yathaadmin/ January 20, 2017/ கட்டுரை/ 0 comments

 

 

 

நாம் வரலாற்றின் விளிம்பு நிலை குழுமத்தினராகவே உள்ளோம். வரலாற்றுத்தொடர்ச்சியை மீளக் கட்டவேண்டிய தேவைகளை தொடர்ச்சியாக உணர்கிறோம். அதன் பொருட்டு மிச்சமிருக்கும் மரபுகளையும் தொல்லியல் கையளிப்புக்களையும் அறியவும் ஆவணப்படுத்தவும் அடுத்த சந்ததிக்குக் கையளிக்கவும் வேண்டியுள்ளது. மிகக்குறைவாகக்கிடைக்கும் மரபார்ந்த தொல்லியல் பண்டங்களை வைத்துக்கொண்டு, அவற்றைத் தொடர்புபடுத்தி அதனைச் சூழ அமைந்த வரலாற்றினை உருவாக்குதல் என்பது ஒரு புனைவைப்போல் முன் வைக்கக் கூடியதல்ல. அது எல்லாவகை வரலாற்று மூலாதாரங்களின் கூட்டு மொத்தத்தின் ஊடாக கட்டியெழுப்பப்படுதலே அரோக்கியமானது.

ஈழத் தமிழ்ச் சமூகத்தினைப் பொறுத்தவரையில் வடக்குப்பகுதி வரலாற்றின் மைய வாசிப்பிடங்களில் ஒன்றாக இருக்கின்றது. குறிப்பாக அதன் கட்டடக்கலை மரபு பற்றிய எழுத்து முக்கியமானது. வாழும் அல்லது எச்சமாக இருக்கும் கட்டட ஆதாரங்கள் மிகக்குறைவாகவே எமக்குக்கிடைக்கின்றன. காலனியம், போர் என்பவை அதற்கு பிரதான காரணங்களாகவிருக்கின்றன. எனினும் கிடைக்கும் கட்டட மூலாதாரங்கள் முக்கியமனவையாகவும்  செறிவான வரலாற்று எழுத்துக்கான மூல வாசிப்பு நிலைகளைக் கொண்டுள்ள அமைப்புக்களாகவும் உள்ளன.

ஒப்பீட்டளவில் வடக்கில் அதிகம் வாழும், அல்லது எஞ்சியிருக்கும் கட்டக்கலைவடிவங்களாக ”மடங்களைக்” குறிக்கலாம். மடப்பண்பாடு பரவலாக வடக்குநிலம் சார்ந்து அமையப்பெற்று குறித்த காலத்தின் வரலாற்று வாசிப்பினையும் சமூக வாசிப்பினையும் நிகழ்த்த உதவுகின்றது. குறிப்பாக வடமராட்சியின் பருத்தித்துறையில் காணப்படும் இலங்கையின் ஒரேயொரு தெருமூடிமடத்தினை மையமாகக்கொண்டு இக்கட்டுரையைத் தொடர நினைக்கிறேன்.

ஈழத்தமிழ்ச் சமூகம் இந்திய – தமிழ்நாட்டு பண்பாட்டின் நீட்சியைப் பகிர்ந்துகொள்கிறது என்ற வரலாற்றுக் கற்பிதம் பரவலாகக் காணப்படுகின்றது. ஆனால் அதனிடம் கேரள, கலிங்க, அரேபிய, பர்மிய, மற்றும் ஐரோப்பிய பண்பாட்டு பகிர்வுகள் இருப்பதை சமநிலையில் வைத்துப்பார்க்கும் தன்மை நம்முடைய கடந்தகால வரலாற்று எழுத்துக்களில் உள்ளதா என்ற கேள்வி தொக்கு நிற்கின்றது . சமுத்திரத்தினால் இடை வெட்டப்படும், இந்துசமுத்திரத்தின் மத்தியில் இருக்கும் தீவு என்ற வகையில் அதனிடம் தனித்துவமான குணங்குறிகளை ஒழுங்கு படுத்தத் தக்க மொழி, பண்பாட்டு, கலை, கைவினை வடிவங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை. அது இந்திய உபகண்டத்திற்கு நெருக்கமாக இருப்பதால் அதன் பண்பாட்டினை உள்வாங்கிக்கொண்டாலும் அதை எவ்வாறு தன் நிலத்துக்குரிய வடிவமாக மாற்றிக்கொண்டது என்பது பற்றி ஆய்வுகள் தேவையாகவிருக்கின்றன.

 

மடப்பண்பாட்டினை எடுத்துக்கொண்டாலும்  இதே நிலையே உள்ளது. அதாவது இந்திய உபகண்டத்தினதும் ஐரோப்பிய காலனித்துவத்தினதும் கட்டடப்பண்பாட்டை உள்வாங்கியிருந்தாலும் இலங்கையின் மடங்களுக்கு என்று தனிக்குணங்குறிகள் இருக்கவே செய்கின்றன. அதனை விளங்கிக்கொள்ள இந்திய மற்றும் ஐரோப்பிய மடப்பண்பாடுகளைப்பற்றிச் சுருக்கமாக பார்த்து விடுவது அவசியமாயிருக்கும்.வரலாற்றின் மிக நுண்ணியதும் தொடக்கமாயும் இருக்கவேண்டியது மொழி ஊடான வாசிப்பு என்ற வகையில் “மடம் ” என்ற சொல்லின் மொழி நிலை வாசிப்பினைக் கவனிக்கலாம்.

தமிழில் மடம், பன்னசாலை, ஆச்சிரமம், சத்திரம், பள்ளி என்ற சொற்களையும் ஆங்கிலத்தில் monastery என்ற சொல்லையையும் சிங்களத்தில் பிரிவெனா என்ற  சொல்லையும் இங்கே எடுத்துக்கொள்ளலாம். தமிழில் பன்னசாலை, ஆச்சிரமம் ஆகிய சொற்கள் மிக நெருக்கமானவை. காரணம் இலங்கைத்தமிழ்க் கிளைமொழிப் பேச்சு வழக்குகளில் பயன்படுத்தப்படாத இச்சொற்கள் இரண்டும் தமிழ்நாட்டில் வழக்கத்தில் உள்ளவை. சொல்லப்போனால் இச்சொற்கள் இரண்டும் ஒரே அர்த்தத்தினைப் பகிருபவை. ஆச்சிரமம் என்பது வடமொழியில் இருந்து இந்து சமயத்தின் ஊடாக தமிழிற்கு வந்த திசைச்சொல். அதற்கான நேரடியான தமிழ் வடிவமாக பன்னசாலையைக் கொள்ளலாம். குறிப்பாக இச்சொற்கள் இரண்டும் இந்து சமயத்தின் சாதுக்கள், துறவிகள், முனிவர்கள் வசிக்கும் இடங்களைக்குறிப்பவை. இச்சொற்கள் இலக்கிய வழக்கு தவிர ஈழத்தமிழில் பயன்படுத்தப்படுவதில்லை என்பது இங்கு ஞாபகப்படுத்த வேண்டியதாகும்.

