காவிய வாசிப்பு – தெய்வத்துள் வைத்தல்

0
156

கம்பராமாயண வாசிப்புத் தொடங்கியிருக்கிறேன். மரபிலக்கிய வாசிப்பை முறையாகத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் வெகு நாட்களாக இருந்து வந்தது. வாசிக்கும் போதே குறிப்பெடுப்பவற்றையும் தொகுத்துக் கொண்டவற்றையும் கட்டுரைகளாக எழுதும் எண்ணமும் இருந்தது. சங்க இலக்கியங்களில் அல்லது காவியங்களில் இருந்து தொடங்க வேண்டும். மாதத்திலொரு சங்கப்பாட்டேனும் எழுமாற்றாக  எடுத்து வாசிப்பதுண்டு. பள்ளிக்கூடத்தில் – உயர்தரத்தில் என்னுடைய தமிழ் ஆசிரியர்  ந. சத்தியவேந்தன் இட்ட அடித்தளம் மரபிலக்கிய வாசிப்பில் இன்றுவரை பிடிப்போடு வைத்திருக்கிறது. எங்களுடைய உயர்தரம் தமிழ்  பாடத்திட்டத்தில் கம்பராமாயணம் –  ‘கைகேயி சூழ்வினைப்படலம்’ முழுமையாக இருந்தது. ஆசிரியராகவும் நண்பராகவும் சத்தியவெந்தனின் வகுப்பில் அமர்ந்திருந்த அவரோடு விவாதித்த நாட்கள்.  ஓர் எழுத்தாளன் ஆக வேண்டும் என்ற கனவு அவரின் மூலம்தான் உறுதிப்பட்டது. கம்பராமாயணப் பகுதியைப் போல், கிறிஸ்தவ காவியமான வீரமாமுனிவரின் தேம்பாவாணியில் ‘பைதரம் நீங்கு படலம்’ ,   இஸ்லாமிய காவியமான  சீறாப்புராணத்தில் மழையழைப்பித்த படலம் என்பனவும் பாடத்தில் இருந்தன.  என்னுடைய நகுலாத்தை நாவலில் முதல் மூன்று பாகங்களும் இத்தலைப்புகளிலேயே அமைத்திருப்பேன். காவிய வாசிப்பில் இவ்வளவு திட்டங்களும் நிகழ முன்பே காவிய வாசிப்புப் பரிச்சப்பட்டிருந்தது என்னுடைய நல்லூழ் என்றே நினைத்துக் கொள்கிறேன்.

காவியங்களில்  நாடகீயத்தருணங்கள் அவ்வளவு உணர்வெழுச்சி தரக்கூடியவை.  கைகேயி சூழ்வினைப் படலம்,  கம்பராமாயணத்தில் உச்சங்கள் நிகழும் படலங்களில் ஒன்று.  கைகேயியை  கம்பர்  ‘நாடக மயில்’ என்பார். தவ்வை என்பார். கள் அவிழ் கோதை கருத்துணரா மன்னவன் வெள்ள நெடுஞ்சுடர் மின்ன மின்ன நக்கான்’ என்று  தசரதன் அவள் மாய்மாலத்தின் முன் நிற்கும் காட்சி. பெரும்பாலான பாடல்கள் காட்சிகளாகவும் வரிவரியாகவும் இன்னும் நினைவில் உண்டென்று இதை எழுதும் போதுதான் உணர்ந்தேன். நெகிழ்வாகவிருந்தது. பத்தொன்பது வயதில்  நிகழ்ந்தது. இன்றைக்கு மீண்டும் அதற்குள் போகும் போது எப்படி இருக்கப் போகின்றது என்பதைக் காணவும் தொகுத்துக் கொள்ளவும் விரும்புகிறேன். பேரிலக்கியங்கள் செதில் செதிலாக சொந்த அகத்தை விலக்கிப் பார்க்கும் அனுபவத்தைத் தரக்கூடியவை. எனக்கு எப்பொழுதும் அதுவே வாசிப்பிலும் எழுத்திலும் முதன்மையானது.

