சமூக வலைத்தளங்கள் எழுத்தாளரை என்ன செய்கின்றன? முதன்மையாக அவை அவருடைய மொழியை அழிக்கின்றன. இலகுவாகவே நல்ல வாசகருக்கு ஒரு எழுத்தாளர் பண்பாட்டில் வாழ்கிறாரா பேஸ்புக்கில் வாழ்கிறாரா என்று அவர் எழுதும் மொழியைச் சந்திக்கும் போது தெரிந்து விடுகிறது.
மொழி நம்மை இலகுவாகச் சூழக் கூடியது. நம் நனவை நோக்கிச் செல்வது. நடத்தை, இயல்பு, சிந்தனை, கற்பனை, கனவு எல்லாவற்றையும் அது தொடுகிறது. சமூக வலைத் தளங்களின் சூழல் அதன் மொழியாக உள்ளெடுக்கப்படும் போது நம்முடைய மொழி சிந்திப்பதற்கு எதுவுமற்றுப் போகிறது. எனென்றால் சமூக வலைத் தளங்களுக்கு அளிப்பது நம்முடைய வாசிப்பிற்கான, பயணங்கள் உரையாடல்கள், எழுத்து என்பவற்றுக்கு உரிய நேரத்தை. சமீபத்தில் ஓர் எழுத்தாளர் ‘நீண்ட நாட்களுக்குப்’ பிறகு நாவல் ஒன்றைப் படித்தேன் என்று பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். கொஞ்சம் கூடக் கூச்சமில்லை.
இன்றைக்கு பெரும்பான்மை தமிழ் எழுத்தாளர்களின் நிலை இதுதான். சமீபத்தில் படித்த சில நாவல்களில், சிறுகதைகளில் இதை அவதானிக்க முடிந்தது. ‘கார் கிரீச்’ என்று வந்து நின்றது என்றும், இரத்தம் சிவப்பாக வெளியேறியது என்றும் எழுதுகிறார்கள். ஒரு காலத்தில் பெரிய நாவல்களை எழுதிய எழுத்தாளர்கள் கூட ஒன்றரைப் பக்கத்தைத் தாண்டி ஒரு அத்தியாயத்தை எழுத முடியாதபடிக்கு ஆகி விட்டார்கள். முப்பது நொடி ‘ரீல்சை’ப் போல நாவலின் அத்தியாயங்கள். நினைவில் தங்கும் படி ஆசைக்கு கூட ஒரு உவமை இல்லை. கற்பனை இல்லை. வெறும் பொதுப் போக்கு அரசியல், மூன்றாம் தர நகைச்சுவைகள். அழகியல் நிகழவே மாட்டேன் என்று அடம்பிடிக்கும் கதைகள். தேய் வழக்குகள் மண்டிய சித்தரிப்புகள். இப்படி ஒரு காலத்தை நவீன இலக்கியம் எதிர் கொண்டிருக்கிறது. வணிக எழுத்தாளர்களை விட தங்களை மலினப்படுத்திக் கொண்ட மொழியைச் சென்றடைந் திருக்கிறார்கள்.
மொழி என்பது நம்முடைய அகம். அதை எழுத்தில் தெளிவாகக் காணலாம். மதிப்பிடலாம். இன்றைக்கு தமிழ்ச்சூழலில் எழுதும் எண்பது சதவீதம் பேரிடம் சமூக வலைத்தளங்களின் மொழி விரவிக் கிடக்கிறது.
சமூக வலைத்தளத்திற்கு என்று ஒரு மொழிச்சூழல் உருவாகி வந்திருக்கிறதா? வந்திருக்கிறது. எல்லாச் சூழலுக்கும் அதற்குரிய மொழி உருவாகி வரும். அது வட்டார மொழியாக மட்டும் அல்ல தனித்த பெருமொழியாகக் கூட விரிந்து நிலைக்கக் கூடியது. புவியியல் அமைப்பு, பிரதேசம், இனம், சாதி என்று எந்த சமூகக் கூறும் தனக்குரிய மொழியை உருவாக்கிக் கொள்ளும்.