அடுத்து சத்திரம் என்ற சொல், பொதுவாக சத்திரம் என்பதற்கு ஆறுமுகநாவலர் போன்றோர் கொடுக்கும் விளக்கம் ஞானிகள், துறவிகள், நோயாளர்கள், மாற்று திறனாளிகள், முதியவர்கள், பயணிகள் போன்றோர் தங்குமிடம் என்கின்றனர். குறிப்பாக இவ்வாறானவர்களுக்கு உணவு வழங்கும் இடமாக சத்திரங்கள் இருந்திருக்கின்றன; அதாவது சத்திரமானது அன்னதானம், விருந்தோம்பலுடன் நெருக்கமாக இருக்கும் கட்டட அமைப்பினைக்குறிக்கும் சொல் என்பதை மனத்திற் கொள்வோம்.

 

அடுத்து பிரிவெனா என்பதைப் பார்த்தால் சிங்களத்தைப் பொறுத்தவரை பெளத்தமதத்தின் வழியாக கிளர்ந்த சொல்லாக இது இருக்கின்றது. பெளத்த்துறவிகள் தங்கிக் கல்வி பயிலும் இடங்களை இவ்வாறு குறிப்பிட்டனர், இலங்கையைப் பொறுத்தவரை அரசியல், சமூக, சமயச்செல்வாக்கு கொண்ட இடங்களாக வரலாற்றுக்காலம் தொட்டே பிரிவெனாக்கள் இருந்தமைக்கான சான்றுகள் கிடைக்கின்றன. இவை வட இந்திய, சீன, பர்மிய, யப்பான் தேசங்களில் உள்ள பெளத்த கல்விக்கூடங்களை ஒத்த தன்மைகளைகொண்டிருப்பவை.

பள்ளிகள் என்று சொல்லப்படும் மடம் போன்ற கட்டட அமைப்புக்களைப் பொறுத்தவரையில், பள்ளிகள் பெரும்பாலும் சமண, பெளத்த மதம் சார்ந்த துறவிகள் தங்குமிடமாகவும் குருகுலக்கல்வி முறை சார்ந்த கூடங்களாகவும் இருந்துள்ளன.

இச்சொற்களின் அமைப்பு அர்த்தங்களோடு ஏதோ ஒருவகையில் தொடர்புபடும் “மடம்” என்ற சொல்லைப் பொறுத்தவரை, இந்திய பண்பாட்டில் இருந்த மடங்கள் கொண்டிருந்த உருவ உள்ளடக்கங்களில் இருந்து ஈழத்தின் பண்பாட்டுக்குள்  தெளிவான வேறுபாடுகளுடன் இயங்குவதனைக்காணலாம். அதனை விளங்கிக்கொள்ள இந்திய மடப்பண்பாட்டின் அமைப்பு மற்றும் அதன் தொடர்ச்சியினைக் கவனிக்கவேண்டும்.

மடப்பண்பாட்டினை பொதுநிலையாக இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

1.சமயம் சார்ந்தவை

2.சமயச்சார்பற்ற சமூக நிலைப்பட்டவை

சமயம் சார்ந்த கட்டட அமைப்புக்களாக பன்னசாலை ஆச்சிரமம், இரண்டும் இந்து சமயத்தின்  படியான சன்யாசத்தினோடு தொடர்புபட்டவை, அதேவேளை இந்தியாவில் இருக்கும் சமயம் சார்ந்த மடங்களில் அனுட்டானங்கள், சமய ஆய்வுகள், விவாதங்களோடு ஆகியன இடம்பெற்றபோதும் அவை சத்திரங்களாகவும் இருந்திருக்கின்றன. சீன யாத்திரீகனான பாகியன் முதலானவர்களின் குறிப்புக்களில் இருந்து மடப்பண்பாடு இந்து, சமண, பெளத்த நிலைகளால் அதிகம் நிறுவப்பட்டு இயங்கியமைக்கான சான்றுகள் கிடைக்கின்றன.

சமூகம் சார்ந்து சத்திரங்களோடு கூடிய விருந்தோம்பலின் பொருட்டும், வழிப்போக்கர்களும் நிராதரவானவர்களும் மாற்று வலுக்காரர்களும் தங்குமிடங்களாகவும் மடங்கள் இருந்துள்ளன. ஆயினும் இந்தியாவைப் பொறுத்தவரை மடம் என்பதிலும் சரி, சத்திரம் என்பதிலும் சரி, ஆச்சிரமம் என்பதிலும் சரி இந்து, பெளத்த, சமண மதங்களின் செல்வாக்குச் செறிவாக இருந்துள்ளது . இவை தவிர மடங்கள் அரசர்களின் நேரடியான கண்காணிப்புக்குள்ளும் செல்வாக்குடனும் இருந்துள்ளமைக்கான சான்றுகள் தமிழ்நாடு முதற்கொண்டு இந்தியா முழுவதும் கிடைக்கின்றன.

தமிழ்நாட்டில் சங்ககாலம், சங்கமருவிய காலங்களில் மடப்பண்பாட்டின் எழுச்சி ஆரம்ப கட்டத்திலேயே இருந்துள்ளது, சங்கமருவிய காலத்தில் எழுச்சிபெற்ற சமண, பெளத்த சமயங்கள் அக்கால மடப்பண்பாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியிருக்கின்றன.

