yathaadmin/ February 1, 2017/ கட்டுரை/ 0 comments

 

 

இனி நாங்கள் ஊடகங்களில் போலி மருத்துவர் , போலி மருந்து , போலி வைத்திய சாலை போன்ற சொற்களைக்கேள்விப்படப்போகின்றோம். சினிமாக்களில் வருவதைப்போல  வயிற்றுக்குள் கத்தியையோ , மணிக்கூட்டையோ வைத்து தைக்கும் சுவாரஸமான செய்திகள் அதிகரிக்கப்போகின்றன.

இதுவரை தென்னாசியாவின் தரமான மருத்துவ சேவை நிலவும் நாடுகளில் ஒன்றான இலங்கையின் மருத்துவ சேவைகளின் கட்டிறுக்கமும் தரமும் மிக்க செயற்பாடுகளில் தரமற்ற மருத்துவர்களை உற்பத்தி செய்யக்கூடிய முதலாளித்துவ மருத்துவர்களின் உற்பத்திக்கூடங்களுக்கு மேன்மை தங்கிய இலங்கை சனநாயக சோசலிசகுடியரசின் நீதித்துறை அங்கீகாரம் அளித்துள்ளது. அதாவது இதனை இன்னொரு வகையில் சொன்னால் தரமற்ற மருத்துவத்தின் இடைவருகைக்கு எதிராக போராடிய இலங்கை மருத்துவ உலகம் தனது போராட்டத்தில் தோற்றுப்போயுள்ளது.

ஒரு நிஜமான மக்கள் போராட்டம் என்பது  சின்ன அசைவினைக்கூட ஏற்படுத்தாமல் எப்போதும் தோற்றுப்போகாது , அது குழாயில் தண்ணீர் வரவில்லை என்பதில் தொடங்கி பெரும்  விடுதலைப்போராட்டம் வரை பொருந்தும், அசலான ஒரு மக்கள் போராட்டத்திற்கு கண்முன்னே உருத்திரளும் வெற்றியென்பது கிடைக்காமல் போகலாம் ஆனால் அது முழுவதுமாக இறந்து போகும் ஒன்றல்ல. அதன்  தொடர்ச்சியென்பது இருந்தபடியே இருக்கும். அதன் ஒற்றைப்பொறியேனும் மீண்டும் ஒரு பெரு நெருப்பை தனக்குள் வைத்தபடி காத்திருக்கும். ஆனால் இலங்கை முழுவதும் முன்னெடுக்கப்பட்ட தனியார் மருத்துவத்திற்கு எதிரான போராட்டம் என்பது இவ்வளவு மோசமாக கண்முன்னே நீத்துப்போக என்ன காரணம் ?

காரணம் மிக சிம்பிளானது , போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்படாமல் இருந்ததாகும். ஆனால் இவ்வாறு ஒற்றை வரியில் முடிந்து போகுமளவிற்கு ஒரு போராட்டத்தை , அல்லது எதிர்க்குரலை மக்கள் மயப்படுத்துவது என்பது அத்தனை சுலபமில்லை. அதற்கு வெறும்  உரப்பான குரலும் , பதாகைகளும் மட்டும் போதாது. அது சிந்தனை உழைப்பையும் உடல் உழைப்பையும் கொண்டு ஒரு ஆத்மார்தமான மக்கள்குரலாக , மக்களின் எதிர்ப்பு வடிவமாக வெளிப்படுத்தப்படவேண்டியதொன்றாகும்.  அது ஒரு சமூக வாழ்க்கை முறைமையுமாகும்.

தனியார் மருத்துவ கல்வியின்  வருகைக்கு எதிராக போராட வேண்டும் என்று முடிவெடுத்த , இலங்கை முழுவதும் உள்ள குழுக்கள் தாங்கள் ஏன் தோற்றுப்போனோம் என்பதை இப்போது ஆராய வேண்டும்.

