yathaadmin/ March 30, 2017/ கட்டுரை/ 0 comments


உண்மை ஒடுக்கப்படுபவர்களின் பக்கம் இருக்கிறது.
-மல்கம் X –

கடந்த வாரங்களில் இந்திய நடிகர் ரஜனிகாந் இலங்கைக்கு வருகை தர புறப்பட்டார், அதன் பின்னர் தமிழ்நாட்டு மற்றும் புலம்பெயர் தமிழ்ச்சூழல்களில் இருந்து வந்த எதிர்ப்புக்களின் பின்னர் அவர் தன்னுடைய வருகையை நிறுத்துவதாக ஓர் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார். குறிப்பிட்ட காப்பரேட் நிறுவனம் தயாரிக்கும் படமொன்றின் புரமோசன் வேலைகளின் பொருட்டு, அந்த நிறுவனம் கட்டத்தொடங்கிய வீட்டு தொகுதிகளைக்கொடுப்பது போன்ற பாவனையில் அவர் இங்கே புறப்பட்டார் என்பது எல்லோரும் அறிந்தது. இந்திய சூழல் அதனைப் புரிந்து கொண்டதோ இலங்கைச் சூழல் கணிசமான அளவு அந்த பிரக்ஞையுடன் இருந்தது. ஆனால் ரஜினிகாந் வெளியிட்ட அறிக்கையைத்தொடர்ந்து யாழ்ப்பாணம் முதலான தமிழ் பிராந்தியங்களில் போஸ்ரர்கள் ஒட்டப்பட்டு ரஜினை வரவிடாதவர்கள் என்று கூறி இந்திய – தமிழ்நாட்டுத்  தலைவர்கள் சிலரை சுட்டிக்காட்டி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று அறிவிக்கப்பட்டு பொது மக்கள் கொண்டு வரப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த போராட்டம் ஒரு பெரும் கேலிக்கூத்தென்று பலரும் விமர்ச்சித்துக்கொண்டிருக்கிறோம். உண்மைதான். ஆனால் வெறுமனே அதை சாதாரணமாகக் கடந்து போதல் சமகாலத்தில் கருக்கொண்டு வரும் ஆரோக்கியமான சனநாயக போராட்ட சூழலையும் குறுகிய அளவிலேனும் நடக்கும் அரசியல் போராட்டத்தையும் பலவீனப்படுத்தும். காசு கொடுத்தால் போராட வரப்போகின்றார்கள் , காசு கொடுத்தால் வாக்குப்போடுவார்கள் என்ற சமூக பிறழ்வை அது ஏற்படுத்திவிடும். எனவே நாம் இந்த போராட்டத்தையும் அதன் பின்னணி சூழலையும் ஆபத்துக்களையும் விளங்கிக்கொள்ளவும் எதிர்கொள்ளவும் பழக வேண்டும்.
