yathaadmin/ October 27, 2016/ கட்டுரை/ 0 comments

0015

ரு தேசம் உற்பத்தி செய்த போராட்ட வடிவங்கள் , அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகள் அந்ததந்த தேசங்களின் அரசியல் , புவியியல் மற்றும் சமூகபொருளாதார நிலைமைகளுக்காக உருவானவையாகவே இருக்கும். குறிப்பாக உள்நாட்டு எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த நாட்டின்
குழுக்களுக்கோ அல்லது அமைப்புகளுக்கோ காலத்தின் தளத்தில் நின்று உதவுகின்றன. இந்திய பெருந்தேசத்தில் காலனித்துவத்தின் போதுகடைப்பிடிக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் காலனித்துவத்தின் அரசியல் பூர்வமான அகற்றலில் பெரும் பங்காற்றின. எனினும்
காலனித்துவத்தின் சமூக ,பொருளாதார , பண்பாட்டு தாக்கங்களையும் தொடர்ச்சியையும் இந்திய எதிர்ப்புக்கள் அகற்றுவதில் தோல்வி கண்டன அல்லது குறித்த பொருளாதார அளவுகோல் மற்றும் மக்களின் கூட்டு மனநிலையில் நின்று ஏற்றுக்கொண்டன என்றே கூறவேண்டும் .இப்பின்னனியில் காலனித்துவத்திலும் , அதன் பின்னரும் அரசியல் போராட்டங்கள் , எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இந்திய பெருந்தேசியம் கையாண்ட முறைமைகளுள் ஒன்றாக ஹர்த்தால் காணப்பட்டது.

ஹர்த்தால்Hartal (pronounced – [həɽt̪aːl]) ஒன்ற சொல் இந்தோ- ஆரிய மொழிக்குடும்பத்தில் இருந்து கருக்கொண்ட சொல்லாகும் , குறிப்பாக இந்திய அரசியல் போராட்டத்தின் பிதாமகரென குறிப்பிடப்படும் காந்தி பிறந்த குஜராத் நிலத்தில் நிலவும் மொழியான குஜாத்தின் மொழியில் இருந்துபிறந்த சொல்லாகவே அடையாளப்படுத்தப்படுகின்றது. இந்திய பெருநிலத்தை பொறுத்தவரையில் ஹர்த்தாலுக்கும் காந்திக்கும் நெருக்கமான  தொடர்பிருக்கின்றது. முதன்முதலில், இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது இச்சொல் பயன்படுத்தப்பட்டது. அரசின் முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து அல்லது தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்ட, பெருமளவில் தங்கள் நிறுவனங்கள், அமைப்புகள், அலுவலகங்கள் ஆகியவற்றை மூடுவர்.இச்சொல்லின் மூலம் குஜராத்தி மொழியின் ஹட்தால் என்பதாகும். குறித்த கோரிக்கையை நிறைவேற்றக் கோரி, தங்கள் அலுவலகங்களை மூடுதல்  என்பது இதன் பொருள். குசராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட காந்தி, பிரித்தானிய காலனித்துவ அரசிற்கு எதிராக இச்சொல்லை அதிகம்   பயன்படுத்தினார்.

அதன் பின் இந்திய மொழிகளையும் இந்திய உப கண்டத்தின் பண்பாட்டையும் அதிகம் பகிர்ந்துகொள்ளும் இதர நாடுகளான  பாக்கிஸ்தான் ,பங்களாதேஷ் , இலங்கை , முதலான நாடுகளிற்கு இந்த சொல்லும் அசைவும் பரவிச்சென்றன. சில இடங்களில் சொல் மாற்றப்பட்டு
ஹர்த்தால் வேறு பெயர்களில் கடைக்கொள்ளப்படுகின்றது. உதாரணமாக தமிழ் நாட்டில் “பந்த் ” என்ற பெயரில் எதிர்ப்பு நடவடிக்கையாக கையாளப்படுகின்றது. இலங்கையில் பெருமளவில் “ஹர்த்தால் ” என்றும் , “அடைப்பு ” என்றும் வழக்கிலுள்ளது.

