yathaadmin/ June 3, 2016/ கட்டுரை/ 0 comments

 

mithivedi1-600x450

சமூக அசைவியக்கத்தில் உணவுப்பண்பாட்டை வாசித்தல் என்பது குறித்த சமூகத்தின் ….

நிறுத்து ,

சும்மா எப்பபாத்தாலும்  யுனிவர்சிட்டிக்கு திசிஸ் பேபர் சமிட் பண்ணுறபோல  ஆரம்பிக்கிறது இதே வேலையாப்போச்சு எனக்கு .

ஒண்டுமில்ல மக்காள்   அன்றாடம் சாப்பிடுற சாப்பாடுகளில என்ன சுவையிருக்கு , சத்திருக்கு , எது விலை குறைவா இருக்கு , என்று பார்க்கிறனாங்கள் . அதுக்கு பின்னால என்ன கதையிருக்கெண்டு எப்பபாத்திருக்கிறம் ?  உதாரணத்துக்கு மிதிவெடிய எடுத்துக்கொள்வோம் . எனக்குத்தெரிஞ்சு 1990 களின் பிறகு ஈழத்தில குறிப்பா யாழ்ப்பாணப்பக்கம் கண்டறிப்பட்ட ஒரு சாப்பாடுதான் மிதிவெடி . மிதி வெடி எண்டுறது  றோள் (Roll) எனப்படுகின்ற மேலைத்தேச உணவின் பரிமாணக் கூர்ப்பு வடிவம்.  குறிப்பா காலணித்துவ காலத்தில  புதிதாக தோன்றிய கத்தோலிக்க –மேலைத்தேச பண்பாட்டை பின் பற்றும் குடும்பங்களில் இருந்து வேகமா பரவின ஒரு உணவு றோள்.  , உருளைக்கிழங்கோ, இறச்சியோ உள்ளீடாக வைத்து வீச்சு ரொட்டியை சுற்றி , ரஸ்க் தூளில் உருட்டி பொன்நிறமா சுட்டு எடுக்கிற சின்ன சின்ன உருளை வடி இருக்கிற றோள் நூற்றாண்டுகளின் வரலாற்றை கொண்ட ஒண்டு . ஆனா குறுகிய காலத்தில மிதிவெடி றோள தள்ளிவிட்டிட்டு சிற்றுண்டி , பேருண்டி (ஏதோ தப்பா இருக்கே) இரண்டு வகைக்குள்ளும் வந்து நின்றது சுவரஸ்யமான வரலாறுதான்.

பா.அகிலன் சேரின் விரிவுரையொன்றில் உணவுக்காலாசாரம் பற்றி உரையாடிக்கொண்டிருந்த போது அவர் மிதிவெடி பிறந்ததாக நம்பப்படும் கதை ஒன்றைச்சொன்னார்.

90 களில் ஏற்பட்ட பாரிய இடம்பெயர்வு காலத்தில் பயணங்கள் கடினமானதகவும் பசி அதிகமானதாகவும் இருந்தது  , இப்ப ஒன்று இரண்டு மணி நேரங்களில் கடக்ககூடிய யாழ்ப்பாண- வன்னி பாதைகளை அப்போதெல்லாம் கடக்க பல  மணிநேரங்களாகும் , காரணம் சந்திக்கு ஒரு சென்ரி பொய்ண்ட் போட்டு இராணுவம் , ஒண்டுமே இல்லாத பொக்கற்ற தட்டிப்பார்த்து , “கோட்டியோ ” “குண்டு இருக்கோ ” என்று சும்மா போற சனத்த  மினக்கெடுத்திக்கொண்டிருந்தது .அந்த பயணாஅத்தில றோள் சவண்டு பொய் குட்டுப்போகும் , அப்பதான் தூர பயணம் போற யாரோ ஒருவர் றோளுக்கு குழைத்த மாவை கொஞ்சம் அதிகமாக எடுத்து கிட்டதட்ட மூன்றுன றோளை ஒன்றாக சேர்த்து செவ்வக திண்மவடிவில் தட்டி புதுவகை டிஸ் ஒன்றை கண்டுபிடித்தார் , இதில என்ன புதுவகை இருக்கு ? றோள பெரிசா செய்து கிடக்கு அவ்வளவும் தானே என்று கேட்டா , அதான் இல்ல அங்கதான் நிக்கிறான் நம்மாள் . முட்டை ஒண்டை அவிச்சு பாதியா வெட்டி நடுவுக்க புதச்சு வச்சு புது ரேஸ்டோட செஞ்சான்  மிதிவெடி!!

