yathaadmin/ September 11, 2016/ கட்டுரை/ 0 comments

20160911_113853

சுட்ட பழம்

நான் ஒரு நாவல் பழ பிரியன். சிறுவயது முதல் நாவல் பழத்தின்ர சுவை நாக்கில ஒட்டிக்கொண்டு இண்டைக்குவரைக்கும் குறையாமல் இருக்கு. இது நேசறியில் ஆரம்பித்தது , சிறுவயதில் கரு கருவென நாவல் பழம் மாதிரி இருப்பன் எண்டு அம்மா சொல்லுவா , நேசறிக்கு போகேக்க தெருவில இருக்கிற  எல்லா பிள்ளையளோடவும் நேசறிக்கு நடந்து போவன். நாங்கள் போறவழியெல்லாம் அதிகம் நாவல் மரங்கள் இருக்கும், நாவல் பழ சீசன் தொடங்கீட்டு எண்டா போகும் போதும் வரும் போதும் பழம் பொறுக்கியே நேரம் போய்விடும். பள்ளிக்கூடம் போனால் பிறகும் இதுதான் நிலமையா இருந்தது.

சிறுவயதில் சமயப்புத்தகத்தில  முருகனுக்கும் அவ்வைக்கும் நடந்த  வேல்ட் பேமஸ் கொன்வசேசனான  ““சுட்ட பழம் வேணுமா? சுடாத பழம் வேணுமா ?” எண்ட நாவல் பழக்கதை எனக்கு சிறுவயதில் பிடித்தமான ஒண்டு.

பொக்கற்நிறைய நாவல் பழத்தோட போற என்னை கண்டதும் வகுப்பில இருக்கிற என்னைப்பொல வாண்டுக்கூட்டம் என்னைச் சூழ்ந்துகொள்ளும். அவர்களிடம்  சுட்ட பழம் வேணுமோ  ? சுடாத பழம் வேணுமோ ? எண்டு கேப்பன்.  ஏனெண்டா என்ர ஒரு பக்க பொக்கற்றுக்குள்ள சுட்ட பழமும் இன்னொரு பக்க பொக்கற்றுக்க சுடாத பழமும் இருக்கும். சாட்சாத் முருகனின் அதே கொன்செப்ட்தான். சுட்ட பணம் எண்டுறது கீழ விழுந்து சிதைந்து மண் ஒட்டி இருக்கும் பழங்கள் , சுடாத பழம் எண்டுறது கோப்பில புடுங்கின  Fresh பழங்கள். நாவல் பழத்தை சாப்பிட்டு ஆற்ற நாக்கு கடும் நாவல் கலறில இருக்கு எண்டு எங்களுக்க போட்டி நடக்கும்.

பள்ளிக்கூடத்தில நாவல் பழப் party எல்லாம் முடிஞ்சு

பின்னேரம் வீட்ட போகும் போது அம்மா தலையில கைவைச்சு , கம்பெடுத்து துரத்துவா. பள்ளிகூட யூனி போமில் பாதிக்கு மேல் நாவல் பழக் கயர் இருக்கும். இப்ப வாற செப் எக்சல் விளம்பரத்தில வாற அம்மா மாதிரி இல்லை எங்கட அம்மா.  அதுவும் காற்சட்டை பொக்கற் சொல்லவே வேண்டாம். நாவல் கயர் ஊறிப்போய் கிடக்கும். நீலக்காற்சட்டைதானே எண்டு கையில படுற கயர் எல்லாத்தையும் அதில துடச்சிடுவன். ஆனா வெள்ளை சேட்டில படுறத ஒண்டும் செய்யேலா . ஏன் அரசாங்கம்  யூனிபோம வெள்ளையில குடுத்தவங்கள் எண்டு திட்டுவன். அம்மாட்ட அடி வாங்கும் போதெல்லாம்.

 

klthf

சுடாத பழம்.