பாடத்திட்டத்தில் காவிய அறிமுகங்கள் இருந்ததால்  ஓரளவு விருத்தப்பாவோடும் அதை வாசிக்கும் முறைகளின் அடிப்படைகளோடும் பயிற்சியிருக்கிறது. தவிர நம்காலத்தில் இணையத்தின் கொடை  இந்த விசயத்தில் அளப்பெரியது. உரை நூல்கள், கட்டுரைகள், ஆய்வுகள் என்று ஏராளம் கிடைக்கிறது. விருத்தம் வெண்பா போன்ற யாப்பு வடிவங்களை எப்படிக் கொண்டு கூட்டி வாசிப்பது என்ற காணொளிகள் கூட தெளிவான விளக்கங்களுடன் கிடைக்கின்றன. இவ்வளவு நாளும் முறையாக ஆசிரியர் ஒருவரிடம் சென்றே கற்றுக்கொள்வதென்று என்னை நானே தாக்காட்டிக் கொண்டிருந்தேன். அது ஒருவகைச் சாட்டுத்தான் என்று இப்பொழுது தோன்றுகிறது. மரபிலக்கியங்கள் குறிப்பாக காவியங்கள் மீது தொடர்ச்சியான பழக்கமின்மை இருப்பதால் எங்களுடைய நவீன மனம் ஏற்படுத்திக் கொள்கின்ற விலக்கம். அது அப்படித்தான் இருக்கும்.தொடர்ந்து உரைநடையில் அமைந்த நவீன இலக்கியத்தோடு பிணைந்திருக்கும் போது மரபிலக்கியம் வாசிப்பது சொந்த விருப்பத்தில் இருந்து, அழகுணர்வில் இருந்து வர வேண்டும். ஏனெனில் அது இலகுவானதல்ல. தொடர்ச்சியாக நவீன உரைநடை இலக்கியப் பரிச்சமும் பயில்வும் இருக்கிற மனம் மரபிலக்கியங்களுக்குள் நுழைய இடர்படும். செக்கு மாட்டைச் சவாரித்திடலுக்கு கொண்டு வந்த கதைதான்.  மனிதர்களுக்கு வரும் நோய்களில் மிக ஆபத்தானது பழக்கம்தான்.

தொடர்ச்சியாக ஆசிரியர் ஜெயமோகன்  மரபிலக்கிய வாசிப்பு பற்றி ஊக்கப்படுத்திக் கொண்டு இருப்பவர். குறிப்பாகக் காவியங்களோடு பிணைந்திருப்பது பற்றி.  சென்ற வருடமும் அதற்கு முந்தைய வருடமும் அவருடைய வெண்முரசோடு அப்படியொரு பிணைப்பே இருந்து கொண்டிருந்தது.  பயணம் போகும் பாதையோடு  ஓடிவரும் பேராறு ஒன்றுடன் இணைந்து செல்வது போன்ற நாட்கள். வெண்முரசு முழுக்க உரைநடையும், நாவல் வடிவமும் கொண்டது என்பதால் அதில் அதன் அமைப்பு அல்லது சொல்முறை பற்றிய இடர்பாடுகள் நிகழவில்லை.  

