yathaadmin/ April 4, 2016/ கட்டுரை/ 0 comments

12957109_976436035744085_504250255_n

(தொன்ம யாத்திரை – முன் கள ஆய்வு 3.4.2015 )

 

மிகவும் களைப்பாக இருக்கிறது நேற்றைய வெய்யிலும் நடையும் உடலை மிக களைப்பாக்கிவிட்டது , ஆயினும்  , மனதோ  மிக உற்சாகமாக தன்னை உணர்கின்றது. ஒரு வாரத்திற்கு முன் அறிவித்ததைப்பொலவே நேற்றுக் காலையில் மரபுரிமைகளைப்பாதுகாப்பதற்கும் கொண்டாடுவதற்குமான “தொன்ம நடையின் – முன் களஆய்வுக்காக”   தெருமூடி மடத்திற்கும் , ஓடக்கரைக்கும் போய் வந்திருக்கிறோம் , என்னுடைய மனதைப்போலவே வந்திருந்த கிரிஷாந் , சிவனுசன , கபில் ,காண்டிபான் , தர்சன் , சித்திராதரன் ,ராகவன் , மற்றும் ஏனைய நண்பர்களின் மனதும் உற்சாகமாக இருக்குமென்று நம்புகின்றேன்.

பா.அகிலன் சமீபத்தில் வெளியிட்ட யாழ்ப்பாணத்தின் மரபுரிமைகளை தகவல்களுடன்குறிப்பிடும் “காலத்தின் விளிம்பு ” என்ற புத்தகத்தின் தலைப்பு அத்தனை கச்சிதமானது. தெருமூடி மடத்தையு, ஓடக்கரையும் பார்த்த போதும் அவை நின்றிருக்கும் நிலத்தவர்கள் சொல்லும் கதைகளை கேட்கும் போதும் , கண்கூடாக பார்க்கும் போதும் , எங்களுடைய இருப்பின் காலத்தின் விளிம்பில் தொங்கியபடியே இருப்பதாக நினைக்கத்தோன்றுகின்றது.

ஆனால் நேற்றைய வெய்யிலும் சூடுமான  முழுநாள் மேற்கொண்ட பயணம் இருப்பதையாவது பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையையும் செயற்பாட்டிற்கான புதிய சாத்தியங்களையும் சொல்லி தந்தது.

காலையில் கிரிஷாந்தும் ,கபிலும் நானும்  வடமராட்சியில் கொடுக்க வேண்டிய புதிய சொல் இதழ்கள் அடங்கிய பைகளை தூக்கி கொண்டு பருத்தித்துறைக்கு பஸ் ஏறினோம். சிவனுசன் நேராக அங்கே வருவதாக தகவலனுப்பியிருந்தான் , மற்றபடி வடமராட்சி நண்பர்களான காண்டீபன் , மகி, சித்திராதரன் , ராகவன் , தர்சன் முதலானவர்கள் பருத்தித் துறையில்   எங்களுடன் இணைந்து கொள்வார்கள் என்று கிரி சொன்னான்.

பேரூந்தில் இருக்கும் போது கபில் புதிய சொல்லை வாங்கி தமிழினியின் கதையை வாசித்தபடியிருந்தான் , நான் பேஸ்புக்கை நோண்டினேன் ,குரூப் சட்டில் அனோஜன் கொழும்பில் புதிய சொல் போஸ்ரர்கள் ஒட்டிய படங்களை அனுப்பியிருந்தான் , அருண்மொழிவர்மனும் சதீசும் அல் ஜசீராவில் ஒளிபரப்பட்ட கண்ணனின் ஆவணப்படங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தனர் , அருண்மொழி , “யதார்த்தன் தொன்ம யாத்திரை ஆய்வுக்கு போக வில்லையோ ” என்று கேட்டார் , நான் பஸ்ஸில் தான் இருக்கிறோம் என்று செல்பி ஒன்றை அனுப்பி விட்டு , கபிலுடன் உரையாடத்தொடங்கினேன் அதற்கிடையில் கிரிசாந் காண்டிக்கும் தர்சனுக்கும்  அழைப்பெடுத்து அவர்களை தயாராகும் படி சொன்னான் .

