yathaadmin/ May 24, 2017/ கட்டுரை/ 0 comments

 

இன்று மதியம் சரியான பசி, பல்கலைக்கழகத்தில் இருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் பஸ் ஸ்ராண்டில் வந்து இறங்கினேன்.  கடையில் ஏதாவது சாப்பிட்டாள் அவள் கண்டிப்பாக கடிந்து கொள்வாள். வேறு வினையே வேண்டாம் என்று நினைத்துக்கொண்டு மினி பஸ்ஸில் ஏறி இருந்து கொண்டேன் ,கொடிகாமம் மினி பஸ்ஸிற்கு பக்கவாட்டில் ஒரு பாலைப்பழ வியாபாரி ரெஜிபோம் பெட்டிகளில் பாலைப்பழங்களை நிரப்பி விற்றுக்கொண்டிருந்தார். பசியும் ஆசையுமாக நாவூற்றெடுத்தது, பாலைப்பழத்தில் இருந்து கண்களை எடுத்து மடியில் கிடந்த புத்தகத்தைப்புரட்டினேன், கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானுடம் என்ற எழுத்துக்கள் கண்களில் பட பசியில் கடுப்பேறியது. அதை மூடினேன். தோழி ஒருத்தி கேட்டாள் என்று எதற்கு அதை இன்று எடுத்து வந்தேன் என்றிருந்தது. பாலைப்பழக்குவியலை நோக்கி கண்கள் திரும்புவதையோ கண்கள் வயிற்றுடன் கதைப்பதையோ நிறுத்த முடியவில்லை. ஜீவனேசனின் நினைவுதான் வந்தது.

 

யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு போனது இப்படியொரு பின்வசந்தகாலத்தில் என்றுதான் நினைக்கிறேன். மெல்ல காற்றுத்தொடங்கி காய்பருவத்தில் இருக்கும் பழங்களை மெல்ல அருக்கூட்டி பழுக்க வைக்கும் காலம். பரந்தனில் நாங்கள் குடியேறியபின்னர் பரந்தன் இந்து மகாவித்தியாலயத்தில் சேர்க்கப்பட்டேன். முதல் நாள் பள்ளிக்கூடம். வகுப்பறைக்குள் நுழைந்தேன்.எல்லோரும்  கருகருவென்ற தேகத்துடன்  , தலையில் எண்ணை வைத்து , புது உடுப்பு போட்டு வாசலில் நிற்கும் என்னை மந்தைக்குள் சந்தடியில்லாமல் நுழையும் ஓநாயைப்போல பார்த்தது வகுப்பு. எப்போதும் அம்மா எனக்குள் இருக்கும் முழுவடிவக்குழப்படிக்காரனை , பக்க எண்ணை வைத்து பக்க உச்சி பிரித்து, சந்தன பொட்டு வைத்து பரமசாதுவாகத்தான் பள்ளிக்கூடம் அனுப்புவாள். மாலையில்  பஞ்சதந்திர கதையில் வரும் “நீல நரியைப்போல்”  வேஷம் கலைந்து உடலெல்லாம் , காயமோ , சட்டையில் அழுக்குடனோ   மொத்த வம்பையும் வாங்கிக்கொண்டு திரும்புவேன். அன்றைக்கு நான் பரம சாதுவைப்போல் வகுப்புக்குள் நுழையும் போது வகுப்பில்  எனக்கு இருக்க யாரும் இடம் தரவில்லை, யசோதா மிஸ் தன்னுடைய கொஞ்சும் குரலில் “இந்த போய்க்கு ஒரு இடம் குடுங்கோ ” என்று கத்திப்பார்த்தார். முன் வரிசையை அக்கிரமித்திருந்த “படிப்புத்திலகங்கள்” தாங்கள் இருப்பதற்கு ஒரு கதிரையும் , பக்கத்தில் புத்தகப்பையினை வைப்பதற்கும் ஒரு கதிரையும் போட்டு  அந்த கதிரையை, அரியாசனத்தில் தன்னுடன் அமர்ந்திருக்கும் ராணியை சாமரம் வீசுபவன்  கரெக்ட் பண்ணி விடுவானோ என்றை பயத்தில் இருக்கும் மன்னனைப்போல அணைந்த்து வைத்துக்கொண்டிருந்தனர். நான் அவர்களை பார்த்தேன் , யாரும் இரங்கி அந்த மகாராணி கதிரையை தருவதாயில்லை. அப்போது பின் வரிசையில் இருந்து ஒரு குண்டு பயல் எழும்பினான்.  நேராக முன் வரிசையில் இருந்த  ஒரு மன்னனிடம் போய், “பாக்கை எடடா” என்றான். அவன் “மிஸ் பாருங்க்கோ ஜீவநேசனை ” என்றான். அவன் குரலில் பயமேறியிருந்தது. மிஸ்சும் கதிரையை கொடுக்க சொல்ல, ஜீவனேசன் புத்தகப்பையை தூக்கி வாங்கில் போட்டு விட்டு கதிரையை தூக்கி கொண்டே, என்னைப்பார்த்து  வாடா என்றான். நான் மகிழ்ச்சியாக அவனுடன் போய் உட்கார்ந்து கொண்டேன்.