நலன்புரி முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு மன்னாரில் இருந்து புத்தளம் போனோம். அம்மாவின் சகோதரிகள் அங்கு இருந்தார்கள். சாதாரண தரப் பரீட்சைகளுக்கு மூன்று மாதங்களே இருந்தது. புத்தளம் சென்மேரிஸ் பள்ளிக் கூடத்தில் நான்கு மாதங்கள் படித்தேன். தமிழ் முஸ்லீம் மாணவர்கள் படிக்கக் கூடிய பள்ளி. நானோ யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் வாழ்ந்தவன். பெரும்பாலும் ஒரே மொழிச்சூழல். ஒரே பண்பாட்டுச் சூழல். அங்கே போன பிறகு என்னுடைய புழங்கு மொழி மாறியது. அம்மா அப்பா பெரிதாக வெளிச் சூழலுடன் பழக மாட்டார்கள். அவர்களுடைய தமிழ் அப்படியே இருந்தது. நானோ தமிழ் முஸ்லீம் நண்பர்களுடன் பழகினேன். உலாத்தினேன். ஆசிரியர்கள்களிடம் பயின்றேன். என்னுடைய தமிழ் ஆசிரியை கூட ஓர் முஸ்லீம் பெண்மணி. அவர்களுடைய பேச்சுத் தமிழ் ஒட்டியது. பேச்சு மொழிக்குரிய இயல்பது. பயன்பாட்டிற்கான புறச்சூழலையும் தேவையையும் புரிந்து கொண்டு மேல் மனம் அம்மொழியை வேகமாகப் பதித்துக் கொள்கிறது. மொழி என்பது ஆழத்தில் பண்பாடும், மேற்பரப்பில் பயன்பாடுமாக இயங்குகிறது. யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ் முழுமையாகவே போய் விட்டது என்று நினைக்கும் படிக்கு நான் புத்தள வாசியாக ஆகி விட்டிருந்தேன். உயர்தரம் படிக்க 2011 இல் யாழ்ப்பாணம் திரும்பினேன். மானிப்பாய் இந்துக் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு என்னுடைய பேச்சுத் தமிழால் ‘புத்தளம்’ என்றே அழைக்கப்பட்டேன். அப்பேச்சுத் தமிழ் அகன்று யாழ்ப்பாண வட்டார வழக்கு நாக்கில் இருக்க நெடுநாளானது.
மொழி அடிப்படையாக இரண்டு பணிகளைச் செய்கிறது, சிந்திக்கிறது, தொடர்புபடுத்துகிறது. அதன் மூலம் சுயத்தை (self) உருவாக்குகிறது.
இன்றைக்கு, சமூக வலைத் தளங்களை ஓர் புழங்கு மொழிச் சூழலாக வரையறுத்துக் கொள்ளும் போது, அதற்கென்று ஒரு மொழி உருவாகி வந்திருக்கிறது. சொற்கள், வழக்குகள் கூட. இது ஓர் நிலத்தில் உருவாகி நிகழும் மொழிகளுக்கு நிகரானதா? கிடையாது. ஏனென்றால் அதற்கு நிலம் கிடையாது. நிலம் என்பதன் நேரடியான பொருளே ‘நிலைத்திருப்பது’ என்பதுதான். அதில் தான் பண்பாடு வேர் விடுகிறது. நிலம் என்பது வெறும் தரையும் தோற்றமும் கிடையாது. அதுதான் நம்முடைய அகம். நனவு மனம். ஆழத்தில் இருக்கும் நனவு மனம்தான் அசலான நாம். நம்முடைய பண்பாடு அதில் தான் நிற்கிறது. பண்பாடு என்பது தொகுப்பான மானுட கூட்டத்திற்கு விரிந்து கிடக்கும் விழுமியங்கள், அறங்கள், தத்துவம், நீதியுணர்ச்சி போன்றவற்றால் ஆனது. அதனிடம் ஓர் ஆழ் பிரக்ஞை உள்ளது. எல்லாவற்றையும் தொடர்பு படுத்தக் கூடிய ஓர் பிரக்ஞை. நான்கு குடும்பங்கள் சேர்ந்து ஓர் இடத்தில் வாழத்தொடங்கினாலே அங்கே மொழியும் பண்பாடும் உருவாகி வந்து விடும். இவ் இயல்பு சமூக வலைத்தளங்களுக்கு கிடையாது. கோடி பேர் புழங்கினாலும் அதற்கு பண்பாடு உருவாகி வருவதில்லை கோவிலுக்கும் கழிவறைக்குமான வித்தியாசம் அது.
