«

»

May 13

ஆண்டிகனி  ; அபத்தத்தின் மேடைவெளி   

13077020_1069554013101992_3463947947106335189_n

 

சிறுவயதுமுதல் கிரேக்க தொன்மங்களில் இருந்து பிறந்துவந்த வீரசாகச கதைகளை ஆர்வத்துடன் வாசித்துவந்தவன் . அந்த பழக்கம், இப்போதுவரை கிரேக்க தொன்மங்கள் மீதான ஆர்வம் குறையாமல் இருக்கின்றது. அக்கிலீசிலிருந்து ஹர்குலிஸ்வரை யான வீரர்களின் கதைகளும் , சீயூஸ் தொடக்கம் அதீனா வரையுள்ள கடவுளர்கள் பற்றிய கதைகள் , வெட்ட வெட்ட தலைமுளைக்கும் நாகங்களும்  ஜேசனின் தங்க கம்பளமும் , தீசியசின் எருமையரக்கன் என்று என்னுடைய சிறுபிராயம் முழுவது கிரேக்க தொன்மக்கதைகளால் நிரம்பியது.பின்னர் கொஞ்சம் வாசிப்புவிரிய கிரேக்கத்தின் துன்பியல் முதலான பிரதிகள் என்னை வந்தடைந்தன.

கீழைத்தேசத்தின் கதைகளை எவ்வாறு ஆயிரத்தொரு அரபுக்கதைகளும் , இந்திய புராண இதிகாசங்களும் , சீனத்து ராகன் நம்பிக்கைகளும் கட்டமைத்தனவோ அதே போல மேலைத்தேசத்தின் தொன்மக்கதைகளின் ஆரம்ப வேர்கள் கிரேக்கத்தினுடையவை . ஹோமரின் இலியட் ஒடிசி முதல் கிரேக்கத்தின் புராண இதிகாச தொன்மங்கள் ஈறாக  கிரேக்கத்தின் மிகச்சிறந்த நாடகப்பிரதிகள் வரை, மேலைத்தேசத்தின்  பண்பாட்டு உருவாக்கத்திலும் மரபின் கலை வெளிப்பாடுகளின் உருவாக்கத்திலும் அடிப்படையாக நிற்கின்றது. அத்தோடு “யவனர்கள் “ என்று அழைக்கப்பட்ட கிரேக்கர்களின் தொன்மங்கள் மற்றும்  பண்பாடு பற்றிய தகவல்களை தமிழிலக்கியங்கள் முதலான கிழைத்தேசத்தின் வரலாற்று இலக்கிய  ஆதாரங்களிலும் இனம்காட்டலாம்.

கிரேக்க தொன்ம வடிவங்கள் நாடகப்பிரதிகளாக அக்காலத்தில் செய்யப்பட்டமை நாடகப்பிரதியின் உச்ச வெளிப்பாடுகளாக இன்றும் கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக கிரேக்கத்தின்  “அவலச்சுவை நாடகங்கள் “ உலகெங்கும் பிரசித்தமானவை.

அத்தகைய கிரேக்க அவலச்சுவை நாடகங்களில் ஒன்றான புகழ் பெற்ற “அண்டிகொன்” (ஆண்டிகனி) நாடகத்தை தமிழ் பிரதியாக்கத்தில் பார்ர்க்கும் வாய்பு கிட்டியது. தமிழில் பெயர்க்கப்பட்ட கிரேக்க அவலச்சுவைப்பிரதியென்று அறிந்தபோது மகிழ்வாகவும் ஆவலாகவும் இருந்தது.

யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் மேடையேற்றப்பட்ட மேற்படி நாடகப்பிரதியை  குழந்தை ம. சண்முகலிங்கன் மொழி பெயர்த்திருந்தார். கிரேக்கத்தில் Sophocles ஆல் 441 BC எழுதப்பட்டது ஆண்டிகனி (Antigone)நாடகம் .கிரேக்க துன்பியல் நாடகங்களில் முக்கியமானதாக கொள்ளப்படுகின்றது , Sophocles பேசும் அரசியல் உணர்வு பூர்வமானதும் பல மையங்களை உடைத்து தகர்பதுமாகும் .இத்தனை வருஷங்களாகியும் அதிர்வு குறையாத ஒரு கிரேக்க இயங்கு நிலைத்தொன்மமாக இதைக்கருதுவர்.