காலனித்துவ காலத்தில் இருந்து ஹர்த்தால் என்பது பெரும்பாலும் , பொருளாதார மையங்கள் , அலுவலகங்களை இஸ்தம்பிக்க வைத்து  அரசாங்கத்தின் அல்லது அதிகார மட்டத்தின் பொருளாதார இயங்கியலில் ஓர் அழுத்தத்தை , அல்லது வலிந்த தாக்கத்தை ஏற்படுத்த முனையும் ஓர்அடையாள , எதிர்ப்பு என்றே சொல்ல வேண்டும். அல்லது மக்களின் கூட்டுக்குரலை அதிகார மையம் நோக்கி கடத்தும் ஒரு அசைவாகவும் இருக்கின்றது.

காந்தியின் , ஹர்த்தால் எதிர்ப்பை எடுத்துக்கொண்டால் காலனித்துவ காலத்தில் பிரிடிஷ் அரசு தன்வசம் வைத்திருந்த பொருளாதார  மையங்களின் விற்பனை , வரி, இலாபங்களின் மீது தாக்குதலை தொடுப்பதன் மூலம் பேரம் பேசும் அல்லது எதிர்ப்பை வெளிக்காட்டும் ஒன்றாக
மேற்கொள்ளப்பட்டது . மக்களின் கூட்டு நம்பிக்கையின் துணையோடு வெளிநாட்டு அரசின் சுரண்டலை எதிர்த்தும் விடுதலைக்கான உப போராட்ட  வடிவமாகவும் ஹர்த்தாலை கையாண்டது இந்திய தேசிய விடுதலைப்போராட்ட நீரோட்டம் .

இங்கே கவனிக்க வேண்டியது யாதெனில் காந்தி ஹர்த்தாலுக்கா தெரிவு செய்த இடங்கள் , சாதாரண மக்கள் வாழும் , தொழில் செய்யும் இடங்கள்  அல்ல அவை பெரிய முதலாளித்துவ ஆலைகள் , கம்பனிகள் , அலுவலகங்கள் இருக்கும் பெரு நகரங்களாகவே இருந்தன. ஒப்பீட்டளவில் அந்த நகரங்களின் அரசியல் , பொருளாதார பரிபாலனங்களை உறைந்து போக செய்யும் போது அது நிச்சையமாக காலனித்துவ அரசின் பொருளாதார , நிர்வாக பயனை பாதிக்கும் வகையில் இருந்தது .

வட இந்தியாவில் உருவான இக் ஹர்த்தால் என்ற போராட்டவடிவம் தென்னிந்தியாவை கடந்து இலங்கைக்கு கைமாற்றப்பட்டது , 1930 களின் பின்னர்  இலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் அதிக தாக்கங்களை நிகழ்த்திக்காட்டிய இடதுசாரி அரசியல் போராட்டக்காரகளாலேயே . இடது சாரி
சிந்தனையின் பெரும் போராட்டங்களும் , செயலசைவுகளும் ஐரோப்பிய , ஆசிய கண்டங்களில் நிகழ்ந்து கொண்டிருந்தகாலத்தில் ஐரோப்பாவில்  நடந்த பெரும் வேலை நிறுத்தங்கள் பொருளாதார இஸ்தம்பிப்புகளால் கவரப்பட்ட இலங்கயின் இடதுசாரிகள் அவற்றை இலங்கையிலும்    மேற்கொள்ள தொடங்கினர் , அதேவேளை அத்தகைய போராட்ட வடிவத்திற்கு இந்திய செல்வாக்கோடு “ஹர்த்தால் ” என்ற பெயரும்  வழக்கிலாயிற்று , 1953 இல் இலங்கை இடது சாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தாலே காலனித்துவத்தின் அரசியல் நீக்கத்தின் பின்னர்
மேற்கொள்ளப்பட்ட முதலாவது பெரிய ஹர்த்தாலெனச்சொல்லப்படுகின்றது . ஆரம்பத்தில் தீவிர அரசியல் போராட்டங்களை முன்னெடுத்த  இடதுசாரிகளால் இன்று வரை அக்ஹர்த்தால் நினைவு கூரப்படுகின்றது . மேல் மாகாணம் , தென் மாகாணம் மற்றும் சப்பிரகமுவ மாகாணங்களில்
மேற்கொள்ளப்பட்ட மேற்படி ஹர்த்தால் அதிகம் பேசப்பட்டதும் , இலங்கை அரசியல் நீரோட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதுமாகும்.

