒப்பாரி வைப்பதை நிறுத்த வேண்டும். வெறும் போரை அல்ல வாழ்வை விசாரணை செய்வதே நம்முடைய பணி என்பதை அறிய வேண்டும். பண்பாட்டில் வாழும் தவத்தை இயற்ற வேண்டும்.
இலக்கியத்திற்கு வீண்பெருமைகள் எப்படிக் கணக்கில்லையோ அதே போலத்தான் அர்த்தமற்ற எளிய மானுடத்துயரங்களும் கணக்கில்லை. அது வீதியில் கிடக்கும் பிணத்தில் விழுந்து ஒப்பாரி வைப்பதில்லை. கொன்றதன் காரணத்திற்கும் கொல்லப்பட்டதன் காரணத்திற்கும் செல்கிறது. அதன் வரலாற்றை, அதன் பண்பாட்டைப் பற்றி விவாதிக்கிறது. ஈழ எழுத்தாளர்கள் ஒப்பாரியை, கழிவிரக்கத்தை, வீண் போர்ப் பெருமைகளை நிறுத்த வேண்டும். வரலாற்றைப் பதிவு செய்வதும், காலத்தின் கண்ணாடியாக நிற்பதும் எழுத்தாளரின் வேலையல்ல. தான் வாழும் காலத்தின் மேம்பட்ட சிந்தனையை, அறிதலைக் கொண்டு வாழ்வையும் அது நிகழும் பண்பாட்டின் பன்மையையும் நிகழ்த்திச் செல்வதே செய்ய நாம் வேண்டியது.
மனித மனம் என்பது முதன்மையாக பண்பாட்டினால் ஆனது. அதனுடைய விரிவே இலக்கியத்தில் நுட்பமாகவும் அழகோடும் வெளிப்பட வேண்டும். பன்மை என்பது எல்லாவற்றையும் தனக்குள் அனுமதிக்கிறது. தினமும் மாறுகிறது, தன்னை மேம்படுத்திக் கொள்கிறது. மேம்பட்ட சமூகங்களில் இலக்கியம் என்பது அதை எழுதி, வரையறை செய்து, விசாரணைப் படுத்தி அறிவுரையாடலாக மாற்றி வாழ்க்கைக்கு அளித்து முன்நகரும் பணியைச் செய்கிறது. மொழிபெயர்ப்புகளோ, குழு உரையாடல்களோ அதற்குச் செய்யப்படும் சிறு பங்களிப்புக்கள் மட்டுமே. பண்பாட்டை உரையாடுவதற்கு வெறும் மொழிபெயர்ப்பு போதாது. ஆய்வுகள் போதாது. அதற்கு படைப்புகள் வேண்டும். கலை வேண்டும். இலக்கியம் வேண்டும். ஈழத்தில் எங்களுடைய தலைமுறை வரைக்கும் அதற்கொரு விரிவோ தொடர்ச்சியோ இருந்ததில்லை. நம் போர் அதற்கொரு சாட்டாகச் சொல்லப்படுகிறது. சரி போரையேனும் பண்பாட்டின் தளத்தில் எழுத முடிந்ததா? துவக்கும் இரத்தமும் பாடுகளும் தாண்டி என்ன எழுதப்பட்டிருக்கிறது? எத்தனை போர்க்கால எழுத்துகள் இலக்கியத்தில் தேறும் ? பண்பாட்டில் வாழும்? நெஞ்சு கனத்துக் கொண்டே நானிதைச் சொல்கிறேன். இலக்கியத்தில் முன்னோர்களும் மரபும் அறுந்து போய் நிற்கிறோம். எங்களுடைய தலைமுறை ஏறக்குறைய பூஜ்ஜியத்தில் இருந்தே தொடங்க வேண்டியிருக்கிறது.
(வளர் இதழில் வெளியான கட்டுரை )
இதழை வாசிக்க : வளர்