என்னைப்பொறுத்தவரை ரஜினி வருவதும் சரி குறித்த நிறுவனம் வீடு கட்டிக்கொடுத்து விளம்பரம் செய்துகொள்வதும் சரி, முழுமையாக தங்கிவாழும் முதலாளித்துவ கட்டமைப்புக்குள் தன்னை ஒப்புக்கொடுத்து விட்ட இந்த நாட்டுக்குள் சலித்துப்போன ஒன்றாகவே கடந்து விட நினைத்தேன். ஏனெனில் இந்திய சினிமா நிறுவனங்களும் சரி நடிகர்கள் எனும் தனிமனித காப்ரேட்டுக்களும் சரி வெளிநாடுகளில் கேளிக்கை நிகழ்வுகளை வைத்துக்கொள்வதோ , ஈழத்தை சொல்லிக்காட்டி மேடைகளில் நீலிக்கண்ணீரைப் பிழிந்து ஊத்தி  தமிழர்களிடம் டிக்கற்றுக்களை விற்று பெரிய பட்ஜெட் படங்களை  ஓட்டி  காசு பார்ப்பதோ நமக்கு சலித்துப்போனதுதானே . அதை விட எரியும் பிரச்சினைகள் கண்முன்னே இருக்க தூரத்திற்கு எதற்கு செல்லவேண்டும் என்று ரஜனியையும் அவர் வருகையையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டேன்.
இவ்வளவு நாள் கழித்து , இந்தியாவில் – தமிழ்நாட்டில் நிஜமான உணர்வுடன் போராடிய மக்களுக்கோ ஒடுக்கப்படுபவர்களின் பொருட்டோ குரல் கொடுக்காத ரஜினி, தன்னுடைய படத்தின் புரமோசன் களியாட்டமும் வருகையும் தடைப்பட்டவுடன் ஈழத்தமிழர்களின் வீரத்தையும் , போராட்டத்தையும் வார்த்தை ஜாலங்களால் புகழ்ந்து தன்னுடைய வருகையை அரசியலாக்காதீர்கள் ”தான் மக்களை மகிழ்விக்கும் கலைஞன்” என்று விட்ட உணர்ச்சிப்பொய்கள் தெறிக்கும் அறிக்கையை வாசித்தேன் . அதில் அவர் குறிப்பிட்ட, எதிர்ப்புத் தெரிவித்த தலைவர்களின் பெயர்களையும் அவதானிக்க முடிந்தது.
இந்த இடத்தில் தமிழ்நாட்டின் தனி மனித காப்பரேட்டான கோடீஸ்வர முதலாளி ரஜனியையும் , அங்கு ஈழம் என்ற பெயரில் நம்முடைய காயங்களில் சீழ்களையும் இறந்த உடல்களையும் வைத்து அரசியல் செய்யும் சீமான் , வைகோ , திருமுருகன் காந்தி போன்றவர்களையும் நான் ஒன்றாகவே பார்க்கின்றேன். இங்கே போஸ்ரர்களில் அவர்களுக்கு எதிராக அடிக்கப்பட்ட வாசகங்களையும் அவர்களையும்  ஒரே தளத்தில்  தான் எதிர்கொள்ள வேண்டும்.  உண்மையில் இனவழிப்பை மேற்கொண்டவர்களை விட இவர்கள் மோசமானவர்கள்.
இனி