கிரேக்க அவலச்சுவை நாடகங்கள் ஒரு காலகடத்தின் கிரேக்க வாழ்வுமுறையினை  வாசிக்க உதவும் பிரதிகளாகும் .குறிப்பாக அக்கால மேட்டுகுடி மக்களின் அரசு , தெய்வநம்பிக்கை , குடி –குடியானவர்களின் வாழ்வு என்று நாடகப்பிரதிகளை நுட்பமாக கட்டவிழ்க்கும் போது கிரேக்க நாகரிகத்தின் குறித்த காலத்தின் பண்பாட்டு அசைவின் நிகழ்கிளர்வுகளாக  விளங்கிக்கொள்ளலாம்.அத்தோடு எல்லா சிறந்த கலைகளைப்போலவும் தற்காலத்துடனும் பொருத்திவாசிக்கலாம்.

ஆண்டிகனி நாடகம் “ஆண்டிகனி” என்ற அரசகுலப்பெண்ணை பிரதான பாத்திரமாக கொண்டது , நாடகத்தின் சாற்றுப்பிழிவாக உள்ள செய்தியை  தாங்கியோடும் அழகியலமைப்பான அவலத்தை அல்லது துயரின் அசைவு மையத்தை தன்மேல் தாங்கி நிற்பவளாக பிரதியாளர்  ஆண்டிக்கனியை உருவாக்கியிருப்பார்.  தெய்வீக உரிமைக்கோட்பாடும்  ஆண்மையவாத மற்றும் அரச மைய சிந்தனையும் மோதுமிடத்தில் இரண்டுபக்கத்தினையும் தாங்கி நிற்கும் உணர்ச்சி வெடிக்கும் பாத்திரமாக ஆண்டிகனியை செய்திருக்கிறார் ஆசிரியர்.

ஒரே அரசகுலத்தினுள் ஏற்படும் தயாதிச்சண்டையும் , அரச அதிகாரச்செருக்கு , தெய்வ நிந்தனை என்று திசைகளை உருவாக்குகின்றது பிரதி , நம்பிக்கையின் பக்கம் அல்லது தெய்வத்தின்பெயரால் கட்டமையும் மரபார்ந்த நடைமுறையின் பக்கம் நிற்கும் ஆண்டிக்கனியும் , இந்த அதிகார வட்டத்தின் வெளியே நின்று  இயங்கும் பொதுமக்களும் என்று ஆண்டிகனி நாடகத்தை தற்கால நவீன பிரதிவாசிப்பு முறைக்குள் புகுத்தும் போது வெவ்வேறுவாசல்களை திறக்கவல்லதாய் எனக்கு பட்டது. குறிப்பாக பார்வையாளனின் அல்லது வாசகனின் சிந்தனை உழைப்பை கோரவும் தூண்டவும் பிரதியில் ஏராளமிடங்கள் உள்ளன.

13043587_1319125701438125_8143548134571640859_n

ஆனால் இவை அத்தனையும் கைலாசபதி கலையரங்கில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தைப்பார்த்தவுடன் தொன்றியவையல்ல . நாடகத்தை பார்த்துவிட்டு இவைகளை புரிந்து கொள்ள இதேநாடகத்தை வெவ்வேறு இடத்தில் மேடையேற்றியவர்களின் பிற பிரதிகளையும் நான் வாசிக்க வேண்டியும் படிக்க வேண்டியுமிருந்தது. அதற்கான தொடக்கத்தை ஏற்படுத்தியதில் அதற்கு பங்குண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

