yathaadmin/ November 25, 2018/ கட்டுரை/ 0 comments

 

கிபி1505 இல் கடல்வழி தவறி இலங்கையின் தெற்கே, காலித்துறைமுகத்தில் தரை தட்டி நின்ற ஐரோப்பியர்களைக் கண்ட சுதேச மக்கள் அவர்களை  இரத்தைத்தை குடித்து கல்லைச் சாப்பிடும் அரக்கர்கள் வந்திருக்கிறார்கள் என்று தங்களின் மன்னனிடம் சென்று கூறினார்கள்.  வைனையும், கேக்கையும்தான் அவர்கள் அப்படிக்குறிப்பிட்டார்கள். இப்போது கேட்கும் போது இது நகைச்சுவையாக இருக்கும், ஆனால் சுதேசிகள் வர்ணித்தது அத்தனை சரியாக இருந்தது. அவர்கள் கீழைத்தேசத்தின் அரசியலிலும் சமூக வாழ்விலும் ஆடியது இரத்தக்களரிதான். செய்தவையெல்லாம் அரக்கத்தனம் தான். மிளகுக்கும் கடுகிற்கும் வந்ததாகவும் புனித கத்தோலிக்கத்தை எடுத்துக்கொண்டு வந்ததாகவும் சொன்னவர்கள் கீழை உலகம் முழுவதும் செய்தது படுகொலைகளும் சுரண்டலும் அடிமை வியாபாரமும். இன்றைக்கு ஐரோப்பியர்கள் நாகரிகமான மனிதர்கள். அவர்களின் அறிவையும் கலாசாரங்களையும் வாழ்க்கை முறையையும் சார்ந்த நாமெல்லாம் நாகரிகமான மானுடர்கள். அவ்வாறு சிந்திக்கவும் கற்பிக்கவும் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். நூற்றுக்கு தொண்ணூறு வீதம் நாம் ஐரோப்பியர்களுக்காக அவர்கள் சிந்திக்கச்சொன்னபடி சிந்திக்கிறோம் என்றால் எத்தனை அதிர்ச்சியாக இருக்கிறது.  நாகரிகம் என்பதும் அதன் வழிதான் கற்பிக்கப்பட்டிருக்கிறது.

நாகரிகமான மனிதர்கள் மரப்பட்டைகளையோ இலைகுழைகளையோ உடுத்துவதில்லை, நாகரிகமான மனிதர்கள் பூமியை கிராமம் என்று சொல்லுமளவிற்கு தொடர்பாடல் மிக்கவர்கள், நாகரீகமானவர்கள் அம்பு வில்லையன்றி துப்பாக்கிகளையும் அணு குண்டுகளையும் பயன்படுத்துவார்கள், நாகரிகமனிதர்களிடம் விஞ்ஞானமும் கடவுளும் காணப்படும்,  இப்படியாக. நாகரிகமான நமக்கு நம்முடைய கண்களும் காலடியும் படாத யாவும் மர்மமானவை சாகசத்துக்குரியவை சொந்தமாக்கிக்கொள்ள, வேடிக்கை பார்க்க தக்கவை. அல்லது அவை மியூசியத்தில் இருக்க வேண்டியவை.

சென்ரினல் தீவின் பழங்குடிகளுக்கும் இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. உலகின் வெளிச்சத்திற்கு எடுத்துவரப்பட்டு அழிக்கப்படப்போகின்றார்களோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது. அறுபதாயிரம் வருட தொல்வாழ்வை கொண்டிருக்கும் மக்கள் அவர்கள். அரசு அவர்களை நெருங்கவோ தொந்தரவு செய்யவோ வேண்டாம் என்று சொல்லியும் நாகரிகமடைந்த மக்கள் அவர்களை விடுவதாயில்லை. சமீபத்தில் கர்த்தரை அவர்களிடம் எடுத்துசெல்லப்போகிறேன் என்று புறப்பட்ட ஒரு அமெரிக்க இளைஞனை அவர்கள் கொன்று விட்டார்களாம். அமெரிக்கா அவருடைய உடலை தரும்படி இந்திய அரசை அழுத்தம் கொடுக்க தொடங்கியிருக்கிறது. இதன் உள்ளார்ந்த அர்த்தம் என்ன? அவர்களை அழித்து விட்டு இளைஞனின் உடலை எடுத்து வருவதா? அமெரிக்க வான்பரப்புக்குள் அனுமதி பெறாத ஒரு கிருமி நாசினி அடிக்கும் கிளைடர் விமானம் நுழைந்தால் கூட என்ன நடக்கும்? சென்ரினல் தீவு வாசிகளுக்கு வேறு நியாயம் . ஏனெனின்ல் அவர்கள் செய்வது படுகொலை, காட்டுமிராண்டித்தனம். அது தற்காப்புக்குள் வராது. நமக்கு தக்காளிச்சட்னி மற்றும் இரத்தம் தொடர்பான நகைச்சுவை அது.

