yathaadmin/ October 29, 2016/ கதை/ 0 comments

rtjrtjrtj

 

 

தாம் கடவுளிடம் மன்னிப்புக்கோரி ஒரு கடிதத்தை எழுதி முடித்திருந்தான். அன்று காலையில் தன் பிரியமான புள்ளிமான்களில்  தொடைகளில் அதிகம் சதைப்பிடிப்பான, அதிக தூரம் பயணிக்க தகுந்த  தெரிவு செய்து ,அதன் கழுத்தில்  மன்னிப்பு கோரிய கடிதத்தை கட்டி வடக்கு புறமாக அதனை தட்டிவிட்டான். அது செல்வதை  குன்றொன்றின் மீது ஏறி நின்று பார்த்தபடியிருந்தான்.

அப்போது அவனுக்கு பின்னால் கனைப்புச்சத்தம் கேட்டது திரும்பிப்பார்த்தான். “ம்” கம்பீரமாக நின்றிருந்தது.

”ம்”ஒரு பெண் குதிரை , அப்பளுக்கற்ற  வெள்ளைத்தேகம்  , காற்றை வருடிக்கொடுக்கும் நீளமானதும் மிக மென்மையானதுமான பிடரி முடி , சதைப்பிடிப்பான பளபக்கும் அதன் தேகம் , அவள் அடிக்கடி பீழை எடுத்தும் முத்தமிட்டும் விளையாடும் அதனுடைய தீர்க்கமான கண்கள்.  , நிலத்தில் உதைக்கும் போது கடும் தரையையும் தோண்டியெறியும் கால்களும் அதன் குளம்புகளும் , அப்பிடியே “ம்” ஐ பார்த்த படியே  இருக்க வேண்டும் போல் இருந்தது அவனுக்கு.

”ம்” ஐ அவள் மேற்கு பகுதியில் உள்ள புல்வெளியிலிருந்து எடுத்து வந்தாள். “ம்” பிறந்து  சில நொடிகளிலேயே அதனுடைய தாய் இறந்து விட்டதாக சொன்னாள். தன் குழந்தையை நக்கி சுத்தம் செய்யகூட திராணியற்று “ம்”மின் தாய் இறந்து போனது , கர்பத்தின் , தசைக்கூழ் ஈரத்துடன் அதனை தூக்கி வந்தாள் , தன் நாக்கினாலேயே ம் மின் உடலை தூய்மையாக்கினாள் , அன்றிலிருந்து அவர்களின் பிரியம் மிக்க செல்ல பிராணிகளில் ம் ஒன்றானது. ம் வந்த பிறகு  அவள் மானையும் கரடிகளையும்  டோ டோ பறவைகளையும் கொஞ்சுவதை  குறைத்து கொண்டாள் , அவளுக்கு ஏனோ ம் மை அதிகம் பிடித்து போனது , அவனுக்கும் தான்.

இவ்வாறு நினைத்தவாறு

அதனருகே சென்று  தேகத்தை வருடிக்கொடுக்கத்தொடங்கினான் “ம்” க்கு கழுத்து பக்கத்தில் தடவுவது பிடிக்கும் என்று அவள் ஒரு நாள் அவனிடம் சொல்லிருக்கிறாள் , அன்றிலிருந்து அதன் கழுத்தில் தடவிக்கொடுக்க தொடங்கினான் ஆதாம். கழுத்தை தடவிக்கொடுக்கும் போது “ம்” தனது தலையை ஆதாமின் இறுகிய தோள்கள் மீது சாய்த்துவிட்டு மெல்ல கனைத்தவாறே கண்களை மூடிக்கொள்ளும். தடவும் போது அதன் உடலில் பரவும்  சிலிர்ப்பை ஆதாம் கொஞ்சநாளில் கண்டு பிடித்திருந்தான். அன்றும் அப்படித்தான் அதன் கழுத்துபக்கமாய் தடவும் போது ஏதோ ஒன்று  அவன் கைகளில் உரசியது , பரிசோதித்தான்  அது ஒரு நகக்காயம் , கழுதைப்புலியினுடையதாய் இருக்கும் , அந்த பகுதியில் கழுதைப்புலிகளை அவன் அடிக்கடி கண்டிருக்கிறான். எங்காவது குன்றுகளில் இருந்து “ம்” மின் மீது இருந்து கழுதைபுலி பாய்ந்திருக்க வேண்டும்.