நாவல் என்பது காவியத்தின்  உரைநடை வடிவம். முன்பு காவியம் எங்கிருந்ததோ அங்கே வந்து அமர்ந்து கொண்டது. எவ்வாறு காவியங்களில் தத்துவமும்  வரலாறும் விரிந்து நிகழ்கின்றதோ அதுவே நவீன நாவல் இலக்கியத்தின் அடிப்படை. இது நவீன இலக்கியத்தின் நாவல்களின் யுகம். எனவே மரபிலக்கியத்தில் அதன் அடிப்படைகள் எங்கே தோன்றிய எங்கே விரிந்து எவ்வாறு ஐரோப்பாவில் இருந்து தருவிக்கபப்ட்ட வடிவமான நாவலைச் சந்தித்து தமக்கான வடிவத்தையும் விசாரணையையும் ஏற்படுத்திக் கொண்டன என்பதற்கு காவிய வாசிப்பு மிக அடிப்படையானது என்றே நினைக்கிறேன். தமிழ்ச் சமூகம் தன்னுடைய பண்பாட்டைத் தொகுத்துக் கொண்டும் மேம்படுத்திக் கொண்டும்  வரும் போது தன்னுடைய நிலத்திற்கேயான அறிவுச்சூழலின் உச்சமாக, பண்பாட்டின் உச்சமாகத் தத்துவங்களைத் திரட்டிக் கொள்கிறது. தத்துவம் திரளுவது என்பது மொத்த வாழ்வையும் திரட்டிக் கொள்ளும், மொத்த அறிதலையும் தொகுத்துக் கொள்ளும் ஓர் பெரு நிகழ்வு. அது வரலாற்றில் நிகழும் போது உலகின் எல்லாப் பெரும் பண்பாடுகளிலும் இருந்தும் காவியங்கள் உருவாகி வந்திருக்கின்றன. அப்பணியைத்தான் நவீன இலக்கியத்தில் நாவல்கள் நிகழ்த்துகின்றன.

காவிய வாசிப்பிற்கு முன்னர் சில  புரிதல்கள் அவசியமானவை என்று நினைக்கிறேன். முதலாவது காவியம்  மதச்சார்பானதாக வாசிக்கப் பட  வேண்டியதில்லை. அதற்காக எழுதப்பட்டதும் இல்லை.  தெய்வங்கள், அரசர்கள், காவிய நாயக நாயகியர்கள், துறவிகள், சாதுக்கள், முனிவர்கள் என்று யாரைப்பற்றி அது பேசினாலும், காவிய ஆசிரியரே இந்த மதம் சார்ந்தவர் என்றிருந்தாலும்  கூட மதவாதம் அல்லது சார்புள்ள வாசிப்பு கூடவே கூடாது. இங்கே மதம் சார்ந்தது என்று நான் சொல்வது பக்தி, சடங்கு, ஆச்சாரவாதம், பிற மத வெறுப்பு போன்றவற்றை மட்டும்தான். மதங்களின் மெய்யான அறிவுத்தரப்பான வரலாறு, தத்துவம், தரிசனம் போன்றவையே காவியம் பொருட்படுத்துவதும் வாசிக்க  வேண்டியதும்.  ஏனெனில் பேரிலக்கியங்கள் முழுக்க முழுக்க ஓர் மானுடப் பண்பாட்டின் உச்சம் நிகழும் காலத்தில் இருந்து எழுபவை. உயர் தத்துவங்களும், விழுமியங்களும் நிகழ்ந்த காலத்தில் இருந்து திரண்டவை. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழ்ச் சமூகம் பழங்குடி வாழ்வில் இருந்தும், நாடோடி மரபில் இருந்தும் நிலவுடமைச் சமூகமாக தன்னை மாற்றிக் கொள்ளும்  போது சமணம், பெளத்தம் போன்ற பெரும் தத்துவ தரிசனங்களைச் சார்ந்த  மதங்கள் எழுந்த போது உருவாகிவந்தவை. கம்பராமாயணம்  பேரரசுகளாக தமிழ்ச் சமூகம் எழுந்த ‘கொழிக்கும்’  காலத்தில் இருந்து தோன்ற பலநூறு இலக்கியங்களில் முதன்மையானது. சோழர்காலத்தில் எழுந்த சிற்றிலக்கியங்கள், காவியங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது. தான் நிகழ்ந்த காலத்தில் நின்று அதுவரையான மொத்த தமிழ்ப் பண்பாட்டையும் தொகுத்துக் கொண்டு மேலெழுந்தது. பேரிலக்கியங்களின் அடிப்படை இயல்பு அது. 

