yathaadmin/ April 26, 2016/ கட்டுரை/ 0 comments

12924607_1159713517374644_1956457120311536448_n

// தலித் – தலித்தியம் குறித்து அதிகமும் புலம்பெயர் செயற்பாட்ட ள ர்களே செயர்படுகிறார்கள் போல் இருக்கிறது. உண்மையில் நீங்கள் எப்படி அதனை புரிந்து கொள்கிறீர்கள்? அங்கிருந்து அது குறித்த பதிவுகள் வருவதில்லை என்பதில் கேட்கிறேன்//

-தர்மு பிரசாத் -(Pirasath Dharmu)

 

அன்புள்ள தர்மு பிரசாத் ,

ஈழத்தினுடைய முரண்பாட்டு அல்லது பிரச்சினைகளைக் கிளர்த்துகின்ற சமூக அமைப்பினை பின்னோக்கி தள்ளுகின்ற முக்கிய பிரச்சினையாக சாதிய அல்லது தலித்திய அடக்கு முறைகள் காணப்படுவதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் . நீங்கள் சொல்வது போல் ஈழத்து பரப்பின் சாதிய அடக்குமுறைகளைப்பற்றி , சுரண்டல்கள் பற்றி சாதியம் போருக்கு பின்னர் எத்தகைய மாற்றங்களுடன் அதிகாரப்பரப்பை கைப்பற்றவும் அதைக்கொண்டு சமூக முன்காவுகையை தடுத்து இலங்கையின் பிரதான முரண்பாடாக இருக்கும் இனப்பிரச்சினையை இன்னோர் பரிமாணத்தில் இன்னும் விகாரமாகச்செய்கின்றது என்பதனை நாங்கள் நன்கு உணர்தே இருக்கிறோம் . ஒரு உறைபனிக்கால ஆற்றினைப்போல் சம பனித்தரைக்கு கீழே சாதிய ஆறு ஆவேசமாக ஓடுவதை மறுப்பதற்கில்லை.

நீங்கள் குறிப்பிட்டதைப்போல் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் அதிகமாக தலித்தியம் பேசுவதை நானும் அவதானித்தேன் , அதாவது தாய் நிலத்தை காட்டிலும் புல நிலம் தலித்திய உரையாடல்களை அதிகம் கைக்கொள்கின்றது. இதற்கு என்ன காரணம் மிக இலகுவான ஒன்று .

புலம்பெயர் நிலத்தின் பெரும்பான்மையான செயற்பாட்டாளர்கள் இலங்கையின் பிரதான முரண்பாடுகளை அறிந்த அளவில் , அல்லது நீண்டகாலமாக உரையாடப்படும் பிரச்சினைகளை அறிந்த அளவில் 2009 க்கு பின்னர் இலங்கையின் உருவான அல்லது கூர்ப்படைந்த உப முரண்பாடுகளை விளங்கிக்கொள்ளவில்லை அல்லது நிலமும் சதையுமாக அவற்றை உணர்ந்து கொள்ள வில்லை. வேண்டுமானால் நானறிந்த அளவில் கண்டுகொண்ட சமூகத்தை செல்லரித்துகொண்டு இருக்கும் உப முரண்களை பற்றி சிறிய அறிமுகத்தை வழங்கலாம் என்று நினைக்கிறேன். இது பெரும்பான்மை வடக்கு சூழலை உதாரணமாகக்கொண்டது.

01.
நுண்கடன்கள் , வட்டி கடன்கள் மற்றும் குறித்த வகுப்புக்கு மட்டும் திரளும் மிகை புலம்பெயர் பணம்.

யாழ்ப்பாணத்தில் கடந்த ஐந்து வருடங்களில் வங்கிகளை விட தனியார் முதலீட்டு கொம்பனிகள் ஏராளம் திறக்கப்பட்டுள்ளன. கிராமம் கிராமமாக கிழமை , மாத தவணைகளில் இலகு , நுண்கடன்கள் வழங்கப்பட்டு மக்கள் அறியாமல் அவர்களின் உழைப்பும் சேமிப்பும் சுரண்டப்படுகின்றது .
தவிர யாழ்ப்பாணத்தில் குறித்த ஒரு சாராரிடம் திரழும் பணம் மிக மோசமான வட்டிக்கு விடப்படுகின்றது , நிலங்கள் , நகைகள் , சொத்துடைமை எல்லாம் கரைந்து கடன் வாங்கி கடன் செலுத்தும் நிலை மிக வேகமாக அதிகரித்துள்ளது , சமீபத்தில் பல்கலைகழக இத்துறை பேராசிரியகளுடன் உரையாடிய போது யாழ்ப்பாணத்தின் பொருளியல் இருப்பு எத்தகைய அபாயத்தையும் சமனின்மையையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை கேட்டு தலை சுற்றிப்போனேன். தேவைப்பட்டால் இது தொடர்பில் அவர்கள் எழுதிய கட்டுரைகளை உங்களுக்கு அனுப்ப முயற்சிக்கிறேன்.