முக்கிய நாடக்கப்பிரதியொன்றை மொழிபெயர்த்த சண்முகலிங்கனின் மூளை உழைப்பை மேற்படி நாடக ஆற்றுகை வீணடித்துவிட்டது என்றே கூறுவேன். பிரதியின் ஆற்றுகை ஏற்பாடுகளின் போது எடுக்கப்பட்ட படங்களைப்பார் த்த போது பிரதியை சண்முகலிங்கனே இயக்குகின்றார் என்று ஆவலாயிருந்தேன். ஆனால் பெயர்பும் வழிகாட்டலும் மட்டுமே அவரென்று பின்னர் அறிந்துகொண்டேன்.. சண்முகலிங்கன் என்னும் ஆழுமையை ஒதுக்கி வைத்து விட்டு பிரதிக்குள் இறங்கி வாசிக்கும் போது பிரதி கருத்தியல் ரீதியாகவும் அழகியல் ரீதியாகவும் , ஆற்றுகை ரீதியாகவும் இந்நாடகப்பிரதி பிரதி ஏராளமான இடைவெளிகளை யும் அபத்தங்களையும் உருவக்குவதை அவதானிக்க முடிந்தது.

நாடகத்தில் நடித்தவர்களும் நாடகத்தை இயக்கியவர்களும் எனக்குத்தெரிந்து நன்கு பயிற்றப்பட்டவர்கள் , அதுவும் இலங்கை நாடகத்துறையின் ஜாம்பவான்களின் சிஷ்யர்கள். (சிலர் இல்லாமல் இருக்கலாம்) அவர்களுக்கு நன்கு நாடகப்பிரதி ஆற்றுகை தொடர்பான , பயிற்சியும் பரிச்சமும் இருந்தது . ஆனால் நான் அவதானித்தவரை ஒரு சிலரைத்தவிர மிகுதிப்பெயரின் நடிப்பு நாடகத்தின் உணர்சார் அழகியலை குலைத்து மேடையில்  சிதறியெறிந்திருக்கிறது , குறிப்பாக ஆண்டிகனி பாத்திரமேற்ற பெண்ணின் நடிப்பு துன்பத்தையும் , ஆவேசத்தையும் அதுசார் உப உணர்வுகளைகளும் விடுத்து அபத்தம் மிக்க சோம்பல் தனத்துடன் இருந்ததென்றே கூறுவேன். நாடகமொத்தத்தையும் கருத்தியலோடு தாங்கும் பிரதான பாத்திரம்  தொடக்கி வைத்த ஏமாற்றம் இறுதிவரை தொடர்ந்தது துரதிஸ்ரம்.அதைவிட உச்சமாக சில இடங்களில் கதை சொல்லிகளாகவும் , சில இடங்களில் அவதானிகளாகவும் , சில இடங்களில் தேசத்து பிரஜைகளாகவும்  இயங்கும் நாடகத்தில் அதிகம் மேடையின் வெளிகளை நீண்ட நேரம் நிரப்பிய மூங்கில் தண்டுகளை ஏந்திய குழு காட்சிகளை நகர்த்துவதற்கு பதிலாக செயற்கைத்தனத்தை மெருகூட்டும் வேலைகளையே செய்தபடியிருந்தது , அரசனாக நடித்தவரின் முகமும் உடலும் அவலப்பிரதியை  ஒருவித மனத்தொய்வுக்கு இட்டுச்சென்றது .  அந்த அரசன் அதிகாரத்தின் போதையின் உச்சத்தில் இருப்பவனாகவோ மேன்மை தங்கியதாகச்சொல்லப்படும் தெய்வ நம்பிக்கையை எதிர்த்து நிற்பவனாகவோ இல்லை , அங்கே அரசன் வெறும் அரசன் அவ்வளவே. காவலன் மற்றும் ஒரிரு பாத்திரங்களைத்தவிர அங்கே நடிப்பின் அழகியலை பரிமாற யாரும் இருக்கவில்லை.

