yathaadmin/ August 15, 2016/ கட்டுரை/ 2 comments

5

காலையில் அம்மா தாடி மீசையை எடு என்று நச்சரிக்கா விட்டால் இதை எழுததொடங்கியிருக்கவே மாட்டேன். அத்துடன் மேற்படி தலைப்பு நீங்கள் இந்த பத்தியைப் படிக்கத்தொடங்குவதற்காகவும் எனக்கு பிடித்த  ஒரு முக்கிய மீசைக்காரனின் மீசையின் பெயரில்  பத்தியைத் தொடங்கும் சுய ஆசையினாலும் இடப்பட்டிருக்கிறது. .

YES……

மீசை , தாடியைப்பற்றிதான் நானும் நீங்களும் இங்கே உரையாடப்போகிறோம். பிரபாகரன் மீசையைப்பற்றி பத்தியின் இறுதியில்தான் உரையாடப்போகின்றோம் என்பதால்  கடைசிவரை படிப்பீர்கள் என்பது என் நப்பாசை.

மீசையையும் தாடியையும்  ஒரு கலாசாரமாகவோ , கலைவடிவமாகவோ அழகுணர்வோடு  பார்த்த  ,பார்க்கின்ற உலகச்சமூகத்திலிருந்தும்  , உள்ளூர் சமூகத்தில் இருந்தும் வெகுதொலைவில் நிற்கின்றது தற்போதுள்ள தமிழ்ச்சமூகம்.

உதாரணத்திர்கு ஒரு புனைவுகலக்காத சம்பவம்  சொல்கின்றேன்,

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் யாழ்ப்பாணத்தில் வேலையில்லாத பட்டதாரிகள் , வேலைதாருங்கள் என்று உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதிகளுள் நண்பர் ஒருவரும்  கலந்துகொண்டார். உண்ணாவிரதிகளைச் சந்திக்க வந்த வடக்கு மாகாண சபையின் அமைச்சர் ஒருவர் நண்பரின்  தாடி மீசையைக் கையால் தடவி விட்டு,

“நீ ஏதோ மற்றப்பாட்டி போல தான் கிடக்கு” என்றிருக்கிறார்.

பொதுவாக யாழ்ப்பாணத்து மனநிலையில் தாடிவளர்ப்பவர்கள் ஒரு சில விடுதலைப்போராட்ட இயக்கத்தைச்சேர்ந்தவர்கள் என்ற ஒரு மனவோட்டம் இருக்கின்றது.

ஏன் தமிழ் சினிமாவின் தாக்கத்தின் பின்னர் , தாடிவைத்துக்கொள்ளல் என்பது “தேவதாஸிசம்” என்றாகிவிட்டது ஒரு இளைஞன் தாடி வைத்திருந்தால் கண்டவுடன் கேட்பது “தாடிக்கு பின்னால் இருக்கிற லேடி யாரு ?”  அல்லது என்ன சோகம் ? என்றுதான். இது தமிழ் சினிமாவினதும் , தமிழ் மனோரதிய (romance)இலக்கியங்களினதும்  தாக்கத்தின் தொடர்ச்சியாகும்.

யாழ்ப்பாணம் முதலான இலங்கையின் பல  பல்கலைக்கழகங்களில்  இருக்கும் பிற்போக்குதனங்களில் ஒன்றான ராக்கிங்கில் அடிப்படையான அடக்கு முறை ,மீசை தாடியை எடுத்து விடுவது. யூனியர் கள் மீசையுடனோ தாடியுடனோ வரமுடியாது .  இது ஒரு வகை மீசை அடக்கு முறை.

வன்னியில் இருந்த சமயம் விடுதலைப்புலிகளின் கட்டாய ஆட்சேர்பில் என்னுடைய பக்கத்து வீட்டில் இருந்த பெண்ணைப் பிடித்துச்சென்றுவிட்டார்கள் .அவளைப்பிடித்துச்சென்றதில் இருந்து  அவளுடைய வீட்டார்களின் முகத்தில் எப்போதும் துயரம் அப்பிக்கிடக்கும் . அவளுடைய அப்பா ஷெவ் செய்யாமல் தாடி வைத்திருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய முகம் தாடியினுள் புதைந்துகொண்டிருந்தது. தீடிரென்று ஒருநாள்  அவர் தாடி மீசையெல்லாம் எடுத்துக்கொண்டார். முகம் பழையபடி ஒளிகொள்ளத்தொடங்கியது. அவர் கிளீன் ஷேவிற்கு மாறிய அடுத்தநாள் அவரிடம் போய். “என்ன அக்கா ஓடியந்திட்டாளா ?” என்றேன் . மனுசன் அதிர்ந்து போய் உனகெப்பெடியடாதெரியும்? “  என்றார் ரகசியமாக . அதுதான் உங்கட முகமே காட்டிக்கொடுத்து விட்டதே என்றேன், நான்கு நாட்களில் பயுறோ வந்து அவரைப் பிடித்துச்சென்றது.

