yathaadmin/ November 15, 2016/ கட்டுரை/ 0 comments

 

14068102_680820818744921_181541177723327262_n

 

ஈழத்து சினிமா – கருத்தியல்களும் வரையறைகளும்

நிகழ்படம் , கரவொலி பற்றிய குறிப்புக்கள் .

எமக்கான அடையாளங்களை உருவாக்குதல் என்பதும் , எமக்கான கலையம்சங்களை இந்திய – தமிழ்நாட்டுச் சூழலில் இருந்து விலகி நின்று உரையாடல் என்பதுமே இன்றை ஈழத்து கலை இலக்கிய செயற்பாடுகளின் வேண்டப்படும் அம்சமாகும் . சுயாதீனமான ஓவியக்கண்காட்சிகள் , திரைப்படத்திருவிழாக்கள் , இசை நிகழ்வுகள் , இலக்கிய செயற்பாடுகள் , வடிவமைப்பு -பதிப்புதுறையின் சுயாதீன வளர்ச்சி , இதழியலின் வளர்ச்சியென்று சமகாலத்தில் இந்திய – தமிழ்நாட்டு சூழலில் இருந்து விலகி எம்முடைய சுயாதீனமான அடையாளங்களை உருவாக்கத்தொடங்கியுள்ளோம் , எனினும் “தப்பு” முதலான தமிழ் நாட்டு வாத்தியங்களின் வருகை , சுப்பர் சிங்கர் , நண்பேண்டா போன்ற பணச்சுரண்டல் , அதி இந்திய மோக கலை ஆற்றுகைகளின் வருகை என்பனவும் சம நேரத்தில் நிகழ்கின்றது . இத்தகைய புது வருகைகளும் கலை இலக்கியங்கள்தானே , எப்போதும் இந்திய பண்பாட்டைதானே பகிர்ந்துகொண்டு வந்திருக்கிறோம் ? இதில் என்ன தவறு இருக்க போகின்றது என்ற விவாதங்களும் உள்ளன , உண்மை தான் . நாம் இந்திய – தமிழ் நாட்டு பண்பாட்டை பகிர்ந்துகொள்கின்றவர்கள்தான் . ஆனால் இங்கே “பகிர்தல் ” என்ற சொல் எங்களுடைய நிலவுருவின் , கலாநிலையின் , பழக்க வழக்கத்தின் , அரசியலின் , பொருளாதாரத்தின் குறித்த தனித்துவமான நுண்பண்பாட்டு கூறுகளின் பின்னணியை தாங்கியே நிகழ்த்தப்பட்டுவருகின்றது. ஆனால் இன்று இறக்கு மதி செய்யப்படும் பல கலை இலக்கிய செயற்பாடுகள் முற்றுமுழுதாக எமது சுயாதீன அடையாளங்களை சிதைத்து நிலத்துக்கும் நம்பிக்கைகளுக்கும் முரணான பண்பாட்டு செயல்களை உருவாக்குகின்றன.