இதற்கு என்ன காரணம் என்பதை யோசித்துப்பார்த்தால் நாடகத்தை இயக்குயவர்களுக்கும் ஆற்றுகை செய்தவர்களுக்கும் பிரதிதொடர்பிலும் பிரதி பேசும் அரசியல் தொடர்பிலும் உள்ள பின் புல வாசிப்பு இன்மையே என்று சொல்லுவேன். கிரேக்கத்தின் தொன்மங்களில் உள்ள பண்பாட்டு வரலாறு , சமூக வரலாறு  , கடவுள் நம்பிக்கை , அவர்களின் ஆட்சிமுறை , மற்றும் மனித நிலைமைகள் என்பன பற்றிய சமூக  வரலாற்று பின் புலத்தினுடைய   மேலோட்டமான வாசிப்பு என்றாலும் ஆற்றுபவர்களுக்கும் இயக்குபவர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டு. வெறும் பிரதியை எழுதியவரைப்பற்றியும் , ஆண்டு அடிப்படையாக நாடகமொன்று இங்கே இப்போது உருவாக்கப்பட்டது என்றும் அறிந்துகொள்வது மட்டும்  நல்ல நாடகப்பிரதியாளனுக்கு உகந்ததல்ல. அது அழகியல் உருவாக்கதையும் சரி கருத்துருவாக்கத்தையும் சரி சிதைத்துவிடும். குறிப்பக மொழிபெயர்ப்பு பிரதிகள் பெயர்பு மொழிக்கு வரும் போது இத்தகைய ஆபத்துக்களை சந்திக்கின்றன. இதுவே ஆண்டிகனிக்கும் நிகழ்ந்திருக்கிறது.

உதாரணமாக ஆண்டிகனியை எடுத்துக்கொள்வோம் , கிரேக்க நாகரிகத்தில் நிலவிய ஆண் முதன்மை வாதத்தையும் , பெண்ணின் சுதந்திரம் பெண்ணி|ற்கு கொடுக்கப்படும் இடம், ஒரு அரச பரம்பரைக்காரி தெய்வம் உருவாக்கியதாக நம்பப்படும் அரச அதிகாரத்தை தெய்வத்தின் பெயரால் எதிர்த்தல் என்பது எத்தனை பாரதூரமானது என்பதை அறிந்துகொள்ளும் போதுதான்  உணர்ச்சிச்செறிவும் , உரமும் மிக்க ஆண்டிகனியாக அவள் உள உடல் ரீதியாக மேடையில் தோன்ற முடியும் .ஆனால் எந்த பாத்திரத்திடமும் உணர்வின் அழகியல் ,நடிப்பில் கைகூடிவருவது அரிதாகவே தெரிந்தது.

அடுத்ததாக நாடகத்தின்  மேடை வடிவமைப்பு அரங்கத்தில் சென்று இருந்ததும் ஆண்டிக்கனி பற்றிய கையேட்டில் கிரேக்க நாடகம் என்றிருந்ததும் மேடையைப்பார்த்தேன் , அங்கே நின்றிருந்த யாழ்ப்பாணத்து தூண்களே என்னை சோர்வுறச்செய்துவிட்டன.  அடித்த பெய்ண்டில் நான்கு கோட்டை போட்டு அவற்றை கிரேக்க தூண்களாக மாற்றிவிடுவதில் என்ன கஸ்ரம்? இப்படி சின்ன சின்ன அதுவும் இலகுவான  மேடை -வெளிக்கையாள்கைதான் நாடகப்பிரதியோடு பார்வையாளனை ஒன்றச்செய்யும். இது எத்துனை அடிப்படையானது ?

அடுத்து இசை  நாடகத்தின் உச்ச பட்ச அபத்தமாக இருந்தது வழங்கப்பட்ட பின்னணி இசை .