பல்லவர்காலத்தில் ஏற்பட்ட இந்து, சமண, பெளத்த மதங்களின் போட்டி சமய இயக்கங்களைத் தோற்றுவித்தது. அவை மடப்பண்பாட்டினை வளர்த்துச்சென்றன. சோழர் காலத்திலும் தமிழ் நாட்டில் சமயம் சார்பான மடப்பண்பாடே செறிவாக வளர்ந்து வந்தது. ஆயினும் சோழப்பேரரசின் வீழ்ச்சிக்குப்பின்னர், விஜயநகர மன்னர்களின் பிரதிநிதிகள் தமிழ் நாட்டினைக் கைப்பற்றிக்கொண்ட பின்னர் தமிழ் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலையிலும் பஞ்சம் போன்றவை ஏற்பட்டபோதும் உணவு, ஓய்வு, ஆதரவு வழங்கும் சமூக நிலைப்பட்ட மடப்பண்பாட்டைச் செறிவாகத் தோற்றுவித்தன. சமயச்சார்பான மடங்கள் ஒரு பக்கத்தில் இந்து சமயத்தை ஆதரித்த நாயக்க பிரதிநிதிகளின் அரசக்கட்டின் ஆதரவுடன் “ஆதீனங்களாக” மாறிக்கொண்டன.

(மடம் மற்றும் மடப்பண்பாட்டின் வளர்ச்சி தொடர்பான மேலதிக வாசிப்புக்களை ஆழமாக தெரிந்துகொள்வதற்கும் மேலதிக நூல்களை அணுகுவதற்கும் குமுதா சோமசுந்தர குருக்களின் – ”யாழ்ப்பாணத்துப்பண்பாட்டில் மடமும் மடக்கலையும்” நூலை பரிந்துரைக்க நினைக்கிறேன்)

நாயக்கர் காலம் என்பதை நன்கு கவனிக்கும்போது நாயக்கர் காலம் தமிழ்நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் ஈழத்தில் ஆரியச்சக்கரவர்த்திகளின் ஆட்சி நடைபெற்றுவந்ததையும் ஞாபகப்படுத்திக்கொள்வோம்.

 

இலங்கையின் மடப்பண்பாடு

இலங்கையின் மடப்பண்பாடு பற்றிய தகவல்கள் கி.மு 2 ஆம் நூற்றாண்டு தொடக்கம் கிடைக்கின்றன. கிபி 10 நூற்றாண்டு வரை இலங்கையில் மடப்பண்பாடு இருந்தமை பற்றி சிங்கள பாளி இலக்கியங்கள் தகவல்களைத் தருகின்றன. ஆயினும் சிங்கள சமூகக்குழுமத்தில் தமிழ்நாட்டைப்போல பெரும்பான்மை மடங்கள் சமயம் சார்ந்து பெளத்த பள்ளிகளாகவே தொழிற்பட்டு இருக்கின்றன. பிரிவேனாக்களுடன் இணைந்து அவை செயற்பட்டதாக வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் தமிழ்க் குழுமத்தினைப் பொறுத்தவரையில் தமிழ்ப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட மடங்களில் பெரும்பான்மையானவை துறவு சார்ந்தவையாகவோ, வழிபாடு சார்ந்தவையாகவோ இருக்கவில்லை. அவை பெரும்பாலும் சமூகமயப்பட்டே இருந்து வருகின்றன.  ஈழத்தில் கோயில்களில் இருக்கும் மடங்கள் கூட துறவிகள் தங்குவது, சமயம் வளர்ப்பது என்பதைத்தாண்டி அன்னதானம் முதலான சமூக நிலைப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.

ஈழத்துச் தமிழ்ச்சமூகத்தின் மடப்பண்பாடு பற்றி ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில் இருந்தே வரலாற்றுத்தகவல்கள் கணிசமாகக் கிடைக்கின்றன. எனினும் மடப்பண்பாடு வடக்குக் கிழக்கில் உச்சம் பெற்றது காலனிய மற்றும் காலனியத்திற்குப் பிந்திய காலங்களிலேயேயாகும். குறிப்பாக ஒல்லாந்தர் காலத்திலும், ஆங்கிலேயர் காலத்திலும் அதிகளவான மடங்கள் வடக்கிலும் கிழக்கிலும் அமைக்கப்பட்டிருக்கின்றன.  ஒப்பீட்டளவில் வடக்கில் அதிகமான மடங்கள் காணப்பட்டன.

கத்தோலிக்க, புரட்டஸ்லாந்து சமயங்களின் தேவாலயங்களுக்கும் தேவ ஊழியச்சபைகளுக்கும் சொந்தமான என்று சொல்லப்படும் துறவிகளின் மடங்களும் அதிகமாக கட்டப்பட்டன. கத்தோலிக்க துறவிகள் தங்கும், பிரார்தனை செய்யும் இடங்களான அவை முற்றிலும் சமயம் சார்ந்து பெரும்பாலும் தேவாலயங்களுக்கு அருகில் அமைக்கப்பட்டன. இன்றுவரை பல இடங்களில் அவை இயங்கி வருவதுடன், அவற்றின் மடக்கலை மடப்பண்பாடு என்பன தனியான ஆய்வுக்கான சாத்தியங்களுடன் மரபுரிமைச் சின்னங்களாக மாறியுள்ளன.

 

இவ்வகையில் ஈழத்தின் மடங்கள் உருவாகவும் இயங்கவும் பின்வரும் காரணிகளைப் பிரதானமாகக் குறிப்பிட இயலும்:

மதப்பிரசாரம்

 1. சாதிய நடைமுறைகளைக் கையாளுதல்
 2. யாத்திரைகள்
 3. அன்னதானம் முதலான உணவு வழங்கல்கள்
 4. உபயம், நம்பிக்கைகள் மற்றும் சடங்குகள்
 5. காலநிலை பயணம், பொழுதுபோக்கு

மதப்பிரசாரம்

ஐரோப்பியர் வருகையின் பின்னர், ஐரோப்பியர் கிறிஸ்தவ, புரட்டஸ்லாந்து சமயப் பரப்புரைகளை மேற்கொண்டனர். இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் தொடங்கி இலங்கை முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களையும் அவை சார்ந்த மடங்களையும் அமைத்தனர். கிறிஸ்தவ மடங்களின் வருகையும் அதன் செயற்பாடும் ஐரோப்பிய தளத்தில் சுதேச பண்பாட்டை கையாண்டவிதம் தனியான ஆய்வுக்குரிய ஒன்று. அக்கிறிஸ்தவ மதப்பிரசாரத்துக்கு எதிராக சுதேச மதங்களைப் பாதுகாக்க ஆறுமுகநாவலர் போன்றோர் மடங்களை அதிகம் பயன்படுத்திக்கொண்டனர். அவர்கள் மதம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு கோயில் மண்டபங்களை விடுத்து மடங்களை தெரிவு செய்ய வடக்கின் சாதி அமைப்பு பிரதான காரணமாக இருந்தது.

