yathaadmin/ April 29, 2016/ கட்டுரை/ 0 comments

IMG_5977

அன்புள்ள கிரிஷாந்,

//குறித்த சொல்லாடல்களான ” தாழ்த்தப்பட்ட”, “ஒடுக்கப்பட்ட”,”தலித்” போன்றவற்றின் மூலம் தாம் அழைக்கப்படுவதை மக்கள் விரும்புவதாகத் தெரியவில்லை. அது அவர்களுக்குள் தாழ்வுணர்ச்சியைக் கொடுக்கும் என்று நான் கருதுகிறேன். குறித்த சொல்லாடல்களை தமிழகம் ஓர் “அரசியல் சொல்லாக” கையாள்கிறது ஆகவே அதனை உச்சரிக்கும் தேவை அதிகமாக உள்ளது.//

-கிரிஷாந் -(Kiri Shanth)

தர்முபிரசாத்தின் சாதியம் பற்றிய உரையாடலின் தொடக்கம் , அதன்பின்னரான நண்பர்களின் கருத்தாடல்கள் ஏற்படுத்திய புதிய உரையாடல் வெளியில் மேலே மேற்கோள் காட்டபட்டிருக்கும் நீங்கள் குறிப்பிட்ட சமூகத்தின் ஒரு சாரார் மீது கையாளப்படும் அத்தகைய சொல்லாடால்கள் மீதான குறிப்பின் விழுதுகளை பிடித்தேறி சாதியம் பற்றிய அல்லது அனைத்து ஒடுக்குதல்கள் மீதும் குறியவிழ்த்து செல்ல வேண்டி மொழியின் சொல்லாடல் அபாயத்தை வியாக்கியானிக்க எண்ணுகிறேன் .

(இதனை ஒரு தொடக்கமாகக் கொள்ளலாம்)

நீங்கள் குறிப்பிடும் , “தலித் ” “தாழ்த்தப்பட்டவர்கள்” “ஒடுக்கப்பட்டவர்கள் ” முதலான சொல்லாடல்கள் ஏற்படுத்தும் வன்முறை என்பது முற்றிலும் நிதர்சனமான ஒன்று இதற்கு முன்னரான உரையாடலில் அவற்றை மீண்டும் மீண்டும் நாம் பாவிக்க நேர்ந்ததும் இப்போது பாவிப்பது கூட வன்முறையாகவே கொள்ளுதல் பொருந்தும் எனினும் குறித்த சமூகத்தின் ஒடுக்குதல்களை எவ் வார்தைகளின் ஊடாக முன்வைத்தல் என்பது கண்டடைய வேண்டிய ஒன்றாகவே தொக்கி நிற்கின்றது.

பொதுவாக நம்முடைய மரபு இலக்கண அமைப்புசார்ந்த மொழியாகட்டும் , பேச்சு மொழியாகட்டும் ஒரு வித அதிகார செருக்கு கொண்ட ஆண்தன்மையினதான பிரயோகங்களைக்கொண்டது
(கடந்துவந்த அல்லது இன்னும் நிகழும் தந்தைவழிச்சமூக அமைப்பின் பெயரால் ) , அதுவும் யாழ்ப்பாணத்தமிழ் சற்று புடைப்பான மொழியதிகாரம் கொண்ட ஒன்று என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.

மொழி எத்துனை நல்லவிடயங்களை , புதிய சாத்திய பாடுகளை உருவாக்குகின்றதோ அதே அளவிற்கு ஆபத்தான அதிகார பிற்போக்கு மனநிலைகளையும் காவுகின்றது. அதிலும் நாம் இப்போது உரையாடிக்கொண்டிருக்கும் சாதியம் , ஒடுக்குதல் முதலான ஆபத்துக்களை மொழி காவிச்செல்லும் வகை பாரதூரமானது.

மொழியின் அபாயங்களை நம்முடைய சமூகத்தின் கடந்த கால நிகழ்கால அதிகார புலம் நம் சுய பிரக்ஞை இலகுவில் இனம் கண்டுவிடாதபடி மொழிக்குள் இடைச்சொருகிவிட்டுள்ளது. ஒடுக்குதல்களுக்கு எதிராக கிளர்ந்தெளும் சிந்தனையும் செயலும் மொழியினது இத்தகைய ஆபத்துக்களையும் இனம்காணுதல் அவசியமாகின்றது.

