நான் யாருடைய உப்பு ?

சில நாட்களுக்கு முன்னர் முக நூலில் பாலியற் சுரண்டல்  குற்றச்சாட்டுகளை  நண்பர் மதுரன் என் மீது  வைத்திருந்தார்.  பல வருடங்களுக்கு முன்பு என்னுடன்  காதலில் இருந்த பெண்ணோடு இருக்கும் போது நான் வேறு பெண்களுடன் பேசிவந்ததாகவும் நண்பர் கிரிசாந் அதைக் கண்டித்ததாகவும்   குறிப்பிட்டு மேற்படி குற்றச்சாட்டு முகநூலில் வைக்கப்பட்டது.  அதன் பின்னரும் பல பெண்களை சுரண்டியதாகவும் பழி சொல்லப்பட்டது.  அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது. இன்று வரைக்கும் எந்த ஆதாரமும்  வெளிப்படுத்தப்படவோ  பாதிக்கப்பட்டவர்கள் என்று யாரையும் அல்லது எத்தகைய பாதிப்பை நிகழ்த்தினேன் என்றோ சொல்லவில்லை. நான் ஒரு பாலியல் குற்றவாளி என்ற பிம்பமே உருப்பெருக்கி அளிக்கப்பட்டிருக்கிறது.

கிரிசாந் கண்டித்ததாக குறிப்பிட்ட பிரச்சினை உண்மையானது. நான் அவ்வாறான தவறுகளை முதிராத வயதில் செய்திருக்கிறேன்.  அதிலிருந்து நான் மீண்டு வந்து விட்டேன். அதற்குப் பிறகு பெண்களை நான் சுரண்டுவதாகச் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை. செவி வழி கதைகளாலும் ஊகங்களாலும் இட்டுக்கட்டப்பட்டவை.  அக்குற்றச்சாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன். அவ்வாறு யாரும் பாதிக்கப்பட்டிருந்தால் அவற்றைத் தாராளமாக ஆதாரத்தோடு முறையாகப் பொறுப்புணர்வோடு வெளிப்படுத்துங்கள். நான் எனது தரப்பை முன்வைப்பேன். ஒருவருடைய கடந்த காலத்திற்கு கற்பிக்கப்படும் உள்நோக்கமுள்ள ஊகங்களால் அவர் மேல் பழிச்சொல்லை நிறுவ முடியும் என்ற  சமூக வலைத்தளங்களுக்கு இருக்கும் வெளி  மிகுந்த ஆபத்தானது. கடந்த பத்து வருடங்களாக பொது வெளியில் செயற்படும் எழுத்தாளனாக  மனதினாலும் வாழ்க்கை முறையினாலும் நானதைத் தாங்கி விடுவேன். ஆனால் இவ்வாறன சமூக வலைத்தளங்களில்  நஞ்சூறிய நாவையும் கோரைப்பற்களை எளிய மனிதர்கள் எவ்வாறு எதிர்கொள்வார்கள்?

கடந்த நாட்களில் என்மீது வைக்கப்பட்ட இப்பழிச்சொற்களால் என்னைச் சார்ந்தவர்கள்  உளரீதியாக பாதிப்படைந்துள்ளனர். அதுமட்டுமே என்னைக் காயப்படுத்தியது.  தயங்கச் செய்தது. முகநூல் ஒரு கட்டுப்பாடற்ற வெளி.  யாரும் யாரையும் என்னவும் சொல்லலாம் என்பதாக திறந்து விடப்பட்டுள்ள  பொய்க்களரி.    பாதிக்கப்பட்டவருக்கு நீதி கேட்டலும் பொறுப்பு வாய்ந்தது. நிஜவுலகில் செய்யப்பட வேண்டியது.  ஏனென்றால் ஒருவர் மீது சேறடிக்கப்பட்டதும் ,நச நச வென்று சேரும் இந்த முகநூல் கும்பல்  கேளிக்கைக்கும், வேடிக்கைக்குமாக கூடுவது.  ஒருவரை நீதி முன் நிறுத்துவது என்பதும் ஒருவருக்கு நீதியைப் பெற்றுக்கொடுத்தல் என்பதும் இருவருக்கும் மீட்சியைத் தருவதற்காகவே அன்றி ஒருவரைக் கொன்றுவிடுவதல்ல.  மனித உண்மைகளை காதுகளாலும் கண்களாலும் மட்டும் புரிந்துகொள்ள முயற்சிப்பது பொய்க்கும் சமானமே.  வெறுப்புடன் நீதிகேட்கப்போவது எந்த விதத்திலும் பயன் தராது.

