yathaadmin/ July 29, 2016/ கட்டுரை/ 0 comments

13886498_1039687846085570_5481594564463498034_n

நேற்று காலையில் வீட்டிற்கு வந்து தனுஷ் என்னை ஏற்றும் போதே கைதடிக்கு போய்விட்டு போகவேண்டும் என்றான். சரியென்று தலையாட்டிவிட்டு ஏறிக்கொண்டேன். காலையில் அலுவலகம் போக எடுக்கும் அந்த 45 நிமிடங்களில் ஓயாமல் ஏதாவது  அலட்டிக்கொண்டும் பாடிக்கொண்டும் போவோம் , வரும் போதும் அப்படித்தான்.  தனுசுடனான பெரும்பாலான அரட்டைகளில்  இலக்கியம் , சினிமா , அரசியல் என்று ஓடிக்கொண்டே இருக்கும்.  தனுஸ் ஒரு தீவிர வாசகன் , சினிமா இரசிகன்  அதுவும் அவன்  பேச்சில் எப்போதும் மலையாள வாசம் அடிக்கும் .  என்னுடைய நண்பர்களில் மலையாளம் பற்றி அதிகம் பேசுபவர்கள் அபரனும் , தனுசும் தான். கடவுளின் தேசம் , தேவதைகளின் தேசம் , ஓணம் , மலையாளப்பெண்கள் , கதகளி ,  போட் ஹவுஸ்ரைடிங் , என்று அபரனின் உரையாடலின் மீது தூண்டில் போட்டால் இப்படியான மலையாளம் சம்பந்தமான வார்த்தைகளைப் பிடிக்கமுடியும். அத்தோடு அபரன் ஒரு கண்ணகி அபிமானி , கண்ணகி ஆச்சி ,கண்ணகி ஆத்தை , ஆச்சிக்கிழவி என்று செல்லம் கொஞ்சுவான்.

அதே போல் தான் தனுசும் , கேரளா , பஷீர் , வாசுதேவன் நாயர் , பூரம் , புட்டு , பிரேமம்  , மலர்டீச்சர் , செலின் , சார்லி , துல்கர் சல்மான் , பார்வதி மேனன் , அபர்னா , குமரகம், ஆட் பிலிம் , ரவலிங் மூவி, கள்ளுக்கடை சாப்பாடு , என மலையாள சினிமா , கேரளப்பண்பாடு ,கம்யூனிசம் ,என்று தனுசிற்கு யாழ்ப்பாணத்திற்கு மிக நெருக்கமான மலையாளத்தின் மீது ஒரு க்ரஷ் .

இப்ப ஏன் இத எல்லாம் சொல்லுறாய்  என்று கேட்டால் ,

Every thing is connected ..just goo……

கைதடியில் தனுசுடைய வேலையை முடித்துக்கொண்டு  வீதிக்கு ஏறிய போது வீதியெங்கும் கொடிகள் கட்டி , பனர்களில் சனசமூக நிலையமொன்றின் ஆண்டுவிழாவைக்கொண்டாடிக்கொண்டிருந்தார்கள் , ஹயஸ் வாகனம் ஒன்றின் மேல் மேசையொன்றை கவிழ்த்து  அதன் கால்களில் ஒலிபெருக்கிகளைக்கட்டி சனசமூக நிலையத்தின் ஆண்டுக் கொண்டாட்டத்தினை முன்னிட்டு மரதன் ஓட்டம் நடைபெறுவதாக அறிவித்த படி போனார்கள் அவர்களுக்குப்பின்னால்  சில மோட்டார் சைக்கிள்கள் ஹெட் லைட்டை எரிய விட்டு விட்டு  மரதன் ஓட்டம் ஓடுபவர்களுக்கு முன்னால் போய்க்கொண்டிருந்தன அதிலும் சின்னச்சின்ன கொடிகளை ஏந்தியவாறு இளைஞர்கள்.