பஸ் ஒன்பது மணியளவில் பருத்தித்துறை தரிப்பிடத்தில் எங்களை வெளியே  உமிழ்ந்தது , வெய்யில் மிதமாக ஏறியிருந்தது , கபில் ”வீட்ட போய் பைக் எடுத்திட்டு வாறன் மச்சான் ” என்று விடைபெற்று சென்று விட்டான் , நானும் கிரிசாந்தும் அருகிலிருந்த தேனீர் கடையில் நுழைந்து ஒரு சோடாவை பருகிவிட்டு தெரு மூடி மட வீதிக்கு நடந்து சென்றோம் .

மடம் அமைதியாக நின்றிருந்தது , அருகில் தேனீர் கடைகள் காலை வேளையின் உற்சாகத்துடன் விற்பனையைத்தொடங்கியிருந்தன. நானும் கிரியும் தெருமூடி மடத்தை நெருங்கி நுழைந்தோம் , இரண்டு சைக்கிள் கள் மடத்தில் ஏற்றி விடப்பட்டு இருந்தன, பைகளை மடத்தினுள் வைத்து விட்டு கமராவை கையில் எடுத்துக்கொண்டு மடத்தை சுற்றிப்பார்க்க எத்தனித்தோம்.

அப்போது தூரத்தில் சிவப்பு சேட் இன் செய்து வழமையான புன் சிருப்புடன் சித்திராதரன் வந்துகொண்டிருந்தார். வழமையான குசலம் விசாரிப்புடன் , எங்களுடன் சேர்ந்து மடத்தை சுற்றி பார்க்கத்தொடங்கினார் , ஊரவர் என்பதால் மடத்தை பற்றிய தகவல்கள் அவருக்கு தெரிந்திருந்தன.

மடத்தின் சுவரெங்கும் அரசியல் போஸ்ரர்களும் , விளம்பர போஸ்ரர்களும் ஒட்டப்பட்டிருந்தன, கடந்த  வடமாகாண சபை தேர்தலில்  ஒட்டப்பட்ட போஸ்ரர்கள் அந்த தொல்பொருள் சின்னத்தின் மேல் பழுப்பேறித்தெரிந்தன, அங்காங்கே மடத்தின் மேலே ஆல், அரச மரங்கள் முளைத்திருந்தன, அரச மரத்தை கண்டவுடன் சித்திராதரனிடம்,

“அண்ணை இப்பெல்லாம் அரச மரத்தை கண்டால் பதறிப்போக வேண்டிகிடக்கு , புத்தர் வந்து இருந்திடுவாரோ எண்டு”

என்றேன் கிரியும் சித்திராதரனும் சிரித்தார்கள் .

”இதெல்லாம் முனிசிப்பல் கவுன்சில் தான் பராமரிக்கோணும்” என்றார் சித்திராதரன் ,

“ஓம் ஆதி இப்ப இஞ்சதானே வெலை அவன் லெட்டர் குடுக்கிற எண்டவன் , இல்லையெண்டா தொன்ம யாத்திரை அண்டு எல்லாரும் சேர்ந்து இதை யெல்லாம் துப்பரவு செய்து விடலாம்”

என்றான் கிரி .

நான் மடத்தை சுற்றி சுற்றி போட்டோ எடுக்கத்தொடங்கினேன் . அப்போதுதான் சித்திராதரன் மடத்தின் தூண்களை சுட்டிக்காட்டினார் ,

“இதிலை சில எழுத்துக்கள் இருக்கு ”

“அருகில் சென்று பார்த்தோம் ”

சுண்ணாம்புக்கல்லால் பொழியப்பட்டிருந்த அந்த தூண்களில்  மறைந்தும் மறையாமலும்  எழுத்துக்கள் தெரிந்தன , தமிழ் எழுத்துக்கள் .