அந்த சம்பவத்திற்கு பின்னர் எல்லாம் குழம்பிப்போனது ,  தேவனின் திருவாயிலிருந்து அக்கினியாய் வந்த சொற்கள் மீண்டும் மீண்டும் அவனுக்கு நினைவில் வந்தன , புனித தோட்டத்தில் இருந்து வெளியேற்றும் முதல் தேவன் சொன்ன வார்த்தைகளவை, அதில் ஒன்று மட்டும் அவனுக்கு அடிக்கடி ஞாபகம் வந்தது

“மரணம்”

அப்போது  மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் , விருட்ச சாதிகளுக்கு மட்டும் இருந்த மரணம் , மனுஷ மனுஷிக்கும் வழங்கப்பட்டது.  எல்லாம் இடம் மாறின , மரணத்தை போலவே புதிய பல சொற்கள் பிறந்தன.

பசி

தாகம்

வேட்டை

பகை

முத்தம்

கண்ணீர்

சோகம்

முத்தம்

காதல்

இப்படியாக சொற்கள் பெருகிக்கொண்டே சென்றன ,

அதுவரை பசி என்பது  மனுஷ மனுசிக்கு மட்டும் வழங்கப்பட்டு இருந்த்து  , பறவை மிருகங்களுக்கு  பசி கொடுக்க பட்டிருக்கவில்லை , மாறாக அவைகளுக்கு  புணரவும் இனம் பெருகவும் தெரிந்திருந்தது. ஆனால் அன்றைக்கு பிறகு எல்லாம்  குலைந்து போனது , எல்லோருக்கும் பசித்தது எல்லோருக்கும் தாகமெடுத்தது , எல்லோரும் புணர்ந்தனர் . விலங்குகள்தாவரங்களை புசிக்க பழகிக்கொண்டன ,வேறு சில  வேட்டையாடி உண்ண தொடங்கின , எப்படியோ அவை சுனை நீரைப்போல இரத்தமும் சுவையானது என்று அறிந்து கொண்டன , ஒரு வேளை அந்த பாம்பு தான்  அவற்றிகு அதனை காட்டியிருக்க வேண்டும் என்று ஆதாம் நினைத்தான்.

இவை எல்லாம் மீண்டும் மீண்டும் அவனுக்கு வேதனையை தந்தன , ஆதாம் குற்ற உணர்வுடன் இருந்தான் , அதைவிட அவளின் பிரிவு அவனை வாட்டி எடுத்தது , நூறு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது அவள் அவனுடன் பேசி. இருவரையும் இணைக்கும் ஒரே விடயமாக “ம் ” மட்டுமேயிருந்த்து. பகல் வேளைகளில் ம் ஆதாமுடன் இருக்கும் , ஆதாம் அதன் மீதேறி வலம் வருவான் , உணவு தேடி உண்டது போக  மழைக்காலத்துக்காக சேமித்தல் , பயிரிடல் போன்றவற்றை அவன் அறிந்திருந்தான் , அவள் கடற்கரையில் குடியிருந்தாள் , இரவில் ம் அவளுடன் தங்கும் , அவள் உணவு தேடுவதில்லை  அவள்  பறவைகளுடன் நெருக்கமானவள் , அவை அவளுக்க்காக அப்பிள் தவி ர அனைத்து பழங்களையும் தானியங்களையும் எடுத்துவந்தன.

அவள் நாள் முழுவதும் கடற்கரையில் உலவுவாள்  இலைகளை ஆய்ந்து பதனிட்டு  ஆடைகள் தைப்பாள் , இரவில் மின் மினிகளை அழைத்து அவள் குகைவாசலில் மொய்கச்செய்வாள் , அதன் வெளிச்சத்தில் ம் மின் மீது ஏறி கடல்கரையெங்கும் சவாரி செய்வாள் , இப்படியாக அவள் நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தாள் . இவற்றை யெல்லாம் ஆதாம் ஏதாவது ஒரு மரத்தில் மறைந்திருந்து பார்ப்பான் . அவள் அருகில் செல்ல அவன் அச்சமுற்றிருந்தான் ,

அன்றைய சம்பவத்திற்கு பிறகு  அவள் அவனிடம் பேசவில்லை , ஆனால் அவனுக்கு தெரியும் , ஆதாமின் அந்த வார்த்தைகள் அவள் மனதில் இன்னும் இரத்தக்கசிவை ஏற்படுத்திய படிதான் இருக்கும் என்று அவன் அறிவான்.