இடதுசாரிகளின் பின்னர் ஹர்த்தாலை அதிகம் கையாள தொடங்கியது இனப்பிரச்சினைக்கு பின்னரான தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்ட குழுக்களாகும் . வடக்கு , கிழக்கு பகுதிகளில் தொடங்கப்பட்ட போராட்டக்குழுக்கள் பலவும் முப்பது வருடங்கள் ஹர்த்தாலை ஒரு சடங்காகவே
மாற்றின , ஹர்த்தாலின் மூலம் தமிழ் தேசிய விடுதலைப்போராட்டக்குழுக்கள் அரசை எதிர்ப்பதாய் , மட்டுமன்றி மக்களின் கூட்டு மனநிலையின் ,செயற்பாடுகளின் பிரதிநிதிகளாக தாங்கள் இருக்கின்றோம் என்ற அடையாள வெளிப்படுத்துகைக்கும் ஹர்த்தாலைக்கையாண்டன , என்றும்
சொல்லலாம் . படுகொலைகள் , துஸ்பிரயோகங்கள் , முதலான சம்பவங்களை எதிர்க்கும் ஒரு வித சடங்கு ஆற்றுகையாக கடந்த முப்பது  வருடங்களில் ஹர்த்தால் மாற்றப்பட்டது , குறிப்பாக விடுதலைப்புலிகளின் கை ஓங்கியிருந்த காலத்தில் அரச கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் தமிழர்
பிரதேசங்களில் இத்தகைய ஹர்த்தால்கள் அடிக்கடி நிகழ்ந்தன. அதன் தொடர்ச்சியாக 2009 இல் புலிகளின் ஆயுதப்போராட்டத்தின் மெளனிப்பின் பின்னர் ஹர்த்தால் சடங்கு வெகுவாக குறைந்து போனது.

2009 பின்னர் மக்கள் கூட்டு மனநிலையில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தி நிகழ்த்தப்பட்ட ஹர்த்தாலாக வித்தியாவின் படுகொலையை ஒட்டி நடந்த போராட்டங்களை குறிப்பிடலாம் . வித்தியாவின் போராட்டத்தின் பின்னர் நிகழ்த்தப்பட்ட ஹர்த்தாலாக பல்கலைக்கழக மாணவர்கள் பொலீஸாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதை ஒட்டி நடத்தப்பட்ட ஹர்தாலையும் குறிப்பிடலாம் . விடுதலைப்புலிகளின் பின்னர் , தமிழ்தேசியகூட்டமைப்பும் , அதன் வெளியேயும்   இயங்கி வரும் தமிழ்த்தேசிய கட்சிகளின் குரல்கள் இத்தகைய ஹர்த்தால்களை ஒழுகமைப்பவர்காளாகவே  வடக்குக் க்கிழக்கில் இருக்கின்றனர். இவர்கள் தவிர யாழ்ப்பாண , கிழக்கு பல்கலைக்கழகங்கள் ஹர்த்தாலை ஒழுங்கமைக்கத்தக்க குரல்களை
கொண்ட அமைப்புகளாக உள்ளன.

இவை இவ்வாறு இருக்க , கடந்த முப்பது வருடங்களிலும் 2009 பின்னரும் நிகழ்த்தப்படும் ஆயுதமற்ற பிரதானமான மக்கள் போராட்டமாக ஹர்த்தாலே இருக்கின்றது , சிறார்கள் வரை பரீட்சயமாகிவிட்ட ஹர்த்தால் என்ற சொல் , ஒரு எதிர்ப்பு , கூட்டு குரல் , அல்லது போராட்ட வடிவமாக எத்தகையை  விளைதிறனை கொண்டிருக்கின்றது என்ற கேள்வியை கேட்க வேண்டியிருக்கின்றது . பெரும்பாலும் அரசு ,அரச படைகள் , பொலீஸ் போன்றஅதிகார
மையங்களை எதிர்த்தரப்பாக நிறுத்தி உரிமைகளுக்காக நீதி வேண்டி , மகுட வாசகங்களை தாங்கி, தமிழ் மக்கள் ஹர்த்தாலை அனுட்டிக்கின்றனர்.  அதாவது தமது குரலென மக்கள் கருதுவர்களின் வேண்டுகையின் பின்னணியில் மக்கள் அதனை நிகழ்த்துகின்றனர். வடக்குக் கிழக்கில்
நடத்தப்படும் ஹர்த்தால் என்பதும் பிரதானமாக “அடைப்பு” நடவடிக்கையாகவே காணப்படுகின்றது ,அதாவது முன்பு குறிப்பிட்டது போல் வணிகநிறுவனங்கள் , அரச அரச சார்பற்ற அமைப்புகள் , போன்றவற்றை அடைத்து போடாட்டம் முன்னெடுக்கப்படும் . பெரும்பாலும் இவை ஒன்று இரண்டு
நாட்களுக்குரிய கால எல்லைகளையே கொண்டிருக்கின்றன.