 

சாதிய நடைமுறைகளைக் கையாளுதல்

யாழ்ப்பாணத்தை மையம் கொண்ட சாதிய நடைமுறைகள், யாழ்ப்பாண மேல் தட்டு வர்க்கத்தினால்  மிக நுட்பமாகக் கையாளப்பட்டன. சுதேச சமயங்களை பிரசாரம் செய்யும் பொருட்டு பொதுமக்களை அணுகும்போது சாதிய அடக்குமுறை மனநிலை கொண்ட நாவலர் போன்றோர் கோயில்களுக்குள் தாங்கள் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதிய மக்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காக மடங்களிற்கு அவர்களை வரச்செய்து மதப்பிரசாரங்களை, புராணபடனங்களை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணத்தில் கீரிமலை சிறாப்பர் மடம் பிரபலமாகவிருந்த மடங்களில் ஒன்று. அம்மடத்தின் வாசலில் பின்வரும் குறிப்பு காணப்படுகின்றது

“இம்மடத்தில் சைவ சமயிகள் அல்லாத பிற மதத்தவர்கள் தாக சாந்தி செய்யலாகாது, வசிப்பதற்கு இடங்கொடலாகாது, கட்டிடத்தின் உள்ளாக மாமிசம் புசித்தல், அசூசைப்படுத்துதல், சுருட்டுப் புகைத்தல் ஆகாது, போசனம் செய்பவர்கள் எச்சிமாற்றி போகவேண்டியது, வசிப்பவர்கள் சமாதானமாகவிருந்து போகவேண்டியது….”

என்று இக்குறிப்பு தொடர்ந்து செல்லும்.

இங்கே வெளிப்படையாகப் பார்த்தால் சமயம் சார்பானவர்களை மட்டும் குறிப்பதாக இவ்வறிவுறுத்தல் தெரியும் . ஆனால் இது சாதிய கையாள்கையுடன் தொடர்பு பெற்ற ஒன்றாக இருக்கிறது. எப்படியெனில் காலனிய காலத்தில் ஐரோப்பிய சமயப் பிரசாரகாரர்கள் ஈழத்தின் ஒடுக்கப்பட்ட சமூகத்திடம் சென்றே அவர்களை தமது சமயங்களைப் பின்பற்ற ஆற்றுப்படுத்தினர். அதனால் அக்காலத்தில் பெரும்பாலான ஒடுக்கப்பட்ட சமூகத்தினரே கத்தோலிக்கத்தைப் பின்பற்றினார்கள். எனவே பிற சமயத்தவர் என்று குறிப்பிடுவதன் உள்ளார்ந்த நோக்கம் சில மடங்களுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை உள்ளெடுக்கக் கூடாது என்பதனாலேயே ஆகும். அவை பெரும்பாலும் கோவில் சார்ந்த மடங்களாக இருந்துள்ளன. ஆறுமுக நாவலர் போன்ற மேட்டுக்குடியினர் ஐரோப்பிய கத்தோலிக்கர்களுடன் அன்பு பாராட்டினாலும் சாதிய அடிப்படையில், மதம் மாறிவர்களைச் சாதிய நடைமுறைகளின் பொருட்டு நுட்பமாகவும் திட்டமிட்டும் கையாண்டிருக்கிறார்கள்.

இது போன்ற சாதிய நடைமுறைகள் மடங்களில் கையாளப்பட்ட விதங்கள் பற்றிய குறிப்புக்கள் நிறையவே கிடைக்கின்றன.

 

மடங்களும் யாத்திரைகளும்

இந்துப்பண்பாட்டின் தொடர்ச்சியில் தல யாத்திரைகள் முக்கியமானவை. கதிர்காமம் முதலான கோயில் யாத்திரீகர்கள் ஓய்வெடுக்கவும், உண்ணவும் மடங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக போர்த்துக்கேயர் காலத்தில் அடக்கி வைத்திருந்த சமய அனுட்டானங்கள் ஒல்லாந்தர் காலத்தில் தளர்த்தி விடப்படும்போது யாத்திரைகள் அதிகரித்தன. அதன் பொருட்டு மடங்கள் நிறுவப்பட்டன. யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட மடங்களைப் பற்றிச் சொல்லும்போது பேராசிரியர் கிருஷ்ணராஜா ஒல்லாந்தர் அமைத்த டச்சு வீதிகளிலேயே அதிகமான மடங்களை இனங்காண முடிவதனைச் சுட்டிக்காட்டுகின்றார். குறிப்பாக அவை ஆவுரஞ்சிக்கல், சுமைதாங்கி, தொட்டி, கிணறு என்பவை சூழ்ந்த தொகுதியாக காணப்படுகின்றன. அவ்வகையில் டச்சு வீதிகளில் காணப்பட்ட மடச்சூழமைவு பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார் .

“அம்பலம் எனக்குறிக்கப்படுகின்ற வீதியோரத்து மடங்களும் ஆவுரஞ்சிக்கற்களும் கூபங்களும் (கிணறுகள்) யாழ்ப்பாணத்தில் எக்காலகட்டத்தில் இருந்து இணைவு பெற்ற நிறுவனமாகத் தோற்றம் பெற்றிருந்தன என்ற கேள்விக்கு விடையிறுப்பது கடினமான ஒன்றல்ல. யாழ்ப்பாணத்திற்குரிய ஓரங்குல இட விளக்கப் படமொன்றைப் பார்க்கும் ஒருவர், அம்பலம் எனக்குறிக்கப்பட்ட தங்கு மடங்கள் டச்சு றோட்டுடன் இணைந்த பிரதான வீதிகளின் முக்கிய தரிப்பு மையங்களில் இருந்தமைக்கான குறியீடுகளைக்காண முடியும். பண்டாரமடம், பண்டத்தரிப்பு, பண்ணாகம், முத்தட்டுமடம், மருதனார் மடம், ஆறுகால்மடம், சங்கத்தானை, பனைமுனை (light house road), நெல்லியடி, சாரையடி, சுப்பர் மடம், ஓட்டுமடம், மடத்துவாசல், தில்லையம்பலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் இத்தகைய தங்குமடங்கள் காணப்பட்டிருந்தன.”