எமது கூத்து , நாடகங்களை நசுக்கிவிட்டு இந்திய , நாடக , சினிமாக்களை மோகித்திருத்தல் , இங்கிருக்கும் பறையிசையை அது சார்ந்த நபர்களை நலிய விட்டு விட்டு “தப்பு ” போன்ற வாத்தியங்களை இறக்குமதி செய்தல் , எமது இசையை விளிம்புக்கு தள்ளி புறக்கணித்துவிட்டு சூப்பர்சிங்கர்களை அழைத்துவருதல் , சொந்த நிலத்தின் கருத்தியலையும் கதைகளையும் விட்டுவிட்டு இந்திய வணிக சினிமாக்களை போலச்செய்து படம் எடுத்தல் , இந்திய தமிழ்நாட்டு இலக்கியங்களை , பதிப்பு துறையை , இதழ்களை கொண்டாடுதல் , தமிழ்நாட்டு காரர்களுக்கும் புலம்பெயர் சூழலையும் இலக்கு வைத்து நாவல்கள் , போன்ற இலக்கியங்களை சகட்டு மேனிக்கு எழுதிக்குவித்தல் , போன்ற , அபத்தங்கள் கண்முன்னே நடப்பதை அவதானிக்கின்றோம். இவற்றை கடுமையாக எதிர்ப்பதன் அவசியத்தை கலைஞர்களே உணர்கின்றனர். உணர்கின்றவர்கள் அதனை செயற்பாடாக பரீட்சிக்கவும் , செயற்படுத்தவும் முனைகின்றவர்கள் மிகக்குறைவு , அந்த வகையில் ஈழத்து கலை இலக்கியங்களில் சினிமாத்துறை சார்ந்து சுயாதீன நில அடையாளங்களின் கருத்தியல் செயற்பாட்டு பின்னணியில் இயங்கும் குழுக்கள் மிகக் குறைவானவையாகவே இருக்கின்றன, ஈழத்து சினிமா சார்ந்து இயங்கும் கலைஞர்களின் நிலத்தின் பிரச்சினையை தங்களால் இயன்ற அளவிலாவது படைப்புகளூடாக வெளிப்படுத்தும் கலைஞர்கள் மிகக்குறைவாக இருப்பதை சென்ற வருடங்களில் நடைபெற்ற சினிமாத்திருவிழாவில் அவதானிக்க முடிந்தது , சிங்கள மொழி இயக்குனர்கள் போரை , அதன் போதான , அதன் பின்னரான வாழ்வை அதன் பிரச்சினைகளை , தெளிவான கருத்தியலோடு அழகியலும் கூடிவரப்பெற்றவர்களாக தமது திரைப்பட ஆக்கங்களில் முன் வைக்கின்றனர் . ஆனால் ஒப்பீட்டளவில் போருக்கு மிக நெருக்கமாகவும் , பாதிப்பின் உச்சபட்ச விளைவுகளை அனுபவித்த ஈழத்து தமிழ்ச்சமூகத்தில் இருந்து வாழ்வியலை , நல்ல அரசியலைப் பேசும் படங்கள் சிங்கள சமூகத்தின் படங்களோடு ஒப்பிடும் போது மிகக்குறைவாகவே வருகின்றன. பார்க்கப்போனால் வருஷமொன்றில் இலங்கையில் வெளிவரும் நல்ல சினிமா முயற்சிகளில் (பெரும்பாலும் குறும்படங்கள்) பத்தில் மூன்று முயற்சிகளே தமிழ்ச்சூழலில் இருந்து வெளிவருகின்றது . இதற்கு முழுகாரணம் இந்திய வணிக சினிமாவின் , மோகம் ஈழத்து தமிழ்ச்சூழலின் படைப்பாளிகளை குறுகிய போலிச்சாக்கடை கருத்தியலுக்குள் தள்ளி புழுக்களாக நெளிய வைக்கின்றது . எனினும் அந்த மூன்று பங்கில் இயங்கும் இயக்குனர்கள் , திரைப்படச்செயற்பாட்டாளர்கள் முக்கியமானவர்கள் . அவர்களின் படைப்பின் அழகியல் , கருத்தியல் மேல் கலைத்தளத்திலான விமர்சனங்கள் நிறையவே எனக்கிருந்தாலும் அவர்களின் முயற்சியை , தீர்மானமெடுத்தலை நான் மிகவும் கனம்பண்ணுகின்றேன்.

சன்சிகன் , மதுரன் , சிவராஜ் , மதிசுதா ,தபின், திவாகர் போன்ற இளம்தலை முறையினர் திரைப்படத்துறையில் செயற்படும் விதம் நம்பிக்கையளிக்கும் முயற்சிகளாகவே இருக்கின்றன. இந்த அடிப்படையில் சமீப நாட்களில் ஈழத்து சினிமா அசைவில் மேற்கொள்ளப்படத்தொடங்கியிருக்கும் முக்கிய செயற்பாடுகளான “நிகழ்படம்” திரையிடலும் “கரவொலி ” சினிமா இணைய இதழின் உருவ உள்ளடக்கம் பற்றியும் இங்கே உரையாட நினைக்கிறேன் . இவ்விரண்டு செயற்பாடுகளும் ஒரே குழுவினரால் மேற்கொள்ளப்படுவதனால் இவை இரண்டையும் பற்றிய அசைவினை வியாக்கியானிக்க நினைக்கின்றேன்.