என் சிறுபிராயம் போராட்ட இயக்கங்கள் பாடசாலைகளிலும்  தெருவிலும்  ஆற்றிய தெருவழிநாடகங்களை அதிகம் பார்த்து வளர்ந்தது . நடித்தவர்களின்முகம் (குட்டிக்கண்ணனை தவிர) மறந்து போனாலும் அக்காலத்தில் அவர்கள் போட்ட இசை இன்றும் நெஞ்சில் பசுமையாய் நிற்கின்றது , அரங்கில் கேட்ட இரச்சலின் போது நான் தெருவழிநாடகங்களின் இசையை நினைத்துகொண்டு என்னை அசுவாசப்படுத்திக்க்கொண்டேன்.

மேலும் நாடகத்தில் கிரேக்க கடவுளர்களின் பெயர்கள் உச்சரிக்கப்பட்டபோது  அவர்கள் கோபம்கொண்டு போசிடன் கையில் இருக்கும் திரி சூலத்தாலும் , ஷீயுஸ் மின்னலாலும் உங்களைத்தாக்கி விடுவார்களோ என்று பயந்தேன். ஹோலிவூட் படம் பார்க்கும் சிறுவர்களை கேட்டுப்பாருங்கள் அத்தனை கிரேக்க கடவுளர்களின் பெயர்களையும் சரியாக உச்சரிப்பர் .

அரங்கு என்னும் வெளியை கையாளும் யுக்தியே நாடகஅழகியலின் மையச்சரடு , நாடகம் நேரத்தை அதிகம் விழுங்கும் போதும் பார்வையாளனின் கண்கள் ஆர்வமாக மேடையின் வெளிகளில் அலைய வேண்டும் ஒவ்வொரு பாத்திரமும் ,கொடுக்கப்படும் ஒளியின் முகாமையில் லயித்து மேடைக்குள் உறைந்து விட வேண்டும் அதே கைலாசபதி அரங்கில் அதே விளக்குகளை பயன்படுத்தி சிலநாட்களுக்கு முன்னர் ஆற்றப்பட்ட ஒரங்க நாடகமான “மூக்குடன் மட்டும்” என்ற ஜேர்மனிய நாடகப்பிரதிக்கு கையாண்ட வெளிச்ச முகாமையை அப்போது ஆண்டிக்கனியுடன் ஒப்பிட்டுப்பார்த்தேன். தவிர வெளிநாடுகளில் ஆற்றப்பட்ட வேறு ஆண்டிக்கனி நாடகப்பிரதியிகளில்  துயரின் இன்னோர் குறியீடான இருளை மேடையில் கையாண்டு இருக்கின்ற விதங்களை வீடியோக்களில் பார்த்து சிலிர்த்துப்போனேன் . நமக்கு அழகியல் உணர்வு போதாதா அல்லது தொழிநுட்ப அறிவு போதாதா ? என்னைக்கேட்டால்  இதைச்சோம்பேறித்தனம் என்று எரிச்சலோடு சொல்வேன்.

13082506_1069554169768643_262227507974377479_n

அத்தோடு கிரேக்கர் போலச்செய்தலின் பொருட்டு  அணிந்திருந்த ஆடைகள் சிரிப்பை வரவழைத்தன , அதுவும் ஆண்டிக்கனி , அவள் சகோதரி முதலானவர்கள் அணிந்திருந்த நீலம் சிவப்பு நிற ஆடைகளின் மீது  மோசமாக பாய்ச்சப்பட்ட ஒளி பட்டு ஏதோ ஒரு பெரிய நெருடலை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் சிவப்புச்சாயம் பூசப்பட்ட உதடுகளில் அவள் சோகத்தை நிறுத்த நிறுத்த அது சறுக்கி வீழ்ந்துகொண்டிருந்தது .ஒப்பனை அத்துனை பிறழ்வாயிருந்தது.

காவலன் இளவரசன் முதலான பாத்திரங்கள் தங்களுடை பாத்திர உருவாக்க மனநிலை உடல் நிலைஎன்பவற்றின் பொருட்டு உழைத்துள்ளன. வசனங்களில் இருக்கும்  நேரடியான தும் கவித்துவம் மற்றும் ததுவவ விசாரணைசெய்யும் தன்மை மரபுவழி ப்பிரதியை மீண்டும் ஞாபகமூட்டினாலும் அது எக்காலத்திலும் ஒலிக்க கூடிய மனித சமூகத்தின் குரல்களாக தொனித்தமை இரசிக்க கூடியதாக இருந்தது.