உச்ச பட்சமாக கடன் தற்கொலை வரை கொண்டு போகின்றது , நியாயமற்ற நெருப்பு , மீற்றர் வட்டிகள் ஏழை எளியவர்களை சுரண்டித்தள்ளுகின்றது . குறிப்பாக இப்பணம் புலம்பெயர் தேசத்தில் இருந்து வந்ததே அதிகம் . சொன்னால் நம்ப மாட்டீர்கள் புலம்பெயர் தேசத்தில் இருப்பவர்களே இங்கே வட்டிக்கு விடுகின்றனர்.

02
மரபுரிமைகள் சார்ந்த அச்சுறுத்தல்

சமீபத்தில் எங்கள் பரப்பில் உரையாடலுக்கும் செயற்பாட்டுக்கும் எடுத்துக்கொள்ளப்பட்ட பரப்பு இது . சமூக இருப்பின் மரபுச்சின்னங்கள் திட்டமிட்டும் , விழிப்பின்மையாலும் அழிக்கப்பட்டு , அலுமினிடம் பிட்டிங்காகவும் , பூச்சு சுவராகவும் மாறுகின்றது . புதிய சித்தார்த்தர்கள் மரங்களை தேடி வந்து அமர்ந்துகொண்டு அச்சுறுத்துகின்றார்கள் , மக்களின் இருப்பை தெளிவாக , திட்டமிட்டு அச்சுறுத்தும் இது பாரதூரமான முரண்பாடு. இது பற்றி புலம்பெயர் சூழல் எவ்வாறான உரையாடல்களைக் கொண்டிருக்கின்றது என்பது கேள்வியே ?

03
ஊடகங்கள்

பிரதான முரண்பாடுகளும் ஏனைய உப முரண்பாடுகளும் நடப்பதற்கு இலங்கையின் ஊடகங்கள் சரிஅ ரை பங்கு பொறுப்பினை ஏற்கவேண்டும் , லட்ட்சம் மக்கள் இறந்ததற்கும் , இறந்து கொண்டிருப்பதற்கும் , உரிமைகள் தொலைந்து போவதற்கும் ஊடகங்களே முக்கிய காரணம் , ஏற்கனவே இருக்கும் மோசமான ஊடகங்கள் தவிர புலம்பெயர் தேசத்தவர் தங்கள் உள் அரசியலின் பொருட்டு தாயகத்தில் நிறுவும் ஊடகங்கள் ஆபாச , வன்முறை தளங்களாகவும் பதிப்புக்களாகவும் இயங்கு கின்றன.

புலம்பெயர் பரப்பு மாற்று ஊடக அமைப்புகளை பற்றி கடைசியாய் எப்போது உரையாடியது ?

04.

பாலியல் சுரண்டல் / பாலியல் விழிப்புணர்வின்மை

தாயக சூழலில் கடைசியாக வித்தியாவிற்காக குரல் உயர்ந்ததோடு சரி. ஆனால் தினம் தினம் அலுவலகங்களிலும் , பஸ்களிலும் , தொலை பேசிகளிலும் பாலியல் ஒரு வன்முறையாக மாறி இலங்கையை ஆட்டிப்படைக்கின்றது , எந்த புத்திஜீவிகளும் அதைப்பற்றி வாய் திறப்பதில்லை , சைவ மாநாடு நடத்தவும் வேள்வி முதலான நம்பிக்கைகளை சாய்த்து முதலாளித்துவ மேலைதேச , இந்திய இந்துத்துவ அடிப்படை வாதங்களை நிறுவும் முயற்சியில் எல்லோரும் இறங்கி விட்டனர் , பாடசாலை கல்வி பாலியல் கல்வி எல்லாம் மிக மோசமான ஆசிய மனநிலைக்குள் சென்றபடியிருக்கின்றது .