இது மாதிரியான தனியார் மருத்துவ கல்லூரிகள் என்பவை வெறும்   சிறு குழுமத்தால் இயங்கும் அமைப்புக்கள் அல்ல , வெளித்தோற்றத்தில்தான் அது அவ்வாறு தெரியும் , உண்மையில் பெரும் தனியார் கம்பனிகள் என்பவை இந்த அரசினால் காவல் காக்கப்படும் பொன் முட்டை போடும் வாத்துகள். அவை ஒப்பீட்டளவில் குழந்தைகள் போல் தோன்றலாம் , ஆனால் அவை அரசின் குழந்தைகள். அவற்றை எதிர்த்து இல்லாமல் செய்ய மக்கள் குரலால் மட்டுமே முடியும் , அந்த மக்களின் கூட்டுக்குரலை எப்படி உருவாக்குவது என்பதை அறியாமலே தோற்றுப்போயாகிவிட்டது .மக்களின் குரலை  திரட்டுவது என்பது சினிமா ஒன்றை பார்க்க மக்களை அழைப்பது போலில்லை , அது ஒரு வகையான  வாழ்க்கை முறை. அந்த வாழ்கை முறையை கடைப்பிடித்து மக்களை திரட்டுவதில் போராட்டக்காரர்கள் தவறிவிட்டார்கள். ஏன் மக்கள் நமக்காக வரவில்லை. மக்களுக்கு ஏன் இது அவர்களுக்கான போராட்டம் என்று புரியவில்லை ? ஏனென்றால் மக்களுக்கு அந்த பிரச்சினையை புரிய வைக்க கூடிய மக்களுடன் உரையாடக்கூடிய மொழியை நாம் கொண்டிருக்கவில்லை.

அரச மருத்துவ கல்வி அரச மருத்துவ சேவையில் இருப்பவர்கள் இந்த பிரச்சினையை மக்களிடம் சொல்வதற்குரிய ஆன்ம பூர்வமான ,  மனத்தினைகொண்டிருந்தார்களா ? அதற்குரிய வாழ்க்கை முறை போராட்ட காரர்களிடம் இருந்ததா ?

இந்த போராட்டத்தை முன்னெடுத்தவர்களின் பிரதானமானவர்கள்  இலங்கை அரச  மருத்துவக்கல்வித்துறையில் இருந்து அரச மருத்துவ துறைக்குள் நுழைந்தவர்களும் நுழையப்போகின்றவர்களும். குறிப்பாக பலகலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள். அதாவது பிரச்சினையின் வீரியத்தை அசலாக விளங்கிக்கொள்ளக்கூடிய தரப்பு. இத்தரப்பு என்பது சமூக மட்டத்தில் மிக  மதிப்பு மிக்க உயர் குழாமாக தங்களைக் கருதிக்கொள்ளும் அமைப்பு. “டொக்கரிட்டையும் வக்கீலிட்டையும் பொய் சொல்லகூடாது” என்றும் அளவிற்கு மக்கள் நம்பிக்கை வைக்கும் ஒரு குழாமாக அது இருக்கின்றதா?. அப்படிப்பட்ட ஒரு குழாம் அழைப்பு விடுத்தும் ஏன் மக்கள் வரவில்லை ? உண்மையில் மக்களிடத்தில் மருத்துவர்கள் சேவை வழங்குனர்களாக கருதப்படுகின்றார்களா?

தனிப்பட்டு மக்கள்  மருத்துவர்களை தற்காலத்தில் எப்படிப்பார்க்கின்றனர் என்பதனை மருத்துவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். எனக்குத்தெரிந்து மருத்துவர்கள் என்போர் மக்களைப்பொறுத்தவரை வியாபாரிகளே. முன்பு இலவச மருத்துவம் அல்லது மக்கள் நலன்புரி மருத்துவமாக இருந்த அரச மருத்துவம் மக்களால் , போற்றுதலுக்குரிய மதிப்புக்குரிய ஒன்றாக இருந்தது. ஆனால் அது உலக மருந்து மாபியாக்களின் ஏஜண்டுகளாகவும் , பணம் தனியார் மருத்துவ மனைகளின்  கைக்கூலிகளாகவும் மக்கள் மருத்துவர்களைக் கண்டுகொண்டார்கள்.

