பேன் பார்க்கச் சொல்லும் பெண் | காவிய வாசிப்பு 06

0
80

வன்னியில் நிகழும் மிகப்பெரிய திருவிழாக்களில் முதன்மையானது வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் பொங்கல். இரவுத் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். பெருங்கூட்டம். செல்லும் வழியிலேயே வாகன நெரிசல்களுக்கு இடையில். ஏராளமான தூக்குக் காவடிகள், பறவைக் காவடிகள் வந்து கொண்டே இருந்தன. அதிலும் இம்முறை தூக்குக்காவடி முட்களில் பெண்கள் தொங்கிக் கொண்டிருந்தார்கள். வழமையாக ஓரிரு பெண்கள், அதுவும் நடுத்தர வயதுப் பெண்களோ, முதிய பெண்களோதான் உடலில் முள்ளை ஏற்றிக் கொண்டு துலாவில் ஏறுவார்கள். இம்முறை இளம் பெண்களின் நேர்ச்சைக் காவடிகள் அதிகமாகக் காணக்கிடைத்தது. காவடி, பொங்கல், பாற்செம்பு, என்று நேர்சைகள் செய்யக் கூடிய கண்ணகையம்மன் சனங்களுக்கு மிகவும் நெருக்கமான ஓர் நாட்டார் தெய்வம். இன்றைக்கு நாமறிந்த கண்ணகி சிலப்பதிகாரம் உருவாக்கி அளித்ததுதான். ஆனால் இன்றைக்கு அவளுக்குச் சொல்லப்படும் தொன்மங்களும், கதைகளும், இயற்றப்படும் சடங்குகளும் சாங்கியங்களும் சிலப்பதிகாரத்தைச் சேர்ந்தவையல்ல. சிலப்பதிகாரம் என்ற காவியம் கண்ணகையின் கதையை பண்பாட்டுக்கு ஒரு விதையென அளித்தது. அது காடாகப் பரவியது. இலக்கியத்திலும் வாய்மொழியிலும் கண்ணகையின் தொன்மம் சிலம்பின் பெயரில் பரவிச் சென்றது. குறிப்பாக உள்ளூர் ஆற்றுகைகள் மூலம். கதைப்பாடல்கள் மூலம். இலங்கை வரை அதன் பரவல் நிகழ்ந்தது. அரசன் கஜபாகு அவளுக்குக் கோவில் எடுத்தான். சிங்கள மக்கள் பத்தினித்தெய்யோவாகவும், தமிழர்களில் கிழக்கில் கண்ணகி என்றும், வடக்கில் கண்ணகை என்றும் கண்ணகை வழிபாடு பல்முகம் கொண்டதாக இத்தீவில் பரவியது. இங்குள்ள முழுக்க முழுக்க இலங்கையின் உள்ளூர் பண்பாடு சார்ந்தவளாக அமர்ந்தாள். ஏன் பவுத்தம் தன்னுடைய தெய்வங்களில் ஒன்றாகவே அவளை மாற்றிக் கொண்டது. அவர்களுடைய கதைகளின் படி பத்தினி புத்தர் அளித்த மாங்கனியில் இருந்து பிறந்தவள்.

என்னுடைய இளமாணிப்பட்டத்திற்குரிய ஆய்விற்காக மானிடவியல் மொழியியல் சார்ந்து வடக்கு இலங்கையில் நிகழும் கண்ணகை மரபுக் கதைகளை எடுத்துக் கொண்டேன். கள ஆய்வுகள் மூலம் இங்குள்ள கண்ணகை மரபுக் கதைகளைச் சேகரித்தேன். சமநேரத்தில் சிலப்பதிகாரம் தொடர்பான செய்திகளையும் வாசித்துக் கொண்டிருந்தேன். மதுரையை எரித்த பிறகு இத்தீவிற்கு கண்ணகை கிழவி வடிவாக வந்து சேர்ந்தாள் என்ற அடிப்படையான தொன்மத்தில் இருந்து இங்குள்ள கண்ணகை பற்றிய கதைகள் இருக்கின்றன. குறிப்பாக மாடோட்டும் சிறுவர்கள் கோடை நாளொன்றில் களைத்து வந்த கிழவி ஒருத்தியைக் காண்கின்றனர், அவளுடைய தாகத்திற்கு ஆகாரமளிக்கின்றனர். அவள் ஆற அமர்ந்து அச்சிறுவர்களைப் பேன் பார்க்கச் சொல்கிறாள், தலையைத் திறந்தால் தலையெல்லாம் கண்கள் முளைத்திருக்கக் கண்டு அவர்கள் திடுக்கிட, கிழவி மறைந்து போகிறாள். இந்த மையக் கதை பல்வேறு வடிவங்களில் வடக்கு இலங்கை முழுவதும் பரவியிருக்கிறது. அவள் சென்றமர்ந்த பத்தாம் ’பளை’ என்று சொல்லப்படும் வற்றாப்பளைக்கும் இதுவே மூலத் தொன்மம். இன்றைக்கு வடக்கின் கண்ணகை வழிபாட்டின் மையமாக இருக்கக் கூடிய வற்றாப்பளை வரை அவள் சென்ற வழித்தடங்கள் என நம்பப்படும் இடங்களில் அவளுக்காக கோயில்கள் எழுந்துள்ளன. மழையைத் தருபவளாகவும், கண்நோய், அம்மை போன்ற வெப்பு நோய்களை ஆற்றுபவளாகவும் இங்கவள் மூதன்னை வடிவில் அமர்ந்திருக்கிறாள். இன்றைக்கு வடக்கின் முதன்மையான நாட்டார் தெய்வம் கண்ணகைதான்.