மத்தியானம் இன்ரேவல் விட்டது, வெளியே மதில் பக்கம் ஐஸ்பழ வண்டியும் , இதர பல இனிப்பு கடைக்காரர்களும் மதில் மேல் வியாபாரம் செய்துகொண்டிருந்தனர். கொண்டுபோன புட்டும், கத்தரிக்காய் குழம்பையும் சாப்பிட்டு விட்டு நானும் ஜீவநேசனும் அந்தப்பக்கம் நடந்து போனோம். மதிலுக்கு மேலாக கச்சான் கொடுக்கும் பேப்பர் பைகளில் எதையோ மாணவர்கள் வாங்கிக்கொண்டிருந்தனர். நான் ஜீவநேசனிடம் “கச்சானோ” என்று கேட்க. இல்லையடா பாலைப்பழம். என்றான். சத்தியமாக அண்டைக்குத்தான் பாலைப்பழம் என்றொரு பழம் இருப்பதே எனக்குத்தெரியும். பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாக , அதன்  சுவை அதன் வடிவத்திலும் கலரிலுமே தெரிந்தது, நல்ல குண்டு குண்டாய் மஞ்சள் நிறத்தில் பழபழத்தது. எனக்கு நாவூறியது. சாப்பிட வேண்டும் போல் இருந்தது. கையைல் ஒரு ரூபாய் கூட இல்லை. ஜீவனேசனிடமும் இல்லை. சாப்பிடணும் போல இருக்கடா என்று சொன்னேன். அவன் ஒண்டும் சொல்லவில்லை. பெல் அடிக்க வகுப்புக்கு திரும்பினோம்.

மாலையில் தேத்தண்ணியை உறிஞ்சியபடி பள்ளிக்கூட முதல் நாளைப்பற்றி அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். வெளியே கேற்றடியில் ஒரு சைக்கிள் வந்து நின்றது.

“பிரதீப் பிரதீப்”

ஜீவனேசனின் குரல்.அம்மா போய் கேற்றைதிறந்தாள் சைக்கிளைத்தள்ளிய வாறு ஜீவனேசன் உள்ளே வந்தான். அவனுக்கு அந்த ஜென்ஸ் சைக்கிள் எப்படி எட்டும் என்று நினைத்துக்கொண்டே கரியலை கவனித்தேன், ஒரு பெரிய கடகம் கட்டப்பட்டிருந்தது, முன் கான்ரிலில் ஒரு சின்ன மணி வேறு கட்டப்பட்டிருந்தது, நான் அவனைப்பார்த்துக்கொண்டிருக்க, சைக்கிளை டபிள் இஸ்ராண்டில் இழுத்து நிறுத்தி விட்டு  கடகத்தில் ஓடிய கயிறை நெகிழ்த்தி விட்டு , கடகத்தை இறக்கி  என் முன் கொண்டு வந்து வைத்தான்.

“இந்தா வேணுமெண்டளவு சாப்பிடு”

நான் கடகத்துக்கு கண்ணை நகர்த்தினேன்.