“மச்சான் இவ்வளவு பெடியள் இருக்கிறாங்களா சனசமூக நிலையத்தில்  ?” என்று கேட்டேன் . ஓமடா அரியாலை சன சமூக நிலையக்காரர் அக்டிவான பெடியள்  என்று சொன்னான். அதைப் பார்த்துக்கொண்டே அலுவலகம் போய்விட்டோம் . அங்கே கிரிஷாந்தும் வந்து சேர்ந்துகொள்ள ஏற்கனவே தொன்ம யாத்திரை முன்கள ஆய்வுக்கு நவாலி –சங்கரத்தை கேணியைப் பார்க்க போகவேண்டும் என்று முடிவு செய்திருந்ததால் வேலைகளை முடித்துவிட்டு , லதாங்கனை போனில் அழைத்தோம் , அவன் பைக்கில் வந்தான் . புறப்பட்டோம். உணவு நேரமாதலால் லேசாக பசி தொடங்கிருந்தது , ஆயினும் முன்கள ஆய்வு பற்றிய எண்ணம் பசியை சட்டை செய்யவில்லை.

வழுக்கையாறு வெளியைத்தாண்டிப்போனோம் , நவாலி வயல் வெளி எப்போதும் அலாதியான ஒரு அழகுடன் இருக்கும் , மானிப்பாயில் இருந்த சமயங்களில் நண்பர்களுடன் , வழுக்கையாறுப் பக்கம் சைக்கிளில் சுற்றியிருக்கிறேன்.  அதுவும் மழைக் காலத்தில் நீர் நிறைந்து ரம்மியமாக இருக்கும். இப்போது வயல்கள் வறண்டுபோய் மழைப்பெண்ணுக்குக் காத்திருந்தன. யாழ்ப்பாண வயல்களுக்கு  எப்போதும் மழை மீதுதான் அதீத காமம். வன்னி வயல்களைப்போல் குளங்களை அதிகமாக அவை வைத்திருக்கவில்லை.

நாங்கள் பார்க்கத் தீர்மானித்த சங்கரத்தை கேணி அமைந்திருந்த இடம் அலாதியானது. அதுவும் மழைக்காலத்தில் விதைப்பு முடிந்து கதிர்கள் மேலெழுந்தவுடன் பார்க்க வேண்டும் . வயல் முடியுமிடத்தில்  வீதியோரம் அந்த வயல்களை எல்லாம் ஆட்சி செய்யும் ஒரு சிற்றரசு போல வைரவர் கோயிலும் அதன் முன்னே இருந்த கேணியும் இருக்கும். மழைக்காலத்தில் அப்படியென்றால்  வேனில் காலத்தில் அதற்கு இன்னொரு அழகு வந்துவிடும். ஒரு பெரு நில வெளியை ஆளும் கம்பீரம் அதற்கிருந்தது . அதைப்பார்க்கும் ஆவலில் பைக்கை வேகமாக செலுத்திக்கொண்டிருந்தோம் . நவாலி கிராமத்தைத் தாண்டிப் போனோம். சோமசுந்தர புலவரின் வீட்டிற்கு செல்லும் ஒழுங்கையை கடந்து கொஞ்சத்தூரம் சென்றோம். ஒரு ரோட்டோரம் பழைய இராணுவமுகாமிற்கு அருகில் ஒரு சனசமூக நிலைய மண்டபம் பற்றைகளின் நடுவில் கிடந்தது , அதன் அருகில்  பாசி படர்ந்து பிளாஸ்ரிக் குப்பைகளுடன் கொஞ்சம் நீருடன் பாழ்பட்டுப்போய் ஒரு கேணி. மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு இறங்கினோம். கேணியின் வாசலில்  மூன்று ஆவுரஞ்சி கற்கள் கிடந்தன. இரண்டு சேதமுற்று நடப்பட்டு கிடந்தது இன்னொன்று இராணுவமுகாம் இருந்த பக்கம் கிளப்பி அநாதரவாகப் போடப்பட்டு இருந்தது. பிரபா அண்ணன் நாங்கள் இங்கே வருவதற்கு முதல் அந்த கேணிக்குப் பக்கத்தில் விடுதலைப்புலிகளின் பெரிய பங்கர் இருந்ததாக சொன்னார். பெரும்பாலும் அந்த இடத்தில் இருந்த ஆவுரஞ்சிகற்கள் ஷெல்லோ , சன்னமோ பட்டோ உடைந்திருக்கலாம்.  இராணுவத்தின் தோட்டாவுக்கும் சரி புலிகளின் தோட்டாக்களுக்கும் சரி ஆவுரஞ்சிகற்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை தானே . வன்முறையைச் சுவைக்கின்ற போது அடையாளங்களை அழிப்பது வன்முறைக்கான பலியிடலாகவே நம்முடைய  போர்களங்கள் கருதி வந்தன.

