yathaadmin/ April 14, 2019/ கதை/ 0 comments

 

 

வெரோனிக்கு தண்டனைக்காலத்தின் இரண்டாவது மாதம். மெடிக்ஸ் பேசில் சிலநாட்களாக அவளுடைய முகம் அடிக்கடி தட்டுப்பட்டது. புதிதாக வந்திருக்க வேண்டும். அவள் பார்வையிலும் உடலசைவுகளிலும் சரியான துடுக்குத்தனம்.”சரியான வாய்” என்று பரவலாக அவளைப்பற்றி அபிப்பிராயம்.  ஆனாலும் டக்கென்று ஒட்டிவிடுபவள். நான்கைந்து நாட்களாக அவளுடயை கண்கள் தன்னைக்கவனிப்பதை உள்ளுணர்ந்தாள் வெரோனிக்கா. எல்லோரிடமும் இருந்து ஒதுங்கியே இருக்க நினைத்திருந்தாள். யாரிடமும் பெரிதாகப்பேச்சுக்கொடுப்பதில்லை. கேட்ட கேள்விக்குமட்டும் பதில்.  யாரும் எதுவும் கேட்பதில்லை.பொறுப்பாளர் மட்டும் அழைத்து வேலை சொல்லுவாள். அல்லது அறிக்கை பற்றி ஏதாவது கேட்பாள். மற்றபடி மெடிக்ஸ் எப்போதும் வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும். மன்னார் களமுனைகள் சண்டை நடந்துகொண்டிருப்பதால் தட்சிணாமருதமடுவில் இருந்த மெடிக்ஸ் களமுனையின் பிரதான சிகிற்சையிடமாக மாறியிருந்தது. வெரோனிக்கா ஒருதாதியைப்போல வேலை செய்துகொண்டிருந்தாள். தன்னை தனிமைப்படுத்துவதிலேயே குறியாகவிருந்தாள். செந்தழல் மணலாறில் வீரச்சாவடைந்த பிறகு யாருடனும் ஒட்டுவதில்லை என்ற நினைப்பிலிருந்தாள். மணலாறு இவளுடன் பயிற்சிபெற்றவர்களில் பாதிப்பேரைக்கொண்டு போய்விட்டது. முன்னேறிய இராணுவ அணிகளை பழைய நிலமைக்கு திருப்ப அன்றைக்கு பதினைந்து பேரைக்கொடுக்க வேண்டியிருந்தது. போதாத குறைக்கு தண்டனை வேறு வந்து சேர்ந்தது. செந்தழலின் நினைப்பு அடிக்கடி அடிநெஞ்சை பிசைந்து அழவிடும். இனியும் இதுதான் நடக்கப்போகிறது. எல்லாத்திசைகளிலும் யுத்தம் சதிரைத்தொடங்கியாயிற்று, தண்டனை முடிந்ததும் மீண்டும் படையணிக்குத்திரும்ப வேண்டும். அங்கேயும் இனி புதுமுகங்களே அதிகம் தட்டுப்படும். யாருடனும் ஒட்டுவதில்லை. தண்டனை முடிந்ததும் தாமரையை ஒருமுறை போய்ப்பார்த்துவிட்டு படையணிக்கு திரும்பவேண்டும். மற்றபடி வெரோனிக்கா தனித்திருப்பதை நின்மதியாக உணர்ந்தாள். அல்லது அதுவொரு பெருத்த நின்மதி என்று தனக்குச் சொல்லிக்கொடுத்து மனதை நம்பச்செய்திருந்தாள்.

ஆனால் அந்த துடுக்குப்பெண்ணின் கண்கள் சீண்டிக்கொண்டேயிருந்தன. சிரித்தாள். “பேரென்னப்பா?” “சாப்பிட்டாச்சோ?” “எந்த இடம்?”சோதியா படையணியோ மாலதியோ ? என்னத்துக்கு பணிஸ்மெண்ட்?” “கதைக்க மாட்டீரோ?” நேரம் தவறாமல் வந்து நின்றாள்.

”நீர் வேதக்காரப் பிள்ளையோ?” இது யாரிடமும் விசாரித்து அறிந்திருக்க கூடியதல்ல.மெடிக்சில் எந்தப்பிராத்தனையும் கூட அவள் செய்திருக்கவில்லை.  பொறுப்பாளருக்கு கூட இயக்கப்பேரும் படையணியும் குற்றமும் தண்டனைக்காலமும், தகட்டு இலக்கமும்தான் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது கிறிஸ்தவ பெண் என்பதற்குரிய எந்த ருசுவையும் அங்கே வெரோனிக்கா வெளிப்படுத்தினாளில்லை.பொட்டு வேறு வைத்துக்கொள்கிறாள். தாமரை பழக்கி விட்டதில் அதுவுமொரு முக்கிய பழக்கம். எப்போதும் ஒட்டு பொட்டு பக்கற் ஒன்று வைத்திருப்பாள்.

“என்னெண்டு சொல்லுறீர்?”