இப்ப நான் மீசையையும் தாடியையும் சேர்த்துக் கதைக்கிறேன் ஆனால் இரண்டுக்கும் நடுவில் மெல்லிய கோடுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. மீசை தாடியைவிடவும் அதிகம் செறிவான கலாசார , பண்பாட்டு இருப்பைக்கொண்டது. சில இடங்களில் மீசையும் தாடியும் தனித்தனியே கதைகளைக்கொண்டிருக்கின்றன.

அறிவியலின்படி மீசை-தாடி என்பது   டெஸ்ட்டோஸ்டீரானின் உடலியல் விளையாட்டு. பருவ வயதில் சுரக்கும்போது மீசை வளரும் ஆண்களுக்கு மீசை முளைக்க அடிப்படை காரணமாக இருப்பது இந்த டெஸ்ட்டோஸ்டீரான் எனப்படும் ஹார்மோன்தான். இந்த ஹார்மோனின் முதல் வேலை அக்குள், பிறப்புறுப்புகளில் முடிவளர வைப்பதாகும். அதன் பிறகு மீசை மற்றும் உடல் பகுதிகளில் ஆங்காங்கே முடியை வளரவைக்கும். பெண்களுக்கு முகத்தில் பெரும்பாலும் மீசை- தாடி வளர்வதில்லை.

மீசை என்பது ஆண்மையின் அடையாளம் , மீசை என்பது ஆண்மைதன்மையையும்  , வீரத்தையும்  வெளிப்படுத்தும் ஒரு குறியீடு என்ற நம்முடைய சமூகத்தின் மனநிலையை கடுமையாக கண்டிக்கின்றேன். இந்த எண்ணம் ஒரு பிற்போக்குத்தனம்.

மீசையை ஒரு கலைவடிவமாகவும் , ஆண் பெண் வேறுபாடுதாண்டிய ஒன்றாகவுமே பார்க்க நினைக்கிறேன். விக்டோரியன் யுகத்தின் வரலாற்றை புரட்டும் போது மீசை என்பது ஆண்சின்னமாக அன்றி அது புரட்சியாளர்களையும் கலைஞர்களையும் குறிக்க பயன்படுகின்றது . மீசை கலையுடன் நெருக்கமானதாகச் சொல்லப்படுவதில் எனக்கு பிரியம் மிக்க உடன்பாடுள்ளது. மீசை தாடி என்பவற்றிலேயே அதிசிறந்த அழகுணர்வுகளை காட்ட இயலும்.

உதாரணத்திற்கு உலகப்புகழ் பெற்ற ஓவியர் Frida Kahlo தனக்கிருந்த மீசையை தன்னுடைய பெண்தன்மைக்குள் உள்ளடக்கியே ஓவியங்களை வரைந்தார். அவருடைய சுய பிரதிமை ஓவியங்களில் மீசை ஒரு தனியான பிரதிவாசிப்பு சார்ந்ததாக மாறி உலகப்புகழ் பெற்றது.

Frida_Kahlo_(self_portrait)

Frida_Kahlo தன்னை சுயபிரதிமையாக கொண்டு வரைந்த ஓவியம்.

சர்ரியலிச (surrealism ) பிரதியுருவாக்கத்தில் புகழ்பெற்ற ஓவியர் Salvador Dali 1954 இல்  தன்னுடைய புத்தகத்தை தன்னுடைய  மீசைக்குச் சமர்ப்பணம் செய்தார். அத்தனை புகழ்வாய்ந்த ஒரு மீசையை கொண்டிருந்த கலைஞர் அவர்.