என்று சுட்டிக்காட்டுகின்றார்.

 

சத்திரங்களாகச் செயற்பட்ட மடங்கள்

யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான பெரிய ஆலயங்களில் மடங்கள் காணப்படுகின்றன. அவை அன்னதான மடங்களாக இருக்கின்றன. செல்வச்சன்னிதி, வல்லிபுர ஆழ்வார், நயினை நாகபூசணி, தெல்லிப்பளை துர்க்கை அம்மை கோவில் போன்றவற்றில் காணப்படும் மடங்கள் பழமையானவை. கோயில் மடங்கள் பெரும்பாலும் சமயப்பெரியவர்களின் குருபூசை மடங்களாகவும் நினைவு மடங்களாகவும் உள்ளன.

 

நேர்த்தி முதலான சடங்குகளும் நம்பிக்கைகளும்

 

யாழ்ப்பாணத்தில் மடங்கள் நேர்த்தி (நிவர்த்தி) முதலான நம்பிக்கையின் பொருட்டு அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கர்பிணிப்பெண்கள் இறந்தால் அவர்களின் ஆன்ம சாந்திக்காக மடம், சுமைதாங்கி, ஆவுரஞ்சிகல், கிணறு, தொட்டி அல்லது கேணி கொண்ட மடத்தொகுதியை அமைக்கும் நம்பிக்கைகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.  அத்துடன் இரவுப்பயணம் என்பவற்றின் போது திருடர் பயம் தவிர, பேய், முனி போன்ற நம்பிக்கைகளின் பொருட்டும் மடங்கள் அமைக்கப்பட்டன. அத்தோடு திண்ணைக்கல்வி முறைக்கும் மடங்கள் பயன்பட்டதாயும் அறிய முடிகின்றது.

 

பொழுதுபோக்கு

ஊர்களில் காணப்படும் மடங்கள் மாலைவேளைகளில் மக்கள் ஒன்றுகூடும் இடங்களாகவும் அரட்டை, சிறு விளையாட்டுக்களை ஆடும் இடங்களாகவும் இருந்துள்ளன. இன்றும் மடங்கள் இளைப்பாறி அரட்டை செய்யும், மனித பகிர்வுகளுக்கான இடமாக இருக்கின்றன.

 

தெருமூடிமடங்கள்

குமுதா சோமசுந்தரக்குருக்கள் போன்ற கலைவரலாற்று , தொல்லியல் வரலாற்று  ஆய்வாளர்கள் மடங்களை பொதுவில் சமயம் சார்ந்தவை , சமூகநிலைப்பட்டவையென்றே அணுகுகுகின்றனர்.அதாவது மடங்களை  அவர்கள் நோக்க அடிப்படையில் பிரிக்கின்றனர்,அதன் மூலம் மடங்களின் நோக்கம், இயல்பு, பயன்பாடு பற்றி வியாக்கியானிக்கலாம். ஆயினும் யாழ்ப்பாணத்தில் உள்ள மடங்களை அமைப்பு அடிப்படையில் பாகுபடுத்தும் போது இவை எல்லாவற்றிலிருந்தும் தெருமூடி மடம் தனித்து நிற்பதனைக்காணலாம். நோக்க அடிப்படையில் அவை ஏனைய மடங்களின் பொதுப்பண்புகளைப் பகிர்ந்துகொண்டாலும் தெருவை மூடி அமைக்கும் அமைப்பிலும் தேவை சார்ந்தும் நுட்பமான வேறுபாட்டினையும் கொண்டுள்ளன.

வடக்குப்பகுதியினைப் பொறுத்தவரை இரண்டு வகையான தெருமூடி மடங்கள் இருக்கின்றன.

 1. தற்காலிகமாக அமைக்கப்படும் தெருமூடிமடங்கள்.
 2. நிரந்தரமான தெருமூடிமடங்கள்.

 

தற்காலிக தெருமூடி மடங்கள் பெரும்பாலும் கோயில் திருவிழாக்களை ஒட்டி தண்ணீர்ப் பந்தலுடன் கூடிய கொட்டகை அமைப்பினதாக மரங்கள் சலாகைகள், கிடுகு என்பனவற்றைக்கொண்டு உருவாக்கப்படும் மடங்களாக இருக்கின்றன. நல்லூர் திருவிழா போன்ற கோயில் உற்சவங்களில் போது இப்பொழுதுவரை தற்காலிக மடவமைப்பு வழக்கத்தைக் காணக்கூடியதாகவுள்ளது.

 

நிரந்தரமான தெருமூடிமடங்கள் அமைக்கும் பண்பாடு போர்த்துக்கேயர் காலத்திற்கு முன்பிருந்தே தொடர்ந்து வந்திருக்கின்றது. கிபி 16 ஆம் நூற்றாண்டின் பின் இலங்கையில் இத்தெருமூடிமடங்கள் அமைக்கப்பட்டு போர்த்துக்கேயர் காலத்தில் பெருமளவு அழிக்கப்பட்டுமுள்ளது. குறிப்பாக வடமராட்சிப் பிரதேசத்திலும் வலிகாமப் பிரதேசத்திலும் இவ்வாறான தெருமூடிமடங்கள் அதிகமாக அமைக்கப்பட்டன என்று சொல்லபட்டுகின்றது.

 

துறைமுக நகரங்களாகவும் கடல் முகப்புத்தளங்களாகவும் இருந்த காங்கேசன்துறை, பருத்தித்துறை போன்ற துறைமுகங்களுக்கான தெருக்கள் மற்றும் பெருந்தெருக்களில் இத்தகைய தெருமூடி மடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காரணம் துறைமுகங்கள், சந்தைகள், நகர, கிராம பரம்பலுகளுக்கு இடையிலான பயணங்களின் போது ஓய்வு, உணவு, நீர் என்பவற்றிற்காக பயன்படுத்தும் வகையில் இவை அமைக்கப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். எனினும் இன்று பருத்தித்துறை- தும்பளை வீதியில் பருத்தித்துறை கடல்முகப்புத்தளம், மற்றும் பருத்தித்துறை நகரத்திற்கு அண்மையில் காணப்படும் தெருமூடி மடம் மட்டுமே நிலைத்து நிற்கின்றது.