“நல்ல முகவெட்டு,  பாத்தால் வேதக்காரப் பிள்ளைபோலத்தான் இருக்கு, மேரி மாதா சிலையைப்போல. நல்ல அழுத்தமான கண்குனிஞ்ச எண்ணை வடியிறமுகம். மெல்லிய கருணை முடிஞ்சு சாதுவா சிரிக்கிற மாதிரியும் இருக்கும், புருவம் சரியான அடர்ந்தி இல்லை.அதுதான் கேட்டன். என்னோடையும் ஒருபிள்ளை படிச்சவள் மேரி அனுசியா எண்டு,உம்மளைப்போலத்தான் இருப்பாள்”

“இல்லை நான் கிறிஸ்ரியன் இல்லை” வெறுமையைக் குரலில் சிக்கனமாகச் சொற்களை வரவழைத்துச்சொன்னாள்.

“பொய் சொல்லாதையும்”

“நான் ஏன் உம்மளிட்ட பொய் சொல்லோணும், வேலை செய்ய விடும்” வெட்டினாள். அவள் புறக்கணிக்கும் வெரோனியின் சொற்களை தன்னுடைய சிரிப்பை அனுப்பி அதனுள் புதைத்து மறைத்தாள். அவள் அதைப்பொருட்படுத்தப்போவதில்லை எனபதை முன்பே தீர்மானித்திருந்தாள்.

“அப்ப நீர் சைவமோ?”

“ஓம்” வெரோனிக்காவால் அவளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கும் மனதினை பிடித்துக்கட்ட முடியவில்லை. அவளிடம் ஏதோவிருந்தது. சொற்களை இவளனுமதி இல்லாமலே பறித்துக்கொள்ளக்கூடிய ஒன்று.

“அப்ப ஒரு தேவாரம் படிச்சுக்காட்டும்”

“உமக்கென்ன விசரோ ஏன் இப்பிடி எல்லாம் கேக்கிறீர் பேசாமல் போம், இல்லையெண்டா பொறுப்பாளரிட்ட சொல்லுவன்.”

“நீர் ஒரு தேவாரம் படிச்சுக்காட்டும், பிறகு உம்மடை பக்கம் கால் கை கூடவைக்க மாட்டன்.” தான் நினைப்பதைப்பறித்துக்கொள்ளும் ஆற்றல் மார்கழிக்கு இருக்கத்தான் செய்தது. மெடிக்ஸில் அவள் இப்போது எல்லோருக்கும் பிரியமானவளாகிவிட்டாள். தன்னைச்சுற்றி எல்லோரையும் தெரிந்து வைத்துக்கொள்ளவும் அவர்களின் அன்றாடத்தில் சிரத்தையுடன் கலந்துகொள்ளவும் செய்தாள். வெரோனிக்கு அவளொரு அருகில் அலையும் ஆபத்தான் சுழல். மார்கழி தன்னை கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக ஏதாவது செய்து விடவேண்டும் என்று தோன்றியது. தேவாரத்தைப் படித்து துலைப்போம் என்று தோன்றியது. கோளறு பதிகத்தை தெரிவு செய்தாள். உள்ளூர பழைய நினைவுகள் நீர்பட்ட வேர்களைப்போல நுண்ணியளவில் தளைத்து எழத்தொடங்கின. “பியந்தைக் காந்தாரம்” நாவில் இசையை நெடுநாட்கள் கழித்து கொண்டுவந்து இருத்தியது. வேர்கள் வேகமாகத்தளைக்கத்தொடங்கின. உண்மையில் தான் யாருடனும் கதைக்கவோ அழவோ பாடவோ விரும்பிக்கொண்டிருக்கிறேனா? என்று கேட்டுக்கொண்டாள். அழ்மனம் தனக்கு அறிவிக்காமல் இன்னும் எத்தனை தீர்மானங்களில் இருக்கிறது என்று தெரியாமல் குழம்பினாள். உண்மையில் தான் பாடவிரும்பவில்லை என்று நினைத்துக்கொண்டுதான் தொடங்கினாள். அவள் பாடி நெடுநாட்களாகிவிட்டது.

”வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.”

”நல்ல குரலப்பனே உமக்கு, சங்கீதமோ எடுத்தனீர்?”

“இப்ப நம்புறீர்தானே? போம் பேசாமல்”

“சரி நம்புறன், போறன்” சிரித்துக்கொண்டே பின்னலில் சொருகியிருந்த மெல்லிய கிளிப்புக்களை கழற்றி கேசத்தை அவிழ்த்துக்கொண்டே எழுந்து போனாள். ஆந்த சிரிப்பும் பின்னலை அவிழ்த்ததும் இணைந்து ஒரே கணத்தில் நிகழ்ந்து வெரோனிக்காவுக்குள் இறங்கி வெளியேறிச்சென்றன.

இவளிடம் கவனமாகவிருக்கவேண்டும். மனத்தின் பிறிதொரு இரகசியமான பகுதியில் இருந்து தகவல் சொல்லப்பட்டது.

அன்றைக்கு இரவு அறிக்கையை கொப்பியை எடுத்துக்கொண்டு  மரக்குற்றிஒன்றில் இருந்து எழுதத்தொடங்கும் போது மீண்டும் அவள் அங்கே வந்தாள். “நச்செள்ளை பொறுப்பாளர் வரட்டாம்”  அவளை சட்டை செய்யாத பாவனையில் எழுந்து நடந்து போனாள்.