”அண்ணை அரவு  எல்லாம் பாவிச்சு இருக்கு அப்ப ஆறுமுக நாவலருக்கு பிறகுதான் வெட்டி இருக்கு”

”இதெல்லாம் மடம் கட்ட உபயம் செய்த ஆக்களின்ர ஊரும் பேரா இருக்கும் ” என்றார் சித்திராதரன்.

“தொல்பொருள் ஆய்வுக்காரார் காபன் மாதிரி ஒரு சீற் வச்சிருப்பினம் அதில பதிச்சு எடுத்தா இதுகள படிக்கலாம் ” என்றான் கிரி.

12935457_976433745744314_2116133451_n

எழுத்துக்கள் செத்துக்கப்பட்ட சுண்ணாம்புக் கற்றூண்.

சில எழுத்துக்களை வாசிக்க கூடியதாக இருந்தது , திக்கம் , குரு முதலான வார்த்தைகளை வாசிக்க முடிந்தது.

சுண்ணாம்பு கல்லை , அதுவும் முழுக்கல்லை தூணாக பொழிந்து எடுத்தல் கடினமானது ,அதுவும் அதில் செதுக்கல்களை செய்வதும் கடினமாகும் , செத்துக்கும் போது அது நுட்பமான வேலைகளுக்கு இடம்கொடுக்காமல் உடைந்து விடும் ஆயினும் மடத்தின் ஒரு பக்கத்தில் அருகில் இருக்கும் கோயிலுல் பக்கமாக ஒரு வாசல் விடப்பட்டு  இப்போது அது அடைக்கப்பட்டிருந்தது.  அந்த வாசலில் சித்திர அலங்காரங்கள் செதுக்கப்பட்டு இருந்தது , அத்துடன் ,  இரண்டு பக்கமும் இரண்டு நாகங்களின் உருவமும் செத்துக்கப்பட்டிருந்தது .

12966826_976409712413384_1564659632_n

நாகச்செதுக்கல்கள்

அந்த மடம் ஒரு ஐய்யரால் கட்டப்பட்டதென்று சித்திராதரன் கூறினார் , ஏற்கனவே ஆதி அந்த விபரங்களை விசாரித்திருந்தான் , அவரின் பூர்வீகம் இருப்பதாகவும் அவர்களுடன் உரையாட முடியும் என்றும் அவன் குறிபிட்டிருந்தான். அங்கேயும் செல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

சித்திராதரன் மடத்தின் பக்கவாட்டில் உள்ள காணிக்குள் நுழைந்து மடத்தின் மேற்பகுதியை  ஏறிப்பார்ப்போமா ? என்று கேட்டார் , நான் அவரிடம் கமராவை கொடுத்துவிட்டு மதிலில் தாவி ஏறி மடத்தின் மேற்புறத்தை பார்வையிட்டேன் சிமெந்துமொழுகப்பட்டு காணப்பட்டது , மடத்தின் விதானம் 1990 களில் அங்கே இருந்த இளைஞர்களால்  கேடர்கள் பொருத்தப்பட்டு  கூரை ஓடு வேயப்பட்டது , அதற்கு முதல் அழகான வளைந்த விதானம் அந்த மடத்தை அலங்கரித்ததை , பழைய புகைப்படமொன்றில் பார்த்திருக்கிறேன்.

pein-2-300x160

இலங்கை தொன்மையான மடப்பயன்பாட்டினைக்கொண்டது , சிங்கள பிரதேசங்கள் , தமிழ் பிரதேசங்கள் இரண்டிலும் மடம் , சத்திரம் முதலான பண்பாட்டு கட்டட அமைப்புக்கள் இருந்தன , ஆனால் வடக்கில் மட்டுமே தெருவை மூடி மடம் அமைக்கும் பண்பாடு காணப்பட்டிருக்கின்றது , மந்திகை வைத்திய சாலைக்கு அருகிலும் இவ்வாறானதொரு தெருமூடிமடம் காணப்பட்டதாக சித்திராதரன் கூறினார்  , இலங்கையில் இன்று மிஞ்சியுள்ள ஒரேயொரு தெருமூடி மடம் இதுமட்டும் தான் என்றும் சித்திராதரன் குறிப்பிட்டார் . மேற்பக்கத்தை பார்த்து விட்டு இறங்கி  பழைய படி மண்டபத்திற்குள் வந்தோம்.