இத்தகைய வடக்கு கிழக்கில் இனவாத அரசுக்கெதிராக , அல்லது அதிகார மையங்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஹர்த்தால்கள் சிறிய  அளவிலேனும் விளைதிறனை , அல்லது போராட்ட உழைப்பின் பயனை மக்களிடம் சேர்ப்பிக்கின்றனவா என்ற கேள்வி இருக்கின்றது.

கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப்போல , வடக்கு கிழக்கு பெரும் நகரங்களையோ , வணிக அமைப்புகளையோ , ஆலைகளையோ, தொழிற்சாலைகளையோ கொண்டதல்ல . சுய உற்பத்தி பொருளாதாரத்தில் இருந்து மேலைத்தேச சுரண்டல் வரைபுக்குள் சிக்குண்டு இலங்கை
சந்தை பொருளாதார நாடாக மாறி நெடுநாட்களாகிவிட்டது , தேயிலையும் ,இறப்பரும் , தெங்கும் , மட்டுமே கொஞ்ச நஞ்ச உற்பத்தி வருவாயை  இலங்கைக்கு வழங்கிக்கொண்டிருக்கின்றது . அதுவும் வடக்கு கிழக்கில் கிடையாது . வடக்கும் கிழக்கும் இலங்கையின் ஏனைய பாகங்களைப்போலவெளிநாட்டு பொருட்களின் சிறு சந்தைகளாக இருக்கின்றன , அதேவேளை சுய உற்பத்தியென்பதும் மிக அருந்தலான கூட்டு விளைதிறனையே  மக்களுக்கு வழங்குகின்றது , பயிருடும் பயிர்களும் , கடல்வளமும் பெரிதளவான வருமானத்தை கொண்டவையல்ல , அத்துடன் முப்பது வருட  போருடனான அல்லல் மிகுந்த வாழ்க்கை மக்களை கடன் காரர்களாகவும் இஸ்திரமான பொருளாதார இருப்பில்லாதவர்களாகவும் மாற்றி விட்டது . குறைந்த உற்பத்தியும் புலம்பெயர் பணவரவும் மட்டுமே மக்களின் பொருளாதாரத்தைத் தாங்கும் காம்புகள் . யாழ்ப்பாணம் , மட்டக்களப்பு ,வவுனியா , கிளிநொச்சி , திருகோணமலை , மன்னார் முதலான நகரங்களும் கிராமங்களின் தொடர்ச்சியாக இருக்கும் சிறுநகரங்கள் மட்டுமே , இங்கே பெரும் பொருளாதார , தனம் திரளும் நிறுவனங்கள் மிக குறைவாகவே இருக்கின்றன.

ஆக இந்த நகரங்களை மையப்படுத்தி வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அல்லது அடைப்பினை மேற்கொள்ளும் போது அரசாங்கத்திற்கு பொருளாதார ரீதியில் குறிப்பிட்ட அளவு கூட பாதிப்பு ஏற்படாது . அரச நிர்வாகம் சீர் குலையாது . வெறும் ஓரிரண்டு நாட்கள் அரச ஊழியர்கள் , சம்பளத்தோடுவீட்டில் விடுமுறையை கழிப்பார்கள் அவ்வளவுதான். இங்கே அரசுக்கோ அதிகாரத்தரப்புக்கோ எந்த தாக்கமும் ஏற்படுத்தப்படப்போவதில்லை .அரசியல் ரீதியாக ஹர்த்தாலை அனுட்டிக்க சொல்லும் தமிழ்தலைமைகள் மக்கள் தங்களின் குரலுக்கு செவி சாய்கிறார்கள் என்ற செய்தியைஅரசுக்கு எடுத்துச்செல்ல முடியும் , ஆனால் மக்கள் கொடுக்கும் அத்தகைய போராட்ட வடிவ உழைப்பை பொருத்தமாக கையாண்டு அரசியல்
போராட்டத்தை முன்னெடுக்கும் திறனுள்ள தலைமைகளை நாம் பெற்றிருக்கிறோமா என்பது நகை முரணானது அல்லவா ?