“பிள்ளை நீரும் மார்கழியும் காலமை வெள்ளண காட்டுக்க போய் காவுகட்டிலுக்கு கொட்டனுகள் வெட்டிக்கொண்டு வரோண்ணும். நூறு தடி எண்டாலும் வேணும். மற்றப்பிள்ளையள் உரப்பை தைப்பினம். காலமை வெளிக்கிடுங்கோ களப்பகுதியளுக்கு கொண்டு போய் குடுக்கோணும்.  வெரோனிக்கா தலையாட்டிவிட்டு வந்தாள். அவள் பின்னாலேயே தொற்றிக்கொண்டு வந்தாள். “நான் வேளைக்கு எழும்பிடுவன் வந்து எழுப்பட்டோ?”

“இல்லை வேண்டாம் நான் நாலுமணிக்கே எழும்புவன்”

“அப்பச்சரி”

போய் விட்டாள்.

மன்னார் களமுனைகளில் சண்டை உக்கிரமாகிக்கொண்டுவந்தது. ராணுவ நிலைகள் முன்னேறிக்கொண்டே வந்தன. காயப்பட்ட போராளிகளை தூக்கிவருவதற்குரிய காவுகட்டில்கள் நிறையத்தேவைப்பட்டது. இரண்டு கட்டைகளை வெட்டி உரப்பையினுள்ளோ சாக்கினுள்ளோ இருமருங்கிலும் இணைத்து தைக்க வேண்டும். காவு கட்டிலுக்கு பாரமில்லாத அதேனேரம் வலிமையான நேரான கொட்டன்கள் தேவைப்படும்.வெரோனிக்கா கோல்சரையும் துவக்கையும் கட்டிக்கொண்டாள். தண்ணீர் போத்தல்களை நிரப்பிக்கொண்டாள். இரண்டு கீறீம்கிறாக்கர்கள் மதிய உணவுக்கேன எடுத்துக்கொண்டாள். அவள் காலையில் சாப்பிடுவதில்லை. பொறுப்பாளர் இருவரையும் அழைத்து காட்டுக்குள் ஒரு கண்வைக்கச்சொன்னார் மல்லாவிக்கு சமீபமாக நான்கு ஆழ ஊடுருவும் ராணுவ அணிகளை சுற்றி வளைத்து முடித்திருப்பதாக செய்திவந்திருந்தது, காட்டுக்குள் இருக்கும் அணிகளும் முகாம்களும் அவதானமாக இருக்கச்சொல்லி அறிவுறுத்தியிருந்ததைச்சொன்னாள்.இருவரும் தலையாட்டி விட்டு புறப்பட்டனர். ஒரு காட்டுக்கத்தியும், சாதாரண கொடுவா கத்தியொன்றும் தரப்பட்டது. வெரோனிக்கா பேஸை விட்டு இறங்கி முன்னால் நடந்து போனாள். மார்கழி விசிலடித்துக்கொண்டே தொடர்ந்து வந்தாள். அவளிடம் ஒரு வோக்கியை பொறுப்பாளர் கொடுத்திருந்தா. அது அடிக்கடி வெட்டி வெட்டி இரைந்தது. அவளுடைய விசில் சத்தம் இவளைச்சீண்டப்போகின்றாள் என்பதற்கான முத்தாய்பான அறிவிப்பு போல்தானிருந்தது.”தேவை இல்லாம இவளைக்கண்டு பயப்பிடாதை, பதட்டப்படாதை” உள்ளுணர்வு அருட்டிக்கொண்டிருந்தது. நெஞ்சின் வெறும் சொற்கள் எப்போதும் வலியதாய் இருப்பதில்லை.

 கத்தியின் கூரை தடவிப்பார்த்துக்கொண்டே நடந்தாள். சற்று மழுங்கியிருந்தது. எங்காவது கல் தென்படுகிறதா என்று பார்த்துக்கொண்டே மரங்களிடையே கொடிகளைகளை விலக்கிக்கொண்டும், வெட்டிச்சாய்த்துக்கொண்டும் நடந்து சென்றாள்.

“இஞ்ச இப்பிடி உம்மெண்டு வந்தால் வேலை செய்யேல்லாது”

”கதைச்சுக்கொண்டு நிண்டால்தான் வேலை செய்யேலாது, கத்தி கூர் காணாது கல்லு ஏதாவது கிடந்தால் பாரும் தீட்ட.”

“ம்ஹ்ம் நான் இரவே கருங்கல் இடிச்சு கொண்டு வந்திட்டன், கத்தி கல்லிலை தீட்டுறேல்ல மரத்திலை தீட்டுறது, எங்கையாவது காஞ்ச மரமிருந்தால் பாக்கோணும்” பொலித்தீன் பை ஒன்றைக்காட்டினாள், கறுப்பாக- மினுமினுப்பாக கருங்கல் துகள்கள். அவளே கட்டையொன்றைக்கண்டு பிடித்து கத்திகளைத்தீட்டினாள். ஏழுமணிக்கு மேலே மரங்களைத்தெரிவு செய்து ஏறி கட்டைகளை வெட்டிச்சாய்க்கத்தொடங்கினார்கள். தூரத்தில் ஷெல் சத்தங்கள் கேட்டன.ஆட்லறிகள். பிறகு மோட்டார்கள். கீழே கழட்டி வைத்திருந்த கோல்சர்களிலும் துவக்குகளைலும் கண்வைத்துக்கொண்டே வெட்டினார்கள். காட்டின் நிழற்செறிவுக்குள் பரவியிருந்த வெக்கை இருவரையும் வேகமாகக் களைக்கச்செய்துகொண்டிருந்தது. மார்கழி ஆச்சரியமாக மெளனமாய் வேலை செய்தாள். கைக்கும் கத்திக்கும் அசாதாரண பிணைப்பையும் லாவகத்தையும் கொண்டிருந்தாள்.காறில் எழுந்து கத்தி மரக்கொப்புகளை துண்டு போட்டு, சிராய்த்து கொப்பிலிருந்து கொட்டன்ளை வெட்டி விழுத்திக்கொண்டிருந்தது வெரோனி ஒரு கொட்டனை வெட்டி முடிப்பதற்கும் அவள் மூன்று கொட்டன் என்ற கணக்கில் வேலை நடந்தது.

