yathaadmin/ July 18, 2016/ கட்டுரை/ 0 comments

Jaffna-University

 

இந்தக் கட்டுரைக்கு முன் சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டும்.
நான் பல்கலைக் கழக மாணவனல்ல, இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், பொதுவாகவே பல்கலைக் கழகத்தில் படிக்காதவர்கள், வெளியாட்கள் பல்கலைக் கழகம் தொடர்பில் கருத்தையோ அல்லது அபிப்பிராயத்தையோ எந்த ஒரு விடயத்தில் சொல்லும் போதும், முன்னாள் மற்றும் இந்நாள் பல்கலைக் கழக மாணவர்கள் எதிராகவே பார்ப்பார்கள். தங்கள் வீட்டிற்குள் நீங்கள் வரத் தேவையில்லை என்று சொல்லுவார்கள். படித்தால் தான் உங்களுக்குத் தெரியும் என்பார்கள்.

ஆகவே அதன் நடைமுறைகள் தொடர்பில் பிறர் (தமது மொழிபேசுபவர்கள் கூட) கருத்துச் சொல்ல முடியாது. இது அதன் பொது மனநிலை. இப்படியாக அவர்கள் பழக்கப்பட்டிருக்கிறார்கள். இது இனவாதமோ தேசியவாதமோ என்று பார்க்க முன் அவர்கள் தமது பல்கலைக் கழகத்தை என்னவாக புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதிலிருந்து நாம் இந்த சண்டையை அவர்கள் ஏன் பிடித்தார்கள் என்று பார்க்கலாம்.

ஒரு வரலாற்று விளக்கம்

இது ஒரு பல்லின மக்கள் வாழும் சமூகமல்ல. சிறிய வயதிலிருந்தே தமிழர்களை மட்டுமே அதிகம் பார்த்து வளர்ந்த சமூகம். சிங்களவர்களின் பண்பாட்டையோ அல்லது இஸ்லாமிய முறைகளையோ இவ்வளவு ஏன் சைவ மாணவர்கள் பலருக்கு கிறிஸ்தவ வழிபாட்டிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூட தெரியாது. நாம்தான் இதற்குப் பொறுப்பு முப்பது வருடகாலம் ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்தி அனைவரின் பிரதேசங்களுக்கும் இடையில் சுவர்களை எழுப்பி பக்கத்தில் என்ன நடக்கிறதென்று தெரியாமல் செய்து விட்டோம். கிழக்கில் முஸ்லிம் சுவர் வடக்கில் தமிழ்ச்சுவர் மலையகத்தில் இந்தியத்தமிழ்ச்சுவர் தெற்கில் சிங்களச் சுவர் என்று இருந்ததை நாம் மறுக்க முடியாது. இதனால் ஒரு நாட்டிற்குள் பல்வேறு சமூகங்கள் வாழ்ந்தாலும் ஒருவரை ஒருவர் தெரியாத ஒரு இளைய தலைமுறையை உருவாக்கி இருக்கிறார்கள்.

முரண்பாடும் மக்களின் நிலைப்பாடும்

18 ஆம் திகதி பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கிடையிலான முரண்பாட்டில் பொதுமக்கள் ஏன் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று பார்ப்போம்.

முதற் காரணம் அவர்கள் மாணவர்கள், இன்னும் சொல்லப் போனால் இளைஞர்கள். அவர்கள் இலகுவாக கோபப்படுவார்கள், சண்டை பிடிப்பார்கள் அது அவர்களின் வயதுப் போக்குகளில் ஒன்றாக நாம் உருவாக்கி விட்டோம். இந்த வயதில் அவர்கள் எல்லோரினாலும் அரசியல் ரீதியில் பயன்படுத்தப் படும் நிலை உள்ளது. யார் முதற் கல்லை எறிந்தது? யார் முதலில் அடித்தது? எத்தனை பேர் எத்தனை பேரை அடித்தது என்பது தொடர்பில் இது வரை ஆயிரம் கதைகள் உலவுகின்றன. அவை எல்லாவற்றிலும் உள்ள வெளிப்படையாகத் தெரியாக் கூடிய விடயங்களை விளங்கி கொள்ள முயற்சிப்போம்.

1 – கண்டிய நடனத்தையும் நிகழ்வில் நடாத்த சிங்கள மாணவர்கள் விரும்பினார்கள்.
2 – மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கினார்கள்.