நாங்கள் அவற்றை பார்த்துக்கொண்டிருக்கும் போதே  மகி , வேட்டியும் கட்டி நடந்து வந்தான் , ஏன் வேட்டி என்று கேட்டேன் ,

கலியாண வீடு ஒண்டு மச்சான்  என்றான் . இடையில் கபில் வந்து விட்டு பைக்கை எடுத்துக்கொண்டு அவசரமாக போய்விட்டான்.

கிரி மகியுடன்  அவனுடன் அருகில் இருந்த கடைக்குள் நுழைந்தான் , அப்போது சிவனுசனும் அவனுடைய நண்பனும் வந்து இறங்கினர் . சிவனு கமராவை வாங்கிக்கொண்டான் , சிவனு சாவகச்சேரியில் இயங்கும் அக்கினிச்சிறகுகள் எனும் சகோதர அமைப்பின் செயற்பாட்டாளன் . வந்தவன் கமராவை வாங்கிக்கொண்டு போட்டோக்களை எடுக்கத்தொடங்கினான். அதற்கிடையில் காண்டீபன் நண்பர்களுடன் வந்து சேர்ந்தார்  , பின்னாலேயே தர்சனும் , ராகவனும் வந்தனர் . எல்லோரும் வடமராட்சிக்காரர்களாதலால் அவர்களிடம் மடம் பற்றிய ஏராளம் தகவலிருந்தது.

அந்த மடம் இருந்த பகுதி ஒரு பிராமணக்குடியிருப்பு என்றே எல்லோரும் சொன்னார்கள் ,இலங்கையில் பிராமணர்கள் குடியேறிய ஆரம்ப இடங்களில் பருத்தித்துறையும் ஒன்று என் அகிலன் எப்போதோ சொன்னது ஞாபகத்திற்கு வந்தது .

12966564_976409742413381_1790629984_n

12939269_976409769080045_753530509_n

அந்த பகுதில் உள்ள காணிகள் தில்லை சிதம்பரம் கோயிலுக்கு எழுதி வைக்கப்பட்டவை என்றும் அவர்கள் சொன்னார்கள் அருகிலிருந்த சிவன் கோயில் அப்பகுதியினரின்  சிவ வழிபாட்டை உறுதிப்படுத்தியது, இலங்கையில் ஷண்மத பிரிப்புக்கள் இன்ருவரை இருந்ததில்லை , இலங்கை இந்து சமயத்தின் ஆரோக்கியமான விடயமாக அது இருந்தது , அந்த பகுதி காணிகளில் சில சிக்கல்கள் இருக்கின்ற தோரணையிலும் கதைகள் சொல்லப்பட்டன , மேலும் மடம் கோயிலினுடைய தொடர்ச்சியாகவும் அங்கிருக்கும் மக்கள் பார்ப்பதாக நண்பர்கள் கூறினார்கள் .