“நீர் எந்த இடம்?”  ஒரு அளவுக்கு மேலே அந்த கனதியை வெரோனியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவள் பதிலுக்கு ஏதும் சீண்டலாகவோ குத்தலாகவோ பதில் சொல்வாள் என்று எதிர்பார்த்துக்கொண்டேதான் கேட்டாள். ஆனால் மார்கழி அவள் பேச்சுக்கொடுக்கட்டும் என்று காத்திருந்தவள் போல ஆர்வமாக பதில் சொன்னாள்.

“நான் முத்தையன் கட்டு”

“எப்ப பிடிச்சவை? எந்தப்படையணி இப்ப?”

மார்கழி பெரிதாகச்சிரித்தாள் “என்ன பிடிச்சவையோ? நான் இணைஞ்சனான்”

“எப்ப?”

“இப்பத்தான் கிட்டடில, ஒரு பத்துவருசமிருக்கும்”

“பத்துவருசமோ? உமக்கு எத்தினை வயசு ?”

“இருபத்தாறு”

“பொய் சொல்லுறீர்?”

“இதென்னப்பனே, பாத்தால் தெரியேல்லையோ”

“அப்பிடி இல்லை இயக்கத்திலை சேர்ந்து பத்துவருசமெண்டால் எத்தின வயசிலை சேர்ந்தனீர்?”

“பதினைஞ்சு, பள்ளிக்கூடத்திலை பிரச்சாரத்துக்கு வந்த அக்காமாரோட ஏறிட்டன்” சிரித்தாள். “உம்மைப்பிடிச்சதோ?”

“ம்ம்”

மாலை வரை கதையளந்தார்கள். வெரோனிக்கா இறுக்கத்திலிருந்து தளர்ந்து ஆர்வமாகியிருந்தாள். ஆயினும் சொந்த விடயங்களை பகிர்ந்துகொள்வதில் அவளுக்கு நாட்டமிருக்கவில்லை. சொன்ன பொய்யினை ஒரு இரகசியமாக மாற்றிப்பாதுக்காக்க விரும்பினாள். அந்தப்பொய்யின் பின்னால் சொந்த விடயங்களை மறைத்துவைத்தாள். சொந்தப்பேர் “தாமரை” என்று சொல்லி வைத்தாள். இயக்கத்திற்கு பிடிக்கப்பட்ட பிறகு உள்ள கதைகளில் அவள் எந்த இரகசியத்தையும் உருவாக்கிக்கொள்ள விரும்பவில்லை. அவற்றைப்பகிர்ந்துகொள்ளவே விரும்பினாள். தண்டனைக்குக் காரணத்தைச் சொல்லத்தொடங்கினாள்.