”தேவ  என்னுடன் இருக்கும் படி நீர் அறிவித்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்கு கொடுத்தாள் நான் புசித்தேன் ”

(ஆதியாகமம் – 3.13 )

தேவனிடம்  நடுங்கிய படி அவன் அந்த வார்த்தைகளை சொன்னது அவள் கதறி அழுத்தொடங்கினாள் , தேவன் சபித்து விட்டு போன பிறகும் அவள் அழுகை நிற்கவில்லை , ஆதி மனுஷியின் முதல் அழுகை ஆதாமை குறுகிப்போகச்செய்தது. தேவன் அவள் மேல் இட்ட சாபம் எதுவும் அவளை வஞ்சிக்கவேயில்லை , வஞ்சித்தவையெல்லாம் ஆதாமின் வார்த்தைகள் மட்டுமே.

ஏடனுக்கு வெளியே அந்த கடற்கரையில் ” ம் ” மை கட்டியணைத்தவாறு பலமாதங்கள் அழுதபடியிருந்தாள் , ஆதாம் அவளை நெருங்கும் போதெல்லாம் அவளுடைய வீறுடுகை அதிகமானது , ஒரு நாள் வீறுடுகையை பொருட்படுத்தாமல் அவளை தேற்ற அருகில் சென்றான். அவன் அருகில் வருவதை உணந்தவள் அருகில் இருந்த பாறையில் தன் தலையை முழுவேகத்தில் மோதினாள் . நெற்றிபிளந்து கொள்ளா சூடான குருதி  ஆதாம் நெஞ்சின் மீது தெறித்தது. இரண்டாம் முறை  அவள் தன் தலையை மோத போக சடாரென மாறைக்கும் அவளுக்கும் இடையே பாய்ந்தது “ம்”  . அதனுடைய வயிற்லில் அவளுடைய  தலை மோதியது , செங்குருதி அதன் வெள்ளை வயிற்றினை நனைத்தது , ஆதாம் நடுங்கி விட்டான் , பைத்தியம் பிடித்தவனைப்போல ஓடி வந்து விட்டான் , அதன் பிறகு அவன் அவள் கண்ணில் படுவதேயில்லை. மறைந்திருந்து பார்ப்பதோடு சரி.

ஆதாம் ம் மிடம் ஒவ்வொரு இராத்திரியும் சொல்லி அழுவான் , குரலற்ற அது அவனை மென்மையாய் தன் தாடையை வைத்து தடவிக்கொடுக்கும் , அவளிடம் போய் சொல் என்று அவன் அழாத இரவுகள் குறைவாகவே இருந்தன, கடவுளுக்கு அனுப்பியதை போல பல ஆயிரம் கடிதங்களை  ம் இன் கழுத்தில் கட்டி ,அனுப்பிவிட்டான் , அவள் கடிதத்தை படிப்பதேயில்லை , பெரும் இலைகளில் எழுதப்பட்ட கடிதச்சருகுகள் அவளுடைய  குகையை சுற்றி அடைந்து கிடப்பதை அவன் மறைந்திருந்து பார்த்திருக்கிறான்.