”பாலைப்பழம்

அத்தனைநிறைய பாலைப்பழத்தைக்கண்டவுடன் அநிச்சையாக கைகள் கடகத்தினுள் இறங்கி  குளிர்ந்த பாலைப்பழகங்களை அள்ளி எடுத்துக்கொண்டது. நான் சாப்பிடுவதை ஆவன் வேடிக்கை பார்த்தபடியிருந்தான்.  அம்மா அவனிடம்  விபரம் விசாரித்துக்கொண்டிருந்தாள்.

ஜீவனேசன்  காலையில் பள்ளிகூடம் வருவான். மாலையில் அந்த சீசனில் என்ன இருக்கிறதோ அதையேல்லாம் ஆய்ந்து சைக்கிளில் கட்டி விற்பான்.மாங்காய், பாலைப்பழம் , நொங்கு , கச்சான் என்று அது மாறிக்கொண்டேயிருக்கும். குடும்ப வறுமையை அந்த சிறு வயதிலேயே தாங்கத்தொடங்கியவன். வறுமை கஸ்ரம் எண்டு அழுதால் அவனுக்கு பிடிக்காது ஆக  அடுத்த சொல்லுக்கு தாவுவோம்.

அவன் நல்ல பகிடிக்காறன் , அண்டைக்கு பிறகு பாலைப்பழம் ஆய என்னை கூட்டிக்கொண்டு போவான், மரமேறச்சொல்லிட்தந்தான், கெற்றப்போல் அடிக்க சொல்லித்தந்தான், காடை, கெளதாரி என்று நாங்கள் செய்த பாவமும் கொலைகளும் ஏராளமாக இருந்தன. பாலை மரங்களைப்பற்றி அவன் நிறையச்சொல்லுவான்.

உரல் சத்தம் கேட்டால் பாலை மரம் காய்க்காது , அதுதான் ஊர்மனைக்குள்ள நிக்கிற பாலையள் காய்க்கிறதில்லை என்பான். நானும் நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன் அதிக மனிதசந்தடி உள்ள பாலை மரங்கள் காய்த்து பார்ததில்லை. காடுகளில் தான் பாலை மரங்கள் சிலிர்த்துக்காய்க்கும், வன்னியில் எனக்கு தெரிந்து , வவுனிக்குளம் , மல்லாவி என்று பாலைப்பழத்துக்கென்றே எழுதி வைத்த ஊர்கள் , காடுகள் ஏராளம் இருக்கின்றன.

பாலைப்பழமும் வீரைப்பழமும் ஒரே சீசனில் காய்கும் காட்டுப்பழங்கள். இரண்டுக்குமாகத்தான் காட்டுக்குள் இளைஞர்களும் வியாபாரிகளும் போவார்கள் , அந்த சிவப்பு மஞ்சள் பழங்களின் கூட்டணியை சாப்பிடுவதை விட கைகளில் நிரப்பிப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். சுவைக்கு  மஞ்சளும் சிவப்பும்தான் நிறங்கள் என்று நினைத்துக்கொள்வேன்.

பாலைப்பழத்திற்குப்போகும் போது கையில் ஜீவனேசன் எப்போதும் கருக்கு மட்டை வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வான்.  மனிதர்களைப்போல பாலைப்பழத்தில் வேட்கை கொண்ட இன்னொரு ஆளும் இருக்கிறார். கரடி. பாலை மரத்தில் கரடியை சந்திக்கும் போது தாக்க வரும் கரடியின் கையில் கருக்கு மட்டையை கொடுத்தலோ அடித்தாலோ , கையில் காயம் பட்டவுடன் , தன் காயத்தில் வடியும் குருதியின் சிவப்பை பார்த்து பார்த்து வெருண்டு ஓடுமாம், கரடி. எவ்வளவு தூரம் உண்மையென்று தெரியாது ஆனால் இந்த மாதிரி கதைகள், நம்பிக்கைகள் அங்கே மிக்க அழகும் சுவாரஸ்யமும் மிக்க தொன்மமாக உலவிக்கொண்டேயிருக்கின்றன.