 

பல்வேறு காலங்களில் திருத்தப்பட்டும் புனரமைக்கப்பட்டும் வந்த இம்மடம் பழைய தெருமூடிமடப் பண்பாட்டின் தொடர்ச்சியின் அடையாளமாக வாசிக்கப்படவேண்டியது. ஆய்வுகளின் படி சுமார் 150 வருடங்கள் பழமைவாய்ந்த மடமாக இது காணப்படுகின்றது.

 

பருத்தித்துறை – தும்பளை வீதியில் உள்ள தெருமூடிமடம் அமைந்திருக்கும் இடத்தில் தொடங்கி அதன் வரலாற்று வாசிப்பின் வகிபங்கை மனம் கொள்ளவேண்டும். பருத்தித்துறை வரலாற்றுக்காலம் தொட்டு முக்கியமான கடல் முகப்புத்தளத்திலான துறைமுக நகராக இருந்து வந்துள்ளது, அங்கிருந்து கிளைந்து ஓடும் வீதிகள் பெருங்கற்காலப்பண்பாட்டில் இருந்து இயங்கி வரும் ஏனைய கடல் முகப்புத்தளங்களான வல்வெட்டித்துறை, நெடியகாடு, ஊறணி, கந்தவன், கடவை, இம்பரூட்டி, வல்லிபுரம், மணல்காடு போன்ற கடல் முகப்புத்தளங்களை நோக்கியும், தென்மராட்சி, யாழ்ப்பாணப்பட்டினம் முதலான குடியிருப்புகளின் பரம்பல்களை நோக்கியும் செல்கின்றன. அவ்வகையில் பருத்தித்துறை துறைமுகத்திற்கு அண்மையில் சொல்லப்போனால் துறைமுக நகரின் வாசலாகவே இத்தெருமூடிமடம் இருக்கின்றது.

மேலும் இத்தெருமூடிமடம் அருகில் உள்ள சிவன் ஆலயத்தின் எல்லையில் அமைந்துள்ளதோடு அத்தெருமூடிமடத்தினைச் சூழ இந்தியாவின் சிதம்பரத்துடன் சம்பந்தமான பிராமண குடிமை சிவன் கோயிலை மையம் கொண்டு தமது வாழ்வியலை அமைத்துக்கொண்டிருக்கின்ற தகவல்களும் இங்கு முக்கியமானது.இத்தெருமூடிமடத்தின் அருகில் துலாக்கிணறும், ஆவுரஞ்சிக்கல்லும், கற்றொட்டியும், சுமைதாங்கிக்கல்லும் காணப்படுகின்றமை முக்கியமாக குறிப்பப்பட வேண்டியதாகும்.

 

அமைப்பும் கலைப்பாணியும்

 

தெருமூடி மடத்தின் அமைப்பினைப்பொறுத்தவரையில் திராவிட கட்டிட பாணியில் அமைந்துள்ள இதன் அடித்தளம், தூண்கள் மற்றும் சுவர்களும் திராவிடப்பாணி தழுவியவையாக இருக்கின்றன. வெண்வைரச் சுண்ணக்கல்லினால் பொழியப்பட்டு உருவாக்கப்பட்ட தூண்கள், அதன் கபோதகங்கள், மற்றும் தளம் ஆகியன நாகவடிவம் உள்ளிட்ட சிறந்த கொத்து வேலைப்பாடுகளைக் கொண்டிருப்பதனைக் காணலாம். பொழிந்த “வெண் வைரக் கற்சதுரங்கள்” பிரதான வீதியின் இருமருங்கிலுமுள்ள உயர்ந்த திண்ணை போன்ற தளத்திற்கு மிக நேர்த்தியாக பரவப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றது.

 

இருபக்கத்திண்ணைகளிலும் கல் பரவப்பட்ட தளத்தில் இருந்து நான்குபக்கச் சதுரப்பட்டையமைப்புடன் ஆரம்பிக்கும் கற்றூண்கள் அவற்றின் கூரையைத் தாங்கும் பகுதியில் தூண்போதத்துடன் காணப்படுகின்றது. இருபக்கமும் சேர்த்து மொத்தமாக 16 தூண்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஆறு தூண்களில் வரிவடிவ சாசனங்கள் பொறிக்கப்பட்டுக் காணப்படுகின்றன. அவை இம்மடத்தைக் கட்டிய உபயகாரர்களின் பெயர்கள் என்று ஆய்வாளர்கள் ஊகிக்கின்றனர். இச்சாசனங்கள் 19 ஆம் நூற்றாண்டுக்குரிய தமிழ் வரிவடிவ வளர்ச்சியினை கொண்ட சாசனங்களாகக் காணப்படுகின்றன.

 

தூண்களின் அமைப்பு தனித்துவமானதொன்று; ஒற்றைக் கற்றூண்களான இவை நடுவில் எண்பக்கப் பட்டையுடனான, தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தூணின் கபோதம் உள்ளிட்ட முழுத்தோற்றமும் பல்லவர்கால கலைமரபினைத் தழுவி உருவாக்கப்பட்டிருப்பதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். பொதுவாக இந்துக் கலைமரபின் தொடர்ச்சியான ஊடுகடத்தலின் விளைவாக இப்பாணியைப் பார்க்க இயலும்.

 

மேலும் இத்தெருமூடிமடத்தின் இருபுறங்களிலும் உயர்ந்த மேடைபோல் காணப்படும் இருபக்கத்திண்ணைகளினதும் வெளிப்புறச்சுவர்கள் சுண்ணச்சாந்தினால் கட்டப்பட்டவையாக உள்ளன. பொதுவாக காலனிய கட்டட மரபின் வருகைக்குப்பின்னர், கடல் முகப்புத்தளங்களுக்கு நெருக்கமான கட்டடங்கள் முருகைக்கற்களால், அல்லது செங்கற்களால் கட்டப்பட்டன. எனினும் கோயில்கள், மடங்கள் போன்றன பாரம்பரியமாக பொழிந்த சுண்ணக்கற்களாலேயே வடக்கில் கட்டப்பட்டன. வடக்கின் முக்கிய புவியியல் கனிமமான சுண்ணக்கற்களிலேயே ஆவுரஞ்சிக்கல், கற்றொட்டி, கிணறு முதலிய மரபார்ந்த கட்டிட அமைப்புத்தொகுதிகளும் கட்டப்படுகின்றமையை இங்கே ஞாபகப்படுத்த வேண்டும்.

