தோறை தடுப்பு : அசட்டுத்தனத்தின் அநீதி !

0
695

இலங்கைச் சுங்கம் என்னுடைய தோறை நாவலைத் தடுத்திருக்கிறார்கள். பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்குப் பிறகே புத்தகங்களைத் தரமுடியும் என்று சொல்லியிருக்கிறார்கள். தமிழ் நாட்டின் காலச்சுவடு பதிப்பகத்தில் இருந்து அனுப்பப்பட்ட இலங்கைக்கான நாவல் பிரதிகளைப் பெற்றுக்கொள்ள யாழ்ப்பாணம் தபாலகத்தில் அமைந்திருக்கின்ற சுங்கப்பிரிவிற்குச் சென்றிருந்தேன். அடையாள ஆவணங்களைக் கொடுத்து விட்டுக் காத்திருந்தேன். ஏற்கனவே 2022 இல் அதே இடத்தில் நகுலாத்தை நாவலை பெற்றுக் கொண்டிருக்கிறேன். சிறிது நேரத்தின் பின் அழைத்தார்கள், அங்கே ஒரு சிங்களப் பெண் மணியும் இரண்டு மூன்று அலுவலர்களும் சிற்றூழியர்களும் இருந்தார்கள். ஆவணங்களைச் சரி பார்த்து விட்டு தோறை நாவலுக்கான பொதியை எடுத்து சிற்றூழியர் ஒருவரைக் கொண்டு எடுத்து வந்தார். உள்ளே என்ன இருக்கிறது என்று  கேட்கவும், புத்தகங்கள் என்றேன்.  பொதியை சிற்றூழியர் வெட்டித்திறந்தார். அங்கிருந்த அதிகாரிகள் ஆளுக்கொரு புத்தகத்தை எடுத்துக் கொண்டார்கள். யாருடைய புத்தகம்? என்ன எழுதி இருக்கிறது? எதைப்பற்றி எழுதி இருக்கிறது என்றார்கள். என்னுடைய பதில் வர முதலே புத்தகத்தைத் திறந்த தமிழ் அலுவலர் எதையோ கண்டு பிடித்துவிட்டு மற்றவருக்குக் கண்ணைக்காட்டி அதைச் சுட்டிக்காட்டினார். அதில் ’பீல்ட்பைக்’,  ஆமிக்காரர் போன்ற சொற்கள்  மேலும் தட்டிப்பார்த்து வேறு  சொற்களையும் கண்டுபிடித்தார்கள். அந்தச் சிங்களப் பெண்மணிக்கு கண்டுபிடித்தவற்றை ஒப்பித்தார்கள். வேறு அறையில் இருந்து இன்னொரு தமிழ் அதிகாரியை அழைத்து வந்தார்கள். வேடிக்கையாக அங்கிருந்த சிற்றூழியர்களே புத்தகங்களைத் திறந்து மேய்ந்து சொற்களைக் கண்டுபிடிக்கத் தொடங்கினார்கள். வந்த அதிகாரியிடம் காட்டினார்கள்.  அவர் இப்படிச் சொற்கள் இருக்கிறது. இப்படியான புத்தகங்களை பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றால்தான் தருவோம் என்றார்கள். 

நான் அவர்களிடம் வாதிட்டுப்பார்த்தேன். அதில் இனவாதத்தைத் தூண்டுவது போலோ, இயக்கங்களை ஆரம்பிப்பது போலவோ  எதுவும் இல்லை என்றேன். வேண்டுமென்றால் நான் காத்திருக்கிறேன் இரண்டு மூன்று அத்தியாயங்களைப் படித்துப்பாருங்கள் என்றேன். அவர்கள் தாங்கள் கண்டுபிடித்த சொற்களிலேயே தொங்கிக் கொண்டு நின்றார்கள்.

அவர்களின் சில வார்தைகளைக் கொண்டே  அவர்களுடன் இலக்கியத்தைப் பற்றியோ, என்னுடைய அடிப்படை உரிமைகளைப் பற்றியோ பேச்செடுக்க முடியாது என்று புரிந்து விட்டது.  தங்களுடைய வேலைக்கு ஏதும் வினை வந்து விடுமோ என்ற பயத்தையும் சராசரிகளின் அசட்டுத்தனத்தையும் தவிர அவர்களிடம் எதுவும் இல்லை. அங்கே அவர்கள் தமிழர்களோ சிங்களவர்களோ கிடையாது அவர்கள் வெறும் குமாஸ்தாக்கள்.  அவர்கள் எனக்கு முன் அலவலாதிப் பட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கு  புத்தகம் எழுதுவதன் தவறைப் புரிய வைக்க முயற்சிப்பது போலிருந்தது.  எரிச்சலும் சினமும் மேலிட்டது.