கரவொலி சஞ்சிகையின் அறிமுகக்குறிப்பொன்றில் சஞ்சிகையின் நோக்க நிலை பற்றி பின்வருமாறு இருக்கின்றது.

//ஈழ சினிமா தனக்கான அடையாளத்தைத் தேடத் தொடங்கி கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இன்னமும் வலுவான அடையாளமொன்றை ஈழ சினிமா பெறவில்லை. ஆனால் முயற்சிகள் காலகாலமாய் நடந்தபடிதான் இருக்கின்றன.

இந்நிலையில்தான் கடந்த 60 வருடங்களைத் திரும்பிப் பார்க்கின்றோம். பலர் வந்துபோயிருக்கின்றனர். பெயர் பெற்றிருக்கின்றனர். தொலைந்துமிருக்கின்றனர். ஆனால் அவர்கள் பற்றிய பதிவுகள் மிக அரிதாகவே இருக்கின்றன. அவ்வாறானவர்களைக் கண்டடைவதும், அதனைப் பதிவுசெய்வதும் கரவொலியின் நோக்கங்களில் ஒன்று.

அங்கொன்றும்,இங்கொன்றுமாக நடக்கும் சினிமா முயற்சிகள் அறிவார்ந்த தளம் நோக்கி நகர்வதாகத் தெரியவில்லை. அது கோடம்பாக்கத்தை நோக்கியே நகர்கின்றது. தமிழக சினிமா தயாரிப்பு சூழலும், புலம்பெயர் தமிழர்களுக்குரியதாக மாறிவருகின்றது. எனவே இவ்விடத்தில் நாம் விழித்துக்கொள்வது அவசியம். இப்போது எமக்கு இருக்கும் ஒரே வழி ஈழ சினிமா என்கிற கனவை அறிவார்ந்த தளம் நோக்கி உந்துவதுதான். எங்களின் கதை, எங்களின் அடையாளம், எங்களின் இயக்கம், எங்களின் தயாரிப்பென எமக்கான சினிமாவைக் கண்டடைவதுதான். அதற்கான வழியைத் தேடுவதும் கரவொலியின் பிரதான நோக்கம்.//

ஆனால் மேற்குறிப்பிட்ட நோக்கத்தின் தளத்திற்கான அடிப்படைகளை எவ்வகையில் முன்வைக்கின்றனர் , என்பதும் ஈழ சினிமா என்றால் என்ன , எவற்றை அதனுள் உள்ளெடுக்கவும் , வரையறுக்கவும் செய்வது என்பதில் குழுவிற்கு தெளிவான சிந்தனை ஒன்று உள்ளதா என்ற சந்தேகம் மேற்படி இரண்டு செயலாக்கங்களையும் பார்கும் போது இயல்பாகவே எழுகின்றது .

நான் முன்பு குறிப்பிட்டதனைப்போல ஈழத்து சினிமா என்பதன் அடையாளத்தை நிலை நிறுத்தும் படைப்பும் , வாசிப்பு தளமும் எந்த வலயத்தை அல்லது நபர்களைச்சார்ந்தது ? ஈழசினிமா எனும் போது அது இன்று ஒப்பீட்டளவில் ஆரோக்கியமாக வளர்ந்துவரும் குறிகாட்டிகளைக்காட்டும் சிங்கள் இயக்குனர்களின் படைப்புக்களையும் சேர்க்காதா ? போர்பற்றி மட்டுமல்ல , சிங்கள – தமிழ் – முஸ்லீம் – மலையக மற்றும் ஏனைய சிறு பண்பாட்டுக்குழுக்கள் ஆகியவற்றுகிடையிலான உறவு நிலை , நிலக்காட்சி , பண்பாட்டு ஊடாட்டம் என்று சினிமாக்களை எத்தகைய சிந்தனையோடும் உள்ளத்தோடும் அணுகப்போகின்றோம். அவற்றையும் ஈழத்து சினிமாவினுள் உள்ளீர்க்காமல் தவிக்கப்போகின்றோமா அல்லது அடிப்படைவாதம் பேசும் சில தமிழ் மனநிலைகளைப்போல் அவற்றை புறக்கணிக்கப்போகின்றோமா ? பிரசன்ன விதானகே தொடக்கம் பல சிங்கள கலைஞர்கள் ஆரோக்கியமான படைப்புக்களையும் பரிசோதனைகளையும் ஈழத்து கலை இலக்கியச்சூழலில் திரைமொழியினால் நிகழ்த்துக்கொண்டிருக்கின்றனர் , கிங் ரத்னம் போன்ற மலைய சினிமாக்காரர்களை எந்த தளத்தில் வைக்க போகின்றோம் ? அவற்றை தவிர்த்து விட்டு ஈழத்து திரைப்படம் பற்றிய வாசிப்புக்கள் உரையாடல்களை மேற்கொள்வது அபத்தம் இல்லையா ? அத்தோடு லெனின் , போன்றவர்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துகொண்டு ஈழத்தை குறித்தும் , அதன் உப விடயங்கள் குறித்தும் , பண்பாட்டு அசைவு மாற்றங்கள் குறித்தும் எடுக்கும் படங்களை எத்தகைய தளத்தில் நிகழ்படமும் கரவொலியும் அணுகப்போகின்றது என்ற கேள்வியும் மிகுதியாகவுள்ளது.