கண்ணகி என்ற தொன்மத்தை தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரமே பேருருவாக நிறுத்தியது. படைக்கப்பட்டு இத்தனை நூறாண்டுகளுக்குப் பின்னரும் சிலப்பதிகாரம் குறிப்பிடும் கண்ணகையின் தொன்மக் கதையே எல்லாக் கதைகளின் அடியாக இருக்கிறது. நீதி கேட்கும் பெண்ணில் இருந்து மழைதரும் பெண்ணாக அவள் இங்கு ஆலமர்ந்த பிறகும் அவளுடைய கதைகள் பல்கிப் பெருகியிருக்கின்றன. அது நிகழ்ந்தது உள்ளூர் பண்பாட்டில். அதே வேளை இங்குள்ள கோயில்களில் இருக்கும் கண்ணகையின் கதை கூறல் என்ற சடங்கு தொடர்ந்து சிலப்பதிகாரத்தின் கதையையே மையக் கதையாகக் கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணம், வன்னி ஆகிய நிலங்களில் பயிலப்படும் கண்ணகையின் கதைப்பாடல்களான, சிலம்பு கூறல், கோவலன் கதை, கண்ணகி வழக்குரை ஆகியன சிலப்பதிகாரக் கதையையே சிறு மாற்றங்களுடன் இலக்கிய வடிவங்களாக எழுதி எடுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக அவை ‘கூறல்’ முறைக்குரிய இலக்கிய வடிவங்களாகும்.

காவியம் ஒன்றில் இருந்து உருவாகி வரக்கூடிய பெருங்கதை, பண்பாட்டில் சுவறி, மெல்ல மெல்ல நாட்டார் தெய்வமாக அவளைக் கொண்டு வந்து பேரன்னையாக இருத்தி ‘குளிர்த்தி’ செய்கிறது. அதே வேளை அதன் காவிய வடிவமும் எழுத்தில் நிலைத்திருக்கிறது. காவியமும் நாட்டாரியலும் ஒன்றையொன்று கொண்டு கொடுக்கும் தன்மை காவியங்களுக்கே உரிய பண்புகளில் ஒன்று.

காவியங்கள் சமூகத்தின் கூடான கற்பனையில் இருந்து உருவாகி வருபவை. எழுத்தாளர் ஜெயமோகன் அவை உண்மை நிகழ்வுகளில் இருந்தோ வரலாற்றுச் செய்திகளில் இருந்தோ முளைத்தெழுபவை என்கிறார். உள்ளூர் கதைமரபுகளோ, குலப்பாடல்களோ கொண்டு வந்து சேர்க்கும் கதைகளே காவியங்களின் மூலப் பொருட்களாகவுள்ளன. அதைத் திரட்டி எடுத்து காவியாசிரியன் அதை மறு ஆக்கம் செய்கிறான். வாய்மொழிக் கதைகளுக்கு காவியத் தன்மையை அளிக்கிறான். அவற்றைத் தன்னுடைய சொந்த தரிசனங்களின் மேலே அழகும் விரிவுமாக நிறுத்துகிறான். அக்கதை காவியத்தின் முன்னரும் காவியத்தின் பின்னரும் இருந்து கொண்டிருக்கிறது.

