yathaadmin/ July 10, 2016/ கதை/ 0 comments

13245343_10154067411961011_7435648755406725815_n

துணியின் உபகதை

துணியினுடைய உபகதை வவுனியா மாவட்டத்தில் பூவரசங்குளம் என்ற கிராமத்தில் உள்ள ஆசுப்பத்திரியில்  இவ்வாறு ஆரம்பிக்கின்றது.

01

மார்ச் 2010.

சூரியன் மிக அருகில் இருக்கின்றது என்ற நம்பிக்கையுடைய மக்கள் இன்னும் பூமியில் இருக்கின்றார்கள் என்பதைனை ஏற்றுக்கொள்ளுமளவு  அந்தப்  பங்குனிமாதம் தொடங்கியிருந்தது. வெம்மை மிக்க பொஸ்பரஸ்குண்டுகளில் இருந்து தப்பிவந்து நாங்கள் நீற்றறையைப்போல் கொதிக்கும் தறப்பால் கூடாரங்களுக்குள் சிக்கிக்கொண்டோம். புழுதிபடிந்து போய் வெட்ட வெளியில் அடிக்கப்பட்ட அத்தனை கூடாரத்தினுள்ளும் காலை ஒன்பது மணிக்கு மேல்யாரும் இருக்க முடியாது. எங்காவது ஒரு மூலையில் இருக்கும் மரத்தடியை நோக்கி ஓடிவிடுவோம் எல்லோரும். மாலை ஏழு மணிக்குமேல் ஆகும் வெம்மை இறங்க , மாலை வேளைகளில் கொஞ்சம் கொஞ்சமாய் கஞ்சபட்டு நீரை கக்கும் குழாய்கிணறுகளில் நீரை நிரப்பி வந்து தறப்பாள்களிலும் நிலத்திலும் வாரி இறைப்போம்.  அப்போதுதான் சூடு மெல்ல அடங்கும் .

எனினும் அந்த மரங்களால் வெப்பத்தின் விளைவுகளை தடுக்க இயலவில்லை. தேகம் கொதித்து இரத்த வெப்பம் சமநிலைதவற மனநோயோடு இருந்த எங்களுடைய சந்திற்கு வெப்பியாரம் தோல்களில் பொங்கியது.

 

எது வரவே கூடாதென்று நேர்ந்திருந்தேனோ அது எனக்கும் வந்துவிட்டது.எலோரும் அதன் பெயரைச்சொல்வதைக்கூட தவிர்த்துவந்தார்கள் . தெய்வ நம்பிக்கை மீது எழுதப்பட்ட நோய் அது ..

கடும் குளிரில் உறைந்தும் உறையாமலும் இருக்குமொரு ஆற்றினுள் தலைகூழாக குதித்து அமிழ்ந்து போக வேண்டும் என்பதுபோல் வெப்பமும் எரிச்சலும் உடலில் பரவி வாட்டியது. என்னிடம் இருந்த இரண்டோரு சேட்களும் காற்சட்டைகளும் தறப்பாள் கூடாரங்களுக்குள் கிடந்து கிடந்து முறுகிப்போய் உடலை உரசின , கறள் துண்டுகளில் உரசுவது போல என்னுடைய உடலில்  புடைத்த தொப்பளங்களை  உடைத்து நீரை கசிய விட்டது என்னுடைய உடை. மேலும் புண்களின் மீது அது உரசும் போதெல்லாம் வலி உயிர் போனது , எல்லோரும் சேட்டை கழற்றிவிடச்சொன்னார்கள். அகப்பை காம்பு ஒன்றை நிறுத்தி வைத்து கோலும் சிரட்டையை தலையாக பொருத்தி விட்டது போல் நொய்ந்து போய் கிடக்கும் என்னுடைய கரிய தேகத்தை உலகிற்கு காட்டுவதற்கு மனம் ஒப்பவில்லை அதற்கு இந்த எரிச்சலையே தாங்கி விடலாம் என்று தோன்றியது.

எனக்கு உடலில் அவ்வளவாக கொப்பளங்கள் போடவில்லை . ஆனால் போட்டவையெல்லாம் உடைந்து காய்ந்து கிடந்தன , முதல் கொப்பளம் போட்ட போதே அம்மா உடைக்கக்கூடாது என்று சொல்லியும் ஊசி ஒன்றை எடுத்து கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு பலூனுடைத்திருந்தேன். உடலில் பத்து பதினைந்து  கொப்பளங்கள் பெரிய அளவில் போட்டு உடைந்து காய்ந்து போயிருந்தன .கைகளில் ஒன்றிரண்டு சிறிய கொப்பளங்கள் அவ்வளவு தான். முகத்தில் கொப்பளம் போட்டு விடுமோ என்று பயந்தபடியே பூவரசங்குளம் வைத்தியசாலை நோயாளர்காவு வண்டியில் ஏறியமர்ந்தேன். கோடை வெயிலின் வெம்மை முகாம்களின் தறப்பால் கூடாரங்கள் மீது தொடர்ந்தும் காய்ந்தது .வெய்யில் வலுக்க வலுக்க ஒவோரு நாளும் பலர் பூவரசங்குளம் வைத்திய சாலைக்கு ஏற்றப்பட்டனர்

பூவரசங்குளம் வைத்திய சாலை நலன்புரி முகாம்களில் பெரியம்மை வந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.எல்லா நலன்புரி  முகாம்களில் இருந்தும் தினமும் ஏராளமானவர்கள் அங்கே வந்து கொண்டிருந்தனர்.உடல் முழுவதும் கொப்பளங்களும் எரிச்சலும் வேதனையும் அங்கே இயல்பான ஒன்றாய் மாறிக்கிடந்தது. சுற்றிவர முட்கம்பிச்சுருள்கள் அடுக்கப்பட்டு  காவலரண்கள் போடப்பட்டு நலன்புரி முகாம்களைப்போலவே ஒரு சிறைவைத்திய சாலையாக அது மாற்றப்பட்டிருந்தது , வாசல கதவில் எப்போதும் காவலுக்கு நான்கைந்து துப்பாக்கியேந்திய இராணுவத்தினர் நிற்க வைக்கப்பட்டிருந்தனர்.  எனினும் வெளியில் இருக்கும் கடைகளில் ஏதும் பொருட்கள் வாங்குவதர்கு சனங்களை அனுமதித்தனர் ,அவர்களுடைய கண்பார்வையிலிருந்து விலகாமல் பொய் வர முடியும் .

பூரசங்குளம் வைத்தியசாலை சிறு பிரதேச வைத்தியசாலையென்பதால் கட்டங்கள் அதிகமில்லை , எல்லா நகன்புரி முகாம் களில் இருந்தும் சாரி சாரியாக ஆயிரக்கணக்கான கொப்பளக்காரர்கள் கொண்டு வரப்பட்டதாலும் , குளிச்சியின் பொருட்டும் ஏழெட்டு நீண்ட ஓலை வேய்ந்த கொட்டில்கள் போடப்பட்டு ஓலைப்பாய்கள் விரிக்கப்பட்டு நோயாளர்கள்