மேலே குறிப்பிட்ட வீரமாமுனிவரின் தேம்பாவணி கிறிஸ்துவின் பெருமைகளைச் சொல்ல வந்ததுதான். ஆனால் அது முழுக்க முழுக்க தமிழ் பண்பாடு சார்ந்த நிலத்தையே விரிக்கிறது. இந்த நிலத்தின் அறத்தையும், விழுமியங்களையுமே பேசுகிறது.  உமறுப்புலவரின் சீறாப்புராணம். நபிகளின் பெருமையைப் பாடுகிறது  ஆனால் முழுக்க முழுக்க அவர் தமிழ் பண்பாட்டில் நிகழக் கூடிய நபிகள். ஓர் உதாரணம் சொல்கிறேன்.  சீறாப்புராணம் – மழையழைப்பித்த  படலத்தில்.  பெரு வெள்ளம் ஒன்று நிகழும் காட்சியொன்று இருக்கிறது  திரண்டு எழும் வெள்ளம் ஐந்து வகை நிலங்களையும் அள்ளிக்கொண்டு வந்தது என்கிறார் உமறுப்புலவர். நபிகள் அரேபிய நிலத்தைச் சார்ந்தவர். முழுக்க முழுக்க பாலை நிலத்தைச் சார்ந்த பண்பாட்டில் பிறந்தவர் வாழ்ந்தவர்.  அவர் தமிழ் நிலத்திற்கு வரும் போது ஐந்து நிலத்துக்குக்குரிய பண்பாட்டிற்குளும் வந்து விடுகிறார். தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்றிது.

கம்பராமாயணம் வடமொழிக் காப்பியம். வால்மீகி, வசிட்டர், போதாயனர் ஆகிய மூவரும் ஆக்கியளித்தது. அதனுடைய பயில்வும் பரவலும் வடமொழியில் இருந்தே அதிகம் நிகழ்ந்துள்ளது.  கம்பர்  அதை முழுக்க முழுக்க தமிழ் பண்பாடு சார்ந்து எழுதியளிக்கிறார்.  அவையடக்கப் பகுதியில் அதை கம்பரே தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

தேவபாடையின் இக் கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முளும், முந்திய
நாவினான் உரையின்படி, நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்புஅரோ.

தமிழ்ப்பாவினால் உணர்த்திய பண்பு ஆரோ’  என்று  கொடுக்கப்படும் அழுத்தம் தான் வடமொழிக்காப்பியத்தை மொழிபெயர்க்கப் போகிறேன் என்பதல்ல. நான் அதைத் திரும்ப எழுதப்போகிறேன் என்பதுதான். ஏனெனில்  வால்மீகி தொடாத இடங்களைக் கம்பர் நிறையவே தொட்டெடுத்தவர்.  உள்ளூர் பண்பாட்டையும் பெரும்போக்கு பண்பாட்டையும்  இணைத்து தன்னை நிகழ்த்தியவர். உதாரணமாக இராமாயணத்தில் சொல்லப்படும் பாலம் கட்ட அணிலும் புலுணியும் உதவிய கதை ஓர் நாட்டுப்புறக்கதை. வால்மீகி சொல்லாத கதை. அதை கம்பர் காவியத்திற்குள் எடுக்கிறார். பெருங்காப்பியம் மொத்தப் பண்பாட்டையும் நுண்மையாக உள்ளே எடுக்கிறது.அதனால்தான் அது அத்தனை பெருத்தது.  ஆழமானது. 