அன்றும் அவளுக்காக ஒரு கடிதத்தை  எழுதிக்கொண்டிருந்தான் , அப்போது காட்டின் நடுவே   ம் மின் அவலக்குரல் ஒன்று எழுந்தது , மிகப்பெரிதாக அந்த அவலக்குரல் கேட்டது அவன் பதறிக்கொண்டு ஓடினான் , காட்டின் நடுவே உள்ள புல்வெளியில் இருந்துதான் ம் இன் அவலக்குரல் எழுந்திருக்க வேண்டும் , அவன் புல்வெளிக்கு வந்து சேரும் போது அவளும் ஓடி வந்திருந்தாள் . ம் தரையில் கிடந்து பெரிதாக  வீறிட்டு கனைத்தபடி கிடந்தது. அதன் யொனி பகுதியில்  சிறிய தலையொன்று வெளிப்பட்டு கொண்டிருந்தது. அப்போதுதான் ஆதாம் இத்தனை நாள் ம் வயிற்றில் ஒரு சிசுவை கொண்டிருந்ததை அறிந்தான். அவன் செய்வது அறியாது திகைத்து நிற்க அவள் பர பரவென காரியத்தில் இறங்கினாள் மெல்ல ம் மின் யொனிப்  பகுதியில் வெளிப்படும் அதன் சிசுவை உருவி எடுக்கத்தொடங்கினாள் , ம் பெரிதாக வீறிட்டது . கால்களை உதைத்து கதறியது  தலையை நிலத்தில் அடித்துக்கொள்ள தொடங்கியது , அவன் தலையை ஆதரவாக பிடித்து அதன் கழுத்தில் தடவிக்கொடுக்க தொடன்ங்கினான் , அத்தனை வேதனையிலும்  ஒரு கணம் அதன் உடலில் தடவலின் சிலிர்ப்பு ஊடுருவதனை இருவரும் உணார்ந்தனர், அவள் ஒருமுறை அவனை நிமிர்ந்து பார்த்தாள் , அவன்கண்களும் அவள் பார்வையை சந்தித்தது. அப்போது ம் பெரிதாக வீறிட்டு தன் சிசுவை வெளியேற்றியது ,

அதன் சிசுவை அவள் கைகளில் துக்கிக்கொள்ள  அதன் முகம் மெல்ல மெல்ல சோர்ந்து போனது கண்கள் சொருகத்தொடங்கின , ஆதாம் பதறிப்போய் அதன் தலையைல் தடவி  ம் ம்ம் ம்ம் என்று அரட்டி பார்த்தான். ம் பூரணாமாய் இறந்திருந்தது.

அவள் அருகில் வந்து ம் இன் தலையை தன் மடிக்கு மாற்றினாள் , ம் இன் சிசுவை அவன் வாங்கிக்கொண்டான் , அவள் அழத்தொடங்கினாள் , மெல்ல மெல்ல அவள் அழுகை தொடங்கியது . அவன் ம்மின் சிசுவின் மீதிருந்த ஈரத்தை நக்க தொடங்கினான் . அவள் அவனை அந்த சிசுவுடன் சேர்த்து அணைத்துக்கொண்டாள் , அந்த சிசு அவனுடைய கைகளில் இருந்து நழுவி தன் தாயின் மடியை நோக்கி தவழத்தொடங்கியது அவள் மீண்டும் அழத்தொடங்கினாள் , இம்முறை மிகப்பெரிதாக இறந்து போன ம் மின் மடியை நோக்கி நகரும் அதன் சிசுவை பார்த்து அவள் அழுதுகொண்டிருந்தாள் அவன் மீது இன்னும் நெருக்கமாய் சாய்ந்து கொண்டாள் ஒரு நூறு வருஷத்தின் பின்னரான அந்த அணைப்பை இருவரின் உடல் சூடும் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டன.

,அவன் இன்னும் அணைப்பை அதிகமாக்கினான் ,
அவள் ம் இறந்து கிடக்கும் ம் மையும் அதன் மடியை மோதும் சிசுவையும் வெறித்துப்பார்த்தபடியிருந்தாள் . வயிற்றின் அடியிலும் விக்கி அழும் தொண்டைக்குள்ளும் ஏதோ கனத்து கிடந்ததை உணர்ந்தாள் , கண்ணீரை அவள் கண்கள் இன்னும் இன்னும் உகுந்தன , கண்ணீரில் பார்வை லேசாய் மங்க ம் மின் பெரிய வெள்ளை உடல் அவள் கண்களுக்குள் மறைந்தது , இமைகள் இழுத்து சாத்தி கண்ணீரை பிழிந்து விட்டன,
மெல்ல

தேவனுடைய மற்றைய இறுதி வார்த்தைகள்  அவளின் காதுக்குள் ஒலிப்பதை உணர்ந்தாள்

“நீ கர்ப்பவதியாய் இருக்கும் போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன் , வேதனையோடே பிள்ளை பெறுவாய் , உன் ஆசை உன் புருஷனை பற்றியிருக்கும் , அவன் உன்னை ஆண்டுகொள்வான்”

-ஆதியாகமம் -3.16

 -யதார்த்தன் –

Share this Post

Leave a Reply