அரச மருத்துவ மனைகளில் லைனில் நின்று காணமுடியாத வைத்தியர்களை இலகுவாக  தனியார் கிளின்க்குகளில் மக்கள் கண்டுகொண்டார்கள் , அரச மருத்துவமனைகளில் சிடு சிடுக்கும் , இறுக்கமான முகங்கள் தனியார் மருந்தகங்களில் புன்னகையுடன் அவர்களை வரவேற்றன. மக்களுக்கு மிக நெருக்கமாக இருந்த வைத்தியர்களையும் மக்களையும் ஏசி போட்ட கார் கண்ணாடிகள் பிரித்தன. வைத்தியர்கள் ஒரு சேவை சார் தொழிலாக இல்லாமல்  ஒரு தனியான  முதலாளித்துவ வர்கமாக மாறினார்கள். எங்கோ ஒரு சில மருத்துவர்களை தவிர சேவை நிலையில் இருந்த மருத்துவம வியாபார நிலைக்கு மாறியது. மக்கள் ஒரு பலசரக்கு கடை முதலாளியிடம் நல்ல அரசியை வாங்கி விடவேண்டும் என்ற கரிசனையுடனான உரையாடலையே மருத்துவர்களோடும் மேற்கொள்ள தொடங்கினர் , மக்களின் மனங்கள் இப்படியிருக்க தீடிரென்று மருத்துவர்கள் மக்களுக்கு பிரச்சினை வரப்போகின்றது , ஏழைகள் பாதிகப்படப்போகின்றார்கள். என்றால் மக்கள் நம்பிடுவிடுவார்களா என்ன ? எக்ஸ்ரே மிசின் பழுதாகிப்போனால் மக்கள் பாதிப்பப்படுவார்கள் என்று நீங்கள் அரசிடம் எக்ரே மிசின் வேண்டும் என்று போராடியிருக்கிறீர்களா? சிம்பிளாக துண்டு சீட்டில் ஆயிரக்கணக்கில் வெளியில் எக்ஸ்ரே எடுத்துவரச்சொல்லி அனுப்பி விடுகின்றீர்கள்.  சில லட்சம் முதலுடன் இயங்கும் தனியார் மருந்து கடைகளில் கிடைக்கும் மருந்து அரச மருந்தகத்தில் இல்லை என்று ஏன் நீங்கள் குரல் கொடுக்கவில்லை , சீட்டெளுதி வெளியில் வாங்கச்சொல்கின்றீர்கள் ?  ஏன் இது மக்கள் பிரச்சினையில்லையா ?

சரி மக்களை விட்டு விடுவோம் மருத்துவ துறையையே எடுத்துக்கொள்வோம் , மருத்துவ துறைக்குள்ளேயே மருத்துவர்கள் ஒரு வர்க்கமாகத்தானே தொழில்படுகின்றார்கள். தாதிகள் தங்களுக்கு ஒரு பிரச்சினை என்று போராடும் போதோ , மருத்துவ துறை சார் விளிம்பு நிலை தொழிலாளிகள் தங்கள் பிரச்சினைக்காக போராடும் போது ஒற்றைக்குரலாவது மருத்துவர்கள் கொடுத்திருக்கின்றார்களா ?

அடிப்படையில் ஒரு விடயத்தை புரிந்துகொள்ளுங்கள் , தனியார் மருத்துவ கல்லூரிகள் வருவது மக்களுக்கு ஆபத்துதான் . ஆனால் அதை ஏன் மருத்துவர்களால் மக்களிடம் சொல்லி மக்கள் குரலை திரட்டமுடியவில்லை என்றால் , தீடீரென நீங்கள் மக்களுக்காக குரல் குடுப்பதன் பின்னனியில் உள்ள சுயநலம் மட்டுமே. உங்களுடைய தொழில் பாதிக்கும் என்ற  பயம் மட்டுமே. உங்களுடைய  உயர்குழாம் நிலை , மிகச்சுலபமாக பகிர்ந்துகொள்ளப்படப்போகின்றதே என்ற கவலை மட்டுமே.  அதனால் இந்த விடயத்தை மக்களுக்கு புரியும் குரலில் உங்களால் பேச முடியவில்லை. அதற்கான வாழ்க்கை முறை பெருவாரியான மருத்துவர்களிடம் இல்லை. இப்படியிருக்க மக்கள் மயப்பட்ட ஒரு போராட்டட்தை எப்படி மருத்துவர்களாலோ அல்லது மருத்துவர் ஆகப்போகின்றவர்களாலோ உருவாக்க முடியும்.