1- கண்டிய நடனமும் அரசியல் நடனமும்

அரசியல் ரீதியான பின்புலங்கள் இதில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது, ஆனால் வேறு மாதிரி யோசித்துப் பார்ப்போமே, தமிழ் மாணவர்கள் நினைத்திருந்தால் இதை அனுமதித்திருக்கலாம்.கலாசாரம் என்பது நாம் உருவாக்கும் ஒன்று தான். இதில் முடிவெடுக்கும் நிலையிலும் இதை தடுக்கக் கூடிய நிலையிலும் பல்கலைக் கழக நிர்வாகம் இல்லை என்பது தான் அடிப்படையான பிரச்சினை.

இதில் அரசியல் ரீதியிலான குழப்பம் ஏற்படுத்தும் நோக்கம் இல்லையெனில் அவர்களை நிகழ்வை நடாத்த அனுமதித்திருக்கலாம். எதிர்காலத்தில் முன் கூட்டியே இவற்றை ஒழுங்கு செய்து கொண்டால் நல்லது.

2 – மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கினார்கள்

இது சாதாரணமாக பல்கலைக் கழகத்தில் நடக்கும் ஒன்று. ஆனால் நாமும் அவர்களும் இதை ஒரு இனத்துவ பிரச்சினையாக மட்டுமே பார்க்கிறோம். இங்கே தான் மாற்றம் வேண்டும்.

நாம் சிலவற்றை யோசித்துப் பார்ப்போம். விரும்பியோ விரும்பாமலோ சிங்களவர்கள் என்பதன் மூலமாக சில சிறப்புரிமைகள் உண்டு. பொலிஸ் அவர்களை ஏற்றிச் சென்றது மற்றும் இதர புலனாய்வு பிரச்சினைகள் என்பவையும் அவர்களை நெருங்குவது குறைவு. ஆனால் இது நிலையானதல்ல. அவர்கள் தமிழர்களுடைய பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுத்தால் அவர்களுக்கும் தமிழர்களுடைய நிலை தான். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா நேரங்களிலும் சிங்களவர் என்ற அடையாளம் ஒருவரைக் காப்பாற்றாது. அது அவர்களுடைய அரசியல் நிலைப்பாட்டில் தான் உள்ளது. அவர்கள் தமது உரிமைகள் என்று நம்பவைக்கப்படும் விடயங்களுக்காக சண்டை பிடிக்கிறார்கள், முரண்படுகிறார்கள். தமிழ் மாணவர்களும் அப்படித் தான் தங்களுக்கே உரித்தான உரிமையுடைய பல்கலைக் கழகமாக இதை கருதும் மனநிலையில் மற்றவற்றை எதிர்க்கிறார்கள். இயல்பிலேயே தமிழ் மாணவர்களுக்கும் சரி சிங்கள இஸ்லாமிய மற்றும் மலையக மாணவர்களுக்கும் சரி ஒற்றுமை புரிந்துணர்வு பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மதித்தல் என்பது குறைவு. இந்த சுயவிமர்சனத்தை நாம் செய்தாக வேண்டும். மற்றவர்களை நோக்கி நாம் இனவாதத்தைக் கக்குகிறார்கள் என்று சொல்லும் போது நாம் எதை செய்கிறோம் நாம் செய்வது இனவாதம் இல்லையா என்பதை நாம் யோசிக்க வேண்டும்.

எல்லாவற்றின் பின்னும் இப்போதும் நாம் இன நல்லிணக்கத்தைப் பற்றித் தான் பேச வேண்டும். நம்முடையது என்று நாம் கருதும் தேசியவாதம் இனவாதம் போன்றவை நம்முடையதல்ல. நம்முடையது போன்று அது இருக்கிறது. பல்கலைக் கழகத்தை தேசியவாதத்தைக் காவும் குப்பைத் தொட்டியாகத் தான் இன்னமும் வைத்திருக்கிறார்கள்.