 

கூரையமைப்பினைப் பொறுத்தவரையில் தூண்களின் கபோதத்திலிருந்து இருபக்கங்களிலும் சமாந்தரமாக மேலெழுப்பப்பட்டுள்ள ஓர் அரைச்சுவரின் மீது அமைக்கப்பட்ட விட்டத்துடன் கூடிய ஒரு சட்டகக் கோப்பினால் தாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இம்முறையினால் இத்தெருமூடி மடத்துள்ளான வாகனப்போக்குவரத்து நடைமுறைகளுக்கு சாதகமான சூழல் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தூரப்பார்வைக்குப் பொலிவான அழகியலையும் தோற்றப்பொலிவையும் அவ்வமைப்பு வழங்குகின்றது.

 

இத்தெருமூடிமடத்தின் இருபக்க மண்டபங்களினதும் மேற்கூரையானது தட்டையானதாக அமைக்கப்பட்டுள்ளது, நீள் சதுரக்கூரையமைப்பின் தட்டையான பரப்பை உருவாக்குவதற்கும் நீளமான வெண்சுண்ணக் கற்பலகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அக்கற்பலகைகளுக்கு மேல் சுண்ணச்சாந்து இடப்பட்டு நீர் கசியாதவாறு வெகுகச்சிதமாக அக்கூரையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. உயர்ந்துள்ள பிரதான நடுக்கூரையின் இருபக்கங்களிலும் காணப்படும் இத்தட்டையான இரு கூரைத்தட்டுகளின் கூரை முகப்புக்கள் இருமுனைகளிலும் வெளியே தெரியாதவாறு பக்கவாட்டாக அவற்றின் முகப்பில் எழுப்பப்பட்ட கபோதத்தின் மீதான குறுக்கு அரைச்சுவர்களினால் மறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ஒட்டுமொத்ததாக கட்டப்பட்ட காலத்தில் நின்று இதன் கட்டிடக்கலை மரபினை ஆயும் போது  யாழ்ப்பாணத்துக்கே உரிய “திருப்பணிக்கல் – கட்டிடக்கலை” மரபும் கிறிஸ்தவ கட்டிடக்கலை மரபும், தூண்களில் பல்லவக் கட்டிடக்கலை மரபும் ஒன்றிணைந்த வகையில் மீளுருவாக்கம் பெற்றதாகவே இத்தெருமூடி மடத்தினைக் கொள்ளமுடியும்.

 

தெருமூடி மடத்தின் தற்போதைய நிலையும் அச்சுறுத்தல்களும்

 

ஒட்டுமொத்த இலங்கையிலும் இருக்கும் ஒரேயொரு நிரந்தரமான தெருமூடிமடம் இதுமட்டுமே. தற்பொழுது இத் தெருமூடிமடம் தொல்லியல் திணைக்களத்தினால் தொல்லியல் இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதனை பொருத்தமாக பராமரிக்கும் வேலைகளை அரசு செய்யவில்லை. அத்துடன் சுற்றுலாத் தலமாக இதனை மாற்றி பாதுகாக்கும் வழிவகைகளை அரசு செய்ய வேண்டியுள்ளது . இதுவரை காலமும் இத்தெருமூடி மடம் பாதுகப்பாக இருந்தமைக்கு அதனைச் சூழ இருக்கும் மக்களும் விளையாட்டுக்கழகங்களுமே காரணமாயிருந்தன. ஆனால் அரசு பொறுப்பெடுத்த பின்னர் அதன் மீது துப்பரவு செய்தல் தடை செய்யப்பட்ட ஒன்றாக இருக்கின்றது. அரசியல் பதாகைகள், விளம்பரங்கள் ஒட்டப்படும் போது அது தொடர்பில் அரச இயந்திரத்தின் அதிகாரிகள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது இருக்கின்றனர் . வீதி அபிவிருத்தி பணிகளின் போது வீதி உயர்ந்து அதன் திண்ணை உயரத்தை குறைத்து விட்டது. அத்துடன், மேற்சுவர்களில் அரசமரம் ஒன்று வளர்ந்து நிற்பதுடன் எதிர்காலத்தில் அது சுவர்களைப்பாதிக்க கூடிய அபாயம் உள்ளது. மரபுரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படும் தொன்ம யாத்திரை குழுவினர் அது தொடர்பில் அதிகாரிகளிடம் கேட்ட போது தாங்கள் அதனை பராமரிக்கவுள்ளதாகவும் அதில் கைவைத்தால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர் . எனினும் இன்று வரை அது நடந்ததாகத் தெரியவில்லை.

மேலும் தெருமூடி மடத்திற்கு அண்மையில் உள்ள துலாக்கிணறு, ஆவுரஞ்சிக்கல், தொட்டி என்பனவும் சரியான பராமரிப்பின்றியிருக்கின்றன. தொடர்சியாக ஊர் மக்களே அவற்றைப் பராமரிக்க வேண்டியுள்ளது. மேலும் மரபுரிமைச்சின்னங்களை பாதுகாக்கும் பொறிமுறையினை தேசிய அரச இயந்திரமும், பிரதேச அரச இயந்திரங்களும் வினைத்திறனாகச் செய்யவேண்டும்.

ஒப்பீட்டளவில் சிங்கள, பெளத்த சின்னங்கள் பராமரிக்கப்படும், பாதுகாக்கப்படும் பொறிமுறைகளில் ஒரு வீதம் கூட தமிழ்ச்சமூகத்தின் மரபுரிமைகள் மீது காட்டப்படுவதில்லை. வெறுமனே அரச இயந்திரம் மட்டுமல்ல, மக்களும், பல்கலைகழகங்கள் போன்ற அமைப்புக்களும் சுதேச மரபுரிமைகளை அறிந்துகொள்ளவும் பாதுகாக்கவும் தேவையான விழிப்புணவினையும் அரிவினையும் பெற்றுக்கொள்ள வேண்டும். ஊடகங்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் என்று சமூகத்துடன் நெருக்கமாக உரையாடக்கூடியவர்கள் இத்தகைய மரபுச்சின்னங்களைப்பற்றி எழுதவும், மக்களுடன் உரையாடவும் ஆவணப்படுத்தவவும் வேண்டும். அத்துடன் எவ்வாறு நல்லூரும் நிலாவரையும் சுற்றுலாத்தலமாக பிரபலப்படுத்தப்படுகின்றனவோ அவ்வாறு தெருமூடி மடம் போன்ற ஏனைய மரபுரிமைச் சின்னங்களும் சுற்றுலாத்துறையினால் சுற்றுலாத்தலங்களாக சுற்றுலாப்பயணிகளை நோக்கி மேற்காவப்பட வேண்டும்.