கரவொலியில் மேற்படி சிங்கள மொழி திரைப்படங்கள் பற்றியும் , அவை மீதான உரையாடல் பற்றியும் , புலம்பெயர் சூழலின் திரை அசைவுகள் பற்றியும் நான் ஆக்கங்களை அல்லது சிறிய குறிப்புக்களையாவது எதிர்பார்த்தேன் , ஆசிரியர் தலையங்கமாகவோ அல்லது முன் குறிப்புக்களில் கூட அத்தகைய குறிப்புக்களின் சிறிய நறுக்கைக்கூட காணாதது ஏமாற்றமளித்தது , இது ஈழத்து சினிமா தொடர்பிலான குழுவின் பார்வை எத்தகையது என்ற கேள்விக்கான சந்தேகத்தினை இன்னும் திடப்படுத்துகின்றது.

அதேபோல் நிகழ் படம் திரையிடல் என்பது இதுவரை தெரிவு செய்த படங்களின் மீதும் அந்த தெரிவு அரசியல் மீதும் , அது உரையாடப்பட்ட , அல்லது சாத்தியங்கள் வலுவிழந்து போன வெளியின் மீதும் உள்ள விமர்சனக்களையும் பதிவு செய்ய விரும்புகின்றேன். படங்களை திரையிடுவதற்கு தெரிவு செய்யும் குழுவின் தெரிவு அரசியல் ஒரு தூலமான சிந்தனை பின் புலத்தை கொண்டிருப்பதாகத் தெரியவில்லை . வெறுமனே பல்வேறு தேசங்களில் மொழிகளில் வெளிவரும் நல்ல படங்களை தெரிந்து திரையிடல் என்பது மட்டுமே அங்கே நிகழ்கின்றது. ஏன் திரையிடலுக்கு மிக சொற்பமான அளவினரே வருகை தருகின்றனர் என்ற கேள்விக்கும் இந்நிலையும் ஒரு காரணம் தான் . இரண்டாவது திரையிடலின் போது கணிசமான நண்பர்கள் சிலர் வந்திருந்தனர் , குறிப்பாக ஈழத்தின் திரைத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் திரைப்படம் சார்ந்து நல்ல பட்டறிவையும் கொண்ட ஜேசுராசா போன்ற கலைஞர்கள் ஆர்வலர்கள் வந்திருந்தனர் . அன்று பன்ரி திரைப்படம் திரையிடப்பட்டு உரையாடல் மேற்கொள்ளப்பட்டது , ஆனால் அன்றைய உரையாடல் என்பது ஒரு வகையில் ஒரு வழி உரையாடலாகவே நிகழ்ந்தது என்று சொல்வேன் , உரையாடலும் உரையாடலின் மையக்கருத்தியலும் அன்று தெளிவாக முன்வைக்கப்படவில்லை , அதனாலேயே அடுத்தடுத்த திரையிடலுக்கு முதல் வந்த எவரும் மீள வரவில்லை , உரையாடல் என்பது புது வெளிகளை திறப்பது , அது பழைய மொன்னையானதும் ஒற்றைப்படையானதுமான சொந்த கதையாடல்களை நிகழ்த்துவது அன்று .