ஒரு பிராமணர் அதனை கட்டியதும் , அது கோயிலுக்கு அருகில் இருப்பதும் , மடத்தின் கதவில் பாம்புகள் செதுக்கப்பட்டிருப்பதும் , அதனஒ ஒரு சமய அடையாளமாக மாற்றி விட்டதில் ஆச்சரியமில்லை , ஒரு வேளை அது இவ்வளவு நாள் நிலைத்து நிற்பதற்கும் அது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் முற்று முழுதாக சமூக பாவனைக்காக  , வழக்கத்துக்கு மாறாக தெரு ஒன்றை மூடி அந்த மடம் கட்டப்பட்டிருப்பது அதனை மதச்சார்பு நிலையிலிருந்து உயரத்தி அது அனைவருக்குமான பண்டமாக மாற்றி விடுகின்றது. அங்கே அது ஒரு மரபுரிமை சொத்தாக , கடந்த காலத்தின் கதைகளையும் ஞாபகங்களையும் தாங்கி நிற்கும் ஒன்றாகவே பார்க்கப்பட வேண்டும்.

அங்கே சித்திராதரன் இடைமறித்த  நண்பர் ஒருவர் ,

“உது கொஞ்ச காலத்துக்கு முதல் ரோட்டு பொடேக்க இடிக்க வெளிகிட்டு  பெடியள் கொஞ்சப்பேர் பழைய கட்டிடம் இருக்கோணும் எண்டு திருத்தி கட்டினவங்கள்”

என்றார் , அப்பாடா .. என்று இருந்தது .

ஏன் இது பராமரிப்பு இல்லாமல் கிடக்கு என்று அவரிடம் கேட்டோம்

பிரதேச சபைக்காரர் தான் இதுக்கு பொறுப்பு என்றே அவரும் சொன்னார்,

12939319_976436069077415_243512145_n

ஆரம்ப உரையாடல்

கொஞ்ச நேரத்தில் நண்பர்கள் எல்லோரும் ஒன்று கூடி விட்டோம் பதினைந்து பெயரளவில் இருந்தோம் , என்ன செய்யப்போகின்றோம் என்று உரையாடினோம்.

ஆலய நிர்வாக சபையுடனும் ஊரில் இருக்கும்  பெரியவர்கள் சிலருடனும் ,உரையாட ஆவன செய்வதாக நண்பர்கள் குறிப்பிட்டார்கள் . மெல்ல எல்லோரும் பிரிந்து கோயில் பக்கமாக இறங்கினோம் , கிரிசாந் விடயம் அரிந்த கோயில் நிர்வாக சபையிலுள்ளவர்களுடன் உரையாட தர்சனோடு சென்று விட்டான் .

12921064_976412142413141_1715613478_n

கிரியும் தர்சனும் நிர்வாக சபையினருடன் உரையாடுகின்றனர்

சித்திராதரனும் நானும் சிவனுசனும் , அவனுடைய நண்பனும் ,காண்டீபனும் கோயில் முன்றலில் அமர்ந்திருந்த பெரியவர்களுடன் உரையாட எத்தனித்தோம் , அப்போது அவர்கள் மனேஜ்சரிடம் கேட்டால் நிறைய விடயம் தெரியும் என்றனர் , நாங்கள் அவரை  எங்கே பார்க்க முடியும் என்று கேட்க அவர்கள்

அதோ அவரே வருகின்றார் என்று சுட்டிகாட்டினார்கள்

மஞ்சள் வெய்யில்ஒரு கட்டம் போட்ட சேட்டும்  வேடியும் அணிந்த  எழுபது எண்பது வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் சற்று சரிந்த தன்னுடைலை நகர்ந்தியவாறு கோயிலை கடந்து வந்துகொண்டிருந்தார் ,

அவரிடம் எங்களை அவர்கள் அறிமுகம் செய்தனர் , நாங்கள் மடத்தை பற்றிக்கேட்டோம், தான் 40 வருடங்களுக்கு முதல் மணம் முடித்து வரும் போதே அந்தமடம் அங்கே இருப்பதாகக்கூறினார் , அதை கட்டியவரின் விபரம் ஒன்றும் தனக்கு தெரியாதென்றார் , நான் மடம் இருக்கும் காணிகளை  பற்றி கேட்க முற்பட்டேன் , அவர் வாயை பொத்தி கொண்டு

:”சீ சீச்சீ அதெல்லாம் கேக்க கூடாத பெரிய வில்லங்கம் என்றார்”