வெண்முரசு நாவல்களை ஜெ  இவ்வளவு பெரிதாக ஏன் எழுத வேண்டும். அதுவும் தெரிந்த கதையை என்று பகடிகள், கேள்விகள் எழுந்தன.  தலையணைக்கு வைத்துப் படுக்க புத்தகம் எழுதுகிறார் என்ற இணைய மந்தர்களின் குரல்கள். ஜெ மகாபாரதத்தை வியாசனின் காலடியில் இருந்து கொண்டு தமிழ்ப் பண்பாட்டில் இருந்தே எழுதுகிறார்.  முழுக்க முழுக்க சமகாலத்தில் இருந்து, சமகாலத்தின் தத்துவ தரிசனங்களில் இருந்து எழுதப்பட்டது. அதனால்தான் அது நாவல் என்ற வடிவத்திற்கும் அதே வேளை காவியத்திற்குரிய விரிவுக்கும் இணையாகப் பொருந்துகிறது. சிலப்பதிகாரத்தை ‘கொற்றவை’ என்ற நாவலாக எழுதும் போது  ‘புதுக்காப்பியம்’ என்றே பெயரிடுகிறார். அது  திரும்ப எழுதுவதுதான்.  மாபெரும் காவியங்களின் விதைகள் திரும்பத்திரும்ப வெவ்வேறு நிலங்களில் இட்டு இட்டு காடாக்கக் கூடியவை. 

கம்பராமாயணத்தின் தொடக்கப் பாயிரப் பகுதியில் கடவுள் வாழ்த்தில் கம்பர் தன்னுடைய தெய்வங்களை வகுத்துக் கொள்கிறார்.  அலகிலாத் தெய்வங்கள், அலகுடைய தெய்வங்கள்.  அலகிலாத தெய்வத்தின் ஆடலையே காவியத்தின் தொடக்கத்திலேயே கம்பர் முதன்மையாக வைக்கிறார்.அலகிலா தெய்வங்கள் என்பவை ஒவ்வொரு மதத்தினதும் தத்துவார்ந்த தெய்வங்கள்.    அத்வைதம் குறிப்பிடும்  பிரம்மம் போனறோ, பெளத்தம் குறிப்பிடும் மகாதர்மம் போன்றோ பண்பாட்டில் நிகழ்ந்து வந்த ததுவார்ந்தமான விவாதங்களினால் திரண்டவை.  கம்பர் ஆதி அந்தமும், அலகிலாத தன்மையும்  கொண்டதான தத்துவார்ந்த கடவுள் தன்மைக்கு தன் முதல் பணிவை அளிக்கிறார். ‘சிற்குணத்’ தெய்வம் என்றதைக் குறிப்பிடுகிறார். இந்த வைப்பு முறை முக்கியமானது.  

கம்பர் அவையடக்கத்தில் இந்தக் காவியம் யாருக்கு உகந்ததல்ல என்பதற்கு ஓர் பட்டியலைத் தந்தும் விடுகிறார்.  மிக நேரடியான அதேவேளை சீண்டும் குரலில் அவ்வரையறைகளை அளிக்கிறார். பித்தர்கள், பேதையர்கள், மற்றும் பக்தர்களுக்கு இக்காவியம் உகந்ததல்ல. அவர்களுக்காக எழுதப்படவில்லை அவர்களைப் பொருட்டாக எடுக்கப் போவதும் இல்லை என்று விடுகிறார். எல்லாக்காலத்திலும்  படைப்பாளியிடம் இந்தக் குரல் இருக்க வேண்டும். 

முத்தமிழ்த் துறையின் முறை நோக்கிய
உத்தமக் கவிஞருக்கு ஒன்று உணர்ந்தவென்:-
‘பித்தர் சொன்னவும். பேதையர் சொன்னவும்.
பத்தர் சொன்னவும். பன்னப் பெறுபவோ?’