ஈழத்தில் நேற்று நடந்த போராட்டத்திற்கு வருவோம். முன்பு சொன்னதைப்போல சமகாலத்தில் ஈழத்தைப்பொறுத்தவரை ஒரு போதுமில்லாத சனநாயக போராட்டங்களையும் வெற்றிகளையும் , மீண்டும் துளிர்க்கும் மக்களின் கூட்டு நம்பிக்கைகளையும் கண்முன்னே காண்கின்றோம். தொடர்ச்சியாக காணாமல்போனவர்களுக்காகவும் நிலங்களுக்காகவும் மரபுரிமைகளுக்காகவும் நீதியின் பொருட்டும் மக்களின் குரல்கள் சனநாயக வழிகளில் ஒன்று படுகின்றது. ஆயுதப்போராட்டத்தை கடந்து வரும்போது உடைக்கப்பட்ட எல்லா நம்பிக்கையும் வாழ்வும் மீளகட்டப்படவேண்டிய தருணமாக மக்கள் இதனை உணரத்தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் இப்படியொரு காப்ரேட் நிறுவனம் மக்களின் வறுமையை பயன்படுத்திக்கொண்டு சுயலாபம் தேடிக்கொண்டு நாட்டின் சமூக நிலமைகளுக்குள் “சனநாயக வழிப்போராட்டத்தை” கையில் எடுத்துக்கொண்டு பணத்தின் மூலம்  சமூக அரசியலின் உள்ளே வருவது இத்தனை காலமும் திணிக்கப்பட்ட இன வன்முறையை விட மிகக்கொடூரமானது. இது இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசிய இனங்களின் மனித இருப்பையும் அழிக்கப்போகும் முதல் நச்சு வேர்.
ஈழத்தின் அரசியல் என்பதும் , சமூக அமைப்பு என்பதும் இத்தனை வருட இலவசக்கல்வி மூலமும் , சமூக போராட்டங்கள் மூலமும் தமிழ்நாட்டை விட முன்னேற்றமான கூட்டு மனத்தையும் செயலையும் கொண்டது. தமிழ்நாட்டுச் சினிமா போன்ற கதாநாயகத்துவத்தை நம்பி பாலாபிஷேகம் செய்து அரசியல் அதிகாரத்தை  மிக்சிக்கும் டீவிக்கும் விற்கும் மனநிலை இதுவரை இங்கே இருந்ததில்லை, ஆனால் நேற்றைய சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கின்றது.
நல்லூருக்கு வந்த மக்களில் பெரும்பாலான முதிர்ந்தவர்களும் , நடுத்தரவயதுக்காரர்களும் ”வீடு” தரப்படும் என்று சொன்னதாலேயே புறப்பட்டு வந்துள்ளனர். இளைஞர்கள் அதன் பின்னணியோடு அவர்களின் இளமை தொடர்பான வறுமைகளை தீர்க்கவும் கதாநாயக மோகத்தின் பின்னணியில் வருகை தந்ததாக அறியமுடிகின்றது. இது கூட அந்த இளைஞர்களின் வறுமையின் பின்னணியில் நிகழ்ந்திருக்கலாம். அத்துடன் “தலைவா” போன்ற தமிழ்நாட்டு கதாநாயத்துவ உணர்ச்சிக்கோசங்கள் எழுத்துப்பிழையுடன் அடித்து கொடுக்கப்பட்ட பதாகைகளில் முகத்தை மறைத்துக்கொண்டும் , ஊடகவியலாளர்கள் கேட்பதற்கு உடலை நெளித்து தமது வறுமையையும் இயலாமையையும் சொல்ல முடியாமல் சொல்லிக் கொடுத்ததை திக்கி திணறிய ஒப்பித்த என்னுடைய சனத்தையும் பார்த்தேன்.
நேற்றைய தினம் முகநூலிலும் சரி அதற்கு வெளியிலும் சரி மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த இளைஞர்கள் தொடக்கம் அனைவரும் குறித்த மக்களை திட்டித்தீர்த்தனர். போராட்டம் என்று சொல்லி நல்லூரில் கொண்டுவரப்பட்ட மக்களிடம் சென்று ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்கும் போது அவர்கள் யாரோ சொல்லி குடுத்ததை தட்டுத்தடுமாறி ஒப்பிக்கின்றனர். அவர்களுக்கு அவர்களின் ஆன்மா அடமானம் வைக்கப்பட்டு சமூக வாழ்வு சுரண்டப்படுவது தெரியாது. உண்மையில் அவர்களில் பெரும்பாலானவர்கள் பாவம்; இந்த நாட்டின் சமூக பொருளாதார பூதங்களுடன்  அன்றாடம் போராடும் அடித்தட்டு மக்கள்; அவர்களுக்கு வீடில்லை , நிலங்களில்லை. அவர்களிடம் போய் ஊடகவியலாளர்களும் சரி ஏனையவர்களும் சரி மிக கடுமையான தொனியில் அவர்களை கொலைக்குற்றவாளிகள் போல விசாரிக்கின்றோம். உண்மையில் அந்த மக்கள் அங்கே திரண்டதற்கு நாம் எல்லோரும் தான் காரணம்.