இது பற்றி எப்போது உரையாடுவது ?செயற்படுவது ?

05.

கொண்டாட்டம் வன்முறையாதல்

கடைசியாக நீங்கள் பிரதான முரண்பாட்டின் பொருட்டு ஏற்பட்ட அரசியல் கொலைகள் , படுகொலைகள் , துரோகங்கள் , துப்பாக்கிகள் , கத்திகளைப்பார்த்திருப்பீர்கள் .
சினிமா பாணியில் மோட்டர் சைக்கிளிற்கும் வாள்கள் உறங்கும் , சட்டென விழித்து வெட்டும் உங்களுடைய தாய் தேசத்தை கவனித்து இருக்கின்றீர்களா ?

கொண்டாட்டங்களும் ஒன்று கூடல்களுன் இன்ருவன்முறையின்றி முடிவுறுவதில்லை .

வாள்கலாசாரத்தின் பின்னணி வேர்களை பிடித்துப்போனால் நீங்கள் உங்கள் சொந்தங்களுக்கு அனுப்பும் பணமும் குற்றவாளி கூண்டில் நிற்பதை ,அதில் நீங்களும் பங்குதாரர் என்பதையும் நீங்கள் அறிவீர்களா ?

06
மோசமான பல்கலைக்கழகம்

ஒரு காலத்தில் தமிழ்ப்பரப்பை அரசியலிலும் இலக்கியத்திலும் பொருளாதாரத்திலும் உருவாக்கிய பலகலைக்கழகம் , இன்று பகிடி வதைகளாலும் மோசமான விரிவுரையாளர்களாலும் வன்முறையாலும் சீரழிந்து கிடப்பதை நீங்கள் அறிந்திருக்க கூடும் . இது பற்றி நீங்கள் உரையாடியும் இருக்கிறீர்கள் . ஆனால் அது வெறும் பெஸ்புக் உரையாடலாக அமிழ்ந்து போகும் ரெண்ட் கலாசாரமாகமட்டும் கடந்து போய் விட்டது.

இப்படியாக ஏராளம் இருக்கின்றது , வேள்விகள் , மத்தச்சடங்குகள் , மாட்டுச்சவாரிகள் , மத இன நிந்த்னைகள் வளர்ந்து செல்கின்றது , குடும்ப உறவுகள் நிலையற்று போகின்றன. விவாகரத்துகள் சடுதியாக அதிகரித்து விட்டன. மாற்று பாலினத்தவர் , முன்னாள் போராளிகள் , இவர்களைப்பற்றி நாம் எந்த வகையான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் .

நிற்க

இந்த இடத்தில் தான் நாங்கள் நிலத்தில் இருந்து கொண்டு எந்த பிரச்சினை ஒப்பீட்டளவில் அதிகம் மக்களை பாதிக்கின்றது என்று கவனித்தால் , சாதி இவற்றின் பின்னாலேயே நிற்கின்றது , 1960 களுடன் ஒப்பிடும் போது 1990 களுடன் ஒப்பிடும் போது சாதிய ஒடுக்கு முறையை களைந்து கொண்டே வருகின்றோம் , ஆயினும் நீங்கள் சொல்வது போல போருக்கு பின்னர் தலித் அடக்குதல்கள் வேறு வடிவங்களை எடுக்க தொடங்கி விட்டது என்பதையும் உணர்கின்றோம் ஆனால் கண்ணுக்கு முன்னால் நடக்கும் பிரச்சினைகளை உடனடியாக உரையாட செயற்பட வேண்டிய தேவையுடன் உள்ளோம் , ஆயினும் ஆவதானிப்பு அளவில் புலத்தில் தலித்தியம் பற்றிய உரையாடல்கள் மூப்படைந்து வருவது மகிழ்ச்சியானது , ஆயினும் புலத்தை சரியாக புரிந்துகொள்வதன் மூலம் ஏனைய பிரச்சினைகள் மீதான உரையாடலுக்கும் சிந்தனைக்கும் புலம் வெளிகளை உருவாக்குதல் தற்போது வேண்டப்படும் ஒன்றாகும் .

உங்களின் மூளை உழைப்பையும் உடல் உழைப்பையும் நாங்கள் வேண்டி நிற்கின்றோம்.

இப்படிக்கு அன்புடன்

யதார்த்தன்

Share this Post

Leave a Reply