கம்பராமாயணம் மகாவிஷ்னுவின் இயல்பினானாக தொன்மங்கள், புராணங்கள், காவியங்கள் குறிப்பிடும் இராமனைத் தலைவனாகக் கொண்டது. அவனுடைய கதை.  அவனுடைய அயணம்.  இவ் அடிப்படையை எடுத்துக் கொண்டு அதை வைணவச் சார்புடன் மட்டும் வாசிக்கும்  பழக்கம் உண்டு.  அதாவது காத்தல் என்னும் தொழிலைப் புரியும் தெய்வம் மண்ணிறங்கி வருவது. ஆனால் கம்பருடைய இராமாயணம் அடிப்படையே  வால்மீகியில் இருந்து தலை கீழானது.  வால்மீகி தெய்வம் ஒன்று மண்ணில் நிகழ்ந்தால் எப்படிப்பட்ட இலட்சிய வாழ்வை அது வாழும் என்று புனைந்து காட்டுகிறார். கம்பரோ  தமிழ் பண்பாட்டில் இருந்து அதன் அறிவியக்கத்தில் இருந்து இராமனைப் பார்க்கிறார்.  வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்  வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவார் என்கிறார் வள்ளுவர்  அதுவே தமிழ்ப் பண்பாட்டின்  மெய்யறிதல்.  கம்பருடைய இராமன், தோலின் நிறத்திலும் சரி அறத்தின் நிறத்திலும் சரி தமிழ் பண்பாட்டின் இலட்சியங்களினால் ஆக்கப்பட்டவன். முழுக்க முழுக்க மானுடன். அதே வேளை அவன் தன் சேயலினால் எப்படி தெய்வாமக ஆகின்றான் என்பதே  இராமாயணத்தின் தரிசனம் நிகழும் வழி.  தந்தை வந்து சொல்ல வேண்டுமோ? நீ சொன்னால் நான் காடேக மாட்டேனோ, என் பின்னவன் பெற்ற செல்வம் நான் பெற்றதன்றோ என்று அவன் கைகேயிடம் சொல்லும் போதும், எளிய படகோட்டியான குகனை அணைத்துக் கொண்டு  ‘குகனோடு ஐவரானோம்’ எனும் போதும் மானுடரில் இருந்து தெய்வத்தன்மைக்கு  எழுகிறான். தந்தையின் சாவை எதிர்கொள்ளும் போது உடைந்து போகிறான், வாலியை மறைந்திருந்து கொல்லும் போதும கீழ்மையைத் தொடுகிறான்,   மனைவியை தீ மேல் ஏற்றும் போதும் எளிய கணவனென பாழில் விழுகிறான். இராமனுக்கு மட்டுமல்ல இராமாயணத்தில் ஒவ்வொரு பாத்திரத்திலும் இந்த முரண் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. 

இவ் ஊசல் வாழ்வு மானுடர்களுக்கு நிகழ்பவை இல்லையா? இலட்சிய வாதிகளுடைய வாழ் நாள் போராட்டம் இலலையா? இன்றைய நவீன நாவல்களின் பாத்திர அடிப்படைகளில் இந்த முரண் தானே இயங்குகிறது ?    மானுட குலத்தின்  அடிப்படையான முரண்.  அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் தோன்றினாலும் உலகின் பெருங்காப்பியங்களின் வரிசையில் அமர்வதற்கு கம்பராமாயணம் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்கிறது. இந்த அடிப்படையான புரிதல்களோடு காவியங்களை அணுக வேண்டும். இங்கே காவியத்தை  அணுகும் போது கவனப்படுத்த வேண்டும்  குறிப்பிடுவது கம்பரின் சொற்களை அல்ல. உரையாளர்களின் சொற்களை. எல்லாக் காலங்களிலும் மரபில் உள்ள இலக்கியங்களுக்கு உரையாளர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். அது தேவையானதும் கூட.  திருக்குறளிற்கு  பரிமேலழகரில் இருந்து கலைஞர் வரைக்கும் உரையெழுதியிருக்கிறார்கள்.   உரைகள் முக்கியமானவைதான்.  அதே நேரம் அவை எக்காலத்துக்குரியவை, யார் எழுதியவை என்பதை கவனிக்க வேண்டும். இந்த இடத்தில்தான் முறையாகக் கற்ற, தம்மைத் தகுதிப்படுத்திக் கொண்ட நல்லாசிரியர்களின் ஆலோசனைகள் தேவைப்படலாம்.  மதச்சார்புடையவை, பக்தியும் ஆசாரவாதமும் சேறிந்தவை மட்டுமல்லாமல் இன்று  பல்கலைக்கழகங்களில் பழைய உரைகளை மட்டும் ‘ஒப்புக்கு’ ஆய்வு செய்தும், அதை பிள்ளைகளுக்கு கற்பித்தும் கொண்டிருக்கும் நம்முடைய பேராசிரியர்கள், முனைவர்களை மிக மிகக் கவனமாக அணுக வேண்டும். அவர்களைப் போல் தமிழ் இலக்கியத்தைக் கொன்றொழிப்பவர்கள் இக்காலத்தில் யாருமில்லை. அவர்களைப் போலவே  மேடைப்பேச்சாளர்கள், கம்பவாரிதிகள், கம்பன் கழகம் என்ற பெயரில்  ’பழைய மா’ அரைப்பவர்களில் இருந்தும் மிகக் கவனமாக விலகி இருந்து கொள்ள வேண்டும். 