இனவாதிகள் ஈழத்தமிழ் மக்களை தொடர்ச்சியாக வந்தேறு குடிகள், சொந்தமாகப் பண்பாட்டுக் கூறுகளையோ வரலாற்றையோ கொண்டிராதவர்கள், இந்தியப்பண்பாட்டினை பகிர்ந்துகொள்ளும், தமிழ்நாட்டின் தொடரச்சியினைப்பேணும், ஒரு சமூகக் குழுமமெனப் பிரசாரங்களை தொடர்ச்சியாக முன்வைப்பதுடன், ஈழத்தமிழரின் நுண்மையான தனித்துவம் மிக்க மரபுகளை அழித்தும் புறக்கணித்தும் வருகின்றனர். மொழி, கலை, இலக்கியம், பண்பாடு என்று யாவற்றிலும் தனித்துவமான வடிவங்களை உடையவர்கள் ஈழத்தமிழ்ச்சமூகத்தினர். உண்மையில் இந்திய- தமிழ் நாட்டுப் பண்பாட்டினை பகிர்ந்துகொள்கின்றோம் என்பது ஒரு மேலோட்டமான கருத்து நிலை மட்டுமே. நுண்மையான ஆய்வுகளும் சரி வரலாற்று எழுத்தும் சரி ஈழத்துக்கென இந்திய – தமிழ்நாட்டு பண்பாட்டில் இருந்து விலகிய தன்மைகளை மிக நுண்ணியதாகவும் செறிவானதாகவும் ஆதாரத்துடன் முன்வைக்கின்றன.

கல்தோன்றி மண் தோன்ற முதல் தோன்றிய மொழி, வீர இனம், தூய இனம் போன்ற உயர்வு நவிழ்ச்சியும் உணர்ச்சிமயப்படுத்துவதையே நோக்காகக் கொண்ட வெற்றுக்கூச்சல்களும் ஈழத்தமிழ்ச்சமூகத்தின் இருப்பைப் பாதுகாக்கப் போவதில்லை. மரபுகளையும் பண்பாட்டு வரலாற்று இருப்பையும் இடைவெளிகளையும் அறியவும் அறிவார்ந்த தளத்தில் கட்டுதலும் ஆவணப்படுத்தலுமே வேண்டப்படும் ஒன்றாகும்.

ஈழம் பண்பாடு, அடையாளம், மரபுரிமை, கலை இலக்கியம் என யாவற்றிலும் தனித்துவமான தன்மை கொண்டது என்பதற்கு ஈழத்தின் மடக்கலையே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஈழத்தின் மடக்கலை எப்படி இந்தியாவில் இருந்தும், தமிழ்நாட்டில் இருந்தும், ஐரோப்பாவில் இருந்தும் தாக்கங்களை பெற்றாலும் தனக்கென ஒரு பிரத்தியேக வடிவம் அர்த்தம் இரண்டையும் வரலாற்று பெரும் நீரோட்டத்தில் கண்டடைந்துள்ளது எனபதற்கு தெருமூடிமடமும் அதன் சூழவமைவும் கனமான ஆதாரங்களை முன்வைக்கின்றது.

நாம் வரலாற்று எழுத்தில் மரபுரிமைகளை உறுதிப்படுத்தாமை காரணமாக தொடர்ச்சியாக விளிம்புக்கு தள்ளப்பட்டுக்கொண்டேயிருக்கிறோம். தமிழ் நாட்டிலிருந்து வரும் சமூக வலைத்தள, ஊடக, சினிமா, மொழி உணர்வுநிலை போலியான கோசங்கள் மற்றும் அறிவு நிலைகாரணமாக தமிழ்நாட்டின் பண்பாட்டு நீரோட்டத்தாலும், இலங்கையின் இனவாத நீரோட்டத்தாலும் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படுகின்றோம். இதனை எதிர்கொண்டு அறிவார்ந்த சிந்தனை மற்றும் செயற்பாட்டு உருவாக்கத்தளத்தில் வரலாற்று வாசிப்பு, மரபு பற்றிய அறிதலுடன், நம்முடைய சமூகத்தை இருப்பின் மையத்தை நோக்கி நகர்த்தவேண்டும்.

யதார்த்தன்

 

உசாத்துணைகள்.

 1. கிருஷ்ணராஜா, செ. தொல்லியலும் வடமராட்சியின் பண்பாட்டுத்தொன்மையும். பிறைநிலாவெளியீட்டகம்.
 2. குமுதா சோமசுந்தரக்குருக்கள். யாழ்ப்பாணத்துப்பண்பாட்டில் மடமும் மடக்கலையும், குமரன் புத்தக இல்லம்.
 3. இந்திரபாலா கார்த்திகேசு. யாழ்ப்பாணத்தில் தொல்பொருளாராய்ச்சி, இளவேனில் (2ஆம் ஆண்டு மலர் ) 1970.
 4. கிருஷ்ணராஜா, செ. இலங்கை வரலாறு பாகம் 1, பாகம் 2
 5. இந்திரபாலா.கா, இலங்கையில் தமிழர், ஒரு இனக்குழுமம் ஆக்கம் பெற்ற வரலாறு, குமரன் புத்தக இல்லம்.
 6. புஸ்பரட்ணம், ப. தொல்லியல் நோக்கில் இலங்கைத்தமிழர் பண்பாடு.
 7. மணிமாறன், வி. வடமராட்சியில் அடையாளம் காணப்படும் மரபுரிமைச்சின்னங்கள், திருவுடையாள் பிரதேச மலர் (4), பிரதேச செயலகம் வடமராட்சி தெற்கு.
Share this Post

Leave a Reply