ஆக அரசியல் ரீதியாகவும் ஹர்த்தால் எந்த வித அசைவினையும் மேற்கொள்ள இயலாத ஒன்றாகவே வடக்கு க் கிழக்கு மக்களால் அனுட்டிக்க
வைக்கப்படுகின்றது .

காந்தியோ , அல்லது ஐரோப்பிய , ஆசிய இடதுசாரிகளோ மேற்கொண்டதைப்போல பெரும் தொழிலாளர்களினுடைய அரசை உலுக்கும் போராட்ட  வடிவமாக இலங்கையின் ஹர்த்தால் இருக்கப்போவதில்லை . சந்தைப்பொருளாதாரமும் அரசையும் , சிறு உற்பத்து பொருளாதாரத்தையும் தங்கி  வாழும் அரச உத்தியோகத்தர்களையும் முதலாளிகளையும் பெரியளவில் ஹர்த்தால்கள் பாதிக்கப்போவதில்லை. ஆனால் நிஜமான பாதிப்பு இரண்டாம் மூன்றாம் மட்டங்களில் உள்ள சிறு தொழிளார்களையும் அவர்களின் குடும்பங்களையுமே சென்றடைகின்றது . உதாரணமாகஅண்மையில் மேற்கொள்ளப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு எதிரான ஹர்த்தால் அன்று , பாதிக்கப்பட்ட ஒரு சிலரை
அடையாளப்படுத்துகின்றேன். மீனவர்கள் , அன்றாட விவசாயிகள் , வாடகைக்கு வாகனக்கள் ஓடுபவர்கள் , சிறு கடைக்காரர்கள் என்று சிறு சிறுதொழில்கள் மூலம் அன்றாட பிழைப்பை செய்யும் மனிதர்கள் கடுமையாகப்பாதிக்கப்பட்டனர் , லீசிங்கில் கடன் வாங்கி தொழில் செய்பவர்களும் ,வட்டிக்கு கடன்வாங்கி தொழில் செய்பவர்களும் அன்றைக்கு வருமானம் இன்றி அந்தரப்பட்டதை ஹர்த்தாலை அனுட்டிக்கச்சொன்னவர்கள்
எவ்வளவு தூரம் உணர்ந்தார்கள் , அல்லது அனுட்டித்த நாம் எவ்வளவு தூரம் உணர்ந்தோம் ?

யாழ்ப்பாணாத்தில் எடுக்கப்பட்ட இக்குறும்படம் இத்ககைய செய்தியை நன்றாக இடைக்கடத்துகின்றது  ,