சொல்லப்போனால் பழந்தமிழ் இலக்கியத்தை அணுகும் போது சமகால இலக்கிய வாசகர்கள் அதன் சொல்முறைகள், வடிவங்களைக் கற்றுக்கொள்வதோடு இக்கால மேம்பட்ட அறிவுச்சூழலை இணைத்துப் பார்த்து வாசிப்பதும், குறிப்பெடுப்பதும் முக்கியமானதும் பயனுள்ளதும் என்று நினைக்கிறேன். நம்முடைய சொல்வங்கியை மேம்படுத்திக் கொள்வதோடு, கற்பனையால் நிகழ்த்திக் கொள்ளல், கூட்டு உரையாடல் மூலமும் காவிய வாசிப்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இருக்கும் ஒன்று உண்டு.  ஆசிரியர் ஜெயமோகன் அடிக்கடி சொல்வது;  எந்தப் பெருஞ்செயலையும் தொடர்ந்து செய்வது. ஒவ்வொரு நாளும் செய்வது. துளித்துளியாகச் சேர்த்துக் கொள்வது.  வெண்முரசு தொடங்கும் போது அதன் இருப்பத்தியாறு பெரு நூல்களின் முன்பும் திகைத்து நின்றிருக்கிறேன். வாசிக்கத் தொடங்கிய பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அது என்னை இழுத்து உள்ளே போட்டது. ஒரு பெருநூல் வாசகரைத் தெரிவு செய்து தனக்குள் எடுத்துக் கொள்வதற்கு அது வைக்கும் முதன்மையான பரீட்சை, இந்தத் தவத்தின் இயல்புதான்.  பெரு நாவல்களும் காவியங்களும் அப்படிப்பட்டவை. வெண்முரசை ஒன்றரை வருடங்கள் தினமும் வாசித்தேன். அது முழுமையாக ஆட்கொண்டது. வாசித்து முடியும் போது இறுதி அத்தியாயங்களை முடியக் கூடாது என்று சில நாட்கள் வேண்டும் என்றே தள்ளிப் போட்டுக் கொண்டு பித்தேறித் திரிந்தை நினைத்துப் பார்க்கிறேன்.  சென்ற வருடம் குருபூர்ணிமா தினத்தில் ஜெ விடம் அதற்குள் இருந்து வெளியேறுவது பற்றிக் கேட்டிருந்தேன். அவர்  இது மிக இயல்பானதுதான், தான் தஸ்தோயை வாசித்த காலங்களில் ஐந்தாறு வருடங்கள் அப்படித்தான் இருந்தேன் என்றார். தஸ்தோய் நிபுணன் என்று சொல்லும் அளவிற்கு. அதாலால்  ‘இயல்பென உதிர்க’ என்றார். அச்சொல்லை வெண்முரசிற்கு  என்றில்லை,  முழு வாழ்க்கைக்குமாக மாற்றிக்கொண்டேன். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here