vlcsnap-error392

ஆறுகளோ பெருங்குளங்களோ இல்லாத யாழ் நிலத்தில் கேணிகளும் , சிறு குளங்களும் , கிணறுகளுமே நீர் மூலாதாரங்களாக இருந்த.  அன்று எங்களுடைய மக்களின் உள்ளத்தில் கருணையும் மனிதத்தொடர்புகளும் நிரம்பி வழிந்தன. மனிதர்களோடு மட்டுமல்ல கால் நடைகளோடும் முன்னோர்களுக்கு நெருக்கமான உறவிருந்தது.

என்னுடைய அப்பப்பா ஒரு விவாசாயியாகவும் மாட்டுத்தரகராகவும் இருந்தவர் , எனக்கு சிறுவயதிலிருந்து  அவரைக் கண்டால் ஆகாது . மனுசன் இறக்கும் வரை கூட அவரிடம் அதிக பட்சம் ஆறேழு வார்த்தைகளின் மேல் பேசியதில்லை . பிறப்பாலேயே நான் ஒரு குழப்படிக்காரன் என்பதால் மனுஷன் என்னை கரிச்சுக் கொட்டிக்கொண்டே இருக்கும் .என்னுடைய பால்ய காலம் மாடுகள் பற்றி அதிகமாக அறிந்திருந்தது.  என்னுடைய அப்பப்பாவிடம் இருந்த மாடுகளின் மொழி அவருக்குத் தெரிந்திருந்ததாக நான் நம்பினேன் . அவர் சொன்னதைக்கேட்கும் அத்தனை மாடும் , டேய் , வாடா போடா , என்று நாம்பன் மாடுகளை அழைப்பார், பசுக்களை வாடி போடி என்று அழைப்பார், அப்பப்பாவிடம் ஒரு சோடி எருத்தன் மாடுகள் இருந்தன.  வண்டிலில் நுகத்தைப் பூட்டி  அவற்றைக்கட்டி தோட்ட வளவில் ஏதாவது பொருட்களை ஏற்றிவிட்டு மூக்கணாங்கயிறுகளை  வண்டிலில் பிணைத்து விட்டால் ஓட்டுவதற்கு ஆள் இல்லாமலே வீட்டுக்கு வந்து வண்டிலை நிறுத்தி விட்டு தாங்களாகவே நுகத்தில் இருந்து விலகி அப்பம்மாக்கள் வைக்கும் (பைத பை என்னுடைய உப்பப்பாவிற்கு இரண்டு மனைவிகள் ) தவிட்டைக் குடித்துவிட்டு அப்பப்பாவிற்கு காத்திருக்கும் அந்த இரண்டு நாம்பன்களும். பஷீரின்  என்ன்னுடைய உப்பப்பாவிடம் ஒரு ஆனையிருந்தது என்ற கதையைப்போல் என்னுடைய அப்பப்பாவிடம் இரண்டு நாம்பன்கள் இருந்தன என்று எழுத வேண்டும்.

இப்ப ஏன் அப்பப்பாவின் மாடுகளைப்பற்றி சொன்னேன் என்றால் எங்களுடைய  நிலத்தில் கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் அத்தனை நேசமிருந்தது அந்த நேசத்தின் அடையாளங்களாகத்தான் நீர் நிலைகளுக்குப் பக்கத்தில் இருக்கும் ஆவுரஞ்சி கற்களும் நீர்த்தொட்டிகளும் காணப்படுகின்றன.  பொதுவாக பசி தீர்ந்து நீர் அருந்திய பின் மிருகங்களின் உடலில் ஒருவித தினவு எடுக்கும் , அத்தோடு உண்ணிகளும் இலையான்களும் அவற்றின் உடலில் ஒட்டி இரத்தமெடுக்கும் இதனால் நீர் அருந்திவிட்டு கால்நடைகள் தங்கள் உடலைத்தேய்ப்பதற்கு  இந்த ஆவுரஞ்சிக்கற்கள் அமைத்தனர் எங்களுடைய  மூதாதையர்.