அதென்ன மிதிவெடி ? அதுக்கும் காரணமிருக்கு 90 களில் தான் அதிகமாக மிதிவெடி , கண்ணிவெடிகள்  பயன்பாட்டிற்கு வந்தன . விடுதலைப்புலிகள் கொரில்லா தாக்குதல்களில் இருந்து மரபார்ந்த இராணுவ போர் முறைக்கு மாறத்தொடங்கினர் (சனியன் பிடிக்க ஆரம்பிச்ச காலம்) எல்லைகளை கைப்பற்றிக்கொண்டு இராணுவமும் புலிகளும் சூன்ய பிரதேசங்களை உருவாக்கினர் , ஓர் இடத்தை விட்டு நீங்கும் போது மிதி வெடிகளை ஏராளமாக புதைக்கத்தொடங்கினர் . அப்போதுதான் மிதிவெடி அதிகம் செல்வாக்கு பெற்றது இரண்டு பக்கமும் இழப்புக்களை ஏற்படுத்தியது மனித அங்கங்களை கிழித்துபோட்டது. கொடுமை என்ன எண்டா ஏராளமான சனங்கள் சொந்த காணிகளுக்குள் புதைந்து கிடந்த மிதிவெடிகளில் சிக்கி கால்களையும்  அதிகபட்சம் உயிரையும் இழந்ததுதான்.(குறிப்பா தென்மராட்சி பகுதி , முகமாலை , பளை , பகுதிகள்.)

ஆக 90 தொடக்கம்  2000 ஈறாக  மிதிவெடி அத்தனை பேமசாக இருந்தது . அந்த பேமஸ் தான் முட்டை வச்ச றோள் மிதிவெடியாக மாற்றியது.

 

அதன் பின் எல்லா சிற்றுண்டிச்சாலைகளிலும் மிதிவெடி இடம் பிடிக்க தொடங்கியது , இறச்சி , மீன்  உருளைக்கிழங்குடன்  முட்டை கட்டாயமாக்கப்பட்டு  மிதிவெடி ஆகா ஓகோ என்று சுவைக்கப்பட்டது. இண்டைக்கு பிரான்சில லாச்செப்பல் கடையில கிடைக்கிற அளவுக்கு மிதிவெடி பேமஸ் ஆகிட்டு . ஊர்ல எப்பிடியும் ஒரு கடை மிதி வெடிக்கு என்றே இஸ்பெசலா பேமசா இருக்கும்

உங்களுக்கும் மிதிவெடி சாப்பிட்ட கதையள் இருக்கும் எனக்கும் இருக்கு ,

2006 களில் இயக்கச்சியில் ஒரு கடை மிதிவெடிக்கு பேமஸ் , ஏ9 பாதை திறந்து இருக்கும் போது ரெகுலரா யாழ்ப்பாணம் போய் வாறவ அதில நிண்டு மிதிவெடி கட்டிக்கொண்டோ சாப்பிட்டு விட்டோ தான் போவார்கள் . நாங்கள் பரந்தனில் இருந்த போது ஐஸ்கீறிம் குடிக்கோணும் எண்டா  கிளிநொச்சி சந்தில இருந்த ”பாண்டியன் குளிர்கழி அகம் “ போவம் . காசு காணாது எண்டா கரடிப்போக்கு சந்தில இருந்த பைந்தமிழ் பேக்கரில நெஸ்கபே குடிச்சிட்டு வந்திடுவம் . ஆனா மிதி வெடி சாப்பிடோணும் எண்டா ஆனையிறவு வெளியில அடிக்கிற எதிர்காற்றையும் பொருட்படுத்தாமல் இயக்கச்சிக்கு சைக்கிள் மிதிப்பம். இயக்கச்சி மிதிவெடி சாப்பிட அவ்வளவு விருப்பம் . இயக்கத்தின்ர பெரிய பொறுப்பாளர் மார் எல்லாம் அங்கதான் வாடிக்கை . மிதிவெடி அப்போதும் முப்பது ரூபாதான் . ஆனா இப்ப மாதிரி இல்ல சுவையும் அளவும் நிரம்பவே அதிகம் . இப்ப மாதிரி இல்ல அப்ப என்னட்ட காசு நிறைய புழங்கும், இப்ப அப்பான்ர பொக்கற்றிலையும் , குசினிக்க அம்மாவின் கஜானாக்களான மிளகுப்பேணி  , மல்லிப்பேணி களிலையும் கொள்ளையடிப்பதில்லை. அப்போது அப்படியில்லை . ஆகவே மிதிவெடி சாப்பிட போவதற்கு வாரத்தில் ஒருநாளேனும் ஒதுக்கி விடுவோம்.