துறைசார்ந்தோ , துறைக்கு வெளியிலோ மக்கள் போராடும் போதும் , அல்லல்படும்  போதும் ஒரு சில மருத்துவர்களை தவிர பெருவாரியான மருத்துவர்களின் பொதுக்குரல் எங்காவது ஒலித்ததுண்டா ?

வன்னியில் இருக்கும் போது , போர்க்காலங்களில் சம்பளம் கூட வாங்காமல் இயங்கிய ஏராளம் மருத்துவர்களைப்பார்த்திருக்கிறேன். இங்கும் சேவை நோக்கோடு வேலை செய்யும் , சமூக அக்கறைகொண்ட மருத்துவர்களை எனக்குத்தெரியும் இங்கே அவர்களின் அளவு என்பது மிகச்சொற்பமானதுதான். ஆனால் பெருவாரியாக மருத்துவத்துறை மக்களின் ஆன்மாவில் இருந்து மிகத்தொலைவாகவே இருக்கின்றது.

அடுத்து மருத்துவர்கள் ஆகப்போகின்றவர்களும் இந்த போராட்டத்தை முன்னெடுத்தவர்களுமான மருத்துவ மாணவர்களை பார்க்கவேண்டும்.  யாழ்ப்பாணத்தையும் யாழ்ப்பாண பல்கலைககழகத்தையும் சேர்ந்த மாணவர்களை எடுத்துக்கொள்வோம் . முதலில் யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தில் மருத்துவ பீடத்தின் இயங்கு முறைமை எப்படிப்பட்டது என்பதனை விளங்கிக்கொண்டால் , அவர்களால் ஏன் மக்களை திரட்ட முடியவில்லை , சக பீடங்களை சேர்ந்த மாணவர்களைத் திரட்ட முடியவில்லை என்பது விளங்கும்.

யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தினைப்பொறுத்தவரை மருத்துவ பீடம் என்பது அமைந்திருக்கும் இடத்தாலும் சரி வளத்தாலும் சரி , மாணவ மனநிலையாலும் சரி  தனியாக தன்னை தகவமைத்துக்கொண்ட ஒன்று. யாழ் பல்கலையைப்பொறுத்தவரை மருத்துவ பீட மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் எந்த போராட்டத்திலும் பங்குபற்றியது கிடையாது. குறைந்த பட்சம் ஒரு அறிக்கையைக்கூட விடுவதில்லை. சக பீட மாணவர்களுடன் பழகுவதோ கிடையாது. பல்கலைக்கழக மாணவர்கள் சுடப்பட்ட போதும் கூட தனிப்பட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு சிலரைத்தவிர பெரும்பான்மையான மாணவர்கள் லீவு எடுத்துக்கொண்டு வீடுகளுக்கு போய்விட்டனர். கேட்டால் படிப்பு , அசெய்ன்மெண்ட் , கஸ்ரம் , இது மெடிக்கல்  சும்மா இல்லை என்பார்கள்.

சுதேச மருத்துவ முறைகளான சித்த மருத்துவ  , யுனானி மருத்துவ துறைகள் பல்கலைக்கழகத்திலும் சரி , வெளியில் வேலை செய்வதிலும் சரி பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.  பட்டம் பெறுவதில் தொடங்கின் தொடர்ச்சியாக தங்களின் பிரச்சினைகளுக்கு வலிமையான குரலற்று இருக்கின்றன, அவற்றிற்கு நீங்கள் குரல் கொடுத்து இருக்கின்றீர்களா ? இப்போது எந்தமுகத்தை வைத்துக்கொண்டு அந்த மாணவர்களின் முன் போய் நின்று போராட வாருங்கள் என்பீர்கள் ?