மணலாறு முன்னணி அரங்கில் பதினைந்து பேர் கொண்ட தன்னுடைய அணிக்கு தலைமை தாங்கிச்சென்றிருந்தாள், அதுவொரு தீடீர் தாக்குதல். எனினும் போராளிகள் இரண்டு பெரிய பட்டாலியன்களை எதிர்கொண்டனர். செந்தழல் கனரக ஆயுதங்களைத்தாங்கியிருந்தாள். நிலையெடுத்திருந்த நிலம் கொஞ்சம் சதுப்பு. வேகமாக காலால் முன்னேற முடியாது. இராணுவம் டாங்கியொன்றை இறக்கி அதனைத்தொடர்ந்து முன்னேறியது.கனரக ஆயுதங்களை வைத்திருப்பவர்களை சதுப்பைக்கடந்து நிலையெடுத்து டாங்கியை முடிக்குமாறு கட்டளை வந்தது. செந்தழல் யோசிக்காமல் தன்னுடைய ஆர்.பி.ஜி ஐ தோளில் ஏற்றிக்கொண்டு பெரிய மரமொன்றின் கீழே நிலையெடுத்திருந்தாள். டாங்கி நகர்ந்து முன்னால் வராமல் தூரத்திலிருந்து சுட்டுமரச்செறிவுகளைச் சாய்த்துக்கொண்டிருந்தது. செந்தழல் தான் மறைந்திருக்கும் இடத்தை டாங்கியோ அதற்கு துணையாக பரவியிருந்த ராணுவத்தின் இலக்கிற்கோ அசமந்தம் காட்டாமல் பொறுமையாக மறைந்திருந்தாள். வெரோனிக்கா கட்டளைகளைக் கொடுத்துக்கொண்டே செந்தழலைத்தேடிக்கொண்டிருந்தாள். வோக்கியில் செந்தழல் செந்தழல் என்று கத்தியும் பதிலில்லை. செந்தழல் டாங்கியில் கண்களை எடுக்கமாலிருந்தாள். ஆர்பிஜியின் தாக்கு தூரத்துக்குள் அது நுழைந்து விட்டால் அதை நொருக்கி விடலாம். அருகில் “லோ” ஒன்றுடன் நிலையெடுத்திருந்த பெயர் தெரியாத ஆண் போராளி ஒருவனுக்கு முன்னால் செல்லும்படி சைகை செய்தாள். ஆர்பிஜி யை விட லோவிற்கு டாங்கியைச் சீர்குலைக்கும் சக்தி அதிகம். அதோடு அது குறித்து தாக்ககூடிய றொக்கட் வகை லோஞ்சரைக்கொண்டிருந்தது.  அவனுக்கு கண்காட்டினாளே ஒழிய அந்த டாங்கியை தான்தான் முடிக்க வேண்டும் என்று நினைத்தாள். அவன் மரங்களுக்குள்ளால் பதுக்கிக்கொண்டு போக இவளும் பதுங்கினாள். டாக்கியும் சரி ராணுவமும் சரி இலக்கில்லாமல் குண்டுகளை பொழிந்துகொண்டிருந்தது. ஷெல் வேறு அடிக்கத்தொடங்கி விட்டார்கள். டாங்கி மெது மெதுவாக முன்னேறினாலும் அது முன்னேறும் ஒவ்வொரு சாணும் போராளிகளுக்கு பேரிழப்பிற்கான சகுனத்தை நெருக்கிக்கொண்டிருப்பது போலத்தான். அந்த லோ தாங்கிய போராளி தோளில் காயப்பட்டான். யாரோ ஒரு ராணுவ சிப்பாயின் கலிபர் குண்டு தோள்பட்டைச்சிதைத்து விட்டிருந்தது. துடித்துக்கொண்டிருந்தான். செந்தழல் அவனருகில் போய் அவனை இழுத்து மரமொன்றில் சாத்தி விட்டு ஆர் பிஜியை மீண்டும் முதுகில் கழற்றி கொழுவிவிட்டு.  அவனுடைய லோவை எடுத்துக்கொண்டு டாங்கிக்கு இலக்கு வைத்தாள். சரியாக அதனுடைய செயின்கள் இரண்டுக்கு நடுவில் தாக்க டாங்கி சீர் குலைந்தது. போராளிகள் ஆரவாரம் செய்தார்கள். அப்போது இராணுவத்தினர் லோ வந்த திசைய நோக்கி சரமாரியாகச்சுடத்தொடங்கினார்கள். திறந்த சூட்டுக்கான உத்தரவை அவர்களுடைய கொமாண்டர் பிறப்பித்திருக்க வேண்டும். ஒரு டாங்கியை இழந்திருப்பது சாதாரணமில்லை அவனுக்கு. செந்தழல் காயப்பட்ட போராளிகளை அப்புறப்படுத்தச்சொல்லி வோக்கியில் வெரோனிக்காவிற்கு அறிவித்தாள். வோக்கியை வைக்கும் முதல் இராணுவத்தின் ஒரு ஆர்பிஜி இவள் நிலையெடுத்திருந்த பாலைமரத்திற்பட்டு வந்து வெடித்தது. அதன் நெருப்பிலிருந்து சிதறி வந்த இரும்புத்தணல் துண்டொன்று செந்தழலின் இடுப்பை ஊடுருவி  முதுகுப்பக்கமாக வெளியேறியது.

இராணுவம் பழைய நிலைகளுக்கு திரும்பியது. பதினைந்து உடல்களையும் ஆயுதங்களையும் விட்டுச்சென்றிருந்தனர். போராளிகளின் பக்கம் செந்தழல் உட்பட நான்கு பேர் வீரச்சாவு. செந்தழல் வீரச்சாவடைந்தது சொல்லப்பட்டதும் வெரோனிக்கா உடைந்து போய் அவளைத்தேடிவந்தாள். அதற்குள் செந்தழலின் உடல் கொண்டு செல்லப்பட்டாயிற்று, சில பெண்போராளிகள் இராணுவத்தினரின் உடல்களை எடுத்து வந்து பெரிய தறப்பாள் ஒன்றின் மேல் அடுக்கியிருந்தன. அழுது கொண்டே வோக்கிகளில் தன்னுடைய குழுவிலிருக்கும் போராளிகளை நிலைகளுக்கு திரும்புமாறு அறிவித்தபடி நடந்தவளின் கால்களில் இராணுவவீரன் ஒருவனின் சப்பாத்துக்கால் இடறியது. குனிந்து பார்த்தாள் குடல்பகுதி வெளியே தள்ள சோர்ந்து போயிருந்தது உடல். ஏதோ கோவம் உந்தித்தள்ள இடறிய அவனுடைய காலை தன் காலால் ஒரு உதை உதைந்து விட்டு கடந்து சென்றாள்.

செந்தழலின் இறுதியஞ்சலி கூட்டமும் வித்துடல் விதைப்பும் விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்தில் நடந்தது. முடிந்ததும் வாகனத்திற்காக துயிலுமில்லத்திற்கு முன்பிருந்த தேக்கங்காட்டில்  சில போராளிகளுடன் இருக்கும் போது. ஒரு போராளி அவளிடம் கடிதமொன்றைக்கொண்டுவந்து கொடுத்தாள். விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தாள். ஏன் என்று தெரியாமல் விசாரணைக்கு சென்ற பொழுது இவளுடைய படையணியின் தளபதியும் இவளுடைய பொறுப்பாளரும் மற்றுமொரு படையகப்புலனாய்வுத்துறையைச்சேர்ந்த இளம்போராளி ஒருவனும் இவளை விசாரித்தார்கள். இவளுடைய பொறுப்பாளர்.