சிலப்பதிகாரத்தில் வரக்கூடிய கண்ணகை என்ற பெண்ணுக்குரிய மூல வடிவம் சங்கப் பாடல்களில் உள்ள ஒன்று. நற்றிணைப் பாடல் ஒன்றில் குறிப்பிடப்படும் ‘ஒரு முலை அரிந்த திருமாவுண்ணி’ என்ற தொன்மம் சிலப்பதிகாரத்தின் கண்ணகியின் முன் வடிவம் என்று கருதப்படுகிறது. மதுரை மருதன் இளநாகனார் என்ற புலவர் பாடிய பாடல்.

“எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும் குருகார் கழனியின்
இதணத் தாங்கண் ஏதி லாளன் கவலை கவற்ற
ஒருமுலை அறுத்த திருமாவுண்ணிக் கேட்டோ ரனையார்
ஆயினும் வேட்டோ ரல்லது பிறரின் னாரே”

திருமாவுண்ணி தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக தன் முலையை அறுத்தவள்’ என்பது தொன்மம். சிலப்பதிகாரத்தில் தன் இடது முலையை எறிந்து கண்ணகை மதுரையை எரித்தாள் என்ற கதை திருமாவுண்ணியில் இருந்து வந்திருக்கலாம் என்பது அறிஞர்களின் எண்ணம்.

நாட்டார் வழக்குகள், ஐதீகங்கள், உள்ளூர் கதைகள், நம்பிக்கைகள் போன்றன காவியத்திற்குள் வருவது என்பது அக்காவியம் எழுதப்பட்ட காலத்தில் குறித்த சமூகம் எப்படியான பண்பாட்டு உச்சத்தை அடைந்தது என்பதற்கான குறிகாட்டிகளில் ஒன்று. காவியம் பல்வேறு பிரயாகைகள் சேர்ந்து பெருநதியென ஆகின்ற நிகழ்வு. காவியங்களை உருவாக்கக் கூடிய அறிவியக்கம் ஒன்றை நூற்றாண்டுகளாகக் கட்டி எழுப்பி அச்சமூக தன்னுடைய நாகரீக உச்சம் ஒன்றைக் காணும் போது அது நிகழ்கிறது. அறிவியக்கத்தின் உச்சம் என்பது தத்துவங்களும் அவ் விவாதங்களின் பயனாகத் காவிய கர்த்தன் திரட்டி எடுக்கும் தரிசனங்களுமாகும். அவற்றின் ஆரம்ப வடிவங்களின் சிதறிய பகுதிகளாக உள்ளூர் கதைகள், குலப்பாடல்கள் பயின்று வந்து காவியத்தில் அமர்ந்து பெரிய வடிவத்தையும் புதிய பொருளையும் ஆழத்தையும் பெறுகின்றன.

குறித்த சமூகமொன்றில் பெருங்காவியம் ஒன்று நிகழ்ந்து விட்டால் அக்காவியம் தன்னையே அச்சமூகத்தின் பண்பாடாக மெல்ல மெல்ல மாற்றத் தொடங்குகிறது. அது நெறிகளை வகுத்தளிக்கிறது. தன்னை இலட்சிய வடிவமாக, தெய்வங்களுக்கு இணையாக நிறுத்திக் கொள்கிறது. அதில் இருந்து திரும்பவும் கதைகளும், பாடல்களும் முளைக்கின்றன. புதிய விதைகள் விழுந்து பரவிச் செல்கின்றன. குறிப்பாக காவியங்களில் இருந்து கதைகள் இறங்கி திரும்பவும் நாட்டார் மரபிற்கு வருகின்றன. தமிழில் முதல் காப்பியமான சிலப்பதிகாரமும், பெருங்காப்பியமான கம்பராமாயணம் அத்தகையவை. இன்றைக்கு தமிழ்ப்பண்பாடு என்று சொல்லப்படுவதில் பெரும்பங்கு இக்காவியங்களினால் திரட்டி அளிக்கப்பட்டவற்றைன் இன்றைய வடிவங்களே.