“பின்னர் தான் அந்த கிராமத்திற்கு முதலாவது வைத்திய சாலையை கட்டியதை குறிப்பிட்டார்”

“தம்பி ஒண்டு சொல்லட்டோ ஊருக்கு நல்லது செய்ய ஆர் வெளிக்கிட்டாலும் கடைசில மொட்டைதான் ”என்றார் , சூரிய ஒளி தெறிக்கும் அவருடைய தலையை அநிச்சையாக என் கண்கள் ஒரு முறை மேய்ந்து தாழ்ந்தன ,

12935211_976412022413153_1028424401_n

மனேஜ்சருடன் உரையாடல்

அவர் தான் ஒரு சோதிட ஆய்வு பட்டதாரி என்று கூறினார் , உன்னுடைய பிறந்த திகதி என்ன என்றார் , நான் 1993 என்று தொடங்கி  சுயவிபர கோவையை நிரப்புவதைப்போல ஆண்டு மாதம் திகதியை கூற எத்தனிக்க என்னை தடுத்து

பாத்தியோ படிச்ச புத்தியை காட்டிட்டாய் , நான் என்ன கேட்டனான் திகதி மட்டும் தானே என்று கடிந்து கொண்டார்  , நான் ஒருவாறு சமாளித்துக்கொண்டு ,திகதியைச் சொன்னேன் , நட்சத்திரம் கேட்டார் சொன்னேன்.

“பிறந்து கொஞ்சகாலம் பேச்சு வராம இருந்திருப்ப , 16 வயசு மட்டும் உத்தரிச்ச வாழ்க்கை , வெள்யில நல்லம் ஆனா வீட்டுக்கு உதவ மாட்ட ”

என்று சொல்லி விட்டு புறப்பட எத்தனித்தார் , நாங்கள் மீண்டும் வருவோம் என்றோம் , அவர்

“வெளைக்கு வாங்கோ செத்துகித்து போனாலும் ” என்று சொல்லி விட்டு கோயில் பின் வீதியை பார்த்து நடந்தார் , சற்றுத்தள்ளி ஆலய நிர்வாகத்தை சேர்ந்தவர்களுடன் கிரிஷாந்தும் ஏனைய நண்பர்களும் உரையாடிக்கொண்டிருந்தது தெரிந்தது. எல்லோரும் அங்கே நகர்ந்தோம் ,கிரிசாந்திடம் என்னவாம் என்று கேட்டேன் , விடயம் தெரிந்தவர்களுடன் உரையாட அவர்கள் பரிந்துரை செய்திருந்தனர் , ஹாட்லி பள்ளிக்கூடத்தின் அருகில் ஒரு பெரியவர் இருப்பதாகவும் அவரிடம் சென்றால் நிறைய தகவல்கள் கிடைக்குமென்றும்  கூறினார்கள் ,அவர்களிடம்  தொன்ம யாத்திரையை பற்றி கூறினோம் , அவர்கள் மகிழ்சியுடன் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறினார்கள்.

12939251_976427015744987_1377048918_n

ஓரளவு தொன்ம நடைக்கு செய்ய வேண்டிய முன் ஆயத்தங்கள் , அதர்கான வழிகள் எங்களுக்கு அங்கே புலப்படத்தொடங்கியது , பிரதேச சபையுடன் ஆதி கதைத்து அதன் பராமரிப்பு மற்றும் மடத்துக்கான விளக்க பலகையை வைப்பதற்கான நடவடிக்கைகளை செய்ய வைக்கவும்  , மேலும் தகவலறிந்த ரகுவரன் முதலானவர்களுடன் உரையாட வேண்டிய தேவையும் இருந்தது , வடமராட்சி நண்பர்கள் தாம் அந்த பொறுப்புக்களை எடுத்துக்கொள்வதாக கூறினார்கள் .