உண்மையில் போராட்டங்கள் , அவசியமானவை அவை ஆக்க பூர்வமான விளைவுகளை ஏற்படுத்துபவையாக இருக்க வேண்டும் . இங்கே இப்போதுபோராட்ட வடிவம் என்பது பாதுகாப்பான எல்லைக்குள் இருந்துகொண்டு குரல் கொடுப்பது .அதாவது கொலை செய்பவர்களை மென்மையாக
கண்டிப்பது , அரசுக்கு மென்மையாக அழுத்தம் கொடுப்பது என்றாகிவிட்டது , இப்போது எல்லா போராட்ட வடிவங்களும் பாதுகாப்புஎல்லைக்குள்(safe zone) இருக்கும் வடிவங்களாகவே செய்யப்படுகின்றன. குறிப்பாக இந்த ஹர்த்தால் என்பது முற்றிலும் வீணான ஒன்றாகவே
இருக்கின்றது . பொருத்த மற்ற தலைமைகள் தங்கள் இருப்பின் பாதுக்காப்பைக் கருதி மக்களை மென்மையான பயனற்ற போராட்டவடிவங்களுக்குள் தள்ளி ஊக்கு விக்கின்றனர். ரோட்டில் ரயறைக் கொழுத்துவதும் , நீதிமற்றுக்கு உணர்ச்சி வசப்பட்டு கல்லெறிவது மட்டும்
போராட்டமல்ல . அவை சிந்தனை மற்றும் செயற்பாட்டுத் தளத்தில் இருக்கவேண்டும் , பிரச்சினை ஒன்றை அரசியல் தலைமைகள் கையாளும் விதம்  மட்டுமே மக்களை நல்ல போராட்டங்களுக்கு வழிநடத்தும் , இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் புனை பெயர்களில் கம்பு சுத்தும்
போராட்டங்களுக்கு பழகிவிட்டனர் , சுதந்திரத்தையோ விடுதலையோ யாரேனும் செத்து வாங்கித்தந்தால் எங்களுக்கும் ஒரு கிலோ ! என்றமழுங்கிய மனத்திலே மக்களை கொண்டு போய் விட்டிருக்கின்றனர், சர்வதேச முதலாளித்துவ நுகர்வுச்சூழலும் , தமிழ்த்தலைமைகளும்.
ஹர்த்தாலின் அடுத்தநாள் காலையில் எழுந்து ஊடகங்களை புரட்டும் போது யாழ்ப்பாணத்தின் அனைத்து கடைகளும் தொடராக மூடியிருக்கும்  படத்தை பார்த்துவிட்டல் போதும் , போராட்டம் வென்று விட்டது என்று திருப்தியோடு பிரச்சினையை மறந்து போகின்றார்கள். எதிர்ப்பு என்பது அடையாள வடிவம் மட்டுமல்ல அது எதிரொலிக்கக் கூடிய குரலாகவே வெளிப்படவேண்டும் , வீட்டில் ஓய்வெடுத்தபடி போராட்டம்செய்வது என்பது என்னவகையானது ? அது விடுமுறையை களித்தபடி போராடுவதாக இருக்கிறது. ஹர்த்தாலையும் அத்தகைய ஒன்றாகவே பார்க்க
வேண்டி இருக்கின்றது .நமது அரசியல் பொருளாதார சூழலுக்கு ஹர்த்தால் முற்றுமுழுதாக ஒவ்வாத ஒன்றாகும் . இந்த நிலத்தில் அதை போராட்ட  அல்லது எதிர்ப்பு வடிவமாக கையாள்வது எத்தனை முட்டாள்தனமானது .

அது கடந்தகாலத்தில் இரத்தமும் வியர்வையுமாக போராடியவர்களை கொச்சை படுத்துவதாகவும்  நாம் தொடர்ந்தும் முதுகெலும்பையும்மூளையையும் இழந்து கொண்டிருக்கும் உயிரிகளாக மாறிக்கொண்டிருக்கிறோம் என்பதையும் உணர்த்துகின்றது.

-யதார்த்தன்

உசாத்துணைகள்.

1. https://en.wikipedia.org/wiki/Hartal
2.https://en.wikipedia.org/wiki/1953_Ceylonese_Hartal
3.http://economicdemocratisation.org/?q=content/remembering-1953-hartal
4 .http://www.wsws.org/tamil/category/books/Keerthi/wije25.shtml
5.Shastri, Amita. “The Political Economy of Intermediate Regimes: The Case of Sri Lanka 1956-1970.” South Asia Bulletin 3(1983): 16-37.
6. புதிய பூமி -1999.08.09 இதழ் – நூலகம் வலைத்தளம்.
7.http://www.thenee.com/html/240709-1.html
8.1953 ஹர்த்தால் முதல் வெலிவேரியா வரை (கட்டுரை ) http://economicdemocratisation.org/?q=content/1953-%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D
%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF
%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-
%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE
%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF
%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE
%B2%E0%AF%8D-%E0%AE%93h%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D
நன்றி – (மேற்படி கட்டுரைக்கு முதலான உரையாடல்களிற்காக ) கருணாகரன் , கிரிஷாந்த் , நிக்கலொஸ்

Share this Post

Leave a Reply