எனக்கு முன்னால் புதிய புத்தகங்களின் வாசனையுடன் நாவல் பரவிக் கிடந்தது. ஒன்றைக் கைகளில் எடுத்துப் பார்த்தேன். அதை இப்பொழுது திரும்பவும் அங்கே வைத்து விட்டு வர வேண்டும். சரி இப்பொழுது என்ன செய்வது இனி என்ன நடைமுறை என்று அவர்களைக் கேட்டேன். தாங்கள் பாதுகாப்பு அமைச்சிற்கு இரண்டு பிரதிகளை அனுப்புவோம் என்றார்கள். சரி எத்தனை நாளில் அவர்கள் பதில் சொல்வார்கள் என்றேன். இப்படி முதலும் புத்தகங்களை அனுப்பியிருக்கிறோம். அத்தோடு சரி எந்தப் பதிலும் வருவதில்லை என்றார்கள். மிகச் சாதாரணமாக.  நீங்கள் தான் கொழும்புக்குச் சென்று கேட்க வேண்டும் என்றார்கள். தாங்கள் அங்கிருந்து அனுமதி வந்தால் மட்டுமே புத்தகங்களை விடுவிப்போம் என்று  உறுதியாக சொல்லி விட்டு எனக்கான ரசீதைத் தயாரிக்கத் தொடங்கினார்கள்.  சிற்றூழியர்கள் அனுப்பும் இரண்டு பிரதிகளை வைத்து விட்டு ஏனைய தோறைகளை உரப்பையில் போட்டுக் கட்டி எடுத்துச் சென்றார்கள். ரசீதை வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன். வானம் இருட்டிக் கொண்டிருந்தது. கார் காலம் தன் சூல் நிலையை அடைந்து கொண்டிருந்தது.

இது முதல் முறையல்ல கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் சோபாசக்தி, தீபசெல்வன் போன்றவர்களின் பிரதிகள் தடுக்கப்பட்ட போது போராட்டம் வரை சென்றிருந்தோம். இன்னும் அவை விடுவிக்கப்படவில்லை. இங்கே சில விடயங்களை இப்பிரச்சினை தொடர்பில் தொகுத்துச் சொல்ல வேண்டும். 

இதில் இருக்கின்ற மிகப்பெரிய முரண், எந்தப்பிரதியும் வாசிக்கப்படாமல் தடுக்கப்படுகிறது. பிரதி கைகளிலோ, புத்தக விற்பனையாளர்களின் கப்பல் பார்சலிலோ வரும் போது நாட்டில் வாசகர்களைத் தவிர அவற்றை யாரும் சீண்டுவது கூடக் கிடையாது. அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை யாரும் பொருட்படுத்துவதோ தடை செய்வதோ இல்லை. தவிர இன்றைக்கு மின் நூல்களின் காலத்தில், இணையத்தின் காலத்தில் ஒரு இலங்கை போன்ற ஒரு நாடு புத்தகத்தைத் தடை செய்வதோ, மறித்து வைப்பதோ எவ்வளவு பெரிய கேலிக்கூத்து ?

ஈஸ்ரர் தாக்குதலுக்குப் பிறகு மத அடிப்படை வாதக் கருத்துக்கள், நூல்கள் இறக்குமதி செய்யப்படுவதை மட்டுமே அரசு கவனிக்கிறது.  இந்தச் சுங்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கும் விடயம் அது மட்டுமே. இனவாதம், நாட்டின் கீர்த்தி, தேசிய பாதுகாப்பு போன்றவற்றின்  மீது அபகீர்த்தியையோ சிக்கலையோ ஏற்படுத்தும் நூல்களை வாசிப்பதோ அவற்றுக்கான சர்வதேச, தேசிய சட்ட முறைகளைப் பின்பற்றுவதோ அதற்கென்று ஓர் ஒழுங்கை, அமைப்பு முறையை அரசாங்கம் செய்ய வேண்டும் என்றே தொடர்ந்தும் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறோம். கருத்துச் சுதந்திரத்தை, அடிப்படை உரிமையை எழுத்துக்கூட்டி வாசிக்கும் சுங்க அலுவலரிடம் விட்டு விட்டு அரசாங்கம் சிவனே என்று அமர்ந்திருக்கிறது.