பன்றி குட்டி போட்டது போல் வேப்ங்குழை  படுக்கையில் சுருண்டு கிடந்தனர் . ஒவ்வோருதர் உடலிலும் வலி தோலெங்கும் பூசப்பட்டு  கோப்பளங்களாய் மேலிழுந்து நின்றது. அவர்களுடன் ஒப்பிடுகையில் நான் எவ்வளவோ பரவாயில்லை என்றே பட்டது. அவர்களால்  கால் கை களை அசைக்க முடியவில்லை  அசைத்தால்  ஏதோ ஒரிரண்டு  கொப்பளம்  வெடித்து  எரியும் . சிலருக்கு முகமெல்லாம் சிலருக்கு முதுகெல்லாம் சிலருக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாய்.  வேப்பங்குழை படுக்கையும் வேப்பங்குழையால் செய்யப்படும்  மெல்லிய வருடலும் நூறில் ஒரு பங்கே பயன் தந்தது சிலருக்கு அதுவுமில்லை.என்னால் அந்த இடத்தில் இருக்கவே முடியவில்லை . ஒவ்வொருதரின் கோப்பளங்களையும் அவர்கள் அலறும் முனகும் வலியோசைகளையும் என்னால் ஜீரணிக்கவே முடிவதில்லை, அந்த கூடாரங்களில் தெரியும் அத்தனை முகங்களிலும் வெம்மையின் சாயலும் எரிச்சலும் தசை மடிப்புக்களில் இருந்து கசிந்து உடல் முழுவதும் பரவியிருக்கக் கண்டேன்.ஓரளவுக்கு மேல் அவற்றை காண்பது எனக்கு மிகத்துன்மபமானதொன்றாகி விட்டது.  எனவே வெளியே வந்து அலைந்து திரிவேன்.

நான்கைந்து நாட்களில் எனக்கு காயங்கள் ஆறத்தொடங்கின புது தொப்பளங்கள் போடுவது நின்று போனது , ஊசி முறைகளும் மருந்து முறைகளும் அழைக்கப்பட்ட போது தவறாமல் சென்று பொட்டுக்கொள்வே, எ என்னுடய கோடகைக்குள் இருந்த கிழவியொருத்தி

”அம்மாளாச்சின்ர வருத்த்துக்க்கு மருந்து போடக்கூடாது என்ன செய்ய எங்கட நிலைமை இப்பிடியாகி போச்சு என்று சொல்லி அரற்றிக்கொண்டிருப்பாள்”

 

இன்னும் ஒரு சில நாட்களில் என்னை முகாமிற்கு அனுப்பி விடுவார்கள் என்று எனக்கு தெரியும்.அன்றும் அப்படித்தான் வைத்திய சாலைக்கு பக்கத்தில் இருந்த பாடசாலை மைதானத்தில் இளைஞர்கள் கிரிகெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள் , நாங்கள் எப்போது முள்கம்பிக்கு வெளியே இப்படி கிரிக்கட் விளையாடுவது என்று நினைத்துக்கொண்டேன், அவர்கள் கைகளில் அழகான போன்களை வைத்திருந்தார்கள் , பார்க்க ஆசையாகைருந்தது , எங்கள் முகாமில் ஒவ்வொரு குடும்பமும் இரகசியமாக ஒரு சிறிய ரக கைபேசியை வைத்திருந்தது , நாங்களும் வைத்திருந்தோம் , ஆனால் எங்களுடைய கைபேசியில் அதிக பட்சம் பாம்பொன்று இரையை பிடிக்கும் கேமை விளையாட இயலுமாக இருந்ததே அதன் உச்ச பட்ச தொழிநுட்ப சாத்தியமாக இருந்தது. இயல்பாகவே பெருமூச்செறிந்தது.  வேலியோரம் காவலுக்கு நின்றிருந்த இராணுவவீரன் என்னை பார்த்து லேசாக முன்னகைத்தான் , அவனிடமிருந்த ஏ.கே 47 ஐ ஒரு முறை உறைந்து பார்த்து விட்டு அவனுக்கு உணர்ச்சியற்ற புன்னகையை வீசிவிட்டு முட்கம்பி வேலியில் இருந்து கைகளை எடுத்து விட்டு சற்று தள்ளியிருந்த வேப்ப மரத்தடிக்கு வந்தேன். வேப்ப மரத்தில் ஏறி வேப்பம் குழைகளை முறித்துக் கொண்டேன் .என் படுக்கைக்கு பக்கத்தில் இருக்கும் பெரியவர் ஒருவருக்காக அந்த குழைகளை முறித்தேன். பெரும்பாலும் அந்த வைத்திய சாலையை சுற்றி உள்ள அனைத்து வேப்ப மரங்களும் மொட்டையடிக்கப்பட்டு விட்டன. கொப்பளங்களின் வலியையும் எரிச்சலையும் வேப்பங்குழை இல்லாவிட்டால் சமாளிப்பது பரமபிரயத்தனம் .

குழையை முறித்துக் கொண்டு வைத்திய சாலையின் கழிப்பிட தொகுதிகள் இருந்த பக்கமாய் நடந்து வந்து கொண்டிருந்தேன்.அப்போது ஒரு வயதான பெண்மணி பெரிய குரலில் யாரையோ திட்டி கொண்டிருந்தாள்.

“உந்த குமரியளுக்கு வேற வேலையில்லை எல்லாதையும் கழட்டி தொயிலட் பிற்றுக்க போடுறாளவை .எல்லாம் அடைச்சு போய் கிடக்கு ”

என்று அந்தம்மா திட்டி கொண்டே போனாள். எனக்கு ஓரளவு விடயம் புரிந்தது, கழிப்பிடத்தை சுற்றி நீலம் , றோஸ் நிறங்களில் உறைகளும் வெள்ளை டிசு பேப்பர்களும் முட்புதர்களில் சிக்கிக்கிடந்தன. நான் லேசான சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தேன்.

பெரும்பாலும் அம்மை போட்டவர்கள் வெளியில் உலவ மாட்டார்கள் அவர்களை கவனிக்க வந்தவர்கள் என்னைப்போல வேப்பங்குழை பறிக்கவும் நிழலில் இழைப்பாறவும் கோட்டகைகளை விட்டு வெளியே வருவார்கள். அவர்கள் ஏற்கனவே அம்மை வந்து குணமானவர்களாக இருப்பர். அம்மை போடாதவர்கள் கண்டிப்பாய் அங்கே வரமாட்டார்கள் , ஆனால் முகாம்களில் அம்மை ஒரு பொதுப்பொருளாக  போல மாறியிருந்தது பெரும்பாலும் எல்லோருக்கும் அம்மை போடும். எனவே ஒருவர் மாற்றி ஒருவர் நோயாளியாகவும் அவர்களுக்கு துணையாகவும் வந்திருப்பர்.

நான் அவர்களில் ஏதும் தெரிந்த முகங்கள் இருக்குமோ என்று தேடினேன்.ஏனெனில் வவுனியாவில் இருந்த ஆறேளு முகாம்களுக்கும் அம்மைநோய்ச் சிகிற்சை  வைத்தியசாலையாக பூவரசங்குளம் தான் இருந்தது.

நடக்க எத்தனித்தேன் ,அப்போது தான் நான் அவளைக்கண்டேன்

பிரியங்கா

என்பள்ளித் தோழி. கிட்ட தட்ட இரண்டு  வருடமாகிவிட்டது அவளை கண்டு. அபோது நாங்கள் பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தோம்.நான் சி வகுப்பு பிரியங்கா ஏ வகுப்பு . நன்றாக சதுரங்கம் ஆடுவாள், வருடா வருடம் கிளிநொச்சியில் நடக்கும் “ செப்டெம்பர் செஸ் “ போட்டிக்கு எங்கள் பாடசாலை அணியில் நாங்கள் இருவரும் செல்வதுண்டு.எனவே அவள் எனக்கு தோழியானாள். வகுப்பில் பாடம் இல்லா விட்டால் அவளுடன் போயிருந்து சதுரங்கம் ஆடுவேன்.ஏதாவது பேசிக்கொண்டிருப்பேன்.