அங்கே ஆவுரஞ்சிகள் உடைக்கப்பட்டு இருப்பதைப்பாக்க நாங்கள் எத்தனை விகாரமான தலை முறை என்று தோன்றியது. அருகில் இருந்த சனசமூக நிலைய கட்டிடத்தை பார்த்து லதாங்கன் , சனசமூக நிலையம் இயங்கிறேல்லையோ என்று கேட்டான்

கிரிஷாந் “அது இயங்கினா  கேணி ஏன் இப்பிடிக்கிடக்கு ?” என்றான்.

13879189_890363307757095_2156271573173340492_n

நம்முடைய ஒன்று கூடும் உரிமையும் கலாசாரமும் வழக்கொழிந்தவண்ணமே உள்ளன. டீவிக்களின் முன்னாலும் , கொக்குளைப்போல போன்களின் திரை நோக்கியும் வளைந்து உறைந்து போயிருக்கிறது நம்முடைய சமூகம்.

அந்தக்கேணியைப்பார்த்து விட்டு பைக்கை எடுத்துக்கொண்டு  சங்கரத்தை வயல் வெளியில் கேணி , ஆவுரஞ்சிகல் , சுமைதாங்கி என்பவற்றுடன் இருக்கும் வைரவர் கோவில் பக்கம் வந்தோம். ஏற்கனவே பா. அகிலன் கோயிலை நீட்டி கட்டி அந்த இடத்தின் அழகை பாழாக்கி விட்டார்கள் என்று கவலைப்பட்டிருந்தது ஞாபகத்திற்கு வந்தது . குறைந்த பட்சம் ஆவுரஞ்சியையோ , சுமைதாங்கியையோ உடைத்து அகற்றாமல் அவற்றை  வைத்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வாவது அந்த பிரதேச மக்களுக்கு இருந்தது சந்தோசமாகவிருந்தது.

அந்த கோயிலின் நிர்வாகத்துக்கு பொறுப்பான ஐயாவின் வீட்டை விசாரித்துப்போனோம். அவர் கோயிலின் வரலாறு பற்றியும் கேணி பற்றியும் ஆர்வமாக  ஊரவரிடம் விசாரித்தபடி இருப்பதாக சொன்னார். தான் அவ்வூரிற்கு மருமகனாக வந்ததில் இருந்து அந்த கோயிலையும் கேணியையும் அறிந்திருந்தார் , கேணியை வருடாவருடம் இறைத்துச் சுத்தம் செய்வதாகச் சொன்னார். அவருடைய ஹோலில் நேர் மேலே காந்தி அம்பேத்கர், காமராஜர் அண்ணாத்துரை விவேகானந்தர் , புத்தர், ஜேசு என்று நிறைய மனிதர்களின் படங்கள் இருந்தது அவரின் வீட்டுச்சூழல் எனக்குப்பிடித்திருந்தது , கிரிசாந் அவருடன் உரையாடிக்கொண்டிருக்க நான் அமைதியாகக்கேட்டுக்கொண்டிருந்தேன்.

முன்பொருநாள் அவர் கோயிலுக்குப்போகும் போது  ஏதோ ஒரு  விடுதலைப் போராட்ட இயக்கத்தைச்சேர்ந்தவர்கள் ஏற்கனவே இருந்த இரண்டு ஆவுரஞ்சிகளை கிளப்பும் முயற்சியில் இருந்திருக்கிறார்கள் இவர் பதறிப்போய் விசாரித்த போது  மியூசியத்திற்கு கொண்டு போகப்போகின்றோம் என்று சொல்லியிருக்கிறார்கள் . கடுப்பானவர்

“தம்பியவை இது இந்த இடத்தில ஆடுமாடுகள் தண்ணி குடிச்சிட்டு தேகத்த தேய்க்கிற இடம் இதை மியூசியத்தில் கொண்டே வச்சு என்ன செய்ய போறியள் மரியாதையா கிளப்புறத நட்டிட்டு போங்கோ ” என்று சண்டை போட்டிருக்கிறார். முடிவில்  அவர்கள் ஒன்றைப் புதைத்து விட்டு ஒன்றை எடுத்துச்சென்று விட்டார்கள் . இப்ப இந்த இடத்தில நான் போராட்ட இயக்கங்களைத் திட்டினால் வழமைபோல் என்னையும் தமிழ் தேச விரோதியாக்கி துரோகியாக்கி விடுவார்கள் என்பதால் , நான் வெறும் சம்பவம் சொல்லியாக மட்டும் இருந்துவிட்டுப்போகிறேன்.