அந்த போராட்டம் ஒரு கேலிக்கூத்து  :என்றும்  இது ஒரு சமூகப்பிரழ்வு , தமிழ்நாட்டில் நிலவும் அதே அபத்த மனநிலை என்றும் நமக்கு புரிகிறது . ஆனால் இது எந்த பின்னணியில் தோன்றியது என்று நமக்கு தெரியாது. அதை எப்படி எதிர்கொள்ளப்போகின்றோம் , இந்த பிரச்சினையின் மூலவேர்கள் எவையென்பதை நாம் யோசிக்கவுமில்லை உரையாடவுமில்லை.
அடிப்படையில் போரின் பின்னர் தொடர்ச்சியாக மக்களின் வாழ்வை பேரினச்சூழலின் பின்னணியில் இலங்கை அரசு புறக்கணிக்கின்றது. அடித்தட்டு மக்களைப்பற்றி அரசுக்கு கவலையில்லை. பொருளாதாரத்தை மட்டும் சிந்திக்கும் முதலாளித்தவ அரசுக்கு இனச்சண்டை , சாதிச்சண்டை , மதச்சண்டை எல்லாமே அதிகாரத்தை மக்கள் கேள்வி கேட்காமல் வைத்திருக்க உதவும் கருவிகள்தான். இதைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட காப்ரேட் நிறுவனம் சர்வதேச அளவில் இயங்கும் ஒரு நவீன ஊடகத்துறையையும் தொழில்நுட்பத்துறையையும் மையப்படுத்திய நிறுவனம். கிடைக்கின்ற தகவலின் படி இப்படியான பல நிறுவனங்கள் தொடர்ச்சியாக சினிமா பிரபலங்கள் ஊடாகவும் அரசியல்வாதிகள் ஊடாகவும் இலங்கையில் பெரிய ஊடக வலயமைப்பை நிறுவ முயற்சிக்கின்றன. இந்தியாவில் அம்பானியும் அவர் நிறுவனமும் எவ்வாறு ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் அரசியலையும் ஆட்டும் இந்தியாவின் விதியை தீர்மானிக்கும் ஒரு பெரும் பூதமாக மாறியதோ அதே போல இலங்கை அரசையும் அதன் அரசியல் , பொருளாதாரத்தையும், தன்னிறைவையும் சுரண்டும் பெரும் சர்வதேச நிறுவனங்கள் உள்வருவதற்கான முயற்சியின் ஒரு வடிவம் தான் இது.
இது வெறும் ரஜனி வராத பிரச்சினையில்லை. ரஜனி என்பது இந்த பெரும் முதலாளி இயந்திரங்களை மறைத்து கேளிக்கை நிகழ்த்தும் உருவம். இவ்வுருவத்தை ஆட்டிவிக்கும் பொம்மை நூல் ரஜனியில் தொடங்கி பெரும் முதலாளிகளிடமும் , அகண்ட இந்திய தேசிய வாதம், மற்றும் இந்துத்துவ பேரரசு கனவுடன் இருக்கும் இந்திய தலைவர்கள் , உலகத்தலைவர்களின் கைகளில் பின்னிக்கிடக்கின்றதை நாம் உணர வேண்டும். அல்லது ரஜனியும் இப்பெரும் அடக்கும் , சுரண்டும் வலையமிப்பின் ஒரு சிறுகூறு எனலாம்.
இத்தகையை சமூகச்சுரண்டல்களும் சமூக ஆபத்துக்களும் உள்வருவதற்கு நாமெல்லாம் தான் காரணம்.
நாட்டின் வளத்தையும், தன்னிறைவையும் இருப்பையும் போர்ப்பூச்சாண்டியை காரணம் காட்டி முதலாளித்துவ அரசுகளிடம் அடகு வைத்து விட்டு , நாட்டின் பொருளாதார இருப்பையும் மக்கள் இறைமையையும் சிதைத்து விட்ட தேசிய அரசும் பலவீனமான பிராந்திய அரசும் அதன் ஊழல் மிக்க நிர்வாகமும் இதற்கு முதல் காரணம். அவ்வரசின் அரசாங்கத்தில் இருக்கும் ஒழுங்கானதும், மக்கள் நலனை சிந்திப்பதுமான அரசியல் போராட்டங்களை முன்னெடுக்காத அரசியல்வாதிகள் பெரிய காரணம். பொருளாதாரத்தை மீளகட்டுவதோ , சமூக வாழ்வை ஒழுங்குபடுத்துவதையோ விட்டு விட்டு பிரதான அரசியல் கோசங்களை உணர்ச்சிக்கோசமிட்டுக்கொண்டுமட்டும் இருக்கும் அரசியல் வாதிகளும் சரி அவர்களின் பிராந்திய நிர்வாகமும் சரி இவ்வாறு வறுமைப்பட்ட மக்களை மேலேற்றும் எந்த முயற்சியும் செய்வதாய் இல்லை . காலம்காலமாக சலுகைகளுக்கு ஏங்கும் மனநிலையிலேயே அவர்களை வைத்திருக்க நினைக்கின்றனர். ஒழுங்கான மீள் கட்டுமானம் செய்திருந்தால் அந்த மக்கள் எதோ ஒரு பன்னாட்டு கம்பனி வீடு தருகின்றோம் என்றதும் கியூவில் நின்றிருக்காது. தொழில் வாய்புக்கள் , நிலம் போன்ற அடிப்படையான பிரச்சினையுள்ள மக்களை வலுவூட்டும் செயற்பாடுகளை அரசுதான் செய்ய வேண்டும், ஆனால் அரசு சுய நலநோக்கங்களை கொண்டு இயங்கும் காப்ரேட்களிடம் அவற்றை ஒப்படைத்து விட்டு வேடிக்கை பார்க்கிறது.

