ஒரு மரத்தடி நிழல் போதும்

0
267

ஒரு மரத்தடி நிழல் போதும் 

புகைப்படக் கலைஞர், மறைந்த பிரசாந் சிவசுப்ரமணியத்தின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்தும் ’சிறிதினும் சிறிது’  கண்காட்சியைக் ‘கலம்’  பண்பாட்டு வெளியில்  அவருடைய  மூத்த சகோதரரும் எழுத்தாளருமான  நண்பர் கிரிசாந் தன்னுடைய குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் இணைந்து ஒழுங்கமைத்திருந்தார்.  பிரசாந் புற்றுநோயால்  இறந்து முப்பத்தியோராம் நாள்  ஆவணப்புத்தகத்துடன் கூடிய ஓவியக் கண்காட்சியாக ஏற்பாடாகியிருந்த நிகழ்வு.  ஏற்கனவே கிரிசாந் தன்னுடைய சகோதரரின் மறைவை ஒட்டி இரண்டு பதிவுகளை எழுதியிருந்தார்.  (ஒளியுள்ள இருட்டு – 1 , ஒளியுள்ள இருட்டு – 2 )   தொடக்க நாள் நிகழ்வில்  கலம் காட்சிக்கூடத்தில் வைக்கப்படிருந்த பிரசாந்தின்  புகைப்படங்களை நண்பர்கள் சதீசும், ஆதியும் நானும் ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டு வந்தோம். முதல் அறையில்  பிரசாந் புற்றுநோய் வைத்தியத்தின் போது வைத்திய சாலைகளிலும், வீட்டிலும் எடுத்த ‘தன் சார்’ புகைப்படங்களைக் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.  சதீஸ் நாங்கள் உள் நுழைய முன்பே ’அந்த அறைதான் மிகவும் கனமானது’ என்று சொல்லிக்கொண்டிருந்தார்.  பொதுவாக எங்களுடைய நட்பு வட்டத்தில் சதீஸ் ஓர் உணர்ச்சிப் பிரவாகம்தான்.  சொல்லப்போனால்  எச்சூழலில் இருக்கிறோமோ அங்கே எங்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் உணர்வுகளையும் சொற்களையும் குரலாக மாற்றி யளிக்கும்  இடம் சதீசினுடையது. மரணவீட்டில் ஒப்பாரியாகவும் இயற்கைக் காட்சியொன்றின் முன் ‘அற்புதம் !’  என்றும் மாறக்கூடியவர். 

’கனமான’ அவ்வறையில் இருந்தவை  பிரசாந்தின் புகைப்படங்களும் இரண்டு கவிதைகளும். ஒரு கவிதை கமலாபரனுடையது, இன்னொன்று  கிரிசாந்துடையது. நண்பர் கமலாபரன் கட்டையின் (பிரசாந்) மரணச்சடங்கு அன்று எனக்கும் கிரிக்கும் கவிதை ஒன்று அனுப்பியிருந்தார்.  கிரிசாந் அஸ்தியைக் கரைத்த  பிறகு  அப்பாவிற்கு அந்தக் கவிதையைப் படித்துக் காட்டியிருக்கிறார். அந்தக் கவிதையை புகைப்படங்களுக்கு நடுவே சட்டகமிட்டிருந்தோம்.  அத்தோடு கிரிசாந் கட்டை நீங்கிச் சென்ற அன்று எழுதிய கவிதையையும் அறைக்குள் வைத்து பிருந்தா ஒரு சிட்டி விளக்கை ஏற்றியிருந்தார். நான் அங்கு நின்ற நேரம் அடிக்கடி அதை எட்டிப்பார்த்துக் கொண்டேன், அச்சுடர் கவிதை மீது நிழலாடிக் கொண்டிருந்தது. அன்றைக்கு அச்சுடர் எந்த தர்கங்களுக்கும் இடம் கொடாமல் நின்றிருக்க வேண்டும் என்று தோன்றியது. 