photo

Salvador Dali

புத்தர் சிலைகளையும் ஏனைய புத்த படிமங்களையும் பார்த்திருப்பீர்கள் , எல்லாவற்றையும் துறந்துவிட்டு , பற்றற்று அலைந்த புத்தர் எவ்வளவு அழகாக இருக்கிறார். ஷேவ் செய்து அழகாக வஸ்திரம் உடுத்து , கட்டுடலான மேனியுடன் இளவரசன் சித்தார்த்தனாக இருந்த மாதிரியே இருக்கிறார் புத்தர். உண்மையில் புத்தர் அப்படித்தான் இருந்திருப்பாரா என்ன? தாடியும் மீசையும் ஏறி , உடல் மெலிந்து என்புதெரிய இருக்கும் புத்த படிமங்களை பார்த்திருக்கின்றீர்களா.  உண்மையில் புத்தர் அப்படித்தான் இருந்திருப்பார். இந்திய கலைவரலாறு காந்தார காலத்திலே புத்த படிமங்களை ஒழுங்கு படுத்தியதாக சொல்கின்றது குறிப்பாக குஷானர்களுக்கு பிறகு புத்தர் ஷேவ் செய்யப்பட்டு அமைதியின் ,அழகின்  சொரூபமாக மாற்றப்பட்டார்.  அது வரை புத்த படிமங்கள் தாடி மீசையுடனேயே காணப்பட்டன .கலைவரலாற்றில் அது ஒரு பெரும் நிலைமாற்றமாகப் பார்க்கப்படுகின்றது.

மீசை- தாடி என்பன இனத்தின் , சமயத்தின் அடையாளா நம்பிக்கைகளைக்காவும் ஒன்றாகவும் இருக்கின்றது . உதாரணத்திற்கு முன்பு கூறியது போல  தமிழ்ப்பரப்பில்  மீசை , ஆண்மையின் , வீரத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டிருக்கின்றது.

குப்புற விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டலை

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை

மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை

போன்ற பழந்தொடர்களை பேச்சு மொழியில் அவதானிக்கின்றோம் குறித்த இனத்தின் உடல் அரசியலில் இருந்து இது போன்ற நம்பிக்கைகள் வளர்ந்து வருகின்றன.  இதன் பின்னாலும் பல ஆயிரம் வருஷத்தின் ஆணாதிக்க , அல்லது ஆண்சார்ந்த அடையாள உருவாக்கமே அடியாகக் கிடக்கின்றது. மீசை முளைக்கத்தக்க “தந்தைவழிச்சமூகத்தின் ” அடையாளத்தொடர்ச்சியாக இதனைப்பார்க இயலும். ஆண் தன்மையை உயர்த்திக்காட்டுவதற்கு மீசை  ஒரு குறியீடாக கையாளப்பட்டு வருகின்றது. உண்மையில்   குரங்கிலிருந்து  நேர்க்கூர்படைதல் என்பதில்  ரோமங்களை இழத்தல் முக்கிய மரபணு மாற்றமாகவே குறிப்பிடப்படுகின்றது . ஆண்கள் என்றால் மீசை இருக்க வேண்டும் என்ற பல ஆயிரம் வருடங்கள் நம்பப்படும் ஒன்றே நம்முடைய மீசைகளையும் தாடிகளையும் இன்னும் வளர வைத்தபடியிருக்கின்றது. அப்படிப்பார்த்தால் நம்முடைய பெண்கள் ஆண்களை விட வேகமாக நேர்க் கூர்ப்படைந்து விட்டனர். நாங்கள் இன்னும் குரங்குத்தன்மைகளை இழக்காமலிருக்கின்றோம்.

இங்கே சீனர்கள் நேர் மாறானவர்கள் ,  சீனர்களிற்கு மீசையும் தாடியும் பெரிதாக வளர்வதில்லை . இதற்கு சுவாரஸ்யமான நம்பிக்கைக்கை ஒன்று சொல்லப்படுகின்றது. சீனத்தின் பெண்களுக்கு மீசை வைத்த ஆண்களைப்பிடிப்பதில்லையாம் , அந்த விருப்பத்தின் கூட்டு நம்பிக்கையின் விளைவாக சீனப்பெண்களின் உடலின் மரபணுக்கள் மீசை இல்லாத ஆண்களை பெறுவதற்கு கூர்ப்பாகிவிட்டதாம் , இதனால் சீன ஆண்களுக்கு மீசை முளைப்பதில்லை. இதை சசி அண்ணன் அடிக்கடி சொல்லுவார் , இயற்கையில் பெண் என்ற சிருஷ்டிக் கர்த்தாவிற்குள் அத்தனை சக்தி மறைந்திருக்கின்றது என்பதற்கு இதனை உதாரணாமாக அவர் சொல்வதுண்டு.  மீசையை முறுக்கிக்கொண்டு மனைவியை போட்டு அடித்தாலும். சீனப்பெண்களைப்போன்று அல்லாமல்  ஆண்களை இன்னும் மீசையோடு இருக்க அனுமதிக்கின்றார்கள் தமிழ்ப்பெண்கள்.