வன்னிக்குப்போனாப் பிறகும் நாவல் பழம் மெலே இருந்த  மோகம் குறையவேயில்லை. பரந்தனில் எங்கட  குமரபுரம் கிராமம் தாண்டினால் காஞ்சிபுரம் எண்டு ஒரு கிராமம் இருக்கு, கிளாலில ஆரம்பித்து ஆனையிறவு வரை நீண்டு கிடக்கும் கடல்நீர் ஏரியின் கரையில அந்த கிராமம் இருக்கு , அங்க இருக்கிற கடல்கரையில் நிறைய நாவல் பழம் கிடைக்கும் எண்டு நண்பர்களுடன் அங்க போனன். அங்க நல்ல சதைப்பிடிப்பும் ரேஸ்ரான  நாவல் பழம்  கிடைச்சுது ,  நாங்கள் நாவல் பழம் புடுங்க ,காஞ்சிபுரத்தில இருக்கிற ஒரு நண்பன்  கெற்றப்போலால காடைஅடிச்சு கொண்டு வந்தான். நெருப்ப கொழுத்தி அதை வாட்டிக்கொண்டு நிக்கும் போது  காட்டுக்க இருந்து  தீடிரென வந்த இயக்க அக்காமார் சிலபேர் எங்களை பிடிச்சுக்கொண்டு போய் , காடுக்க இருந்த அவேன்ர பேஸ்ல முட்டுக்கால்ல நிக்க வைச்சு நல்ல பேச்சு. காரணம் கடற்கரையில் உலாவும் போது தலை தெரிஞ்சா ஆமி சினைப்பண்ணுவானாம். இரண்டு மணி நேரத்திற்கு மேலே நல்ல பேச்சு. அடுத்தநாள் பள்ளிக்கூடம் வந்து அதிபரிட்ட சொல்லுவம் எண்டு வேற சொல்லிட்டினம், சொறி கேட்டு  அழுது  குழறிக்கொண்டு கொண்டு ஓடி வந்திட்டம் , அடுத்தநாள் பள்ளிக்கூடம் போகேல்ல , ஆறு பேருக்கும் காய்ச்சல். பிறகு அந்தப்பக்கம் போறதே இல்லை.

அதற்கு பிறகு இடம்பெயர்வு , முகாம் வாழ்கை எண்டு போனது ,இடையில் நாவல் பழம் தின்ன சான்சே கிடைக்கவில்லை. ஆமியும் இயக்கமும் நாவல் மரங்களை வெட்டி சென்ரி அடிச்சதுதான் மிச்சம்.

2011 இல் யாழ்ப்பாணம் வந்த பிறகு மானிப்பாயில் நண்பரன் டிலுக்சனுடன் சுதுமலை அம்மன் கோயிலடியில் இருக்கும் நாவல் மரங்களில் ஏறி  உலக சினிமா , இலக்கியம் எண்டு கதைத்தபடி நாவல்பழம் சாப்பிடுவன். சுதுமலை அம்மன் கோயில் தேர் முட்டியடியில (பிரபாகரன் பிரகடனம் செய்த அதே இடம்தான்)  சைக்கிள விட்டிட்டு வயலுக்கு நடுவில குளக்கரையில நிக்கிற அந்த சின்ன நாவல் மரத்தில செங்காய் கிடந்தாலும் விடாமல் புடுங்கி சாப்பிட்டுக்கொண்டு இருப்பம்.

மறுபடியும் சரசாலைக்கு வந்த பிறகு சிறுவயதில் நான் விட்டிட்டு போன நிறைய நாவல் மரங்கள் தறிக்கப்பட்டு விட்டன. நாவல் பழங்களை தேடி ஊருக்கு பின்னால் குருவிக்காட்டுப்பக்கமும் , வயல் கரை பக்கமும் போனன் , அங்க நிறைய நாவல் மரங்களை கண்டு பிடிச்சன். பெரும்பாலும் தனியே அலைவன் . அல்லது போட்டோ எடுக்கிறன் எண்டு கமராவோட அலையும் தம்பியோட போவன் , அல்லது  கமலாபரனோடு.