(கட்டுரையின் பின்னால் கவிதைகளை இணைத்திருக்கிறேன்)

தொடர்ந்து ஏனைய புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டே வந்தோம்.  ஆதியுடன் நிறைய நாட்களுக்குப் பிறகு பேசுகிறேன். அவனுடைய குழந்தை இறந்த பிறகு அவனை இன்னும் அணைத்துக் கொள்ளவுமில்லை. அதற்கு இன்னும் காலமெடுக்கலாம்.  கட்டை எடுத்த புகைப்படங்களில் உள்ள குழந்தைகள் தனியே நிற்பவர்கள். கட்டை எப்பொழுதும் விளையாடிக் கொண்டிருப்பவன்.  எல்லோரும் சொல்வது போல்  மைதானத்தில் அவன் தனக்குள் வாழ்வதில்லை, அவனுடைய பெரிய சிரிப்பு மைதானத்தில் முழங்கிக் கொண்டே வரக்கூடியது. அவனுடைய இறுதி ஊர்வலத்தில் அவனுடைய மைதானத்து நண்பர்கள்   கிரிக்கட் மட்டைகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டே அவனைப் பிந்தொடர்ந்து வந்தது ஞாபகத்திற்கு வந்தது.   கட்டையின் சிறுவர்கள் அவனுக்குள் வாழும் சிறுவனோடு உரையாடிக் கொண்டே புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தார்கள். அவர்களின் முகத்தில் இருந்த களியும்  சிரிப்பும் அத்தனை முழுதாயிருந்தன.  ஓர் பாலை மர நிழலில் சிறுமியொருத்து ரோஸுச் சட்டையுடன் நின்றிருக்கும் புகைப்படத்தைப் பார்த்தவுடன் ஆதியிடம்  தேவதேவனின் ’ஒரு மரத்தடி நிழல் போதும் உன்னைத் தைரியமாக நிறுத்திவிட்டுப் போவேன்’ என்ற கவிதையைச் சொன்னேன். அவனும் தனக்கும் அந்தக் கவிதைதான் மனதில் உடனே தைத்தது என்றான். நிறைய நாட்களுக்கு பிறகு ஆதியும் நானும் ஒரே அலையினால் தொடப்பட்டோம். கட்டை குளமொன்றின் வான் பாயும் காட்சியை எடுத்திருந்தான், சுழிப்புக்கள் கொண்ட பச்சைப் பாசியும் அதன் மேலே மஞ்சள் ஒளியும் சேர்ந்து சணல் காட்டைப் போல் தோற்றம் காட்டின.  ஆதியும் தானும் அப்படித்தான் நினைத்தேன் என்றான்.

கட்டையின் கமராவில் பதிவான அவனுடைய விலங்குலகை கமராவினாலும் போட்டோவினாலும் உறைய வைக்க முடியாதிருந்தது. வான்காவின்  நட்சத்திர இரவு ஓவியத்தில் தாரகைகள் சுழல்வதை எப்படி நிறுத்த முடியவில்லையோ அப்படி.  கட்டை படம் பிடித்த விலங்குகள் அவை எதோவொரு வகையில் உயிருடன் இருந்தன. நாய்கள், நாய்க்குட்டிகள், பூனைகள், கூளைக்கடாக்கள், குதிரைகள், தெய்வங்கள் எல்லாம் நிகழ்ந்து கொண்டே இருந்தன. கட்டை பசுமைச் சுவடுகளின் நிகழ்வில் எடுத்த படங்களை அன்று வசீகரனும் நினைவு கூர்ந்து கொண்டிருந்தார் அதே போல் குமணனின் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் பற்றிய புகைப்படக் கண்காட்சியில் அவன் எடுத்த ‘அன்னை’ ஒருவரின் புகைப்படம் எடுக்கப்படும் போது நானும் அருகில் இருந்ததை ஞாபகப்படுத்திக் கொண்டேன்.  அப்பொழுது குமாரதேவன் ஐய்யாவும் எங்களுடன் நின்றிருந்தார். கட்டை அவருடன் எதுவோ கதைத்துக் கொண்டிருந்ததும் நிழலாடியது.  