நகை முரண் என்னவென்றால் இராணுவம் அந்தக்கோயில் அருகில் இருந்த போது  கேணியை மக்கள் அசுத்தப்படுத்தவோ கோயில் பிரகாரத்தை அசுத்தப்படுத்தவோ விடவில்லை என்று ஐயா சொன்னதுதான்.

IMG_1402

அடுத்ததாக அந்த ஐயாவிடம் கேட்டு அருகில் இருந்த முருகன் கோவிலின் தீர்த்தக் கேணியைப் போய்ப்பார்த்தோம். அது மாசுபட்டு மிக மோசமாகக்கிடந்தது.  பின்னர் கோயில் குருக்களைத்தேடிப் போனோம். அவர் கோயில் கேணி விரைவில் துப்பரவு செய்யப்படவுள்ளதாகக் கூறினார்.

சங்கரத்தையில் இருக்கும் களையோடை அம்மன் கோவிலில் திருவிழா நடப்பதாகச் சொன்னார் , பிட்டி கோயில் பக்கத்தில் ஒரு கேணி இருப்பதாகச்சொன்னார். அத்தோடு பிட்டிக்கோயிலில் கண்ணகி வந்த கதையையும்  அவள் களைப்போடு வந்து தாகம் தீர்க்க தன்னுடைய காலை நிலத்தில் ஊன்றி நீரூற்று வரச்செய்த தொன்மக்கதையைச்சொன்னார். பிட்டிக்கோயிலுக்கு போகச்சொன்னார். களையோட அம்மனில் திருவிழா நடப்பதாகச்சொன்னார். திருவிழா பற்றி விசாரித்தோம்.  ஆடிப்பூரம் அங்கே சிறப்பாகக் கொண்டாப்படுகின்றது என்று சொன்னார். பூரம் என்றதும் தனுஷ் “சார்லி” என்று கண்ணடித்தான்.  அந்த படத்தில் கடைசியாக வரும் காட்சியில் பூரம் திருவிழா காட்டப்படும் .நான் தலையில் அடித்துக்கொண்டேன். கறுமம் கறுமம்.

மலையாளிகளுக்கு அது ஒரு விசேடமான பண்டிகையாக இருக்கிறது. காளி என்ற பெருந்தெய்வத்திற்கான பண்டிகை , கேரளாவின் வடமத்திய பகுதியில் (கோலாகலமான பண்டிகை
பூரம் கோடை அறுவடைக்குப் பிறகு மத்திய கேரளாவில் (திருச்சூர், எர்ணாகுளம், பாலக்காடு,மலப்புறம் பகுதிகள்) ஆண்டுதோறும் ஏப்ரலில் நடகும் பூரத்திருவிழாக்கள் மிகவும் சிறப்பாவனை . பூரத் திருவிழக்களுள் மிகவும் புகழ் பெற்றது திருச்சூர் பூரம் அங்கே போனால் பண்டிகைக்கு போய்வாருங்கள் . அல்லது சார்லி படம் எடுத்துபாருங்கள்  க்ளைமெக்சில் வரும் அந்தப் பெருங்கொண்டாட்டம் .Pooram

கேரளத்தைப்போலவே யாழ்ப்பாணத்திலும் ஆடிப்பூரம் அம்மன் கோவில்களில் விசேசமானது. ஒரே வித்தியாசம் அங்கே சித்திரையிலும் இங்கே ஆடிமாதத்திலும் கொண்டாடப்படுகிறது. இஸ்பெசலா மைடியர் ஆண்டாள் பிறந்ததும் பூர நன்னாளில தானாம்.   யாழ்ப்பாணத்தில் ஆடிப்பூரத்தில் தான் அம்மனுக்கு சாமத்தியச்சடங்காம் . (!) தெய்வப்பெண்களுக்கும் சரி மனிதப்பெண்களுக்கும் சரி பூரம் ஒரு விசேஷமான பண்டிகை-கொண்டாட்டம்.