 

ஊடகங்களைப்பொறுத்தவரையில் பெரும்பாலான ஊடகங்கள் இப்போராட்டத்தை எதிர்க்கின்றன. ஆனால் பொருத்தமான முறையில் மக்களுக்கு சிந்திப்பதற்குரிய எழுத்து வடிவங்களை அவை முன் வைக்க தவறுகின்றன. சுதேச ஊடகத்துறையும், ஊடக அறத்துடன் இயங்கும் ஊடகங்களும் தங்களின் வலைப்பின்னலையும் வெளிப்பாட்டு தூரங்களையும் சர்வதேச தரத்துக்கு விரிவாக்க வேண்டும். இந்திய சினிமா , இந்திய ஊடகங்களின் ஆக்கிரமிப்பே இத்தகைய ஆபத்துக்களையும் அபத்தங்களையும் மிக வேகமாக் கடத்துகின்றன. எங்களுடைய புண்களையும் கண்ணீரையும் எங்களிடமே விற்று காசாக்கின்றன இந்திய ஊடகங்கள்.

அறிவுப்புலத்தை வடிவமைத்து சமூகத்தை கட்டமைக்க வேண்டிய பல்கலைககழகங்களும் இப்போது வரும் ஆபத்துக்களை எதிர்கொள்ளும் அசைவினைப்பலவீனமாக்குகின்றன. அறிவுப்புலத்தை உருவாக்க வேண்டிய பல்கலைக்கழகங்கள் பகிடிவதை பிரச்சினை, வரவேற்பு கேளிக்கையில் பிரச்சினை என்று முரண்பாடுகளுக்குள்ளும் கேளிக்கைகளுக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. சமூக பிரச்சினையில் பல்கலைக்கழகங்களின் குரல் என்பது மிக மெதுவாக எங்கோ ஒரு தொலைவில் ஒலித்து ஓய்கிறது அவ்வளவுதான்.
அவதானித்துப்பார்தால் சமீபத்தில் நடந்த அறவழிப் போராட்டங்களில் சிறுவர்களும் பெண்களும் ஆர்வமாக பங்கெடுக்கின்றனர். இளைஞர்கள் அதுவும் போரின் காலத்தில் பிறந்த (90களில்) இளைஞர்கள் பெரும் சலிப்பானதும் சோம்பேறித்தனமானதும் பயந்ததுமான போக்கினை காட்டுகின்றார்கள். ஒரு போரின் பின்னர் இருக்கும் ஒரு உளவியல் மனநிலையாகக்கூட இது இருக்கலாம். ஆனால் தொடர்ச்சியாக அவர்களை நாங்கள் வலுவூட்டவேண்டும் , அப்படியானால்தான் ஆர்வமாக சமூகத்தினுள் நுழையும் அடுத்த தலைமுறை சனநாயக கருவிகளை கைகளில் தாங்கிச்செல்லும். இதனை நிகழ்த்த வேண்டிய பொறுப்பு கல்விப்புலத்திடம் தான் உள்ளது.