இதுவே தொடர்ந்தும் நடக்கும் போலிருக்கிறது.  இந்தியாவில் இருந்து பதிப்பகத்திடம் புத்தகத்தை வாங்கிப் பயணச்செலவுகளைச் செலுத்தி புத்தகத்தை எடுக்கிறோம். எங்களுடைய சொந்தச் செலவு. என்னால் ஒருமுறைக்கு மேல் கொழும்பிற்குச் சென்று விளக்கம் கொடுப்பதைத் தவிர எதுவும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. எப்படியும் இழுத்தடிக்கப் போகிறார்கள். புத்தகத்தின் செலவை விட பலமடங்கு செலவாகும். ஏற்கனவே இதற்காக வீதி வரை இறங்கிப் போராடியும் விட்டோம்.

தவிர இலங்கையின் இலக்கியச் சூழலின் பெரும்பான்மைத் தரப்பு அரச ஊழியர்கள், வாயே திறக்க மாட்டார்கள். இவ்வருட ஆரம்பத்தில் நூல்களை விடுவிக்கச் சொல்லி போராடினோம். விரல் விட்டு எண்ணுபவர்கள் தான் வந்திருந்தார்கள். வருட இறுதியில் இதே அரசிடம் சென்று தங்கள் நூல்களுக்கு விருது வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார்கள். இலக்கியச் சூழலே மாபெரும் அசட்டுத்தனத்துடன் இருக்கும் போது நான் சுங்கத்திணைக்கள ஊழியர்களை எந்த முகத்தை வைத்துக் கொண்டு அணுக முடியும்? 

மக்களே வெளியேற்றிய சென்ற அரசாங்கத்தில்தான் நகுலாத்தையை வெளியானது. சுங்கத்தில் மறிக்கப்படவில்லை. அதிலும் போர்ச் சூழல் சார்ந்த கதைகளே உள்ளன. தோறையைப் பற்றி தமிழ் ஊழியர்களிடம் விளக்கம் கேட்ட பெண்மணி என்னிடம் திரும்பி இதில் எதைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள் ? என்றார். நான் ஒரு இளம்தாயைப் பற்றி எழுதியிருக்கிறேன். உறவுச்சிக்கல்களைப் பற்றி எழுதி இருக்கிறேன் என்று சொன்னேன்.  அவரைச் சூழ இருந்த ஊழியர்கள் என்னை இழக்காரச் சிரிப்போடு பார்த்தார்கள்.  தாயைப்பற்றி எழுதுபவன் ஏன் ஆமிக்காரர்கள், இயக்கம் என்றெல்லாம் எழுத வேண்டும் என்பதுதான் அவர்களின் தர்க்கம். நான் புத்தகத்தை வாங்கிச் செல்ல அவர்களிடம் பொய் சொல்கிறேன். அதை அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது ? வரலாறு முழுவதும் அரசுகள், மத அமைப்புகள், அடிப்படைவாத அமைப்புகள், புத்தகங்களைத் தடை செய்தபடியேதான் இருக்கின்றன. ஆனால் இங்கே இருக்கும் விசித்திரம் அரசு புத்தகங்களை வாசிக்கவே இல்லை என்பதுதான். 

சோர்வாக இருக்கிறது. என்னால் அவ்வளவு செலவு செய்து கொழும்பிற்குச் சென்று இழுபட முடியாது.  என்னுடைய சொற்ப நண்பர்களையும், மெய்யான ஒரு சில எழுத்தாளர்களையும் வாசகர்களையும் தவிர தமிழ் இலக்கியச் சூழலோ, பண்பாட்டுச் சூழலோ என்னுடன் நிற்காது.  இதற்கு முதலும் இப்பிரச்சினையை எதிர்கொண்ட யாருடனும் அது நிற்கவில்லை.  

கைகளில் கொண்டுவரப்படும் புத்தகங்களோ, கப்பல் பாசல்களோ வந்தால் வாசகர்களுக்கு அறிவிக்கிறேன். ஏற்கனவே முப்பதிற்கும் மேற்பட்டவர்கள் முற்பதிவு செய்திருந்தார்கள். சிலர் சொல்லக் கேட்காமல் பணத்தை வேறு வைப்பிட்டிருக்கிறார்கள். தினமும் வந்து விட்டதா வந்து விட்டதா என்ற விசாரணைகள். புத்தகங்கள் கிடைத்தால் அறிவிக்கிறேன்.  அசட்டுத்தனம் இந்நூற்றாண்டின் மிகப்பெரிய அநீதிகளில் ஒன்றாக உருவாகி விட்டிருக்கிறது.ஒடுக்குமுறைக்கு எதிராக நிற்க முடியும், ஏற்கனவே என்னுடைய முன்னோடிகள் நின்றிருக்கிறார்கள்.  ஆனால் அசட்டுத்தனத்தை வரலாற்றில் முதல் முறையாக எதிர்கொள்கிறோம் என்று நினைக்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here