எபோதும் எண்ணேய் வைத்து தலைவாரியிருப்பாள் , முகம் எண்ணை இறங்கி பழப்பாக இருக்கும் , மெல்லிய மஞ்சள் ஏறிய சீருடையை அழகாக அயன் பண்ணி அணிந்து வருவாள் , ஒவ்வொரு நாளும் கையில் ஒரு ரோஜா பூவுடன் பள்ளிகூட வளவிற்குள் பிரவேசிப்பாள் , பாடசாலை முன்றலில் தமிழீழ தேசிய கொடியேற்றப்படும் கம்பத்தின் அருகில் இருக்கும் மாவீரர் நினைவுத்தூபியின் முன் வைத்து விட்டு வகுப்பிற்குப்போவாள்.

“கஸ்ரபட்ட பிள்ளையெண்டாலும் படிப்பில வறுமையில்லை ” என்று அவளை பற்றி யசோதினி மிஸ் சிலாகிபார்.

அவளிடம் சைக்கிள் கிடையாது நான் வீட்டுக்கு போகும் வழியில் தான் அவளுடைய வீடு இருந்தது .நான் தான் ஏற்றிக்கொண்டு சென்றுவிடுவேன் . அவளிடம் ஒரு பழக்கம் இருந்தது எதையும் இரவல் வாங்க மாட்டாள் , அவளிடம் சைக்கிள் இல்லை அதனால் அவளுக்கு சைக்கிள் ஓட்ட தெரியாது.

”ஏனடி என்ர லேடிஸ் சைக்கிள்தானே ஓடி பழகன்”

“நான் வாங்கித்தான்  ஓடுவன் . உனக்கு ஏத்தி கொண்டுபோக கஸ்ரம் எண்டா சொல்லு நான் நடந்து போறன். நான் ஒண்டும் உன்னட்ட ஏத்தெண்டு கேக்கேல”

“அம்மா தாயே நான் உன்னட்ட ஒண்டும் கேக்கேல , மூக்கில ஏறின மொளகாவ புடுங்கி எறிஞ்சிட்டு ஏறு”

கோபத்தை முகத்திலிருந்து அகற்றிவிட்டு  முகம் முழுக்க புன்னகைத்தவாறே ஏறிக்கொள்வாள்.

அவளிற்கு அம்மா இல்லை. அவளுடைய அப்பா எஸ்.டி. எப் எனப்படும் புலிகளின் துணைபடையில் சம்பளத்திற்கு வேலை செய்வதாக கூறியிருந்தாள். நான் அவரை ஓரிரண்டு தடவை பார்த்திருக்கிறேன். பிரியங்காவிற்கு ஒரு அக்கா இருந்தாள். பெயர் பிரணவி , அப்போது அவள் க.போ.த உயர்தரம் படித்துக்கொண்டிருந்தாள்.

ஒரு நாள் அவள் ஒரு பெடியனுடன் ஓடி போய்விட்டதாக சொன்னாள். அவள் அதனை இயல்பாகவே கூறினாள். அவள் தமக்கை ஓடி போகப்போவது  முதலே தெரியும் என்றாள்.

இப்படியாக அவள் நட்பு வளர்ந்து கொண்டிருந்தது.

 

எனக்கு மிகப்பிரியமானவளாகவும் அன்பானவளாகவும் பிரியங்கா மாறிப்போனாள் , நான் ஏதும்  சீண்டினால்

“போடா சிறுவா ” என்று செல்லமாகக் கடிந்துகொள்வாள். அவள் அப்படிச்சொல்வதற்கே அவளுடன் ஏதும் வம்பிழுத்தபடியிருப்பேன். தானொரு டொக்டராக வரவேண்டுமென்று ஏல்லா படிக்கின்ற பிள்ளைகளையும் போல அவளும் சொல்லிவந்தாள்.

ஆனால் விதி வேறு ஒரு திரும்பல் புள்ளியை அவள் மீது இறக்கியது

பத்தாம் வகுப்பு இரண்டாவது தவணை ஆரம்பித்த போது கொஞ்சநாட்களாக பிரியங்கா  பள்ளி கூடம் வருவதில்லை. அவள் தோழிகளிடம் விசாரித்துப்பார்த்தேன். அவர்களுக்கும் தெரியவில்லை ,அவள் வீட்டுப்பக்கம் போய்ப்பார்த்தேன் வீடு பூட்டியிருந்தது , நான்கைந்து முறை சென்று பார்த்தேன். ஒரு நாள் அவளுடைய அப்பா வீட்டை கூட்டி துப்பரவு செய்து கொண்டிருந்தார் . அவரிடம் கேட்க மனம் ஒப்பவில்லை பேசாமல் வந்து விட்டேன்.

ஒரு நாள் அவளுடைய தோழியான பிரபாவை கண்டு கேட்டேன் , அவள் பதில் சொன்னாள்.

“பிரியங்கா  கலியாணம் செய்திட்டாள் ”

“ஏன் ?”

“பிடிப்பிரச்சனையாம்”

“யாரை கட்டினவா  ? ”

“கபிலனை”

“எந்த கபிலன் ?”

“அவளின்ர மச்சானாம் யாரோ ?”

”கனிஸ்ராவில ஓ ஏல் படிச்ச கபிலனோ ?”

“ஓம் அவன் தான் .அந்த கறுவல் ”

அப்போது வன்னி சனங்களை உலுக்கி கொண்டிருந்த பிரச்சினைகள் இரண்டு ஒன்று கிபிரடி இன்னொன்று பிள்ளைபிடி.

விடுதலைபுலிகள் அப்போதுகட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டு இருந்தனர், வீட்டுக்கு ஒருவர் போராட்டத்திற்கு வரவேண்டும் என்று கட்டாயமாக இயக்கத்தில் பிள்ளைகளை இணைத்தனர், இதனால் பல இளைஞர்களும் யுவதிகளும் காடுகளிலும் உறவினர்வீடுகளிலும் ஒழித்து வாழ்ந்தனர். எனினும் புலிகள் பிள்ளை பிடியை நிறுத்துவதாயில்லை. புலிகளின் அரசியல் துறை கடைசி காலம் முழுவதும் “பிள்ளைபிடிகாறர் ”என்ற பெயருடனேயே வழக்கொழிந்து போனது தனிக்கதை.

இவ் ஆட்சேர்பில் இருந்து தங்கள் பிள்ளைகளை பாதுகாக்க பெற்றோர் அவர்களுக்கு அவசரமாக திருமணம் செய்து வைத்து அவர்களை புதுக் குடும்பமாக்கினர். பள்ளிகூடத்தில் படித்துக்கொண்டிருந்த பிள்ளைகள் தாலியையும் குழந்தையையும் சுமக்க தொடங்கினர். இந்த அவலம் தான் அவளையும் திருமணத்தில் தள்ளியது,

எனக்கு கபிலனை தெரியும் எங்களை விட இரண்டு வயது அதிகம். அப்போது அவர் ஏல் எல் படித்துகொண்டிருந்தார். பிரணவி அக்காவின் வயது.நன்றாக புட் போல் விளையாடுவார்.பிரியங்காவின்  முறை மச்சான் என்று அடிக்கடி அவள் சொல்லியிருக்கிறாள்.

எங்கள் ஊரில் இருக்கும் சேர்ச் எனக்கு பிடிக்கும் பெரும்பாலும் மதிய வேளைகளில் அங்கு செல்வேன்  ஜேசு சொரூபத்தை பார்த்தபடியிருப்பேன். திருவிழாகாலங்களில்  என் தோழன் யூட்டுடன் சேர்ச்சிற்கு செல்வேன். அப்படித்தான் ஒரு நாள்அதன் பிறகு நான் சேர்ச்சில் பிரியங்காவை  கண்டேன். தலை வகிடு ஆரம்பிக்கும் இடத்தில் குங்குமம் வைத்திருந்தாள். முகம் சற்று பிரகாசமாய் மாறி இருந்தது, கொஞ்சம் குண்டாகியிருந்தாள்.