மேலும் திரையிடப்படும் திரைப்படங்களின் தெரிவு அரசியல் , உரையாடல் வெளியின் சாத்தியங்கள் , நிகழ்வு பற்றிய தொடர்ச்சியான உரையாடல் என்பன எழுத்து தளத்திலும் சரி செயல் தளத்திலும் சரி மேற்கொள்ளப்படுவதேயில்லை, வெறும் திரையிடல் மட்டும் அதை சனநாயக வெளிக்கு எடுத்துச்செல்லாது . முதலின் எதை செய்கிறோம் , என்ன நோக்கம் என்பது தொடர்பான ஒரு சட்டகத்தை , புரிதலை அதைச்செய்பவர்கள் பெற்றிருத்தல் வேண்டும் , அத்துடன் கலை உரையாடல் என்பது இதயத்திலிருந்தே மூளைக்குச்செல்ல வேண்டும் , வெறும் அறிவை உரையாட முடியாது , இந்த படத்தை இவர் எடுத்தார் என்ற தகவலை கதைத்தல் என்பது உரையாடல் அன்று அந்த படம் எதை கதைத்தது , நமக்கு அந்த படம் என்னவாக இருக்கின்றது என்ற கருத்தியல் , அழகியல் தளத்திலான உரையாடலை செய்ய வேண்டும். அது நிகழ் படத்தில் நிகழ்வதாய்த் தெரியவில்லை. இதுவரை திரையிடப்பட்ட படங்களின் தெரிவு எந்த தளத்தில் அமைந்தது ? அதன் விளைதிறன் எத்தகையது ? என்ற கேள்விகள் தொடர்ந்தும் தொக்கு நிற்கின்றன.

உலக சினிமாக்களை திரையிடலுக்கு தெரிவு செய்தல் பிரச்சினையில்லை சிங்கள – தமிழ் சினிமாக்கள் , பற்றி நாம் முழுமையாக உரையாடி முடித்து விட்டோமா , உலக சினிமாக்களை எம்முடைய சினிமா ஆக்கத்துடன் ஒப்பிடும் போது எத்தகைய நிலையை இங்கே அடையாளம் காண்கின்றோம் , அதன் பிரச்சினைகள் என்ன சாத்தியங்கள் என்ன , கருத்து நிலையென்ன , அரசியல் என்ன ? அழகியல் எத்தகையது என்று பேசிக்கொண்டாயிற்றா? இப்போது சட்டென்று ஐந்து சுந்தரிகள் சினிமாவிற்கு ஏன் தாவிப்போக வேண்டும் ? சரி படத்தை தெரிவு செய்கிறோம் அதையேன் தெரிவு செய்கிறோம் என்ற பொது வெளி உரையாடல்களை தெளிபடுத்தல்களை நிகழ்தியுள்ளோமா ? பிறகெப்படி யாரும் வருகின்றார்கள் இல்லையென்று குறை கூறுவது ?
கரவொலியை எடுத்துக்கொண்டால் , நேற்று ஆவலுடன் அதனுள் நுழைந்த எனக்கு மிகுந்த ஏமாற்றமே கிடைத்தது , 70 வீதமானவை அரைத்த மாவை அரைக்கும் ஆக்கங்கள் , அத்துடன் அவற்றின் கருத்துநிலை , முன் வைப்பு வடிவம் என்பவை மிகவும் பழகிப்போனவையாக இருந்தன. எனினும் சில விடயங்கள் முக்கியமானவையாக இருந்தன,

சதாபிரணவின் நேர்காணல் காத்திரமானதாக இருந்தது. செங்கோவியின் நடிகையின் கதை பரவாயில்லை ரகம் , ஒரு வாசகனை உள்ளீர்த்து சலிக்காமல் படிக்க வைப்பதில் செங்கோவியின் மொழி போதாமைகளைக்கொண்டிருக்கின்றது. உமர் ஷெரிப்பின் கனவுகளின் ராஜ்ஜியம் மற்றும் Jodorowsky’s Dune பிரதிகள் எனக்கு பிடித்திருந்தது , அவரைப்போல எழுதுபவர்கள் மிகக்குறைவாகவே ஈழத்துச்சூழலில் இருக்கின்றார்கள் .அவரிடம் நல்ல மொழியும் தேடலும் உள்ளது , ஆசிரியர் குழுவிலோ அல்லது உலகசினிமா பற்றிய , இவ்வாறான புனைவுலகம் சார்ந்த விடயங்கள் பற்றிய ஆலோசனைக்கோ உமரை பயன் படுத்திக்கொள்ளலாம் . அவருடைய பிளாக்கை பின் தொடர்பவன் என்ற ரீதியில் கரவொலி குழுவிற்கு அவரை பரிந்துரை செய்கின்றேன்.