நாம் குற்றமொன்றைச் சொல்லும் போது அதை ஏன் சொல்கிறோம்? அது எங்கே இதை இழுத்துச்செல்லும் எங்கிருந்து எல்லாம் காத்திருந்த கழுகுகள் வந்து பிணம் தின்னக் குவியும் என்று நாம் சிந்திப்பதே இல்லை. நாம்  பாதிக்கப்பட்டவரோடு மட்டும் நிற்கப்போகிறோமா , குற்றம் சொல்பவரையும் மீட்கப்போகிறோமா என்ற கேள்வியே நம்மிடம் நாமே கேட்டுக்கொள்ள வேண்டியது. அதை நேர்மையாக நம்மிடம் நாம் கேட்கும் போதே நமக்குள்  வெளிச்சம் சுடரிடத் தொடங்கிவிடும்.  இன்றைக்கு இந்தப் பிரச்சினை அசல் வெளியில் கையாளப்பட்டிருந்தால் பொறுப்புடன் தொடங்கப்பட்டிருந்தால் கல்லெறி கும்பல் என்னைச் சார்ந்தவர்களை  இவ்வளவு சங்கடப்படுத்தியோ மன உளச்சலுக்குள்ளாக்கியோ இராது.  அவர்களுக்கு யார் நீதியைத் தருவது? உங்களுடைய நெஞ்சைக் கேட்டுக்கொள்ளுங்கள், உங்களுக்குள் இருப்பது நீதி உணர்வா வெறுப்பா என்று. எழுத்தாளனை மட்டும் அவனுடைய  இறந்த காலத்திலிருந்து  சம்பவங்களை எடுத்து வந்து ‘அவன் அப்படித்தான் இருப்பான்’ என்ற ஊகங்களைப் பரப்பிக்கொண்டு   தாக்கிவிடலாம். துடைத்தெறிந்துவிடலாம்.   நாமறிந்த மற்றவர்களை , கண்கூடாக அறிந்த அநீதியைக் கண்டுகொள்ளத்தேவையில்லை.  அவர்கள் பாவம் சாதாரணமானவர்கள் என்று விட்டுவிடுவோம் என்பது அடிப்படையிலேயே தவறான அணுகுமுறை.

பிரச்சினை எழுந்த நாட்களில் இருந்து,  உண்மையில் இத்தனை நாட்களும் எனக்குள் எல்லோர் மீதும் எழும் வெறுப்பினோடும் கோபத்தோடும் தான் போராடிக் கொண்டிருந்தேன்.   சிறுவயது முதல் உணர்ச்சிவசப்பட்டு அலைக்கழியும் என்னுடைய சொந்த நரகத்தோடே  நான் இந்த வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு எழுத்தாளனாக நான் முதலில் தேடுவது என்னுடைய மீட்சியையன்றி வேறில்லை.  நீதான் உன்னுடைய பாவமும் நீதான் உன்னுடைய கழிப்பும் என்று  நகுலாத்தையில் எழுதியிருப்பேன். அது எனக்கு நானே எழுதிக்கொண்டதுதான்.

மேலும், எனக்கொரு அசல் வாழ்க்கை இருக்கிறது  எனக்கொரு சுற்றமிருக்கிறது.  அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கிறேன்.அதை எந்தச் சேற்றடிப்புக்கும் அஞ்சி  விட்டுக்கொடுக்கமாட்டேன். . சமூக செயற்பாடுகளில் இருந்து எப்பொழுதோ வெளியேறி விட்டேன்.  இலக்கியம் என்னுடைய  சொந்தப்பணி. என்னுடைய மீட்சிக்கான வழி.   நான் யாரையும் வெறுக்க விரும்புவதில்லை.  வேகமாக மறந்து விடுவேன் அவ்வளவுதான்.

வெறுப்பென்பது பெருகும் உப்புப்போன்றது என்று எங்கோ வாசித்திருக்கிறேன். அது முதலில் அழிப்பது  தானிருக்கும் பாத்திரத்தையும் பண்டத்தையும் தான். நான் யாருடைய உப்பாகவும் இருக்க விரும்பவில்லை.

ஒரு செயற்பாட்டாளராகவோ எழுத்தாளராகவோ பாலியல் சுரண்டல்களில் ஈடுபட விசேட உரிமையோ அதிகாரமோ எனக்கு இல்லை. ஏன் யாருக்குமே இல்லை என்று தான் நினைக்கிறேன். இப்பிரச்சினையை பொதுவெளியில் தான் பேசியாக வேண்டும் என்று கருதும் நண்பர்களுடைய நோக்கத்தை நான் தவறாகப் பார்க்கவில்லை. வழிமுறைகள் மற்றும் எல்லாத்தரப்பினதும் உண்மைகள் பற்றியும் நிஜ உலகில் அக்கறையுடன் கேட்டறிந்திருக்கலாம். அது இழுத்து வந்திருக்கும் ஏனைய இழிசொற்களுடன் தான் நான் மிச்சமிருக்கும் காலத்தை வாழ்ந்தாக வேண்டும். பரவாயில்லை நண்பர்களே, உங்களுக்கு உண்டான சங்கடங்களுக்கும் சேர்த்து ஒரு பொதுமன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.

 

 

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’