இன்றைக்கு இலங்கையில் சொல்லப்படும் கண்ணகிக்கான உள்ளூர் கதைகள் சிலப்பதிகாரத்திற்குக் கொஞ்சமும் சம்பந்தப்படாதவை, ஆனால் சிலப்பதிகாரம் இல்லாவிட்டால் அவை இங்கே நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. அதைப்போல் கம்பராமாயணம் தமிழ்ப் பண்பாட்டின் உள்ளூர்க் கதைகளை, நம்பிக்கைகளை எடுத்துக் கொண்டது. அவற்றைத் தன்னுடைய தரிசனத்திற்காக மறுவரையறை செய்தது. அதே வேளை அதன் மூலக்கதை வடிவத்திலோ, காவியத்திலோ இல்லாத எத்தனை நூறு கதைகளை அது உருவாக்கியிருக்கிறது. இலங்கையை எடுத்துக் கொண்டால் இங்கு இராமனை விட அனுமனே பெரிய தெய்வமாக அமர்ந்தார். எங்கே பெருங்காலடிகளின் வடிவங்கள் தென்பட்டாலும் அது அவருடைய காலடி என்றே கருதப்பட்ட கதைகள் ஏராளமிருக்கின்றன. மன்னாரில் தள்ளாடி என்ற ஊர் இருக்கிறது. இராம லட்சுமணர்களைக் காப்பதற்கு சஞ்சீவி மலையைப் பெயர்த்துக் கொண்டு பறந்த அனுமன் அதன் எடைக்கு அவ்விடத்தில் தள்ளாடியதால் அப்பெயர் வந்தது என்பது தொன்மம். கம்பராமாயணத்தில் மருந்து மலைப்படலத்தில் அனுமன் தள்ளாடியதாக எந்தப் பாடலும் இல்லை, ஆனால் இங்கொரு கதை ஊரின் பெயரில் நின்றிருக்கிறது. கம்பரின் காவியத்திற்கும் இதற்கும் நேரடியாக எந்த உறவும் இல்லாவிட்டாலு, இவை எல்லாற்றினதும் ஊற்று முகம் கம்பராமாயணமே. நாட்டார் வழக்கில் இருந்து காவியங்களுக்கும், காவியத்தில் இருந்து உள்ளூர் பண்பாட்டிற்கும் கதைகள் பயணித்துக் கொண்டே இருக்கின்றன.

அன்றைக்குத் திருவிழாவிற்குள் நுழைந்து நந்திக்கடலின் முன்னால் கண்ணகையின் புதுக்கோபுரத்தின் கீழே நின்றிருந்தேன். இவை எல்லாவற்றையும் கதைகள்தானே நிகழ்த்துகின்றன என்று சட்டென்று தோன்றியது. ஏதோவொரு வகையில் நாம் காவியங்களினுள் தான் வாழ்கிறோமா? கால்கள் கூச மணல் என்னில் ஏறும் விதிர்ப்பு எழுந்தது. காவடிகள் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. கற்பூரச் சட்டிகள் எரிந்து காற்றை நிறைத்திருந்தன. எங்கும் மனிதத் தலைகள். காவடியில் இருந்து முள்ளுக் கழற்றிய உடல்கள் சில வேளை கலை வந்தது போல் நடுங்கித் துடித்தன. கோவிலின் உள்ளே சென்றேன். வெகு நாள் கழித்து அங்கே வந்திருந்தேன். கோபுரம் உட்பிரகாரம் என்று எல்லாம் புதிதாகக் கட்டப்பட்டிருந்தன. கோவிலில் பொங்கலிடப்படும் மூதன்னையின் சிலைக்கு முன்னால் போய் நின்றிருந்தேன். குளிர்ந்து அமர்ந்திருந்தாள். நிச்சலனமான முகம். அவளில் கண்ணகையும் இல்லை திருமாவுண்ணியும் இல்லை. அவளில் அங்கு நம்முடைய மூதன்னை ஒருத்தி அமர்ந்திருக்கிறாள். மொழி தோன்றிய போது முதலில் சொல்லப்பட்ட கதைகளில் வாழ்ந்த பெண். பழையோள். அவள்தான் காவியங்களிலும் நிகழ்ந்தவள். பின்னர் அவள்தான் மாடோட்டும் சிறுவர்களிடம் தலையை விரித்துப் பேன் பாரடா மோனே; என்று சொல்லி விட்டு அங்கமர்ந்து ஆறியவள். அன்றைக்கு அப்பெரிய சனச்சந்தடிக்கு நடுவில் ஒற்றைச் சொல்லுமற்று ஆலமர்ந்திருந்தாள். வெளியே காவடியால் இறங்கிய பெண்ணின் உறுமல் பெரிதாகக் கேட்டுக்கொண்டிருந்தது. அவளும் அங்குதான் வந்து கொண்டிருந்தாள்.

காவிய வாசிப்பு 01

காவிய வாசிப்பு 02

காவிய வாசிப்பு 03

காவிய வாசிப்பு 04

காவிய வாசிப்பு 05

பேன் பார்க்கச் சொல்லும் பெண் | காவிய வாசிப்பு 06

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here