அந்தளவு அவரிடம் சரக்கிருக்கின்றது . ஆனால் மூன்று நான்கு கட்டுரைகளை ஒரே ஆளிடம் கொடுப்பது , ஒரு வகையில் சஞ்சிகை மீதான வாசகர் அபிப்பிராயத்தை குறைப்பதுடன் , நல்ல மொழியோடு இறங்கி வாசிக்கும் வாசகருக்கு சலிப்பை ஏற்படுத்தலாம் , உமரின் அத்தனை கட்டுரைகள் எதற்காக பிரசுரிக்கப்பட்டன என்று தெரியவில்லை , உமரின் பாணியிலான கட்டுரைகள் அவ்வளவு தூரம் தமிழ் வாசிப்புச்சூழலுக்கு முக்கியமானவையா என்ற கேள்வியிருக்கின்றது , ஈழத்து சினிமாச்சூழலில் அவை உரையாடவும் அறியவும் பட வேண்டியவைதான் ஆனால் இவ்வளவு வேகமாக திணித்தல் அவசியமற்றது என்றே நினைக்கின்றேன் , அதே போலத்தான் பிரதீப் பாண்டியனின் ஆக்கங்களும் , அடுத்த இதழில் அதனை கருத்தில் கொள்வது நல்லது . ஈழத்தில் நன்றாக எழுதும் ப்ளாக்கர்கள் நிறையப்பேர் இருக்கின்றார்கள் , அவர்களிடம் சினிமா இரசனை பற்றி ஆக்கங்களை பெற முயற்சிக்கலாம் , உமாஜி , துளசி , கே.பி தர்சிகன் , டிலுக்சன் போன்றோர் நல்ல சினிமா இரசனை , எழுத்து என்பவற்றை கொண்டவர்கள் , இன்னும்பலரும் இருக்கலாம் . அவர்களை தேடி பிடித்து எழுத அவர்களுக்கு ஒரு வெளியை உண்டு பண்ணலாம் , ஒரே நபரின் எழுத்துக்களை குவிக்கத்தேவையில்லை .

சரவண கணேசின் பிளாக் கொமடி பற்றிய எழுத்தும் படிக்க ஏதுவாகவிருந்தது. அதுவும் வாசிக்க வேண்டிய கட்டுரைகளில் ஒன்று . மதுரன் ரவீந்திரனின் ஈழத்து சினிமா பற்றிய பார்வை உரையாடல் தளத்தில் நகர்த்தப்பட வேண்டிய ஒன்று . மீண்டும் மீண்டும் அது வலியுறுத்தும் விடயங்களை பொது வெளிக்கான அதிக வாசகப்பரப்பிற்கு நகர்த்த வேண்டும் .

ஏதிலிகள் , ஏன் இஞ்ச வந்தனி போன்ற குறும்படம் பற்றிய குறிப்புக்களை அவ்வளவு நீட்டியிருக்க தேவையில்லை , படங்களை அறிமுகம் செய்தல் என்பதும் அவற்றின் லிங்குகளை ஷெர் செய்தலும் போதுமானது , குறும்படம் பற்றிய விமர்சன உரையாடல் என்றவகையில் அவற்றின் பங்கு கரவொலிக்கு கொஞ்சம் வலுச்சேர்த்துள்ளது. பிஞ்சு போன்ற குறும்படங்களின் ஆபத்தையும் அபத்தத்தையும் சொன்ன முறை அழகாக வந்திருக்கின்றது . மதுரனுக்கு வாழ்துக்கள் . மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அனோஜனின் வச்சாக்குடுமியின் விமர்சனம் தான் , விமர்சனம் என்ற பெயரில் எஸ் ராம கிருஷ்ணனைப்போல் அனோஜன் கதை முழுவதையும் சொல்ல முயன்றிருக்கிறார். ஏதோ அவசரத்தில் கடமைக்கு எழுதியது போன்ற விமர்சனம் அது .