பாலைப்பழம் , இலங்கையின் கிழக்கில் வாயொட்டி பழம் என்று அறியப்படுகின்றது. அது ஒரு காரணப்பெயர், பெரும்பாலும் இளம் பருவத்தில்  நன்கு கனியாத பாலைப்பழங்களின் பால் வாயை ஒட்டும் , உதடுகளைச்சுற்றிப்படரும். நல்ல கனிந்த பழமுள்ள பாலை மரங்களில் பழங்களை ருசிப்பவர்களுக்கு இந்த பிரச்சினை குறைவாக இருக்கும் ,ஆனால் வியாபாரிகள் பிடிங்கி வரும் முழுதாய் பழுத்து ஊழ்த்தாத  பழங்களில் பாலொட்டும். இதற்காக பாலைப்பழம் சாப்பிடமுதல் கொஞ்சம் நல்லெண்ணையை எடுத்து உதடுகளில் தடவிக்கொள்ளும் வழக்கம் உள்ளது , இல்லையென்றால் நான்கைந்து முறை சோப் போட்டு உதடுகளை உறுட்ட வேண்டியிருக்கும்.

பழந்தமிழ்ச் செய்யுளில் இது பற்றி ஒரு பாட்டு இருக்கின்றது

“ஓங்கு நம்பெயர் இந்நிலம் உற்றதென்றுறந்து
வீங்கு பாலைகள் ஆலயிற்பழுப்பன மேன்மேல்
ஆங்கு மேலியக் கனியுணின் வெளிபடாததரம்
நீங்குறமலோட்டத்தொடும் பொருந்துதல் நிசமே”
(உறந்து=மிகுதியாகி; அதரம்=கீழுதடு; ஓட்டம்=மேலுதடு)

பாலை மரம் வன்னிக்காடுகளினது மட்டுமன்றி இலங்கையின் வடக்கு காடுகளின் மிக முக்கிய வளம், பாலை மரங்கள் வரலாற்றுக்காலம் தொட்டே மரத்தின் பொருட்டு இன்று வரை இலங்கையில் சந்தன மரத்தைப்போல் இருப்பவை பாலைமரங்கள். காடுகளின் கம்பீரம் என்றே சொல்லலாம். பாலைப்பழ சீசன் முன்பு சொன்னது போல  வைகாசி ஆனி மாதங்களில் உச்சம் பெறும் , பருவக்காற்றின் அலைக்களிப்பில் பழுக்கும் பழங்களில் பாலையும் ஒன்று.

சிறு வர்த்தகத்துக்குரிய பாலைப்பழங்களை இனி ஏ9 வீதியின் வடக்கு மேலோட்டமெங்கும் காணலாம் , பஸ்களில் ,தெருக்களில் , கோயில்களில் என்று பரவலாக தென்படும். வன்னியின் பாலைப்பழ வியாபார மையம் என்று சொன்னால் அது  முறிகண்டிபிள்ளையார் கோயிலடிதான். எனக்குத்தெரிந்து சீசனில் நல்ல பழங்கள் கிடைக்குமிடங்களில் அது தலையானதொன்று. யாழ்ப்பாணம் டவுனில் பெரும்பாலும் எல்லா பெட்டி கடைகளிலும் பழக்கடைகளிலும் இப்போது பாலைப்பழங்கள் கிடைக்கின்றன.  சென்ற வருடத்தைவிட அதிகமான பாலைப்பழகடைகள் இந்த முறை யாழ்ப்பாணத்தில் தட்டுப்பட்டன.

கொடிகாமம் பஸ் நிற்குமிடத்திற்கு பக்கத்தில் இதுவரை இருந்த நெல்லிக்காய் கடைதான் சீசனுக்கு ஏற்றால் போல் பாலைப்பழக்கடையாக மாறியிருந்தது. இறங்கி வாங்கலாம். பேசை திறந்து காசைப்பார்த்தேன்.  சாவகச்சேரி போவதற்குரிய நாற்பது ரூபாவும் இன்னொரு ஐம்பது ரூபா தாளும் இருந்தன. இன்னொரு இருபது ரூபாய்த்தாள் இலங்கையின் பொருளாதாரத்தினைப்போல் கசங்கி கொஞ்சம் கிழிந்து போயிருந்தது. பசி குறுகுறுத்தது. பஸ்வெளிக்கிட்டது சாவகச்சேரி பஸ்நிலையத்தில் இறங்கினேன் , ஊருக்குப்போகும் பஸ்சுக்கு அரை மணிநேரமிருந்தது. அதற்கு இருபது ரூபாய் ஆகும்.  இருக்கும் ஐம்பது ரூபாயில் முப்பது ரூபாய்க்கு எதும் கச்சான் வாங்குவோம் என்று நினைத்துக்கொண்டே எழப்போனேன். ஒரு ஆண்குரல்