நல்லூர் போன்ற  பாசிச அதிகார இந்து மையங்களைப் போலச்செய்து (imitation)எங்களுடைய கோயில்கள் நாசமாகிக்கொண்டிருக்க , நகரத்திற்கு வெளியே மரபுகளை  சின்ன சின்ன கோயில்களே காத்துக்கொண்டிருக்கின்றன.

களையோட அம்மன் கோவிலுக்குள் நுழைந்தோம் , அன்னதானம் முடிந்து எல்லோரும் வீதிகளில் சோற்றுப்பைகளுடன் போய்க்கொண்டிருந்தார்கள் . இந்த அன்னதானச் சோறு வாங்குவதில் ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டைஊர்களில்  நான் அவதானித்தது குறைவு . அனைவரும் அன்னதான சோறின் ருசிக்கு அடிமைகள். நாங்கள் தவற விட்டு விட்டோம் என்று தோன்றியது , கோயிலில் இறங்கிய போது, ஒரு சிறுவர் காங் சாப்பிட்ட களைப்பில் கோயில் கட்டுக்களில் படுத்திருந்து எங்களை அவதானித்துக் கொண்டிருந்தது. மடப்பள்ளிக்குள் இருந்து வெளிப்பட்டான் ஒரு குண்டுப்பையன் .எங்களுடன் நூறு வருசம் பழகிய சினேகிததுடன். கோயிலுக்கு பின்னால் இருக்கும் பிட்டிக்கோயிலுக்கும் , கேணிக்கும் போகும் வழியைக் காண்பித்தான் . அவனுடைய குதூகலமான  கணீர் குரல் ஒரு ஜாலியான அசரீரியைப்போல் வழி சொல்லிற்று.

வயலின் நடுவில் இருந்த மணல் பிட்டியொன்றில் மரங்கள் சூழ அழகாய் தெரிந்தது கோயில் அதற்கு முதல் எதிர்ப்பட்ட கேணிக்கரையில் இறங்கி அதனைப்பார்த்தோம்  அருகில் ஒரு பெரிய ஆவுரஞ்சிக்கல் கம்பீரமாக நின்றிருந்தது.

IMG_1410 IMG_1419

 

கோயில் திருவிழாவிற்கு வந்திருந்த சில நண்பர்கள் அங்கே நின்றிருந்தனர். அவர்களும் ஆடிப்பூரம் அன்றுதான் திருவிழா கொண்டாட்டமாக இருக்கும் என்று சொன்னார்கள் . ஐயர் சொன்னது போல் சாட்சாத் அம்மனின் சாமத்திய வீட்டு நாளல்லவா.

பிட்டியை நோக்கி போனோம், படிக்கட்டுகளில் ஏறி கோயிலுக்குள் நுழைந்தோம் ஒரு குட்டிக்காட்டுக்குள் அந்த கண்ணகி கோயில் பதுங்கிக்கிடந்தது. கோயில் சுவற்றில ஒரு சின்னப்பிள்ளை தலை நரைத்த கண்ணகிக்கு பேன் பார்க்க  முற்பட கிழவியின் தலையெல்லாம் கண் முளைத்திருந்தது . இலங்கைக்கு வந்த கண்ணகி கிழவியாகவே அலைந்தாள் என்று இருக்கும் எல்லா கண்ணகி கோயில் கர்ணபரம்பரைக்கதைகளும் சொல்கின்றன. அத்தோடு பேன் எடுக்க ஆயிரம் கண் தெரிந்த கதையும் இலங்கை முழுவதும் பொதுவாகச் சொல்லப்படும் ஒன்றாகவே இருக்கிறது. ஒரு வேளை  கண்ணகி பாதுகாப்புக் காரணங்களுக்காக கிழவி வேடத்தில் அலைந்திருப்பாள் இல்லையெண்டால்  கண்ணகிக்கதையும் சனல்04 இல வந்திருக்கும்”.   என்று யாரோ ஒருநாள் ஜோக் அடித்தது ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் சங்கரத்தைக்கு  வந்த கண்ணகி காலை ஊன்றி தண்ணீர் வரச்செய்தது சங்கரத்தைக்கே உரித்தான தனித்தொன்மக்கதை.