இப்படியிருக்க எப்படி பல்கலைக்கழகம் மருத்துவமாணவர்களின் குரலைக்கேட்கும். ஒரே பல்கலைககழகத்தில் படிக்கும் மாணவர்கள் சுடப்பட்ட போது கூட தெருவுக்கு இறங்காதவர்களின் , ”ஐய்யகோ ஏழைகள் பாதிக்கப்படுவார்காள் ” “போலிமருத்துவம் பாதிக்கப்படும்” என்ற  கோசங்களை நம்புமளவிற்கு பல்கலைக்கழக மாணவர்களும் சரி மக்களும் சரி முட்டாள்களோ அன்மா அற்றவர்களோ கிடையாதுதானே.

அடிப்படையில் இவ்வகையான விடயங்களாலேயே இந்த போராட்டம் மக்கள் மயப்படுத்தப்படாமல் தோற்றுப்போனது. ஊடகங்கள் இதனைக்கவனிக தவறியதற்கும் இதுவே காரணமாக இருக்கும். இலங்கையின் ஊடகங்களே எல்லாதுறைகளுக்கும் முதல் வணிகநிறுவனங்களாக அல்லது அரசியல் பிரசார குரல்களாக மாறியவை. அவை அரசுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்காவிட்டால் , மக்களுக்கா அல்லாமல் தாம் சார்ந்த கட்சிகளுக்கு வாலாட்டி கொண்டிருக்கும். எப்போது போராட்டங்கள் மக்கள் மயப்படுகின்றனவோ அப்போதுதான் ஊடகங்களின் கண்கள் போராட்டத்தின் பக்கம் திரும்பும். இலங்கையைப்பொறுத்தவரை ஊடக தர்மம் , ஊடகங்கள் மக்களின் காவலர்கள் என்பதெல்லாம்  வெறும் மிகைக்கற்பனைகள்தான்.

ஒரு மக்கள் போராட்டம் என்பதும் சரி மக்கள் எழுச்சி என்பதும்சரி அரசியல் பயின்றவர்களாலோ புத்திஜீவிகளாலோ மட்டும் ஒழுங்கமைக்கப்படுவதில்லை. அது கலைஞர்களாலும் , எழுத்தாளர்களாலும், மாணவர்களாலும் , சிந்தனைக்குழாங்களாலும், செயற்பாட்டாளர்களாலும் ஒழுங்கமைக்கப்படுவது. அவர்கள் உங்களின் சார்பில் பேசுவதற்கு பணமோ , பதவியோ   தேவையில்லை , மக்களின் ஆன்மாவை பேசத்தக்க குரலில் நீங்கள் அவர்களுடன் உரையாடினால் போதும். உள்ளே சொந்த பிரச்சினைகளை வைத்துக்கொண்டு அதனை மக்களின் பெயரால் தீர்த்துகொள்ள முயன்றால் அவர்கள் உங்களை உடனே கண்டுபிடித்துவிடுவார்கள்.

இவ் அடிப்படையான காரணம் தவிர , போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் , அதுதொடர்பான சிந்தனை செயற்பாடு என்பன மருத்துவ பீட மாணவர்களுக்குன் அறவே கிடையாது ,  ஏசி அறைக்குள் நோட்ஸ்சை ஒப்பித்து விட்டு இருந்தால் மக்களின் பிரச்சினைகளைமட்டுமில்லை , சொந்த பிரச்சினைகளை கூட விளங்கிக்கொள்ள முடியாது. சமூக மட்டத்தினுள் வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டும். மருத்துவம் ஒரு பணம் கொழிக்கும் பிஸினசாக உலகம் முழுவதும் மாறிக்கொண்டிருக்கின்றது. உலக மருந்து மாபியாக்கள் உங்களுக்கே தெரியாமல் உங்களை தங்கள் ஏஜெண்டுகளாக ஆக்கிக்கொண்டிருக்கின்றன. அதற்கு இந்த முதலாளித்துவ அரசும் உடந்தை. உங்களுடைய மக்களில் இருந்து உங்களை பொருளாதார வர்க்க பிரிப்பினால் பிரிக்கின்றன. சேவை நிலையில் இருந்து மனிதர்களை சுரண்டும் பெருங்கம்பனிகளாக மருத்துவர்கள் மாறிப்போவது எவ்வளவு பெரிய சமூகப்பிறழ்வு.