கட்டை நெடுந்தீவில் எடுத்த குதிரையொன்றின் கண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தோம். உலகத்தை நோக்கித் திறந்திருந்த அதன் பெருவிழியில் கட்டை தான் படம் எடுக்கும் பிரதிபிம்பத்தை எடுத்திருந்தான். அதன் கண்ணின் ஒவ்வொரு இழைமமாகப் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்பொழுது பிருந்தா அருகில் வந்து , ’குறைந்தது ஆயிரம் போட்டோ ஆவது இதை எடுத்திருப்பான். அதில் இருந்து ஒன்றை மீட்டெடுக்க வேண்டியிருந்தது’  என்றார். ஓர் வேட்டைக்காரனின் பொறுமையுடன் படுத்திருந்த குதிரையுடன் மானசீகமாக ஓர்  உரையாடல் இல்லாமல் அரைமணித்தியாலத்திற்கு மேலாக அதன் அருகில் அமர்ந்து இப்புகைப்படங்களை எடுத்தான் என்று அவனுடன் சென்ற நண்பர்கள் சொன்னதாக கிரிசாந் சொன்னார். கட்டையை  அதுதான் கலைஞன் ஆக்கியது. 

கிரிசாந்தின் தம்பி என்பதோ, எங்களுடன் இருந்தவன், நண்பன் என்பதோ எங்களுடைய தனிப்பட்ட அன்பும் துக்கமும். அதற்கு கலையில் எந்த மதிப்பும் கிடையாது. ஓர் புகைப்படக்கலைஞனாக, குறுந்திரைப்படங்களை எடுக்கும் ஆர்வத்துடன் இருந்தவனாக,  அதற்காக தன்னை முழுதளிக்கவும், அதில் நிறையவும் முடிந்தவனாக இருப்பதும் அதை நிகழ்த்திக் காட்டுவதுமே கலையும் இலக்கியமும் பொருட்படுத்தும் விசயம்.  ஏனென்றால் சாவும் துக்கமும் கலைக்கு மிக அற்பமான விசயங்கள். கிரிசாந் கட்டையின் புகைப்படக் காட்சியை ஒழுங்குபடுத்துவோம் என்று நண்பர்கள் கேட்டபோது அவ்விடத்தில் தயங்கி, பின்னர் கட்டையுடன் அவருக்குண்டான நெருக்கம், உரையாடல், அவன் பற்றி இரத்த உறவைத் தாண்டி தனக்கு இருந்த கலை மதிப்பு என்பவற்றை  மீட்டுக் கொண்டு இரண்டு குறிப்புகளை எழுதிப் பார்த்துக் கொண்டு இவ் ஒழுங்குகளைத் தொடங்கினார். வாசகர் குமாரதேவன் மறைந்த போதும்  எங்களுடைய நண்பர் என்பதால்  அன்றி அவருடைய செயல்களாலும். வரித்துக் கொண்ட வாழ்வினாலும் மட்டுமே அவருக்குரிய இலக்கிய இடத்தையும் ஆவணப்படுத்தலையும் முழுதளிக்கிறோம் என்பதை தெளிந்த பின்னரே அவருக்குரிய புத்தகத்தையும் நிகழ்வையும் ஒருங்கமைத்தோம். 

