yathaadmin/ October 31, 2016/ கட்டுரை/ 0 comments

dfgh

 

நண்பர்களுக்கான குறிப்புகள்.

 

இன்று மதியம் வரை நடந்து முடிந்த மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின் போராடட்டம் பற்றிய அழகியல் பூர்வமான வர்ணனைகளையோ சொல்லாடல்களையோ பயன்படுத்தி ஒரு கட்டுரை வடிவத்தில் நானிதை பதிவு செய்யும் மனநிலையில் இல்லை.எனினும் சிலதை பதிவு செய்ய விரும்புகிறேன்.

ஒரு வேளை நாட்டின் எல்லா நீதிக்கோரிக்கைகளைப்போலவும் இப்போராட்டம் நமத்துப்போனாலோ அல்லது தோற்றுப்போனாலோ அதற்கான முற்று முழுதான காரணமாக நாம் தான் இருக்கப்போகின்றோம் என்பதை நான் என்னுடைய பல்கலைக்கழக சகோதரர்களுக்கு மீண்டும் ஒரு முறை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

1. மரணச்சடங்குகள் முடிந்த பிறகு பல்கலைக்கழகத்தை தீர்வு ஒன்று வரும்வரை மூடுவதாக அறிவித்த போது நம்முடைய தரப்பு அது ஒட்டுமொத்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் செயற்பாடு என்று எடுத்துக்கொண்டதில் நம்முடைய போராட்டாம் நச நசக்க தொடங்கி விட்டது , காரணம் பிரதான பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் பீடங்கள் தவிர ஏனைய வளாகங்கள் பெரும்பாலும் இயக்க நிறுத்ததை மேற்கொள்ள வில்லை என்பதை போராட்டத்தை ஒழுங்கு செய்த நாம் கவனிக்க தவறி விட்டோமா அல்லது அவர்கள் தேவையில்லை என்று எண்ணினோமா ? அல்லது அவர்களுக்கு மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியில் அக்கறை இல்லை என்று அர்த்தமா என்பதை நாமொருமுறை கூட்டாக நம்மைக்கேட்டுக்கொள்வோம் .

2. பண்டிகை நெருங்கும் வாரத்தில் சாவு வீட்டில் இருந்து நீங்கி , மெல்ல மெல்ல பேஸ்புக் புரபில் பிக்சர்களைப்போலவே பெரும்பாலான நாம் போராட்டத்தை வழமைபோல் விடுமுறையாக எண்ணி சொந்தக்கூடுகளுக்கு போகத்தொடங்கினோம். வழமையாக தாமதிக்கும் நீதியை இன்னும் தாமதி என்று சொல்வதைப்போல் ஒவ்வொருவரும் போன வாரத்தை கழித்தோம் , அதற்கிடையில் ஆளுநனரின் கடிதத்தை திருப்பி அனுப்பி ஏதோ ஒரு பெரும் இனப்போராட்டத்தை சாதித்து விட்டதாக நம்மை நாமே கொண்டாடியும் கொண்டது , பரவலாக ஒரு வேடிக்கையைப்போல கழிந்தது.

3. நேற்றைய தினம் நடக்கவிருக்கும் நிர்வாகக்கூட்டத்தை இலக்கு வைத்து ஒரு ஒன்று கூடல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது .அழைப்பு விடுத்த எமது மாணவ தலைமைகள் , யாழ் மாவட்டத்திற்கு வெளியே சென்ற மாணவர்களின் மீள் திரும்புகை பற்றியோ அல்லது அவர்களின் பங்களிப்பு பற்றியோ எத்தகைய கரிசனையை கொண்டிருந்தது , குறைவான மாணவர்களின் வருகை என்பது குறித்த குரலை எவ்வளவு பலவீனமாக்கியது என்பதை இன்று நாங்கள் கண்கூடாகக்கண்டோம் என்பதை நானும் இங்கே பதிவு செய்ய விரும்புக்கின்றேன். யாழ் மாவட்டத்தில் இருக்கும் மாணவர்கள் கூட (குறிப்பாக இங்கே சமூக வலைத்தளங்களில் கண்ணீர் மல்கி கவிதை எழுதிய எனதருமை நண்ப , நண்பிகள் உட்பட) தங்களுடைய வருகையை செய்ய முடியாமல் , இருந்தமையை நான் விமர்சிக்க விரும்பவில்லை , நிலமையை இதயத்தில் இருந்து உணரும் நல்ல ஆத்மாக்களை மட்டும் எதிர்பார்ப்பதே தகும். வில்லங்கமாக அழைத்து ராக்கிங் பாணியில் போராட்டம் செய்வதும் வன்முறைதானே.