உதாரணமாக யாழ்ப்பாணத்தில் 60 களிலும் அதன் பின்னரும் நிலவிய , நிலவும் , சாதிய ஒடுக்குதல்களின் அமைப்புகளை இனம்காணும் போது மொழியில் அதன் இடையோட்டத்தை பல இடங்களில் கவனிக்க தவறுகின்றோம்.

ஒரு சின்ன உதாரணம்

60 களிலும் , பிற்பாடும் குறித்த ஒடுக்கு முறையால் அல்லல் உற்ற மக்களின் பெயர்களை அவதானிக்கும் போது அப்பெயர்களை மரியாதை விகுதிகளை பயன்படுத்த அடக்கும் வர்க்கம் அனுமதிக்காது இருந்தது .
உதாரணமாக

”செல்லையர்” என்று ஒருவருக்கு “அர்” விகுதியுடன்
(அர் விகுதி மரியாதைக்குரிய விகுதியாக மொழியியல் குறிப்பிடுகின்றது – பேராசிரியர் சுசீந்திர ராஜா – யாழ்ப்பாணத்தமிழ்)
பெயர் வைத்தால் அடக்கும் சமூகம் அதனை எதிர்த்துள்ளது , அது “அர்” விகுதியை தவிர்த்து குறித்த நபரை “அன்” விகுதி யெனும் மரியாதையற்ற பால் விகுதியை இணைத்து

“செல்லையன்”
என்றே அழைத்தது .

இப்படியான அபாயங்களை எல்லா மொழியிலும் அதிகார வர்க்கம் உருவாக்கியுள்ளது ஆங்கிலத்தில் நாம் “sir” என்று அழைப்பதன் வேர் பழைய நிலமானிய சமூகத்தில் நிலவிய அடிமை முறை – முதலாளித்துவத்தால் அடிமைகள் தங்கள் இடத்தை அடிக்கடி ஞாபகம் கொள்ள வேண்டும் என்பதற்காக “Slave I Remember ” என்பதன் சுருக்கமாக பயன் படுத்தப்பட்டது , அது கூராகி இன்று நம்மை அறியாமலே அதிகாரத்தின் அடிமைச்சொல் என்ற பிரக்ஞை இன்றி இன்று பயன் படுத்துகின்றோம்.

இதனைப்போலத்தான் தமிழில் மாற்றுப்பாலினத்தவர்கள் தொடர்பான விழிப்புணர்வுகள் வளராத காலத்தில் ஏன் இப்போதும் கூட , அவர்களை “அலி” “அரவாணி ” “ஒம்பது” என்று எல்லாம் அழைக்கிறோம். ஆனால் இவை குறித்த சமூகத்தை மிக மோசமாக பாதிக்க கூடிய வன்முறைச்சொற்கள் என்ற விழிப்பு நம்மிடம் இல்லை .(நன்றி- ஷோபா சக்தி – முப்பது நிறச்சொல் )

நம்முடைய சமய அமைப்புக்கள் , பண்பாட்டு அமைப்புக்கள் , அதிகார வர்க்கம் முதலானவை எல்லா துறைகளிலும் , செயல்வடிவங்களிலும் அடக்குதலை மேற்கொள்வதற்கான தந்திரமான வலைப்பின்னல்களை ஏற்படுத்தியதைப்போலவே மொழிக்குள்ளும் வன்முறையையும் அதிகாரத் தொனியையும் அடக்குமுறையையும் தந்திரமாக மறைத்து வைத்திருக்க காணலாம் .

எனவே நீங்கள் குறிப்பிட்டத்தை போல , சொல்லாடல் களை கையாளும் போது அதன் பிரயோக தாக்கம் , அதிகாரத்தொனி , நேரடி மறைமுக விளைவுகள் மற்றும் அது நிகழ்த்திவிடச்சாத்தியமான வன்முறைச் சாத்தியங்களை உணரும் வகையில் எழுத்து செயற்பாட்டிலும் , பேச்சாடல்களிலும் விழித்திருப்பதற்கான செயல் வடிவங்களை நாம் கண்டடைய வேண்டும் . இதுவும் ஒடுக்குதல்களுக்கு எதிராக உருவாகும் ஆரோக்கிய சமூகத்தை நோக்கிய பயணத்தை பலத்துடன் உந்தும்.

மேலும் இது பற்றிய உரையாடல்களை விரித்துச்செல்வோம்.

அன்புடன்
-யதார்த்தன்-

Share this Post

Leave a Reply