அவளை கண்டதும் யூட் நைசாக காதுக்குள்

“டேய் அதென்னடா கலியாணமான புதுசில பெட்டையளுக்கு முகம் பிறைட் ஆகுது”

நான் முறைக்க, அருகில் இருந்த இன்னொரு நண்பன்

“பூரிப்புடா”

நான் பிரியங்காவை பார்த்தபடியிருந்தேன். அவள் கண்ணில் நான் படுவதற்கு கொஞ்ச நேரமாகியது.

என்னை கண்டதும் எபோதும் பூக்கும் அதே வெள்ளை புன்னகையுடன் முகத்தால் சிரித்தாள். கபிலனின் கையை பிடித்தபடி அவளுயர மெழுகுதிரி ஒன்றுடன் சொரூபத்தின் பக்கம் சென்றாள்.  மெழுகு வெளிச்சம் மஞ்சளாக அவளுடைய முகத்தில் தொடங்கி மார்புவரை படிந்து கிடந்தது, அவளை பார்த்துக்கொண்டிருக்கும் போதே பின்னால் பாதரின் சுவேசம் ஒலித்தது , சொரூபத்தின் அந்த பக்கமாய் மஞ்சள் ஒளியில் மறைந்து போனாள்.

அன்றுதான் அவளை கடைசியாய் கண்டது.அதன் பிறகு வீழ்ந்த ஷெல்கள் எங்களை திசைகளுக்கொன்றாய் சிதறிப்போக செய்து விட்டன.அதன் பிறகு இன்று தான் பிரியங்காவை காண்கிறேன். வைத்தியசாலை நுழைவாயில் அருகே உள்ள மர நிழலில் நின்றிந்தாள். கறுப்பு நிறத்தில் சட்டை போட்டிந்தாள்.முகத்தில் இரண்டு மூன்று இடங்களில் அம்மை வடுக்கள் கறுத்துகிடந்தன. மிகவும் மெலிந்து போயிருந்தாள் . கண்களை சுற்றி கருவளையம் .. காதில் தோடுகளில்லை. அதற்கு பதிலாக ஒரு வேப்பங்குச்சியை செருகியிருந்தாள். சிரிப்பு மட்டும் அப்படியே இருந்தது, நெற்றியில் பொட்டில்லை. எனக்குள் ஏதோ தோன்ற , அப்பிடி கேட்டுவிடக்கூடாது என்று தீர்மானித்துக்கொண்டேன்.

அவளே பேச்சை தொடக்கினாள்

”டேய் எப்பிடியடா இருக்கிறாய் ?”

“நல்லா இருக்கிறன் . நீ ?”

“ம்ம் சுகமாயிருக்கிறன் .எந்த முகாமடா ?”

”இராமநாதன் …நீ ? “

”கதிர்காமர் “

”உனக்கும் வந்ததே  ?”

“ஓமடி ”

“மாறிட்டோ உனக்கு ? ”

”ஓமடி கையில் ஒண்டு ரெண்டு காயேல்ல ”

”உனக்கு ?”

ம்ம் மாறிட்டு.

”இதில ஏன் நிக்கிற ?:”

””சும்மா தான் டா “

கதைத்தோம் பழைய கதையெல்லாம். யார்யார் உயிருடன் இருக்கிறார்கள் யார் இல்லை என்பது முதற்கொண்டு கதைத்தோம்.நான் கபிலன் பெயரை தவிர எல்லாவற்றையும் கதைத்தேன்.எனக்கு அவளுடைய வெறுங்களுத்தும் நெற்றியும் உள்ளே நெருடியபடியே இருந்தன.

நல்லவேளையாக கேட்கவில்லை அவளே ,

“அவருக்கு சரியான கூட”

“கபிலனுக்கோ?”

“ஓமடா இன்னும் காயேல்ல. ரெண்டு பேரும் ஒண்டா தான் வந்தனாங்கள் .”

”மாறிடுமடி, எரிவாய் தான்  இருக்கும் , பொல்லாத வருத்தமிது  ? இந்தா இதை பிடி”

வெப்பங்குழையை கொடுத்தேன்.வாங்கிக்கொண்டே

“அப்ப உனக்கெடா ?”

“எனக்கு மாறிட்டு , இது பக்கத்தில இருக்கிற ஐயா ஒராளுக்கு , நீ இதை கொண்டுபோ நான் வேற  முறிக்கிறன்”

“சரி தாங்ஸ்டா”

“அப்பா எங்கயடி ?”

”அப்பா ,அக்கா ,அத்தான் , இருந்த  பங்கருக்கு மேல ஷெல் விழுந்தது விசுவமடுவில ”

லேச்யாய் கண்கள் பனிக்க மூக்கை உறிஞ்சிக்கொண்டு கண்ணை  துரைத்தெறிந்து விட்டு , வில்லங்கமாய் சிரித்தாள்.

“ம்ம்”

”ம்ம்”

“சரி நான் குழை முறிச்சு அந்த ஐயாக்கு குடுத்திட்டு கபிலன பாக்க வாறன். எவடத்த விட்டிருக்கினம் ?”

“மருந்து குடுக்கிற இடத்துக்கு நேர உள்ள கொட்டில் ”

“சரி நீ போ நான் வாறன்”

”ம்ம் சரிடா “

 

நான் புறப்படும் வேளையில் தான் ஏதோ சொல்ல வாயெடுத்தவள்.சட்டென அடங்கினாள்.

“என்னடி ?”

“ஒண்டுமில்லைடா நீ போ ”

“இல்லை சொல்லு ?”

“இல்லை வேண்டாம் நீ போடா ”

தயங்கினாள் .வாய் போவையும் கண்கள் போகாதேயும் வைத்திருந்தன.

“இல்ல பரவாயில்லை சொல்லடி ”

“ஒரு கெல்ப்படா ..குறை நினைக்காதே”

நான் காற்சட்டை பையில் இருந்த பேசை ஒருமுறை தொட்டு பார்த்துக்கொண்டேன். அம்மா பூவரங்குளத்திற்கு அம்புலன்ஸ் ஏறும் முன் தந்த மூவாயிரத்தில் இரண்டாயிரம் இருந்தது.

“காசு ஏதும் ?”

“இல்லையடா காசெல்லாம் இருக்கு ”

“அப்ப என்ன ?”

“ஒருக்கா வெளிக்கடைக்கு போகோணும் ”

”ஹா ஹா இதுக்கு தான் மசுந்தின்னியே லூசு .என்ன வாங்கோணும் ? ”

“அதுடா ..குறை நினைக்காதை பிளீஸ் ”

“கேற்றில ஆமிக்காறர் நான் போகேலா , ”

“அவங்கள் ஒண்டும் சொல்ல மாட்டாங்கள் .என்ன வாங்கோணும் எண்டு சொல்லிட்டு போய் வரலாம் ”

“இல்லையடா அதுதான் பிரச்சினை .கடேலையும் ஒரே பெடியள் ”

“என்ன வாங்கோணும் ? ” குழம்பியிருந்தேன்.

அவள் தயக்கத்திற்கு கொஞ்ச செக்கன்களை கொடுத்து விட்டு சொன்னாள்

“ஒரு விஸ்பர் வாங்கோணும் டா ”

“…………..”