 

IMG_1425

அந்தக்கோயிலில் தொட்டில்கள் கட்டப்பட்டிருந்தது அழகாக இருந்தது . குழந்தை வரம் வேண்டி கட்டப்பட்டவை. சிலர் கோயில் மணிக் கட்டிடத்தில் வேண்டுதல்களை எழுதியிருந்தனர். கடன் தீரவேண்டும் , காதலனுடன் சேரவேண்டும்  என்று நிறையக் கிறுக்கியிருந்தார்கள் மக்கள்.

IMG_1433

கோயிலின் சூழல் அழகான ஒன்று நண்பர்களை கண்டிப்பாக யாத்திரையின் போது இங்கே கூட்டி வரவேண்டும் என்று முடிவு செய்தோம்.

பிட்டியில் இருந்து இறங்கி  மறுபடியும்  களையோட அம்மன் கோயிலுக்கு வந்தோம். கோயில் பிரகாரத்தில் பெரிய வெள்ளைத்தாடியுடன் ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார், அவரிடம் பேச்சுக்கொடுத்தோம். அவர் சிலப்பதிகாரக்கதையில் தொடங்கினார். நான் பயந்தது போல் அல்லாமல் சோட் அண்ட் சுவீட்டாக ஒவ்வொரு காட்சியாக தாவி ஐந்து நிமிடத்தில் கோவலனைக் கொலை செய்து , கண்ணகி தலையை விரிச்சு , பாண்டியனை இறக்கச்செய்து , மதுரையை எரிச்சு  சேரநாடு (மலையாளம்)  வந்து கண்ணகியை இலங்கையில் இறக்கி, நவாலிக்குக் கொண்டு வந்து இறக்கினார் பெரியவர். பின்னர் கண்ணகி கால் ஊன்றியதும்  தண்ணீர் வந்த கதையைச்சொல்லி அருகில் இருந்த கிணற்றைக்காட்டி அது தான் அந்த ஊற்று என்று சொன்னார். அம்மன் கோவக்காரி என்றார். நினைச்சது நடக்கும் என்றார். இராணுவ அதிகாரி ஒருவர் நவாலியில் இருந்தபோது அந்தக்கோயிலை வணங்கி பிள்ளை வரம் பெற்றதாகவும் கூறினார் . எனக்கு ஐயாவின் கதை சொல்லும் முறை பிடித்திருந்தது .

 

IMG_1442

ஐயாவிடம் ஞாயிறு தோழர்களுடன் வருகிறோம் என்று  சொன்னோம் , அன்னதானச்சோறு முடிந்து விட்ட ஏக்கம் எங்கள் முகத்தில்.  பைக் நின்றிருந்த இடத்திற்கு வந்த போது , கமராவும் கையுமாக யாரோ அந்நியர்கள் தங்கள் ஏரியாவிற்குள் நுழைந்ததை தீவிரமாக கண்காணித்த படியிருந்த வாண்டுகளின் Gang leader இடம் கிரிஷாந் பேச்சுக்கொடுத்தான். எங்கள் விபரத்தை விசாரித்தார்கள் . காதில் ஒரு Gangster  தோடு அணிந்திருப்பது பற்றி கிரிஷாந்கேட்க  Gangster என்றால் அப்படித்தான் என்றனர். ஒருவன் கபாலிடா என்றான் , ஏனையவர்கள் நெருப்புடா என்றார்கள்.

IMG_1447

 

எங்களுக்கு  ஞாயிறு உதவுவதாகச்சொன்னார்கள் , மதியம் பஞ்சாமிர்தம் உட்பட அன்னதானச்சோறு கிடைப்பதற்கு ஆவன செய்வதாக எங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள் , நாங்கள் வரவேண்டிய நேரத்தையும் இரகசியமாகச்சொன்னார்கள்  அவர்களிடம் விடை பெற்றோம்.

மதியம் தாண்டிவிட்டது. சரியான பசி !! அன்னதானச்சோறு கிடைக்காத அந்த பெரும் ஏமாற்றத்தை சகிக்க முடியாமல் வயிறும் இரைந்தது. மோட்டார் சைக்கிளை உயிர்ப்பித்தோம்.

“நவாலி வடைக்கடைக்கு விடடா பைக்க ” என்றான் தனுஸ்.

வடைக்கடைக்கு தனிக்கதை இருக்கு பிறகு தனிய கதைப்பம்.

-யதார்த்தன் –

29.07.2016

phoenixatheep@gmail.com

 

Share this Post

Leave a Reply