மேலும் வசனங்களை மொழிபெயர்க்கும் போது சண்முகலிங்கன் மரபுத்தமிழிற்கும் பேச்சுத்தமிழிற்கும் இடையில் ஊசாடும் உணர்வு மொழியை கைப்பற்றுவதில் அங்காங்கே சறுக்குகின்றார் ,அது துயரின் அழகை போலியாக்கிவிடுவதாகவே எனக்குப்பட்டது , பிரபலமான பிரதி , முக்கியமான பிரதியென்பதால் அல்ல ,எனக்குத்தெரிந்து அது பேசுகின்ற அரசியலும் அதுன் அதிகாரத்தை மையமிழக்கச்செயகின்ற கருத்தியலை கொண்டு இருந்ததாலேயே குழந்தை ம.சண்முகலிங்கன் ஆண்டிகனியை மொழியாக்கம் செய்ய முற்பட்டிருக்கிறார் . குறிப்பாக நவீன அதிகார உருவாக்கத்தை , ஆண்மைய வாதத்தை  , தெய்வ –மூட -நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்கி கொட்டிக்கவிழ்ப்பதற்கு மேற்படி நாடகப்பிரதியை நன்கு பயன்படுத்தக்கூடிய சாத்தியங்களை நானுணர்கிறேன்.

13043506_1319124851438210_6526714639614001526_n

குழந்தை ம. சண்முகலிங்கன்

 

இன்று முதலாளித்துவம் , தனி மையவாதம் என்பன கிரேக்க தொன்மங்களில் இருந்து வீரசாகச கதைகளை உருவி திரைப்படம் , கதையாக்கம் முதலியவற்றைப்படைக்கின்றன . ஆனால் அதிகாரத்தைக்கேள்வி கேட்கும் அண்மையத்தை உடைக்க முற்படும் ஆண்டிகனி போன்ற புகழ்பூத்த கிரேக்க துன்பியல் பிரதிகளை தொட அவை தயக்கத்தோடு இருக்கின்றன. ஆக இது போன்ற பிரதிகளை தமிழிற்கு எடுத்துவரலும் அதை ஆற்றுகை செய்தலும் பாராட்டப்படவேண்டியது .

நிற்க

ஆற்றுகைகள் குறைவாக உள்ள இடத்தில் அவர்கள் ஆற்றுகை செய்ய முற்பட்டுள்ளார்கள் , ஏன் அதனை இத்தனை கடுமையாக விமர்சனத்துக்குள் தோய்த்து எடுக்க வேண்டுமா ? என்று கேட்கலாம் , நான் அவர்களுடைய செயலுக்காக அவர்களின் ஆர்வத்தை முத்தமிடுகிறேன் , உச்சிகுளிர்கிறேன் . ஆனால் திறமைகளிருந்தும் , வளங்களிருந்தும் , சுதந்திரமிருந்தும் அவற்றை சரியாக கையாளமல் இருந்த்தலின் அபத்தத்தை நான் கண்டிக்கவே விரும்புகிறேன், கலையை மலினப்படுத்துவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.

ஆண்டிகனி போன்ற நாடக முயற்சிகளையும் அதை பார்க்க திரண்ட பார்வையாளர்களையும்(அரங்கம் நிறைந்து இருந்தது)  பார்க்கும் போது இன்னும் நம்பிக்கை பிறக்கிறது . சண்முகலிங்கன் முதலான கலைஞர்களின் முயற்சியும் செயலுமே இன்னும் நமது இருப்பை  , பண்பாட்டை இருக்கவும் அசைவுறவும் செய்கின்றது .

கலையுருவாக்க சிந்தனைமீதும் செயலின் மீதும் முத்தமிடுகின்றேன் , அபத்தங்களை களையச்சொல்லியபடி.

-யதார்த்தன்

Leave a Reply