ஆற்றுகை நிகழ்வுக்கும் ஆட்களை ஒழுங்கு செய்வது பற்றியும் உரையாடினோம். இதற்கிடையில் சித்திராதரன் அந்த மடத்திலேயே  தங்கியிருக்கும் அன்ரி ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார் , அவருக்கு சற்று மனநலம் சுகமில்லாமல் இருந்த்து ஆயினும் பேச்சில் தெளிவு இருந்தது அவரிடம் நானும் சித்திராதரனும் உரையாடத்தொடங்கினோம்.

அன்ரி எவ்வளவுகாலமா இந்த மடத்தில இருக்கிறியள்?

”அது நான் வந்தோண்னையே இந்த மடம் இங்க வந்திட்டு”

“இரவில இங்கையோ படுக்கிறதெல்லாம்”

“சீ ஆம்பிளையள் தான் படுப்பினம் நான் இரவில வீட்ட போடுவன்”

அன்ரி தொடர்ந்தும் தான் சொன்னதையே சொல்ல  முற்பட்டார் , அவரை பதட்டம் கொள்ள செய்வதில் எங்களுக்கு உடன் பாடு இல்லாமல் இருந்தது .சித்திராதரன் ,

12920924_976413152413040_598616381_n

அவா அமைதியா இருந்தா எண்டா நிறைய விசயம் சொல்லுவா , பிறகொரு நாள் கேப்பம் என்றார் . எனக்கும் அதுதான் சரியென்று பட்டது.

கோயில் காரர்கள் சொன்ன “ஓதுவார் ” என்ற பெரியவர் வீட்டிற்கு போவதும் ஓடக்கரைக்கு போவதும்  மட்டுமே அப்போது மீதியிருந்த வேலையாக பட்டது. முதல் “டீ ” குடிப்போம் என்று அருகில் இருந்த கடைக்குள் நுழைந்தோம் . டீ கடைக்கு போகும் போது கிரிசாந்திடம்

“நான் ஊருக்கு நல்லமாம் வீட்டுக்கு உதவ மாட்டனாம் ” என்று அந்த மனேஜ்சர் கூறியதை கூறினேன் , அவன் சிரித்துக்கொண்டே

”டேய் நீ இப்பிடி கேக்க வந்ததுமே விளங்கி இருக்கும் வீட்டுக்கு உதவ மாட்டாய் எண்டு , இதுக்கேன் சோதிடம்”

என்று நக்கலடித்தான் .

நடக்கும் போதே

டேய் காசு ஒழுங்குகள் இன்னும் சரிவரேல்லை என்றேன் ஆவனும் , ஓம் பாப்பம் என்றான்.

டீ கடைக்குள் நுழைந்து கொஞ்ச நேரத்தில் பா. அகிலன் கிரிசாந்திற்கு அழைப்பெடுத்து , பல்கலைகழக விரிவுரையாளர் றமணன் உங்களிடம் வந்திருப்பதாக அவரை சந்திக்கும் படி கூறினார் , கடைக்கு வெளியே வந்த போது ரமணன் தெருமூடி மடத்தில் அமர்ந்திருந்தார் , அவரிடம் பெரியவர் ஒருவரை சந்தித்து மடம் சம்பந்தமாக உரையாட வேண்டும் என்று கூறினோம் , அவர் போவோம் என்றார் நானும் இராகவனும் சித்திராதரனும். அவருடைய காரில் ஏறி அந்த பெரியவர் வீட்டிற்கு சென்றோம் ஏனைய நண்பர்கள் பைக்குகளில் வந்தார்கள் ,அவர் அங்கே இல்லை , மாலையில் அவரை சந்திக்க முடியும் என்று தெரிந்தது , காண்டீபனும் அவருடைய நண்பர்களும் அவரை மாலையில்  சந்தித்து உரையாடுவதாக கூறினார்கள்.