ஏ9 பாதை மூடிய பின்னரும் அந்த மிதிவெடிக்கடை இயங்கிக்கொண்டிருந்தது. இடையில்  மிதி வெடி எண்ட பேயர மாத்துவம் எண்டு ஒரு பெரிய புரட்சிய சில கடைக்காறர் தொடங்கினதா ஒரு கதை அடிப்பட்டது . மிதி வெடி எண்டுறது மிதிச்ச உடன வெடிக்காது மிதிச்சு கால எடுத்த உடன் தான் வெடிக்கும் (ஜெயம் ரவியின் தாஸ் படத்தில் மிதிவெடியில் புட்போல் விளையாடும் கட்டத்தையும் , கோ படத்தில் ஜீவா ஜம் பண்ணி யன்னலைஉடைச்சுக்கொண்டு குதிக்கிறதையும் நினைச்சு பாருங்கோ …ஸ்ஸ் சப்பா )  அப்பிடிப்பட்ட மிதிவெடியின்ர சிஸ்ரத்த மாத்தி புலிகள் “ஜொனி வெடி” என்று ஒன்றை கண்டு பிடித்தனர் . அதன் சிறப்பு என்ன என்றால்  மிதிச்ச உடன வெடிக்கும் . அத்தோட மிதிவெடி முழங்காலுக்கு கீழ தான் சிதைக்கும் ஜொனிவெடி அதுக்கும் மேல ! ஆதலால் எங்கட ஜொனி வெடியின் பேர மிதிவெடிக்கு வச்சுப்பாப்பம் எண்டு  கடைகளில் தொங்கிய போட்களில் “ஜொனிவெடி சுடச்சுட கிடைக்கும் ” என்று போட்டு பாத்திருக்கினம் , சனம் கடைப்பக்கம் போகேல்ல . திட்டம் தோத்துப்போச்சு.

மிதிவெடி சாப்பிடும் போது அப்ப எங்கட பெடியளுக்கு உள்ள போட்டியெல்லாம் நடக்கும் ஆர் கூடச்சாப்பிடுறது எண்டுறது , மற்றது மிதிவெடில முட்டை இல்லாத பக்கம் எது எண்டு கண்டு பிடிச்சு சாப்பிடுறது காரணம்  மிதிவெடி சாப்பிடுற முறையே கடைசியா முட்டைய கடிக்கிறதுதான் . வேணுமெண்டாசெக் பண்ணி பாருங்கோ . எப்படா முட்டை வரும் எண்டு ஒவ்வொரு கடியா முன்னேறி போறது அப்பிடியொரு சுவாரஸ்யம் கண்டியளோ ?

சரி பழைய கதைய நிப்பாட்டுவம் புதுக்கதைக்கு வருவம்.

 

அப்ப போலத்தான் இப்பவும் நான் மிதிவெடிப்பிரியன். இப்பவும் மிதிவெடி 30 ரூபா தான் ஆனா றோளைவிட கொஞ்சம் பெரிசு அவ்வளவும் தான் . நாண்டின் பொருளாதார வீக்கம் மிதிவெடியை சுருங்கப்பண்ணி போட்டு , அரை முட்டை கால் முட்டை ஆகிப்போச்சு , அப்ப இறைச்சி மிதிவெடி எண்டாலும்   உருளைகிழங்கு மிதி வெடி எண்டாலும் ஓரே ரேட் தான் இப்ப அப்பிடி இல்லை இறச்சி விலை கூட . சில கடையள்ள தான் யாழ்ப்பாணம் டவுனுக்க நல்லா இருக்கும் . ஒரு இஞ்சிட்டீயும் மிதிவெடியும் நல்ல களைப்போட போய் சாப்பிட்டியள் எண்டா கே .எப். சி பக்கம் போய் கொழுப்ப வாங்க நினைக்க மாட்டியள்.

அண்ட் உங்களுக்கு ஒரு சீக்கிரட் சொல்லுறன் , வெள்ளிக்கிழமையில கடைக்கு போனா ரெண்டு றோள் மட்டும் சாப்பிடுங்கோ . வெள்ளி கிழமையில மிதிவெடிக்கும் றோளுக்கும் வித்தியாசம் இருக்காது . காரணம் வெள்ளிக்கிழமையில  முட்டை வைக்க மாட்டினமாம் .ஆனா விலையென்னவோ மற்ற நாளின்ர விலைதான் . இது காப்பிரேட் கமபனிக்காறன் விளையாட்டா எல்லோ கிடக்கு .

நாங்களென்ன இளிச்ச வாயளே  ?

மிதிவெடி ஜாக்கிரதை மக்காள் !!

யதார்த்தன்

Share this Post

Leave a Reply