, எந்த மரம் எப்ப பழுக்கும் எண்டு நல்லா தெரிஞ்சு கொண்டன். சில மரம் மாரி காலம் தொடங்க முதல் பழுக்க தொடங்கீடும் ஆனா அப்பிடியான மரங்களில நிறைய பழங்களை காண்பது அரிதாக இருக்கும் , நிறையப்பழம் இருந்தாலும் சதைப்பிடிப்பும் சுவையும் குறைவாக இருக்கும்.  பெரு நாவல் மரங்கள்  பழம் சாப்பிட சரிவராதவை  அதுகளின்ர கொப்புகள் நீண்டு போய் ஏறி புடுங்கேலாத இடத்துக்கு போடும், பழம் சாப்பிடுவதற்கு சின்ன மரங்கள்தான் சரி. மழைக்காலம் தொடங்க பழுக்கிற  நாவல் பழங்கள்தான் குண்டு குண்டா நாக்கில வைக்க கரைஞ்சு  தொண்டை குழிவரை சுவையோட இறங்கும் , நாவல் கொப்பை உலுப்பி கீழ விழுற சுட்ட பழங்களை எடுத்துச்சாப்பிடுறது ஒரு தனிச்சுவைதான். ஏனெண்டா உலுப்பும் போது நல்லா பழுத்த பழம்தான் விழும் , அது டேஸ்டா இருக்கும். ஆஞ்சு கொண்டு வந்து உப்புத்தண்ணீல கழுவீட்டு சாப்பிடும் போது அது இன்னொரு வகையான சுவைக்கு தாவும்.

பெரிய பத்தைகளிலும் வயல் வெளிகளின் கரைகளிலும் நாவல் மரங்கள் நிக்கும்  வெயிலுக்கால , உழுத வயலுக்கால  போக களைச்சுப்ப்போவம் , பழுத்திருக்காட்டி  போய் ஏமாந்து திரும்போணும், தூரத்தில நிக்கிற நாவல் மரங்கள் காய்ச்சிட்டுதோ பழம் இருக்கோ எண்டு  பாக்கிறதுக்கு நான் ஒரு சூட்சுமம் வச்சிருக்கிறன், வாயில விரலை வச்சு ஒரு பெரிய விசில் அடிச்சா  கிளியள் , மைனாக்கள்  எழும்பிப்பறக்கும்  எந்த பக்கம் கனக்க கிளி விழுகுதோ அந்த பக்கம்  நல்ல நாவல்பழம் இருக்கும்  , அங்க போய் மரத்தில ஏறிச்சாப்பிடுவன்.

20160911_113351

என்னுடைய நாவல் மரங்கள் சில.

 

எங்கட ஊரெல்லாம் அங்காங்கே வைரவர்  மாதிரியான சிறு தெய்வங்கள் மரங்களுக்கு கீழ இருப்பினம், அதோட முனி மாதிரியான பயம் காட்டும் நம்பிக்கையளும் நிறைய இருக்கும் , மதிய நேரம் நாவல் பழத்துக்கு வெளிக்கிட்டா அம்மா , உங்க முனியடிக்குதாம் எண்டு பேசுவா. அக்சுவலா நான் மரத்தில ஏறி விழுந்திடுவன் எண்டுறதுக்காக அம்மா சொல்லும் இராஜதந்திர நகர்வுகளில் அதுவும் ஒண்டு. நான் மதியம் எண்டும் பாக்க மாட்டன். முனி இருந்தால் பறவாயில்லை நாவல் பழம் நாலு குடுத்து கதைப்பம் எண்டு அம்மாட்ட சொல்லிட்டு வெளிகிட்டிடுவன்.

இந்த சீசனுக்கு நாவல் பழத்துக்கு போகவே நேரம் கிடைக்கேல, ஆனா சீசனுக்கு முதலே நாவல்கள் காய்ச்சிட்டு எண்டு அக்கா சொன்னாள்.

காலமை எட்டு மணிக்கு தனுசின்ர பைக்கில ஏறினா  வேலை , கம்பஸ் எல்லாம் முடிச்சு , பின்னேரம் சசி அண்ணன் , குமாரதேவன் ஐய்யா ஆக்களோட டிஸ்கசன் எல்லாம் முடிச்சு வீட்ட வர  ஒன்பது மணியாகிடும். இதுக்க எங்க நாவல் பழம் சாப்பிட? காலமையள்ள வயல் கரையால போகும் போது நாவல் பழங்கள் கொட்டிகிடக்கும் கொஞ்சம் நிப்பாட்டுடா எண்டு கேட்டா தனுஸ் நேரம் போட்டுது எண்டு நிறுத்தவே மாட்டான் , வளத்த நாய் மூஞ்சையப் பாத்த மாதிரி நாவல் மரங்களையும் பழங்களையும் பாத்துக்கொண்டு போவன்.