“லெப்டினன் நச்செள்ளை, களத்தில் இராணுவ உடலொன்றிற்கு காலால் உதைஞ்சிருக்கிறீங்கள். மானுட அறத்தின் படியும் அமைப்பின் நடைமுறைகளின் படியும் அது தவறான நடத்தை. அதாலை உங்கட ராங் இரண்டாம் லெடினண்ட் ஆக குறைக்கப்படுவதோட, மூண்டு மாசம் நீங்கள் மெடிக்ஸ்சில பணிஸ்மெண்ட் செய்ய வேண்டி இருக்கும். ஏதாவது ஆட்சேபனை இருந்தால் சொல்லலாம்.”

“அவங்கள் எங்கடை ஆக்களின்ர பொடிய எடுத்தால், கீறி கிழிச்சு நிர்வாணமாக்கி ரோடுரோடா கட்டி இழுத்து சிதைச்சுதான் எங்களிட்ட தாறான்,…”

வெரோனிக்கா முடிக்க முதல் அருகில் இருந்த தளபதி இவளை இடைமறித்து “இஞ்ச பாரும் பிள்ளை, நாங்கள் ராணுவம் இல்லை. நாங்கள் விடுதலைப்போராளியள், ஒரு இராணுவ எதேட்சதிகார கட்டமைப்புக்கும் விடுதலைக்காக போராடுற எங்களுக்கும் இதுதான் வித்தியாசம், அதாலை நீங்கள் இந்த விசயத்தை சரியாய் விளங்கிக்கொள்ளவேணும், என்னதான் கோவம் கவலை இருந்தாலும், நிதானமில்லாமல் நடக்கூடாது. உங்கடை அறிக்கையள் செயற்பாடுகளை படிச்சனான். பொறுப்பாளரும் சொன்னவா. இணைக்கப்பட்டு குறைஞ்ச காலத்திலை பயிற்சியிலையும், பரீட்சையள்ளையும், களமுனையிலும் சரி உங்கட செயற்பாடுகள் திருப்தியாய் இருக்கு எண்டதாலைதான், ஒரு ராங் மட்டும் குறைச்சு மெடிக்ஸ்சுக்கு அனுப்புறம். விளங்குதோ?”

”அப்ப  என்னை விருப்பமில்லாமல் பிடிச்சுக்கொண்டு வந்து இயக்கத்திலை சேத்தது எந்த மானுட அறத்தில வரும்?”  வாய் உன்னியது, மானிட அறம் என்ற அந்த வார்த்தை அவர்களிடமிருந்து மிகுந்த செயற்கைத்தனத்துடன் வெளிப்பட்டதை நெஞ்சு உணர்ந்து அந்தரம் குரலை இறுக்கியிருந்ததை  மார்கழியிடம் நினைவு கூர்ந்தாள்.

”அவா சொன்னவா எண்டு நீரும் தலையாட்டிப்போட்டு வந்திட்டீரோ?” மார்கழி சிரித்துக்கொண்டே கேட்டாள்.

“வேறை என்ன செய்யிறது?”

”சரி விடுமப்பா, சண்டேல்ல நிக்கிறத விட இது பறுவாயில்லைதானே?”

“ஹ்ம்ம், சரி நீர் என்ன செய்தனீர்?”

“காதலிச்சனான், அதுதான் பணிஸ்மெண்ட்”

“முந்தித்தானே காதலிச்சா பணிஸ்மெண்ட், இப்ப என்ன?”

“அது ஒரு பெரியகதையப்பா?”

“என்ன கதை, லைன்ல நிக்கேக்க ஆமிக்காரர் ஆரையும் விரும்பீட்டீரோ?”

“அடியேய்! நீ சரியான ஆள்தான் போல, அமசடக்கி!”

”அப்ப என்னெண்டு சொன்னால்தானே தெரியும்?”