கடந்த சில நாட்களாக உலகின் முக்கால் பங்கு ஊடகங்கள் அவர்களைக் காட்டு மிராண்டிகளாகவே மாற்றிவிட்டன. ஏனெனில் நாகரிகமனிதர்கள் சாதாரண மனிதர்களின் செய்திகளை படிப்பதை விட காட்டுமிராண்டிகளின், அவர்களை வென்று வரும் கதாநாயகர்களின் கதைகளைத்தான் விரும்பிப்படிக்கின்றார்கள்.

மேலைத்தேசத்தில் எல்லா நாடுகளின்  கைகளிலும் வரலாற்றின் இரத்தம்படிந்து கிடக்கின்றது. செவ்விந்தியர்களினதும், இன்காக்களினதும், அஸ்ரெக்கியர்களினதும், மாயன்களினதும், ஆபிரிக்க ஆசிய பிராந்திய பழங்குடிகளினதும், ஏன் கீழை மக்களினதும் வாழ்வினதும் காடினதும் நதிகளினதும் மற்றும் சாவினதும்  இரத்தம், ஐரோப்பியர்களுக்கும் ஆதி மக்களின் கல்லறை மேலே வசிக்கும் அமெரிக்கர்களுக்கும் இது எந்தக்குற்றவுணர்வையும் தரப்போவதில்லை.

இந்த இடத்தில் திருச்சபைகளின் கனத்த மெளனம் அச்சுறுத்துகின்றது. பழங்குடிகளை மதம்பரப்பும் பெயரில் தொந்தரவு செய்யாதீர்கள் என்று ஒரு செய்தியை தன்னுடைய பின்பற்றுனர்களுக்கு சொல்லுவதில் என்னவாகப்போகின்றது?  மத வரலாறு எங்கும் அரசுகளும், மக்களும் செய்த இந்தப்படுகொலைகளுக்கு முழு உடந்தையாக இருந்தது மதநிறுவனங்களன்றி வேறெவை? அதற்கு அதன் வரலாறு நன்கு தெரியும். அந்தப்பாவத்தை சுமப்பதற்கே அது இன்னும் நான்கைந்து ஏசுவை தேவனிடமிருந்து தருவிக்க வேண்டியிருக்கும். நின்மதியாக வாழ்ந்துகொண்டிருந்த சென்ரினல் தீவு பழங்குடிகள் காட்டுமிராண்டிகள் என்று சொல்லப்படவும் அங்கு போய் இறந்து போன இளைஞன் மீது பச்சாதாபமும் புனிதத்துவமும் கற்பிக்கப்படத்தொடங்கியாயிற்று. பழங்குடி மக்கள் விட்ட அம்பு ஒன்று அவனுடைய பைபிளில் வந்து குத்தி நின்றதாக அவனுடையது என்று சொல்லப்படும் கடிதத்தில் குறிப்புள்ளதை ஊடகங்கள் திரைப்படக்காட்சியைப்போல வர்ணித்துக்கொண்டிருக்கின்றன. இந்த இளைஞன் இரண்டு நூற்றாண்டுக்கு முதல் அங்கே போய் கர்த்தரின் பேரை அவர்கள் முன் உச்சரித்து விட்டு மாண்டு போயிருந்தால், அல்லது அவர்களைப் பெருந்தன்மையாக மன்னித்து விடுங்கள் என்று கடிதமெழுதியிருந்தால் அவனுக்கு “புனிதர்” பட்டம் கொடுக்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதில் சென்ரினல் தீவு மக்களுக்கு யார் கடவுள், அல்லது அவர்களுக்கு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று கூட தெரியவில்லை. ஏனெனில் நாகரிகமடைந்த மனிதனுக்கு கடவுளிருக்க வேண்டுமே. அல்லது நாகரிகமடைந்த மானுடர்களிடம் இருப்பதுதான் கடவுள். காட்டுமிராண்டிகளுக்கு கடவுளைத்தெரியாது.