அவள் கேட்பது எனக்கு நன்றாக புரிந்தது .அப்போது நான் 16 வயது பையன் யெளவனத்தில் அந்தர சமாச்சாரங்களை அபோதுதான் தெரிந்து கொள்ள தொடங்கியிருந்தேன்.  கொஞ்சம் அதிகப்பிரசங்கி என்றாலும் என்னால் .அவள் கேட்டதை வாங்கிவரும் தீரச்செயலை செய்ய முடியும் என்று தோன்றவில்லை.

எனினும் ஒரு பெண்பிள்ளை கேட்கின்றாள். அவள் நிலமை புரிந்தது .அவளிற்கு அது உடனடியாக தேவைப்பட்டு இருக்க கூடும். வேறு வழியில்லை போய்த்தான் ஆக வேண்டும்.

“டேய் ஏலாட்டி சொல்லடா …யாரும் பெரியாக்கள கேட்டுப்பாக்கிறன் ”

அவள் குரலில் பரிதாபம் மிதமிஞ்சி வழிந்தது.

அவள் அதுவரை கையில் வைத்து பிசைந்து கொண்டிருந்த காசை பெற்றுக்கொண்டு .நடந்தேன் . வாசல் சென்ரியில் நின்ற இராணுவவீரன் முகம் இரண்டு மூன்று நாட்களாக நான் கடைக்கு போய் போய் பரிச்சமாகி விட்டது.அவனும் என்னை கண்டதும் புன்னகைத்துக்கொண்டே நின்றான்.

“மல்லி கடைகு போறது ?”

என்றான் சிரித்து விட்டு

“ஓம் சேர்”

அவனைகடந்தேன்.நல்ல வேளை“மல்லி என்ன வாங்க போறது ? ” என்றவன் கேட்கவில்லை.

கடையை நோக்கி நடந்தேன். கடையில் நான்கைந்து இளைஞர்கள் கைகளில் சோடா போத்தல்க களுடன் நின்றிருந்தனர். நேராக கடைக்குள் நுழைந்தேன்.

கடைக்கார அம்மா இரண்டு நாள் சினேகத்தில் புன்னகைத்தார்

“என்னப்பன் வேணும் ? ”

“அன்ரி ஏதோ விஸ்பறாம் ?” தெரியாதது போல் இழுத்தேன்.

உடலெல்லாம் விறைத்து. வியர்வை கரை புரண்டு ஓடியது வழைமை போல் என் வலது கை நடுங்கத்தொடங்கியது.

கடைக்கார அம்மா அதனை அப்படியே என் கையில் தந்து விடுவாரோ என்று பயந்தேன். நல்ல வேளை அவர் அதை பேப்பர் ஒன்றில் சுற்றி பையில் போட்டு தந்தார்.

வாங்கி கொண்டு திரும்ப அந்த இளைஞர் கூட்டத்தில் ஒருதன்

“தம்பி அது பிஸ்கற் இல்லையடா  ”

கண்டுகொள்ளாமல் வேகமானேன்.

இராணுவ வீரன் அதை பரிசோதிப்பான் என்று நினைத்தேன்.நல்ல வேளை அவன் புன்னகைத்த வாறே கேற்றை திறந்து விட்டான். அவனை ஏமாற்றிவிட்டு ஒரு வெடிகுண்டை கொண்டுவந்திருந்தால் கூட அப்படி பயந்திருக்க மாட்டேன்.

நேராக நடந்து பிரியங்கா  நின்றிருந்தமரத்தடிக்கு வந்தேன்.அவளை காணவில்லை . கண்கள் அவளை தேடத்தொடங்கின.அப்போது மரத்தடியில் அமர்ந்திருந்த அம்மை வடு முகமெல்லாம் கண்டமேனிக்கு போட்டிருந்த பையன் ஒருவன் என்னை அழைத்தான்

“அண்ணை”

“என்ன தம்பி ?”

“ஒரு அக்காவையோ தேடுறியள் ?”

“ஓமடா”

“அந்த அக்காஇருக்கிற  கொட்டில்  காறர ஊசி போட வரச்சொல்லி அறிவிச்சவங்கள் உங்களிட்ட சொல்லிவிடச்சொன்னவா”

நான் நேராக அவள் சொன்ன  கொட்டிலை நோக்கி நடந்தேன் .கைகளில் இருக்கும் அந்த பொட்டலம் பேப்பர் சுற்றப்பட்டு பையில் மறைக்கப்பட்டிருந்ததால் அது பற்றிய வெக்கமும் அச்சமும் அப்போது என்னிடமிருக்கவில்லை.

அந்த நீண்ட ஓலை கொட்டகைகளை நோக்கி நடந்தேன். கொட்டிலின் முன்பு அம்மை நோயாளிகள் வரிசையில் நின்றிருந்தனர் பெரும்பாலான நோயாளிகளின் கைகளில் வேப்பமிலை கட்டுகள் அடிக்கடி அவற்றால் மொய்க்கும் இலையான்களைதுரத்தியபடியும் , எரிச்சலெடுக்கும் அம்மைப்புண்களை வருடியபடியுமிருந்தனர், சிலர் வேதனை தாங்காமல் முனகியபடி நின்றிருந்தனர்.  அந்த லைன் முடியும் இடத்தில் பிரியங்காவின் முகம் தெரிந்தது , அருகில் கபிலன். அவள் தோளில் அவனுடைய மணிக்கட்டுடன் துண்டாடப்பட்ட கை ஊன்றப்பட்டிருந்தது.  முழங்கால் வரை ஏற்றி கட்டியிருந்த நீல நிற சறத்தின் கீழே வெளிப்பட்ட  அவனுடைய வலதுகால் ரப்பாராக மாறியிருந்தது , ரப்பர்காலின் பாதங்கள் வெள்ளை மணலில் புதைந்து இடது தசைக்காலுக்கு உதவியாக அவனுடலை தாங்கியபடியிருந்தது. மேற்சட்டை போடாத அவனுடைய கரிய தேகத்தில் மாபிள் குண்டுகளை புதைத்து  வைத்தது போல் பெரிய பெரிய அம்மை கொப்பளங்கள் தெரிந்தன. பிரியங்கா கையிலிருந்த வேப்பங்குழையால் அவற்றை தடவிக்கொடுத்தபடியிருந்தாள். லைன் மெல்ல மெல்ல நகர்ந்த படியிருந்தது.

 

ebacd6aa14045fb36fc1a00b3d0b0acb

நான் அப்படியே நின்று அவர்களைப்பார்த்தபடியிருந்தேன் , பிரியங்காவின் கண்கள் என்னைக்கண்டன. மெல்லிதாய் புன்னகைத்தாள் . கொஞ்சம் பொறு என்று சைகை செய்தவள், என்னுடைய கையில் இருந்த பொட்டலத்தை ஒருதடவை பார்த்துக்கொண்டவள்.கபிலனுக்கு என்னைக்காட்டினாள்.அவன் அம்மை எரிச்சல் மாறாத முகத்தில் வலிந்து  புன்னகைத்தான். லைன் ஆமை வேகத்தில் நகர்ந்தது.

காத்திருக்க தொடங்கினேன்.

அதே பூவரசங்குளம் கிராமத்தில் துணியின் உப கதை  இவ்வாறு காத்திருக்க கிளிநொச்சியின் மேற்கே  உள்ள கிராமமொன்றில் துணியின் கதை ஆரம்பிக்கின்றது.