வெய்யில் நன்றாக ஏறி விட்டிருந்தது. அடுத்து ஓடக்கரையை பார்வையிட முடிவெடுத்தோம் . ஓடை கரையில் சுமார் ஒன்றைரை மணி நேரங்களுக்கு மேல் செலவழித்து அந்த பிரமிப்பான இடத்தை பார்த்தும் அங்கிருந்தவர்களுடன் உரையாடியும் முடித்தோம்.

பிறிதொரு பதிவில் ஓடகரை பற்றி எழுதுகின்றேன் , ஒடக்கரைக்கென தனயான தொன்ம யாத்தைரை மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளோம்.

ஓடக்கரையை பார்த்து விட்டு ஏனைய நண்பர்களிடம் விடைபெற்றோம். அவர்கள் இந்த ஒரு வாரத்திற்குள் யாத்திரைக்கான ஒழுங்கு படுத்தலுக்கு உரிய பொறுப்புகளை பகிர்ந்து கொண்டு விடை பெற்றார்கள் , நானும் கிரியும் தர்சனும் மாலையில் இரண்டு கூட்டங்களுக்கு போக வேண்டியிருந்தது . அப்போதுதான் மெல்ல பசியெடுத்தது , அருகிலிருந்த தேனீர் கடைக்குள் நுழைந்தோம் .

சாப்பிடும் போது கிரி

“இப்ப தான் என்ன செய்ய போறம் எண்டு விளங்குது என்றான். எனக்கும்  வரும் ஞாயிறு என்ன நடக்க போகின்றது என்ற டிர்யிலர் மனதுள் ஓடி மறைந்தது , தேனீர் கடையை விட்டு வெளியே வந்து பேருந்திற்காக மூவரும் படிக்கட்டில் அமர்ந்து கொண்டோம்.தர்சன் தேனீர் கடையில் சந்தித்த நண்பர் ஒருவருடன் அருகில் போய்வருவதாக கூறிவிட்டு போய்விட்டார் .

“இப்ப காசுதாண்டா பிரச்சினை ”

என்றேன் , சட்டென்று நிஷ்மாவின் ஞாபகம் வந்தது , திருமணமாகிய பின் அவளுடைய நட்பு அறுந்து போய்விட்டது , முகம் தெரியாத எங்கள் எழுத்துக்களை படித்துவிட்டு விதைக்கு முதன் முதலில் பொருளாதார உதவி செய்தவள் , இரண்டு நாட்களுக்கு முன்னர் சுவஸ்திகாவும் நானும் அவளை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். திருமணத்தின் பின்னர் அவளின் தொடர்பறுந்து போய்விட்டது , எங்களுடைய முதல் முஸ்லீம் சகோதரி அவள்தான் , விதை குழுமத்தின் உருவாக்கத்தில் அவள் அன்று கொடுத்த கை முக்கியமானது.

எவ்வளடா தேவைப்படும் ?

ஒரு 6000

வெள்ள டைம் எல்லாரிட்டையும் வாங்கியாச்சு , இனி கேக்கிறது சரியில்லை , அவங்களும் பாவம்.

“ம்ம்”

நாங்கள் தான் சமாளிக்கோணும், காசு ஒரு பிரச்சினை இல்ல , பாக்கலாம் விடு ஏதும் நடக்கும் வழமையா அப்பிடிதானே ”

அப்போது தர்சன் வந்து அமர்ந்து கொண்டார் , பேச்சு எங்கோ மாறிச்சென்றது , இடையில் தர்சன்

“கிரிசாந் ஒரு ஆறாயிரம் ரூபா பெடியள் தந்த காசு கிடக்கு அவங்கள் ஏதும் நல்ல விசயத்துக்கு சிலவழிக்க சொல்லி தந்த காசு ”

”கிரிஷாந் என்னைப்பார்த்தான் ”

நான் வழமை போல , முழு நாத்திகன் கிரிசாந்திடம்

“கடவுளிருக்கான் குமாரு ” என்றேன்.

-யதார்த்தன்

செயற்பாட்டாளார்

விதை குழுமம்

Share this Post

Leave a Reply