சமூக வலைத்தளம் அடிப்படையில் கட்டற்ற வெளி. அங்குள்ள கட்டுப்பாடுகள் யாவுமே முதலாளிகள் தங்களுக்குள் சமரசம் செய்து கொண்டு ஏற்படுத்தி இருப்பவை. அவர்கள் அவற்றை மீறக் கூடிய எல்லா வழிகளையும் தாங்களே உருவாக்கியும் தந்து விடுகிறார்கள். அம்மீறல்கள் இல்லாவிட்டால் முக்கால் பங்கு சமூக வலைத்தள வாசிகள் அங்கே செல்ல மாட்டார்கள். நம்முடைய ஆழத்தில் இருக்கும் ஆதியான விலங்கு இயல்பிற்கு கட்டற்ற தன்மை, வன்முறை என்பனவே ஆதார இயல்பு. அவற்றுக்குரிய தீனி தான் சமூக வலைத்தளங்களில் உள்ளவை எல்லாம். அந்த விலங்கை நம்பித்தான் இத்தளங்கள் இயங்குகின்றன. நம்முடைய நாகரிகமும் பண்பாடும் அவ் விலங்கு இயல்புகளை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்தி உருவானவை.
சமூக வலைத்தளங்கள் ஜனநாயக வெளியாகவும், பண்பாட்டு நிகழ்வாகவும் தம்மை நடிக்கக் கூடியவை. ஆனால் அங்கே அறமோ, நீதியோ, விழுமியங்களோ, இலட்சியங்களோ, தத்துவமோ அவற்றின் ‘ரெண்டிங்குகளை’ விட அற்பமானவை. மதிப்பற்றவை. சமூக வலைத்தளங்கள் உருவாகி வந்து கிட்டத்தட்ட இருபது வருடங்களாகின்றது. இன்று வரைக்கும் அங்கு சமூகமே கிடையாது. வெறும் வலைகள் மட்டும் தான். மாபெரும் சிலந்திகளின் முன் கோடிக்கணக்கான மானுட இரைகள் தொங்கிக் கொண்டிருக்கும் வலைகள்.
எழுத்தாளரோ, சாமானியரோ அங்கே செய்யக் கூடியது பொழுது போக்கும் விளம்பரமும் மட்டும் தான். செய்தி, தகவல், விவாதம் எது நடந்தாலும் அங்கே வெறும் நுகர்வுதான். அங்குள்ளது வணிகத்தின் மொழி என்பதை விட பொழுது போக்கின் மொழி என்பதே பொருந்தும். இந்த மொழியை விற்பதுதான் சமூக வலைத்தளங்களின் வணிகம். பொழுதைப் போக்குவது. எவ்வளவு அபத்தமான சொல். போக்குவதற்கு தரப்பட்டதா இந்த வாழ்க்கை? ஒன்றை மனம் கொள்ளுங்கள் சமூக வலைத்தளங்களில் நீங்கள் வாசகரோ எழுத்தாளரோ கிடையாது. நுகர்வோர் மட்டும்தான்.
எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு முறை எழுத்தாளர்கள் சமூக வலைத்தளங்களுக்குப் போவது தற்கொலை என்றார். அங்குள்ள வம்படி விவாதங்களுக்குள் போவதைச் சுட்டி அதைச் சொன்னார். எழுத்தாளரின் மொழியை அழித்துக் கொள்வதும் தற்கொலைதான். வெறுமனே தங்களை முன் நிறுத்தவோ, புகழ் நலன்களுக்காகவோ அன்றி சொந்த மீட்சிக்கும் நிறைவுக்கும் எழுதுபவர் தொடர்பாடல், அறிவிப்புகள் தவிர எந்த வகையிலும் சமூக வலைத்தளங்களோடு ஒன்றக் கூடாது. அது வெறும் சுவரொட்டிகள் ஒட்டும் சுவர் மட்டுமே என்ற தெளிவும் விழிப்பும் இருக்க வேண்டும். முற்றாக வெளியேறுங்கள் என்றுதான் இப்பொழுது சொல்வேன். சக்கரை நோயாளிகளுக்கு இனிப்பைத் தொடாதீர்கள் என்பது தானே அடிப்படையான வைத்தியம். இன்றைக்கு வளர்ந்த நாடுகள் சமூக வலைத்தளங்கள், கைபேசிகளுக்கு எல்லாம் அடிமையாகி இருப்பவர்களுக்கான மீட்பு நிலையங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இங்கும் விரைவில் வந்து விடும் என்றுதான் தோன்றுகிறது. ஒரு சக தமிழ் எழுத்தாளரை அங்கே கற்பனை கூடச் செய்து பார்க்க முடியவில்லை. கடும் கல்நெஞ்சுக்காரன் தான், என்றாலும் இப்படி ஒன்றைத் தாங்குவேனா தெரியவில்லை.