 

துணியின் கதை

 

பெப்ரவரி 2013

மீண்டும் பிரியங்கா பற்றிய ஞாபகம் வந்தது தற்செயலாக நடந்தது

க.பொ.த சாதாரண தரத்தில்  படிக்கும் அத்தைமகள் கவினாவிற்கு பாஸ்ட்பேப்பர் புத்தகங்கள் சிலவற்றை கொடுத்துவிட்டு யாழ்ப்பாணம் போகலாம் என்று தீர்மானித்த போது அத்தை

“உன்னை என்னெண்டு அந்த பிரியங்காக்கு தெரியும் ? ”

அத்தை சட்டென்று கேட்டதும்  உடனே அவள் எனக்கு ஞாபகம் வரவில்லை

“எந்த பிரியங்கா ? ”

“உன்னோட பரந்தன்ல படிச்சதாம் எண்டு சொன்னது”

சட்டென அடி மனதிலிருந்து எழுந்து வந்தாள் , சொரூபத்தின் பின் மஞ்சள் ஒளியில் சுவிசேசத்துடன் நகர்ந்து சென்றாள் , லைனில் தொப்பளம் உடலெங்கும் மலர்ந்த கபிலனினை தாங்கியபடி நின்றிருந்தாள் ,

”சிறுவா !” என்று சிரித்தாள்.

வருடங்கள் உருண்ட பின்னர்  மீண்டும் அவள் பெயர்  காதிலொலித்து மனதிலெழுகிறது.

“ஓ அவள் எங்க இங்க ?”

“இஞ்சதான் இருக்கிறாள், எங்கட முகாமில தான் இருந்தவள், கவினாட்ட உன்னை விசாரிச்சவளாம்”

“எவடத்த வீடு ?”

“ஏன் அங்க இப்ப  ?” அத்தையின் குரலில் கொஞ்சம் கடுமையிருந்தது.கேட்டுக்கொண்டே சமயலறைக்குள் மறைந்து விட்டாள். நான் அவளுடைய வீட்டை கேட்டதும் அத்தையின் முகம் சட்டென்று மாறியதற்கு காரணமறியாதவனாய் ,

“அவள் என்ர பிரண்ட் ”

என்றேன்.

நான் சொல்லி முடிக்க , என் அத்தை மகள் க்ளுக் என்று சிரித்தாள்

“அம்மா  மச்சி சைவே வீட்ட போகப்போறானாம் ”

“சைவேயோ அப்பிடியெண்டா ? ”

கவினா சிரித்தாள்

”இஞ்ச எல்லாரும் அவளை அப்பிடிதான்  கூப்பிடுவினம்.”

“விளங்கேலையடி ”

அவள் குரலை தாழ்த்தி கொண்டு

“அட லூசு மச்சி சை-வே யை மாத்தி பார் ”

“வேசை”

என் வாய் கொஞ்சம் பெரிதாகவே சொல்லிவிட்டது. அப்போது வெளியே வந்த அத்தை

“கவினா  என்னடி பழக்கம் என்ன கதை கதைக்கிற ? ”

“அத்தை அவள நல்ல பிள்ளை , கலியாணம்  செய்திட்டாள்”

“அந்த பெடியன் முகாமில வருத்தம் வந்து செத்துப்போச்சு தெரியாதோ ? ”

எனக்கு தூக்கிவாரிப்போட்டது.

கடைசியாய்  பூவரசங்குளம் வைத்த்தியசாலையில் அவளிற்கு விஸ்பர் வாங்கி கொடுத்ததுமுதல் ,இரண்டு நாட்களில் கபிலனுக்கு காய்ச்சல் அதிகமாகி அவன் மயக்கம் போட்டதும் அவனை அம்புலன்சில் ஏற்றிய போது அம்புலன்சினுள் அவனை மடியில் தாங்கிக்கொண்டு கண்கள் கலங்க என்னை பரிதாபமாய் பார்த்த பிரியங்காவின் முகம் ஞாபகம் வந்தது. நான்கைந்து நாட்களில் கபிலனுக்கு உடல் நிலை சரியானதும் , அம்மை ஊசிகள் போடவேண்டியிருந்ததால் மீண்டும் அவர்கள் பூவரசங்குளம் கொண்டுவரப்பட்டதும் ஞாபகம் வந்தது. எனக்கு குணமாகி விட்டதால்  கபிலனுக்குகபிலனிடமும் பிரியங்காவிடமும் விடைபெற்றுக்கொண்டு நான் என் முகாமிற்கு திரும்பியது வரை உடைந்து உடைந்து  மனத்தில் ஓடியது.

அதன் பிறகு அவளிற்கு நடந்தது ஒன்றும் எனக்கு தெரிந்திருக்கவில்லை.

“ஏன் கபிலன் செத்தவர்  ?”

“முகாமில அம்மை வந்தது ”

“ஓம் அது தெரியும் பூவரசங்குளத்தில கண்டனான்”

“பிறகு கொஞ்சநாள்ல தீடிரெண்டு செத்து பொச்சு அந்த பெடியன்”

“ஏன்?”

“ஏதோ ஏற்பாக்கினதாம்”

மீண்டும் பிரியங்காவின் முகம் எழுந்தது , கபிலனின் அம்மை வேதனை ஊறிய சிரிப்பு எழுந்தது , அங்கே அவர்களைக்கண்ட நாளிலிருந்து விடைபெறும் வரை அவர்களுடன் பழகியதெல்லாம் நினைவுக்கு வந்து தொண்டையை இறுக்கியதுபோலுணர்ந்தேன்.

“ம்ம்”

“அப்ப பாக்க எங்களுக்கும் பரிதாபமா இருந்தது ஆனா இப்ப அவான்ர சீவிச்சிங்காரிப்புகளும் ஆட்டமும் பாத்தாயெண்டா” அத்தை கொக்கரித்தாள்.

“இந்த ஊரிலையோ இருக்கிறாள் ?”

“ஓம் இஞ்சதான் நிண்டு பெடியளோட கிளிக்கோடு மறிக்கிறாள் ” என்ற அத்தை  சட்டென்று குரலை தாழ்த்திக்கொண்டு,

இப்ப ஒரு வேலை செய்திருக்கிறாள் பார் , கேவலம் “

“என்ன ?”

அப்போது தூரத்தே பஸ் ஒன்றின் கோர்ன் சத்தம் கேட்க, கவினா

“மச்சி பஸ் வருது ”

“சரி சரி வெளிக்கிடு இனி டவுனுக்கு வேற  பஸ் இல்லை ”

நான் என் பையை தூக்கிக்கொண்டு  கேற்றை திறந்து வீதிக்கு ஏறினேன். சாலையில் செங்கிரவல் புழுதியைக் கிளப்பிக்கொண்டு பஸ்வந்து நின்றது ,அத்தையும் கவினாவும் என்னைப்பார்த்து கையை அசைத்து புன்னகைக்க

“நல்லா படியடி”

“சரி மச்சி” கவினா சிரித்தாள்.

பஸ்சில் ஏறிக்கொண்டேன். டிக்கெற் எடுத்துக்கொண்டு .யன்னலில் முகத்தை சாய்த்து கொண்டேன். மனத்தை பிரியங்கா அக்கிரமித்திருந்தாள். மீண்டும் மீண்டும் அவள் சிரித்த முகம் எழுந்து வந்து ஜேசு சொரூபத்தின் பின்னால்  மறைந்தது.