பழங்குடிகளை பாதுகாக்கவோ, அல்லது அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவோ கூடாதோ என்றால் அப்படிக்கிடையாது. அதற்கு முறையிருக்கிறது, அதில் மானுட அறவுணர்வும் அன்பும் தேவைப்படுகின்றது. நம்மைப்போல சகல உரித்தும் இந்த பூமிமீதும் வாழ்வின் மீதும் அவர்களுக்கு இருக்கிறது. அவர்களுக்கு நம்முடைய சனநாயகம் தேவையில்லை, அவர்களுக்கு நம்முடைய நாகரிகம் தேவையில்லை. எல்லோரையும் போல அவர்கள் வேண்டுவது இயற்கையில் உலாத்தும் சுதந்திரமான வாழ்வு.  என்னைக்கேட்டால் மரணத்தின் விளிப்புக்கு அவர்களை இயற்கை கொண்டு போகும் போது கூட அவர்களுக்கு நம்முடைய உதவி  தேவையில்லை என்றால், அவர்களை சுதந்திரமாக சாகவிடலாம், அவர்களுடைய எல்லாவற்றையும் தெரிவு செய்யும் உரித்து அவர்களுக்கு இருக்கிறது.

இந்த அடிப்படை எல்லோருக்கும் தெரியும். ஆனால் எது நம்மை அங்கே சாகசப்பயணம் செய்யத்தூண்டுகிறது? அல்லது அவர்களை இரட்சிக்க வேண்டும் என்று கடவுளை எடுத்துப்போகத்தூண்டுகின்றது?

ஒரு பழங்குடியை தொடர்புகொள்ள மானிடவியலாளர்கள் நிறைய முறைகளைக் கையாள்கின்றார்கள், அவர்களின் நோக்கம் மதத்தை பரப்புவதாகவோ இருக்கத்தேவையில்லை. அங்கே அறிதலும் உதவுதலும் மட்டும்தான் நோக்கம்.  தொந்தரவு செய்வதோ சுரண்டுவதோ, அவர்களின் வாழ்வைக்குழப்புவதோ வன்முறை. அதற்கு எதிராக அவர்களிடம் இருந்து புறப்பட்டு வரும் ஒவ்வொரு அம்பும் பைபிளில் சொருகினாலும் நெஞ்சில் சொருகினாலும். அது கொலையில்லை, அது ஒரு போராட்டம். அதுவே அதன் முழுத்தருமமுமாகும்.

இந்த வாரம் முழுக்க இந்த நிகழ்வுகளை அவதானித்துக்கொண்டிருக்கும் போது செவ்விந்திய கோத்திரங்களில் இறுதி தலைவர்களில் ஒருவராக இருந்த  முது தந்தை சியாட்டல,1854 இல் அமெரிக்கர்கள் செவ்விந்தியர் வசித்த பெரிய நிலப்பரப்பை வாங்குவதற்கு அவரை அணுகிய போது சொன்ன பதிலின் சிறு பகுதியை கவிஞர் சுகுமாரன் தன்னுடைய கட்டுரை ஒன்றில் மொழியாக்கம் செய்திருந்தமை கண்ணில் பட்டது. ஐரோப்பியர்கள் அழித்த பழங்குடிகளின் வாழ்வு இயற்கையோடு எவ்வாறு பின்னியிருந்தது என்பதற்கு சியாட்டலின் வார்த்தைகள் வரலாற்றை சவுக்கால் விளாசக்கூடியன. இயற்கையும் அதோடு நெருங்கி வாழும் மானுடர்களையும் நாகரிகமற்றவர்கள் என்றும் மரத்தைப்போலவும் விலங்குகளைப்போலவும் அவர்கள் சடப்பொருட்கள் என்றும் கருதும் போது இவை யாவற்றின் மீதும் நாகரிகமனிதன் தீங்கிழைக்கின்றான். அது அவனை நோக்கி அவனே துப்பிக்கொள்வது போலாகும் என்கிறான்  தந்தை சியாட்டல். இந்த இடத்தில் முது தந்தை சியாட்டலின் அந்த வார்த்தைகள் இந்த கட்டுரையை முடித்து வைக்கட்டும்.

 

எங்கள் காலடியிலுள்ள நிலம் எங்களுடைய மூதாதையரின் சாம்பல் , என்பதை  நீங்கள் உங்களின் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். எனில் அவர்கள் நிலத்தை மதிப்பார்கள். எங்களின் உடன் பிறந்தவர்களின் வாழ்கையால் வளமாக்கப்பட்டது இந்தப்பூமி என்று அவர்களிடம் சொல்லுங்கள். இந்த பூமி எங்களின் தாய் என்று எங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தோம், என்பதை உங்களுடைய பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள். பூமிக்கு எது நேர்ந்தாலும், அது பூமியினது பிள்ளைகளுக்கும் நேரிடும். நிலத்தின் மீது துப்பும்போது மனிதன் தனது உடம்பின் மீதே துப்பிக்கொள்கிறான்”

-யதார்த்தன்.

Share this Post

Leave a Reply