ஞானதாஸ் காசி நாதனின் கட்டுரையும் வாசிக்க வேண்டியதாக இருந்தது , ஜெராவின் போர்க்கால சினிமா கட்டுரையின் ஆரம்பமே அந்த கட்டுரைக்கு உள்ளே எதுவும் இருக்க போவதில்லை என்பதை குறிப்பிட்டது , இலக்கியத்தில் சமகாலத்தில் போர்க்கால இலக்கியம் என்ற பெயரில் சிலர் பம்மாத்திக்கொண்டிருப்பதைப்போலத்தான் அந்தக்கட்டுரையும் , அடிப்படையில் தன்னை முதன்மை படுத்தும் கட்டுரை அது , அதை தொடராக எழுதுதல் என்பதும் இன்னும் வேடிக்கையானது , மழுங்கிய மொழி உடைய அக்கட்டுரையின் ஆரம்ப பகுதியே ஒட்டு மொத்த கரவொலியையும் கேலிக்குள்ளாக்குகின்றது

//இதுவொரு கட்டுரைத் தொடர். எம் சனத்தொகையில் பெரும்பான்மையாக இருக்கும் எழுத்துக் கூட்டிப் படிக்கும்நிலையில் இருக்கும் வாசகர்களுக்கானது. ஏனெனில் நம் சமூகத்தின் எல்லா வகை வரலாறுகளும் அந்தத் தரப்பினருக்குத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அரசியல், சமூகம், பொருளாதாரம் என அநேக விடயங்களில் அவர்களே தீர்மானிக்கும் சக்திகள். வசதியும், வாய்ப்பும் உள்ள ஒரு சிலர் தீர்மானித்ததை ஜனநாயக வெளியில் மீளத் தீர்மானிப்பவர்கள். எனவே அவர்களுக்குத்தான் அனைத்தும் புரியும்படி சொல்ல வேண்டியிருக்கிறது. அவர்களைத் தானே பொதுசனம் என்கிறோம். அவர்களை நோக்கித்தானே ஜனரஞ்சகம் என்கிற ரசனை வாதத்தை முன்வைக்கிறோம். எனவே இந்தத் தொடரும் அந்தத் தரப்பினரின் அறிதலுக்கும், அறிவுக்குமாகவே எழுதப்படுகின்றது.//

எழுத்துக்கூட்டி படிக்கும் வாசகர் என்று கட்டுரையாளர் யாரை அடையாளப்படுத்துகின்றார் ?ஈழத்து சூழலில் எழுத்துகூட்டி படிக்கும் வாசகர் என்பவர் யார் ? இங்கே பொதுசனம் என்பது நல்ல சினிமா பற்றிய பிரக்ஞை இல்லாத மக்களையா ? எழுத்துக்கூட்டி படிக்க முடியாத மக்கள் இணையத்தை இயக்கி கரவொலியை படிக்கிறார்கள் என்பது நகைமுரணாகவல்லவா இருக்கிறது ? அப்படியாயின் இணைய சஞ்சிகையில் விடயத்தை எழுதாமல் தெருவில் இறங்கி துண்டுபிரசுரங்களாக அடித்து கொடுக்கலாமே மக்கள் வாசித்து அறிவுடையவர்களாக மாறிவிடுவார்கள் .

ஆசிரியர் குழுவில் ஒருவரான ஜெராவின் கட்டுரையில் உள்ள இந்த குறிப்பை மீண்டும் ஞாபகப்படுத்தி இக்கட்டுரையினை முடிக்கின்றேன்.

/அவர்களே தீர்மானிக்கும் சக்திகள். வசதியும், வாய்ப்பும் உள்ள ஒரு சிலர் தீர்மானித்ததை ஜனநாயக வெளியில் மீளத் தீர்மானிப்பவர்கள். எனவே அவர்களுக்குத்தான் அனைத்தும் புரியும்படி சொல்ல வேண்டியிருக்கிறது/ -ஜெரா

வாழ்துக்கள் கரவொலி டீம் .

 

-யதார்த்தன்

Share this Post

Leave a Reply