மேலும் எழுத்தாளார்கள் , கலைஞர்கள் , புத்திஜீவிகள் , சிவில் அமைப்புக்கள் , பொது அமைப்புக்கள் , சமூக செயற்பாட்டு அமைப்புக்களின் செயற்பாடுகள் தொடர்ந்தும் சிறிய அளவிலேயே முன்னெடுக்க படுகின்றன. ஈழத்து எழுத்தாளர்கள் , எந்த சமூக பிரச்சினைகளிலும் தலையிடுவதில்லை , சமீப காலமாக நடக்கும் சனநாயக வழிப்போராட்டங்களில் 90 % மான எழுத்தாளர்களும் சரி கலைஞர்களும் சரி பங்களிப்பை வழங்கவில்லை. குறைந்த பட்சம் ஒரு கட்டுரையை கூட வீட்டில் இருந்து மக்களின் பொருட்டு எழுத அவர்கள் தயாராக இல்லை. அவர்கள் ஒவ்வொருவருக்கும் அரசாங்க வேலை இருக்கின்றது , குமாஸ்தா எழுத்தாளார்களைப்போல் சமூக அசைவில் எந்த பங்கலிப்புமிலலத ஆக்கங்களை எழுதிக்கொண்டிருக்கின்றனர் .நவீன நீரோ மன்னகளைப்போல பிடில் வாசிக்கும் இத்தகைய எழுத்தாளார்களும் கலைஞர்களும் மக்களுக்கு அறி வூட்ட உழைக்க வேண்டியவர்கள் , நேற்று அவர்கள் அடித்த போஸ்ரரில் வடமாகாணத்தின் கலைஞர்கள் என்ற பெயரிலேயே அழைப்பு அடிக்கப்பட்டிருந்தது.ஒரு காப்ரேட் நிறுவனத்திற்கு தெரிகின்றது மக்கள் கலைஞர்களை நம்புவார்கள் என்று ஆனால் கலைஞர்களுக்குத்தெரியவில்லை என்பதுதான் இந்த சமூகத்தின் பெருஞ்சாபங்களில் ஒன்று.

இவ்வாறு வெறும் போராட்டத்தில் பங்கொண்ட அப்பாவி ஏழை எளிய மக்களை குற்றம் சொல்வதை விட்டுவிட்டு நாம் சமூக உரையாடல்களை மூளை உழைப்பின் மூலமும் உடல் உழைப்பின் மூலமும் முன்னெடுக்க வேண்டும். நகரங்களை விட்டும் மேல்தட்டு , மத்திய தர வர்க்க மனநிலைகளில் இருந்தும் விலகி ஒடுக்கப்படும் மக்களாகவும் , இந்த தேசத்தின் ஆன்மாவாகவும் இருக்கும் மக்களின் கிராமங்களை நோக்கி போக வேண்டும் , அவர்களுக்கு இடையில் உரையாடலையும் கூட்டு மனத்தையும் சிந்தனையும் நாம் உருவாக்க வேண்டும். நம்முடைய இறுதி நம்பிக்கை மக்கள்தான். அந்த எளிய மக்களின் செயல்தான் கொடும் முதலாளிகளையும் , சுரண்டும் அதிகாரத்தையும் உடைக்கவல்லது. அதை அவர்களுக்கு சொல்லிகொடுக்க வேண்டும். எல்லையற்ற கருணைமிக்கவர்கள் அவர்கள். இந்த சமூகத்தை அவர்களிடமிருந்து கொண்டு வருவோம். எம்முடைய காயங்களும் கண்ணீரும் விற்கப்படுவதையும் வாங்கப்படுவதையும் எதிர்க்கவேண்டும்.
அதற்கு ஒரே வழிதான் , காந்தி சொன்னது.
நீ சமூகத்தில் மாற்றத்தை காண எண்ணுகிறாயா, நீயே மாற்றமாக இருக்கத்தொடங்கு.

 

-யதார்த்தன்

Share this Post

Leave a Reply