 

 

இண்டைக்கு எப்பிடியாவது நாவல் பழம் சாப்பிட்டே அகவேணும் எண்டு முடிவில இருந்தன். இந்த ஞாயிறை நாவல் பழத்திற்காக ஒதுக்கியிருந்தேன். கிரியும் நாவல் பழம் கொண்டுவாடா எண்டு ரெண்டு மூண்டுதரம் கேட்டவன் . என்னைப்போல பிருந்தாக்காவும் நாவல் பழப்பிரியை.எனவே  அவருக்கு அது வரலாற்றுக்கடமை.

காலமை செப்பின் பை ஒண்டை உருட்டி பொக்கற்றுக்க சொருகிக்கொண்டு வயல் பக்கம் கிளம்பினன்.

 

எனக்கு பொதுவாவே மரத்தை  வெட்டுறவங்கள் முறிக்கிறவங்களை  கண்டால் பத்திக்கொண்டுவரும் . இண்டைக்கு என்ர பேவரட் நாவல் மரத்துக்கு கிட்ட போக வயலுக்க இறங்கி நடந்தன்  , நாலஞ்சு இளம் பெடியள் நிண்டு நாவல் பழம் ஆஞ்சு கொண்டு நிக்கிறது தெரிஞ்சது.  அங்க வயலுக்க வேலை செய்து கொண்டு நிண்ட ஒரு பெரியவர் தம்பி வெளிநாட்டுக்காறர் போல கிடக்கடா கொப்பெல்லாம் வெட்டி கொட்டுறாங்கள்.  எண்டார் , வேகமா அங்க போனன் மரத்துக்கீழ  மூண்டு பேர் நிண்டு இருந்தினம் , தூரத்தில பாக்க பெடியள் மாதிரி தெரிஞ்சவையில ஒராள் பொம்பிளைபிள்ளை.  மரத்தில ஒரு சின்னப் பெடி ஏறி நிண்டு   கத்தியால ஒவ்வொரு கொப்பா தறிச்சு விழுத்த  இவையள் நாவல் பழம் புடுங்கிச் சாப்பிட்டுக்கொண்டு நிண்டிச்சினம்.

டேய் இறங்கடா கீழ ஏன்ரா கொப்பை வெட்டுற ?

“ஏன் உங்கடை மரமோ ?”

இப்ப இறங்கப்போறியா  மேல வரவோ எண்டன் , பெடி சர சரவெண்டு கீழ வந்தான்.  அங்க நிண்ட அந்த புலம்பெயர் டமில்ஸ் , அந்த பெடியை கூட்டிக்கொண்டு அங்கால போய்ச்சினம். வெட்டின கொப்புகள் காயும் செங்காயுமா பரிதாபமாக கிடந்தன, அவர்களில் கோபம் கோபமாக வந்தது. நான் மரத்தில ஏற வெளிக்கிட அந்த பக்கம் வந்த ஒரு ஆச்சி ,

எடை மோனை நீ குணத்தின்ர பெடியன் தானே ? என்னத்துக்கு கொப்ப முறிச்சு போட்டிருக்கிறாய் .. எண்டு தொடங்கி ஏறக்குறைய  திட்டுறது போல என்னை கதைக்கவே விடாமல்  பேசிச்சு. எனக்கு  என்ன சொல்லுறதெண்ஏ தெரியேல்ல , நொங்க திண்டவன் ஓட நோண்டி திண்டவன் மாட்டின கதையா போச்சு ,

நல்ல வேளையா வயல்ல வேலையில நிண்ட ஐய்யா வந்து என்னை காப்பாற்றி விட்டார்.  நாவல் பழம் சாப்பிடுற mood ஐ மொத்தமாக குழப்பி விட்டார்கள் , கொண்டு போன பைக்குள் கொஞ்சத்தை ஆய்ந்து போட்டுக்கொண்டேன், கிரிஷாந்திற்கு கொடுப்பம் எண்டு. வீட்ட வர மதியம் தாண்டி விட்டது.

இந்த பத்தியை டைப்பண்ணிக்கொண்டே ஒவ்வொன்றாக எடுத்துக்கொறித்துக்கொண்டிருந்தேன். இந்த பத்தி முடிகின்ற இந்த நேரம் பையினுள் நாலஞ்சு நாவல் பழங்களே மிச்சம் இருக்கின்றன.

கிரிஷாந் I AM VERY SORRY மச்சான்.!!.

-யதார்த்தன் –

Share this Post

Leave a Reply