அத்தோடு கவினா சொன்ன “சைவே” என்ற வார்த்தையும் , பெரியம்மா கடைசியாய் பிரியங்கா ஏதோ வேலை செய்துவிட்டாள் என்றாள் , என்னவாக இருக்கும் என்று யோசித்தேன். இந்த ஊரில் அவளுக்கு சைவே , ஆட்டக்காரி என்றெல்லாம் அழைப்பார்கள் என்று தோன்றியது. அப்பா,அக்கா , அத்தான் , இப்போது கபிலன் என்று அவள் குடும்பம் அழிந்து விட்டது. அவளை ஒரு சைவே என்று ஓ.எல் படிக்குமொரு சின்ன பெண் சொல்லுமளவிற்கு வந்துவிட்டதா அவளுடைய வாழ்க்கை.  சனம் எப்பவும் இப்பிடித்தான் எல்லாரை பற்றியும் கதைக்கும், என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

பஸ் சந்தியொன்றை கடந்துகொண்டிருந்தது .சந்தியில் நான்கைந்து கடைகளைக்கொண்ட கடைத்தொகுதிகள் தெரிந்தன. அப்போதுதான் கண்கள் கடையருகே நின்ற மோட்டார் சைக்கிளை  கண்டன அதன் அருகில் ,

“பிரியங்கா”

கையில் பொலித்தீன் பைகளில்  எதையோ வாங்கிக்கொண்டு கடையொன்றிலிருந்து  வெளியேறிக்கொண்டிருந்தாள் , நான் சட்டென்று எழுந்து பஸ் பெல்லை அடித்தேன். நான்கைந்து மீற்றர் தள்ளி பஸ் நின்றது.

நடத்துனர்

“தம்பி கிளிநொச்சிக்கெல்லோ டிக்கட் எடுத்தனீர் ”

நான் அவருக்கு பதில் சொல்லாமல் வேகமாய இறங்கி  நடந்தேன்.

என் பக்கமாய்தான் அவள் நடந்து வந்துகொண்டிருந்தாள் , வெள்ளை நிற ரொப்பும் நீல டெடிம் ஜீன்ஸும் அணிந்திருந்தாள் , குண்டாகியிருந்தாள் , அப்போது இருண்டுபோய் கருவளையங்கள் ஏறிய கண்களுடன் இருந்த அவளுடைய முகம் இப்போது பளிச்சென்று தெரிந்தது. நெற்றிலில் ஒரு கறுப்பு ஸ்ரிக்கர் பொட்டு வைத்திருந்தாள் . வேகமாக என்பக்கம் வந்து கொண்டிருந்தாள். அவளுடைய  கழுத்தில் : சிலுவையில் ஜேசு தொங்கிக்கொண்டிருந்தார்.

அவள் அருகில் வரும் போதே ஒரு வித சந்தேகத்துடன் புன்னகைத்தாள்,சட்டென்று

“டேய்ய் சிறுவா ”

குரலில் சந்தோசம் பொங்கியது.

“டேய் ஆளே மாறிட்டாய் , என்னடா தாடி எல்லாம் ”

“எப்பிடி இருக்கிறாடி?”

“எனக்கென்ன  சூப்பரா இருக்கன் . எங்க அத்தை வீட்டயே வந்தனி ?”

“ஓமடி ஏன் இங்க இருக்கிற ?”

“இது அம்மான்ர இடமெடா என்ர பேர்ல காணி இங்கதான் இருந்தது , இங்க வீட்டுத்திட்டம் கிடைச்சுது அதுதான் வந்திட்டன்”

“ஓ”

“கம்பஸ் கிடைச்சதெண்டு கவினா சொன்னாள் ?”

“ஓம் யாழ்ப்பாணம்”

“சூப்பர் , நல்லா படி, வா ஐஸ் கிறீம் ஏதாவது குடிப்பம்”

அருகில் இருந்த கூல்பார் ஒன்றினுள் நுழைந்தோம்.

”ம்ம் எங்க போற ? ”

“கடைக்கு வந்தனான். நீ ஏன் இவடத்த வந்தனி ? ”

“பஸ்ல கிளிநொச்சிக்கு போய் கொண்டு இருந்தனான் , உன்னை கண்டிட்டன் உடன இறங்கீட்டன்”

“அட லூசு , இனி பஸ் இல்லையாடா”

“ம்ம் பரவாயில்லை”

“சரி வா நான் கொண்டு போய் விடுறன் டவுனுக்க ”

”சைக்கிள் ஓடப்பழகிட்டியோ ? ”

“ஹா ஹா இல்லையடா  இன்னும் பழகேல்ல ” சிரித்தாள் தொடர்ந்தும்.

“அப்ப என்னத்தில கொண்டுபோய் விடப்போற ? ’

அப்போது ஐஸ்கிறீம் பரிமாறப்பட்டது.

“ஐஸ்கீறீம குடி முதல்”

“சரி”

நான்கைந்து கரண்டி ஐஸ்கீறிம் வாய்குள் குளிர்ந்து இறங்கியவுடன்

“அத்தையாக்கள் ஏதும் சொன்னவங்களா ?” உணர்ச்சியற்ற குரலில் கேட்டாள்.

“ஓம் கபிலனுக்கு நடந்த்து பற்றி , சொறியடி எனக்கு சத்தியமா இவ்வளவு நாளும் தெரியாது .”

அது மட்டும் தான் சொன்னவாவோ ?

 

“ஓமடி ஏன் கேக்கிற ?”

“பொய் சொலாத கவினா என்னோட இப்ப பெரிசா கதைக்கிறதே இல்லை.உன்ர அத்தை சிரிச்சா கூட முகத்தை திருப்பிக்கொண்டு போறா”

“ம்ம் ”

“எனக்கு இங்க என்ன பேர் தெரியுமோ ?”

“பிரியங்கா .அது மட்டும் தான் உனக்கு பெயர் ”

நான் அவளை நிமிர்ந்து பார்த்தேன் , தலை குனிந்திருந்தது ஐஸ்கிறீமை கிளறிக்கொண்டிருந்தாள். முக்கு உறிஞ்சும் சத்தம் கேட்டது.

“ம்ம்”

அதற்கு பிறகு இருவரும் பேசவில்லை, ஐஸ்கிறீம் முடிந்தது.

எழுந்து கவுண்டருக்கு போனோம் நான் பேசை எடுக்க  ,

“சேர் பேச உள்ளுக்கு வையுங்கோ , நாங்கள் குடுக்கிறம் ”

“இல்லையடி பரவாயில்ல”

“வையடா சிறுவா ” லேசாய் உறுக்கினாள்.

பணத்தை கொடுத்தாள்.

“மொளகா ” என்றேன்.

“ஹா ஹா எப்பவும் நான் கோவக்காரி தெரியும்தானே ”

“சரி என்னத்தில போறது ? ”

“பைக்ல”

“ஓ பைக் வச்சிருக்கியா ?”

நடந்தாள்.சடென்று ஏதோ நினைவுவரப்பெற்றவளாய் கையில் இருந்த பைகளை என்னிடம் தந்துவிட்டு

அருகில் இருந்த பாமசி ஒன்றிணுள் நுழைந்தாள். இரண்டு நிமிடத்தில் வெளிப்பட்டாள்.கையில் நீல கலர் விஸ்பர். பேப்பரோ உறையோ ஒன்றும் சுற்றப்பட்டு இருக்கவில்லை. ஒரு விளையாட்டு பொருளை குழந்தை எடுத்துவருவது போல அதனை கொண்டுவந்தாள் . என்னிடம் தந்த பை ஒன்றில் அதனைத்திணித்து விட்டு

“சரி வா போவம்”

நான் சூட்டி பப் அல்லது  பிலசர் என்று ஏதும் ஒரு ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளை எதிர் பார்த்தேன். ஆனால் அவள் ஒரு ஹீரோ ஹொண்டா  மோட்டார்சைக்கிளின் அருகில் போய் நின்றாள்.

“ஓடனடா ’

சாவியை நீட்டினாள்.