இனத்தினைப்போலவே மதங்களிடையேயும் மீசை , தாடி என்பன  செல்வாக்குள்ள நம்பிக்கை உடலரசியலைக்கொண்டிருக்கின்றன. அரேபிய தேசங்களில் மீசை  தாடி வைத்துக்கொள்வது சக்தியின் அல்லது வலிமையின் அடையாளமாக சொல்லப்படுகின்றது. அங்கேயும் வலிமையானவர்கள் ஆண்களே என்ற மூட நம்பிக்கையுடனேயே சமூகம் நகர்கின்றது.

மீசையை –தாடியைக்கொண்டு ஒரு சமூகத்தின் கலாசாரத்தை , வரலாற்றை  , கலையுண்வை வாசிக்கலாம். மீசையைப்பற்றி இணையத்தில் தேடிக்கொண்டிருக்கும் போது பல சுவாரஸ்யங்கள் சிக்கின, சிலதைப்பகிர்ந்துகொள்ள நினைக்கின்றேன்.

பெரிதாக மீசை வளர்த்துப் பராமரிக்கும் ஒருவர் தினமும் 760 தடவையாவது மீசையைத் தடவிக் கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது. சாதாரணமாக மனிதர்களுக்கு முடி ஒரு நாளைக்கு 0.014 இஞ்ச்சும், ஒரு வருடத்தில் 5 -6 இன்ச்சும் மீசை வளர்கிறதாம் குளிர்காலத்தை விட, வெயில் காலத்தில் விரைவாக வளர்கிறது என்று சொல்லப்படுகின்றது.

தமிழில் “கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை ”

என்று ஒரு பழமொழியிருக்கின்றது  கூழ் குடிக்கும் போது பிரியமான மீசையில் பட்டு அதனை அது பாதிக்க செய்வது மீசைப்பிரியர்களுக்கு பெரும் பிரச்சினையாகவே இருதிருக்கின்றது. 1904 இல் இங்கிலாந்தில் அருந்தும் சூப் மீசையில் பட்டுவிடாமல் இருக்க ஒரு கரண்டியை கண்டு பிடித்திருக்கிறார்கள். சில புகழ் பெற்ற மன்னர்கள் தங்களுடைய தாடி மீசையைப்பராமரிப்பதற்கென்றே தனியாக ஆள்வைத்திருந்திருக்கின்றார்கள்.

Moustache_spoon_1904_VA_M18-2000

மீசையில் படமால் சூப் குடிக்கும் கரண்டி.

மீசையில் ஏராளம் வகைகள் வேறு இருக்கின்றன. அவற்றில்  சில உங்களுக்காக .

ggg

 

 

உலகில் புகழ் பெற்ற மீசைக்காரகள் இருக்கின்றார்கள் சிலவகையான மீசைகள் ஒரே வடிவத்தையும் எதிர் எதிரான அர்த்தங்களையும் ஏற்படுத்திக்கொண்டு ஒன்றையொன்று கேலிக்குள்ளாக்கும் ,  அர்த்தச்சிதைப்பு வேலையையும் செய்யும்.

உதாரணத்திற்கு ஹிட்லரின் குறு மீசை உலகப்புகழ் பெற்றது .  வன்முறையின் பெரும் அடையாளமாகச்சொல்லப்படும் ஹிட்லரின் மீசையை சார்லிசாப்ளின் அதே மீசையை வைத்துக்கொண்டு நகைச்சுவையாக மாற்றியிருப்பார்.

Bundesarchiv_Bild_183-S62600,_Adolf_Hitlerhappy-birthday-charlie-chaplin

ஒட்டுமொத்த தமிழ்சினிமாவும் கட்டப்பொம்மன் காலத்தில் தொடங்கி மீசைக்குக் கொடுத்திருந்த வீரம் ,ஆண்மை போன்ற கற்பிதங்களை சிம்புதேவன் இம்சையரசன் படத்தில் வடிவேலுவிற்கு கொடுக்கும் மீசையை வைத்து உடைத்து நொறுக்கியிருப்பார் .அதிலும் மாமன்னன்  புலிகேசி உறங்கும் காவலாளியின் மூக்கினுள் மீசையை விடும் காட்சி  மீசை என்ற பிம்பத்தை நகைச்சுவையால் தகர்க்கும். காட்சிக்குக் காட்சி அரசியல் தன்மை வாய்ந்த படம் அது.

1-VADI

தோழர் சே குவேரா , ஓஷோ , பாரதி , ஸ்ராலின் , பிரபாகரன் , ப்ரைடா  போன்றோருடைய மீசை எனக்கு எப்போதும் பிரியமானா ஒன்று . குறிப்பாக பிரபாகரனுடையது . அது அவருடையது   ” largeToothbrush” style  மீசையாகும்.