“அப்ப நான் சோதியா படையணில இருந்தனான், வெத்திலைக்கேணிக்கு கிட்ட தலைவற்ற முகாமொண்டு இருந்தது அதால கடல்பக்கம் இருக்கிற காட்டுக்கு எங்கடை பிள்ளையள்தான் பாதுகாப்பு குடுத்தவளவை. நான் ஒரு நாலு சென்ரிக்கு பொறுப்பாய் இருந்தனான். வெத்திலைக்கேணிபக்கத்து காடுகள் சரியான அடர்த்தி,சும்மா உள்ளுக்குபோய் வெளியிலை வரேல்லாது. நான் அண்டைக்கு ஒரு இரவு சென்ரிலை நிண்டனான். சுடுதண்ணி போத்தில் ஒண்டு எப்பவும் என்னோட இருக்கும். என்னாலை சாப்பிடாமை கூட இருக்கேலும் ஆனால் தேத்தண்ணியில்லாமல் இருக்கமாட்டன். அண்டைக்கு கொஞ்சம் கூதலும். அண்டைக்கு இரவுக்கு மட்டும் நாலஞ்சு தேத்தண்ணி போகப்போகுதெண்டு நினைச்சுக்கொண்டு  இரவொரு பதினொரு மணி போல தேத்தண்ணி ஒண்டு போட்டு குடிச்சுக்கொண்டு கடற் சத்தத்தை கேட்டுக்கொண்டு குத்தியொண்டிலை சாஞ்சு கொண்டு இருந்தன். துவக்கிலை பிடிக்க சில்லெணு இருந்தது. இரும்பு குளிருக்கு ஐஸ்கட்டியாமாறிடு மெல்லோ, நான் துவக்க கைக்கு எட்ட வச்சிட்டு, தேத்தண்ணி பேணியை உள்ளங்கைக்க வச்சு உறுட்டி கையை வெதுவெதுப்பாக்கிக்கொண்டு ஏதோ பாட்டொண்டும் முணுமுணுத்துக்கொண்டு இருந்தனான். தீடிரெண்டு கொஞ்சம் தள்ளி ஆரோ வெடிவச்சமாதிரி சத்தம், ஆனால் கேட்ட மாத்திரத்திலையே அடங்கீட்டுது, ஏதும் பிரமையாய்தான் இருக்குமோ எண்டு யோசிக்க எட்ட நிண்ட பிள்ளையள் அக்கா என்ன சத்தமெண்டு வோக்கிலை கேட்டாளவை, எனக்கு ஆரோ காட்டுக்க நிக்கினம் எண்டு விளங்கீட்டு டக்கெண்டு பிள்ளையளுக்கு அலேட் ஒண்டு அடிச்சன். நானும் சென்ரியை விட்டு விலகி மரமொண்டுக்கு பின்னாலை பதுங்கினர். கனநேரம் அசமந்தம் இல்லை. ஒரு இருபது நிமிசமிருக்கும் பிறகும் டப் டப் எண்டு ரண்டு சத்தம் நான் சத்தம் வந்தபக்கம் மெல்ல மெல்ல இருட்டுக்க போனன். அப்ப அரோ கதைக்கிறது கேட்டுது. தமிழ்ழதான் கதைச்சினம். நான் பிள்ளையளை கூப்பிட்டு விசயத்தை சொல்லி எந்த பக்கம் எப்பிடி வரோண்ணும் எண்டும் சொன்னன். சொன்ன மாதிரியே அவை எதிர்பாக்காத மாதிரி பிள்ளையள் பாஞ்சு ஆக்களை அமத்தினாளவை. பாத்தால் இயக்கப்பெடியள் ரண்டு பேர். சிவில்தான். பெலிட் கட்டி கையில ஒரு ரி.56 வைச்சிருந்தவ. பிள்ளையள் பாஞ்சதும் ஆக்கள் வெருண்டடிச்சு “நாங்கள் இயக்கம் நாங்கள் இயக்கம்” எண்டு கத்திச்சினம் எனக்கு சிரிப்பு வந்திட்டு. “நீங்கள் இயக்கெமண்டால் அப்ப நாங்கள் ஆர்?” எண்டு கேட்டுக்கொண்டு ஆக்களின்ர முகத்திலை லைட் அடிச்சன். ஒரு நடுத்தரவயசுகாரர் மற்றது சின்னப்பெடியன். அண்டைக்குத்தான் நான் அவரை கண்டது. என்னை வடிவாய் பாத்துக்கொண்டு நிண்டார். நான் பிள்ளையளை சொல்லி ஆக்களின்ர துவக்க பறிச்சிட்டு ஆக்களை இருத்தினன் , என்ன காட்டுக்க செய்யிறியள் எண்டு கேக்க. உக்குளுவான் அடிக்க வந்தனாங்கள் எண்டான் அந்த சின்னப்பெடியன். நாங்களும் அங்கை உக்குளுவான் அடிக்கிறானாங்கள். உனக்கு உக்குழுவான் தெரியும்தானே? முயல்மாதிரி கொஞ்சம் பெரிசு, வலுவேகமாய் ஓடும், ஆனால் என்ன ஓடிப்போய் பொந்துக்க தலைய மட்டும் நுழைச்சு இறுக்கி கண்ண மூடிதான் ஒழிஞ்சிட்டன் எண்டு நினைச்சுக்கொள்ளும். ஆள் எப்பவும் குண்டில வெடி வாங்கிறது அதாலதான். நான் அவரிட்ட என்ன பேர் எண்டு கேட்டன். அவர் “திகழ்சீரன்” எண்டார். சின்னப்பெடியனுக்கு என்ன பேர் எண்டு கேக்க அவன் ’சின்னப்பெடியன்’ தான் பேர் எண்டான். பொறுப்பாளர் அப்பிடித்தான் கூப்பிடுறவர் எண்டான். நான் ஆர் பொறுப்பாளர் எண்டு கேக்க இவரைத்தான் அவன் காட்டினான். எனக்கு சிரிப்பு வந்திட்டு. அவற்ற தகட்டை வாங்கிப்பாத்தன். கேட்ட உடனை ஒண்டும் கேக்காமல் தந்திட்டார். ஆள் முதல் வெருண்டாலும் பிறகு என்னை கணக்கெடுக்காதமாதிரி நக்கல் பார்வையும் பதிலும். நான் தகட்டை வாங்கிப்பாத்தன். ராதாவான்காப்பு படையணிக்காறர்ட தகடு. பெரியாக்கள்தான். ஆனால் என்ர வேலையை நான் சரியாத்தான் செய்வன் எண்டு அவருக்கு காட்டோணும் எண்டு நினைச்சன் தகட்டை வச்சுக்கொண்டு என்ர பொறுப்பாளருக்கு அடிச்சு விபரம் சொன்னன். பொறுப்பாளர் இவேன்ர பேரும் விபரமும் சொன்னதும் பதறிப்போய் ஆக்களை விடுங்கோ எண்டு சொன்னா. நான் ஆக்களுக்கு ஒரு தேத்தண்ணி ஒண்டு போட்டு குடுக்க சொல்லிட்டு குடிச்சு முடிச்சதும் கொண்டுபோய் விடுங்கோ எண்டு பிள்ளையளிட்ட சொல்லிப்போட்டு என்ர சென்ரிக்கு வெளிட்டுப்போட்டன். அதுக்கு பிறகு தலைவற்ற மீற்றிங் ஒருக்கா நடக்கேக்க ஆள் வரியுடுப்பெல்லாம் அடிச்சுக்கொண்டு வந்தார். என்னைக்கண்டதும் வந்து கதைச்சார். எனக்கு அவரை பிடிச்சுப்போச்சு எண்டு காட்டிக்கொள்ளாமல் நிண்டன். ஆள் அத்தனைக்கு என்ர விபரமெல்லாம் பைலோட வாங்கி இருப்பார் எண்டு எனக்கு தெரியும். இருந்த இடம் அப்பிடி. எனக்கு பைல் ஒண்டும் தேவையில்லை, ஆவரே எல்லாம் சொன்னார்.