4. வருகை தந்த மாணவ மாணவிகளை வெய்யிலில் கேற்றை மறித்து இருத்திவிட்டு பல்கலைக்கழக விரிவுரையாளர்களை வெளியில் மறித்த போது நாங்கள் எல்லோரும் எங்களுடைய தலைமைகள் விரிவுரையாளர்கள் , வரவிருக்கும் அமைச்சரை வரவிடாமல் மறிக்க போகின்றோம் , அதுதான் இன்றைய போராட்ட வழிமுறை என்று நம்பிஅமர்ந்திருந்தார்கள் . தீடீரென போட் மெம்பேர்ஸ் என்று ஆறேழு விரிவுரையாளர்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்துவார்கள் என்று சொல்லி உள்ளே விட்டோம் . மாணவர்கள் அதேன் என்று தெரியாமல் குழம்பத்தொடங்கினர் . பின்னர் துணைவெந்தர் வந்து அங்கிருந்து போராட்டத்தை வழிநடத்திய மாணவர்களிடம் “உங்களிற்கு தீர்வுதரத்தான் வந்திருக்கிறோம் ஏன் மறிக்கிறீர்கள் என்று ” சண்டையிட்டவுடன் துணை வேந்தரையும் சில விரிவுரையாளர்களையும் கார்களுடன் அனுமதித்தோம் , மீண்டும் மாணவர்கள் என்ன நடக்கிறது என்று குழம்பினார்கள் , ஊடகத்தை சேர்ந்தவர்களையும் உள்ளே விடாமல் முரண்பட்டோம் , அப்போதும் மாணவர்கள் என்ன நடக்கின்றது என்று தெரியாமல் குழம்பினார்கள் , அங்கே போராட்டத்தை வழிநடத்தியவர்கள் தங்களுக்குள் முரண்படத்தொடங்கினார்கள் .

5.இங்கே ஒரே பிரச்சனை மட்டும்தான் , முதலில் ஒரு போராட்டத்தை ஒழுங்கு செய்யும்போது தலைமைகள் தங்களிடம் என்ன செய்யப்போகின்றோம் , எதை பேசப்போகின்றோம் , எதைக்கேட்கப்போகின்றோம் என்று தெளிவுடன் இருக்க வேண்டும் , அத்தோடு தங்களுடன் அணி திரளும் மாணவர்களிடம் அவைபற்றி தெளிவு படுத்த வேண்டும் , அதில்லை என்றால் இன்று போல் பாதி நேரத்தில் பாதிப்பேர் காணாமல் பொனது போலவே எப்போதும் காணாமல் போவார்கள் , அர்பணிப்புள்ள இதயங்களையும் குழப்பி வீட்டுக்கு அனுப்பிவிட்டு உள்ளே ஏசி அறைக்குள் மினிஸ்ரருடன் யாருடைய குரலாக பேசப்போகின்றோம் ?

6.துணைவேந்தர் , அமைச்சருடன் பேச்சுவார்த்தை நிகழும் போது அவரை இம்பிறஸ் செய்வதற்காக பேசுவது போல பேசுவதும் , கருத்து ஒருநிலைப்பாடு அற்று அவர் சொல்வதற்கு சரி சரி என்று தலையாட்டுவதற்கு எதற்காக தலைமைப்பொறுப்பில் நாங்கள் இருக்க வேண்டும் ? ப் மினிஸ்ரர் மாணவர்களுடன் பேசிவிட்டு வெளியே வந்து போராட்டம் முடிந்தது மாணவர்கள் சம்மதித்து விட்டார்கள் என்ற பாணியில் பேட்டி கொடுத்து தான் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார் , கலைந்து சென்றவர்கள் போக மீதி பேர் குழம்பிக்கொண்டிருக்கிறார்கள் ,அவர்கள் கண்முன்னால் கேட்கப்பட்ட நீதியும் – தீர்வும் உறுதியற்ற ஒன்றாக மாறுவதை பார்க்கிறார்கள் . பின்னேரம் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்படவில்லை நாளைய தினம் சனாதிபதியை சந்தித்த பிறகே தீர்மானம் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்படுகின்றது .
7. நாளை சனாதிபதி மாளிகையின் தேனீர் விருந்தில் தலைமை மாணவர்கள் வைக்கப்போகும் கோரிக்கைகளாக நீதியும் தீர்வும் வேண்டும் ஆன்மா உள்ள மாணவர்கள் எதிர்பார்ப்பது

1. குற்றவாளிகள் முறையான நீதி விசாரணை மூலம் தண்டிக்கப்படுதலை உத்தியோக பூர்வமாக அரசு உறுதிப்படுத்துதல்.
2. இரண்டு பட்டதாரி பிள்ளைகளை இழந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தின் பொருட்டான நியாயமான அரசாங்க உதவி – மானியம் அல்லது நீண்ட கால தீர்வு.
3. குறித்த விடயங்கள் மேற்கொள்ளப்படும் என்பதற்கான மிகச்சரியான கால அளவை உத்தியோக பூர்வமாக உறுதிப்படுத்துதல் .
4. இதைப்போன்ற படுகொலை மீண்டும் நிகழாத சரியான சட்ட – நிர்வாக – நீதி பொறிமுறையை நடைமுறைக்கு உட்படுத்துதலின் அவசியத்தை பல்கலைககழகத்தி குரலாய் வலியுறுத்த வேண்டும் , இச் செயற்முறையில் பல்கலைக்கழக சட்ட பீடம் தன்னுடைய பங்களிப்பை வழங்குதல் முக்கியமாக இருக்கின்றது . அது பீடத்தின் கடமையுமாகும்.

என்பவற்றை பிரதானமாக மாணவர்கள் எதிர்பார்க்கின்றார்கள் . எங்களுடைய மாணவ தலைவர்கள் இவற்றையே கொல்லப்பட்ட ஆத்மாக்களை நேசிக்கும் அனைத்து மாணவர்களின் இதயங்களின் குரலாக அவர்கள் பேச வேண்டும் . அவர்கள் பெறப்போவது சலுகையல்ல , அது நீதி , அது உரிமை .
அன்புடன்
யதார்த்தன்

Share this Post

Leave a Reply