சட்டரீதியாக இதனை எதிர்கொள்வதற்கு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மாணவர்களின் அறிவுப்புலத்தின் உதவியோ , போராட்டத்தை முன்னெடுக்க அவர்களின் ஆலோசனைகளோ பெறப்பட்டிருக்கலாம் . அது நடந்ததாகத் தெரியவில்லை. அடுத்து  இலங்கை முழுவதும் இயங்கும் சமூக செயற்பாட்டு இயக்கங்கள் , சிவில் அமைப்புக்கள்  என்பனவற்றை போராட்டத்துக்குள் உள்ளீர்த்திருக்கலாம் , அவை இருக்கின்றனவா என்று கூட தெரியாமல் பல்கலைக்கழக வளாகத்தினுள், சமூக அறிவே இல்லாமல் இருக்கும் மாணவர்களாய் இருந்து எந்த பயனுமில்லை.

இந்த தனியார் மருத்துவ கல்லூரிகளின் வருகையில் உள்ள பிரச்சினைகளைப்பற்றி தாங்கள் விளங்கிக்கொண்டவற்றை மக்களுக்கு சொல்ல ஒரு பதாகை வசனத்தைக்கூட எளிமையாக எழுதத்தெரியாமல் மருத்துவராகி என்ன செய்யபோகின்றீர்கள் என்பதை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

இதே மருத்துவபீடத்தில் இருந்து போராடப்போனவர்கள் இருக்கின்றார்கள் , மக்களின் பொருட்டு குண்டடி பட்டவர்களை பாதுகாத்து குணமாக்கியவர்கள் இருந்திருக்கிறார்கள். கொடும் அடக்குமுறைக்கு எதிராக மக்களின் குரலாக நின்று குண்டடி வாங்கியவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் இந்த நோய்க்கு இன்ன மருந்து கொடுக்க வேண்டும் என்று மட்டும் அறிந்தவர்கள் அல்ல , அவர்கள் மக்களை நேசித்தார்கள் , சமூக அடக்குமுறைகளைகளையும் சுரண்டல்களையும் எதிர்த்தவர்களாக இருந்தார்கள். அவர்களுடன் மக்கள் நின்றார்கள் , பரஸ்பரம் நம்பிக்கையை பகிர்ந்துகொண்டார்கள் , அவர்கள் மருத்துவர்களாய் மட்டுமில்லாமல் மனிதர்களாய் வாழும் வகை அறிந்திருந்தார்கள் . மருத்துவத்தில் அவர்கள் கலைஞர்கள் போல் இருந்தார்கள்.

சமூகத்திற்கும் உங்களிற்கும் இடையில் உள்ள இடைவெளியை விளங்கிக்கொள்ளுங்கள். ஏன் அந்த இடைவெளி வந்தது எனபதனை யோசியுங்கள். நீங்கள் சமூகத்தில் இருந்து பிரிந்து ஒரு உயர்குழாமாக மாறிப்போனதன் அபத்தத்தை மனம் கொள்ளுங்கள்.

ஆத்தாமார்தமாக இந்த பிரச்சினையை சுயநலம் இல்லாமல் அணுகத்தக்க வாழ்க்கை முறையினை மருத்துவர்கள் கொண்டிருந்திருந்தால் , இலங்கை அரசை உலுப்பி விடக்கூடிய சக்தி மருத்துவர்களிற்கு இருக்கின்றது. இலங்கை முழுவதும் இருக்கும் மருத்துவர்களும் சரி மருத்துவ மாணவர்களும்சரி ஒரு மணிநேரம் பணி செய்ய மாட்டோம் என்று ஆத்மார்த்தமான சமூக அக்கறையுடன் இந்த முதலாளித்தவ அரசினை எதிர்த்து குரலெழுப்பி வீதிக்கு வந்து பாருங்கள்  அங்கேதான் மக்கள் உங்களுக்காக  காத்திருக்கிறார்கள். அப்போது உங்களால் மக்களுக்கு புரிகின்ற மொழியில்  அவர்களுடன் பேச  இயலுமாயிருக்கும்.

-யதார்த்தன் –

Share this Post

Leave a Reply