அவர் பார்த்த பார்வைக்கும் கதைச்ச கதைக்கும் கடிதம் வருமெண்டுதான் நினைச்சன். ஆனால் அந்தமனிசன் எழுதவே இல்லை. இந்தாளைப்பாத்துக்கொண்டு நிண்டால் சரிவாராதெண்டு நானே சும்மா நலம் விசாரிச்சு கடிதம் போட்டன். பதில் வந்துது. நான் விசாரிச்சதுக்கு மட்டும் சிக்கனமாய் பதில் எழுதி ஒரு கடிதம், உலகத்திலையே வன்வேட் ஆன்சர் எக்ஜாமுக்கு பதிலெழுதின மாதிரி எழுதப்பட்ட காதல் கடிதம் எங்கடைமட்டும்தான்.

 பிறகொரே கடிதம்தான். நானும் ஒண்டும் சொல்லேல்ல, அவரும் ஒண்டும் சொல்லேல்ல, ரண்டு பேருமே பிடிகுடுக்கிறதா இல்லை. ஒரு நாள் எனக்கு ஏதோ நெஞ்செல்லாம் பாரமாய் இருந்த. பின்ன “எனக்கு உங்களை விருப்பம்” எண்டு பத்து பக்கத்திலை கைப்பட, அவற்றை படமெல்லாம் தீட்டி அனுப்பினன். கடிதத்திலை கடைசில “எனக்கென்ன தருவீங்கள்?” எண்டு கேட்டு அண்டலைன் ஒண்டும் அடிச்சிருந்தனான். ஏழெட்டு நாள் கழிச்சு பதில் வந்துது.

“போராட்டத்திலை கலியாணம் எல்லாம் சரிவாராது நிரந்தமில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறம், சமாதானம் எப்ப எண்டாலும் உடையும், உடைஞ்சால் நீர் ஒருபக்கம் நான் ஒருபக்கம் துவக்க தூக்கிக்கொண்டு காட்டுற திசைக்கு போகத்தான் வேணும். நீர் ஒரு பணிஸ்மெண்டோட ஒரு வருசத்திலை விலகலாம். அது சுலபம். நான் விலகிறதுக்கு கடிதம் குடுத்தாலும் என்னை அவ்வளவு சுலபமாய் விட மாட்டாங்கள் நான் இருக்கிற இடம் அப்பிடி, தெரியும்தானே? சும்மா ஆசையளை வளத்துக்கொள்ளாதையும். தமிழீழம் கிடைச்சால் பாப்பம் ”

எண்டு எழுதி பின் குறிப்பு போட்டு, நான் எனக்கென்ன குடுத்து விடுவியள் எண்டதுக்கு, “கடிததோட குடுத்து விட்டிருக்கிறன்” எண்டு எழுதி அண்டலைன் அடிச்சிருந்தார். என்ன குடுத்து விட்டவர் எண்டு சொல்லுபாப்பம்?

“என்ன?”

மார்கழி பதில் சொல்லாமல் தன்னுடைய பொக்கற்றுக்குள் இருந்து ஒரு சோடி பைக்கற் உடைக்காத பெரிய எவரடி பற்றியை எடுத்தால் கூடவே கழுத்திலிருந்துந்து சோடியாக ஒட்டப்பட்டிருந்த சயனைட் குப்பியையும் கழட்டி கைகளில் ஏந்திக்காட்டினாள்.

“இந்த குப்பியும் பற்றியும்தான்”

”சரி பணிஸ்மெண்ட் என்னத்துக்கு?”

“நான் இந்தக் கோவத்திலை துவக்கை லோட்பண்ணி பேஸிலை நிண்ட தென்னைக்கு சுட்டு, வட்டு பட்டுப்போச்சு.”

”நம்புற மாதிரி இல்லை.”

”ஓம் பொய்தான் சொன்னனான்.”

 

-யதார்த்தன்.

(வெளிவர இருக்கும் “நகுலாத்தை” நாவலின் அத்தியாயமொன்று.)

Share this Post

Leave a Reply