இப்பொழுது அப்பாக்களாக அம்மாக்களாக இருப்பவர்கள் வரலாற்றில் முக்கியமான நிலைப் பாட்டினை எடுக்க வேண்டும். நாங்கள் காட்டாமல் வளர்த்த மற்றைய சமூகங்களை விளங்கி கொள்ள நீங்கள் தான் உதவ வேண்டும். ஏனெனில் பல்கலைக் கழகத்தில் நடக்கும் இது நாளை தெருவிலும் நடக்கலாம், வீடுகளுக்குள்ளும் நடக்கலாம், அதனால் தான் நாம் இந்தப் பிரச்சினை தொடர்பில் ஒரு நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும்.

இது ஒரு வீட்டுப் பிரச்சினை போல் குறுக்கிவிட முடியாது. நாளை எங்கள் சகோதரிகளும் நண்பர்களும் தந்தையர்களும் உறவினர்களும் தெருவில் தமது இன அடையாளங்களுக்காக தாக்கப்படுவார்கள் அதனை தடுப்பதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம், இனவாதமோ தேசியவாதமோ என்றைக்கும் எதையும் காக்கப் போவதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் நிறைய சிங்களவர்களுடன் நாம் உரையாட வேண்டும். சிங்களவர்களும் தமிழர்களுடன் உரையாட வேண்டும். இரண்டு மொழியையும் அனைவரும் கற்க வேண்டும். முதலில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் நிலையில் தான் எதிர்காலத்தில் இவை இடம்பெறாது.

ஒரு வரலாற்று உதாரணத்தைப் பார்ப்போம், அண்மையில் நடந்த கலந்துரையாடலில் மகேந்திரன் திருவரங்கன் (நியூயோர்க் பல்கலைக் கழகத்தில் இனத்துவமும் அடையாளமும் பற்றி தனது கலாநிதி பட்ட ஆய்வை செய்து கொண்டிருப்பவர்) ஒரு விடயத்தைக் குறிப்பிட்டார், ‘அநாகரிக தர்மபாலா மற்றும் ஆறுமுகநாவலர் போன்றோர் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக தேசியவாத கோஷத்தைப் பயன்படுத்திய போது காலனித்துவ ஆட்சியாளர்கள் என்ன சொல்லி காலனித்துவத்தைச் செய்தார்களோ அதையே தான் இவர்களும் சொன்னார்கள். காட்டு மிராண்டிகள் என்று இரண்டு பேரும் மாறி மாறி சொல்லிக் கொண்டார்கள்.’ இதையே தான் இன்றைய தேசியவாதமும் சொல்கிறது. நமது சிந்தனையில் மாற்றமே இல்லை என்பது எவ்வளவு மோசமான நிலை?

இந்தப் பல்கலைக்கழக முரண்பாட்டிற்கு பின் நானும் இரண்டு சிங்கள மற்றும் ஒரு முஸ்லிம் பெண் மற்றும் ஒரு மலையாகத் தமிழரும் இணைந்து ஒரு கேள்விக்கு பதிலளிக்க முயற்சி செய்தோம்.

கேள்வி இது தான், ‘ இவ்வளவு கேவலமான இனவாதமும் தேசியவாதமும் எப்படி வெல்கிறது? மக்கள் ஏன் இதனை வெல்ல வைக்கிறார்கள் ? ‘

ஒரே ஒரு விடை தான். ‘சுய லாபம்’

தமது அதிகாரம். தமது பாதுகாப்பு. தமது வாய்ப்புக்கள். தமது சலுகைகள், எல்லாமே தமக்கு வேண்டும் என்பது தான் இதன் அடியில் உள்ளது. மற்றவர்களை மதிக்காத உரிமை, நீதி என்பன கிடைத்தும் எந்த பிரயோசனமும் இல்லை. எல்லோரும் மற்றவர்களை மதித்து நேசித்து வாழ்தல் மட்டுமே பரிந்துரைக்கக் கூடியது. இது சிறுபிள்ளைத் தனமாகத் தெரியலாம். ஆனால் இதை இட்டு வேலை செய்து பாருங்கள் எங்கிருந்து தொடங்கலாம் என்று உரையாடுங்கள். நாம் மனிதர்களுக்கான உறவை பல்கலைக் கழகத்திலிருந்தே கூட தொடங்கலாம் . அப்பொழுது தான் அதன் கடினம் தெரியும். அதை நோக்கி சிந்திப்போம். நமது அரசியல் நிலைப் பாட்டினை எடுப்போம்

-கிரிஷாந்த்

kirisant - vithai

Share this Post

Leave a Reply