எந்தக் கலையினதும் முதலாவது பணி வாழ்க்கைக்கு பொருளளிப்பது.  ஒரு வகையில் எல்லா கலைகளினதும் பொருள் என்பது கதையே. இலக்கியத்திற்கும், ஓவியத்திற்கும், இசைக்கும், நடனத்திற்கும்,  நாடகத்திற்கும், புகைப்படத்திற்கும் கதையே தளம்.  ஏன் மானுடர் கதைகளைச் சொல்ல விரும்புகிறார்கள்?  தங்களுக்காத்தான்.  கதைகள் மூலம்தான் மானுடர் தங்களைத் தொகுத்துக் கொள்கிறார்கள், புரிந்து கொள்கிறார்கள்.  தங்களின்  வாழ்க்கையில் இருந்து எதை அள்ளி எடுக்க விரும்புகிறோம் என்பதை அவர்கள் அறியும் போது தங்களை எதுவாக முன் வைக்க வேண்டும் என்ற  தெளிவு  திரட்டி அளிக்கப்படும் போது அவர்கள் நிறைகிறார்கள்.  அன்றாடமான வாழ்வு அவர்களுக்கு எப்படி அளிக்கப்பட்டிருந்தாலும், எவ்வளவு  கீழ்மைக்குள்ளும், எவ்வளவு சலிப்புக்குள்ளும் தள்ளியிருந்தாலும், அவர்களுக்கு நிறைவளிக்கக் கூடிய ஒன்றை. சலிக்காமல்,   முழு நிறைவோடு  ஆற்றும் போது அடையும்  பேருவகை நிலைக்காக  மட்டுமே அவர்கள் செயல்புரிவது அவர்களை கலைஞர்களாக ஆக்குகின்றது. பல நூறு சம்பவங்களினால் ஆனவர்களாக இருந்தாலும் நிறைவினால் எது தொடப்படுகின்றதோ, அதுவே அவர்களின் கதை.  அக்கணத்தை அதன் பின் வருகின்ற எந்தச் சலிப்பும், துயரும்,  ஏன் சாவும் கூட தீண்டாதபடிக்கு கலை அக்கதையைப்  பொத்தி எடுத்துக் கொள்கிறது.

– பிரதீப்  குணரட்ணம்

…..

கவிதைகளும் புகைப்படங்களும்

எழுதுவதும் அழிப்பதுமாய் 

நினைவுகள்,

பிடாரி கோயில் 

கோபுரத்தைச் சுற்றுகிறது பருந்து

ஒரே வேம்பின் கீழ்

உதிர்ந்தன எங்கள் குரல்கள்,

ஒரே சொரூபத்தின் முன்னால்

எத்தனை முறை நனைந்தன எங்கள் கால்கள்,

எத்தனை முறை தளைந்தன 

ஒரே துயரில்

ஒரு நாள் கழிந்தது

நீ உதிர்ந்துபட்டு

போ வராதே 

அதிகமாகவே படுத்திவிட்டது வாழ்வு

அத்தனை சின்ன ஆயுளுக்குள்,

அதிகமாகவே 

உன்னை வைத்திருந்திருக்க வேணும் 

அதற்காகவேனும்.

இல்லையினி நோவுகள்

இல்லையினி காயங்கள்

இல்லையினி விசும்பல்கள்

இல்லையினி அம்மாவிடம் சொல்லவென்று ஓடி விழுங்கிச் செரித்த சொற்கள்

இனி அந்தச் சிரிப்பும் குரலும் மட்டும் 

எப்படிப் பார்த்தாலும்

இன்னும் 

நீண்டிருந்திருக்க வேண்டியதுன் வெளிச்சம்

காயங்களின் நீளத்திற்கேனும் பறந்துவிட்டுப்போ என்பதற்குள் 

சிரிப்பின் அகலத்திற்கு மட்டும் 

திரிந்துவிட்டுப் போகிறாய் தீர்மானமாய்..

கோவர்த்தனகிரியிலிருந்து ~

முதலில் யசோதை இறங்கினாள்;

மழைக்குள்,

இப்பொழுது நீ!

-கமலாபரன்

 

மெளனமான ஒரு கல்லிலிருந்து
பெருகும் ஒரு நீர் போல

இந்த நாளிலிருந்து கசிகிறது காற்று

மூச்சில் சிக்கியிருக்கும் ஒரு பார்வையைப் போல

இந்த நாளிலிருந்து கசிகிறது தேகக் குளிர்

என்றோ கட்டிலிருந்த பேயொன்று
அறுந்து விலகுகிறது
மூச்சை இழுத்துப் பிடிக்கிறது
நழுவி விழுகிறது

கண்ணீரை மொய்க்கின்றன இலையான்கள்.

(கட்டைக்கு)
14. 10. 2025

– கிரிசாந்

சிறிதினும் சிறிது திறப்பு – நிகழ்வின் பதிவு