“பாலைப்பழம் பாலைப்பழம்”

திரும்பி பார்த்தேன், ஒரு நடுத்தர வயதுக்காரர், ஒரு அட்டைப்பெட்டியில் பாலைப்பழங்கள் நிரப்பிய பையுடன்  நின்றிருந்தார். சுற்றுமுற்றும் பார்த்தேன் நாலைந்து பள்ளிக்கூட வாண்டுகள்  விளையாடிக்கொண்டிருந்தன. பாலைப்பழக்காரனின் குரல் கேட்டதும் , ஆவலாய் ஒரு முறை அங்கே பார்த்து விட்டு, பொக்கற்றில் பஸ்காசு மட்டுமே இருந்திருக்கும் போல ,சட்டென்று தங்கள் மனத்தை திருப்பிக்கொண்டு பழைய விளையாட்டுக்கே திரும்பிக்கொண்டனர். அந்தளவு பக்குவம் எனக்கு இருக்கவில்லை.

“என்ன விலையண்ணை”

“ஐம்பது ரூவாய்”

உள்ளே உருவான உருண்டை வடிவப்பொருள் ஒன்று வெடித்துப்போனது, பேசாமல் இருந்து கொண்டேன். But விதி had an another idea. களைத்துப்போனவனாய் அந்த பாலைப்பழக்காரன் பாலைப்பழ பெட்டியை எனக்குப்பக்கதிலையே வைத்துவிட்டு அசுவாசமாக இருந்து கொண்டான். கையில் இருந்த பசித்த மானுடத்தால் என்னை அடித்துக்கொள்ளலாம் போலிருந்தது. மனது இன்னொரு B பிளானை உருவாக்கியது. கிழிந்து நைந்து போன அந்த இருபது ரூபாய் தாளை எடுத்து சரி செய்து பசித்த மானுடத்தின் நெஞ்சுக்குக்குள் வைத்து அழுத்தி கிழிந்திருந்த பகுதியை உள் பக்கமாக சுருட்டி மடித்து அழுத்தி வைத்தேன். மினிபஸ்காரன் பரபப்பாக காசை வாங்கி பார்க்காமல் கையிடுக்கில் வைத்துக்கொள்வான் என்று உறுதியாக மனதை நம்பச்சொன்னேன். எத்தனை தரம் ஐந்து ரூபாய் , இரண்டு ரூபாய் என்று மிச்சம் தராமல் விட்டிருப்பான். பரவாயில்லை என்று அற உணர்வுக்கும் கொஞ்சம் சமாதானத்தீனியை தூவிக்கொண்டேன். எனினும் பசித்த மானுடத்தின்  எடை ஏதோ கொஞ்சம் கனமேறியிருப்பதாய் தோன்றியது.

பின்னர் பேசில் இருந்த ஐம்பது ரூபாயை எடுத்து பாலைப்பழத்தை சொந்தமாக்கினேன், நான் வாங்கும் போதேன் எதிரே இருந்த வாண்டுகள் விழிகள் விரிய, உள்ளே இருந்த இலக்கியங்கள் எதையோ குறுகுறுத்தன, பையப்பிரித்து  ஒவ்வொரு பிடி அள்ளி அவர்களைக் கூப்பிட்டு கொடுத்தேன்,  வாங்கிக்கொண்டு தாங்ஸ் சொன்னார்கள்.

“அண்ணை சொண்டிலை படாமல் சாப்பிடுங்கோ வாயொட்டும்”

சிரித்துக்கொண்டேன்.  பசித்த மானிடத்துக்குள் இருந்த  அந்த இருபது ரூபாயின் கனம் காணாமல் போயிருந்தது.

யதார்த்தன் –

 

Share this Post

Leave a Reply