2thala2131

.சிரிக்கும் போது உதட்டுக்கு மேலாக அதுவும்  சேர்ந்து சிரிக்கும் , அத்தனை உயிர்த்தன்மையை அந்த மீசையில் கண்டிருக்கிறேன். பால்யகாலத்தில் வயதிற்கு வர முதலே ஷேவிங் ரேசரால் வழித்து வழித்து அப்படியொரு மீசை வளராதா என்று ஏங்கியிருக்கிறேன்.

பிரபாகரன் பெரும்பாலும் மீசையுடனேயே காணப்படுவார் , அவரை மீசை இல்லாமல்  கிளீன்ஷேவில் காண்பது அரிதாம் .

இந்தியாவில் நடந்த பேச்சு வார்த்தைக்கு சென்ற பிரபாகரன் மீசையை வழித்து விட்டுச் சென்றாராம் . ராணுவ தளபதிகள் பகிடியாகக் கேட்ட போது , சிரித்துக் கொண்டு ” சண்டைக்கு செல்லும் போது தான் மீசை தேவை . சமாதானத்திற்கு எதற்கு ?” என்றாராம் .

நன்றாகக் கவனித்துப்பாருங்கள் 2002 இல் பிரபாகரன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில்  கையெழுத்து இடும் போது மீசையை எடுத்திருப்பார். அவரிடம் மீசைக்கென்றொரு அரசியல் இருந்திருக்கிறது.

Prabhakaran-signing-a-historic-ceasefire-agreement

2009 இல் இலங்கை இராணுவம் பிரபாகரன் உடலைக்காட்டியபோது , அவருடைய மீசை வழமைபோல் ரிம் செய்யப்பட்டு தாடி ஷெவ் செய்யப்பட்டு இருந்தது. இல்லை இது பொய்யான உடல் போர்காலத்தில் இருந்த பிரபாகரன் ஷேவ் எடுத்திருப்பாரா ? என்று அடிபட்டது ஒரு கூட்டம் . இன்றுவரை பல திண்ணைகளில் பிரபாகரன் ஷேவ் செய்தவிவகாரம் ஓடிக்கொண்டேயிருக்கிறது.

அந்த உடலை முதன் முதலில் பார்க்கும் போது

நான் அந்த உடலில் ஒன்றை மட்டுமே கவனித்தேன் ,  உயிரற்றுக் காட்டப்பட்ட அந்த உடலில் அப்போதும் மீசை உயிருடன் இருந்தது.

-யதார்த்தன் –

நன்றி – புது விதி.

Share this Post

2 Comments

  1. //குரங்கிலிருந்து நேர்க்கூர்படைதல் என்பதில் ரோமங்களை இழத்தல் முக்கிய மரபணு மாற்றமாகவே குறிப்பிடப்படுகின்றது . ஆண்கள் என்றால் மீசை இருக்க வேண்டும் என்ற பல ஆயிரம் வருடங்கள் நம்பப்படும் ஒன்றே நம்முடைய மீசைகளையும் தாடிகளையும் இன்னும் வளர வைத்தபடியிருக்கின்றது. அப்படிப்பார்த்தால் நம்முடைய பெண்கள் ஆண்களை விட வேகமாக நேர்க் கூர்ப்படைந்து விட்டனர். நாங்கள் இன்னும் குரங்குத்தன்மைகளை இழக்காமலிருக்கின்றோம்.//

    மனிதன் குகைகளில் வாழ்ந்த காலத்தில் பெண் இனம் இனப்பெருக்கம், மாதவிடாய், இயற்கை உடல் வலிமை என சில காரணங்களுக்காய் குகைகளில் வசிக்கும், ஆணினம் இரை தேட வெளியே அலையும். அப்போது வெயில், குளிர் தட்பவெப்ப உடல் பாதுகாப்புகளுக்காக இசைவாக்கமே ஆணின் அதிக உரோமங்கள், இதற்கு தமிழில் இட்ட பெயர் மீசை தாடி!

    பிரபாகரன் மீசை பற்றி ஆனந்த விகடனில் வெளிவந்த ஓர் கட்டுரையில் ‘பிரபாகரன் மீசையோடு இருந்த காலப்பகுதிகளிலெல்லாம் உக்கிரமான போர் நடைபெற்றிருக்கிறது’ என பெரிய எழுத்தில் போட்டு படிக்க தூண்டியிருந்தார்கள்.
    அவர்கள் எழுத்துக்கும் நமது எழுத்தாளர்களின் நடைக்கும் வித்தியாசமிருக்கவே செய்கிறது.

Leave a Reply