“லைசன்ஸ் எடுக்கேலயடி இன்னும் ”

“இருபத்தியொரு வயசாகுது எருமை, லைசென்ச எடு ”

“ஈ ஈ”

“சரி வா போவம்”

சாவியை சொருகி அதனை அநயாசமாக நிமிர்த்தி ஹிக்கரை அடித்து உயிர்பித்தாள்.

“ஏறடா ” ஏறிக்கொண்டேன்.

பெரிய வயல் நிலங்களை கடந்தோம் , வாய்க்கால் கரையாக ஓடும் அந்தச்சாலையின் புழுதியை மெல்ல கிளப்பியவாறு வண்டியை செலுத்திக்கொண்டிருந்தாள் .

“அவர் செத்தா பிறகு உடைஞ்சு போய்டண்டா , உன்ர அத்தையாக்கள் தான் முகாமில ஆறுதலா இருந்தவை. ஆனா உன்ர அத்தையெண்டு அப்ப தெரியா”

“ஓ”

“முகாமால இங்க வந்தா பிறகு கவினா ஒருநாள் அல்பம் காட்டினாள் அதில உன்னை கண்டிட்டு கேட்டனான் ”

“ம்ம்”

”ஊர்ல ஆர் என்னை பற்றி கதைச்சிருந்தாலும் நான் கவலை பட்டு இருக்க மாட்டன் ஆனா கவினாவும் அத்தையும் கூட என்னை பற்றி பிழையா கதைச்சிருக்கினம்”

“ம்ம்”

“உந்த ஊர்ல இருக்கிற என்னை பற்றி கதைக்கிற பொம்புளையள் சில பேரின்ர புருசன் மார பற்றியெல்லாம் எனக்கு தெரியும் நல்லா”

“ம்ம்”

“ஒரு பெட்டை தனியா இருக்கேலாதடா , முகாமில இருக்கேக்க தெரியேல்ல . இங்க வந்தா பிறகு  …. சீ சொல்லவே வெக்கமா கிடக்கு”

“என்ன நடந்த”

“பகல் இரவு எண்டு பாராம எதாவது காரணம் சொல்லி கொண்டு வருவாங்கள் ”

“தனியாவோ இருக்கிற ?”

“இல்ல அப்பம்மா கிழவி இருக்கு , அதுக்கு காதும் கேளா கண்ணும் மங்கல்”

“ம்ம்”

“ஆம்பிளையள் இப்பிடியெண்டா , ஊர்ல இருக்கிறவளவை , என்னை நாக்கால படுத்தினாளவை. ”

“என்னவாம்?”

“முகாமால வந்து இஸ்கூல் ஒண்டில கண்டின் வச்சு நடத்தின்னான் , அங்க படிப்பிக்கிற மாஸ்ரர் ஒராளோட நான் தொடர்பாம் எண்டு அங்க டீச்சர் எண்டு சொல்லிக்கொண்டு திரியிறவளவை சிலபேர் கதை கட்டி விட்டுடாளவை”

“சீ”

“நான் கன்ரின விட்டிட்டன் டா”

“ஏன் அப்பிடி கதை கட்டினம் ?”

“மனுசன் செத்தா , பூ பொட்டு ஒண்டும் வைக்க கூடாதோ ? நான் என்ன குங்குமமே வச்சு கொண்டு திரிஞ்சனான் ?”

“ம்ம்”

”கோயில்குளத்துக்கு போகேலாது , நான் ஆறுதலுக்கு தான் சேச்சுக்கு  போறனான் , ஆனா சீவி சிங்காரிச்சு போறாள் ஆம்பிளையளோட கதைக்கிறாள் எண்டு கதைகினம், ”

“ம்ம்”

“கொஞ்சநாள் அழுது கொண்டுதாண்டா இருந்தன் , பிறகு மரத்து போச்சு  ”

”சிலதுகள் அப்பிடிதாண்டி நீ கவலை படாத”

“அதெல்லாம் கூட பரவாயில்லையடா , நான் வேசையாடுறனாம் , சின்ன பெடியள் எல்லாம் , ஐட்டம் ,சைவே எண்டு கத்திட்டு ஓடும், கர்த்தர நினைச்சுக்கொள்ளுவன் வேற ஆர் எனக்கு துணை ”

விம்மினாள்

“ம்ஹிம் நாயள்”

பிரதான கார்பெட் வீதிக்கு ஏறி , அருகிலிருந்த பஸ்ராண்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினாள் . அருகில் ஒரு சேர்ச் இருந்து அன்று குருத்தோலை விழா என்று காலை பேப்பரில் படித்தது ஞாபகம் வந்தது , பூசை தொடங்க ஆயத்தம் தெரிந்தது நிறைச்சனம்  சேர்ச்சினுள் நுழைந்துகொண்டிருந்தது . மோட்டார் சைக்கிளை நிறுத்தி இஸ்ராண்டில் சாய்ந்து விட்டாள்.

பஸ் வர நேரமிருக்கு பொலிருந்தது.

”வேலைக்கும் போகாம இருந்தன் கொஞ்சநாள் , அம்மம்மா கிளவின்ர பிச்சகாசும் என்ர நகையள வச்சதுல வந்த காசிலதான் சீவியம் ஓடிக்கொண்டிருந்தது ”

“பிறகு ? ”

“வேற வழி இல்லாமதான் அந்த முடிவு எடுத்தனான் , ஆனா அதுவே இப்ப என்ர வேசை எண்ட பேர நிரந்தரமாக்கி போட்டுது”

“எந்த முடிவு ?”

“ஏன் அத்தை வீட்ட சொல்லேலையோ ?”

“இல்லையடி என்ன செய்தனி ?”

கொஞ்ச நாளைக்கு முதல் பெட்டையளை ஆமில சேரச்சொல்லி கேட்டாங்கள் , சேர்ந்திட்டன். நல்ல சம்பளம் இப்ப லீவில வந்து நிக்கிறன் . ”  சொல்லும் போது அவளுடைய குரல் அங்காங்கே பாளம் பாளமாக வெடித்து வெளிவந்தது. ஒவ்வொரு நாள் காலையிலும் மாவிரர் தூபிக்கு பூ வைத்துவிட்டு வகுப்புக்கு போகும் அவளுடைய உருவம் நிழலாடிற்று.

 

“டேய் இப்ப பஸ் வந்திடும் , பூசை தொடங்க போகுது நான் சேர்ச்சுக்க போகட்டே ?”

“ஓமடி நீ போ நான் ஏறிப்போயிடுவன்”

சட்டேன்று ஒருமுறை அணைத்துக்கொண்டாள் ,

நலலா படியடா. அடிக்கடி வா இஞ்சால் .

அவள் விலகியபோது அவளுடைய கண்கள் பனித்திருந்தன,

”கவனமா போ சிறுவா , இது என்ர போன் நம்பர் ”

பேப்பர் துண்டை என்னிடம் தந்து விட்டு வீதியில் இருந்து இறக்கி சேர்ச்சினுள் நுழைந்தாள் , வாசலில் பெரிதாக வைக்கப்பட்டிருந்த ஜேசு சொரூபத்தை  கடந்து கூட்டத்தினுளவள் மறைவது தெரிந்து . அப்போது பாதர் பைபிள் சுவிசேசங்களைச் சொல்லத் தொடங்கினார் .

இயேசு மரணத்தில் இருந்து வாரத்தின் முதல் நாளே உயிர்த்தெழுந்து விட்டார். முதன் முதலாக இயேசு மகதலேனா மரியாளுக்குத் தரிசனமானார். ஒரு முறை, ஏழு பேய்களை மரியாளைவிட்டு இயேசு விரட்டினார்.

-மாற்கு 16:9

-யதார்த்தன் –

நன்றி -ஆக்காட்டி .

Share this Post

Leave a Reply